1 சித்திரை 1983
தாயகம் மீண்டும் வருகிறது
The Editorial for Art and Literary., April 1983, 'Thayagam'
தாயகத்தின் ஆசிரிய தலையங்கம் 1983 சித்திரை
புதிய ஜனநாயகம்! புதிய வாழ்வு! புதிய நாகரிகம்!
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 1974 சித்திரையில் உதயமான தாயகம் திரும்பவும் மிளிர்வது மகிழ்ச்சியைத் தரும்.
தாயகம் உதயமான காலகட்டத்தில் இருந்தவற்றினின்று இன்றுள்ள தேசிய சர்வதேசிய நிலைமைகள் பெரிதும் வேறுபட்டுள்ளன.
இந்த இடைக்காலத்தில் தாயகம் பல நெருக்கடிகளையும் அனுபவங்களையும் கண்டுள்ளதுடன் அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார மாற்றங்களையும் கவனத்தில் கொண்டுள்ளது.
ஆயினும், துயரத்தின் ரேகைகள் அதன் முகத்தில் இல்லை. தனது அனுபவங்களைத் தொகுத்து, ஆய்ந்து, தவறுகளைத் திருத்தி சரியானவற்றை மேலும் முன்னெடுக்கும் முக மலர்ச்சியையே அதனிடம் காணலாம்.
இன்று எமது நாடு, பாரிய பொருளாதார நெருக்கடி, மோசமான வாழ்க்கைச்சுமை, தேசிய இனங்களுக்கிடையே பகைமை, இளைஞர் - மாணவர்களிடையே அமைதியின்மை, உழைக்கும் மக்கள் தாம் போராடிப் பெற்ற ஜனநாயக தொழிற்சங்க உரிமைகள் படிப்படியாகப் பறித்து எடுக்கப்பட்டமை, கலாச்சாரச் சீர்குலைவு, அந்நிய கலாச்சார ஊடுருவல்கள் போன்றவற்றைக் காண்கிறது.
மொத்தத்தில் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு வாக்குச் சுதந்திரம், பேச்சு எழுத்துச் சுதந்திரம், நீதிச்சுதந்திரம் இவையெல்லாம் புறக்கணிப்புக்கும் பயமுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுவதுடன் அரச பயங்கரவாதத்துடன் கூடிய தனி நபர் சர்வாதிகார முனைப்பின் கீழ் அரசு செயல்படுவதை அவதானிக்கிறது.
இதற்கெதிராக நாட்டுமக்கள் அனைவரும் பல முனைகளிலும் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை தாயகம் உணர்கிறது.
அவர்களை ஒன்றுபடச் செய்வதும் கிளந்தெழச் செய்வதும் ஜனநாயக சக்திகளையும் இயக்கங்களையும் பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைப்பதும் முன்னெடுப்பதும் அதற்காகச் செயல்படுவதும் தாயகத்தின் இன்றைய கடமையாகிறது.
அதையே தாயகம் துணிவோடு முன்னெடுக்கத் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. மேற்கூறிய கடமைகளை முன்னெடுப்பதில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்களின் பங்கையும் நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. இதனை மனதிற் கொண்டே லூசூன், பாரதி நூற்றாண்டுகளை கடந்த ஆண்டுகளில் நினைவுகூர்ந்தோம்.
நூற்றாண்டு விழாக்கள் வெறும் ஆண்டு இறுதிச்சடங்குகளல்ல. தாம் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சாரத் தாக்கங்களுக்கு எதிர்நின்று, தாம் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் கடமைகளை நிறைவேற்றும் தமது வாழ்க்கைப் போராட்ட அனுபவங்களை - தத்தமது ஆளுமைகளுக்கேற்ப தந்து சென்றவர்களின் பல்வேறு அறிவியற் கருத்துக்களையும், கலை, இலக்கியப் படைப்புக்களையுமே நாம் இங்கு நினைவுகூருகிறோம். இத்தகைய அநுபவங்களை தொகுத்துச் செழுமைப் படுத்துவதன் மூலமே மனித குல வரலாறு வளர்ச்சியடைந்து வந்தருக்கிறது.
கலை இலக்கியத்தின் கடந்த காலமே வெறும் இருட்டுத் தான் நாங்கள் மட்டுமே பகலில் நிற்கிறோம் என்ற இலக்கிய மமதையுடன் ஆய்வுரை என்ற பெயரில் காலத்தால் சூழலால் ஏற்படும் பலயினமான அம்சங்களை மட்டுமே தூக்கி நிறுத்தி நிராகரிப்பதல்ல எமது நோக்கம். அந்த இருண்ட காலங்களிற் கூட எத்துணை பலத்துடன் எழுந்து நின்று மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்தார்கள் என்பதை உணரும்போதுதான் பட்டப்பகலிலேகூட ஏற்பட்டுவிடும் குருட்டுத் தனங்களையும் குணப்படுத்தமுடியும்.
கடந்த ஆண்டு மாதந்தோறும் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு ஆய்வரங்கை நினைவுகூரும்போது மறைந்த பேராசிரியர் கைலாசபதி அவர்களின் நினைவால் எமது நெஞ்சங்கள் கனப்பதை நாம் உணர்கிறோம். அந்த அளவிற்கு ஆய்வரங்கு பயனுற அமைவதற்கு மட்டுமல்ல, மேன்மேலும் பல புதிய பங்களிப்புக்களைச் செய்வதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த பல்வகை ஆற்றல்கள் கைவரப்பெற்ற, செயலூக்கமுள்ள, மனித நேயம் கொண்ட ஒரு தமிழறிஞரை, இலக்கியவாதியை இழந்தமை மாதங்கள் பல கடந்தபின்னும் எமது மனதை உறுத்துவதை நாம் உணர்கிறோம். அவரது “ பாரதியும் மறுமலர்ச்சிக் கோட்பாடும் - ஒரு மறுமதிப்பீடு' என்ற ஆய்வுரை கூட கட்டுரை வடிவில் முழுமைபெறாதது எமது துர்ப்பாக்கியமே
பாரதி ஆய்வுகள் நூலுருப் பெறுவதை அவர் விரும்பினார்; ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தினார்; அதற்காக எம்முடன் ஒன்றுபட்டு உழைத்தார். தாயகத்தின் வருகையோடு அவரது விருப்பை ஓரளவிற்காவது நிறைவேற்றி வைப்பதில் நாம் ஆறுதல் அடைகிறோம்.
தாயகம் உங்கள்முன் விரிந்து கிடக்கிறது. அதன் உயர்ச்சியும், வளர்ச்சியும் விழிப்புணர்வு பெற்ற தேசபக்த சக்திகளிலும், பரந்துபட்ட வெகுஜனங்களின பலத்திலும் பங்களிப்பிலுமே தங்கி நிற்கிறது.
உங்கள் தாயகம் தலைநிமிர உங்களது அயராத உழைப்பினை ஒத்துழைப்பினை தொடர்ந்தும் நல்குவீர்.
தாயகம் ஆசிரியர் குழு சார்பில் கே.ஏ. சுப்பிரமணியம் 01 சித்திரை 1983