Thursday, March 18, 2010

பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை
--------------------------------------
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
திட்டமிட்டுக் குடும்ப நிர்வாகம் நடாத்துவதும்
கட்டுப்பாடாய் இல்லறத்தை கவனமாக உயர்த்துவதும்
எட்டுத்திசை எங்கணுமே பெண்ணின் பெருமையதே!
 
கருவை உருவாக்கக் காத்திருந்தாள் பத்துமாதம்
அருவருப்புக் கொள்ளாது அனைத்துப் பணிவிடையும்
விருப்பத்துடன் நிறைவேற்றி விளக்கொளியாய் வலம்வரும்
அருமைப் பெண்மையின் பெருமையைப் போற்றுவோம்!.
 
விண்ணிலே ஒளிவிடும் நிலவினைப் போலவே
கண் ணவன் கணவனின் காரியம் யாவிலும்
பண்ணிலே இசையின் பரிமாணம் ஒலிப்பதுபோல்
வண்ணமாய்க் கலந்திடும் பெண்மையைப் போற்றுவோம்.!
 
சொல்லும் மியன்மாரில் “சூகி’ அம்மையாரும்
வல்லசிறீ லங்காவில் வனிதை ‘ஜின்சில’வும்
பெண்கள் விடுதலைக்குப் பெருமைக் குரல்கொடுக்கும்
கண்களாய் பெண்களின் பெருமைக் கூறுவோம்!

Sunday, March 14, 2010

திசையறியும் பறவைகள்........

திசையறியும் பறவைகள்.......
-----------------------------------------------
பிறந்து வளர்ந்த பாசத்தைப் பிரிந்து
பறந்து வந்தது ஆகாய வழியில்....
கல்வி, மேம்பாடு, கருத்தில் உழைப்பு.....
சொல்லி முடியாத சோகங்கள், பிரிவுகள்....
எண்ண அலைகள் ஊர்க்கரை தொட்டுக்
கண்ணை நனைக்கும் கண்ணீரில் மூழ்கி...
பூண்ட உறவுகள், மனையாள், மக்கள்
மீண்டும் அவர்களை வளமாய் வைத்திட.
..
சிக்கன வாழ்வில் மிச்சப் படுத்தி.....
தக்க எதிர்காலம் கண்ணில் தெரிவதால்
நாளைக்குக் காலையில் எழுந்து வேலைக்கு
வேளைக்கு அவ்விடம் சேர்ந்திட வேண்டுமே!
எஞ்சிய உணவினைச் சொண்டினில் கெளவிய
குஞ்சுகள் நினைவினில் கூட்டினை எண்ணிய
பறக்க முன்னர் இருந்த திசையை
மறக்க முடியாத பறவைகள் இவர்கள்.!

வள்ளியம்மை சுப்பிரமணியம்

Wednesday, March 3, 2010

திருமதி-லட்சுமி சிவசுப்பிரமணியம் அவர்களின் 68ம் பிறந்தநாளுக்கு (03-03-2010) வாழ்த்தி எழுதிய வாழ்த்துப் பாக்கள்

திருமதி-லட்சுமி சிவசுப்பிரமணியம் அவர்களின் 68ம் பிறந்தநாளுக்கு (03-03-2010) வாழ்த்தி எழுதிய
                                                            வாழ்த்துப் பாக்கள்.
                                                             ----------------------------------
ஆசியாக் கண்டத்திலே பிறந்து-ஆபிரிக்கக் கண்டத்திலே வாழ்ந்து -ஐரோப்பியக் கண்டத்து நாடுகள்
சிலவற்றிற்குச் சென்றுவந்து - அமெரிக்கக் கண்டத்து , கனடா நாட்டு ’மொன்றியல்’ பகுதியில் வாழ்ந்து வரும் முன்னாள் கணித ஆசிரியை ( யா/ விக்ரோறியாக் கல்லூரி, யா/ இந்துக் கல்லூரி)ஆகிய பள்ளிகளில் கடமையாற்றிய திருமதி லட்சுமி சிவசுப்பிரமணியத்தின் பிறந்த நாளை முன்னிட்டு சிங்கப்பூரில் வாழும் அவரது தமக்கையார் எழுதிய வாழ்த்து;-----
                        
                                     ஆசைப்பிள்ளை செல்லமுத்தின் அன்பான சின்னமகள்
                                     மாசிமாதப் பூரத்திலே மலர்மகளாய் வந்துதித்து
                                     ஊசிமுனைத் தராசுபோல ஆசிரியப் பணிசெய்து - இன்று
                                     ஆசீர்வாதம் வழங்குகிறாள் அன்னையாய்ப் பாட்டியாய்!
                                     கல்வியிலே தான்பெற்ற கண்மணிகள் மூவரையும்
                                     வல்லவராய் முன்னணியின் வரிசையிலே நிறுத்தியதாய்!
                                     சொல்லரிய வாழ்க்கைச் சோதனையில் சித்திபெற்று
                                      அல்லல்கள் பலகடந்த அருமையன்னை இவரென்போம்!
                                     ஆற்றல்பல படைத்த அன்பான மருமகள்மார்
                                     போற்றும் கல்விச்சிறப்பில் புதுமைகள் பெற்றவர்கள்--அரிய
                                     ஊற்றுப்போல் வந்துதித்த உரிமையான பேரமக்கள்
                                     வீற்றிருக்க “அப்பம்மா” நீடூழி வாழியவே!!
                                            வள்ளியம்மை சுப்பிரமணியம்.........( சிங்கப்பூர்)

Tuesday, March 2, 2010

ஜன்சில மஜீத் என்ற சமூக சேவகி.

ஜன்சில மஜீத் என்ற சமூக சேவகி.

------------------------------------------------------------

ஈழத்து மண்ணிலே பிறந்த இனமொன்று

வாழ்கின்ற வயதிலே வளமிழந்து இடம்பெயர்ந்து

சூழ்கின்ற துயரங்கள் சுழன்றடித்த போதினிலே -மனமும்

பாழ்பட்டுப் போகாமல் பக்குவப் படுத்தவேண்டி

ஆழ்ந்த சிந்தையுடன் அயராது பாடுபட்டு -தோல்வியில்

மூழ்கிப்போய் மூலையிலே முடங்கிக் கிடக்காமல்

வீழ்ச்சியில்லா வீறுகொண்ட வீரமான மாதரசி!

தாழ்வில்லை உன்பணிக்கு தரணியிலே முன்னுரிமை!!மங்கிய பொழுதொன்றில் இருபது ஆண்டுமுன்னே

பொங்கிவந்த கண்ணீரை வெறுங்கையால் துடைத்துவிட்டு

எங்குதான் போவதென்ற ஏங்கிய உள்ளத்தோடே

தங்களின் சொத்துக்களை வடக்கிலே விட்டுவிட்டு-அகதிக்கு

பங்களிக்கும் பாசப்பூமி புத்தளம் வந்தடைந்த

நங்கையர்கள் வாலிபர்கள் நலிந்த முதியோர்கட்கு......

“உங்களுக்கு நாமிருக்கோம்” என்றவொரு நம்பிக்கையை

அங்கு வழங்கினார்கள் அன்பான மானிடர்கள்.!‘ஜன்சில மஜீத்” என்ற சமூகநலச் சேவகியே!

சனங்களின் புனர்வாழ்வைச் சரித்திர நிகழ்வாக்கி

மனம் மொழி மெய்யறிவு மாறாத தியாகச்சிந்தை.....

இனங்களின் பாதுகாப்பை ஏற்றமாய் நடாத்துவதால்.....

தன்நம்பிக்கை விடாமுயற்சி தளராத மனவுறுதி.....

தன்னலம் சிறிதேனும் தலைகாட்ட முடியாத

பொன்மனச் செல்வியெனப் பொதுமக்கள் போற்றுவரே!

மென்மேலும் உனதுசேவை மேதினியை உயர்த்தட்டும்!!

    

தகவல்:  அலெக்ஸ் இரவி

வாழ்த்துரை எழுதியவர்;----வள்ளீயம்மை சுப்பிரமணியம்.

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF