"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, December 30, 2012

கே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட் பற்றிச் சில பதிவுகள் : லெனின் மதிவானம்


கே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட் பற்றிச் சில பதிவுகள் : லெனின் மதிவானம்

தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம். ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று பேராடிய இத்தேழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பொறுத்த வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பொறுத்து காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு ,செம்மைப்படுத்தப்பட்ட “தாயகம்””,செம்பதாகை”, புதியபூமி” போன்றவற்றின் ஆசிரிய தலையங்கங்களும் ,சில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர் த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்நது. பழமைவாத சமூக புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் நிலைமைகளே யதார்த்தமாகிவிட்டதோர் சூழலில் அவற்றினை மீறி கலப்பு திருமணம் செய்துகொண்டமை அவரது நேர்மையையும் தன்முனைப்பற்ற நாகரிகத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது. கூடவே தனது இறுதி மூச்சு வரையிலும் அத்தகைய நாகரிகமான வாழ்வை தமதாக்கி கொண்ட அவர் மரண வாயிலில் நின்றுக் கொண்டு கூட தம் தோழர்களுக்கும் அடுத்த தலைமுறையிருக்கும் “விடை பெறுகிறேன்” கூற முற்பட்ட அவரது செயல் நம்பிக்கையூட்டுவதாக மட்டுமன்று ஒர் உண்மையான இடதுசாரிக்கு இருக்க கூடிய ஆன்ம பலத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது. அவரது மரண சடங்கில் எந்த விதமான மத சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். இன்றுவரை அவரது துணைவியாரின் கழுத்தில் தொங்கும் “அரிவாளும் , சம்மட்டியும்” தான் அவர் கட்டிய தாலி.அவரது இல்லமானஅந்தச் சிறிய “சத்தியமனை” கதவுகள் அற்று “அடையா நெடுங்கதவும், அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும் ” என்று சொல்லி திறந்தே இருந்திருகிறது.
அத்தகைய சிறப்புமிக்க இத்தோழரின் அரசியல் தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வையைக் கொண்ட அவரது செயற்பாடு ஆகும். அவருடைய ஆளுமை பல்துறைசார்பானது. அவரில வெளிப்பட்ட அரசியல் பார்வையும் நடைமுறைசார்ந்த போராட்டமும் சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக் காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற எமது சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து அதற்கான நடைமுறையை முன் வைத்தார். இலங்கை இந்திய இடதுசாரிகள் பலர் தமிழ்ச் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோகித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டுச் சென்றது. தமிழ்ச் சமூகத்தில் சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைய முடியும். தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் இதனைப் புரிந்து கொண்டு தமது ஸ்தாபன செயற்பாடுகளை முன்னெடுத்தார். அந்தவகையில் அவர் முன்னின்று முன்னெடுத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிரான போராட்டமாகும். இந்தியாவிலே ஏ. கே. கோபாலன் முதலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் முன்னெடுத்த கோயில் நுழைவுப் போராட்டத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்டு நமது சூழலுக்கு ஏற்றவகையில் அவ்வனுபவங்களை முன் வைத்து போராட்டங்களை முன்னெடுத்தார்.
யாழ்பாண சமூகவமைப்பில் நிலவிய சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்துள்ளன என்ற போதிலும் அதன் ஆரம்பபால போராட்டங்கள் யாவும் ஸ்தானப மயமாக்கப்பட்டவையாக அமையவில்லை. 1910 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர்கள் சங்கம் இத்துறையில் தோன்றிய முதலாவது ஸ்தாபனமாகும். அவ்வாறே சிறுபான்மை தமிழர் மகாசபை நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டங்களும் வரலாற்று முக்கியத்துவம் உடையவையாக காணப்படுகின்றன. இவை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை நடாத்தி சிறுசிறு வெற்றிகளை பெற்றிருந்தாலும் சாதிய ஒடுக்கு முறையின் ஆணிவேரை தொடமுடியாமல் போய்விட்டமை ரதிஸ்டவசமானதொன்றாகும். சிறுப்பாண்மை மாகாசபையின் ஊடாக சாதியெதிர்ப்பு தொடர்பான போராட்டங்களையும் நடைமுறைசார்ந்த செயற்பாடுகளையும் முன்னெடுத்ததில் எம்.சி. சுப்பிரமணியத்திற்கு முக்கிய இடமுண்டு என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இருப்பினும் அவர் 1960களில் இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த பிளவில் திரிபுவாதமாக திகழ்ந்த மொஸ்கோ சார்புக்குள் புதைந்து பாரளுமன்ற சந்தரப்பவாதத்திற்குள் முழ்கியது துரதிஸ்டவசமான நிகழ்வாகும்.
இவ்விடயம் இந்நூலிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய சூழலின் வீறு கொண்ட எழுச்சியடன் செயற்பட்ட இடதுசாரிகள் சீன சார்பை பின்பற்றியதுடன், தொடந்தும் புரட்சிகர பாதையில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த பின்னணியில் உருவாகிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமானது சகவிதமான தேசிய ஜனநாயக சக்திகளையும் அணித்திரட்டியிருந்தது. இப்போராட்டம் சீனசார்பு கொம்யூனிட்ஸ்டுகளாலயே முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு வழிகாட்டி நின்ற முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் தோழர் கே. ஏ. சுபிரமணியம். சாதியத்திற்கு; தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன எழுச்சியை தொடர்ந்து சட்டத்திற்குட்பட்டதும் சட்டத்திற்கட்படாதுமான போராட்ட தத்திரோபாயங்களை கடைப்பிடித்து நிதானமான தலைமைத்துவத்தை வழங்கியதில் இத்தோழருக்கு முக்கிய பங்குண்டு. எமது மண்ணுக்கும், வாழ்வுக்கும் மாறான கோட்பாடுகளை முன்வைத்து- மார்க்சிய அணிகள், முன்னோடிகளது வசனங்களை கோசங்களை முன் வைத்து முன்னெடுக்கப்பட்ட சமூகமாற்ற செயற்பாடுகள் மலட்டுதனமாக முடங்கிபோனதை வரலாறு எண்பித்திருக்கின்றது. இலங்கையின் இடதுசாரிகள் அவ்வாறின்றி எமது பிரயோக சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுக்க முனைந்ததன் விளைவே தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமாகும். அரசியல் அரங்கில் இந்த முரண்பாட்டை விளங்கிக் கொண்டு அமைபாக்க செயற்பாட்டில் ஈடுப்பட்டமை இவரது முக்கிய பங்களிப்பாகும். இவரது தன்னலமற்ற பங்களிப்பு பற்றி அன்னறய காலச் சூழலில் அவரோடு இயங்கிய சி. கா. செந்திவேல் அவர்களின் பின்வரும் கூற்று மக்கியமானதாகும்.
”தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தமிழர்களின் சமூகப் பரப்பிலே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூக நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராட்ட இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வரிசையில் முன்னின்றவர். பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்தில் தன்னை ஒருவராக்கிக் கொண்டவர். அதன் காரணமாக வடபுலத்தில் தொழிற்சங்க இயக்கத்தையும் சாதியத்திற்கு எதிரான 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும் முன்னெடுப்பதில் முன்னின்றார். 1966-77 காலகட்டத்திலான வெகுஜன எழுச்சிகளும் போராட்டங்களும் தமிழர்களுடைய வரலாற்றில் அன்றுவரை புறக்கனிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வென்றெடுக்க வழியேற்படுத்திக் கொடுத்தன. அதுமட்டுமன்றி பிற்காலத்தில் எழுந்த தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டம் என்ற தளத்தில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபட வைத்ததற்காக அடிப்படைகளையும் வெகுஜனப் போராட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன என்பது சிலர் மறந்துகொள்ளும் ஒன்றாகும். இவ்வெகுஜனப் போராட்ட காலங்களில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்துடன் இணைந்து நின்று போராட்டப் பணியாற்றிய நினைவுகள் இன்றும் பசுமையானவைகளாகவே இருந்துவருகின்றன. நெஞ்சில் உரமும், கொண்ட கொள்கையில் நேர்மைத்திறனும் உழைக்கும் மக்கள் மீதான போராட்ட நம்பிக்கையையும் கொண்ட புரட்சிகரப் பொதுவுடைமைவாதியாக தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் மணியம். அவருடனான நினைவுகள் பகிரப்படும் போது அவை போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் வேண்டி நிற்கும் இளம் தலைமுறையினருக்கு பயன் உள்ள அனுபவங்களாக அமைய முடியும் என்று நம்புகின்றோம்.( சி.கா. செந்திவேல், 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பு inioru.com 24975)
அந்தவகையில், தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது மக்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ஒட்டியதாக இருந்தமை அதன் பலமான அம்சமாகும். சாதிய அமைப்பு முறையின் பிரதான மையங்களாக பெரும் ஆலயங்களும் தேனீர் கடைகளும் திகழ்கின்றன என்ற அடிப்படையில் அவற்றினுள் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் தெளிவான நிலைபாட்டினை கொண்டிருந்தது. அதனை தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் ”அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆலய தேநீர்க்கடை பிரவேசம் தொடரட்டும்” என்ற நிலைபாட்டை முன்வைத்தது. அவ்வகையில் அக்காலக்கட்டத்தில் தோன்றிய கலை இலக்கிய வடிவங்களும் புரட்சிகரமான உள்ளடங்கங்களை கொண்டிருந்த அதே சமயம் மக்களை ஒட்டிய கலை வடிவில் அவை படைப்பாக்கி தரப்பட்டன.
மார்க்சியர்களாலும் ஜனநாயக சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டபட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது சாதியையும் தீண்டாமையையும் குறி வைத்தே முன்னெடுக்கப்பட்ட போதினும் அப்போராட்டம் சகல விதமான ஒடக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் பலமான அம்சமாகும். அத்தகைய த்ததுவார்த்த தளத்தினை உருவாக்குவதில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்தவர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்கள்.
மனிதர்களிடையிலான காதலே உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சாட்சியாய் அமைந்தவர் தோழர் மணியம். யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது அறிவு-ஆற்றல்-செயற்பாட்டால் அவர் பிறந்த மண்ணை கடந்து தொலைத்தூரங்களிலும் செல்வாக்கு செலுத்த கூடியவராக இருந்தார். அவரது அரசியல் தத்துவம் நடைமுறை என்பன மலையகத்தில் எவ்வாறு வேர் கொண்டு கிளைப்பரப்பியது என்பதை மலையக கவிஞன் ஒருவனின் உணர்வகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றன.
‘மலையகத்தில்
நாளை மலரும்
மலையக ரோஜாக்கள்
தோழரின் நிறமாய்
தொடர்ந்து
பூத்திருக்கும்
ஓய்வாய் சாய்ந்திருக்கும்
ஊயரநிலைத் தோழரின்
உன்னத உணர்வுகள்- அங்கு
உரமாய் ஊட்டப்படும்
உழைப்பாளர்களை நேசித்த
உன்னத தோழரில்
உருக்கொண்ட இலட்சியங்கள்
உயரத்தில் ஏற்றப்படும்
அதுவரை
உடலால் இத்தோழமை
ஓய்வு எடுக்கட்டும்’( சிவ. இராஜேந்திரன்)
இவ்வகையில் மலையகத்தில் பின்னாட்களில் அரசியலில் பிரவேசம் கொண்ட திரு இ. தம்பையா, சிவ இராஜேந்திரன், ஜோன்சன், வ.விஜேயரட்ணம் இன்னும் இது போன்ற பலர் இவரின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அரசியல் வாதிகள் தவிர்ந்து கலை இலக்கிய வாதிகளுடனும் நேசப்பூர்வமான உறவினை பேணிவந்துள்ளார் என்பதை கைலாசபதி,நுகுமான் ,எ ஜே கனகரத்னா ,சில்லையூர் செல்வராஜன் கே. கணேஷ் முதலானருடனான உறவுகள் இதனை சிறப்பாக எடுத்துத் காட்டுகின்றன.
இதற்கப்பால் தொழிற்சங்க போராட்டங்கள்,விவாசய இயக்கங்கள் நடாத்திய போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் என பலமுனைப்பட்ட போராட்டங்களிலும் தம்மை அர்பணித்துக் கொண்ட நேர்மையான இடதுசாரியாக வாழ்ந்தவர். ஒருவகையில் அவரின் இந்த பங்களிப்புகள் வெளிக்கொணரப்படாதவையாகவே காணப்படகின்றன. இவைக் பற்றிய ஆய்வுகள் வெளிக் கொணரப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அவரது ஆளுமைகளை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது நோர்மண் பெதுன் பற்றி மாஓ கூறய பின்வரும் வரிகள் நினைவுக்கு வருகின்றது.
‘நமது வேலைகளில் பொறுப்பற்றவர்களாக நடந்துக் கொள்பவர்கள் அநோகர் உள்ளனர். இவர்கள் பளுவானவற்றை காட்டிலும் இலகுவானவற்றை நல்லதென்று ஏற்றுக்கொண்டு, பிறருக்கு பளுவானவற்றை தள்ளிவிட்டு எளிதானவற்றை தமக்கு தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். எந்தபணியிலும் அவர்கள் தம்மைப் பற்றி தான் முதலில் நினைக்கின்றார் பிறகுதான் மற்றவர்களைப் பற்றி இவர்கள் ஏதேனும் கொஞ்சம் நஞ்சம் செய்து விட்டால் கர்வம் தலைக்கேறியிருக்கும். அது தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக அதைப் பற்றித் தம்பட்டம் அடிப்பார்கள். இவர்கள் தோழர்கள் பேரிலும் மக்கள் பேரிலும் மனமார்ந்த அன்பைக் கொண்டவர்கல்லர். ஆனால் உணர்ச்சியற்றவர்களாளக, அக்கறையற்றவர்களாக, அலட்ச்சியமிக்கவர்களாக இருப்பவர்கள். உண்மையில் இத்தகையவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். உண்மையான கம்யூனிஸ்டுகள் என கருதப்படவே முடியாதவர்கள’
ஈழப் போராட்டத்தின் பிறழ்வினைகளால் ,தன இறுதி நாட்களை கண்டியில் கழித்தார்.அத தருணத்தில் அவர் எழுதிய பல விடயங்கள் மறுவாசிப்புக்கு அவசியமானவை .
நம்மில் விவேகம் உள்ளவர்களும் அறிவுள்ளவர்களும் நிறையவண்டு. ஆனால் ஏதாவொன்றில் அர்பணித்துக் கொண்டு செயற்பட எத்தனைப் பேர் தயார் என்பது தான் கேள்வி. இன்றைய சூழலில் புரட்சிகரமான உணர்வுகள் பல தாக்கங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உட்பட்டு வந்துள்ளதை நாம் கவனத்திலெடுத்தல் வேண்டும். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மக்கள் இயக்கங்களின் தளர்ச்சி, தனிமனித ஆளுமைச் சிதைவுகள் , இவ்வகையான புறச் சூழ்நிலை காரணமாக இன்று ஒரு பகுதி மக்கள் மத்தியிலும் தோழர்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தி மனப்பான்மை வளர்ந்து புரட்சிகர எண்ணங்கள் மங்கலாகி போவதை நாம் நேரடியாக பார்க்கின்றோம். முதலாளித்துவ சமுதாயத்தை அகற்றி, புதிய ஒரு சமுதாயத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே மனித குலத்திற்கான விமோசனம் கிடைக்கும் என்பதை மறந்து இன்றுள்ள அமைப்புகள் மீது பிரம்மைகள் வளர்வதை இவ எடத்துக்காட்டுகின்றன. அதன் காரணமாக போராட்ட உணர்வுகள் மழுங்கி விரக்தியில் மூழ்கி ஒட்டுமொத்தமாக மக்கள் இயக்கங்கள் மீதே வசைபாட முனைந்துள்ள இன்றைய சூழலில் புதிய அரசியல் பண்பாட்டு பாதையில் உருவாகிவரும் எண்ணற்றவர்களுக்கு இத்தோழரின் வாழ்வும் வளமும் வழிகாட்டி நின்கின்றன. அத்தகைய பாதையில் உறுதியுடன் மேலும் முன்னேற முனைவதே இத்தோழருக்காக நாம் செலுத்தும் புரட்சிகர அஞ்சலியாகும்.

17 THOUGHTS ON “கே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட் பற்றிச் சில பதிவுகள் : லெனின் மதிவானம்”

  1. அன்புள்ள லெனின் மதிவானன், தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் பற்றிய உங்கள் பதிவை படித்தேன். சிறப்பாக உள்ளது. தோழர் மணியத்தோடு ஒரு காலத்தில் உறவுகொண்டிருந்தேன். நான் சார்ந்திருந்த புளொட் அமைப்பின் மீது கடும் விமர்சனங்களை கொண்டவராக தோழர் இருந்தார். புளொட் இடதுசாரிய கருத்துக்களை முன்வைத்தபோதிலும் அதன் நடைமுறை “லும்பத்தனம்” கொண்டதாக இருந்தது. இன்றும்கூட இடதுசாரி கோட்பாடுகளை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளும் அமைப்புக்களும் சரி, தனிநபர்களும் சரி அதே லும்பன்களாக, இடதுசாரி போலிகளாகவே தொடர்கின்றோம்.
    ஆனால் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இடதுசாரிகளாக எம்மை நாம் இனங்காடடிக் கொள்ளத் தவறுவதே இல்லை. இந்த இடத்தில்தான் தோழர் மணியம் எமக்கு தேவைப்படுகின்றார்.அவர் தான் கொண்ட லட்சியத்திற்கும் கொள்கைக்கும் முரண் அற்றவராக உண்மையாளராக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வேண்டி நிற்பவராக வாழ்ந்தார். ஆனால் நாம்? . அரசியல் பண்பாட்டு களம் என்ற போர்வையில் எவ்வாறான அரசியலை தேர்ந்தெடுக்கின்றோம் ? அதிகாரப் பிரபுக்களோடும் வன்புணாச்சியாளர்களோடும், கொலை கொள்ளைக்காரர்களோடும், ஆள்கடத்தும் மன்னாகளோடும், சாடிஸ்டுக்களோடும், வுமன் நைசர்களோடும் கரம்கோர்த்து உறவாடி அரசியல் பண்பாட்டில் “புரட்சிகர கலாச்சாரத்தை” உருவாக்கப்போவதாய் கூறிக்கொள்கின்றோம். இந் நேரத்தில் தோழா மணியம் உயிரோடு இருந்தால் அவரின் எதிர்வினை எவ்வாறு அமையும். ? இதனை நேர்மையோடும் உண்மையோடும் புரிந்துகொள்வதன் ஊடாகவே நாம் அவருக்கு நன்றி செலுத்த முடியும்.
    அசோக் யோகன்
    1. அசோக் உங்களுடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இருக்கின்றது.போராட்ட உணர்வுகள் மழுங்கி தன்மீது கழிவிரக்கம் கொண்டு, விரக்தியில் மூழ்கி ஒட்டுமொத்தமாக மக்கள் இயக்கங்கள் மீதும் தனிநபர்கள் மீதும் வசைபாடும் லும்பன்கள் தன் புனிதம் பற்றி பாட தொடங்கியுள்ள  இன்றைய சூழலில் உங்கள் கருத்துக்கள் தொடர்ந்து எழுதுவதற்கான நம்பிக்கையை தருகின்றது. 
      1. மதிவானம் சிவத்தம்பிக்கும் தோழன் , செந்திவேலுக்கும் தோழன்.சிவத்தம்பி கடைந்தெடுத்த திரிபுவாதி! மதிவானம் என்பவருக்கு அவர் ஒரு மார்க்சிய ஆசான்.தன்னை தான் முதலில் அறிந்து கொண்டு இந்த எழுத்து ஜம்பத்தை தொடங்கவேண்டும்.
        மார்க்சிய ஆய்வு என்பது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
        1. பாலன் எதையெல்லாம் உளறுகின்றீர்கள். சி.கா. செந்தில்வேல் என்னை விட தம்பையாவுக்கு தான் நீண்டகால தோழர் தலைவர். இவ்வணியினருடன் எப்போதோ எனக்கான கருத்து முரண்பாடுகள் தோன்றிவிட்டன. அப்போதெல்லாம் அவருக்கு அடிமாட்டுத்தனம் செய்தது மட்டுமல்ல தமது சுயநலத்திற்காக பலரை அவ்வணியினருடன் சேரவிடாமல் தடுத்த மேதாவிதான் தம்பையா . அவருடைய லும்பன் தனத்தை தெரிந்துக் கொண்டதால் தான் மார்க்கிய புனிதராக தம்மை தானே பிடகடனப் படுத்திக் கொண்டு பெரும் பதவியை வகித்து வந்த அந்த புரட்சியின் புனிதருக்கு பின்னால் ஒரு தோழர் கூட வராதது வேடிக்கையான ஒன்றுதான். அதற்காக செந்தில் கும்பல் சரியாக செல்கின்றார்கள் என்பது என் கருத்தல்ல. 
          பேராசிரியர் சிவத்தம்பின் தழியியல் ஆய்வில் எனக்கு மரியாதை உண்டு. அதற்காக அவரில் வெளிப்பட்ட அரசியல் பலவீனங்களையும் நான் விமர்சிக்க தயங்கியதில்லை. கட்டுரையில் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டினேன் என்பதற்காக குறித்த அரசியல் முத்திரைகளை என் மீது சுமர்த்த முற்படுவது அபத்தமானது.
          இனியொரு ஒரு காலத்தில் செந்தில் வேலையும் சிவசேகரத்தையும் இப்படி தான் முதன்மை படுத்தினீர்கள். காலம் உங்களுக்கான பதிலை வழங்கியது. இப்போது தம்பையா. கூடிய விரைவில் உணர்வீர்கள். 
          1. மதிவானம் தமிழியல் ஆய்வை செய்யுங்கள் .உங்களுக்கு பிடிக்காத மார்க்சியம் பற்றியோ , மார்க்சியவாதிகளை பற்றி எழுதி மக்களை ஏமாற்ற வேண்டாம் என்கிறோம்.மார்க்சியம்பற்றி எழுத குறைந்த பட்சம் நேர்மை வேண்டும்.
            செந்திவேலையும் ,சிவசெகரத்தையும் பற்றி எழுத சில யோக்கியதை வேண்டும்.அவர்கள் தங்களை மறைக்கவில்லை.ஆனால் மதிவானம் பூனைக்கும் தோழன் பாலுக்கும் தோழன்.
  2. கே.ஏ.சுப்ரமணியம் சிற்ப்பாக இயங்கிய தோழர் தான்,
    ஆனாலும் சண்முகதாசன் போல சர்வதேச தலைவர் கிடையாது.மாவோ மரணமடைந்த பின் சீனாவில் ஏற்ப்பட்ட முதலாளித்துவ மீட்சியை கொண்டு வந்த டெங் கும்பலை ஆதரித்தவர் இவர்.செந்திவேலும் , இவரும் சண்முகதாசனின் மீஎதான தனிப்பட்ட வெறுப்பால் தான் இந்த பிளவை செய்தார்கள் .இந்த அயோக்கியதனகளின் விளைவை இன்றும் இடதுசாரிகள் அனுபவித்து வருகிறார்கள்.ஆனால் டெங் கும்பல் இவர்களையும் தேவை இல்லை என்று ஒதுக்கியதே உண்மை.1978 இல் சீனா சென்ற கைலாசபதி சீனாவுக்கு சப்பை கட்டு கட்டினார் என்பதும் மறுக்க முடியாது.அவர் மரணம் அடையும் வரை இது பற்றி கதைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
    அப்போதைய சீன சார்பு கட்சியின் தலைவரான சண்முகதாசனை டெங் சீன திரிபுவாதிகள் நிராகரித்து இவர்களை ஆதரித்தது போல நடித்து பின் கை கழுவி விட்டனர் என்பதே உண்மை.செந்திவேல் முடிந்தால் மறுக்கட்டும்.
    உண்மை தெரியாமல் ரொமாண்டிக் காக எழுதக்கூடாது.
    1. எல்லாம் தெரிந்தவர் போல பேசக் கூடாது. தோழர் சன்னும்,தோழர் மணியமும் இறுதிவரை நெருக்கமாகவே இருந்தார்கள்.தோழர் சண் உடல் நலமற்று இருந்த போது மணியம் தோழரின் மகன் சென்று பார்த்தார் தோழர் மணியம் இறந்த போது ,தோழர் சண் அவர்கள் குடும்பத்திற்கு கடிதம் எழுதினார். (அவர்களிடம் அக் கடிதம்  இருக்கும்.) அரசியல் நிலைப்பாடு,ஸ்தாபன அணுகுமுறை இவற்றின் முரண்களைப் பேசித் தீர்க்காமல் பல  உடைவுகளை ஏற்படுத்தியது இருவரதும் தவறே. ஆனால் இருவருமே மாக்ஸ்சியத்தின் வழித்தோன்றல்களே.
  3. எனக்கும் தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்துக்கும் இடையிலான தொடர்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது)யில் நான் சேர்ந்ததில் இருந்து ஆரம்பிக்கிறது. இது 1978. என்னை அந்த கட்சியில் இணைத்துக் கொள்வதிலும் வென்றெடுப்பதிலும் தோழர் ந. இரவீந்திரன் ( பின்னர் கே.ஏ யின் மருமகனானவர் தற்போது காலாதிநிதி இரவீந்திரன். என்னை பொருத்தவரையில் அவர் திரிபு வாதத்திற்குள் மூழ்கி விட்டார் என்பது என்னுடைய கருத்து. அவருக்கு சின்னாக செயற்படுவதாக நான் கருதும் லெனின் மதிவாணம் என்னை சம்பந்தபடுத்தி கண்டபடி எழுதுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாததால் இந்த குறிப்பை தருகிறேன்)
    லெனின் மதிவாணம் என்னை சந்தித்து 1998 யில். கே.ஏ காலமானது 1989யில். எனவே மதிவாணம் எல்லா விடயங்களிலும் எல்லோருக்கும் அதிகாரபூர்வமான கருத்து வெளிப்பாட்டாளராக நினைத்துக் கொண்டு பேசுவதும் எழுதுவதும் போன்று எனக்கும் கே.ஏ க்கும் இடையிலான தொடர்பாக அவர் எழுதுவதை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது.
    இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) பின்னர் புதிய ஜனநாய கட்சி, அதன் பின்னர் புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிச கட்சியில் கடந்த ஏப்ரல் வரையும் நான் அங்கம் வகித்தது மட்டுமன்றி உயர் பதவிகளையும் வகித்திருக்கிறேன்.
    தோழர் கே.ஏ கட்சியை (எத்தகைய கட்சியை?)ஸ்தாபன படுத்துவதில் கடுமையாக உழைத்தவர். இலங்கையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தேவையென்பதை முன்னிறுத்தி செயற்பட்டவர். அதனால் அவர் எதிர் கொண்ட சவால்கள் அதிகம். விமர்சனத்துகுரிய அவரது முடிவுகளையும் நடவடிக்கைகளையும் அவர் திட்டமிட்டு முன்னெடுத்தார் என்று நான் நம்பியதில்லை.
    தோழர் சண் தலைமையிலான கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சூழ்நிலை எனக்கு தெரிந்த வகையில் நாகரீகமானதல்ல. இதில் சண் சரியா, கே.ஏ சரியா என்பது வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
    தோழர் சண் சீனாவின் மீள முதலாளித்துவமாதலை எதிர்த்தார் என்பது சரி. அதையடுத்து அவர் மேற்கொண்ட சர்வதேச நடவடிக்கைகளும் சரியானதாக இருக்கலாம். ஆனால் அவரால் அவரது கட்சியை  உயிர்ப்புடன் முன்னெடுக்க முடியவில்லை என்பது பாரிய விமர்சனம்.
    தோழர் கே.ஏ , தோழர் மா.வோக்கு பின்னரான சீனாவின் அனைத்து முனைப்புகளையும் ஏற்றுக்கொண்டவர். மூன்று உலக கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர் ( இதுவே தோழர் சண்னின் தலைமையிலிருந்து பிரிந்தமைக்கான காரணம்.) திரிபுவாதி டெங் சியோ பிங்கை ஏற்றுக்கொண்டவர். மறைமுக நவீன முதலாளித்துவ வாதியான சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த லியு சோசியை ஏற்றுக்கொண்டவர்.
    இலங்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தேசிய முதலாளித்துவ கட்சி என்ற லியு சோசியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவர். கம்போடிய விடயத்தில் சீன நிலைப்பாடான இளவரசர் சிகானொக்கை ஏற்றுக் கொண்டவர்.
    இலங்கையின் தேசிய இன பிரச்சனையில் ஒப்பீட்டு ரீதியில் தோழ்ர் சண்னை விட 1978 லேயே முற்போக்கான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் ( சண் தமிழ் மக்களை தேசிய இனம் என்று அங்கீகரிக்கவில்லை. அவர் 80 களின் இறுதியில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டார். கே.ஏ தமிழ் மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தமிழர்கள் தேசிய இனம் என்றும் அவரிகளுக்கு ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டார். மலையகத்தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும் வளர்ந்து வ்ரும் தேசிய இனம் என்றே ஏற்றுக்கொண்டிருந்தார்.)
    இவ்வாறான முரண்பாடுகளுக்கு மத்தியில் தான் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் (இடது) செயற்பட்டேன் என்பதில் மதிவாணத்திற்கு தெரிய நியாயம் இல்லை. 1991க்கு பிறகு புதிய ஜனநாய கட்சியென பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, கே.ஏ யின் நிலைப்பாட்டிலுருந்து பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை பற்றி கட்சி மாநாட்டு அறிக்கைகளிலிருந்தும் எனது கட்டுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும். கே.ஏ பற்றிய நேரான எதிர் மறையான விடயங்கள் தனியாக ஆராயப்பட வேண்டும். அதில் நுனிப்புல் மேய்ந்துவிட்டு எல்லாம் தெரிந்த ’தம்பிரான்’ போல் எழுதுவதை தவிர்ப்பது நல்லது.
  4. உண்மைகள் சில் இப்போது வெளி வந்துள்ளன.தம்பையா தருகின்ற இந்தக் கருத்துக்கள் கடந்த 35 வருடங்களாக பேசாத சில உண்மைகளைப் பேசுகின்றன.
    சண்முகதாசன் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த நிலையில் [1970 களின் மத்தியிலும் ,இறுதியிலும் ]மாவோவின் மரணத்தை அடுத்து கட்சியில் நடந்த விவாதங்களின் பின் சண்முகதாசனை சந்திக்க சீன கட்சி மறுத்தது.இந்த சந்தர்ப்பத்தை சுப்பிரமணியம் குழுவினர் பயன் படுத்தினர் என்று தான் சொல்லவேண்டும்.
    சண்ணுக்கும் ,சுப்ரமணித்திர்க்கும் தமிழ் தேசியம் குறித்து பெரிதான வேறுபாடு இல்லை .இந்த காரணக்களால் தான் கட்சி பிரிந்தது என்பது முழு பொய்.தமிழ் தேசிய பிரச்னை கூர்மையடைந்த போது இதை ஒரு குருட்டு சாக்காக சொன்னார்கள்என்பதே உண்மை.தமிழர்கள் சுய நிர்ணயம் தோழர் கந்தையாஎன்பது காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டது.[அந்த வேளையில் தமிழ் தேசியத்தை இன்று குத்தகைக்கு எடுத்துக் கொண்ட தமிழ் தேசிய முதலாளித்துவ வாதிகளுக்கு அது என்னவென்றே தெரிந்திருக்கவில்லை.] யாழ் சமூக அமைப்பு மணியோடர் பொருளாதாரம் என்பதில் அவர்களுக்குள் ஒரே கருத்து தான் இருந்தது.
    கட்சி பிரிந்ததும் செந்திவேல் கட்சி செல்வாக்கு பெற்ற கிராமங்களுக்கு ஓடோடி சென்று சன்னுக்கு எதிரானவர்களை திரட்ட அலந்தது நாம் அறிந்ததே.
    டெங் கும்பலால் கொண்டு வரப்பட்ட மூன்றாம் உலக கோட்பாடு பற்றிய விவாதத்தில் , மாவோவை ஆதரித்த சண் இந்த கோட்பாட்டை மாவோ எந்த ஆண்டு எந்த கட்சி மாநாட்டில் முன் வைத்தார் என்று சண் கேள்வி எழுப்பினார்.ஆனால் அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.கட்சியை பிரித்து தான் தான் தலைமை தாங்க வேண்டும் என்பதே அதன் மூலம் டெங் சீனாவுக்கு கொடி பிடிப்பதே அவர்களது நோக்கம்.இவர்களது இந்த கள்ள நோக்கம் நிறைவேறவில்லை.இவர்களது நிலைப்பாட்டை கைலாசபதியும் ஏற்றுக் கொண்டார் என்ற குற்றச் சாட்டும் உண்டு.குடும்பமாக சீன சென்று திரும்பிய கைலாசபதி இது பற்றி மௌனம் காத்தார்.
    இதெல்லாம் மதிவானம் அறிந்திருக்க நியாயம் இல்லை.அவருக்கு சிவத்தம்பியும் மார்க்சியவாதி தான் .சன்முகதாசனும் மார்க்சியவாதி தான்.
    அந்தோ பரிதாபம்.!
  5. kadantha mupathu varudamaga ethai pudunkikondiruthangal. arasial enpathum ungaluku viyabaramthan.
  6. தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தமிழினத் தேசியப் பிரச்சனை தொடர்பிலும் இந்த மூன்றாம் (இடைநிலைச்) சக்திகளைக் கையாள்வதுபற்றியும் ,மிக நிதானமாகவும் திளிவாகம் பல ஆசிரிய தலையங்கங்களை தீட்டி உள்ளார். மூன்றுலகக் கோட்பாட்டை சீன நூல் சார்ந்து மட்டுமல்லாமல் சுயமாக கே. ஏ. சுப்பிரமணியம் தானே தேடி நிறைய ஆதாரங்கள் வாயிலாக தனி ஆக்கம் ஒன்றையும் எழுதியிருந்தார். அது சண்ணுடனான சிறப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்டிருந்தது மார்க்சிய-முற்போக்கு-ஜனநாயக உணர்வுடைய ஏராளமான வெள்ளாளர்கள் சாதியப் போராட்டத்தை ஆதரித்தனர் மற்றும் பங்கெடுத்தனர். சாதியப் போராட்ட அனுபவங்களில் நடுநிலைச் சக்திகளை வென்றெடுக்கக் கையாண்ட நடைமுறைத் தந்திரோபாயங்கள் கே ஏ க்கு உரிய சிறப்பு..அவர் வாழ்ந்த இறுதிக்காலங்களில் , பிறழ்வான ஈழப் போராட்டத்தினால் அவரிநதும்தொழர்களினதும் வேலைகள் முடக்கப்பட்டன என்பதே உண்மை. கடந்த 21 ஆண்டுகளாக தலைமையுரை ஆற்றி வந்த தம்பியா வுக்கு அந்த “உயர் பதவிகளை” யார் பறித்தனர் ? என்ன இந்த திடீர்க் கோவம்?
    1. கே. ஏ சுப்பிரமணியம் தொடக்கம் செந்திவேல் வரை அவர்களுக்கு நிதி வழங்கிய, நிதி வழங்கி வரும் பிரமுகர்கள் உள்ளடங்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சாதிப் போராட்டம் பற்றி பேசுவார்கள்?
      சாதி ஒழிப்பிற்கு ‘கந்தன்’ முதல் ’கணகேஸ்வரம்’ வரை பலர் போரடியிருக்கிறார்கள். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன தலைவரின் (?) ஜவுளி கடை வியாபாரத்தில் இருந்தே போராட்டத்திற்கான  செலவு பட்டுவாடா செய்யப்பட்டது. அன்று முதல் நாளை மறு தினம் தேசிய கலை இலக்கிய பேரவை நடத்தவிருக்கும் கைலாசபதி நினைவு தின விழா வரை எத்தனை குடும்பங்களின் இடியப்பம், பிட்டு, ரொட்டி, பாண் வரை இயக்க நடவடிக்கைகளுக்கு பறி போய் உள்ளது. யாருக்காவது தெரியுமா?
      தாலிக்கொடி, தாலிமணி விற்றவர்கள் பல பேர். தாலியும் போடாமல் மணியும் போடாமல் அதே இயக்கத்துக்குள் மாடி கட்டி கோடி கட்டி, நவீன புட்பக விமானம் வரை உடமை கொண்டு ஊர் மகிழ்வதால் தாம் மகிழ்வதாக சொல்லும் கயவர்களை காணும் பாக்கியம் ‘ ஆன்மீக நாத்திகனான’ பாரதிக்கு கூட கொடுத்து வைக்கவில்லையே.
      பட்டினி சிறகொடிக்க பாராயம் நடத்தி புரட்சி நடத்துவதாக சொன்னவர்களை நம்பி பாலாகி போனவர்கள் ரௌத்திரம் கொள்ளாமல் ’யங்கி’ ஸ்டைலுக்குள் யாசகம் செய்வதா?
      புனிதம் என்பது போர் குணத்தின் உயரிய வடிவம். இதை கொச்சப்படுத்தி கொடுங்கோண்மை புரிய புறப்பட்டுள்ள பதர்கள் எல்லாம் பாஞ்சாலி துகிலுரிய பட்டது பற்றி நூறு கதை எழுதலாம். M.Aக்கள், M.Phl கள், PHDகள் பெற்றுக்கொள்ள துகிலுரிக்கப்பட்ட கதையையே தூண்டி தூண்டி எழுதலாம். 
      இதற்கெல்லாம் மாக்சிய முலாம் பூசி காவடி எடுப்பவர்களை தெரிந்து கொண்ட பின்னும் பேசாமலிருப்பது தேவாங்கை விட மேலானதா?
  7. என் கருத்துக்களை வெளிப்படுத்தாமையை கண்டு கவலைகொள்கிறேன் . அடிப்படையற்ற அவதூறுகளுக்கு துணை போவது நல்ல இணையத்திற்கு அழகல்ல. அவரின் விடைபெறும் தருணத்தில் அவரின் அருகில் நான் மட்டுமே இருந்தேன். அந்தக் கம்பீரத்துடன் கைகளை உயர்த்திய வண்ணமே அவர் விடை பெற்றார். சொல்லிலும் செயலிலும் உண்மையாக வாழ்ந்த கம்யூனிஸ்ட் . அவரின் வறுமையான வாழ்விலும் ,கருத்துப் பிறழ்வின்றி வாழ்ந்த பெரும் மனிதர்.
  8. Contributions by the Sri Lankan Tamils to the Socialist development at National level is also considerable. Sangarapillai was the only one that made it to the politbureau of the LSSP.
    1. கதை சொல்லும் கருனையான “சிவனு”,  பொருளாதார, சமூக, பண்பாட்டு விருத்தியைச் சுதந்திரமாக முன்னெடுக்கவுமான தத்தம் தேசத்தின் சகல உரிமைகளையும் ,உலகத்தின் சகல  உரிமைகளையும் தடையின்றி சகலரும் பெறவுமே, சமூகத்தை நேசிப்பவன் ஒவோருவனும் எண்ணுவான் . ஸ்Tண் இன் ஜவுளிக்கடை ,டானியலின் கராஜ் என்பது தேவை அற்றது.அதில் சொல்லப்பட்டது சகலரையும் இணைத்து அந்தப் போராட்டம் எப்படி வென்றது என்பதே.உள்வாங்கி  வாசித்துப் பழக வேண்டும்.. சுயநிர்ணய உரிமை எனும் நெறி, முதன்முதலில் ரஷ்யப் புரட்சியின் தொடர்பில் லெனினால் முன்வைக்கப்பட்டது.முதல்லில் அதை எடுத்து வாசிக்கவும்.அல்லது இதே இணையத்தில் வரும் செய்திகளை வாசிக்கவும்.அதை விடுத்தது ,சொந்த காழ்புகளை இங்கு வந்து கொட்டக் கூடாது. மக்களுக்கான வாழ்வை மக்களுடனே கழிக்கின்றார்கள் அவர்கள் .
      1. Our sincere thanks to.......

Sunday, December 23, 2012

மக்களால் உயர்ந்த மாதரசி திருமதி. சோமசுந்தரம் - சற்குணம்

மக்களால் உயர்ந்த மாதரசி
      சோமசுந்தரம் - சற்குணம் 
          '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'சோம சுந்தரத்தின் வாழ்க்கைத் துணையான மாதரசி
தேவ என்று தொடங்குகிற நால்வரின் தாயரசி
தாமாக முன்வந்து சேவைசெய்த சிவலிங்க அக்காரசி
தாயாரே மகளாகிக் குடும்பத்தைப் பராமரித்த பொன்னரசி.

வழக்காடு மன்றமும் வைத்தியசாலை வளாகமும்
புழங்கும் மக்களுக்குச் சேவைசெய்யும் பண்பாடும்
பழக்கமான பல்கலைக் கழகமும் ஒளிவழியும்.......
அழகாக உன்வாரிசுகள் திறமையுடன் கால்பதித்தார்.

மூத்தவர் சட்டத்தரணி முற்போக்கிவர் உடன்பிறந்தோர்
மாற்றுக் குறையாத கல்விவளம் பெற்றதனால்......
சேற்றில் முளைத்த செந்தாமரைப் புகழுடனே
ஆற்றல் பலபடைத்து அன்னையை உயர்த்தினாரே.

சமுதாய அக்கறையும் சமூகத்தின் விழிப்புணர்வும்
கமுகம் பூப்போன்ற கனிவான புன்சிரிப்பும்
குமுதமாய் அல்லி,முல்லை,தாமரை சேர அமுதா(ய்)
முகம் மலரும்  சாதனாவுக்கும்  பூட்டியானார்.

-வள்ளியம்மை சுப்பிரமணியம்

திருமதி. சோமசுந்தரம் சற்குணம் (குணதங்கம்) அவர்கள் தேவராசா (சட்டத்தரணி), தேவராணி (கொழும்பு), தேவமலர் (தாதி உத்தியோகத்தர்), தேவகுமார் - கனடா ஆகியோரின் அன்புத் தாயாரும்;

மகாதேவர் (சிவலிங்கம்-கனடா), சிவபதமெய்திய பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

கலாலஷ்மி, சபாநாயகம், பரமசிவம், வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்;

ஜனமகன், திருமதி அபிஷா குமுதன், தீபவதனன், தீபமேனன், டார்வின், தனுஜன், வினோஜா, அனுஜன், மயூரன், மதுஷன், திவ்ஜா ஆகியோரின் அன்பு பேத்தியாரும்;

ரனிஷ்கா, தெஷாந்த், சாதனா, ஆகியோரின் அன்பு பாட்டியுமாவர்

Thursday, December 6, 2012

கே ஏ சுப்பிரமணியம் அவர்களின் 23 ஆவது நினைவுதினக்கூட்டம்

கடந்த சனிக்கிழமை 01.12.2012 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 23வது நினைவு தினக்கூட்டம்  தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில்பேராசிரியர்சி.சிவசேகரம் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.


 தோழர் கே.ஏ சுப்பிமணியம் அவர்களின் 23 ஆவது நினைவுதினக்கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் அவர்கள் உரையாற்றுவதையும், பேராசிரியர் சி.தில்லைநாதனும்,  முற்போக்கு போராளியான தோழர் க.தணிகாசலமும் ( தாயகம் ஆசிரியர் ) அமர்ந்து இருப்பதையும் காணலாம். 


தோழர் சிவ .இராஜேந்திரன், தோழர் கே.ஏ .சுப்பிரமணியத்தின் நினைவுகளை மூன்றாக வகைப்படுத்திப் பேசினார்.  தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியமும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்

Friday, November 30, 2012

Kanagaratnam Sritharan (Kanags) கனகரத்தினம் சிறீதரன்

 


    சிட்னியில் கனக-சிறீதரன்*
                         ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

      நீருடன் பால்கலந்தால் பிரித்தருந்தும் அன்னம்போல்
      வேருடன் விழுதுகளையும் தேடலால் அறிந்துகொண்டு
      பாரெலாம் வாழ்ந்திருந்த பண்பட்ட அறிஞர்வாழ்வை
      சீருடன் எடுத்துக்கூறும் சிந்தனைத் திறனாளன்!

      சிட்னிவாழ் கனக-சிறீதரன் சண்டிருப்பாய் மண்வித்து
      தொட்டது துலங்கிடத் தோப்பாகிக் கிளைபரப்பிப்
      பட்டறிவும் பகுத்தறிவும் ஆராய்வும் சேர்ந்ததனால்......
      தொட்டனைத் தூறுகின்ற மணற்கேணி இவனன்றோ!

      நல்லை நகர் ஆறுமுக நாவலர் தொடக்கம்
      சொல்லரிய மேதைகளின் சமுதாய அக்கறையை
      வல்லமையாய் இவனெழுத வளர்ந்துவரும் இளைஞர்கள்
      எல்லாவித விபரங்கள் இலகுவாய்ப் பெற்றுய்வர்!

          வள்ளியம்மை சுப்பிரமணியம்.

*சிறீதரன் யாழ்ப்பாணம்சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். தற்பொழுது புலம் பெயர்ந்து சிட்னியில் பணியாற்றுகிறார். மாஸ்கோ லுமும்பா, மற்றும் வட அயர்லாந்து குயின்சு பல்கலைக்கழகங்களில் ஒளி மின்னணுவியலில் முதுமாணிப் பட்டம் பெற்று மட்டக்களப்புயாழ்கொழும்பு, மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2006 சனவரி முதல் பங்களித்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் 2000 இற்கும் அதிகமான கட்டுரைகளை ஆரம்பித்து எழுதியிருக்கிறார். 365 நாட்களுக்கும் நாட்கள் வாரியாக வரலாறுகளை இற்றைப் படுத்தியமைமுதற்பக்க இற்றைப்படுத்தல் மற்றும் விக்கிசெய்திகளில் தொடர்பங்களிப்புகள் ஆகியவை இவரது பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.