Tuesday, October 21, 2014

தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் மறைந்து 25 வருடங்களில் சில பதிவுகள் - லெனின் மதிவானம்

தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான நா. சண்முகதாசன்,  மு கார்த்திகேசன்  என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர்.  ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த பரிமாணமாகவும் இருந்தவர் கே.ஏ.சுப்பிரமணியம்.  

ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் எதிராக ஓர் உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று பேராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. அவர் மறைந்து 25 ஆண்டு நிறைவை அடையும் இத்தருணத்தில், இந்த இருபத்தைந்து வருடங்களில் நமது நாட்டிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலே விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய முக்கிய புருஷர்களில் ஒருவராகிய  மணியம் பொறுத்து வெளிவந்த நினைவு மலரைத்தவிர ( தோழர் மணியம் நினைவு மலர்,  கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு வெளியீடு, யாழ்பாணம், 1989).   வேறு உருப்படியான  ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை.

தோழர் மணியத்தை ஆராயவும் மதிப்பிடவும் அன்னாரின் சிறப்பியல்புகளையும் பங்களிப்பையும் புறவய நிலையில் சீர்தூக்கி பார்ப்பதும் காலத்தின் தேவையாகும்.  வரலாற்றுப் பின்னணியில் இவரை முன்னிறுத்தி மதிப்பீடு செய்யும் முயற்சிகள் வெளிக் கொணரப்படவேண்டும். அவை முக்கியமாக மூன்று நிலைகளில் நடைப்பெற வேண்டும். 
  • முதலாவது அன்னாரை பல்துறை நோக்கில் அணுகி ஆராயும் மதிப்பீடுகள், ஆய்வுகள் வெளிவர வேண்டியுள்ளது.
  • இரண்டாவதாக அவர் வழி வந்த தலைமுறையும் அவர்களின் சிறப்புகளும் மணியத்தாரின் மரபு மாறியும் மாறாமலும் செயற்பட்டு வந்துள்ளமை குறித்த ஆய்வும் மிக அவசியமானதாகும்.
  • முன்றாவதாக அவர் தொடர்பில் வெளிவந்த மதீப்பீடுகள் ஓப்பிட்டளவில் மிக குறைவாக காணப்பட்ட போதினும் அவைக் குறித்த விமர்சனங்களும் அவசியமானவையாகின்றன.
இவ்வடிப்படையில் நோக்குகின்ற போது இவர் பொறுத்த நினைவுரைகள் மற்றும் நூல் சமர்பணங்கள் என்பன அவசியமானவையாக இருந்த போதினும் அதற்கு அப்பால் இவ்வாளுமைக் குறித்த ஆய்வுகளும் மதீப்பீடுகளுமே காலத்தின் தேவையாக உள்ளது. பிரபல்யங்களுக்கு அப்பால் மக்கள் மத்தியில் இவர் முன்னெடுத்த விலைமதிப்பற்ற செயற்பாடுகளை அவர்கள் எந்தளவு மதித்திருந்தார்கள் என்பதற்க்கு அவரது "விடை பெறுகின்றேன்" என்ற ஒலி ஒளி நாடா சாட்சியமாக இவர் பற்றிய மேலும் பல தகவல்களை தருவதாக அமைந்திருக்கின்றது. இடதுசாரி இயக்க வளர்சிக்கு குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இவ்வாளுமை கொடுத்த நம்பிக்கை குரல் ஒரு பலமாகும்.   அவர் செயலாற்றி நன்மதிப்பை பெற்றிருந்த பொது மக்கள் தொழிலாளர்கள், விவசாயிகளாக இருந்தமையால் அவர்களால் தமது உணர்வுகளை எழுத்தில் பதிய முடியாமல் போய்விட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும். பொது மக்கள் மத்தியில் செயற்பட்ட பல ஆளுமைகள் இவ்வாறு மறைக்கப்பட்டமைக்கு மேற்குறித்த காரணி முக்கியமானதாக காணப்படுகின்றது.         என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் வளத்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்தது.


இத்தோழரின் அரசியல் தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம்,  விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வையைக் கொண்ட அவரது செயற்பாடு ஆகும். அவருடைய ஆளுமை பல்துறைசார்பானது. அவரில் வெளிப்பட்ட அரசியல்   பார்வையும் நடைமுறைசார்ந்த போராட்டமும்  சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக் காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற எமது சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து அதற்கான நடைமுறையை முன் வைத்தார். குறிப்பாக இலங்கை இந்திய இடதுசாரிகள் பலர்,  தமிழ்ச் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோகித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டுச் சென்றது. தமிழ்ச் சமூகத்தில்  சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைய முடியும். தோழர் மணியம் இதனைப் புரிந்து கொண்டு தமது ஸ்தாபன செயற்பாடுகளை முன்னெடுத்தவர்.

அந்தவகையில் அவர் முன்னின்று முன்னெடுத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிரான போராட்டமாகும். இந்தியாவிலே ஏ. கே. கோபாலன்  முதலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் முன்னெடுத்த கோயில் நுழைவுப் போராட்டத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்டு நமது சூழலுக்கு ஏற்றவகையில் அவ்வனுபவங்களை முன் வைத்து  தமது போராட்டங்களை முன்னெடுத்தார்.  

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போரட்டம் நடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது நிலப்பிரபுத்துவ சக்திகள் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரினால் துப்பாக்கிச் சூடு, கைக்குண்டு வீச்சு,  சம்பந்தப்பட்டவர்களது வீடுகளைத் தீயிட்டு எரித்தல், ஒடுக்கப்பட்டோர் தமது வாழிடத்தில் இருந்து அடிப்படைத் தேவைகளின் பொருட்டும் வேறிடம் செல்லவிடாது தடுத்தல், அவர்களது விவசாயப் பயிர்களை நாசம் செய்தல், பிரேத ஊர்வலங்களின் மீது துப்பாக்கித் தாக்குதல்- பிரேதங்களை மயானங்களில் எரிக்கவிடாது இடையூறு விளைத்தல் போன்ற அநாகரிக நடவடிக்கைகளில் சாதிவெறியர்கள் ஈடுபட்ட காலகட்டம் அது. அத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களும் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 1966 ஒக்டோபர் எழுச்சியோடு ஆரம்பமான ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1969 இன் இறுதிப்பகுதிவரை நீடித்தது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் உட்படப் பல ஆலயங்களும் வட பகுதியிலுள்ள சகல தேனீர்க்கடைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டு, சமத்துவம் பேணப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிபெற்று போராடிய காலத்தில் அந்த மக்களுக்கு சரியான திசை வழியைக் காட்டி, போராட்டத்தை நெறிப்படுத்திய கொம்யூனிஸ்ட் கட்சியும், தோழர் கே.ஏ.சுப்பிரமணியமும் என்றென்றும் ஒடுக்கப்பட்ட மக்களால் நினைவுகூரப்படுவார். (கே.சுப்பையா http://www.sooddram.com/Articles/otherbooks/Nov2012/Nov262012_Suppaiya.htm)

மணியத்தாரின் காலத்திலும் அதற்கு சிறிது முன்பின்னாகவும் சாதிப்பிரச்சனைகள் குறித்து இருவேறு போக்குளை பிரதிப்பலித்தோரைக் காணக் கூடியதாக இருந்தது. ஒருப் பிரிவினர், சாதியவாதக் கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள். இவர்களே பெரும்பான்மையினர். வழி வழி வரும்  சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இறுகப் பற்றிக் கொண்டு அதனடியாக எழுந்த சாதிய அடக்கு முறைகளின் பின்னணியில் எழுந்த கோபாவேசம் வெறுமனே ஸ்தாபன மற்றக் கலகக் குரலாக எரிந்து அனைவதாக அமைந்திருந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே மேழுந்த மத்தியதர வர்க்கத்தினர் தமது வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே உழைக்கும் மக்களிலிருந்து அந்நியப்பட்ட கலாசாரப் போராட்டத்தை முன் வைத்தனர்.  இவர்களின் போராட்டம் என்பது தலித் மத்தியதர வர்க்கம் சாந்த விடுதலையாகவே அமைந்திருந்தது.

இன்னொரு பிரிவினர் சாதிப் பிச்சனையை வர்க்கப் பிரச்சனையிலிருந்து பிரித்து நோக்கினர். இவர்கள் கொண்டிருந்த வரட்டுத்தனமான வர்க்கப் பார்வை ஒரு விதமான சமரசத்திற்கே இட்டு சென்றது. இவர்களின் பார்வையிலும் சிந்தனையிலும் இயக்கவியலின் சாயல் கூட இருக்கவில்லை. முரண்பாட்டின் அடிப்படைகளை நோக்காது ஒன்றை மட்டும் பற்றுக்கோடாக கொண்டவர்கள் இருசாராரும். இவ்வாறான சூழலில் சாதிய போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தின் அங்கமாக பார்த்தவர் தோழர் மணியம்.  சாதியத்தின் பரிமாணங்களையும் கொடுமைகளையும் ஒரு சேர நோக்கி பூரணவிடுதலைக்கான மார்க்கத்தை தெளிவுப்படுத்திமையே அவரது முக்கிய பங்களிப்பாக விளங்குகின்றது. சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான போரட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் வெகுசன அமைப்பாக திரட்டியிருந்தமையே இவரது காத்திரமான பங்களிப்பாகும்.  இவ்வகையில் இலங்கையின் இடதுசாரிகள் எமது சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுக்க முனைந்ததன் விளைவே தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமாகும். தமிழர் பண்பாட்டு சூழலில் சாதிய முரண்பாடுகள் வர்க்கப் பிரச்சனையாக உருமாறியிருக்கின்றது என்பதை இயங்கியல் பார்வையில் அடையாளம் கண்டு கொண்டமை மணியத்தாரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.  அரசியல் அரங்கில் இந்த முரண்பாட்டை விளங்கிக் கொண்டு அமைப்பாக்க செயற்பாட்டில் ஈடுப்பட்டமை இவரது முக்கிய பங்களிப்பாகும். அவர் சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் மற்றவர்களை விட அதிக ஆர்வத்துடன் விரும்பி செயற்பட முனைந்தமையினாலேயே அவரது வாழ்வு அதனையொட்டியே அமைந்திருந்தது.

இவரது தன்னலமற்ற பங்களிப்பு பற்றி அன்றைய காலச் சூழலில் அவரோடு தொடர்பு கொண்டிருந்த போரசிரியர் தில்லைநாதன் அவர்களின் பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது.

"அதிகாரத்திற்கும் பதவிக்கும் பிரசித்திக்கும் அரசியலைப் பலர் பிரயோகித்த ஒரு சூழ்நிலையிலும், அவற்றில் நாட்டமின்றி, சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள் ஏழைகளுக்கு விடிவு காண விழைந்த ஓர் அரசியலுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர் அவர். அந்த அரசியல் நெறி பலமடைய வேண்டிக் கடுமையாக உழைத்தமையும், தொல்லைகள் நோய்களை உதாசீனஞ் செய்தமையும், ஏனையவர்களை நேசக் கரம் நீட்டி அணைத்துக் கொண்டமையும், ஏற்ற முயற்சிகளை உற்சாகப்படுத்தியமையும் திரு. சுப்பிமணியத்தின் சிறப்புகளாயின. மரணம் நெருங்கிவருவது பற்றிய உணர்வு தோன்றிய நிலையிலும் எடுத்தக் காரியங்களைச் செவ்வனே முடிக்க வேண்டுமென்ற துடிப்பே அவரிடம் மேலோங்கியது"(மே.கு.நூ).
               
 
 இலங்கையில் தமிழர் சார்ந்த விடுதலை இயக்கங்களை தோற்று வித்து அவற்றை தவறான திசையில் இட்டுச் சென்றதில் இந்தியாவிற்கு முக்கிய இடமுண்டு. இந்திய விஸ்தரிப்பு வாத்தின் ஒரு பகுதியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. இந்தியா இலங்கை தொடர்பில் மேற்கொண்டு செயற்பாடுகள் அனைத்தும் இலங்கையை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக்கும் பிராந்திய மேலாதிக்க தன்மையின் அடிப்படையிலேயே அமைந்து இருந்தது.

          கம்யூனிஸ்ட் கட்சி  இடது 1977 இல் நடைபெற்ற தேர்தல்கள் வரை அவற்றை   பகிஸ்கரித்தே  வந்தது. 1989 இல்,  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரதிபலிப்பாய், இந்திய இராணுவம், எம் தேசத்தினுள் செங்கம்பளம் விரித்து , அரசாலும், தமிழ் பாஸிச சக்கிகளாலும் வரவேற்க்கப்பட்டது.  அதன் பயனாய் மக்கள் பட்ட அவஸ்தை, அழிவு, இழப்பு  நாம் அறிந்ததே .அந்தநிலையில் 1989 இல் யாழ் - பண்டத்தெருப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு   சிறிமாவோ பண்டரநயக்காவை  வரவேற்றதுக்கு ஒரே காரணம் இந்திய விஸ்தரிப்புவாதமே ஆகும். . மணியத்தார் தலைமையில் நடைப்பெற்ற இக் கூட்டத்தில் குமார் பொன்னம்பலம், மோதிலால் நேரு, வினோதன் முதலானோரும் கலந்துக் கொண்டுள்ளனர். பெரும் தொகையான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்கள். இக் கூட்டத்தில்  மணியத்தார் 

"தமிழ் மக்களின் பிரச்சனை எது? எப்படி தீர்வு காணவேண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இன்று நாம் போராடும் அனைத்து சக்திகளுடனும் ஒன்றுபட்டு நிற்கிறோம் . தவிர சொந்த அபிலாசைகளுக்காகவோ , வேறு எதற்காவோ நாம்  இங்கு நிற்கவில்லை.. சிறிமாவோ இந்த ஒப்பந்தத்தை , இந்திய இராணுவத்தை அகற்ற முயல்வார் என்று நம்புகிறோம் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இன முண்பாட்டுக்கான தீர்வு என்பது இந்திய மேலாதிக்க நலனுக்கு அப்பால் அது இலங்iகை மக்களின் நலனை பிரதிப்பலிக்க வேண்டும் என்பதல் உறுதியாக இருந்துள்ளார். இக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கும்,  இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்கும் மத்தியில் உரையாற்றி விட்டு தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார்  என தோழர்களும் அவரது மனைவியும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். 

         பின்னர் கடும் சுகவீனமுற்று , மருத்துவ மனையில் இருந்து வெளிவந்து யாழ் - ஸ்டான்லி வீதியில் 1989-05-01  அன்று நடைப்பெற்ற  மே தினகூட்டத்தில்  "அரசு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறதென்றால்,  நாம் ஏற்கனவே கூறிய உண்மை "உண்மைதான்' என்பதை அதன்  விளங்கிக் கொள்ள முடியும் .நாம் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்கிறோம் .அதேநேரம் அது பூச்சண்டியாக அமையக்கூடும். அது உண்மையாக இரு இனங்களும்,  எமது நாட்டில்  சுதந்திரத்துடனும்,  இறையான்மையுடனும் வாழக்கூடியதான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும்  ஏற்ற வழி அமைக்கப்படவேண்டும். அதற்க்கு முன்பாகவே, வெலியோயா தனி மாவட்டமாக அமைப்பதைக் கைவிடவேண்டும். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்தி , ஏன் முற்றாகவே கைவிடவேண்டும் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இடது வலியுறுத்தி நிற்கிறது . இதன் மூலம் தான் பேச்சுவார்த்தைக்கு போகக் கூடிய ஸ்தாபனங்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையைத் தரும். பரஸ்பரம் விடுக்கொடுத்து பேச்சுவார்த்தையை   நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகமுடியும் . இதனைவிடுத்து இலங்கை அரசின் விருப்பத்தின் பேரிலோ, இந்திய அரசின் பேரிலோ ,ஒருதலைப்பட்ச முடிவுகளின் பேரிலோ ஏற்படுத்தப்படக்கூடிய தீர்மானங்களும், முடிவுகளும், ஆயுதங்களும் எமது தேசத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியாது . இதுவே எமது நிலைப்பாடாகும் ". எனக் குறிபிட்டுள்ளமை அவரது தன் முனைப்பறற நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை அரசு, இந்திய அரசு, ஏனைய விடுதலை அமைப்புகள் மூன்றும் ஒன்றுகதைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய வெற்றிகானக் கூடிய முயற்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும், அதைவிட்டு ஒன்றிற்கொன்று கழுத்தறுப்பு வேலைகளை செய்வதாக அமையும்.  எமது நாட்டிற்கும். மக்களுக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். ஆரம்பக் காலந் தொட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பீட்டர் கெனமன்,  விக்கிரமசிங்க போன்றோர் தலைமையிலும் சரி, பின்னர் கருத்துவேறுபாட்டு பிரிந்த பின்னரும் சரி 'அந்நிய தலையீடு ' பற்றி எச்சரித்தே வந்துள்ளனர்.  இதனை இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள்,   விடுதலை இயக்கங்கள் கவனத்தில் கொள்ள தவறிவிட்டன. 1983 இனக் கலவரத்தை சாதகமாக்கி இந்தியா தன்னுடைய விஸ்தரிப்பை ஆரம்பித்தது. அதனை இலங்கை அரசும் ஆதரிப்பது போன்றே நடந்துகொண்டது. இந்தப் பின்னணியில் ஒப்பந்தம்  உருவாகினது. இது பல வகையிலும் குழப்பமான ஒன்றாகவே காணப்பட்டது. சில விஷயங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிர்காலத்திற்கும் உதவக்கூடிய அம்சங்கள் உள்ளன. ஆனால் ஒப்பந்தத்தில் காணப்படும் பெரும்பான்மையான விடயங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சகல இலங்கை மக்களையும் பாதிக்கக் கூடியதே . எனவே இவ்வகையான பாதகங்களை எதிர்க்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என்பதில் மணியத்தார் உறுதியாகவே நின்றுள்ளார்.

         இந்தியாவின் தலையீட்டை  இடதுசாரிகள் ஆரம்ப கால முதலாகவே எதிர்த்து வந்திருந்த போதினும்  இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்ந்தம் என்ற காரணத்தினால்,  சில  விட்டுக் கொடுப்பை இலங்கை மக்கள் செய்யவேண்டியிருந்தது. அந்த விட்டுக்கொடுப்பும் .முத்தரப்புப் பேச்சுவார்த்தையுமே  தீர்வாக அமைய முடியும் என்பதை வலியுறுத்திய பின் தோழர் மணியம் மீண்டும் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டு கண்டியில் இருந்த காலத்தில் விடைபெற்றுக்கொண்டார்.   

         அரசியலில் மட்டுமன்றி இலக்கியத்திலும் அத்தகைய ஈடுபாட்டினையே  கொண்டிருந்தார். தாயகம் சஞ்சிகையின் தொடர் வெளியீட்டுக்கும் காரணமாயிருந்துள்ளார். தாயகம்  சஞ்சிகையின் இதழ்களுக்கு இறக்கும் வரை தொடர்ந்து அவர் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளார் என திருமதி.வள்ளியமை சுப்பிரமணியம், திருமதி. இரவீந்திரன் (மகள்) ஆகியோரும்  சொல்லக் கேட்டிருக்கின்றேன். அப்படியாயின் அவையாவும் தொகுக்கப்பட்டு அவரது 25 நினைவையொட்டியாவது வெளியிட வேண்டியது காலத்தின் தேவையாகும். மேலும் தேசிய கலை இலக்கிய பேரவை என்ற கலை இலக்கிய பண்பாட்டமைப்பை உருவாக்கி அதனூடே சமூகம் சார்ந்த பல செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார். இவ்மைப்பின் ஊடாக பலர் தமது சமூகம் சார்ந்த அறிவை பட்டைத்தீட்டிக் கொண்டதுடன் பல புதிய தலைமுறைகள் இலக்கியத்தில் பிரவேசம் கொள்ளவும் காரணமாக அமைந்திருக்கின்றார். விடுதலை சார்ந்த இலக்கியங்களை தாம் ரசித்து கற்றதாகவும் பின் அவற்றை ஏனையோர் கற்கும் படியும் வழிகாட்டி நின்றமைக் குறித்து பலர் பதிவாக்கியுள்ளனர்.   அரசியல் வாதிகள் தவிர்ந்து கலை இலக்கிய வாதிகளுடனும் நேசப்பூர்வமான உறவினை பேணிவந்துள்ளார் என்பதை கைலாசபதி, கவிஞர். இ. முருகையன், சி. தில்லைநாதன், மௌனகுரு, பெ.சு.மணி,  கே. கணேஷ் முதலானருடனான உறவுகள் எடுத்துக் காட்டுகின்றன.  இது பற்றிய பதிவுகளை , முருகையன், கே. கணேஷ்,  சி. தில்லைநாதன், சி. சிவசேகரம், அ. சண்முகதாஸ், திருமதி. சர்வமங்களம் கைலாசபதி,சி. பற்குணம், ஏ. ஜே. கனகரட்னா, ந. இரவீந்திரன் முதலானோரின் அஞ்சலிக் குறிப்புகள் வெளிக்கொணர்கின்றன. 

     அந்தவகையில் ஒருநாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு இலக்கியம் உயிர் நாடி என்பதை அடிக்கடி கே. ஏ. சுப்பிமணியம் எடுத்துரைத்தார். சீனாவின் அயல் மொழிப்பதிப்பகத்தால் 1976 தொடங்கி தமிழ் நூல்களை வெளியிடாமைக் குறித்து வருந்தியதுடன் அவர்கள் மீண்டும் அவற்றை வெளிவரச் செய்வதில் ஆரவங்காட்டினார். மறைவிற்கு இரு கிழமைகளுக்கு முன்னால் கொழும்பில் நடந்த நூற்களின் பொருட்காட்சியிற் கலந்துக் கொண்டதுடன், மீண்டும் தமிழில் சீன நூற்கள் வெளிவர வேண்டும் என்பதனையும் சீனத்தினின்று வந்திருந்த குழுவினரிடம் வற்புறுத்தியதாகத் தெரிகின்றது (கே. கணேஷ் ,மே.கு.நூ).

இவ்வாறே அவர் வாழ்ந்த காலத்தில் தேசிய கலை இலக்கிய பேரவையின் மூலம் சி. சிவசேகரம், இ. முருகையன், ந. இரவீந்திரன், க. தணிக்காசலம் முதலானோரின் நூல்கள் வெளிவருவதற்கும் மணியத்தார் காரணமாக இருந்துள்ளதை  இ. முருகையன் பதிவாக்கியிருக்கின்றார். இவ்வாறு இலக்கிய நேர்மையும் திறமையும் கொண்டு செயற்பட்ட அன்னாரின் இழப்பு இலக்கிய துறையிலும் பாதிப்பை செலுத்தியது எனக் கூறின் தவறாகாது. 

         யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது அறிவு-ஆற்றல்-செயற்பாட்டால் அவர் பிறந்த மண்ணை கடந்து தெலைத்தூரங்களிலும் செல்வாக்கு செலுத்த கூடியவராக இருந்தார். அவரது அரசியல் தத்துவம் நடைமுறை என்பன மலையகத்தில் வேர் கொண்டு கிளைப்பரப்பியது. ந. இரவீந்திரன் ஊடாக மலையககத்திலே மார்க்சிய அரசியல் சார்ந்த அணியொன்றினைக் கட்டியெழுப்பியிருந்தார்.  இது பற்றி அவரது இறப்பையொட்டி இலங்கை ஜனநாயக வாலிப முன்னணியின் மலையக கமிட்டி வெளியிட்ட செய்தியில் பின்வரும் பந்தி கவனத்தில் கொள்ளத்தக்கது:  
"1980 ஆம் ஆண்டு வாலிபர் இயக்கம் தலவாக்கொல்லையில் தமது மாநாட்டை நடத்திய போது அதில் கலந்துக் கொண்டு முக்கிய உரையாற்றினார். மாநாட்டின் தயாரிப்புக் கூட்டங்களை வாலிப இயக்கம் மலையகத்தின் பல்வேறு பாகங்களிலும் நடத்திய போது அப்பகுதிகளுக்கெல்லாம் சென்று தோட்டத் தொழிலாளர்களோடு உறவாடி உரமிட்டவர் தோழர் மணியம். பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டி மக்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகளை  வாலிபர் இயக்கம் முன் வைத்த போது  அதற்கான சரியான ஆலோசணைகளை வழங்கி பல பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வழி காட்டியவர் மணியம்.
        இவ்வகையில் மலையகத்தில் பின்னாட்களில் அரசியலில் பிரவேசம் கொண்ட  திருவாளர்கள். இ. தம்பையா  , ஜோன்சன், வ.விஜயரட்ணம் இன்னும் இது போன்ற பலர் இவரின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அத்துடன் மலையகத்தில் அரசியல் தொழிற்சங்க முரண்பாடுகளை கடந்து ஒரு வெகுசன மார்க்கத்தில் மக்களை ஒன்றினைக்கும் பணியும் கட்டியெழுப்பட்டிருந்தது.  
1964 இன் முற்பகுதியில் நடைபெற்ற ‘பதுளை மாநாட்டிற்காக நடந்த ஊர்வலத்தில் தலைமைத் தோழர்களான தோழர் -பீட்டர் கெனமன், தோழர் சரத் முத்தட்டுவேகம, தோழர் தர்மதாச இவர்களுடன் வடபிரதேச வாலிபர் சங்க செயலாள்ராக இருந்த தோழர் மணியம் அவர்களும் முன்னணியில் சென்று உரை நிகழ்தினார் (தகவல் .திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை). 
      இலங்கையில் இடதுசாரி இயக்க வளர்ச்சியிலே மணியத்தாருக்கு ஓர் உயர்ந்த இடமுண்டு என்பதில் ஐயமில்லை. ஆயினும் அவர் பற்றிய நினைவுக் குறிப்புகள் மதிப்பீடுகள் ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அவரது எழுத்துக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும். அவர் பற்றிய தேடல்களும் ஆய்வுகளும் பெருக வேண்டும். அப்போது தான் தோழர் மணியத்தின் முக்கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். 
இலக்கிய- சமூக தளம்: படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்(அச்சில்) என்ற நூலிருந்து.........நமது மலையகம்  http://www.namathumalayagam.com/2013/12/blog-post_23.html

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF