Tuesday, December 13, 2011

தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் : தோழர் செந்திவேல் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு

கடந்த 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. வெள்ளவத்தை தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சி.சிவசேகரம் தலைமையில் நடந்த மேற்படி கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் ஆற்றிய நினைவுச் சொற்பொழிவின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.


பொதுவுடைமை இயக்கமானது மாக்சியத்தை அடிப்படைக் கருத்தியலாகவும் உலகக் கண்ணோட்டமாகவும் கொண்டே உலகம் பூராவும் பற்றிப் பரவி வந்திருக்கிறது. தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின்; தலைமையிலான போராட்டத்தினால் சமூக மாற்றத்தை வென்றெடுத்து நிலைநிறுத்த வேண்டும் என்பதை மாக்சிசமும் பொதுவுடைமை இயக்கமும் வெளிப்படையாகவே பிரகடனம் செய்து வந்துள்ளது. அந்த வகையில் பழமைவாதமும் மரபு பேணலும் சடங்கு சம்பிரதாயங்களும் இறுக்கமுடன் இருந்து வரும் நமது தமிழ்ச் சூழலில் ஒருவர் மாக்சிச உலகக் கண்ணோட்டத்தை உள்வாங்கிப் பொதுவுடைமைவாதியாகிக் கொள்வது இலகுவான ஒன்றாக இருப்பதில்லை. அத்தகைய சூழலில் துணிவான மீறல்களும் கடுமையான எதிர்நீச்சல்களும் கொண்டே பொதுவுடைமை இயக்க முன்னோடிகள் தமது அரசியல் சமூக பண்பாட்டுப் பணிகளை அர்ப்பணிப்பு தியாகங்களின் ஊடாக முன்னெடுத்து வந்துள்ளனர். அதனாலேயே அவர்கள் சமூகத்தில் தனித்துவமுடையோராக நோக்கப்பட்டனர். அத்தகைய முன்னோடிகளில்; இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவரே தோழர் கே.ஏ.சுப்பிரமணியம். தான் வரித்துக்கொண்ட கொள்கையால் நடைமுறையால் சொந்த வாழ்வால் பொதுவுடைமையாளர்களுக்குரிய அடிப்படை நிலை நின்று வந்தவர். அதன் காரணமாகவே அவர் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவராக நினைவு  கூறபடுகின்றார்.

தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தமிழர்களின் சமூகப் பரப்பிலே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூக நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராட்ட இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வரிசையில் முன்னின்றவர். பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்தில் தன்னை ஒருவராக்கிக் கொண்டவர். அதன் காரணமாக வடபுலத்தில் தொழிற்சங்க இயக்கத்தையும் சாதியத்திற்கு எதிரான 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும் முன்னெடுப்பதில் முன்னின்றார். 1966-77 காலகட்டத்திலான வெகுஜன எழுச்சிகளும் போராட்டங்களும் தமிழர்களுடைய வரலாற்றில் அன்றுவரை புறக்கனிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வென்றெடுக்க வழியேற்படுத்திக் கொடுத்தன. அதுமட்டுமன்றி பிற்காலத்தில் எழுந்த தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டம் என்ற தளத்தில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபட வைத்ததற்காக அடிப்படைகளையும் வெகுஜனப் போராட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன என்பது சிலர் மறந்துகொள்ளும் ஒன்றாகும். இவ்வெகுஜனப் போராட்ட காலங்களில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்துடன் இணைந்து நின்று போராட்டப் பணியாற்றிய நினைவுகள் இன்றும் பசுமையானவைகளாகவே இருந்துவருகின்றன. நெஞ்சில் உரமும், கொண்ட கொள்கையில் நேர்மைத்திறனும், உழைக்கும் மக்கள் மீதான போராட்ட நம்பிக்கையையும் கொண்ட புரட்சிகரப் பொதுவுடைமைவாதியாக தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் மணியம். அவருடனான நினைவுகள் பகிரப்படும் போது அவை போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் வேண்டி நிற்கும் இளம் தலைமுறையினருக்கு பயன் உள்ள அனுபவங்களாக அமைய முடியும் என்று நம்புகின்றோம்.

அத்தகையதொரு நேர்மையான பொதுவுடைமை இயக்க முன்னோடியின் நினைவுகளின் ஊடாக சமகால அரசியல் போக்குகளை நோக்குவது அவசியமாகும். ஜனாதிபதியும் அவரது மஹிந்த சிந்தனை வழிகாட்டலிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் தமது இரண்டாவது பதவிக்காலத்தின் உச்சநிலையில் இருந்து வருகின்றார்கள். அந்த உச்சநிலை ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கு நான்கு நிலைகளில் செயல்பட்டு அவற்றை நிலைநிறுத்தி வைத்துக் கொண்டார்கள். ஒன்று அரசியலமைப்பிற்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் தனிநபர் சர்வாதிகாரத்தை மேலும் விஸ்தரித்து குடும்ப ஆட்சியை வலுப்படுத்திக் கொண்டமை. இரண்டாவது, பாராளுமன்றப் பெரும்பான்மையை பல்வேறு கட்சிகளையும் உள்ளீர்த்து மூன்றிலிரண்டுக்கு மேல் தக்கவைத்துக் கொண்டமை. மூன்றாவது, ஆயுதப்படைகளை முறைமைப்படுத்தியும் வலுப்படுத்தியும் தமக்கும் தமது ஆளும் வர்க்க சக்திகளுக்கும் உரிய அரனாக மாற்றிக்கொண்டமை. நான்காவது பௌத்த சிங்கள பேரினவாதத்தை வெளிப்படையாகவும் உள்ளார்ந்த அடிப்படையிலும் பற்றி நின்று சிங்கள மக்களை திசை திருப்பி வைத்திருப்பது. மேற்கூறிய நான்கு முக்கிய தூண்களிலேயே இன்றைய மஹிந்த சிந்தனை அரசாங்கம் தன்னை நிலைநிறுத்தி நிற்கின்றது.

இத்தகைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது நாட்டின் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிராகப் பொருளாதார அரசியல் தளங்களில் தரகு முதலாளித்துவ பேரினவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒன்று நவகொலனித்துவ அமைப்பு முறையை வலுப்படுத்தும் வகையிலான நவதாராளவாத பொருளாதாரத்தை விஸ்தரித்துச் செல்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றமை. இரண்டாவது, யுத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கையும் தமிழ் மக்களையும் அழித்து அவலங்களுக்குள் தள்ளியது மட்டுமன்றி யுத்தத்திற்குப் பின்பும் தொடர்ந்து பேரினவாத ஒடுக்குமுறையினை ராணுவ மயப்படுத்தலின் ஊடாக முன்னெடுத்து வருவதுமாகும்.

மஹிந்த சிந்தனையின் தூரநோக்கு என்பதன் ஊடாக இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றப் போவதாக அரச சார்பு ஊடகங்களில் நீட்டி வாசிக்கப்படுகின்றன. ஆனால் இன்றைய மஹிந்த சிந்தனை அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தகுந்த உரைகல்லாகும். அதனை ஆழ்ந்து நோக்கும் எவரும் அதன் உள்ளார்ந்த மக்கள் விரோதப்போக்கை இலகுவாகவே அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ள இருபத்து மூவாயிரம் கோடி ரூபாவானது ஆகக்கூடிய தொகை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பேரினவாத யுத்தத்தை முன்னெடுப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட சுமார் நாலரை இலட்சம் ஆயதப்படைகளைப் பராமரிக்கவும் தீனிப்போட்டு வளர்த்துக்கொள்ளவுமே மேற்படி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆறு மாதத்தில் இத்தொகை மேலும் குறைநிரப்பு பிரேரனை மூலம் அதிகரிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு பாதுகாப்பு என்ற பெயரில் பேணப்படும் ஆயுதப்படைகள் அடிப்படையில் உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும்  எதிராகவே பயன்படுத்தப்படும். இன்று வடக்கு கிழக்கு இராணுவ மயப்படுத்தல்களின் கீழ் முகாம்கள் விஸ்தரிக்கப்பட்டு நிரந்தரமாக்கப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்வை மறுத்து ராணுவ நிர்வாகம் மேன்மேலும் இறுக்கப்பட்டு வருகின்றது.

இதே நிலை வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி தெற்கிற்கும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் தெற்கில் தொழிலாளர்கள், ஊழியர்கள், வேலையற்றோர், மாணவர்கள் வீதிக்கு இறங்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நாட்டின் உழைக்கும் மக்களான தொழிலாளர்கள், விவசாயிகள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என ஏகப் பெரும்பான்மையான மக்களைக் கவனத்திற் கொள்ளவேயில்லை. அவர்களுக்கு எவ்வித ஆறுதலையும் ஆதரவையும் வழங்கவில்லை. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பதுகூட ஏமாற்றேயாகும். வெறும் வாழ்க்ககைப் படியாகவே அன்றி அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அதேவேளை ஏற்கனவே வானத்தை நோக்கி உயர்ந்து செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவோ அதன் மூலம் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவோ வரவு செலவுத் திட்டம் வழிவகைகளை முன்வைக்கவில்லை. அதற்குப் பதிலாக மேலும் விலைகள் அதிகரித்துச்செல்லும் வகையிலான மூன்று வீத நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட போகின்றது. நாட்டின் பொருளாதாரம் முற்று முழுதாகவே மறுகொலனியாக்கத்தின் ஊடாக நவகொலனித்துவமாக இறுக்கப்பட்டு வருகிறது. அன்று 1977ல் ஜே.ஆர். தொடக்கி வைத்த தாராளமயம், தனியார்மயம் மற்றும் திறந்த சந்தை என்ற நவதாராளப் பொருளாதாரத்திற்குள்ளும் அதற்கு வழிகாட்டி பாதுகாப்பு வழங்கி வரும் ஏகாதிபத்திய உலக மயமாதலுக்கும் மஹிந்த சிந்தனை மூலம் வலுசேர்க்கப்பட்டு வருகின்றது. நாட்டு வளங்கள் யாவும் அந்நிய பல்தேசியக் கம்பனிகளுக்கும்  உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்க்கப்பட்டு வருகிறது. இவற்றால் அற்ப சொற்பமாகவே இருந்து வந்த தேசிய பொருளாதாரம் என்பது அடிச்சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது. அதனாலேயே சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இன்றைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து கடனும் ஆலோசனைகளும் வழங்கி நிற்கின்றன. இவற்றை குறைந்தபட்சமாவது எதிர்ப்பதற்கு முன்னிற்க வேண்டிய பாராளுமன்ற இடதுசாரிகள் எனப்பட்டவர்கள் அரசாங்க அமைச்சர் பதவிகளும் சலுகைகளும் பெற்று எதுவும் தெரியாதவர்களைப் போன்று இருந்து வருகின்ற பரிதாப நிலையைக் காணமுடிகின்றது. ஜே.வி.பினர் மட்டுமே வீதியில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுகூட வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் நோக்கிலேயே அன்றி அனைத்து உழைக்கும் மக்களினதும் ஒன்றுபட்ட எழுச்சியை நோக்கி அல்ல என்பது பகிரங்கமானதாகும். அவர்கள் பேரினவாத நிலைப்பாட்டிலிருந்து விடுபடமுடியாதவர்களாகவே இன்றும் இருந்து வருகிறார்கள். அதேவேளை ஜே.வி.பி. க்குள் அதிருப்தியாளர்களாகி வெளியேறியுள்ள மாற்றுக் குழுவினரது நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வேளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையில் முன்னெடுத்த கொள்கை நிலைப்பாடானது மிக மோசமானதாகும். யுத்தத்தின் மூலம் தீர்வு காண்பதில் முழுப்பலத்தையும் வல்லரசு மேலாதிக்க நாடுகளின் உதவி ஒத்தாசைகளுடன் பிரயோகித்துக் கொண்டது. அதனால் தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவுகளையும் அவலங்களையும் அனுபவிக்க நேர்ந்தது. இன்றும் அவற்றிலிருந்து மீளமுடியாத மக்களாகவே வடக்கு கிழக்கு மக்கள் இருந்து வருகின்றனர். இவ்வாறான அழிவுகள் இழப்புக்கள் இடம்பெயர்வுகளுக்கு தொடர்ந்து வந்த பேரினவாத தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்க ஆட்சிகளும் அவர்களுக்கு அரவனைப்பு வழங்கிய இந்திய அமெரிக்க மேற்குலக நாடுகளும் மட்டுமன்றி சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளும் பங்காளிகளாவர். அதேவேளை தமிழ் மக்களுக்கு தலைiமை தாங்கி வந்த அனைத்துத் தலைமைகளும் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் யதார்த்தமற்றதும் மக்கள் சார்பற்ற அரசியல் இராணுவ அராஜகப் போக்குகளும் காரணம் என்பதை இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது. யுத்தம் முடிவுற்று தாம் வெற்றி பெற்றதாகக் கூறிக்கொண்டபோதும் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவதை மறுத்து இராணுவ ஒடுக்குமுறையின் கீழேயே வடக்கு கிழக்கையும் தமிழ் மக்களையும் வைத்திருப்பதிலேயே மஹிந்த சிந்தனையானது முனைப்புடன் இருந்துவருகின்றது. அதனை மக்கள் சார்பாகவும் மக்களோடு இணைந்து நின்றும் எதிர்ப்பது நேர்மையான ஒவ்வொரு பொதுவுடைமைவாதியினதும் இடதுசாரி என்போரினதும் கடமையாகும். அதேவேளை தமிழ்த் தேசியவாதம்; என்ற குறுகிய தேசியவாத நிலைப்பாட்டால் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கு வழிகாட்ட முடியாது என்ற உண்மையும் யதார்த்தமும் மக்களுக்கு உணர்த்தப்படவேண்டும். இதுவரை எந்தவொரு தமிழ்த்தலைமையும் தமது கடந்தகாலம் பற்றி எவ்வித விமர்சனம் சுயவிமர்சனத்தையும் முன்வைக்கத் தயாராக இல்லை. தங்களது கொள்கைகள் வழிகாட்டல்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் தகுந்த மன்னிப்பைக்கூட கேட்கத் தயாரில்லாத நிலையிலேயே தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைவர்களாகத் தமிழ்க்கட்சிகள்  தலைமைத்தாங்க முன்னிற்கின்றன. இது அன்றிலிருந்து இன்றுவரையான பழைமைவாத ஆதிக்க அரசியலை குறுந்தேசிய வாதமாக முன்னெடுப்பதன் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது.
எனவே வர்க்கப் போராட்ட அரசியல் மார்க்கத்தில் உழைக்கும் மக்களின் தலைமையிலான பரந்துப்பட்ட வெகுஜன எழுச்சியும் போராட்டங்களுமே இன்றைய சூழலில் முன்னெடுக்கப்பட வேண்டியதாகவுள்ளது. இப்பாதையிலேயே சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடிவதுடன் அதற்கான போராட்டமானது சிங்கள முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் ஆகிய அனைத்து உழைக்கும் மக்கள் முன்னெடுக்கும் வெகுஜனப் போராட்டங்களுடன் இணைத்தும் ஒன்றையொன்று ஆதரித்தும் முன்னெடுக்கப்படல் வேண்டும். தெற்கில் முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்திற்கான உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன்    வடக்குக் கிழக்கின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும். அதே போன்று வடக்குக் கிழக்கில் தெற்கிலே முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்திற்கு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். இவற்றுக்கான மாற்றுக் கொள்கையும் மாற்றுத் தலைமையும் மாற்றுப் போராட்ட மார்க்கமும் முன்நிலைக்கு வரவேண்டும்.
Thanks to http://www.athirady.info

Saturday, November 26, 2011

மாவீரன் விடைபெற்ற நாள்! 27 கார்த்திகை 1989    வசதிகள் மிகக் குறைந்த ஒரு சின்ன வீடு தான் "சத்தியமனை". அது எங்கள் எல்லாராலும் அமைக்கபட்டது . பல வரலாறுகளை அதனுள் கொண்டுள்ளது.சிறு வயதில் அந்த வீட்டை சுற்றி மேதின ஊர்வலம் நடத்தியதும், "சிறுபொறி" பத்திரிகை நடத்தியதும், உண்டியலில் காசு சேர்த்து கட்சிக்கு கொடுப்பதும் , பல தலைவர்கள் கூடி பேசியதும் , வெற்றிகள், கவலைகள், கண்ணீர் , இரத்தம் எல்லாம் பார்த்த வீடு. மிக வறுமையிலும் சத்தியம் மட்டும் என்றும் குறைந்ததில்லை. அங்கு அப்பா தன்னுடைய நீண்ட காலத்தை தொடர்ந்து கழித்தார். ஏனெனில் பல வாடகை வீடுகளில் இருந்த போது எல்லாம், பொலிசாரின் கெடுபிடிகளால் தொடர்ந்து ஒரே வீட்டில் வசிக்க முடியவில்லை. இது எங்கள் மாமா ,தனது சகோதரியான எங்கள் அம்மாவுக்கு வாங்கி கொடுத்தது. வீட்டு உரிமையாளர் பிரச்னை இன்றி வசிக்க முடிந்தது.
    அப்பாவின் நேர்மைக்கும் , வீரத்துக்கும், தீர்மானத்துக்குமான பல நிகழ்வுகள் பற்றி தோழர்களும், எங்கள் அம்மாவும் சொல்ல கேட்டதுண்டு,பார்த்ததுமுண்டு. , ஆனால் இது என்கண் முன்னால் "சத்தியமனை " இல் நடந்த நிகழ்வு.
     1988 இன் இறுதி பகுதிகள் ,எனது மகள் பிறந்து மிக சில மாதங்களே ஆகியிருந்தது. அப்பா கடும் சுகவீனமுற்று யாழ் திரும்பி இருந்தார். இந்தியன் ஆர்மி இன் கெடுபிடிகள் அதிகமாக இருந்த நேரம். தெற்கில் சிறிமாவோ எதிர் கட்சியாக இருந்துகொண்டு , தனது தேர்தல் வாக்குறுதியில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக இந்தியன் ஆர்மியைவெளியேற்றுவோம்  என்று தெரிவித்திருந்தார்கள். முற்போக்கு அணிகள்  அனைத்தும் இணைந்து இந்தியன்ஆர்மிக்கு  எதிரான வெளியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்தன. வினோதன், மோதிலால் நேரு, குமார் ,பொன்னம்பலம் என பலரும் அப்பாவுடன் இதுபற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். விடுதலை புலிகள்  அமைப்பும் இதற்கு அதரவாக இருப்பதாக இடையில் இருப்போர் தெரிவித்தனர் . அங்கு இருந்த மாத்தையா ,பிரபாகரன் பிளவு பற்றி தெரிந்திருக்கவில்லை. சிறிமாவோவை   யாழ்பாணத்துக்கு அழைப்பதற்கான முடிவை கட்சி எடுத்தது. மொழிபெயர்பாளராக கட்சியின் ஆதரவாளரான  மாமா ஒருவரை அழைப்பதாகவும்  தீர்மானித்தனர் .

கூட்டத்துகு முதல் நாள் கட்சியின் அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களும்  வந்திருந்தனர். மாலை கருகிய நேரம் திடீரென விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த தும்பனும், முன்னர் புளட் அமைப்பில் இருந்த வெற்றி என்கிற பையனும் ஆயுதத்துடன் வந்திருந்தனர், தும்பனை எனக்கு பாடசாலை  காலத்தில்  இருந்து  தெரியும் அதே போல வெற்றியையும் தெரியும். வந்ததும் என்னிடம் தான் தும்பன் கேட்டார் , "உங்கள் அப்பாவுடன் பேசவேண்டும்" என்று ,அப்பா அறையில் இருந்தார் ,தும்பன் கொண்டு வந்த துப்பாக்கியை வாசல் கதவில் வைத்துவிட்டு ,வெற்றியையும் வாசலில் விட்டுவிட்டு உள்ளே வந்து ,சுற்றிவளைப்பு  இன்றி "நீங்கள் நாளைக்கு கூட்டம்  நடத்துவதை இயக்கம் விரும்பவில்லை "என்றார் .அதற்கு அப்பா " இது பற்றி நாங்கள் நீண்ட நாட்களாக பேசி வருகிறோம் , இப்போது  இந்தியன் ஆர்மியின் வெளியேற்றம் என்பது அவசியம் " என்றார். அதற்கு தும்பன் " ஐயா இது எமது இயக்கத்தின் முடிவு, நீங்கள் நல்லவர் என்பது எங்களுக்கு தெரியும்,பொட்டரும்(நடராஜ ) நல்லவர் தான் ஆனால்  அவரை போட்டது நாங்கள் தான் . அதாலை இதை நிறுத்துங்கோ " என்றார். அதற்க்கு அப்பா,மிக நிதானமாக , மிக தீர்மானமாக உயிரை பற்றிய கவலையற்று  " இது இரவு நேரம், ஊரடங்கு வேளை வேறு, அவர் ஒரு நாட்டின் தலைவி ,காலையில் போய் இங்கு வராதை என்று சொல்ல முடியாது., இது அவசியம் என்று கருதுவதால் தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். ஒன்று நீர் செய்யலாம், என்னை சுட்டுவிட்டு போம், சிலவேளை கூட்டம்  நடக்காமல் போகலாம்" என்றார், "நான் சொல்றதை சொல்லிவிட்டேன் .."என்றபடி தும்பன் சென்றுவிட்டார். மீண்டும் கட்சி தோழர்களுடன் அப்பா கலந்தாலோசித்தார். (அந்த இடத்தில் நான் இருக்கவில்லை. ஆனால்  என் கணவர் இருந்தார்.அது பற்றி நான் விபரிக்கவில்லை. )இரவு யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால் கலையில் கூட்டம் இருப்பது உறுதியாகியது .

    அதிகாலை அப்பா வழமைபோல தூய வெண்மை வேட்டி, சட்டையுடன் தயார் ஆனார், இரவு நடந்த பிரச்னை பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. பல தோழர்கள் மேடை அமைப்பதற்காக பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்தில் இருந்தனர். சுமூகமான சூழல் உள்ளதா என்று அறிவதற்காக அவர் தனியாக புறப்பட்டார். மொழிபெயர்க்க வந்த தோழருக்கும், கட்சியின் முக்கிய ஒரு உறுப்பினருக்கும்  சடுதியாக நடுக்கத்துடன் காச்சல் வர, அவர்கள் வரவில்லை, மற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கூட்டத்துக்கான ஆயந்தங்களில் ஈடுபட்டனர்.  எனது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. நானும் வருகிறேன் என்று அப்பாவிடம் சொன்னேன் முதலில் மறுத்த அவர் வற்புறுத்தலின் பின் சம்மதித்தார். நானும், அப்பாவும் மீண்டும் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கை என்மனசில்  இல்லாமல் "சத்தியமனை"  இலிருந்து வெளியேறினோம் .......
    "சத்தியமனை இலுருந்து இரண்டு சைக்கிளில் புறப்பட்டோம். சுழிபுரம் பிரதான சாலை, துரையப்பா கடை, இடும்பன் கோவில் சந்தி வரை ஆர்மியை காணவில்லை. அதில் இருந்த ஆர்மி எங்களை மறித்து சோதனை செய்தது . எங்கும் கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கான சுவரொட்டிகள் இல்லை. பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்தில் சில தோழர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் கதைத்துவிட்டு ,பண்டதெருப்பு பெண்கள் பாடசாலைக்கு போனோம். அங்கு தேவர் அண்ணையின் மனைவியும், மகனும் ஒரு உறவுப் பெண்ணும் இருந்தார்கள் .அவர்களுடன் ரத்வத்தை , கல்கட் சேர்ந்து சிறிமாவோவை அழைத்துகொண்டு மீண்டும் பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்துக்குள் வந்தோம். உண்மையில் நான் அவ்வளவு ஜனக்கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கடுமையான உடல் உபாதையின் மத்தியிலும் மிக உற்சாகமாக அந்த கூட்டத்துக்கு அப்பா தலைமை தாங்கினார். சிறிமாவோ "இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம்" என்றபோது ஜனக்கூட்டம் கைதட்டல்களுடன் ஆர்ப்பரித்து அடங்கியது .இதனை சுற்றி நின்ற இந்திய இராணுவம் பார்த்து நின்றது. கூட்டம் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்த காணொளி.................
    விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் இருந்ததை ஸ்ரீமவோவும் இந்திய இராணுவமும் அறிந்திருந்தார்கள். அதனால் சிறிமாவோ அப்பாவை கொழும்பு வரும்படி வற்புறுத்தினார். அதனை மறுத்து வெளியில் வந்த அப்பாவிடம் இந்திய இராணுவம் தாங்கள் பாதுகாப்பு தருவதாக கூறினார்கள். " உங்களை வெளியேற்றுவதற்காக தான் இந்த கூட்டத்தையே ஏற்பாடு செய்தோம் . " என்று மிக தெளிவாக ,தீர்மானமாக சொன்ன அப்பாவை மிக பெருமையுடனும்  கர்வத்துடனும்  பார்த்தேன். அந்த   உயர்ந்த மனிதனை நான் பொக்கிசமாக காக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நானும் அவருடன் செல்ல ஆயத்தம் ஆனேன். "நீங்களும் வரவேண்டாம் உங்களை தொடர்வதன் மூலம் தான் சிக்கல்கள் ஏற்படும் , நான் கவனமாக இருப்பேன். நீங்கள் போங்கோ "என்று முற்றாக மறுத்துவிட்டார்.
    சில மணி நேரங்களின்  பின்னர் , அப்பா ஒரு விடுதலை புலியின் வீட்டில் தான் தொடர்ந்து சில நாட்கள்  இருந்தார். நான்  அங்கு சென்றும் பார்த்து வந்தேன். பின்னர் வந்த மேதின கூட்டத்தில் பங்கு பற்றியதும் , கடைசியாக சத்தியமனை " இல் இருந்து வெளியேற  வேண்டிய சூழல் பற்றியும் தொடர்வேன்.

27  கார்த்திகை:  விடுதலை புலிகளாலும், அநேக தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் "மாவீரர்" தினம்.  எங்கள் அப்பாவின்  அந்த பெருமை மிகுந்த இல்லத்தை ஒரு நூலகம் ஆகவும், குழந்தைகளின் விளையாட்டு  இடமாகவும்  மாற்றவேணும், . காலம்  முழுவதும் , அந்த உயர்ந்த மனிதனின்  சத்யம்  வாழ்ந்த  இடமாக  அது  இருக்க  வேண்டும்!

திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன்  27 November  2011

Tuesday, November 22, 2011

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு தினம் 27-11-2011

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு தினம் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.
மலர்வு:----05-03-1931                                                   உதிர்வு:----27-11-1989

K.A.Subramaniam's 22nd  Anniversary Memorial Lecture will be held at 5pm 
on Sunday 27 November 2011
Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது

Sunday, November 20, 2011

மணியம் ஒரு மானிட அரும் பூ. -வள்ளியம்மை சுப்பிரமணியம்

கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவு 22 வருடங்கள் (அமரர் 27 கார்த்திகை 1989) ,.......... 

  மலர்வு:----05-03-1931                                                   உதிர்வு:----27-11-1989
  
மணியம் ஒரு மானிட அரும் பூ....
--------------------------------------------------------------------------
தஞ்சை இளவரசியின் குதிரைமுகம் மாறிய மாவிட்டபுரத்தில் பிறப்பூ
பிஞ்சு வயதில் தமக்கையார் குடுப்பத்துக் கொழும்பில் வளர்ப்பூ
சென் - ஹென்றீஸ் கல்லூரியின் மாணவனாக ஆங்கிலப் படிப்பூ
தன்னுடன் படிக்கும் ந்ண்பன் கோவிலுக்குள் வரத்தயங்கிடத் தவிப்பூ

காங்கேயன் - சீமெந்து ஆலையில் பொறியியல் பயிலுநராய் நியமிப்பூ
அங்குள்ள உணவகத்தில் குறிப்பிட்ட சாதியினரைத் தள்ளியதால் பதைப்பூ.
மேட்டுக்குடி மக்களுக்கு மாத்திரமே கதவுகள் திறப்பதால் பக்தியில் வெறுப்பூ
ஆட்டிப் படைக்கும் மதசம்பிரதாயம் மனிதனுக்கு அவசிய மில்லையெனத் துறப்பூ.

இடதுசாரிக் கொள்கைகளில் சமத்துவம் கண்டு ஈடுபட விருப்பூ
நடக்கும் பாதையை வழிமறிக்கும் நில ஆதிக்க நீசர்களில் கடுப்பூ
ஊர்வலம்,போராட்டம் நடக்கையில் ஊக்கமான துடிப்பூ
ஊர்வாய்க்கு அடங்கி ஒடுங்கி கூனிக்குறுகுவோர்க்கு மறுப்பூ.

ஆட்சியினர் எலும்புகளை அடித்து நொருக்கினாலும் முகத்திலே ஒரு சிரிப்பூ
வீழ்ச்சி ஒருபோதும் மானிடத்தை ஒடுக்காதென்பதில் தொடர்ந்த -உழைப்பூ.
மாற்றியக்கத் தோழர்களும்    நாட்டுநலன் கொண்டால் கைகோர்க்க முனைப்பூ
நாற்றிசையும் ஐக்கியத்தை வலுப்படுத்த நாவசைக்கும் மனிதப் பண்பூ.

மணவாழ்வில் மறுக்காது தன்னுடன் வழிநடப்பாள் என்ற அன்பூ
இணக்கமான இருதயம் இருப்பது கண்டு உறுதியான மண முடிப்பூ.
கற்கைநெறி மானிட விழுமியத்தை நேசிக்கத் தொடர் வகுப்பூ.
முற்போக்குச் சக்திகளுடன் சகலரையும் இணைப்பதில் ஒத்துழைப்பூ.

 “தாயகம்” இலக்கிய இதழை ஆரம்பித்து ஆயுள்பரியந்தம் தலையங்க வடிப்பூ
தகாத செயல்கண்டு விட்டால் தட்டிக்கேட்டு விசாரிக்கும் கண்டிப்பூ.
கருத்தரங்கம்,நூல் வெளியீடு,பத்திரிகை வளர்ச்சி கண்டு பூரிப்பூ.
விரும்பாத வீணர்போல் சோறுண்டு மரணிக்க விரும்பாத அரும் பூ.
                                                                                                          --------------.
                                                                                                             வள்ளியம்மை சுப்பிரமணியம்


Tuesday, November 15, 2011

தோழர் சிவதாசன் அவர்களுக்கு.........திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் கவி-அஞ்சலி

தோழர் சிவதாசன் அவர்களுக்கு.........திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் கவி-அஞ்சலி
இளமைக் காலத்தில் இணைந்தாய் பொதுவுடமைப்
பழக்க மொழியூடே பங்கேற்பில் தேர்ந்திருந்தாய்
முழுக்கச் செயற்பட மூச்சாகக் கருமமாற்ற....
மாற்றுஅணி சேர்ந்து மனமுடைந்து போகாமல்....
ஆற்றுகின்ற சேவையது ஐக்கியத்தின் வெளிப்பாடு
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார்
தூற்றட்டும் என்ற திடத்துடனே நாடாளுமன்றத்திலும்
உந்தன் குரலையும் உரிமையுடன் ஒப்புவித்தாய்
தலைமையேற்றாய் 'கற்பகத்தின்' வளர்ச்சியிலும்
இயன்றவரை தமிழ்மக்கள் இன்னல்பல நீக்க......
முயன்று செயற்பட்டு மூச்சையும் வெளிப்படுத்தி
முகங்கொடுத்த இன்னல்கள்..... முரணான காலத்திலும்   
உன்தன் பங்களிப்பை உரியகாலம் செய்ததனால் 
நன்றியுடன் நினைவுகூரும் நல்லுளங்களில் வாழ்கின்றீர்.

திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்15 Nov 2011
 

Monday, November 14, 2011

தோழர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

தோழர்  சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி 

தோழர் சங்கரப்பிள்ளை . சிவதாசன் அவர்கள் 1934ம் ஆண்டு கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தில் பிறந்து -கண்டி மாநகரத்தில் கல்விகற்று , தேசிய ஒருமைப்பாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் ஒத்துழைப்பு வழங்கியவர். 
 
 தோழர் சிவதாசன் அவர்கள், தோழர் கே.ஏ. சுப்ரமணியத்தின் அன்பு மைத்துனரும் மிக நெருங்கிய பால்யகாலத்து நண்பரும் ஆவார். இருவரும்  முற்போக்கு வாலிபர் இயக்கங்களில் இணைந்து பங்கு கொண்டவர்கள். அவர்களது உறவு , அவரது இறுதிகாலம் வரை குடும்ப உறவாக நீடித்தது. பல மொழிகளில் மிக பாண்டித்தியம் பெற்றிருந்தார். பாராளுமன்ற  உறுப்பினர் ஆக பதவி வகித்த காலத்தில் எம் மக்களுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை செய்தார். அவரது ஆத்மா சாந்தி பெற, அவர் விரும்பி நேசித்த "சத்தியமனை" தனது துக்கத்தை தெரிவித்துகொள்கிறது. 

Friday, November 11, 2011

என் மகன் மாத்திரமா? மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளை நினைவு கூர்ந்து........27 கார்த்திகை 2011


என் மகன் மாத்திரமா?
---------------------------------------
தந்தைதாய் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனால்
    முந்தித் தானெடுத்த முடிவினை நிறைவேற்ற
சுந்தரத்தின் வழிபார்த்து சந்ததியின் உபதேசத்தால்....
    பந்தபாசங் களைத்துறந்து...பக்தியாய்த் தமிழின்மேலே....
சிந்தனை செயல்கள் யாவும் சிதறாமலே நடந்து....
   நிந்தனை அனுபவித்து நேசித்த விடுதலையை...
அந்தகராய்ச் சிறைச்சாலை அரணான கோட்டைகுள்ளே....
   விந்தையாய் வருடங்கள் யுகங்களாய்க் கழிந்தனவாம்!
அந்திப் பொழுதினிலே அன்பான வீட்டைவிட்டு....
    சந்திக்குப் போகாமல் சந்துபொந்து வழிபார்த்து....
புந்தியைக் கல்லாக்கிப் புறப்பட்டுப் போனவர்கள்....
   சிந்தையில் விடுதலையை நேசித்த குற்றத்திற்காய்....
வந்தனை செய்தார்கள் வாதாடினால் ‘நாடு”என்று
    மந்தமாய் மறுதலிப்பு மாற்றமாய்ப் போனதாலே....
எந்தன் மகன் மாத்திரமா? எத்தனையோ ஆயிரம்பேர்....
   சொந்த பந்தங்கள் துடிக்கச் சொர்க்கம் போனாரோ?
                                                                                                                  வள்ளியம்மை சுப்பிரமணியம்

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF