சிவப்பு முட்டையிலிருந்து திருவள்ளுவர்
அவசரமாகத்தட்டும்
சத்தம் ஒன்று என் வீட்டின் பின்புறத்திலிருந்து கேட்டது. உடனேயே அங்கு ஓடிச் சென்றேன். வீட்டின் பின் கதவை யாரோ தட்டுகின்றார்கள் என நினைத்த
நான், ஒரு பெரிய சிவப்பு முட்டையைக் கண்ட போது ஐந்தும் கெட்டு
அறிவும் கெட்டு அம்முட்டையையே பார்த்து முழித்தேன். அந்த முட்டையிலிருந்து தான்
தட்டும் சத்தம் வந்தது என உணர்ந்தேன். முட்டையைத்
தடவிய போது செவிக்கு நாராசமான சத்தத்தை உருவாக்கியது. மறுகணம் முட்டையிலிருந்து ஒரு கதவு திறந்து கொள்ள
ஒரு ஆடவர் நடந்து வந்தார். அவர் பார்ப்பதற்குப்
புகைப்படங்களில் நான் கண்ட திருவள்ளுவரைப் போலவே இருந்தார். 'வணக்கம், என் பெயர் வள்ளுவர்', எனக் கூறினார். என் கண்களையே என்னால் நம்ப
முடியவில்லை. இவர் உண்மையாகவே திருவள்ளுவர்
தான்!
"நான்
இறக்க முன் கடவுள் என்னிடம் ஒரு வரம் வழங்கினார். எதிர்காலத்தில் மறுபடியும் இவ்வுலகைப்
பார்ப்பதற்காக ஒரு வாய்ப்பைத் தரும்படி கேட்டேன்.
அதனால் தான் நான் இங்கு இருக்கின்றேன்", எனத் திருவள்ளுவர் விளக்கினார். திருவள்ளுவரை உடனேயே வரவேற்றேன். வீட்டினுள் அழைத்து உண்ணுவதற்கு உணவைக்கொடுத்துபசரித்தேன். அவர் ஒரு செய்தித்தாளை எடுத்துத் தன்னை விசிறத்தொடங்கியபோது
மின்காற்றாடியைப் போட்டேன். "ஒரு பொத்தானை அழுத்த இவ்வளவு காற்று வருகிறதே!"
என அவர் அதிர்ந்தார். என் நண்பனுடன் கைத்தொலைபேசியின்
மூலம் பேசிய போது திருவள்ளுவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரிப் பார்த்தார.
"ஏன் தம்பி, ஒரு கருங்கல்லுடன் நீ பாட்டுக்குப் பேசிக்கொண்டு இருக்கிறாயே?"
என்று கேட்டார். என் கணினியை அவரிடம் காட்டியபோது
வியப்பால் அவர் மயங்கி விழப்பார்த்தார். மதியமாகியபோது
நானும் திரு வள்ளுவரும் வீட்டுக்கு வெளியே உள்ள விரைவு உணவுச்சாலையில் உண்டோம். உணவு
இரண்டு நிமிடங்களிலேயே தயாரிக்கப்பட்டதைத் திருவள்ளுவரால் நம்ப முடியவில்லை.
ஆனால் இந்த
நவீன யுகத்திலும் பல தீமைகள் இருக்கின்றன என்பதைத் திருவள்ளுவர் சிறிது நேரத்தில்
உணர்ந்தார். முதலில் நாம் 'சோமு சாராயக் கடையைத்'
தாண்டி நடந்தோம். அங்கு பற்பல குடிகாரர்கள்
குடிபோதையில் படுத்துக்கொண்டு இருந்தார்கள்.
'எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்' என்பதை
அவர் பலமுறை சொல்லிச் சொல்லிக் கவலையடைந்தார்.
வழியில் ஒரு மனைவி கணவனை அடித்துக்கொண்டிருந்தாள். "அன்பும் அறமும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்று படித்துப் படித்துக் கூறினேனே எனக்கூறிக்
கவலைப்பட்டார். பிறகு நிலத்திலிருந்த ஒரு செய்தித்தாளை
எடுத்து வாசித்தார். முதலாம் பக்கத்தில்,
'நண்பனின் மனைவியை அடைவதற்காகக் கொலை', 'கள்ளக்காதலுக்காகக் கணவன் கொலை' என செய்திகள்
இருந்தன. "ஐயகோ! பிறன்மனை நோக்காப் பேராண்மை" என்பதையும், "மகளிர் நிறை காக்கும் காப்பே தலை" என்பதையும்
நான் கூறியதை ஒருவரும் பொருட்படுத்துவதில்லையா?" என வள்ளுவர் இரத்தக்கண்ணீர் வடித்தார்.
இப்படிப் பல தீய விடயங்களை அவர் என்னுடன் நேரில் பார்த்தார். வீட்டை அடைந்ததும் உலகமே
இருண்டது போன்ற உணர்ச்சி யை அவரது கண்களில் பார்த்தேன். ஒரு சொல்லைக் கூடச் சொல்லாமல் வீட்டின் பின்புறத்துக்குச்
சென்றார். வானிலுள்ள ஒரு நட்சத்திரத்தைக் கூர்ந்து
பார்த்துக் கொண்டிருந்தார். அது அவரது மனைவி
அருந்ததியாகத்தான் இருக்க வேண்டும்.
"பல
விடயங்களைக்காட்டியுள்ளீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கும் நன்றி. உலகம் இன்னும் முற்றாகத் திருந்தவில்லை தான்..."
எனக் கூறி விட்டுச் சிவப்பு முட்டையினுள் காலை வைத்தார். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கதவைப் பூட்ட முன்,
'வசதியும் சொகுசுமுள்ள இவ்வுலகு - வன்முறையால்
தகுதியில் குறைந்ததாம் கொல்' எனக் கூறி விட்டுக் கண்ணிலிருந்து ஒரு கண்ணீர்த்துளியைத்
துடைத்து விட்டுக் கதவை மூடினார். மறுநாள்
அந்த முட்டை மறைந்து விட்டது. அடடா! இவ்வுலகுக்காக அவர் ஒரு புதிய குறளையல்லவா
கொடுத்துவிட்டுப் போயுள்ளார்? இதை எவ்வாறு
நான் உலகத்துக்குத் தெரிவிப்பேன்? நான் கூறுவதை மற்றவர்கள் நம்புவார்களா?-எனது சின்னப்பேரன்