Thursday, June 26, 2025

மரண அறிவித்தல்.......திருமதி-வள்ளியம்மை- சுப்பிரமணியம்




பிறப்பு 7 October 1938 ...............இறப்பு 26 June 2025

இலங்கை-சுளிபுரம் கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் நிறுவனர்  திருமதி-வள்ளியம்மை- சுப்பிரமணியம் காலமானார்.

அன்னார் சுளிபுரம் பத்திரகாளி கோவிலடி, காலஞ்சென்ற திரு-ஆசைப்பிள்ளை திருமதி செல்லம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற தோழர் கே ஏ. சுப்பிரமணியம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாரும் காலஞ்சென்ற சத்தியராசன் (மீரான் மாஸ்டர் ) , சத்தியமலர் இரவீந்திரன் (இலங்கை ) ,  காலஞ்சென்ற திரு-  நல்லநாதர் ( RR ) , சத்தியகீர்த்தி  ஆகியோரின் அருமைத் தாயாரும் காலஞ்சென்ற திருமதி- இராசம்மா சின்னையா, காலஞ்சென்ற திருமதி - இலட்சுமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் ( ஓய்வு பெற்ற ஆசிரியை ,கனடா ) திரு- பொன்னையா ( ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வவுனியா,  லண்டன்) ஆகியோரின்அன்புச் சகோதரியும், திரு- சின்னையா அப்புத்துரை (கொழும்பு ) திருமதி -கனகாம்பிகை தருமலிங்கம் (புத்தூர் ), திருமதி - ஞானாம்பிகை மகேஸ்வரன் (சுளிபுரம்) , திரு- சின்னையா பாலச்சந்திரன் (சுளிபுரம்)  ஆகியவர்களின் சிறிய தாயாரும், டாக்டர் தவவதனி பவகரன் (லண்டன்), டாக்டர் விசாகரன் (அமெரிக்கா), டாக்டர்- கிருபாகரன் (அமெரிக்கா) சுதாகரன் (அமெரிக்கா) ஆகியவர்களின் பெரியதாயாரும், சோமஸ்காந்தன் ( லண்டன்), கிரிதரன் ( லண்டன் ), மகேஸ்வரி சத்தியராசன் (நோர்வே), டாக்டர்- நடேசன்  இரவீந்திரன் (இலங்கை), டாக்டர்-சுசித்திரா சத்தியகீர்த்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மாமியாரும், சோலைராஜ் ஸ்ரீராம் (அமெரிக்கா),  டாக்டர்-சுபாரா ஸ்ரீராம் (அமெரிக்கா),  சுமண்யன் இரவீந்திரன் (கனடா) , அரசி சுமண்யன் (கனடா) , டாக்டர்-ஸ்ரீரஞ்சனி லியனகே  (அவுஸ்திரேலியா) , டாக்டர்-ஸ்ரீராஜ் சத்தியகீர்த்தி (அவுஸ்திரேலியா)  ஆகியோரின் பாசம் மிக்க பாட்டியும் ஸ்ரீராம் சாரவ், சுமண்யன் வியன், ஸ்ரீராம் சாயன்,  சுமண்யன் அகன்,   அஞ்சலி ஸ்கை லியனகே ஆகியோரின் அருமை மிக்க பூட்டியுமாவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்

திரு-ஆசைப்பிள்ளை- பொன்னையா +94 776052567

திருமதி சத்தியமலர் இரவீந்திரன் +94 77 078 0657


Friday, December 6, 2024

SATHIAMANAI Library's Book List சத்தியமனை நூலகத்தின் நூல் விபரம்


K.A. Subramaniam's SATHIAMANAI Library's Book List கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் சத்தியமனை நூலகத்தின் நூல் விபரம்:


Sunday, June 2, 2024

எஸ்.நயன கணேசன் S. Nayana Ganesan

கொழும்பு தினக்குரல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 02 June 2024 "சத்தியமனை" - சுப்பிரமணியம் நயன கணேசன்.
“இப்பொழுது கூட அந்த நிகழ்வுகளை நினைவு கூ.. ர்..கை..யி..ல்.. இந்தச் சொத்திக் கிழவியா… பல மணித்தியாலங்கள் மழைக்காலத்தில் கூட நனைந்த நிலையில்…ஏறி, இறங்கி வந்த கால்களா இவை என்று எனது அசைய மறுக்கும் பாதங்ளுக்கு நன்றி கூறுகின்றேன்.” (பக்கம்: 28)
யாழ் மண்ணில் சுட்டெரிக்கும் வெயிலை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது குளு குளுவென குளிரூட்டிய பஸ்ஸில் சுளிபுரம் நோக்கி இரவு பயணமானேன். உறங்கவில்லை! உறங்கவும் முடியவில்லை! உறங்க விடவுமில்லை! புத்தகம் தந்த அதிர்வுகள். அம்மையாரின் நினைவலைகளை சுமந்த வண்ணம் பயணிக்கலானேன். பேருந்தின் வேகத்தை விட என் மன அலைகள் வேகமாய் சுளிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. சத்தியமனை என் மனத்திரையில் நிழலாடத்துவங்கியது.
இப்படியெல்லாம் ஒரு ஜீவனால் துயரங்களை எதிர்கொள்ள முடியுமா? அப்படியும் அதனை பொது வாழ்வில் பகிர்ந்திட முடியுமா? எப்படி இப்படி திறந்த புத்தகமாய் வாழ்ந்திட முடிகிறது! ஆச்சர்யம் கலந்த இவ் எண்ணங்கள் அதிகாலை வரை என்னை துளைத்துக் கொண்டிருந்தன.
நான் புடித்து முடிக்கவேயில்லை. பாதியில் எழுந்தேன். துயரமும் ஆர்வமும் சரிதத்தின் கனதியும் எழுத்தாளரை பார்த்தே தீர வேண்டுமென்ற என்ற ஆவல் ஏன் என்னுள் எழுந்தது என்பதற்கான பதில் விடியும் வரையிலான பயணத்தில் புரியவேயில்லை.
பல உண்மைகளின் சாட்சிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் சாதனைப் பெண்மணியை பார்க்கப் போகின்றேன் என்ற தாகமும் மகிழ்ச்சியும் என்னை வாழ்த்திக் கொண்டேயிருந்தன.
அயர வைக்கும் உண்மைக் கதைகள். துயர வரலாற்றில் முக்கியமான சான்றுகள் என்பதற்கு « ஒரு கம்யுனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் » என்ற சுயசரிதம் தக்கச் சான்று.
நம் சமூகம் கொண்டாடப் பட வேண்டிய மகத்தான பெண் ஆளுமைகளில் ஒருவர் இவர். அவர் இலங்கை பொதுவுடமை இயக்கத்தின் தனித்துவமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கே.ஏ. சுப்பிரமணியத்தின் இணையர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள்.
சுயசரிதம் முழுதும் தோழமையுணர்வு நிரம்பிக்கிடக்கின்றது.
இச் சுயசரிதத்தை புடித்து முடிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் தன்னை திருத்திக் கொள்வதற்கும் வருத்திக் கொள்வதற்கும் நிறைய வேலை இருக்கிறது.
நாற்பத்தாறாவது பக்கத்தில் தன் இணையரின் நினவுகளை இவ்வாறு மீட்டுகிறார்: ‘அவர் தான் நேசித்த கட்சியையும். தோழமையையும் பேணினார்’ என்பதை அவரது மனைவியாகிய என்னால் இந்த முதிய வயதில் ஞாபகத்தில் நிறுத்தும் போது கண்களைக் கண்ணீர் நனைக்கின்றுது!
இப்படைப்பும் இவ் எழுத்தாளரும் என்னை அவரிடம் கிறங்கச் செய்தது. இறுதியில் அவ்விரண்டும் என் ஆன்மாவையும் களவாடிக் கொண்டது. ஓரு பண்பட்டவரின் வாழ்வியல் சரிதம் ஓரு வாசகன் மனதில் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்ற சிந்தனை என்னை திகைக்க வைத்தது.
ஓரு தனி மனிதன் எந்த அளவுக்குச் சமூக மனிதர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு பல அரசியல் கள அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நூலாசிரியர்.
“பல கோயில்களுக்கு மக்கள் செல்ல முடியாது, பல பாடசாலைகளில் படிக்க முடியாது, பொது உணவகங்களில் உணவு உண்ண முடியாது, பொதுக்கிணற்றையோ, குளத்தையோ பயன்படுத்த முடியாது எனப் பல விதங்களில் தீண்டாமை வெளிப்பட்டது. தீண்டாமை சாதியத்தின் கோர வெளிப்பாடாக இருந்தது. அதற்கு எதிரான கட்சி வேலைகளில் அவர் (தோழர் கே.ஏ.சுப்பிரமணியம்) இருந்தார்.
அறுபத்தியோராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பு அந்த நடுநிசியில் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பல அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் விடுதலை வேட்கையுணர்வுகள் கோலோச்சிய மண்ணில் அவ்வப்போது மீண்டும் சாதியம் பற்றிய கீழ்மை உரைத்தல் இன்றும் துளிர்வடுகின்றதே என்ற அச்ச உணர்வு.
அதை ஒட்டிய கனவுகள் இன்று வரையும் அவரை இரவில் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன என்கிறார் திருமதி கே.ஏ.சுப்பிரமணியம்.
அவரது நினைவுகளும் கனவுகளும் என்னையும் அச்சங் கொள்ளச் செய்திருந்தது. நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை 02:50 மணி பேருந்து ஓமந்தயை கடந்து சென்று கொண்டிருந்தது.
அப்படி…! நான் பட்ட துன்பமும், துயரமும் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. இன்று அக் காயங்களின் வலிகள் தந்த வெற்றி பல சவால்களை முறியடித்து தலை நிமிர்வை உருவாக்கியிருக்கிறது. ஐயோ! இப்படிப பல பல…அன்றைய நாட்களில் சில பொழுதுகள் வலியைத் தந்திருந்தாலும் சொல்லாலும், செயலாலும் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதனுடன் நானும் சேர்ந்து நடந்தேன் என்பதே இன்றைய என் வாழ்வின் நீட்சி! (பக்கம்: 64).
‘வெற்றிக்கு வலிகள் தேவை’ தானே என்ற அம்மையாரின் கூற்று சத்தியமனை செல்லும் வரை என்னை உரமேற்றிக் கொண்டிருந்தது.
‘தேடிய பூண்டு காலுக்குள் தடக்குப்பட்டது’ என்பார்களே. அதுபோல எனக்கு, இந்தப்புத்தகம் கிடைத்தது பொக்கிஷம் என்பேன்.
அனைத்து கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வாயுரைக்க தாராளமாய் புரட்சி வணக்கங்களை தெரிவித்துள்ளார் திருமதி சுப்பிமணியம் அவர்கள்.
நிம்மதியற்ற வாழ்வை வாழ்ந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் வாழந்த அந்த வாழ்க்கை அவருக்கு பிடித்திருந்தது. ‘குரங்கு குட்டியை காவியது போல்’ குழந்தைகளுடன் பெட்டி படுக்கையும் சுமந்து அலைந்து திரிந்துள்ளார். தன் இணையரின் கம்யூனிஸ்ட் காலத்து தலைமறைவு வாழ்வை மேற்கண்டவாறு விபரித்துள்ளார்.
‘சத்தியமனை’ நுலகம் பார் போற்ற பிரகாசிக்க வேண்டும். பல்லாயிரம் வாசகர்கள் பயன்பெற வேண்டும். சத்தியமனை, அம்மையார் வள்ளியம்மையின் சமுத்திரத்தின் அளவு கொண்ட கண்ணீரால் கட்டப்பட்டுள்ளது.
இப்படியொரு சுயசரிதம் வந்திராவிடில் இப்படியொரு வாழ்வில் அனுபவத்தினை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும்.
மாதாந்தம் 80 ரூபா வீட்டு லோன் கழிபடுதலில், ஏற்பட்ட குடும்ப நெருக்கடி இவர்களுக்கு வீட்டு தோட்ட மரவள்ளி கைக்கொடுத்த வரலாறு படிப்பவரை நெகிழச் செய்கின்றது.
இந்தப் படைப்பைப படிக்கையில் பல தடவைகள் விசும்பினேன்.
எந்த வரட்சியிலும் ஈரங்காயாத மேகம் தான் தாய். இத்தாய் நான் பார்த்த இரண்டாவது நிதர்சனம்.
அண்ணன் ராசனின் கைது அதனால் தங்கை பபியின் அழுகை ஒரு தாயின் பதபதைப்பு எப்படி இருந்திருக்கும் என்பதனையம் அதன் பின் அவரது வலிநிறைந்த எழுத்துக்களையும் பதிவுகளையும் அறிய அனைத்து தமிழர்களும் இந்த சுயசரிதத்தினை படிக்க வேண்டும். நிச்சயம் படிப்பவரின் கண்கள் கசியும் அது அவரவரது இதயத்தின் ஈரத்தினை காட்டிக் கொடுக்கும்.
ஆகா! சுயசரிதங்கள் எவ்வளவு வலிமை பெற்றவை.
நான் மனக்கண்ணில் பார்த்த சத்தியமனை நூலகத்தை காண 40டிகிரி வெயிலில் எழுபது வயதை கடந்த இளைஞர், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
யின் பெதுச் செயலாளர், தோழர் சி.கா.செந்திவேல் இருவருமாக மோட்டார் சைக்கிளில் சென்றோம். அன்றைக்கு அவர் தான் என் கர்ணண்.
சத்தியமனையில் கால் வைத்து நுழைந்த போது நான் பேராசையுடன் பார்க்கச் சென்ற அம் மகத்தான ஆளுமை என்னை வாஞசையோடு அழைத்து கொடுத்த வரவேற்பை கண்டு ஒரு கனம் நெகிழ்ந்து போனேன். (வார்த்தைகள் இல்லை)
நான் மௌனித்துப் போனேன். நான் சொன்ன ஒரே வசனம் ‘அம்மா நான் இங்கு வந்தது உங்களுக்கு நன்றி சொல்லவே’ என்றேன். அவரும் அகமகிழ்ந்தார்.
பலதும் பேசினோம். அவை எல்லாம் பட்டறிவு பாடங்கள் எனக்கு. இதனை எல்லா வாசகனும் அனுபவிக்க வேண்டும்.
மற்றுமொரு மனநிறைவான நாள்.
யாழ் நகர் நோக்கி மீண்டும் இருவரும் திரும்பினோம். வரும் வழியில் தோழரிடம், அண்ணே என் கேள்விகள் அவரை கண்கலங்க வைத்து விட்டதே என மிகுந்த மன வருத்தத்துடன் சொன்னேன்! இல்லை தம்பி, நீங்கள் அவர் மறக்க நினைத்ததை நினைவூட்டவில்லை. அவர் நினைத்துக் கொண்டிருப்பதைத்தான் நினைவூட்டினீர்கள் என்றார்.
இப்பொழுது விரும்புவதால் ஒரு முறை மீண்டும் கருவறையில் இடம் கிடைக்காது. வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டு போவதில்லை என்ற உணர்வு புத்தகம் தந்த அனுபவத்தினை விட அம்மையாரை நேரில் பார்த்த போது கிடைத்த பட்டறிவு பாடம் நான் பெற்ற வரம் என்பேன்.
அழகான நினைவுகளுடன் அன்றிரவே மீண்டும் கொழும்பு நோக்கி பயணமானேன்.
புடித்து முடித்தவுடன் மார்பில் அனைத்துக் கொண்டு மௌனமாய் அழுது கொண்டிருந்தேன் கொழும்பில்! மன நடுக்கத்தை தந்த மிக உயரிய வாழ்க்கை பாடம் இச் சுயசரிதம்.
வள்ளியம்மையாரின் வாழ்க்கை வரலாறு ஏதோவொரு மாயமான தெளிவை என் வாழக்கைக்கு கொண்டு வந்தது. அவ் அனுபவம் ஓர் அசாதாரண மௌனத்திற்கு எனனை அழைத்துச் சென்றது. அது என்னுள் எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படுத்தவில்லை அது நான் பெற்ற ஆன்ம திருப்தி.
இலங்கையின் பாடப்புத்தகங்களில் பதியப்பட வேண்டிய மகத்தான பெண் ஆளுமை அம்மையார் வள்ளியம்மை சுப்பிரமணியம். ஓவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.
வாய்மை தவறாத ஆளுமை அவர். பல துயரங்களை பார்த்து அனுபவித்த கால்கள் இன்று ஒய்வில் இருக்கின்றன. அந்த பாதங்களை தொட்டு வணங்கி நன்றி கூறி விடைபெற்றேன் நிரம்ப ஆசிர்வாதங்களுடன். - சுப்பிரமணியம் நயன கணேசன்












 

Saturday, December 9, 2023

Comrade P. Kathiresu தோழர் பொன்னர் கதிரேசு- சங்கானை 11 April 1939- to 09 December 2023

 


தோழர் பொன்னர் கதிரேசு- சங்கானை

1939-04-11 2023-12-09
மூத்த சங்கானைத் தோழர் பொ.கதிரேசு முதுமையடைந்த நிலையில் தனது 85வது வயதில் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு எமது தோழமையான இறுதி செவ்வணக்கமும் செவ்அஞ்சலியும்.

செவ்வணக்கங்கள்!
1960 களின் ஆரம்பத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி!
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களுடன் மிக நெருங்கிய குடும்ப உறவையும் பேணியவர்.
தன் கல்விப் புலமையை இடம், பொருள், ஏவல் இன்றிப் பகிர்ந்தவர். தன் வாழ்வையே சமூகம் என வாழ்ந்துமுடித்த தோழர்.
உங்களால் கற்றுயர்ந்தோர் கண்ணீர் வடிக்க உங்கள் பயணம் தொடர்கிறது.
எங்கள் சிறுவயது கல்வியில் உங்கள் வழிபாகம் முக்கியமானது. என்றும் நினைவில் இருப்பீர்கள்.

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF