Tuesday, May 24, 2011

குப்பைத் தொட்டி-.கவிதை...வள்ளியம்மை சுப்பிரமணியம்

குப்பைத் தொட்டி.

-------------------------------

என்னுடைய பதற்றத்தை யாரிடத்தில்
சொல்வேனோ?

 எனக்கு உயிரிருந்தால் நானெடுத்து
வளர்ப்பேனே!

 

உயிருள்ள ஒருசிசுவை என்னுள்ளே போட்டுவிட்டு-
தன்

 உயிரோடு மானத்தையும் காப்பாற்றப்
போனாளே!
 

ஐயோ!நான் என்னசெய்வேன் ?  ஆறாப்பசியோடு

அலையும் தெருநாய்கள் மோப்பம் பிடித்து
வந்தால்.....!

 

அநாதையான இச்சிசுவைக் கடித்துக்
குதறுதற்கோ

ஐயோ! என்னிடத்தில் அடைக்கலமாய்ப்
போட்டாளோ?

 

ஒருகுழந்தை
இல்லையன்று ஏங்கித் தவிப்போரே!

ஓடிவந்து காத்திடுவீர் உமக்குப்
புண்ணியந்தான்!

 

சிறுவாய் திறந்து அந்தச் சின்ன
உயிர்உம்மை

“அம்மா! அப்பா” அழைக்கையிலே ஆனந்தம்
பெறுவீரே!

 

என்னுடைய பதற்றத்தை யாரிடத்தில்
சொல்வேனோ?

எனக்கு உயிரிருந்தால் நானெடுத்து
வளர்ப்பேனே!  
 
-குப்பைத் தொட்டி

Friday, May 13, 2011

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்........ பகுதி4 -மறுக்கப்பட்ட உரிமைகளுடன் இந்தியாவில் வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப் பிரஜை !!!


சத்தியமனை இல் அதிகம் சுழண்ட நான் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைப் பார்த்தேன். சாயந்தர நேரமாகி இருந்ததால், பாடசாலையில் மாணவர்கள் இல்லாமல் வெறிச்சுபோய் இருந்தது. பக்கத்தில் எனது bus stand . மீண்டும் என் ஆரமபகாலங்கள் வந்து போயின. பக்கத்தில் பறாளாய் முருகன் கோவில், போகமுடியவில்லை. அதனூடாக பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் கோவில் மைதானத்தை வந்தடைந்தோம். பிரசித்தி பெற்ற வட்டுகோட்டை மகாநாடு நடந்த மைதானம் .. நான் சிறு பிள்ளையாக , கையில் இரத்தம் கிழித்த காட்சிகளையெல்லாம் பார்த்திருக்கிறேன் . எங்கள் அப்பாவும் அந்த மகாநாட்டை பார்த்திருக்கிறார். பின்னர் அமிர்தலிங்கம் பிறந்த வீடு வழியாக சித்தன்கேணி ,சங்கானை, சண்டிலிப்பாய், மானிப்பாய் ஐ வந்தடைந்தோம். இந்த இடம் மட்டும் கொஞ்சம் நகரமயமாகி இருந்தது. food city , coffee shop, saloon என்று புதிய வடிவில் இருந்தது. மானிப்பாய் hospital புதிய பச்சை வர்ணத்துடன் இருந்தது. church அப்படியே இருந்தது. அதற்க்கு பக்கத்தில் இருந்த போராளிகளின் காரியாலயம் மீண்டும் உரிமையாளரின் வசம் போனது போல, மிக நேர்தியாக சீரமைக்க பட்டிருந்தது. பக்கத்தில் Hindu ladies school மாணவர்கள் இல்லாததால் சோபை இழந்திருந்த்தது. பழைய கிட்டு பூங்காவை காணவில்லை. எதிரில் இருந்த புகழ் பெற்ற ஆனைகோட்டை police station ஐயும் காணவில்லை. ஓட்டுமடத்தில் போலீஸ் வழிமறித்து சோதனை நடத்தினர். திரும்ப யாழ்பாணத்தை அடையும் வரை பாரிய மாற்றங்களை பார்க்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை நந்தன் என்ற சாரதி, எனக்கு ஒரு நல்ல சகோதரன் ஆகினார். அவருடன் நான் கோட்டை செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தேன். இரவு ஷோபாசக்தி இன் தகவல் கண்டு ,அவரின் ஊரான அல்லைபிட்டியின் வெண்மணல் கடற்கரையையும் பார்த்து வர முடிவு செய்தேன். முதலில் கோட்டைக்கு போனோம் .பழைய பல நினைவுகள் வந்து போனது. நிச்சாமத்தின் விடிவுக்காய் வாழ்ந்த தருமாமா , சின்ராசு மாமா, விகின்ராசு மாமா, பசுபதிமாமா, ராசையா மாமா என்று பல பேர். அவர்களின் சிறை வாழ்கை யின் போது எங்களையும் அப்பா கோட்டை சிறைக்கு கூட்டி  செல்வார். பின்னர் அண்ணா அங்கு இருந்தார். அதனால் அங்கு செல்லவேண்டும் என்று முடிவு எடுத்தேன். முதன் முதல் கோட்டையில் அண்ணாவை பார்க்க சென்ற போது நான் கருப்பு, சிவப்பு சட்டை போட்டிருந்தேன். ஓர் அதிகாரி நீயும் போராளியா என்று கேட்டான்.  அப்போதுதான் தெரியும் அந்த அமைப்புக்கு ஒரு வர்ணம் இருக்கு என்று. பின்னர் அந்த அதிகாரி கடுமையாக அண்ணாவை திட்டிக்கொண்டு இருந்தான். Russian Model 84 Pistol வைத்திருந்தான் என்றும், அது தங்களிடம் கூட இல்லை என்றும் சொல்லிக்கொண்டு இருந்தான். அண்ணா மிகவும் மெலிந்து போய் இருந்தார். அவரை நாங்கள் பார்த்த இடம் வெளிகோட்டையில். இன்று அது முற்றாக அழிக்கபட்டு இருந்தது. அண்ணாவை சிறை வைத்த உள்கோட்டைகுள் சென்றோம். அது மிகவும் கொடுமையாக இருந்தது. மதில் சுவருக்குள் குகை போல. அதுக்குள் இன்னொரு குகை இருந்தது . அதில் பல பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அண்ணாவின் பெயர் இருக்கவில்லை. சாதாரண கைதிகளை பார்வையிட்ட அந்த இடமும் அழிக்கபட்டு இருந்தது. 

Inside the Jaffna Ford


.அங்கிருந்து திரும்பவும் , Stadium, Library, Veerasingam ஹால் அதற்க்கு அருகில் புதிய நீதிமன்றம் கட்டபடுவதைப் பார்தேன்.பின்னர்  , பண்ணை பாலத்தின் ஊடாக அல்லைப்பிட்டி சென்றோம். அந்த நேரத்தில் நந்தனிடம் நிறைய பேசுவதற்கு சந்தர்பம் கிடைத்தது. நான் இல்ல நேரத்தில் ஒரு இளவயது பையனின் வாழ்வு எப்படி இருந்தது. அதற்க்கு எப்படி முகம் கொடுத்தார் என்று பல விடையங்களை கேட்டு அறிந்தேன். அல்லைபிட்டியை வந்தடைந்தோம். அந்த கடற்கரையை முதன் முதலாக பார்த்தேன். அழகோ அழகு . வெண்மையுடன் நீலகடல் சேர்ந்து புதிய வடிவம் தந்தது. மக்கள் யாரும் இல்லை. ஒருசில ஆர்மி இருந்தார்கள். கடற்கரைக்கு எதிரில் ஒரு கட்டிடம் நொறுங்கி கிடந்தது. என்ன என்று கேட்டேன். சிறு மௌனத்தின் பின்னர் "அது மாவீரர் மயானம் " என்று சொன்னார். உண்மையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு கண்ணீர் வந்தது. அந்த உயிர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. இரு கை கூப்பி வணங்கினேன்.
Chatty Beach
LTTE's "Maveerar maithanam, Destroyed by Army
அல்லைபிட்டி கடற்கரையை தாண்டி திரும்பவும் ஊருக்குள் வந்தோம். ஷோபாசக்தியை தெரிந்தவர்கள் நிறைய ஆட்கள் இருந்தார்கள். அதிகம் அட்டகாசம்  பண்ணி இருப்பார் போல.

அங்கிருந்து கிளம்பி திரும்பவும் "சத்திமனை" செல்ல முடிவு செய்தேன். இம்முறை மானிப்பாய் ரோடு வழியாக போனோம். இடையில் சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில், அனைவரினதும் மதிப்பிற்குரிய சுழிபுரம் இராஜசுந்தரம் மாஸ்ட்ர் மகன், பரனை பார்க்க முடிந்தது. யுத்தம் மனிதர்களை , உறவுகளை , உணர்வுகளை எல்லாம் எவ்வளவுக்கு சிதைத்துள்ளது என்பது புரிந்ததுகொள்ள முடிந்தது . கண்ணோரம் கண்ணீர் ஓடிகொண்டே இருந்தது. பரன் எங்கள் வீட்டுக்கு அருகில் வாழ்ந்த அண்ணாவின் நண்பன். அதைவிடவும் சொந்தங்கள் போலவே அனைவரையும் அணைத்திட்ட இராஜசுந்தரம் மாஸ்டர் இன் மகன். ஒருகாலத்தில் அவர்கள் வீட்டில் ஜனகூட்டமாக இருக்கும். மூளாய்க் கூட்டுறவு வைத்திய சாலை தலைவர், விக்டோரியா கல்லுரி அதிபர் , சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், சுதந்திரகட்சி பிரமுகர் , விளையாட்டு வீரர் என்று நிறைய முகங்களுடன் , நல்ல மனிதர் என்பது தான் முதன்மையானது. அவரையும் இந்த போராட்டம் விட்டுவைக்கவில்லை. உரிமை கோரப்படாத இயக்கத்தால் கடத்தப்பட்டு காணமல் போனார். குற்றசாட்டில் ஒன்று எங்கள் அண்ணாவை காட்டிகொடுதார் என்பதும் தான். உண்மை எங்களுக்கு மிக தெளிவாக தெரியும்.
இம்முறை வீட்டில் இருந்து நிறைய தேவையான ஆவணங்களையும் எடுத்துகொண்டு வந்தேன். என் நாட்டுக்குள் வந்திட்டேன் . திரும்பவும் அடிக்கடி வரமுடியும் என்ற நம்பிக்கையால் மிக சந்தோசத்துடன் "சத்தியமனை" இல் இருந்து திரும்பினேன். இரவு எனது அக்கா ஒருவரை பார்பதற்காக புத்தூர் சென்றேன். சில இடங்களில் மட்டும் சோதனை செய்தார்கள். அதிகம் சிரமம் இருக்கவில்லை. வரும் போது இரவு 10 மணியாகி இருந்தது. நல்லூர் கோவில் பக்கத்தில் மாங்கோ என்று ஓர் உணவு விடுதி . சுமாரான உணவுதான் .இரவு நல்ல  உறக்கம். காலை என் அப்பாவின் 80 வது பிறந்ததினம். பங்குனி 5. மனதில் சில ஏற்பாடுகளுடன் உறங்க போனேன்.


திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன் 5 March 2011.

அண்ணா சிறை இருந்த போது நான் எழுதிய சில கவிதைகள் "தாயகம் கவிதைகள் அறுபத்தாறு" இல் வெளிவந்தது. அதை இதனோடு இணைத்துள்ளேன்.

"Thayakam" Kavithaikal Arupathi Aaru -1984-1985

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF