Sunday, March 20, 2011

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்.........மறுக்கப்பட்ட உரிமைகளுடன் இந்தியாவில் வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப் பிரஜை !!!

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்........ பகுதி1

-மறுக்கப்பட்ட உரிமைகளுடன்  இந்தியாவில்  வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப்  பிரஜை !!!

வவுனியா

இரவு ரயில் ஏறி விடிகாலை வவுனியா வந்தடைந்தோம். பதின்மூன்று வருடங்களில் நிறையப் பழுதடைந்து கிடந்தது புகையிரதநிலையம். பண்டாரிக்குளம் , குருமன்காடு ,வேப்பன்குளம் வந்தடைந்தோம்.அந்த ரோடு பற்றி சொல்ல ஒரு ஜென்மம் வேண்டும்.மதியம் ஒரு மணி அளவில் ஒரு சிறிய வேனில் புறப்பட்டோம்.சிதைவுகள் குறைந்த மண் ரோடு புழுதியை கிளப்பிய படி பயணம் தொடர்ந்தது.

 ஓமந்தை 

ஓமந்தை வந்தபோது இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து வந்தது நினைவுக்கு வந்தது ,சுபாக்கு இரண்டு வயசு, சுமனுக்கு ஒரு வயசு. இராணுவத்துக்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என்ற குணத்துடன் போராளிகளின் அடாவடி தனத்தின் உச்சம் அங்கு நடந்தது. குழந்தைகள் அதிகம் சிரமப்பட்டினம் .வவுனியா வர்த்தகர்கள் மண்ணெண்ணை வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த நேரம் அது. பின் நாளில்  ஓமந்தை முகாம் விழுந்த காலத்தில் நாங்கள் வவுனியாவில் இருந்தோம்.ஜோசப் முகாமுக்கும் இதுக்கும் நடந்த உச்ச சண்டையை நேரில் பார்த்தோம். இந்த இடம் இப்போதும் நெருக்கடி மிகுந்த இடமாகவே இருக்கிறது. சோதனைசாவடி, வழமையான சோதனைகள் முடித்து புழுதி ரோடு, தார் ரோட்டு மாறி மாறி பயணம் தொடர்ந்தது. பாரிய சேதங்கள்,  இடிந்த வீடுகள் என்று எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாம் வெளி ஆக இருந்தது. ரோட்டு அகலப்படுதுவதற்காக சீன அரசாங்கம் வாகனங்களையும் , சிறிய குடில்களையும் போட்டு இருந்தனர். A9 ரோட்ல பயணம் செய்வேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை.

புளியங்குளம்
 புளியங்குளம்  வந்தடைதோம். நேரம் மூன்று. சிறிய சிலகடைகள் அதோடு ஆர்மிகடைகளும் இருந்தன. சிங்கள மக்கள் சிறிய வாகனகளில் யாழ்ப்பாணம் நோக்கி போய் வந்துகொண்டிருந்தினம். ஒரு சில கார்கள் கூட புழுதியால் நிறமாறி பயணம் செய்தது. இராணுவ முகாம்கள் பனை ஓலையால் அழகாக அடைக்கப்பட்டு இருந்தது.

முருகண்டி பிள்ளையார் 
 முருகண்டியை அடைந்த போது நான்கு மணி. பிள்ளையாரில் எந்த மாறுதலும் இல்லை.அப்பாவுடன் கடைசியாக கொழும்பு  இலிருந்து வந்த போது அந்த முருகண்டி பிள்ளையார் முன்பாகக  என்னையும் மீறி அழுதேன். எனக்கு அது நல்ல நினைவு இருக்கு. அப்பா சிரித்தார். மரணத்தில் கூட மத சடங்கை மறுத்த அப்பாவுக்காக சாமி கும்பிட்டேன். அதுதான் கடைசி தடவை . டேஸ்ட்ட என்ற ஒரு உணவு விடுதி புத்தரும், பிள்ளையாரும் ஒன்றாக இருந்தினம். அது சிங்கள விடுதி. உணவு நன்றாக இருந்தது. கிரிகெட் பார்த்தபடி மக்கள் உணவருந்தினார்கள். கழிப்பிடம் நன்றாக இருந்தது. அந்த ஓரில் இது அவசியமாக பட்டது. இதில் கூடஅரசியல்வாதிகள் தலையிட்டதாக அறிந்தேன்.
Murukandi pillaiyar

முருகண்டி பிள்ளையார் இன்னும் குடிசைக்குள் இருக்கும் காரணம் எனக்கு புரியவில்லை. என்னுடன் வந்த சகோதரன் முருகண்டியானை கும்பிடாவிட்டால் வயித்து வலி வரும் என்று பயமுறுத்தினார். பிள்ளையார் என்னை சோதிக்கவில்லை.

கிளிநொச்சி

கிளிநொச்சியை அடையும் போது ஐந்து மணி தாண்டி இருந்தது. மிகவும் கவலையான விஷயம் பாரிய தண்ணீர் தொட்டி சரிந்து கிடந்தது. கிளிநொச்சியை கைவிட்ட நேரம் போராளிகள் அதனை குண்டு வைத்து தகர்த்ததாக அறிந்தேன்.
Water tank Kilinochi
கிளிநொச்சி நகரம் நவீன பாவனை பொருட்களுடன் , புதுப்பிக்கப்பட்ட புத்தருடனும் அவசர நகரமாக இருந்தது. போராளிகளின் பெண்போராளியின் சிலை உடைக்கபட்டு இருந்தது. பெரிய சேதங்களை பார்க்க முடிந்தது. குண்டு துழைத்த கட்டிடங்கள், ஜனநாடமாட்டம் குறைந்த நகரம் ஆக இருந்தது. பரந்தனும் கிளிநொச்சியை ஒத்ததாகவே இருந்தது.


ஆனையிறவு முகாம். 

என் அண்ணாவுக்காக அப்பா கையெழுத்து போட்ட இடம்.புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரசித்தி பெற்ற இடம். யாழ்ப்பாணத்தை தனிமை படுத்தும் குடா. அங்கு ஒரு இராணுவ பீரங்கி வண்டி ,அதனை வணங்கியபடி மாலைகளுடன் நின்றது. பக்கத்தில் ஒரு இராணுவவீரன் படம். அந்த வீரனால் தான் முகாம் காப்பாற்றபட்டதாக வரலாற்று தகவலும் இருந்தது. இலங்கையை பல கைகள் சேர்ந்து தாங்குவது போல ஒரு சிலை. அழகாவும், ஒப்பரவாகவும் செய்திருந்தார்கள் .அங்கும் வண்டி சோதனை, அடையாள அட்டை சோதனை நடந்தது.

Elephant pass

இயக்கச்சி 

இயக்கச்சி அடையும் போது ரோட்டு பார்ப்பதுக்கு சீராக இருந்தாலும் ,வாகனம் துள்ளி துள்ளி பறந்தது.அது பற்றி சிங்கள மொழியில் மாத்திரம் இராணுவம் குறிப்பிட்டு இருந்தார்கள். பல விபத்து நடந்ததாக அறிந்தேன். பளை தேனந்தோட்டம் எல்லாம் செழிப்பாக இருந்திச்சு வீடுகள் பல காலியாக இருந்திச்சு .தொடர்ந்து சாவகச்சேரிலும் இதே நிலைமை தான் . உடைந்த பல வீடுகள் ,பல வீடுகளில் இராணுவம் இருந்தார்கள். சில வீடுகள் விடுதியாக மாறி இருந்தது.தொடர்ந்து காலியான வீடுகள் அதுவும் உடைந்து இருந்தது. நான் செல்லவேண்டிய இடம் கச்சேரி என்றாலும் யாழ்பாணத்தை முதலில் பார்க்கவேணும் என்று நினைத்தேன் .

யாழ்பாணம்

யாழ்பாணக்கோட்டை சிறையில்  என் அண்ணா சிறை இருந்தது நினைவுக்கு வந்தது. சுப்பிரமணியம் பார்க், நூல்நிலையம் ,வீரசிங்க மண்டபம். ரிம்மர் ஹால் ( அப்பாவின், செந்தில் மாமாவின் பல பேச்சுகளை கேட்ட மண்டபம்.) பக்கத்தில் சென்ட்ரல் காலேஜ் மைதானம், நான் யாழ் மாவட்ட100 mtr, 200mtr ஓட்டத்தில் முதலிடம் வாங்கும் இடம். எதிலும் மாற்றம் இல்லை. ஆனால் சன நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. பெரிய ஆசுபத்திரி , பூபாலசிங்கம் புத்தகக்கடை ,பஸ் நிலையம் வழமை போல கலகலப்பாக இருந்தது.சுபாஸ் கபே மூடி இருந்தது. அப்படியே திரும்பவும் பழைய பூங்கா அரச விடுதிக்குள் வந்தோம். என் மகளின் உற்ற நண்பி தர்மினி தன் அம்மாவின் விடுதியில் தங்கும் படி கேட்டுகொண்டார் .என்னோடை மூன்றாம் வகுப்பில் இருந்து சாரநீயத்தில் (Girls Guides) இருந்த போது 2 நாட்கள் இங்கு தங்கி இருந்து பயிற்சி செய்வோம் .அந்த நினைவு வந்தது. எதிரில் கச்சேரி, என் அம்மா வேலை விசயமாக வரும்போது என்னையும் கூட்டி வருவார். அதற்கு பக்கத்தில் இருந்த YMCA கடையில் தான் அண்ணா முதல் முதல் Fanta Soda  வாங்கி தந்தார்.  அதோடு என்னுடைய நண்பர்கள் வீடும், நான் படித்த இடமும் அருகு அருகே இருந்தது. சுண்டிக்குளி ரோட்ல வரும் போது நான் படித்த காலம் நினைவு வந்தது. அன்பான உபசரிப்பு, நல்ல உணவு .
Jaffna town
சுற்றி வர 17 காவலர்கள். தூக்கம் சீக்கிரம் வர மறுத்தது.அதிகாலை, காலை உணவுடன் தர்மினியின் அம்மா கொடுத்த வாகனதுடனும் சாரதியுடனும் முதன் முதல் நான் பார்த்தது என் பள்ளி தோழியை .அவர் பெரிய ஆசுபத்திரியில் இரத்த பரிசோதகராக இருக்கிறார்.20 வருடங்களுக்கு முன்னர் எப்படி பார்த்தேனோ அப்படியே இருந்தார். சந்தோசத்துக்கு அளவு இல்லை. பின்னர் எதிரில் இருந்த Bank Of Ceylon சிறிது பணம் எடுத்துக்கொண்டு பூபாலசிங்கம் புத்தகசாலை, புது மார்க்கெட், கஸ்துரியார் வீதிவழியாக வின்சர் தியேட்டர், லிடோ தியேட்டர் ஐ காணவில்லை. ராஜா தியேட்டர் ல காவலன் படம் ஓடியது. நல்லூரில் அம்மாவின் பயிற்சி கல்லூரி, கந்தசாமி கோவில் உதயன் பத்திரிகை அலுவலகம் ,மனோகரா தியேட்டரில் நடுநிசிநாய்கள் ஓடியது.

கல்லுண்டாய் பாலம் வழியாக நான் படித்த Jaffna College Technical Institute

ஓட்டுமடம் வழியாக கல்லுண்டாய் வழியாக போனோம். கல்லுண்டாய் பாலம் நான் பார்த்தது போலவே இருந்தது. இடையில் அது உடைந்து திருத்தியதாக அறிந்தேன். நான் படித்த Jaffna College Tech ஐய் பார்த்தபோது மகிழ்வுக்கு அளவில்லை. முதலில் பார்த்தது மைதானம் . 2 வருடமும் cup வாங்கினேன். office, Library  போனேன். Auditorium  பூட்டி இருந்தது. மோகன் அண்ணா ,தான் தான் மோகன் என்ற நினைவில் Guitar வாசித்தபடி பாடுவது நினைவு வந்தது. பக்கத்தில் என் class. அந்த chair இப்பவும் இருந்தது. Computer Lab ஐ பார்க்க முடியவில்லை. நான் computer science படிக்கச் சேர்ந்த காலத்தில் தான் போராளிகள் இயக்கத்தினர் computer களை கொள்ளை அடித்தனர். அப்போது என் அண்ணாவும் போராளிகள் அமைப்பில் இருந்தார். அதில் என்ன பகிடி என்றால் Monitor ஐ மாத்திரம் எடுத்துவிட்டு CPU ஐ விட்டுச் சென்றனர். அவர்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதுபற்றி என் வகுப்பு நண்பர்கள் கலாய்க்கும் போது மனதில் போராளிகளை திட்டியபடி இருந்திருக்கிறேன். என் பஸ் நிலையம் உடைந்து உருக்குலைந்து இருந்தது. என் வீட்டுக்கு போக மனம் இன்றி இருந்த இடம் இப்படி ஆகிற்றே என்று வருந்தினேன். என் நண்பர்களும் உதவினால் அதை இப்போதும் சீரமைக்கலாம்.

Vaddukoddai Bus stand

சித்தன்கேணி சந்தியினூடாக நான் படித்த பண்டதெருப்பு Girls High School

அனேகமாக நான் அந்த சந்தியில் இருந்து தான் அடுத்த பஸ் எடுப்பேன்.அதனூடாக நான் படித்த பண்டதெருப்பு Girls High School குப் போனேன். நான் ஆடிப்பாடிய ஹால் உடைந்து சீரழிந்து கிடந்தது. வழமையாக நாங்கள் பாவித்த அந்த இரும்பு Gate அடைக்கப்பட்டு இருந்தது. நான் விளையாடிய புளியமரம் , அலரிமரம் எல்லாம் இல்லை. நான் school விட்டு விலகிய காலத்தில் கட்டிய கட்டிடம் முன்னுக்கு இருந்தது.
Pandatheruppu GIRLs High School.


5ம் வகுப்பு Scholarship சித்தி அடைந்த பின்பு Hostelல தங்கி இருந்து 2 வருடங்கள் படித்தேன். லூசி அக்கா தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இருந்தார். வயசில் குறைந்த மாணவி நான் தான் என்பதால் என்னுடன் எல்லாரும் அன்பாக இருந்தார்கள். அப்பா,அம்மா, அண்ணா, தம்பி வாரம் ஒருமுறை வந்து விடுவார்கள். இடையில் அண்ணாவும், அப்பாவும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வருவார்கள். என் ஆன்டி எனக்கு இடியப்பமும் முட்டைபோரியலும் Seminar வரும்போது எல்லாம் கொண்டு வருவார். Hostel புது பொலிவுடன்   ஓய்வு விடுதியாக இருந்தது. மைதானத்துக்கு நடுவில் இருந்த Stage இல்லை. 5ம் வகுப்பு கட்டிடம் இல்லை. நன்றாக படிக்கும் மாணவியாகவும், ஓட்ட வீரான்கனையாகவும் என்னை அடையாளம் காட்டிய 2 விசயங்களும் இப்போ இல்லை. என்காலத்தில் படித்த இருவர் ஆசிரியர்களாக இருந்தார்கள்.உதவி அதிபராக இருந்தவர் என் நண்பியின் அக்கா. அதிபரை பார்க்க முடியவில்லை.எனக்கு வடையும் சோடாவும் தந்தார்கள்.

 -   மறுக்கப்பட்ட உரிமைகளுடன்  இந்தியாவில் வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப்  பிரஜை !!!  (திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன்)   .....17 March 2011


தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF