"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Friday, September 10, 2010

நான் பிறந்த நாடு......வள்ளியம்மை சுப்பிரமணியம்


நான் பிறந்த நாடு
-------------------------------
நான்பிறந்த நாடுஎன்று நானிங்கு எழுதுவது.....
நான்பிறந்து வளர்ந்த மாகாணத் தொகுதியைத்தான். ....
ஊர்பற்றி எழுதும்படி உரிமையுடன் கேட்டீர்செந்தில்
ஏர்  உழுத பறாளாய் மண்ணின் எழில்மிகுந்த அழகுதன்னை....
பேர் பெற்ற ஆலயங்கள் பெருமையுறு வரலாறு....
யார் மறக்க முடியுமய்யா யாழ்ப்பாணச் சிறப்பதனை....?
மங்காத இராமாயண நாயகன் ஸ்ரீராமனின்
தங்கத் திருப்பாதம் பட்டதாம் திருவடி நிலையில்
சங்கமித்ரை பெயர்கொண்ட அசோகமன்னன் புத்திரியும்
சம்பில்துறை வந்திறங்கி சமயம் வளர்த்தகதை.....
சின்னத் தம்பிப் புலவர்கூட சிந்துகவி பாடிவைத்த
எந்நாளும் அழியாத பறாளாய் விநாயகர் பள்ளு.....
கூர்ம வடிவத்திலே கோவில்கொண்ட பொன்னாலையில்
தேர்த்திரு விழாவில் உறியடி உற்சவமும்..........
தயிர்முட்டி சிதறித் தலைமேலே கொட்டியதும்....
பயிர் விளைந்த வயல்வெளியின் பசுமைக் காட்சிகளும்....
வானம் பார்த்த பூமியென்று பேரெடுத்து இருந்தாலும்...
கூன்விழுந்த பின்னாலும் உழைத்துண்னும் உற்சாகம்....
வீட்டுக்கொரு கிணறு... வீதிதோறும் வேலி+மதில்...
பாட்டாகத் திருவாசகம் மார்கழித் திருவெம்பாவில்....
மின்விசிறி  தேவையில்லை வேப்பமரக் காற்றுவரும்.
பன்னாட்டு உணவு வேண்டாம் பனைமரமே பசிதீர்க்கும்.
யாழ்பாடிப் பரிசுபெற்ற யாழ்ப்பா வரலாறு....
பாழ்போகா உணவுமுறை  பனம்பழத்தில் கிடைக்கின்ற
ஒடியல்கூழ், பனங்கட்டி, ஒடித்துண்ணும் புழுக்கொடியல்,
மடித்தெடுத்துப் பேணிவைக்கும் பனாட்டுத் தட்டுகளும்
பதநீருள் பயறு போட்டுப் பக்குவமாய்க் காய்ச்சுகின்ற
இதமான கருப்பங்கஞ்சி.... இப்போதும் வாயினிக்கும்....
குலையாக வெட்டிக் கோவில் பந்தலிலே கட்டுகிற
விலைக்கும் கிடைக்காது விருப்பமான நுங்குகளாம்.
இலுப்பைப் பூக்காயவைத்து அல்லிதட்டி வறுத்தபின்னே
அலுக்காது உரலிலிட்டு உலைகையால் இடித்தெடுத்து...
சூட்டோடு பரிமாறிப் பலரோடு உண்டகதை....
பாட்டாகச் சொன்னால் புரியாது புதியவர்க்கு....
பிறந்ததும் வளர்ந்ததும் அறநெறிகள் கற்றதும்....
துறந்தது பிறந்த மண்ணைத் துக்கமே மகிழ்ச்சியில்லை!


வள்ளியம்மை சுப்பிரமணியம்

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்