Friday, April 1, 2011

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்........... பகுதி2 -மறுக்கப்பட்ட உரிமைகளுடன் இந்தியாவில் வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப் பிரஜை !!!

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்........ பகுதி2

-மறுக்கப்பட்ட உரிமைகளுடன்  இந்தியாவில்  வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப்  பிரஜை !!!
பாடசாலையிலிருந்து அரசடி வீதி வழியாக என் கணவரின் வீடு , பனிப்புலம் அம்மன் கோவில் , பகவதி அக்கா வீடு சென்றேன். அங்கு மதிய உணவு அருந்திய பின்பு என் அம்மாவின் சகோதரி வீடுக்கு சென்றேன் .


Aunty's House
பாழடைந்த மாளிகை போல இருந்தது. கடதாசி பூ மரமும், காய்த்து சொரிந்த நாவல் மரமும் இல்லை. தாத்தாவும், ஆச்சியும் மனசில் வந்து போச்சினம். ஹரன், கிருபா ,சுதாவை பார்க்க போய் gate இல ஆடிய நாட்களும் வந்து போனது.பக்கத்தில் சின்ன  அண்ணாவும், பெரியம்மாவும் இருந்தினம். சின்னக்கா இருக்கவில்லை. பத்ரகாளி கோவில் போகாமல் சத்தியமனைக்கு போனேன்.
 
சத்தியமனை

அண்மையில் தான் அப்பாவின் விடைபெறுகிறேன் ஒளிநாடா பார்த்தேன். *
மெயின் ரோட்டிலிருந்து சிவப்புகொடிகள் கட்டிய தெரு வெளிச்சுபோய் இருந்தது. ராஜசுந்தரம் மாஸ்டர் வீடு ஒளி இழந்து இருந்தது .ஒழுங்கையில் யாரும் இல்லை. வீட்டடியில் வாகனம் நின்றதும் கனகம் ஓடி வந்தார். என் அப்பாவை, என் அண்ணாவை, ஏன் ? என் உறவுகளையெல்லாம் அவளில் பார்த்தேன். வெடித்து அழுதேன்.எனக்காக, என் குழந்தைகளுக்காக அவள் வாழ்ந்தது எனக்கு நன்றாக தெரியும். அதை என் சத்தியமனையில் பார்த்தேன். Fridge குள்ளே வைத்து  எடுத்தது போல  குளிர்மையாக அழகாக "சத்தியமனை" இருந்தது. அந்த அழகை நான் சுப்பிரமணியம் பூங்காவில் கூட பார்கவில்லை. கடவுள் நம்பிக்கையும் மூடம்பிகைகளும் அற்ற என் அப்பா ,என் அம்மாவின் ஆசைக்காக நட்ட துளசி செடி செழித்து வளர்ந்திருந்தது . வாழை, தென்னை, ஜம்பு , மா, வேம்பு, விளாதி ,எலும்பிச்சை எல்லாம் குளிர்மையாக காய்த்து தொங்கியது.
எங்கள் மாமா தான் அந்த நிலத்தை வாங்கி தந்தார். முள்ளுச்செடிகளும் பத்தையுமாக  இருந்தது . அப்பா, அம்மா, அண்ணா, தம்பி சேர்ந்து தான் "சத்தியமனை" ஆனது. முதலில் கட்டியது கழிப்பிடம். நான் அப்போது 5ம் வகுப்பு படித்தேன். முதலில் சிறிய குடிசை வீட்டில் ஆரம்பித்து சிறிது சிறிதாக கட்ட தொடங்கினோம். வீட்டுக்கு என்ன  பெயர் வைப்பது என்ற போது அண்ணா தான் "சத்தியமனை" யை தெரிவு செய்தார். அப்போது அது ஒரு குடிசை.

"Sathiamanai" Appa's gift for Amma

உண்மை வாழவேண்டும் என்று அப்பா வாழ்ந்தார். ஒரு கம்யூனிஸ்ட் தன் குடும்பத்தை எப்படி அமைக்கவேணும், நாட்டை எப்படி நேசிக்க வேணும் , மக்களை எப்படி உணர வைக்கவேணும் என்பதுக்கு உதாரணமாக  அப்பா வாழ்ந்தார். வறுமையிலும் செம்மையாக இருந்தார். சத்தியமாக வாழ்ந்தார். அவருடைய நூல் நிலையம் , ஒழுங்காக அடுக்கப்பட்டு இருந்தது. 60ம் ஆண்டிலிருந்து தேவையான பத்திரிகைகளின் சேகரிப்பு இருந்தது. அவரின் சில டயரிகள் இருந்தன. எங்கள் மாமாவின் ஓர் டையரியும் இருந்தது. எங்கள் அப்பா, அம்மாவின் திருமணம் பற்றி குறிப்பிட்டு இருந்தார்."Sathiamanai" my Father's Collections

நாங்கள் 3 பேரும் அடிகடி விழுந்து எழும்புவோம். எப்போதும் முதலுதவி பெட்டி இருக்கும். அதைகூட அப்பா தான் உருவாக்கினார். அவர் ரசித்து சேகரித்த பொருட்கள் பெரும்பாலும் அப்படியே இருந்தது. அவர் படுத்த கட்டில், பார்த்து திரும்பவும் அழுதேன். என்னால் எதை மறக்க முடியும் ? அப்பாவை நேசித்த , அவரின் கொள்கைகளை புரிந்துகொண்ட ஒருவருடன் வாழும் வாழ்க்கை எனக்கு கிடைத்து. அப்பாவையும், "சத்தியமனை"யும் மீறி ஒரு செக்கனும் என்னால் வாழமுடியவில்லை. அதனால் தான் என் குழந்தைகளையும் என்னால் சரியாக வளர்க்க முடிந்தது.

My grand father's creation in "Sathiamanai" எங்கள் அம்மா சொல்லுவா , உப்பு கூட நாங்கள் தான் வாங்கி வாழதொடங்கினோம் என்று. எந்த வழியிலும் உதவி கிடைக்கவில்லை. காதல் திருமணம்,கலப்பு திருமணமும் கூட. அப்பா தன்னுடைய வேலையை விட்டு விலகி முழுநேர கட்சி வேலையில் ஈடுபட்டார். அம்மாவின் ஆசிரிய வேலை தான் எல்லாவற்றுக்கும் உதவியது. அம்மாவின் வேலை மாற்றம் காரணமாக பல வீடுகள் வாடகைக்கு இருந்தோம். அப்பாவின் அரசியல் வாழ்க்கையினால் அடிக்கடி போலீஸ் தேடி வந்தது. வீடு வாடகைக்கு எடுப்பதும் கஷ்டமாக இருந்த சூழலில் தான் "சத்தியமனை" அமைந்தது. சண்முகதாசன் மாமா முதல் பல கட்சி தோழர்கள் வந்து போன இடம். எங்கள் வீடுக்கு கடைசியாக வந்தவர் வி .ஏ .கந்தசாமி மாமா (பொதுச் செயலாளர், ஈழத் தொழிற்சங்க சம்மேளனம்) . அப்பா சில அரசியல் பிரச்சனையால் சிக்கலில் இருந்த சமயம் வந்து அப்பாவின் கைகளை பிடித்து அழுதது , பின்னர் நாங்களும் அழுதது இன்றும் நினைவு இருக்கு. ஆனால் அப்பா அவரின் உதவியை மறுத்துவிட்டார். 

 
Peking Review, 1963-Page 17. ஒரு பெட்டியினுள் பல கடிதங்கள் இருந்தன. அதில் டானியல் மாமா அப்பாவிற்கு எழுதிய கடிதங்கள். தன்னுடைய நிலத்தில் உள்ள  கட்சியின் புத்தக நிலையத்தை அகற்றுமாறு எழுதியது. இப்படி பல கடிதங்கள் எடுத்து வந்தேன். அதில் எனக்காக அப்பா எழுதியது 23 May 1989. 

"Sathiamanai" Appa's Letter

பல கடிதங்கள், கட்டுரைகள் , அவரின் டயரிகள் ,புகைப்படங்கள் என்று நிறைய சேகரிப்புகள் கிடைத்தன.அவருடைய தீர்க்கதரிசனமான எழுத்துகள் வியப்பில் ஆழ்த்தின. இதே போல அண்ணா சிறையில்  இருந்து அனுப்பிய கடிதங்கள் , பின்னர் போராளிகள் அமைப்பிலிருந்து விலகிய பின்பு எழுதிய காரணங்களும், கடிதங்களும் இருந்தன. இவற்றை பார்த்துகொண்டு இருந்தபோது பேபி அக்கா, சின்னக்கா தன் இரு பெண் பிள்ளைகளுடன் வந்தர். திரும்பவும் கண்ணீர், பல கதிகள், நல விசாரிப்புகள் , தழுவல்கள் அந்த அன்புக்கு ஈடுஇணை இல்லை. அந்த நேரம் நல்லை அண்ணாவும் வந்தார். அண்ணாவின் நண்பர் என்பதுடன் , இவர் ஆரம்பகாலம் தொட்டு  போராளிகள் அமைப்பிலிருக்கும் ஓர் விசுவாசம் மிக்க போராளி. போராட்டத்தின்  ஒரு பகுதியாக அவர் வெளிநாட்டில்  சிறை இருந்த போது, அப்பா அவருக்கு புத்தங்கள் அனுப்புவதை தவறாமல் செய்து வந்தார். அத்துடன் , அப்பா, அம்மாவின் திருமணத்தில் இருந்த சாதி முரண்பாடுகளால் அப்பாவுடன் தொடர்புகளை  துண்டித்த அப்பாவின் குடும்பம் , அவரின் தாயின்  மரண நினைவு நூலில் கூட அப்பாவின் பெயரை போடவில்லை.  அக்கா மீது மிக அன்பு கொண்ட அப்பா , அவவின் மரண வீடுக்கு நல்லை அண்ணையுடன் தான் சென்று வந்தார். 1986 August இல் நல்லை அண்ணை கடைசியாக எங்கள் சத்தியமனை இல் பார்த்தேன்.அவர் முள்ளிக்குளம் போவதாக சொல்லி  சென்றார். பின்னர் 1994 இல் என் தம்பியுடன் சென்று மகர சிறையில்  பார்த்தேன்.
                                 


"சத்தியமனை " சந்தோசங்கள், கவலைகள், கண்ணீர், இரத்தம், பெருமைகள் ,சாதனைகள் எல்லாம் பார்த்த வீடு. அண்ணா 9 ஆம் வகுப்பு படிக்கும் போது சிறுபொறி என்று ஓர் கையெழுத்து பத்திரிகை நடாத்தினார். அதற்காக ஒரு சிறு காரியாலயம் கட்டினோம். உண்டியல் நிதி சேகரித்து தொழிலாளி பத்திரிகைக்கு கொடுப்போம் . 

தொடரும்.........திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன்
 * கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் மரண நிகழ்வு 1989 காணொளிகள் ( http://sathiamanai.blogspot.com/2009/10/1931-1989-memory-of-kasubramaniam-1989.html )
No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF