உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பொதுவுடைமைவாதிகள் இருந்து வருகிறார்கள். அவர்கள் நாடு இனம் நிறம் மொழி பண்பாடு போன்றவற்றால் வேறுபட்டவர்களாயினும் மாக்சிச உலக நோக்கினாலும் மாக்சிசம் லெனினிசம் என்றும் பொது மொழியினாலும் ஒன்றுபட்டவர்கள். அதனால் அவர்கள் சர்வதேசியவாதிகள். இவை அவர்களது வாழ்விலும் அன்றாடச் செயல்களிலும் கெட்டியாகப் படிந்திருப்பவை. அவர்களது இலக்கும் பயணமும் முழு மனிதகுல விடுதலை நோக்கியதாகும். அதனைச் சொந்த நாட்டினதும் மக்களினதும் விடுதலையில் இருந்தே ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பயணத்தின் முதல் அடியினை ஒவ்வொரு பொதுவுடைமைவாதியும் தத்தமது குடும்பங்களில் இருந்தே எடுத்து வைத்தே ஆரம்பிக்கிறார்.
அத்தகைய பொதுவுடைமைவாதிகளில் ஒருவராகவும் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் வாழ்ந்து செயலாற்றி மறைந்தவர் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம். தோழர் மணியம் அல்லது மணியம் தோழர் எனக் கட்சித் தோழர்களாலும் மக்களாலும் தோழமையுடனும் அன்போடும் அழைக்கப்பட்டவர் கே.ஏ. சுப்பிரமணியம். அவரது வாழ்வும் பணியும் நினைவும் விரித்து நோக்கப்பட வேண்டியது. அது விரைவில் செயலாக்கம் பெறும். இதனை அதற்கான சிறு குறிப்பு என்றே கொள்ளப்பட முடியும்.
தோழர் மணியம் சுமார் நாற்பது ஆண்டுகள் வரை பொதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து வந்தவர். அந்த உழைப்பு தனிமனித ஈடேற்றத்திற்கான உழைப்பு அல்ல. மனிதகுல விடுதலை என்ற மகத்தான இலட்சியத்தை வென்றெடுப்பதற்கான உழைப்பு. அதனை உழைப்பு என்பதைவிடத் தவம் இயற்றியமை என்று கூறலாம். அதிலும் கடும் தவம் புரிந்தவர் தோழர் மணியம். தனதும் தனது குடும்பத்தினதும் ஈடேற்றத்திற்கு வரம் வேண்டிய நின்ற ஒருவர் அல்ல. இலங்கையின் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காக நின்றவர். குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் வர்க்க சாதிய நிலைகளில் காணப்பட்ட ஒடுக்குமுறைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிரான பொதுவுடைமைக் கட்சி முன்னெடுத்த கொள்கை வழிப்பட்ட போராட்டம் நம்பிக்கை தரும் தலைமைத்துவப் பாத்திரத்தை வகித்து நின்றவர் தோழர் மணியம். அத் தலைமைத்துவதற்கு வெறும் நியமன மூலம் வந்த ஒருவர் அல்ல அவர். மக்கள் மத்தியிலான வேலைகளின் ஊடாகவும் கட்சி அமைப்புகளின் அணி திரட்டல் மூலமாகவும் அவற்றுடன் கூடிய வெகுஜன அரசியல் வேலை முறைகளையும் போராட்டங்களின் முனைகளையும் திறந்து முன்னெடுத்தமை மூலமாகவும் அவரது தலைமைத்துவ ஆற்றல் விருத்தி பெற்று வந்தது. பொதுவுடைமைவாதிகள் மீன்கள் போன்றவர்கள். மக்கள் தண்ணீர் போன்றவர்கள். தண்ணீரில் இருந்து மீன்களை வெளியே எடுத்தால் இறப்புத்தான் நிகழும். அது போலவே பொதுமக்கள் மத்தியிலிருந்து பொதுவுடைமைவாதிகள் வெளியே வந்தால் அவர்களுக்கும் அதுவே ஏற்படும். இந்த உதாரணம் தான் பொதுவுடைமைவாதிகளின் வாழ்வுக்கு வழிகாட்டியதாகும்.
வட புலத்துச் சமூகச் சூழல் மிகவும் சிக்கலானதும் சில வேளைகளில் மிகப் பொல்லாததுமாக இருந்து வந்ததாகும். அத்தகைய சமூக-குடும்பச் சூழல் விதிக்கும் எல்லைகளையும் சமூக பண்பாட்டு விழுமியங்களின் பழைமைவாதப் பிற்போக்குத் தன்மைகளையும் மீறி ஒருவர் பொதுவுடைமைவாதியாகவும் அதிலும் முழு நேர ஊழியராகவும் வருவதென்பது துணிவும் தூர நோக்குமுடைய ஒரு சிலருக்கே முடியக் கூடியதாகும். அது மட்டுமன்றித் தான் வரித்துக் கொண்ட கொள்கை நடைமுறைகளை ஏற்கனவே கெட்டியாக உள்ள சமூக மத பண்பாட்டு நடைமுறைகளுடன் எச் சந்தர்ப்பத்திலும் சமரசத்திற்கு உட்படுத்தாது வாழும் வாழ்க்கையானது தான் அற்புதமான வாழ்க்கையாகும். அவ்வாறே ஏகாதிபத்தியம் காலத்திற்குக் காலம் விரித்து வரும் நச்சுப் பண்பாட்;டங்கங்கள் என்ற வலைகளில் வீழ்ந்து கொள்ளாது இவ்வாறு தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாய் வாழ்ந்து சென்றவரும் தோழர் மணியம் என்பது நினைவு கூரப்பட வேண்டியதாகும்.
அவர் நிலவுடைமைக் கருத்தியலும் சிந்தனையும் நடைமுறைகளும் கொண்ட பழைமைவாத கிராமச் சூழல் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் அவர் மாக்சிச உலக நோக்கை தெளிவாகவும் உறுதியாகப் பற்றி உள்வாங்கிக் கொண்டமையால் பழைமைவாதத்தை முற்றாகக் களைந்து நின்றார். அதனாலேயே தற்பெருமை, தன்முனைப்பு, புகழ் நாட்டம் பதவி மோகம், பணம் சேர்ப்பு, ஆடம்பர வாழ்வு, அனைத்தையும் துறந்ததொரு வாழ்வை மேற்கொண்டார் தோழர் மணியம். இவ்வாறான ஒரு வாழ்க்கை முறை அவருக்கு பல்வேறு வாழ்க்கைக் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்தது என்பது உண்மையே. இல்லாமையும் பற்றாக் குறையும் காரணமாக அடிப்படைத் தேவைகளின் ஆகக் குறைந்தவற்றைக் கூட அவரது குடும்பம் பெற முடியாமல் இருந்தது உண்மையே. ஆனால் தானே விரும்பி மணம் முடித்;த மனைவி குடும்பத்தின் வாழ்வுப் பாரத்தைச் சுமந்து தோழர் மணியம் வழி நடந்த பொதுவுடைமை இலட்சியப் பயணத்தில் கூடவே வழி நடந்தார் என்பது குறிப்பிடக் கூடியதாகும். ஒரு ஆணின் வெற்றிக்குப் பெண் பின்னால் இருக்கிறாள் என்று பொதுவாகக் கூறப்படும் கூற்று ஆணாதிக்கம் மிக்கதொன்றாகும். ஆனால் ஒரு பொதுவுடைமைவாதியின் இலட்சியப் பயணத்திற்கு துணையாகவும் இணையாகவும் வழிநடப்பது என்பது மாக்சிச லெனினிச அறம் சார்ந்த ஒன்றாகும். அதனைத் தோழர் மணியத்தின் வாழ்விற் காண முடிந்தது.
தோழர் மணியம் தலைமைத்துவ ஆற்றல் மிக்கவராக இருந்தார் என்பதற்கு அவரது காலத்தில் இடம்பெற்ற வெகுஜன தொழிற்சங்கப் போராட்டங்கள் சான்று பகரும். அதே வேளை கட்சியை அமைப்பு ரீதியாகக் கட்டியெழுப்பதிலும் வழிகாட்டும் பாத்திரத்தை வழங்கி வந்தமை என்றும் நினைவுக்குரியவையாகும். குறிப்பாக இலங்கையில் பொதுவுடைமை இயக்கப் பரப்பில் திரிபுவாதம், அதிதீவிரவாதம், தனிமைவாதம், சீர்குலைவுவாதம் போன்றவற்றுக்கும் அப்பால் நிதானமான நேர்மைமிக்க ஒரு மாக்சிச லெனினிசக் கட்சியின் அவசியத்தை மாஓ சேதுங் சிந்தனை வழிகாட்டலில் கட்டியெழுப்புவதில் உறுதியாக இருந்தவர் தோழர் மணியம். தூர நோக்கிலான அவரது வழிகாட்டலிலேயே இன்றைய புதிய ஜனநாயக கட்சி உறுதியான மாக்சிச லெனினிசக் கட்சியாக வளர்ந்து வந்திருக்கிறது. அத்தகைய வளர்ச்சிக்கு தோழர் மணியத்தின் பங்களிப்பு பாரியதொன்றாகும்.
தோழர் மணியம் தனது 59வது வயதில் 1989ம் ஆண்டு நவம்பர் 27ஆந் திகதி இயற்கை எய்தினார். அவர் கட்சியின் வாழ்வோடும் எதிர் கொண்ட போராட்டங்களோடு மட்டுமன்றி ஏற்பட்ட உள், வெளிக் காயங்களுடனும, நோய்களோடும் போராடியவாறே உயிர் நீத்தார். இறுதி நேர வாழ்வின் போதும் கட்சி, மக்கள் போராட்டங்கள் போன்றவற்றின் எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனுமே உயிர் நீத்தார். அவரது நம்பிக்கை வெறும் தனிமனித ஈடேற்றத்திற்கான நம்பிக்கை அல்ல. மனித குலவிடுதலை என்ற மகத்தான இலட்சியத்தின் மீதான நம்பிக்கை. அதனை நமது கட்சியின் ஊடாகவும் தன்னோடு பயணித்த தோழர்கள், நண்பர்கள், குடும்பத்தவர்கள் என்போருக்கு ஊடாக எதிர்பார்த்தவாறே இயற்கையுடன் கலந்தார். அந்த நம்பிக்கைக்கு என்றென்றும் சேவை செய்வதில் நம்மை மேலும் அர்ப்பணிப்போமாக!