Sunday, May 24, 2020

கலைமகள் வீதி அரியாலை ஞானவைரவர் திருவூஞ்சல் பாடல்கள்........



என்னை தூக்கி வளர்த்த மாமாவின் பிள்ளைகளும்,அவர் தம் பிள்ளைகளும்.
பல நாட்களாக நேரில் வர முடியாது தொலைபேசியினூடே என்னிடமிருந்து பெற்ற தகவல்களுடன் - தங்கள் ஊர்,உறவு, கோயில் இவற்றை ஆவணமாக்கும் முயற்சியில் நேரில் வந்து பல மணி நேர உரையாடியது, என் முதுமையை மறக்கடித்தது.
நன்றி என் உறவுகளே!




அரியாலை ஞானவைரவர் திருவூஞ்சல் பாடல்கள்.......




இந்துமகா சமுத்திரத்தால் சூழப்பட்டு, முத்துவிதை போன்ற அபூர்வமான நீர்வளம், நிலவளம்

மிக்க இலங்கை மணித்திரு நாட்டிலே- அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணப் பூமியிலே...பல்லாயிரக் கணக்கான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. ஆங்காங்கே பக்தர்களைக் காப்பதற்கு, தெய்வங்களும் கோவில் கொண்டருளி இருக்கின்றனர். அவற்றுள்

யாழ்ப்பாணம், அரியாலை, கலைமகள் வீதியில் அமைந்துள்ள ஞானவைரவர் மீது- அவரது அருட் பார்வையினால், அமைந்ததே இந்த த் திருவூஞ்சற் பாடலாகும்.

                                                                      *********

                                                            விநாயகர் துதி
                                                             ******
                     செப்பரிய சைனியங்கள் புடைசூழத் தேவர்களும்
                      உப்பரிகை மணிமாட மாளிகைகள், கோபுரங்கள்
                      ஒப்பரிய கேணி, குளம்,ஆல், அரசு வீதியிலே
                      தப்பாது வீற்றிருக்கும் தயாபரனே காப்பு.
                                                  திருவூஞ்சல்.
                                                  *****
                     விஸ்வகர்ம குலமதைக் காக்க விரும்பியே
                     ஐஸ்வர்யம் வழங்கி அடியாரை ஆட்கொண்டு
                     புஷ்பங்கள் , சோடனைகள், புகழுறு பாடல்கள்
                     கஷ்டங்கள் வந்து விட்டால் கனிந்துருகும் தோத்திரங்கள்
                     அத்தனையும் ஏற்று அருள்புரியும் தம்பிரான்....
                     மெத்தனமாய் உன்னுடைய மேன்மைகள் சொல்கையிலே...
                      வெள்ளமாய் உளமுருகி... பாடலாய்ப் பரிணமித்து....
                      வள்ளலே வைரவரே வனப்புடன் ஆடீர் ஊஞ்சல்!                              (1)

                     அரியாலை ஊரிலே கலைமகள் வீதியில்...
                     உரிமையுடன் வந்தமர்ந்த உன்னத தெய்வமே.....
                     தெரியாமல் உன்னடியார் நூறுபிழை செய்தாலும்...
                     பரிபாலனஞ் செய்து பராமரிக்கும் அருட்கடலே....
                     நரியைப் பரியாக்கி நானிலத்தைக் காத்தவர் போல்...
                     சுணங்கனை வாகனமாய்ச் சுவீகரித்த சுந்தரனே...
                     சரியாசனத்தில் உன்பக்தர்களை ஏற்று வித்தாய்...
                     அரியாசன னே ஆனந்தமாய் ஆடீர் ஊஞ்சல்.                        (2)

                     அபிஷேகத் திரவியங்கள் அமர்க்களமாய் நிறைந்திருக்க.....
                     குவியும் இளநீரும், பாலுடன், தயிருமென......
                     கவினுறு பஞ்சாமிர்தக் கலவையும் சூழ்ந்திருக்க....
                     சுவையுறு தேனும், முக்கனியும் சூழ்ந்திருக்க....
                     ஆல்போல் தழைத்து , அறுகுபோல் வேரூன்றி....
                      மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்க’ வென....
                      வேல்பிடித்தோன் தம்பியாய் பிறந்திட்ட வித்தகனே...
                      கால், கைகள் அபிநயிக்க கச்சிதமாய் ஆடீர் ஊஞ்சல்!                    (3)

                     ஆலமுண்டார் மைந்தனே ஐங்கரனார் தம்பியரே....
                      வேலவனின் இளவலே.....வீரபத்திரன் சோதரனே....
                     ‘அஞ்சேல்’ எனக் கையசைத்து அனைவரையும் காருமையா....
                      பிஞ்சுக் குழந்தைகளைப் பேரன்பால் காருமையா...
                     தஞ்சமென வந்தடைந்த தாய்க்குலத்தைக் காருமையா.....
                     வஞ்சமற்ற வாலிபரை வாஞ்சையுடன் காருமையா...
                     பஞ்சாய் வினைபறக்க வாலிபரைக் காருமையா....
                      மஞ்சத்தில் ஏறி மனமகிழ்வாய் ஆடீர் ஊஞ்சல் !                   (4)

                     உமையவள் பெற்றவனே உன்னடியார் துயர்நீங்க.....
                     அமைவாய்க் கோவில்கொண்ட அரும்பெரும் வைரவரே— மனச்
                     சுமையெல்லாம் நீயகற்றி சுகத்தைத் தந்தருள்வாய்....
                     நமையெல்லாம் ரட்சித்து நன்மைகள் செய்வாயே....
                     * அன்பெனும் பலகையிலே அருள்என்ற கயிறு கொண்ட...
                    * இன்பென்ற கொழுவியால் முழுமையாய் உருவாகி.....
                    உலகத்து மக்களை உன்னருளால் காத்திடவே.....
                    பலமாக வீற்றிருந்து பரவசமாய் ஆடீர் ஊஞ்சல்!                               (5)

முப்பத்து முக்கோடி தேவரும், முனிவர், கிம்புருடர்..... தப்பாது பரிபாலனஞ் செய்துலகை உறங்காது விழித்து.... எப்போதும் காத்து எல்லா உயிரினங்கள் வாழவும்.... அப்பாவி மக்களை அருட்கண்ணால் நோக்கி ஆட்சிதனை...... செப்பும் நன்முறையில் சேவித்து உலக மக்கள்... நப்பாசையால் உனை மறந்திருந்த வேளையிலும்.... “ அப்பா, நீ என் அடிமை” என்றே அழைத்து அவரை... உப்பரிகையில் ஏற்றி உவகையுடன் ஆடீர் ஊஞ்சல்! (6) முடியாண்ட மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பல் ஆவர் என்ற உண்மையை உலகிற்கு.... விடிவெள்ளி போல அனைவரையும் உணரவைத்த... வடிவழகா, நன்றியுள்ள வாகனா, வைரவ சுவாமியே.... அடிமுடி தேடி மண்ணுலகும் , விண்ணுலகும்.... படிப்படியாக விமலனைத் தேடினர்—- முடிவில் சோதிவடிவாகத் தோன்றியவன் புத்திரனே—- சொல்லரிய.... ஆதிபரனே அற்புதனே ஆடீர் ஊஞ்சல்! (7) வாழையடி வாழையாக வாழ்ந்த மக்கள் கூட்டம்..... ‘ ஏழை பணக்காரன்’ என்ற ஏற்றத் தாழ்வு இன்றி..... வேளா வேளைக்கு தன்வேலை உண்டு வீடுண்டு... தாளாத துயரம் வந்தால் தாபரிக்கச் சுற்ற முண்டு..... மாளாத துன்பத்தையும் மாற்றித் தரும் செயலை... கேளாத தெய்வம் உண்டோ? மேதினியில் ஆறுதலாய்.... சூழலும், சுற்றமும் சுதந்திர மனிதராய் வாழ..... மேலான வித்தகரே! மேன்மை மிடுக்கோடு ஆடீர் ஊஞ்சல்! (8) உழுகின்ற மனிதருடன் உலகில் பலதொழில்கள்.... பழகி நாளாந்த வாழ்க்கையை நடாத்துகின்ற..... அழகிய குடும்பங்கள்.....அன்பான உறவுகளும்.... தெளிவான பக்தியுடன் தெள்ளுதமிழ் உரைக்க..... செழுமையும், கல்வியும், சீரான செல்வமும்.... தழுவும் கொடியொன்று தனக்காதரவு மரம்போல்.... குழுவாக நிறைந்திருக்க கோடி புண்ணியமாக........ வழுவாது வீற்றிருக்கும் வைரவரே ஆடீர் ஊஞ்சல்! (9) சங்கீத ஞானத்தை உன்சந்ததிக்கு வழங்கியதால்.... மங்காப் புகழுடனே வாரிசுகள் உலகமெல்லாம்..... தங்கம்நிகர் மதிப்பில் தயங்காது மேடைகளில்..... பொங்கும் பெருமையுடன் பூரிப்பாய் வலம்வந்தார்.... எங்கும் நிறைந்தவனே, எல்லாம் அறிபவனே.... பங்கமில்லாத வீர பத்திரனின் தம்பியரே..... அங்கயற்கண்ணி மகனே, குடும்பத்து இளையவனே.... ஆனந்தமாய், அக்கறையாய், ஆதரவாய் ஆடீர் ஊஞ்சல்! (10) மங்கல வாத்தியங்கள்,மணியோசை, நாதஸ்வரம்..... பொங்கும் இசையுடன் வாய்ப்பாட்டு,வீணைவயலின், புல்லாங்குழல்...... எங்கும் முழங்கி எண்திசையும், பெருகிவர— உன் தங்கமனம் மகிழ்ந்து , தரணியைப் பரிபாலிக்க.... திங்கள் முகத்தவனே......திவ்வியனின் புத்திரனே.... பங்கமில்லாது பக்தர்களைக் காக்கின்றாய்..... ஐங்கரன் தம்பியரே, ஆறுமுகன் சோதரனே.... ஆனந்தப் பரவசமாய் அகிலத்தில் ஆடீர் ஊஞ்சல் ! (11) மடைபரப்பும் பழவகைகள்,பலகாரம், பால்ரொட்டி, முறுக்கு..... அடையாள அரியதரம் அத்தனையும் படைத்து —— உனக்கு வடைமாலை கழுத்திலிட்டு வனப்புறு அழகினை..... உடைமாற்றி, மாற்றி உத்தரீயம் அணிவித்து..... நடைபாதை எங்கும் தென்னோலைத் தோரணங்கள்...... தடையின்றி உந்தன் திருப்பணியைப் பக்தர்கள்.... குடைபிடிப்பர், மாயோன் மருகனே விழுப்பொருளே..... நடைபயிலும் நல்லூரான் அயலவனே ஆடீர் ஊஞ்சல்! (12) * *. *. *. *. * திருநாமச் சிறப்பு ******* மாயவனின் மருகனே மனம் மகிழ்ந்து ஆயவினை தீர்ந்திடவே ஆடீர் ஊஞ்சல் தாயவளின் சின்னமகன் ....தயவான வைரவரே..... தூயவனே துள்ளி ஆடீர் ஊஞ்சல் சேய்களெமை சேம முறக் காத்துநீவீர், நாயகனாய் நளினமுடன் ஆடீர் ஊஞ்சல் காய்கனிகள் பொலிந்த கலைமகள் வீதியிலே..... கச்சிதமாய் ஆனந்தமாய் ஆடீர், ஊஞ்சல்!

போற்றிச் சிறப்பு ****** இசையுலகம் நாற்றிசையும் இசையை மீட்ட... இனிய ஓசை தந்தாரைக் காத்தாய் போற்றி..... அசையும் மணியோசை கேட்ட காதால்..... அனைவர்க்கும் அருள்தந்தாய் போற்றி போற்றி... தசையும், என்பும் போர்த்த மானிடரால்.... தாபரிக்க அவர்க்கருளை ஈய்ந்தாய் போற்றி.... திசையறியும் கருவியாய் திண்ணமாய் வீற்றிருந்து..... தீரனே அருளை அள்ளிச் சுரந்தாய் போற்றி. எச்சரிக்கை **** அரியாலை மக்களுடன் ஆவினங்கள் எச்சரிக்கை..... தெரியாதோர் நடமாட்டம் தெள்ளெனவே எச்சரிக்கை..... புரியாது நின்று பொய் சொல்வார் எச்சரிக்கை.... பூவுலகில் பூவையர் திண்மை எச்சரிக்கை..... நரியான சிலபேரின் நயவஞ்சனை எச்சரிக்கை.... நானிலத்தில் நல்லோரின் சூழல் எச்சரிக்கை...... சரியாக க்கணிப்பாளர் கல்வியும் எச்சரிக்கை.... சண்முகன் தம்பியே...சரணமய்யா எச்சரிக்கை ! வாழி *** உலகத்து மக்களெலாம் உயர்ந்து வாழி.... உள்ளத்தால் உயர்ந்தோரும் சிறந்து வாழி...... அலகுமிட்டு மெழுகுமிட்ட அன்பர்கள் வாழி..... ஆடவரும், மகளிரும் அருளால் வாழி..... திலகமென மிளிருகின்ற திவ்வியர்கள் வாழி..... திருநாம ம்பாடுகிற தீந்தமிழும் வாழி.... நலம்வாழ நல்லிசையை நாவில் கொண்டோர்...... நாளுக்கு நாள் நாநிலத்தில் வாழி...வாழி...! லாலி *** வரமருளும் வனப்புடைய வைரவரே லாலி... திரைகடல் ஓடி திரவியம் தேடுவோர் லாலி.... உரைகளால் உன்னைச் சிறப்பிப்போர் லாலி..... தரைதனைத் தரிசிக்கும் திவ்வியர்கள் லாலி..... அரைதனில் பஞ்சகச்ச அலங்காரம் லாலி..... குரைக்கும் வாகனச் சுணங்கனும் லாலி.... நரைவந்த போதும் உனைமறவாதார் லாலி.... வரமருளும் வைரவரே லாலி....லாலி....! மங்களம் *** உயர்வுதந்த கணபதிக்கு ஒப்பரிய மங்களம்.... உன்தந்தை சிவனார்க்கு ஓங்கார மங்களம்.... அயராத அன்னை உமாவுக்கு மங்களம்... அண்ணன் முருகனுக்கு அன்பான மங்களம்.... கண்ணான வீரபத்திர ர்க்கு மங்களம்.... திண்ணமாக மாமன் கண்ணனுக்கு மங்களம்.... உண்மையான பக்தர்கட்கு உரிமையான மங்களம்... பண்பாடும் பாலகர்க்கு மங்களம் ... மங்களம்! ஆக்கம்.....மணி ( .வள்ளியம்மை சுப்பிரமணியம் )......” சத்தியமனை”

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF