skip to main |
skip to sidebar
1986-ஆனி 29 அன்று PLOTE அமைப்பிலிருந்து பயிற்சி முடித்து வந்த 33 வீரர்கள் இந்து மாசமுத்திரத்தில் படகுடன் சேர்த்து, இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டனர். ஒருவரது உடலும் கிடைக்கவில்லை (போட்டி இயக்கத்தினரின் காட்டிக்கொடுப்பினால் இது நிகழ்ந்ததாகவும் ஒரு ஆதாரமற்ற கதை உண்டு ) நாமிழந்த 33 வீரர்களில், பலர் பழகிய உறவுகள். வேதனையின் வலிகள் சொல்லி மாளாதவை. ‘தினமுரசு’ ஆசிரியர் ரமேஷ் தோழருடன் திண்ணையில் இருந்து பேசிக்கொண்டு இருந்த போதே இச்செய்தி எமக்குக் கிடைத்தது……அந்த வலியுடன், தோழர் எப்படி அந்த உரையாடலைத் தொடர்ந்தாரோ? தெரியவில்லை. இராசன் சிறைச்சாலையில், கீர்த்தி உயர்கல்விக்காக வெளியூரில் , எமக்கு எல்லாமாக இருந்தது சைலகாந்தன் வைரமுத்து (சாஜகான்) தான் . 5 பெண்பிள்ளைகளின் கடைசிப் பையனாக பிறந்து கீர்த்தியின் உயிர் நண்பனாக 'சத்தியமனை'யில் உண்டு உறங்கி வளர்ந்த உறவு. அவனுடன் ஏற்பட்ட உறவுக்கு அவனின் விதவைத் தாயின் , அவனின் 5 சகோதரிகளின், எம் மீதான நம்பிக்கையே காரணம். வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் கணனியியல் படித்துக் கொண்டிருந்தார் . எங்களுக்கும் சொல்லாமல் திடீரென முடிவெடுத்துச் சென்றான். போராளி சுந்தரத்தின் மிக நெருங்கிய உறவு. வறுமையும் , குடும்பப் பொறுப்பும் நிறைந்த அவனையும் விடுதலை வேட்கை விட்டுவைக்கவில்லை. எப்பொழுதுமே அவனின் நினைவு எம்முடனே இருந்து வந்தது. அவனின் அம்மா திருமதி மகேஸ்வரி- வைரமுத்துவின் (1929-10-01 - 2013-8-10) இழப்பு பலத்தை மீட்டுத் தந்தது. அவர்களுடனான குடும்ப உறவு எப்போதும் தொடரும்!