Thursday, April 14, 2011

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்........ பகுதி3 -மறுக்கப்பட்ட உரிமைகளுடன் இந்தியாவில் வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப் பிரஜை !!!

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்........ பகுதி3

-மறுக்கப்பட்ட உரிமைகளுடன்  இந்தியாவில்  வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப்  பிரஜை !!!
அதிகாலையில் இருந்து அண்ணா சும்மா இருப்பதில்லை. அதிகம் அடியும் அவன்தான் வாங்குவான். அண்ணா ஒவ்வொரு  நாள் காலையிலும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க வேண்டும் . பின்னர் தம்பியுடன் சேர்ந்து பாத்தி அமைக்க வேண்டும். ஆனால் எப்போதும் தான் தான் முதல்வன் என்ற அதிகாரத்தை என் மீதும் தம்பி மீதும் காட்டதவறுவதில்லை. அதே நேரம் நாம் அழுதால் உடனே இரங்கும் பண்பும்,கட்டியணைக்கும்  குணமும் தாரளமாக இருந்தது. என்று அண்ணா எங்ககூட இல்லை. 1984 Dec இல் அண்ணா கைது செய்யப் பட்டார். வானொலி மூலமாக கேட்டு  அறிந்துகொண்டோம். 48 மணிநீர ஊரடங்கு உத்தரவும் ,வட்டுகோட்டை தொகுதியை இராணுவம் சுற்றி வளைத்ததும் சீக்கிரத்தில் மறக்க முடியாத நிகழ்வு . அன்று இரவும் ,அதைதொடர்ந்து நாங்கள் வாழ்ந்த வாழ்வு கண்ணீரின் உச்சம். குருநகர் முகாம், யாழ்ப்பாண கோட்டை, பலாலி இராணுவ முகாம், என்று நாங்கள் அலைந்தது கொஞ்ச நஞ்சமில்லை. பின்னர் பூசா , வெலிகட என்று இருந்து அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் இந்திய இலங்கை அமைதி ஒப்பந்த்ததுடன் விடுதலையாகி ,சிங்கபூர் சென்று, பின்னர் நோர்வே நாட்டுக்கு சென்றார். சிலகாலத்தின் பின் இந்தியா வந்தார். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அகாலமரணம் ஆனார். 


1969 Mayday Rally


பல போராடங்களாலும் ,பொலிசாரின் அடிகளாலும் அப்பா சீக்கிரம் நோயாளி ஆகிபோனார். அத்துடன் தன் கொள்கைக்கு மாறாக இருந்த அண்ணாவை சென்று பார்க்க விரும்பவும் இல்லை. ஆனால் தன் மூத்த மகனின் பிரிவும அவரை தாக்கியது. தம்பி பாடசாலை மாணவன் . அந்த நேரம் பெண்பிள்ளைகள் விடுதலை போராட்டத்தில் அதிகம் பங்கு கொள்ளவில்லை. அதனால் என் மீது இராணுவத்திற்கு  சந்தேகம் வரவில்லை.Anna and Me
அதனால் நானும் அம்மாவும் தான் ஒவ்வொரு கிழமையும் அண்ணாவைப் பார்க்க போய் வருவோம் .என் 19 வயசிலிருந்து தொடர்ந்து நான்கு வருடங்கள் அண்ணாவை சென்று பார்த்து வந்தேன். அந்த காலத்தில் தான் , என்னை நான் புரிந்துகொள்ளவும், சில தெளிவான முடிவுகளை எடுக்கும் தைரியமும் எனக்கு வந்தது. பொறுப்புள்ள பிள்ளையாக நடந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்த வயசில் என்னை நானே மாற்றி கொண்டது பற்றி இப்போ என் குழந்தைகளுக்கு சொல்வதுண்டு. நிறைய எழுதுவேன், கவிதைகள் கூட எழுதினேன். என் அண்ணாவின் பிரிவு என்னை, என் தம்பியை நிறைய பாதித்தது. 
 
Anna's letter 22 April 1989


அப்பாவின் உடல்நிலை , வறுமை எல்லாம் சேர்ந்து தம்பி வெளிநாடு செல்ல முடிவு எடுத்தான். நன்றாக படிக்க கூடிய தம்பியின் இந்த முடிவு பற்றி எல்லாருக்கும் கவலை. அவன் அதில் பிடிவாதமாக இருந்தான். இந்த கால பகுதி மிகவும் கொடுமையானது. இவை  எல்லாம் சேர்ந்து தான் நாங்கள்  பிழையானவர்களாக வாழக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். வெளிநாட்டு பிரயாணம் சரிவரவில்லை. கிட்டத்தட்ட 7 மாதங்களின் பின்னர் தம்பி மீண்டும் படிக்க ஆரம்பித்தார். அவரை Jaffna Hindu hostel இல் சேர்த்தோம். அவர் நன்றாக படித்து புலமைபரிசில் பெற்று பேராதனை பொறியியல் பீடத்துக்கு தெரிவு ஆனார். எனக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்தனர். "சத்தியமனை"இல் திருமணம் முருகையன் மாமா தலைமையில் நடந்தது.

அண்ணா திருமண வாழ்த்து சிறையில் இருந்தபடி அனுப்பினார். சுபரா பிறந்தார். Su Ba Ra என்று அப்பாவின் பெயர் ,எனதும், என் கணவரதும் முதல் எழுத்துக்களை சேர்த்து அந்த பெயரை வைத்தோம். எங்கள் அப்பாவின் சந்தோசத்துக்கு அளவு இல்லை. அவளுடன் இருக்கும் போது மாத்திரம் ,தன்னுடைய வருத்தங்களையும், அரசியல் முரண்பாடுகளையும்  மறந்து சிரித்து விளையாடினார். தினமும் அதிகாலையில் torch light ஐ சுவரில் அடித்து அசைத்தபடி நிலா பாட்டு பாடுவார். பின்னர் ஒரு தடவை அவருக்கு சுயநினைவு இழந்த போது தம்பி அதை நினைவூட்டி அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்தான். ஆரம்பத்தில்" தொழிலாளி" பத்திரிகை என்று இருந்தது பின்னர் 1978 பிரிவின் பின்னர்" செம்பதாகை "ஆகி , பின்னர் "புதியபூமி" ஆனது. பெயர் மாற்றம் வேண்டும் என்பதில் அப்பா அதிக சிரத்தை எடுத்தார். பத்திரிகை என்பது மக்களிடம் சேர வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார், அதனை கட்சி தோழர்களும் ஏற்றுகொண்டார்கள். விடிகாலையில்  எழுந்து "தாயகம்" ஆசிரிய தலையங்கம், மற்றும்  புதியபூமி பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் , RED BANNER செய்திகள் என்பதை எழுதுவதை வழக்கமாக்கி கொண்டார். காலையில் எழும்புவது  பற்றி ஓர் கடிதம் கூட  எழுதி  இருந்தார். 
"sathiamanai" Letter by K A Subramaniam 1989
பின்னர் நடந்த சில அரசியல் முரண்பாடுகளால் அப்பா யாழ்பாணத்தை விட்டு  செல்லவேண்டிய  நிலைமை ஏற்பட்டது. அது பற்றி பிறிதொரு சந்தர்பத்தில் சொல்லாம். அது பெரிய நிகழ்வு. அப்பா கடைசியாக "சத்தியமனை" ஐ விட்டு வெளியேறிய நாள் மறக்க முடியாத நாள். எனக்கு ஒரு குழந்தை இருக்கு என்றோ, எதுவுமே என்மனசில் இல்லை. அப்பா, அப்பா ...இது ஒன்றுதான் எனக்குள் இருந்தது. இந்த தேசத்துக்காக அப்பா இழந்தது அதிகம். இறுதியில் அப்பா உயிரை கூட கேள்வியாக்கியபோது தாங்க முடியவில்லை. என்ன தவறு செய்து தான் பிறந்த மண்ணை விட்டு விலக வேண்டும்? அப்பா போவதற்கு சம்மதிக்கவில்லை. .இதனை நான் அழுதுகொண்டு type செய்கிறேன். தொடர்ந்து type பண்ண முடியவில்லை. .....!
 
"sathiamanai" Su Ba Ra One year old 1989.தலைமறைவாகி சிறுது காலம் வேறு வீட்டில்  வசித்து, பின்னர் கண்டிக்கு சென்றார். உயிர் பிரிந்த பின்னர் தான் அப்பா மீண்டும் "சத்தியமனை" க்கு வந்தார். தன்னுடைய விடைபெறுகிறேன் நாளை எப்படி அரசியல் படுத்தவேண்டும் என்பதை தன்னுடைய தோழர்களுடன் பேசி இருந்தார். தன்னுடைய புகைபடத்தில் இருந்து எல்லாம் அவர் தீர்மானித்து வைத்திருந்தார். இன்றுவரை நான் அவரின் விடைபெறுகிறேன் புகைப்படங்களை பார்த்ததும் இல்லை. பார்க்க போவதும் இல்லை. ஒளிநாடாவை கூட  அண்மையில் தான் பார்த்தேன்.அவர் கண்டியில் ஒரு முஸ்லீம் வீட்டில் தான் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் எனக்கும் ஆசிரிய பணி நியமன கடிதம் கிடைத்து கண்டி செல்வதற்காக புகையிரதத்தில் சென்றுகொண்டேருந்தேன்.குருநாகலில் வண்டி நிறுத்தபட்டது . எதிரில் போன ரயில் வண்டியும் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்பாவை பார்க்க போகும் ஆர்வத்தில் இருந்த எனக்கு ,அந்த தாமதம் சினத்தை ஏற்படுத்தியது. என்னை மாத்திரம் இறங்கச் சொன்னார்கள். காரணம் கேட்டேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் யாழ்பாணம் கொண்டு செல்வதாக சொன்னார்கள். எதோ ஒன்று மனதில் குத்தியது. வண்டியில் ஏறி மேகம் பார்த்தேன். வெண்மேகத்தில் என் அப்பா வெள்ளை வேட்டியுடன்  தொடர்ந்து வந்தார். வீட்டுக்கு எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. என் கணவர் அழுது முதலும் கடைசியுமாக அன்று தான் பார்த்தேன். என் குழந்தையும் எதோ புரிந்தது போல அழுதாள். அம்மா என்னிடம் வரவில்லை. அந்த தைரியம் அவவிடம் இருக்கவில்லை. ஒரு சிங்கள பிக்குவின் இரத்தமும், ஒரு முஸ்லிம் சகோதரியின்  உணவும் தான் கடைசியாக அவரிடம் இருந்தது. வலது கையை உயர்த்தியவாறு அவர் விடை பெற்றார் என்று பின்னர் அறிந்தேன். எங்களுக்காக அகிலன் அப்பாவுடன் இருந்தான். ஒரே குழந்தையான அவனை அவனது பெற்றோர் ,எங்கள் மீதும் "சத்தியமனை" மீதும் கொண்ட நம்பிக்கையினால் அப்பாவுடன் இருக்க சம்மதித்தனர். தம்பி  எவ்வளவு கஷ்டபட்டு இருப்பான் என்று பின்னாளில்  நினைத்ததுண்டு. அப்பா அங்கு இருந்த போது கட்சி தோழர்கள், பேராசிரியர் தில்லைநாதன் செய்த உதவிகள் அளவிட முடியாதவை. அப்பாவை குப்படுதுவதற்கு தம்பையா அண்ணா அதிகம் கஷ்டபட்டதாக அறிந்தேன்.

"Sathiamanai" Appa to Amma from China in 1979


அவரது தோழர்கள், நண்பர்கள் அற்புதமானவர்கள். செந்தில் மாமா நான் பிறந்த வருடம் தான் கட்சியில் இணைந்ததாக சொல்லுவார். அப்பா மிக மிக நேசித்தவர்களுள் செந்தில் மாமா முதன்மையானவர். அதே போல தேவர் அண்ணா ,எங்கள் அப்பாவை சந்தோசமாக வைத்திருந்த  ஒருவர் ,அது நிச்சயமாக தேவர் அண்ணா தான். அதை அப்பா பல முறை சொல்லிகேட்டதுண்டு. நாங்கள் பார்த்ததும் உண்டு. எப்பவும் possitive attitude அவரிடம் இருக்கும். அது போல பல தோழர்கள், நண்பர்கள் என்று அரசியலுக்கும் அப்பாற்பட்டும் இருந்தார்கள். 


1989 later part, this is the last pic of Appa.

1989 Nov 27  ந் திகதி அப்பா இந்த உலகத்தில் இருந்தும் ,"சத்தியமனை"இலுருந்தும்  விடைபெற்றார்.அந்த நாளை அவரது தோழர்கள் எழுச்சியுடன் நடாத்தினார்கள். இந்திய அமைதிப் படையும் , போராளிகளும் முரண்பட்ட காலம். அதில் இப்படியான ஒரு ஊர்வலத்தை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. செந்தில் மாமா, தேவர் அண்ணா, தருமு மாமா, என்று பலரின் கண்ணீர் பேச்சுகளும், அப்பாவின் மீது அவர்கள் கொண்ட அன்பும், நம்பிக்கையும் தான் அப்பா இந்த தேசத்துக்ககாக வாழ்ந்ததுக்கு சான்று. சண் மாமா , மூர்த்தி மாமா , சிறிமாவோ என்று பலர் அரசியல் வேறுபாடு மீறி அப்பாவுக்கு மரியாதை செலுத்தினர். கால ஓட்டத்துடன் கருத்துகள் மாறினால் கூட ,அப்பா நேசித்த , மதித்த மனிதர்களையும், கருத்துகளையும் மீறி நாங்கள் எதுவும் செய்வதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். அதை தான் நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி  வளர்த்திருக்கிறோம். 

மத சம்பிரதாயங்கள்ளையும், மூடநம்பிகைகளையும் தீர்மானமாக மறுத்த அப்பாவின், விடைபெறுகிறேன் நிகழ்வில் கூட அவை எதுவும் இருக்கவில்லை. அவர் அம்மாவுக்கு கட்டிய தாலி "அரிவாளும், சம்மடியும்" தான் . அதுதான் அவவின் தாலி. பல தடைவைகளைப் போல ஒருதடவை பணக் கஷ்டம் வந்த போது, அந்த தாலியை அடவு வைத்திருந்தோம். சங்கானை வங்கி கொள்ளையில் அந்த தாலியும் திருட்டு போனதாக அறிந்தோம். எங்கள் தம்பிக்கு சரியான கவலை. எங்கள் அப்பா செய்த "அரிவாளும், சம்மடியும் " இல்லாமல் போக கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தான். அதன் முக்கியத்துவம் புரியாமல் அவர்கள் உருக்கி விடுவார்கள் என்று கவலைபட்டான். எல்லா இயக்க office கும் போய் கேட்டு வந்தான். நல்ல வேளை தாங்கள் கொள்ளை அடிக்கவில்லை என்று சொல்லி , அவனை சுடாமல் விட்டு விட்டார்கள். பின்னர் அது களவு போகாமல் இருந்ததாக வங்கி அறிவித்து , பணத்துக்கு சிரமப்பட்டு அதை திரும்ப மீட்டோம். அப்பாவின் விடைபெறுகிறேன் நிகழ்வில் கூட அது வங்கியில் தான் இருந்தது. பின் தம்பி அதை மீட்டு கொடுத்தார். இன்றும் அம்மா அதை  அப்பாவுக்காக போட்டு இருக்கிறார். அதில் தெரியும் அழகை வேறு எதிலும் நான் பார்த்ததில்லை. அப்பா அதை தானே போய் இருந்து செய்ததாக சொல்லுவார். அதை படம் எடுத்து பிறிது ஒரு தரம் போடுகிறேன்.

தொடரும்.........திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன்  


 *மூத்த கவிஞன் முருகையன் 19 November 1986 in Jaffna 2 minutes video clips during my wedding.  

( http://sathiamanai.blogspot.com/2009/07/new-book-on-way.html )

1 comment:

  1. படிக்கும் போது கண்களில் நீர் வழிவதை கட்டுப் படுத்த முடியவில்லை.

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF