Sunday, April 22, 2018

50 ஆண்டுகளுக்கு முன்னரான சம்பவமொன்றை இவ்வேளையில் நினைவுகூருவது பொருத்தமானது-ஈ. ஆர். திருச்செல்வம்

 

தொழிலாளர் உரிமையை நிராகரிப்பதா? பனங்காட்டான்- ஈ. ஆர். திருச்செல்வம்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரான சம்பவமொன்றை இவ்வேளையில் நினைவுகூருவது பொருத்தமானது என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

"1965 முதல் 1970 வரையான காலத்தை இலங்கையின் முதலாவது தேசிய அரசாங்கம் ஆட்சி புரிந்தது. இதன் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க இருந்தார். இவரது தேசிய அரசில் அங்கம் வகித்த பிரமுகர்கள் எவரும் இப்போது அரசியலில் இல்லை.

1969ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினமன்று வெசாக் தினமும் ஒன்றாக வந்தது. பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கள அரசாங்கம் மே தினத்தை உத்தியோக பூர்வமாகத் தடைசெய்தது. பிரதான அரசியற் கட்சிகள் அனைத்தும் இதனை ஏற்றுக் கொண்டன.

 தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக செனட்டர் மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக பதவி வகித்தார். இதனாலோ என்னவோ, தமிழ் அரசுக் கட்சி  அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக் கொண்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் இலங்கையின் அதிகாரபூர்வ மதம் என்பதை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டதை இதனூடாகப் பார்க்கலாம்.



ஆனால், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை அரசாங்கத்தின் இந்த முடிவை முழுமையாக எதிர்த்தது. மே முதலாம் திகதியே யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்தப்படுமெனவும் அறிவித்தது.


இதற்கு பொலிஸ் அனுமதி கிடைக்கவில்லை. அதனை ஏற்றுக் கொள்ளாத மேற்படி யாழ்ப்பாணக் கிளையின் செயற்பாட்டாளரான கே.ஏ. சுப்பிரமணியம் மே தின ஏற்பாடுகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.


இதனால் பொலிசார் தீவிரமான செயற்பாட்டில் இறங்கினர். எக்காரணம் கொண்டும் யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்த அனுமதிக்கக்கூடாதென்ற உத்தரவு கொழும்பிலிருந்து வடமாகாண பொலிஸ் சுப்பிரிண்டனுக்குப் பிறப்பிக்கப்பட்டது.


அப்போது பொலிஸ் சுப்பிரிண்டனாக ஆர். சுந்தரலிங்கம் பணிபுரிந்தார். குடாநாட்டு ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சாமர்த்தியசாலி இவர். உதவி பொலிஸ் சுப்பிரிண்டனாக ஆர்.தவராசா இருந்தார். மிகக்கடும்போக்கான, ஆனால் நேர்மையான அதிகாரி இவர்.

 


அவ்வேளை நான் (ஈ. ஆர். திருச்செல்வம்) யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக இருந்தேன். அமரர்களான செல்லத்துரை (வீரகேசரி), பரராஜசிங்கம் (தினகரன்), கதிரவேலு (டெய்லி நியூஸ்), புஸ்பரத்தினம் (டெய்லி மிறர்), அரசரத்தினம் (தினபதி) ஆகியோர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களாக அப்போது பணிபுரிந்தனர்.


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சுப்பிரமணியம் ஊடகவியலாளர்களுடன் அந்நியோன்யமாகப் பழகுபவர். சீனப் படங்களுடனான கலண்டர்கள், பலவர்ண அச்சுப் புத்தகங்கள் போன்றவற்றை வருடாவருடம் அன்பளிப்பாக வழங்குபவர்.


இதனால், இவர்கள் நடத்தவுள்ள மே தினக்கூட்ட இடத்தை அறிவதற்காக பொலிஸ் சுப்பிரிண்டன் ஊடகவியலாளரான எங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார்.



மே மாதம் முதலாம் திகதி எங்களை எங்கள் அலுவலகத்திலேயே இருக்குமாறும், உரிய நேரத்தில் தாம் தொடர்பு கொள்வதாகவும் திரு. சுப்பிரமணியம் ஏற்கனவே எம்மிடம் கூறியிருந்தார். அன்று காலையிலிருந்து நானும் மற்றைய ஊடகவியலாளர்களும் அவரது தொலைபேசி அழைப்புக்காக அதனருகில் தவம் கிடந்தோம். (அப்போது செல்லிடத் தொலைபேசிகள், முகநூல்கள் கிடையாது).


மறுபுறத்தில், வெளிமாகாணங்களிலிருந்து 2000க்கும் அதிகமான பொலிசார் யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தனர். கலகம் அடக்கும் பொலிசாரும் ஒருபுறத்தில். யுத்த பூமிபோல யாழ்ப்பாணம் அன்று காட்சியளித்தது.


குடாநாட்டில் சாதி ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்றவைகளில் நீண்டகாலமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். சங்கானையில் நிற்சாமம், தென்மராட்சியில் மந்துவில், வடமராட்சியில் நெல்லியடி, வலிகாமம் வடக்கில் மாவிட்டபுரம், யாழ்நகரில் ஆரியகுளத்தடி என்பவை இவர்களின் போராட்டக் கோட்டைகளாக விளங்கிய இடங்கள்.

இதனால், இவ்விடங்களில் மே தின ஊர்வலமோ கூட்டமோ நடத்தப்படலாமென்ற சந்தேகத்தில் பெருமளவான பொலிசார் ஆயுதபாணிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.


மாலை சுமார் ஐந்து மணிவரை எந்தவித அசமாத்தமும் இல்லை. யாழ்நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது, ஆங்காங்கே பொலிஸ் ஜீப் வண்டிகள் உறுமிக் கொண்டு திரிந்தன. சுப்பிரமணியம் அவர்களின் தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்து நாம் களைத்துப் போயிருந்தோம்.


ஐந்தேகால் மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் வின்ட்சர் தியேட்டர் அமைந்திருக்கும் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதிச் சந்திக்கு வருமாறு ஓர் அநாமதேயக் குரல் தெரிவித்தது. அடுத்த விபரம் கேட்பதற்கிடையில் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சிலவேளை இது பொலிசாரின் தந்திர யுக்தியாக இருக்கலாமோவெனவும் எண்ணத் தோன்றியது. ஆனாலும் அந்தத் தொலைபேசி அழைப்பை நிராகரிக்க முடியவில்லை.


இரண்டு நிமிடங்களில் நான் அவ்விடத்துக்குச் சென்றுவிட்டேன். மற்றைய பத்திரிகை நண்பர்களும் இளைக்கக் களைக்க வந்த சேர்ந்தனர்.


 வின்ட்சர் தியேட்டரும் ராஜா தியேட்டரும் அச்சந்தியில் எதிரும் புதிருமாக உள்ளன. பிற்பகல் ஐந்தரை மணியளவில் இரண்டு தியேட்டர்களிலும் 2:30 மணி பகல் படக்காட்சி முடிந்து சுமார் 500க்கும் அதிகமானவர்கள் வெளியே வந்தனர். வழக்கமாக படம் பார்க்க வரும் கூட்டமென்று நாம் நினைத்தோம்.


இரு அணியினரும் ஒன்றாக இணைந்து தங்கள் பொக்கற்றுக்குள் இருந்த சிவப்புத் துணிகளை மேலே உயர்த்தியவாறு திடீரென "தொழிலாளர் வாழ்க" என கோசமெழுப்பினர். எங்கிருந்து வந்ததோ தெரியாது, சிவப்புத் துணியில் எழுதப்பட்ட "தொழிலாளர் தினம்" என்ற பெரிய பதாதையை முன்னால் தாங்கிக் கொண்டு இருவர் செல்ல அந்தக் கூட்டம் அவர்கள் பின்னால் வேகமாகக் கோசமிட்டவாறு ஓடிச் சென்றது.


கஸ்தூரியார் வீதி, பள்ளிவாசல் ஒழுங்கை, சப்பாத்துக்கடை ஒழுங்கை, மலாயன் கடைச் சந்தி என்று சகல குறுக்கு ஒழுங்கைகளாலும் ஆறு ஓடுவதுபோல ஆர்ப்பாட்டமிட்டவாறு அவர்கள் ஊர்வலமாகப் பாய்ந்து பாய்ந்து சென்றனர்.


சத்திரத்துச் சந்தி தாண்டி யாழ்ப்பாணம் பெரிய தபாற் கந்தோரடியை (முற்றவெளியின் முன்னால்) ஊர்வலத்தின் முற்பகுதி தாண்டும்போது கே.ஏ. சுப்பிரமணியமும் மற்றும் முக்கியஸ்தர்களும் அங்கு காணப்பட்டனர்.


சில நிமிடங்கள் தாண்டியிருந்தால் ஊர்வலம் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்திருக்கும். அதற்கிடையில் பெரிய ட்ரக் வண்டிகளில் பொலிசார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அவர்களின் குண்டாந்தடிகள் ஊர்வலகாரரை பதம் பார்த்தன. கண்ணீர் புகை பிரயோகம் செய்யப்பட்டது.


கீழே விழுந்த சுப்பிரமணியம் அவர்கள்மீது இலக்கு வைத்து பொலிசார் தாக்கினர். அவர் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார். ஆனாலும் ஊர்வலத்தினர் அச்சமடைந்து திரும்பிச் செல்லவில்லை. அவ்விடத்திலேயே அமர்ந்துவிட்டனர்.


சுப்பிரமணியம் அவர்களை நிலத்தில் இழுத்துச் சென்ற பொலிசார், எதிரே வந்த பஸ் வண்டியின் முன்னால் தூக்கி வீசினர். பஸ் வண்டி அவர்மீது ஏறாத குறை.


பொலிசாரைப் பொறுத்தளவில் மே தினக்கூட்டம் தடுக்கப்பட்டதென்ற நிம்மதி. ஆனால், அதனை ஏற்பாடு செய்தவர்களைப் பொறுத்தமட்டில் வெசாக் தின பிரகடனம் முறியடிக்கப்பட்டு தொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக வெற்றி கண்டது என்ற பெருமை.


இங்கு குறிப்பிடக்கூடிய முக்கியமான ஒன்று, அதனை ஏற்பாடு செய்தவர்களின் அபாரமான திட்டமிடல். எவருக்கும் ஒருபோதும் தெரியாதவாறு சுமார் 500 பேரை பகல் படக்காட்சிக்கு இரண்டு தியேட்டர்களுக்கும் உள்ளே அனுப்பியதும், அவர்களது பொக்கற்றுகளுக்குள் மறைத்து வைத்திருக்கும் வகையில் சிவப்புத் துணிகளைக் கொடுத்தனுப்பியதும் வித்தியாசமான ஏற்பாடு.  எக்காரணம் கொண்டும் இதனை முற்கூட்டியே கண்டுபிடிக்க முடியாமல் போனது பொலிசாரின்  புலனாய்வுக்குக் கிடைத்த படுதோல்வி.


நேர்த்தியாக ஏற்பாடான இந்தப் பேரணி, சுமார் ஐந்து நிமிடத்துக்குள் ஒரு மைல் தூரத்தை பாய்ந்து பாய்ந்து சென்று முன்னேறியது பொலிசாரின் கண்களுக்குள் எண்ணெய் ஊற்றியதுபோல.  ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டும் பேரணி ஆரம்பமாவதைத் தடுக்க முடியாமல் போனது தொழிலாளர்களுக்குக் கிடைத்த வெற்றி.


அன்றைய தாக்குதலில் படுகாயமுற்ற திரு.சுப்பிரமணியம் யாழ். மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை பெற்றபின் சீனா கொண்டு செல்லப்பட்டு மேற்சிகிச்சை வழங்கப்பட்டது.


அன்று வெசாக் நாளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின நிகழ்வுக்கும், இவ்வருடம் வெசாக் நாளில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்த தீர்மானித்திருப்பதற்கும் இடையில் அரசியல்ரீதியாக எந்த ஒருமைப்பாட்டையும் காணமுடியவில்லை.


யுத்த வலியிலிருந்து மீள முடியாது தவித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில், காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர் மத்தியில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணம் சென்று எதற்காக மே தினத்தை நடத்த வேண்டும்?


கொள்கைப்பிடிப்பும் ஆத்மசுத்தியும் இருந்தால் இவர்கள் தங்களுடைய மே தின நிகழ்வை வெசாக் தினத்திலன்று தெற்கிலுள்ள ஏதாவதொரு நகரில் ஏன் நடத்தக்கூடாது?"-ஈ. ஆர். திருச்செல்வம்

The above was Written by "பனங்காட்டான்" on April 22, 2018  - ஈ. ஆர். திருச்செல்வம்






My reply below as follows with some minor corrections for the above article:

நண்பர் மூத்த பத்திரிகையாளர் ஈ. ஆர். திருச்செல்வம், தங்கள் வரலாற்றுப் பதிவுக்கு மிக்க நன்றி. எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1969 ஆண்டு மே நாள் நிகழ்வு பௌத்தர்களின் புனித நாளான வெசாக் நாளன்று வந்ததால் அன்று மே தினப் பேரணிகளுக்கு அன்றைய டட்லி சேனநாயக்க அரசு தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை மீறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் கொழும்பில் பெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். எஸ். டி. பண்டாரநாயக்கா, டி.கே.டி ஜினேந்திரபாலா, மற்றும் வாட்சன் பெர்னாண்டோ ஆகியோர் மே 1, 1969 அன்று கொழும்பில் கைது செய்யப்பட்டனர். நண்பர் மூத்த பத்திரிகையாளர் எஸ். எம்.கோபாலரத்தினம், தோழர் மணியம் பற்றி எழுதிய 1989 குறிப்பை மீண்டும் வாசித்தேன்.... https://sathiamanai.blogspot.com/2017/12/blog-post.html வேற்று அரசியலும், வேறு தளத்திலும் இருந்து உண்மைகளை எழுதியது , மிகுந்த ஆறுதலைத் தந்தது. உண்மைகள, தியாகங்கள் புதைந்தழிந்து போகா. …... "அன்றைய தாக்குதலில் படுகாயமுற்ற திரு.சுப்பிரமணியம் யாழ். மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை பெற்றபின் சீனா கொண்டு செல்லப்பட்டு மேற்சிகிச்சை வழங்கப்பட்டது."- நான் இதை எழுதுவதன் நோக்கம் என்னவென்றால், தோழர் மணியம் 1969ஆம் ஆண்டு மேதினத்தில் படுகாயப்பட்டதும், அவருக்கு தோழர் சண்முகதாசன் தனது வீட்டில் வைத்து வைத்தியம் செய்ததும் முன்னர் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் தோழர் மணியத்தை வைத்தியத்திற்காக சீனாவுக்கு அனுப்ப தோழர் சண்முகதாசன் பல முயற்சிகள் எடுத்தாராம். ஆனாலும் அம்முயற்சிகள் கைகூடவில்லை. இது தோழர் சண்ணுக்கு, சீனக் கட்சி மீது விசனத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் இருந்து சீனா பற்றிய அவரது கண்ணோட்டம் மாற்றமடைய தொடங்கியது. தோழர் மணியம் தனது உடல் நலம் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கிடையே சீனா பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. தன்னை முன்னிலைப்படுத்திய எந்த ஒருவிடயத்தையும் அவர் விரும்பியிருக்கமாட்டார். அன்று தோழர்களுடன் சேர்ந்து கைச்சாத்திட்ட 1963 ஆண்டு உடன்படிக்கையின்படி தனது மனச்சாட்சிக்கு ஏற்ப சுயநலமின்றி தோழர் மணியம் வாழ்ந்து மறைந்தார்.-வள்ளியம்மை சுப்பிரமணியம்


-Valliammai Subramaniam 29 Nov 2020.



English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF