Monday, November 28, 2022
Sunday, November 27, 2022
Professor K. Kailasapathy 40th Anniversary பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் நாற்பதாவது நினைவேந்தல்
சுழிபுரத்தில் இயங்கி வருகின்ற ‘கே.ஏ. எஸ். சத்தியமனை நூலகம்’ தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் முப்பத்துமூன்றாவது நினைவு நாளில் பேராசிரியர் க. கைலாசபதி நாற்பதாம் நினைவேந்தல் பேருரை நிகழ்வினை நடாத்தி உள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் இந்து நாகரிகத் துறை தலைவர் நாச்சியார் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் உழைப்பாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் என பலதரப்பட்டோர் கலந்துகொண்டனர்.
“முப்பத்துமூன்று வருடங்களின் பின்னர் சொந்த மண்ணில் அப்பாவின் நினைவு நாள் இடம்பெறுகிற இன்றுதான் என்னால் பங்கேற்கிற நிலை ஏற்பட்டமைக்காக முதலில் மன்னிப்பைக் கோருகிறேன்.
பல காரணங்களால் வெளிநாட்டு வாழ்வு எங்கள் மீது திணிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்காக வாழ்ந்த தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த நூலகத்தையும் அரங்கையும் மக்களிடம் கையளிக்கும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்த உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
அப்பா மீள இயலாத நோயில் இருந்தபோது நான் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறேன்; எதையும் எதிர்பார்க்கவில்லை என மறுத்து வந்தவர் எனது விடாத நச்சரிப்புக் காரணமாக ‘பேராசிரியர் கைலாசபதி நினைவு நாளைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நடத்துங்கள்’ என்றார்.
நண்பர்களது உதவியுடன் 1992 இல் பத்தாவது நினைவுப் பேருரை நிகழ்வை பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் சங்கத்தில் நடாத்த முடிந்தது. இன்று கைலாசபதி அவர்களது நாற்பதாவது நினைவுப் பேருரையை அப்பாவின் நினைவு நாளில் இங்கே முன்னெடுக்கக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்வடைகிறேன்” எனத் தொடக்கவுரை ஆற்றிய சு. சத்தியகீர்த்தி தெரிவித்தார்.
தலைமையுரையில் நாச்சியார் “கே.ஏ.எஸ். , கைலாஸ் ஆகியோரது நட்புணர்வையும் இருவரது பொதுமைச் சிந்தனைகளையும் எங்களுக்கு முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்; பெரிய புராணம் அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த நாயன்மார்களை முன்னிறுத்திய பின்னர் சைவ சமயத்தில் எப்படிச் சாதி பேதம் பாராட்ட இயலும்? - இந்த இரண்டு பொதுவுடைமையாளர்களைப் போல பரந்த மனப்பாங்கை நாம் வரித்துக்கொள்வது அவசியம்” என தெரிவித்தார்.
“எனது என்பது வயதைக் கடந்த நிலையிலும் கடந்த இரண்டு நாட்களாக பண்டத்தரிப்பில் இடம்பெற்ற நாடகப் பட்டறையில் நீண்ட நேரம் பங்கெடுத்தேன். அதற்காக மட்டக்களப்பிலிருந்து உடற்சோர்வைப் பாராமல் வந்தேன். இன்று இந்த நிகழ்வை அறிந்ததும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்கிறேன்.
பொதுவுடைமைச் சிந்தனை மீதான பற்றார்வமே இந்த உத்வேகத்தை எங்களுக்குத் தருகிறது. தோழர் மணியமும் பேராசிரியர் கைலாசும் உயர்ந்த நட்புறவுக்கு உதாரணமாக இருந்த பொதுவுடைமையாளர்கள். இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். மக்களை நேசித்தவர்கள். கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் மாணவராக இருந்த கைலாஸ் கிரேக்க இலக்கிய விற்பன்னரான தோம்சனின் வழிகாட்டலில் சங்க இலக்கியத்தைக் கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பாய்வு செய்தார். சங்க இலக்கியத்திலும் மக்களைத்தான் கைலாஸ் தேடினார்” எனப் பேராசிரியர் மௌனகுரு தனது கருத்துரையில் தெரிவித்தார்.
நினைவுப் பேருரையை ஆற்றிய ந. இரவீந்திரன் “தமிழ் மக்களது முதல் சமயமாக இருந்தது சைவமோ வைணவமோ அல்ல; சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்..’ என்ற பாடல் பௌத்தமா சமணமா என்று தமிழறிஞர்கள் மயங்கியதுண்டு - அவையும் தமிழர்களது முதல் மதமல்ல.
இந்தப் பாடல் பௌத்தத்துக்கோ சமணத்துக்கோ உரியதல்ல, ஆசீவக மதத்துக்கு உரியது. தமிழர்களது தொன்மைச் சமயம் ஆசீவகம் தான்; அதன் பல அம்சங்களைப் பௌத்தமும் சமணமும் உள்வாங்கி ஆசீவகத்தை வலுவிழக்கச் செய்த போதிலும் ஐயனார் வழிபாடாகத் தமிழர் மத்தியில் இன்றுவரை ஆசீவகம் தொடர்ந்து வந்துள்ளது. இன்று ஐயனார் கோயில்களை முருகன் கோயில்களாக மாற்றுகிற போதிலும் எங்களது முதல் சமயமான ஆசீவகம் ஏதோ வடிவில் எங்களுடன் தொடர்ந்தும் நீடிப்பதைத் தடுக்க இயலாது” என தெரிவித்தார்.
மிகச் சிறந்த நிகழ்வைக் கண்டு களித்தோம் என மகிழ்ந்த பங்கேற்பாளர்கள் நூலகச் சமூகம் நீடித்து வளர வாழ்த்தினர்.