Sunday, December 20, 2015

தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 26 ம் ‌ஆண்டு நினைவு யாழ்ப்பாணத்தில்.........




பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே.ஏ சுப்பிரமணியத்தின் 26 வது நினைவுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது தோழர் க. தணிகாசலம் தலைமையுரை ஆற்றுவதையும் கிழக்கு லண்டன் பல்கலைக் கழக சமூகவியல் மானிடவியல் ஆய்வாளர் பரஞ்சோதி தங்கேஸ் அவர்கள் “முரண்பாடு புலப்பெயர்வு சாதி உருமாற்றம்”என்ற தலைப்பில் நினைவுச்சொற்பொழிவு ஆற்றுவதையும் நிகழ்வில் கருத்துரைப்போரையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.

















Monday, November 30, 2015

26th Anniversary in Colombo கே.ஏ.சுப்பிரமணியத்தின் 26 ம் ‌ஆண்டு நினைவு நிகழ்வில்.........

தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 26 ம் ‌ஆண்டு நினைவு நிகழ்வில் (2015.11.29)
“இனப்பிரச்சினைக்கான தீர்வில் இணக்க அரசியலும் எதிர்ப்பு அரசியலும்.” என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவினை ஆற்றிய போது..


Sunday, November 29, 2015

மரணத்தின் எல்லைகளில் வாழும் எனக்கு- உன் வாழ்வு ஓர் உந்துசக்தியே!

கானுயர்ந்த மரங்களினால் மழைநீர் பொழிவதுபோல்
வானுயர்ந்த  கோபுரங்கள் வனப்புடனே மிளிர்வதுபோல்
நாணுயர்ந்த அம்புகள்போல் நாட்டிலுள்ள தோழமையால்

தானுணர்ந்த சேவையதால் தரணியிலே வாழுகிறீர்......

கார்த்திகையின் கைவிரிப்பு - காலனையும்
கட்டி அனணத்துக் கொண்டதா?
மானுட நேசத்தின் பசுந்தளிரை
பாதியில் பிரிந்து - கால் நூற்றாண்டு ஓடினவோ?
மணியம் என்றால் மனிதம் என்றும் ;
மடமை கொண்டோர் - கண்டஞ்சும்
மாவீரன் என்றும்
மார்தட்டி கொண்டோமே!
ஆதிக்க வெறியின் கயமையை- எதிர்த்து
அஞ்சாமையின் அர்தம் சொன்னவன் - நீ !
ஒடுக்குமுறையை துவம்சம் செய்தது - வரலாறே!
இரத்தம் தோய்ந்த  வெண்கொடிக்கு -  தான்தெரியும்
வெற்றிக்கு வலிகள் தேவை என்று!
உழைப்பாளியே தேசத்தின் உந்து சக்தி
பாட்டாளியே பார் ஆளவேண்டுமென
பால்ய வயதின் - பார்வையை
தேடி படித்த நூல்களும் தூண்ட
பொதுவுடமைக்குள் ஐக்கியமானாய்!
இரும்புக்கரம் கொண்டு
துப்பாக்கிகள் - கொடும் கொலை புரிய
நிதர்சனத்தின் நிஜம் புரியாது
மந்தையாக்ப்பட்ட மனித கூட்டத்தில்
மௌனம் காப்பரண் ஆகியது!
வரலாறுகள் திரிக்கப்பட்டாலும்
உன் வாழ்வின் நேர்மை
என்றோ வரலாறாகும்!
மானிட வாழ்வியலின் உன்னதற்கான
உன் போராட்டத்தில்
நானும் எறும்பென இறும்பூதுகின்றேன்
நீளும் நினைவுகளும்
நீடிக்கும் கண்ணீருமாய் காலம் ஓட
மரணத்தின் எல்லைகளில்
வாழும் எனக்கு- உன் வாழ்வு ஓர்
உந்துசக்தியே!

வள்ளியம்மை சுப்பிரமணியம் 27 November 2015

மக்களுக்கான செயலுறுதியும் நேர்மையும் கொண்ட அரசியல் வாதியாக வாழ்ந்தவர்.......

இலங்கை அரசியற்களம் ஏராளமான அரசியல்வாதிகளைக் கண்டுள்ளது. அதில் பெரும்பான்மையானோர் அதிகாரத்திற்கான ஆவலில் அரசியலுக்குள் நுழைந்தவர்கள். விதிவிலக்கானவர்களில் பலரை அதிகாரத்ததுக்கான ஆவல் விட்டுவைக்கவில்லை. இறுதிவரை தான் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் ஒருசிலரே. அதிலும் அதிகாரத்துக்கெதிரான உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்த குரல்களுள் குறிப்பிடத்தக்கது தோழர் மணியம் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுகின்ற கே.ஏ. சுப்பிரமணியத்தின் குரலாகும்.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (இடது) இன்றைய புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஆரம்ப பொதுச் செயலாளராவார். தோழர் என். சண்முகதாசனின் தலைமையிலிருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீங்கி புதிய கட்சியைக் கட்டியதில் அவரின் பங்களிப்பு தனித்துவமானது. அவ் வகையில் அதன் தலைவராக அவரது முன்னெடுப்புகள் நினைவுகூரத்தக்கவை. இலங்கை மக்களின் விடுதலைக்குரிய பாதை புதிய ஜனநாயகப் புரட்சி மற்றும் சோஷலிஸ புரட்சி என்ற இரண்டு புரட்சிகர காலகட்டங்களையும் கொண்டதெனவும் அவற்றை பாட்டாளி வர்க்க கட்சியே முன்னெடுக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டே புதிய கட்சி கட்டப்பட்டது. தேசிய இனங்களின் விடுதலை புதிய ஜனநாயகப் புரட்சியின் நிகழ்ச்சி நிரலாக முன்வைக்கப்பட்டபோது தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டமும் தேசிய இனப்பிரச்சினைக்குரிய குறைந்தபட்சத் தீர்வும் உடனடி தேசிய ஜனநாயக வேலைத்திட்டத்திக்குள் அடக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியவர் கே.ஏ. சுப்பிரமணியம் ஆவார்.
தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான இலங்கை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் புரட்சிகரப் போராட்டப் பார்வையில் புரட்சிகரமானதாக கொள்ள முடியாவிட்டாலும் அது இன ஒடுக்கலுக்கு எதிரான தேசிய ஜனநாயகப் போராட்டமே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலே தமிழ் மக்கள் மீதான அரசின் இராணுவ நடவடிக்கைகள் பொருளாதாரத்தடை என்பவற்றை எதிர்த்து வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்தது முதல் 'மனித உரிமைகளுக்கான வெகுஜன இயக்கம்' போன்றவற்றுக்கு வழிகாட்டியது வரை அவரது பணி நீண்டது.
புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதிலும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் மாக்சிசம் லெனினிசம் மாஒசேதுங் சிந்தனையை நமது நாட்டின் சூழலுக்கு உரியவாறு பொருந்தச் செய்வதிலும் தேசிய இனப் பிரச்சினை பற்றிய புரிதலிலும் அவருக்கிருந்த அக்கறையும் செயற் திறனும் மெச்சத்தக்கவை.
கம்யூனிசப் போராளியிடம் குடிகொண்டிருக்கக் கூடிய சிந்தனைத் தெளிவு, உறுதி, நிதானம், வீரம், எளிமையான வாழ்வு இறுதிவரை எதிரி வர்க்கத்திற்கு அடிபணியாமை போன்ற யாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருந்ததாலேயே அவரால் ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டி எழுப்பி வழிநடத்தக் கூடிய தலைமைப் பாத்திரத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்தது.
அவரது தலைமையின் இரு முக்கிய குறிகாட்டிகளை நினைவுபடுத்தல் தகும். முதலாவது தத்துவத்திலும் நடைமுறையாலும் உறுதியும் நிதானமும் மிக சரியானதோர் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி எழுப்புதற்கான போராட்டத்தை முன்னனெடுத்தமை. இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் ரொஸ்கியிசம் செலுத்தி வந்த பாதிப்புகளின் மத்தியில் மேற்குறித்த போராட்டம் மிகக் கடுமையானதாகவே இன்றுவரை இருந்துவருகின்றது. ரொஸ்கிசத்தின் பாதிப்புடன் பாராளுமன்ற சந்தர்ப்பவாதம் இழைத்த தவறுகள் நமது தேசத்தின் பிரத்தியேக நிலமைகளுக்கேற்ற ஒரு பாட்டாளி வர்க்க கட்சியை கட்டி வளர்க்கும் சூழலைப் பின்தள்ளியது. இருந்த போதிலும் சரியானதோர் கட்சியை கூட்டி எழுப்பும் பணியில் கே.ஏ. சுப்பிரமணியம் இறுதிவரை சளைக்காது போராடி அதற்கான அடித்தளத்தை வெற்றிகரமாக இட்டு சென்றார்.
இரண்டாவது, ஒரு சரியான கட்சியைக் கட்டி எழுப்பி விட்டுத்தான் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்காது கட்சியை கட்டி எழுப்பும் அதேவேளை புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களே அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து முன்னெடுப்பதில் மிக முனைப்புடன் செயல்பட்டவர்.
இப்பின்னணியில் தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை அக்கால நிகழ்வுகளுடன் ஒப்புநோக்கின் அதன் பெறுமதி விளங்கும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் பொதுப்பட இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும் ஐக்கியமும் போராட்டமும் பற்றிய பல பாடங்களை நாம் கற்கலாம். 1953ல் ஹர்த்தால் போராட்டத்தின் வெற்றி போராட்ட ஐக்கியத்தின் வெற்றி அந்த வெற்றியின் தொடர்ச்சியாகப் பாட்டாளிவர்க்கத் தலைமையில் பரந்துபட்ட ஒரு ஐக்கியம் கட்டியெழுப்பப்படவில்லை. அதற்காக இலங்கையின் இடதுசாரி இயக்கம் கொடுத்த விலை அதிகம்.
1963ல் 21 கோரிக்கைகள் மீது கட்டியெழுப்பப்பட்ட தொழிளாளர் ஐக்கியத்தைப் பதவி ஆசை காட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் குலைக்க முடிந்ததென்றால் அது நமது இடதுசாரி இயக்கத் தலைமைகளின் வருந்தத்தக்க நிலைமைக்கு ஒரு சான்றே ஒழிய பாராளுமன்றம் வேறல்ல. வலது சந்தர்ப்பவாதம் இவ்வாறு பாட்டாளி வர்க்கப் போட்டத்தைக் காட்டிக் கொடுத்தது என்றால், மறுபுறம், இதை வைத்து கொண்டு வரட்டுத்தனமான மாக்சியத்தை நடைமுறைபடுத்தியதன் விளைவாக, 1963 முதல் 1968 வரை வலிமை பெற்று வந்த மாக்சிய லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி வலுவிழந்தது. இதற்குச் சிங்களப் பேரினவாதத்தின் எழுச்சியும் அதன் எதிர் வினையாகக் குறுகிய தமிழ்த் தேசியவாத அரசியலின் வளர்ச்சியும் அளித்த பங்கு பெரியது.
ஜே.வி.பி. போன்ற ஒரு இயக்கத்தால் சிங்களப் பேரினவாத அரசியலை மாக்ஸிய மயக்கத் தோற்றத்துடன் முன்னெடுக்க இயலுமானதற்கு மாக்ஸிய லெனினியத் தலைமையின் போதாமையின் பங்கை நாம் அலட்சியம் செய்ய இயலாது. கடந்த 80 ஆண்டுகால இடதுசாரி இயக்க வரலாற்றில் கற்ற முக்கியமான பாடமாகவே ஜக்கியமும் போராட்டமும் கொண்ட போராட்ட ஜக்கியக் கொள்கையை நாம் அடையாளங் காணலாம். கொள்கை அளவிலும் நடைமுறையிலும் இதைக் குழப்பமின்றிக் கடைப்பிடித்த ஒரு மாக்ஸிய லெனினியவாதி என்ற வகையில் கே. ஏ. சுப்பிரமணியம் முதன்மையானவர். இதனாலேயே இடதுசாரி இயக்கம் இலங்கையில் கண்ட மோசமான பின்னடைவுகளுக்குப் பின்னும் ஒரு மாக்சிய லெனினிசக் கட்சியைக் கட்டியெழுப்ப இயலும் என்பதை அவர் செய்து காட்டினார்.
இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றின் முக்கியமான மைல்க்கல் சாதியத்துக்கெதிரான போராட்டமாகும். இதை முன்னின்று தலைமையேற்று வெற்றிகரமாக நடாத்திய பெருமை கே.ஏ. சுப்பிரமணியத்தை சாரும். புரட்சிகரக் வெகுஜனப் போராட்டங்கள் நடைமுறையினின்று தான் உருவாகின்றன. அவ்வகையிலேயே 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடே ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ தோற்றம் பெற்றது. சாதியத்துக்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு புறம் காட்டிக்கொடுப்பும் எதிரியுடனான சமரசமும் சிலரால் முன்னெடுக்கப்பட்டது. மறுபுறம் சாதியத்திற்கு எதிரான போரட்டத்தைச் சாதிகளிடையிலான போராட்டமாக்கும் ஒருவகையான போலி இடது தீவிரவாதமும் போராட்டத்தை தனிமைப்படுத்த முற்பட்டன. இவற்றுக்கிடையே. இவற்றை முன் வைத்த சக்திகளுடனுங் கூடப் போராட்டமும் ஐக்கியமும் என்ற பாதையில் இணைந்து செயற்பட்டதன் மூலமே சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் சாதிய எல்லையை மீறி ஒரு வர்க்கப் பரிமாணத்தையும் ஒரு பரந்து பட்ட வெகுஜனப் போராட்டப் பண்பையும் பெறலாம் என தனது செயல் வடிவத்தின் மூலம் கே.ஏ. சுப்பிரமணியம் நிரூபித்தார்.
கே.ஏ. சுப்பிரமணியத்திடம் இருந்து இன்னொரு முக்கிய பண்பு நட்புச் சக்திகளை இனங்கண்டு அவர்களையும் அரவணைத்துப் போகும் இயல்பு. மனிதர்கள் என்போரிடம் ஆற்றல்களும் திறமைகளும் நிறையவே உண்டு. ஆனால் அவை ஒரே மாதிரியானவை அல்ல. வௌவ்வேறு வகைபட்ட திறமைகள் ஒவ்வொன்றும் அவற்றுக்குரிய தளங்களில் ஊக்குவிக்கப்பட்டு வெளிக் கொணரப்படும் போது அவை சமூகத்தின் முன் னோக்கிய வளர்ச்சிக்கு உதவுகின்றன.
அவ்வாறே ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கட்சியின் வளர்ச்சிக்கும் அதன் தலைமையிலான போராட்டங்களுக்கும் மனிதர்களின் திறமைகள் பயன்படுத்தப்படுதல் வேண்டும் அதில் கட்சிக்கு உள்ளே இருப்பவர்களது திறமை மட்டுமன்றி கட்சிக்கு வெளியே உள்ளவர்களின் திறமைகளை பெற்றுப் பயனடைவது ஒரு கட்சி தலைமைக்கு முக்கிய பொறுப்பாகும்.
அந்த வகையில் கே.ஏ. சுப்பிரமணியம் பலதரப்பட்டவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றைக் கட்சிக்கும் அதன் போராட்டங்களுக்கும் நன்கு பயன்படுத்தினர். கட்சியில் உள்ளவர்கள், கட்சிக்கான நண்பர்கள், கட்சிக்கு அப்பால் உள்ள ஆனால் கட்சி விரோதமற்றவர்கள் என அவர்களை மூன்றுபிரிவினராக அடையாளப்படுத்தி தனது வேலை முறையை முன்னெடுத்தவர். இந்த மூன்று தரப்பினரையும் அவர்களுக்கு உள்ள திறமைகள் ஆற்றல்கள் என்பவற்றை ஆராய்ந்து பொறுமையாக அவர்களுடன் பழகி அவர்களது திறமைகளை ஊக்குவித்தவர். பின்பு கட்சி அத்தகையவர்களிடமிருந்து பெறக்கூடிய வேலைகளை ஒழுங்குப்படுத்தி பெற்றுக் கொள்ளும் திறமை அவரிடமிருந்தது.

இவ்வாறு அவர் உருவாக்கிய உறவுகளில் பேராசிரியர் க. கைலாசபதியுடனான உறவு முக்கியமானது. பேராசிரியர் கைலாசபதியுடன் ஆரம்ப காலம் தொட்டு பிணைப்பு இருந்து வந்த அதேவேளை கட்சியின் அரசியல் இதழ்களில் கைலாசபதியின் கட்டுரைகள் தொடர்ச்சியாக வந்தமைக்கு கே.ஏ. சுப்பிரமணியத்தின் அணுகுமுறை ஒரு முக்கிய காரணம்.
கட்சியின் நிலைப்பாட்டுடன் முழுமையாக உடன்படாதவர்கள் பலர் நட்புச்சக்திகளாக இருக்கின்ற நிலையில் அவர்களுடன் நெருங்கிப் பழகி பயனுள்ள விடயங்களை பெறும் இயல்புக்கு ஏ.ஜே. கனகரட்ணாவுடன் கே.ஏ. சுப்பிரமணியத்துக்கிருந்த நட்பைக் குறிப்பிடலாம்.

கே.ஏ. சுப்பிரமணியம் பெயரளவிலான ஒரு கம்யூனிஸ்டாகவோ,இன்றைய சமூகத்தின் கொடுரங்களுடன் இணங்கிப் போய் தனது சொந்த வாழ்வை மேம்படுத்தியோ, அன்றி கம்யூனிச மேற்கோள்களை வரட்டுத்தனமாக உச்சாடனம் செய்து கொண்டோ வாழ்ந்து வந்த ஒருவரல்ல.
அதிகார பீடத்தில் அமர்ந்தவர்களுக்கும் ஆயுத பலத்தை மாத்திரமே நம்பியிருப்பவர்களுக்கும் மாறான அரசியல் நிலைப்பாட்டை மேற்கொள்ளும் ஒருவருக்கு அசாதாரண துணிச்சல் அவசியமாகும். சிறுபான்மையோரின் நலன் காக்கும் நோக்குடன், பெரும்பான்மையோரின் இனவிரோத நிலைகளை மறுக்கும் அதே சமயத்தில் குறுகிய இனவுணர்ச்சி அலைகளுடன் அள்ளுப்பட்டுப் போகாமல் இருப்பதற்கு வெறும் மனவுறுதி மட்டும் போதாது. அதற்கும் மேலான செயலுறுதியும் தளராத நம்பிக்கையும் நோக்கும் அவசியம். இவை அனைத்தையும் ஒருங்கே கொண்டமைந்த போராளியே தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் ஆவார். தனது சொல்லாலும் செயலாலும் புரட்சிகர வாழ்வை வாழ்ந்து வழி காட்டலையும் வழங்கிச் சென்ற ஒரு உயர்வான கம்யூனிஸ்ட் போராளியாக வாழ்ந்து மறைந்தவர் என்பது மிகையல்ல.
தமிழ்மகன் ( Thanks to Thinakkural ) 

Tuesday, November 24, 2015

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 26வது நினைவு நிகழ்வு Comrade K. A. Subramaniam: 26th Anniversary Event

Comrade K. A. Subramaniam: 26th Anniversary Event

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 26வது நினைவு நிகழ்வு
29.11.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப.04 மணிக்கு 
தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம் 
(121, ஹெம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை)

கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு

Comrade K.A. Subramaniam: 26th Anniversary Event

29.11.2015 Sunday at 04.00 pm
Venue:
National Arts Council of Literary's
Kailasapathy Auditorium 
(121, Hampden Lane, Wellawatte Colombo 06)

KA  Subramaniam Memorial Committee

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF