Monday, June 21, 2010

மெல்பேர்ண் மணியின் -- கவிதைப் பூங்கா

மெல்பேர்ண் மணியின் -- கவிதைப் பூங்கா
------------------------------------------------------------------------------
கண்டேன் ’மெல்பேர்ண்மணி’ கவிதைப் பூங்காவை
கொண்டேன் மனவுறுதி ஒரேமூச்சில் படிக்கவென..........
உண்டேன் தமிழ்ப்பழப் பஞ்சாமிர்தக் கலவையதை
விண்டேன் விழுமியப் பொருளுணர்ந்து கொண்டேன்.

தெய்வ வழிபாடுகள் தீம்பாலிற் சர்க்கரைபோல்..........
உய்யும் வாழ்வுநெறி உயர்வுக்கு வழிகாட்டல்
எய்யும் அம்புகூட எதிரிக்கும் நோய்தீர்க்கும்
வையத்துள் செம்மைவழி வார்த்தைகளிற் தொக்கிநிற்கும்.

மண்வாசனை சொல்கிறது மனமகிழ்வைக் காட்டி.........
எண்ணத்தில் சிலிர்ப்பு !....தெம்பினை ஊட்டி......
பள்ளத்தை நோக்கிய பாசவெள்ளம் கூட்டி.....
அள்ள அள்ளப் பெருக்கெடுக்கும் செந்தமிழ்ப் பாட்டி ..(து)

தாயக நினைவுகளைத் தாங்கிநிற்கும் தாயே!
நீயகலாதே!..கவிச்சுரங்கம் பெற்றெடுத்த சேயே!
நாயகி மெல்பேர்ண் நகரினிலே பெண்ணின
காயகற்றும் சதுரங்க சகலகலா வல்லிநீயே!

வள்ளியம்மை சுப்பிரமணியம்.
சிங்கப்பூர்.

Sunday, May 9, 2010

அன்னையர் தினத்திலே.............வள்ளியம்மை சுப்பிரமணியம்.

அன்னையர் தினத்திலே.............


மக்களே தாய்பற்றி எழுதுவது வழக்கமாம்.......அந்த

அக்கறையில் அன்னையே எழுதி அனுப்புகிறாள்.



பிள்ளைகள் உணர்வினைப் பெற்றவள் சொல்வதே

கொள்ளை இன்பமாம் அன்னையர் நாளிலே........



உண்ண உணவளித்து உறங்க இடமளித்து

வண்ணத்தில் உடைகள்பல வாங்கித் தருமொருவர்!



’கணனி’க்கு மேலே ’கமரா’வும் பொருத்தி

கைத்தொலை பேசியும் கருணையுடன் தருமொருவர்!



அம்மாவின் வயதுக்கு இதுவொன்றும் வேண்டாமென்றால்

“சும்மா இருங்கள். சுழலும் உலகில் உழைக்கும் தாயாக........



இவ்வளவு காலமும் இரவுபகல் பாராமல்

எம்மோடு நீங்கபட்ட இன்னல்கள் போதாதோ?



நான்தரும் பால்பழங்கள் நன்றாக நீயருந்தி

கூன்விழாத முதுகுடன் குதூகலிக்க வேணு’’மென்றார்.



நன்றாகத் தமிழ்த்தாயின் உறவிலே பெற்றமக்கள்................

அன்னையர் தினத்திலே பொன்னாடை போர்த்தி

சின்னமேசை விளக்கும் சிறப்பாக எனக்களித்ததுடன்

’என்வீட்டுக்கு வந்து உன்தமிழால் உரையாடு......

உன்னுடைய ஊக்கம் இளைஞர்க்கு வழிகாட்டும்”



இத்தனைநாள் இல்லாத கருஞ்சிவப்புக் கரைவைத்த

அத்தனை மதிப்பான சேலைதந்தார் மகளொருவர்!

‘அம்மா பசிகிடந்து ‘அல்சர்” வந்ததென்று

தம்மால் முடிந்தவரை தகுமுணவு தருமொருவர்!



செல்லும் திசையெல்லாம் திருப்தியாய்ச் செய்திகளை

சொல்லும் புகைப்படமும் அனுப்பிடுவார் இன்னொருவர்

அம்மாவின் பொறுமையும் அசையாத ந்ம்பிக்கையும்

நம்முடைய வாழ்வுதனில் நடைமுறைக்கு ஏற்கு”மென்பார்.



வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Sunday, April 25, 2010

சிங்கையில் சித்திரையின் பூக்களும் பழங்களும்

சிங்கையில் சித்திரையின் பூக்களும் பழங்களும்
--------------------------------------------------------------------------------------
தமிழ்மணக்கச் சிங்கையிலே நான்காண்டு முன்னர்
அமிழ்தான சித்திரைத் தமிழ்விழா தொடங்கி..........
அறிஞர்கள் பங்கெடுத்து வழிநடத்தும் செய்கையால்..........
குறிப்பாக மணக்கிறது பூக்களும், பழங்களும்.

பாலர்பள்ளி ஆடல் பாடல் விநோத உடை மல்லிகை.
உயர்நிலைப் பள்ளி சொற்களமோ இதழ்விரித்த தாமரை.
திருக்குறள் விழாவிலே திகழ்ந்தவைகள் றோசாமலர்.
மாதவி இலக்கிய மன்றத்தில் மணத்தது சாமந்திப்பூ.!

முப்பது ஆண்டுக்குப் பின்னர் தேக்காவிற்கு
மதியுரை அமைச்சர் வருகை புரிந்ததும்........
திறந்த வெளியரங்கில் வணக்கம் முழக்கம்
சிறந்தபல சொற்பொழிவு பலாப்பழத்தின் சுவைதானே!

நாளிதழின் செய்தியேடு நாவற்பழச் சுவையாம்
ஒலி 96.8 ஓங்குதமிழ் வாழைப்பழ இனிமை.
வசந்தத்தின் ஒளிபரப்பு மாதுளம் பழம்போல
கவிமாலை நிகழ்ச்சிகளோ மாம்பழத்தின் ருசியினிலே!

”அடுத்த வருடமும் சித்திரைக்குச் சிங்கைக்கு
விடுப்பு எடுத்து வரவேண்டும் விமானத்தில்.............”
ஆசிய வட்டார அயலிலுள்ள நாட்டவரின்
தேசியக் குரலாக ஒலிக்கிறது எம்காதில்.

வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Friday, March 19, 2010

பெண்ணின் பெருமை


பெண்ணின் பெருமை
--------------------------------------
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
திட்டமிட்டுக் குடும்ப நிர்வாகம் நடாத்துவதும்
கட்டுப்பாடாய் இல்லறத்தை கவனமாக உயர்த்துவதும்
எட்டுத்திசை எங்கணுமே பெண்ணின் பெருமையதே!
 
கருவை உருவாக்கக் காத்திருந்தாள் பத்துமாதம்
அருவருப்புக் கொள்ளாது அனைத்துப் பணிவிடையும்
விருப்பத்துடன் நிறைவேற்றி விளக்கொளியாய் வலம்வரும்
அருமைப் பெண்மையின் பெருமையைப் போற்றுவோம்!.
 
விண்ணிலே ஒளிவிடும் நிலவினைப் போலவே
கண் ணவன் கணவனின் காரியம் யாவிலும்
பண்ணிலே இசையின் பரிமாணம் ஒலிப்பதுபோல்
வண்ணமாய்க் கலந்திடும் பெண்மையைப் போற்றுவோம்.!
 
சொல்லும் மியன்மாரில் “சூகி’ அம்மையாரும்
வல்லசிறீ லங்காவில் வனிதை ‘ஜின்சில’வும்
பெண்கள் விடுதலைக்குப் பெருமைக் குரல்கொடுக்கும்
கண்களாய் பெண்களின் பெருமைக் கூறுவோம்!

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF