'
'தேசாபிமானி' என்பது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் மொழி அரசியல் வார இதழாகும்.
'தேசாபிமானி' 1950 களுக்கு முன் தோன்றியது. கே. ராமநாதன் இவர் 'கல்கி' வார இதழில் சக்திதாசன் சுப்பிரமணியத்துடன் இணைந்து உதவி ஆசிரியராக இருந்தார். பின் இலங்கை வந்து , ஆரம்பங்களில் கே. கணேஷ் உடன் இணைந்து 'பாரதி' பத்திரிகையை நடத்திய கே. இராமநாதன், 1946ஆம் ஆண்டிலே 'தேசாபிமானி' என்ற இப் பொதுவுடமை வார இதழை ஆரம்பித்து நடத்தினார்.
கே. இராமநாதன் செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தார்.பின் அரசின் கவனம் அவர் பக்கம் திரும்ப , மீண்டும் மெட்ராசுக்குத் திரும்பினார். 1950 களின் பிற்பகுதியில் , எச்.எம்.பி. மொஹிடீன் வெளியீட்டின் தலைமை ஆசிரியராக இருந்தார். அதன் ஆரம்ப ஆண்டுகளில், இது சுமார் 10,000 சுழற்சியைக் கொண்டிருந்தது.
அரசியல் செய்திகள் மட்டுமன்றி, முற்போக்கு எழுத்தாளர்களான மு.கந்தையா, பிரேம்ஜீ, எச்.எம்.பி.முகைதீன், சின்னப்ப பாரதி , டொமினிக் ஜீவா , டானியல் , எம் எம் காசிம்ஜி , அந்தனிசில், சுபைர் இளங்கீரன் போன்றோரின் ஆக்கங்களும் இடம் பெற்றுவந்தன.
எங்கள் திருமணம் நடந்த 1962 தை மாதப் பகுதியில் , இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி - தேசம் முழுவதும் மிகப் பலமுள்ள கட்சியாக இருந்தது. தென்பகுதியில் தோழர்களான பீற்றர்கெனமன், கொல்வின் ஆர் டி சில்வா, சரத்முத்தட்டுவகம, பொன் கந்தையா, சண்முகதாசன் எனவும் வடக்கில்
வி.பொன்னம்பலம், கார்த்திகேசன், கே ஏ சுப்பிரமணியம், வி ஏ கந்தசாமி எனவும் ஐக்கியத்துடன் இருந்தகாலம். அந் நேரம் நானும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து எழுதியமையால் எங்கள் திருமணப் படம் கட்சியின் பத்திரிகையில் வெளி வந்தது. இதை மிகப் பெறுமதியாகவும், பெருமிதமாகவும் கொள்கிறேன். தோழரி்ன் புத்தகங்களின் நடுவே இதை என் மகள் கண்டுகொண்டார். மீண்டும் அந்த நாட்களுக்கு சென்று வந்தேன். உங்களுடன் பகிரக் கிடைத்தது என் பேறே!
புதுமை தம்பதிகள்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் பிரதேச கமிட்டி உறுப்பினரும், யாழ் பிரதேச கம்யூனிஸ்ட் வாலிபர் சங்க செயலாளரும், ‘தேசாபிமானி’யின் வளர்ச்சியில் பெரும்பங்கு எடுப்பவருமான தோழர் கே ஏ சுப்பிரமணியத்துக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினரான தோழியர் வள்ளியம்மை ஆசைபிள்ளைக்கும் சென்ற வாரம் திருமணம் நடந்தேறியது. புதுமை தம்பதிகளுக்கு எமது வாழ்த்துக்கள். - நிர்வாகி