Monday, December 28, 2009

புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம்


புதியபாதை சுந்தரம்
-----------------------------------
’புதியபாதை’ பத்திரிகை தானாக முளைக்கவில்லை
பதியம்வைத்து நீரூற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்
வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியினில்
சுட்டும்  செழிப்பான சுழிபுரக் கிராமத்தில்...
சதாசிவம் ஆசிரியரின் சாந்தமான மகனாய்...
உதாரணம் காட்டும் முன்மாதிரி மாணவனாய்....
’விக்ரோறியா’ கல்லூரிப் படிப்பின் பின்னர்
தக்கதான வழிசொன்ன சிவசண்முக மூர்த்தியிவன்.


 
ஆயிரத்துத் தொழாயிரத்து அறுபத்து ஒன்பதிலே
ஆயிரக் கணக்கில் அரசாங்க ஊழியர்கள்
பாதிக்கப் பட்டார்கள் சிங்கள மொழியறிவு
சோதனையில் தேறினால் தான்வேலை நிரந்தரமென்று....
அரசாங்கக் கட்டளைக்குக் கட்டுப் பட்டபலர்
அரசாங்கக் கடமையில் ஓய்வுபெற்ற டாக்டர்
திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்த ஆசான்
திருவாளர் தம்பையா இல்லத்திலே நடாத்தும்
சிங்களமொழி வகுப்பில் நானும்போய்ச் சேர்ந்திட்டேன்.
அங்குவந்த மாணவருள் சண்முகமும் தம்பியானார்.

 
சகலரையும் மதிக்கும் சந்ததியார் தன்னுடனே
குகபூசணி, பவானி, குருக்கள்பிறை சூடிக்குரு
அப்படிப் பலபேர் அவ்விடத்தில் படித்தார்கள்.
“அக்கா”வென அழைத்து எனக்குற்ற துணையானார்கள்.
“புத்தரின் போதனைகள் ஏற்கெனவே திருக்குறளில்
பத்திரமாக இருப்பதைப் பயன்படுத்தி வாழுங்கள்”
என்றெமக்குக் குருவானவர் எடுத்தியம்பிக் கூறியவை
நிற்கிறதே மானிட நெஞ்சத்தில் பசுமையாக.
 
அந்தாண்டு ‘மே’தின ஊர்வலத்தைத் தடைசெய்து
குண்டாந் தடியடிகள் கோரமாகத் தாக்கியதால்
என்துணைவர் உட்பட எண்ணரிய தோழர்கள்
துன்புறுத்தப் பட்டுக்கண் துடைப்பாக வைத்திய
சாலையில் சேர்த்துப் பாதுகாப்புக் கொடுத்தனரே!
வேலையை வைத்தியர்கள் விசுவாசமாய்ச் செய்தார்கள்.
உறவுகளின் துணையற்று உருக்குலைந்த எந்தனுக்கு
மறவாத தோழர்கள்போல் என்வகுப்புச் சோதரரும்
தாமாகமுன் வந்தென் மதலைகட்கு உதவினரே!
ஆமாம்! சண்முகனின் அன்பினை என்னென்பேன்!

 
வருடங்கள் பத்துக் கழிந்து ஓடியபின்......
பெருமைபெறு ‘சுந்தரம்’ என்துணைவர் மணியத்தார்
மதிக்கின்ற பொதுவுடமைத் தத்துவத்தின் பூரணத்தால்
’புதியபாதை’ பத்திரிகை-- புத்தாக்கச் சிந்தனையில்
அடிமைப் பட்டதமிழ்  மக்கள் விழிக்கவேண்டி
முடிவான உறுதியுடன் அச்சகத் தொடர்புகொண்டார்.
சித்திரம் வரைவதிலே சிறந்த சுந்தரத்தார்
அத்தனை திறமைகளும் ”தாய்மாமன் இராச
ரத்தினதின் வாரிசு” என்று மகிழ்ந்திட்டார்.
தன்னடக்கத் தலைவனாய் இருந்ததெல்லாம்
பறைசாற்ற விரும்பவில்லை விளம்பரமும் தேடவில்லை.
குறைகூறல் விரும்பாது செயல்வீரனாய் வாழ்ந்திருந்தான்.

 
எண்பத்து ஈராமாண்டு ஜனவரி இரண்டாம்நாள்
”கண்மறைவாய்  உன்கருத்தை வெல்ல முடியாதோர் சுட்டானராம்”
என்றசெய்தி வந்தபின்தான் அறிந்தோமே உன் திறமையெல்லம்....
கன்றிழந்த பசுப்போலப் பசுந்தரம் அம்மா புலம்பியதும்
தோழொடிந்த  தோழர்கள் அவசரத்தில் பழிவாங்கத் துடித்ததுவும்
வாலொடிந்த பல்லிக்கு மீண்டும் முளைப்பதுபோல் உன்
எண்ணத்தை நிறைவேற்ற மக்கள்யுத்தம்வேண்டி கழகத்தின் பின்னாலே
வண்ணத்துப் பூச்சிகள்போல் வாலிபர்கள் பறந்ததுவும் கண்கூடு.
 
வள்ளியம்மை சுப்பிரமணியம் 
.
 

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF