Wednesday, September 16, 2009

நோன்புப் பெருநாள் வாழ்த்து.


நோன்புப் பெருநாள் வாழ்த்து.             
       ....................              
            
   (1) சிங்கையில் வாழுகிற சீருறு நான்கினமும்
          தங்களின் ஒற்றுமையைத் தாங்களே வெளிப்படுத்த
         ப்ண்டிகைக் காலங்களில் பண்பாடு, கலாச்சாரம்
         கொண்டாடக் குதூகல விருந்தோம்பல் செய்கின்றார்.
   (2) அருகருகே வாழ்கின்ற அயலவரை நேசித்து
          ஒருவர்க் கொருவர் உண்டி,உடை வழங்கித்
         தருகின்ற தருமச்செயல் நோன்புப் பெருநாளில்
        வருகின்ற புண்ணியமே வாழ்வின் பெருநிதியாகும்.
   (3) ஏழையின் பசியினைச் செல்வந்தனும் உணரவே
          வாழையடி வாழையாகக் கடைப்பிடித் தொழுகும்
          காலையில் தொடங்கி அந்திசாயும் வரைக்கும்
         வேலையில் இருப்பாரன்றி, உமிழ்நீரும் உண்ண்மாட்டார்.
   (4) வருடத்தில் எல்லாநாளும் வயிறார உண்பதால்-சக்தி
         தருகின்ற உள்ளுறுப்பு ஓய்வெடுக்க-சுத்தமாக்கத்
        தேவையற்ற கழிவுகள் தேகத்தை விட்டகல
        பாவச்செயல் புரியாப் பக்குவமும் வந்துவிடும்.
   (5) அன்பைப் பொழிந்து அருமையாய்ப் பெற்றவரை
         துன்பம் களைந்து தூயவழி காட்டினாரை
         மாசகல ஆழ்ந்த மனத்தொழுகை செய்தவரை
         ஆசானைக் குருகுலத்தை அடிபணிந்து போற்றிடுவர்.
   (6) பசித்திரு..தனித்திரு..விழித்திரு..என்றதேர்வில்
         புசிக்காமல், பகைக்காமல்,உறங்காமல் பதவிபெற்றார்
        வானத்தில் இருந்து குதிக்கவில்லைப் பூவுலகில்...
        மானிடத்தின் விழுமியமே அம்மனிதன் தானென்போம்.
   (7) புவிவாழப் புனிதமாய் நோன்பைக் கடைப்பிடிக்கும்
         மகிமையான மக்களுக்குச் சிங்கைத்தாய் சார்பாக...
        கவியால் கூறுகின்ற கருப்பொருள் எதுவென்றால்
        நபிகள் நாயகத்தின் நல்லுரையே அதுவென்போம்!


   (8) ஈகைத்திருநாளின் சிறப்பு இன்றுவரை வாழுதென்றால்
      வாகைசூடிய வள்ளல்கள் வாரிவழங்கும் கொடையன்றோ?
    ’செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்பது வரலாறு...
     சக்தியிழந்த கைகூட வழங்கியது பழக்கத்தாலே...    (9) வருந்தி உழைத்த செல்வத்தைத் தந்தேவைபோக..
    வறுமையில் உழல்வோர்க்கும் வாழ்வில்லா அபலைகட்கும்
    தருகின்ற வள்ளல்களைப் பார்த்திருந்த வானகமும்
    பொழிகின்ற மழைநீரால் பூமித்தாய் செழிக்கின்றாள்.


    (10) முல்லைக்குத் தேரீந்த பாரிமன்னன் வரலாறும்...
     கர்ணன் என்ற கொடைவள்ளல் காப்பியத்தில் இருப்பதுபோல்
    சிங்கைத் தாய்க்குப் பெருமைசேர்க்கும் சீதக்காதியர்கள்
    எங்களுக்காய்க் கட்டிவைத்தார் உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி.


    (11)  நம்கண் முன்னே நடமாடும் வள்ளல் பெருந்தகைகள்
    வாழுமிந்த நாட்டினிலே நாமும்வாழ்ந் தோமென்றால்...
    ஆறுதல் வார்த்தையல்ல; உறுதியான உண்மையிது!
    கூறுகிறேன் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!!               வள்ளியம்மை சுப்பிரமணியம். 
 

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF