"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Tuesday, December 6, 2022

SATHIAMANAI Library's Book List சத்தியமனை நூலகத்தின் நூல் விபரம்


K.A. Subramaniam's SATHIAMANAI Library's Book List கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் சத்தியமனை நூலகத்தின் நூல் விபரம்:


Thursday, December 1, 2022

சங்கானை- நிச்சாமத்தைச் சேர்ந்த தோழி அரங்கா விஜயராஜ் கவிதை


தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 33வது நினைவு தினமான 27.11.2022 அன்று கே.ஏ.எஸ்சத்தியமனை நூலகத்தில் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் 40வது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற போது, தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களுடனான ஊரின் ஊடாடத்தின் நினைவுகளை சங்கானை- நிச்சாமத்தைச் சேர்ந்த தோழி அரங்கா விஜயராஜ் கவிதை வாயிலாக வெளிப்படுத்தினார்.

https://fb.watch/ipHljs9tXA/ 

 ஒரு ஆத்மார்த்தமான அரங்க வெளியில்

அனைவரும் இளையோடிப் போயிருக்கும்

இவ் நினைவேந்தல் நிகழ்வில்…
வருகைதந்திட்ட விருந்தினரே, தோழர்களே..
குடும்பத்தினரே ,ஊர் மக்களே, உற்றார் நண்பர்களே..
அனைவருக்கும் காலை வணக்கங்கள்…

பேராசிரியர் கைலாசபதி அவர்களின்
நினைவேந்தல் நிகழ்வினை..
தோழர் சுப்பிரமணியம் அவர்களின்
நினைவு தினத்தில் நடாத்துவதன்
தாற்பரியத்தினை எண்ணி – நான்
மனம் நெகிழ்கின்றேன்..
காரணம், இருவரும் இடதுசாரித் தேரின்..
இரு சக்கரங்கள்..
கொள்கைவழி ஒன்றாய் பயணித்து – பல
வேள்வித் தீ கண்டவர்கள்..
தீண்டாமைக்கு எதிராக..
விடிவெள்ளியாய் நின்றவர்கள்..

பேராசிரியர் கைலாசபதி மற்றும்
அவர் அருமை பெருமைகளை..
அவையோர் நன்கறிந்த போதிலும்
என் நினைவோடு நின்றிட்ட நிஜத் தலைவன்..
சமூகப் போராளி சுப்பிரமணியம் ஜயா
அவர்களைப் பற்றியே – நான்
இங்கு விளம்ப வந்துள்ளேன்..
மணி ஜயா எனும் இமயமே..
இடதுசாரி கொள்கையுடன் தம் கொள்கைவழி..
என் தந்தை நின் கைகோர்த்து நடந்தார்
என்பதில் நான் பெருமை அடைகின்றேன்..

வீரச் செருக்கு மிக்க விழுதுகள் வாழ்ந்த பதியின் - சாதியெனும்
கோரச் சிரத்தையினை கொன்றளிக்க வந்தமகன்..
பாரச் சிலுவைகளை தம் தோழில் தூக்கி நின்று – எம்
பாவங்களை தான் சுமந்த பிறிதொரு இயேசு பிரான்..

வீரத்தின் விளைநிலமாம்
நிற்சாம மண்ணின்..
குச்சுக்குடிசைகளின் தாழ்வாரத்தில்
படுத்துறங்கி…
ஒற்றைப் பாத்திரத்தில் ஒருபிடி உணவுண்டு – அவர்தம்
கொலைக்கள இராத்திரிகளில்…
கொள்கையை கனவாய் கொண்டு.. சாதிவெறி தகர்த்தெறிந்து
எம் மக்கள் முதுகெலும்பு நிமிர்த்தியவர்..
அவர்களின் தன்மானச் செருக்கினை – மகிழ்ந்து
அனுபவித்தவர்..

தேனீர் கோப்பைக்குள் எம் தன்மானத்தை – அவர்கள்
குடித்த போதும்…
தேரேறி வந்த தெய்வம் காண – எம்
தேகங்களை கிழித்த போதும்..
வாளோடு வந்த மகன் - மணி ஜயா
வாழ்வினை வென்ற மகன்..

திக்குத் தெரியாமல் - நாம்
திகைப்புற்று நின்றவேளை..
தானாக வந்த திசை காட்டி..
மணி ஜயா..
எழிற்சியின் வேர் - அவர்
விடியலின் வேர்..
பொதுவுடமை கொண்ட பேறு..
தீண்டாமை வென்ற நீறு…
தொழிலாளர்களின் தோழ்..
குற்றங்கள் களைந்த கூர் வாழ்..

தனக்காய் வாழ்பவன் மனிதன் - தன்
இனத்தின் விடுதலைக்காய் வாழ்பவன் மாமனிதன்..
ஆமாம்.. மணி ஜயா எனும் மாமனிதன்
மானுடம் போற்றும் புனிதன்..
தன் தசையின் இளைகளை அறுத்திட்ட போதிலும்..
எலும்பின் முடிச்சை உடைத்தெறிந்த போதிலும்..
மாக்ஸ்ஸிசத்தினை மருந்தாய் உண்டு மீண்டெழுந்த..
எம் மண்ணின் பிறிதொரு மா ஓ சேதுங்..
மணி ஜயா துணிச்சலின் முழு உருவம்..

ஒடுக்கப்பட்ட பெண்களின்..
தாவணிகளை அவர்கள் - தம்
செருக்கினில் முடிந்த போது..
துயரத் தாய்மார்களின் ஓலம் கேட்டு..
நின்மனம் கொதிக்கக் கண்டு..
துவண்டு புதுமைப் பெண் படைக்க வந்தீர்..
ஆதலால் எமக்கு நீங்கள் பாரதீ..

கொடுஞ் சாவு கண்டு அஞ்சிடா நெஞ்சன்..
நெடுஞ் சோர்வு கொண்டு துஞ்சிடா மைந்தன்..
தடம்மாறா திடம் கொண்டு..
தரம் பாரா வகை கண்டு – எதிரிகளின்
விடம் அறுக்க வந்த வள்ளல் - மணி ஜயா
நெடுந்தூர பயணச் செம்மல்…

அன்பு மனைவி….
ஆசைக்குழந்தைகள் - தன்
உள்ளக்கிடக்கையில் உறைந்து கிடந்திட…
கொள்கைப்பிடிப்பால் தாழ்ந்தோரையெல்லாம்
உற்ற சோதரராய் கொண்டாடி மகிழ்ந்து…
தன்னுயிர் நீத்து-எம்
மக்கள் மனங்களில் உத்தமராய் வாழ்பவர்..
மணி ஜயா..

மாற்றம் காணாத வராலாறு இங்கில்லை…
எம் விடிவானில் எழுந்த செங்கதிரே..
தூற்றுவார் உமை தூற்ற-அதை
துச்சமென நினைத்து…
எமக்கு தோள்கொடுத்த தோழன்…
நல்ல தொழிலாளத் தலைவன்..
வெஞ்சினம் கண்டு நின் சிவந்த கைகள் கொண்டு..
அஞ்சிய மக்களின் உள்ளக்கிடக்கை வென்ற..
பொதுவுடமைப் பொருளோன்-நின்
இறுதி மூச்சிலும் நெறிபிறழா திறலோன்..

மேடைகளில் நின் பேச்சும்…
ஆவேச குரல் தொனியும்..
எதிரிகளை அச்சமுறச் செய்தது
அடக்குமுறை தகர்த்தது..
மணியம் ஜயா…
எம் விளை நிலம் கண்ட விடிவெள்ளி…
தாழ்த்தப்பட்டோர்க்காய்…
தன்னையே செதுக்கிய சிற்பி…

மணி ஜயா நினைவுரையில் - நின்
துணைவியரை பாட மறுக்கின்…
ஏனை மனச்சாட்சி கொன்று விடும்..
அவர் கருணையின் உறைவிடம்…
வள்ளியம்மை பெண்ணியப் போராளி..
தன் கணவனின் கொள்கைகளை-தன்
கனவெனக் கொண்டு…
அவரின் போராட்ட ஊர்வலங்களில்..
ஓர் செருப்பெனத் தேய்ந்து..
ஓங்கி ஒலிக்கும் அவர் குரலின் பால் நின்று..
தாழ்த்தப்பட்டோரை தன் உறவென கொண்டாடிய..
ஒரு அற்புத தாய்…
காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தினால்
அவர் நோயுற்று கிடந்த வேளை…
ஒரு தாயினும் மேலாக-அவர்
கொள்கை காத்த புதுமைப் பெண்..
அச்சுப் பிறளாமல் தன் பிள்ளைகளையும்
கம்யூனிசிய அச்சாணி கொண்டு…
தேரிழுத்த தெய்வம்..
ஆமாம்…
சத்தியமனை எனும் கொலுவில்..
மணி ஜயா வள்ளியம்மை – யாவர்க்கும்
ஈடில்லா நல் இணைகள்…

பல தசாப்த்தங்கள் இளையோடிப் போயின..
நிற்சையூர் குடிசைகள் இத்துப் போய்..
செங்கற்கள் ஆயின-ஓர்
அக்கினிக் குஞ்சென நீங்கள் இட்ட தீ…
வெறும் பிண்டங்களாய் இருந்த…
எம் மக்களின் தலைவிதிகள் மாற்றியது...
கல்விவிற்பன்னர்களாய் கலங்கரை தொட்டு..
பொறியியல் பீடங்களில் பெயர் பொறித்து நின்று..
வைத்தியத் துறைகளில் வரலாறு புதுப்பித்து..
தீண்டாமை எனும் தீட்டினை…
கூண்டோடு அழிக்க வந்த தோழன்..
மாண்டோர்கள் இனிப் போதும்…
ஆண்டாண்டு காலமாய் இனி அடிவருட முடியாதென
மீண்டெழ வைத்த வீரச் செம்மல்..

மணி ஜயா…
வேடிக்கை மனிதனுமில்லை-அவர்
வீழ்ந்து கிடக்கவுமில்லை..
மணி ஜயா…
உறங்கிப் போயிருக்கலாம்..
அவர் கனவுகளும், கொள்கைகளும்
உறங்குவதில்லை..
ஆயிரம் ஆயிரம் அக்கினிச் சிறகுகளாய்…
ஆவேசம் கொண்டு மீள மீள எழும் - நின்
பெயரை ஒப்புவித்தே இவ் வையம் வாழும்…
அரங்கா விஜயராஜ் .





Sunday, November 27, 2022

பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் நாற்பதாவது நினைவேந்தல்


சுழிபுரத்தில் இயங்கி வருகின்ற ‘கே.ஏ. எஸ். சத்தியமனை நூலகம்’ தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் முப்பத்துமூன்றாவது நினைவு நாளில் பேராசிரியர் க. கைலாசபதி நாற்பதாம் நினைவேந்தல் பேருரை நிகழ்வினை நடாத்தி உள்ளது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் இந்து நாகரிகத் துறை தலைவர் நாச்சியார் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் உழைப்பாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் என பலதரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

“முப்பத்துமூன்று வருடங்களின் பின்னர் சொந்த மண்ணில் அப்பாவின் நினைவு நாள் இடம்பெறுகிற இன்றுதான் என்னால் பங்கேற்கிற நிலை ஏற்பட்டமைக்காக முதலில் மன்னிப்பைக் கோருகிறேன்.

பல காரணங்களால் வெளிநாட்டு வாழ்வு எங்கள் மீது திணிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்காக வாழ்ந்த தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த நூலகத்தையும் அரங்கையும் மக்களிடம் கையளிக்கும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்த உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

அப்பா மீள இயலாத நோயில் இருந்தபோது நான் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறேன்; எதையும் எதிர்பார்க்கவில்லை என மறுத்து வந்தவர் எனது விடாத நச்சரிப்புக் காரணமாக ‘பேராசிரியர் கைலாசபதி நினைவு நாளைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நடத்துங்கள்’ என்றார்.

நண்பர்களது உதவியுடன் 1992 இல் பத்தாவது நினைவுப் பேருரை நிகழ்வை பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் சங்கத்தில் நடாத்த முடிந்தது. இன்று கைலாசபதி அவர்களது நாற்பதாவது நினைவுப் பேருரையை அப்பாவின் நினைவு நாளில் இங்கே முன்னெடுக்கக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்வடைகிறேன்” எனத் தொடக்கவுரை ஆற்றிய சு. சத்தியகீர்த்தி தெரிவித்தார்.

தலைமையுரையில் நாச்சியார் “கே.ஏ.எஸ். , கைலாஸ் ஆகியோரது நட்புணர்வையும் இருவரது பொதுமைச் சிந்தனைகளையும் எங்களுக்கு முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்; பெரிய புராணம் அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த நாயன்மார்களை முன்னிறுத்திய பின்னர் சைவ சமயத்தில் எப்படிச் சாதி பேதம் பாராட்ட இயலும்? - இந்த இரண்டு பொதுவுடைமையாளர்களைப் போல பரந்த மனப்பாங்கை நாம் வரித்துக்கொள்வது அவசியம்” என  தெரிவித்தார்.

“எனது என்பது வயதைக் கடந்த நிலையிலும் கடந்த இரண்டு நாட்களாக பண்டத்தரிப்பில் இடம்பெற்ற நாடகப் பட்டறையில் நீண்ட நேரம் பங்கெடுத்தேன். அதற்காக மட்டக்களப்பிலிருந்து உடற்சோர்வைப் பாராமல் வந்தேன். இன்று இந்த நிகழ்வை அறிந்ததும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்கிறேன்.

பொதுவுடைமைச் சிந்தனை மீதான பற்றார்வமே இந்த உத்வேகத்தை எங்களுக்குத் தருகிறது. தோழர் மணியமும் பேராசிரியர் கைலாசும் உயர்ந்த நட்புறவுக்கு உதாரணமாக இருந்த பொதுவுடைமையாளர்கள். இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். மக்களை நேசித்தவர்கள். கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் மாணவராக இருந்த கைலாஸ் கிரேக்க இலக்கிய விற்பன்னரான தோம்சனின் வழிகாட்டலில் சங்க இலக்கியத்தைக் கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பாய்வு செய்தார். சங்க இலக்கியத்திலும் மக்களைத்தான் கைலாஸ் தேடினார்” எனப் பேராசிரியர் மௌனகுரு தனது கருத்துரையில் தெரிவித்தார்.

நினைவுப் பேருரையை ஆற்றிய ந. இரவீந்திரன் “தமிழ் மக்களது முதல் சமயமாக இருந்தது சைவமோ வைணவமோ அல்ல; சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்..’ என்ற பாடல் பௌத்தமா சமணமா என்று தமிழறிஞர்கள் மயங்கியதுண்டு - அவையும் தமிழர்களது முதல் மதமல்ல.

இந்தப் பாடல் பௌத்தத்துக்கோ சமணத்துக்கோ உரியதல்ல, ஆசீவக மதத்துக்கு உரியது. தமிழர்களது தொன்மைச் சமயம் ஆசீவகம் தான்; அதன் பல அம்சங்களைப் பௌத்தமும் சமணமும் உள்வாங்கி ஆசீவகத்தை வலுவிழக்கச் செய்த போதிலும் ஐயனார் வழிபாடாகத் தமிழர் மத்தியில் இன்றுவரை ஆசீவகம் தொடர்ந்து வந்துள்ளது. இன்று ஐயனார் கோயில்களை முருகன் கோயில்களாக மாற்றுகிற போதிலும் எங்களது முதல் சமயமான ஆசீவகம் ஏதோ வடிவில் எங்களுடன் தொடர்ந்தும் நீடிப்பதைத் தடுக்க இயலாது” என தெரிவித்தார். 

மிகச் சிறந்த நிகழ்வைக் கண்டு களித்தோம் என மகிழ்ந்த பங்கேற்பாளர்கள் நூலகச் சமூகம் நீடித்து வளர வாழ்த்தினர்.

வீரகேசரி Virakesari




































27.11.2022 இல் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு நாளன்று பேராசிரியர் க. கைலாசபதி. அவர்களின் நாற்பதாவது நினைவுப் பேருரை கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக அரங்கில் நிகழ்த்தது. பொதுவுடைமைக் கொள்கையை உறுதியாக இருவரும் பின்பற்றி வந்ததோடு பலவகைகளிலும் ஒத்துணர்வுடன் நட்புறவை வளர்த்து இயங்கி வந்தவர்கள். அவ்வகையில் இருவரும் ஒரே களத்தில் நினைவுகூரப்படுதலைத் தவிர்த்துவிட இயலாது.
அவ்வாறு ஒன்றுகலத்தலில் மூன்றாவது இணைப்புப் புள்ளியாக அமைந்தவர் புரட்சிக் கவி சுப்பிரமணிய பாரதி - சமூக மாற்றச் சிந்தனையிலும் தமிழ் இலக்கியப் பரப்பிலும் இயங்கியல்-பொருள்முதல்வாதப் பார்வையை வீச்சுடன் முதன்முதலாகப் பிரயோகித்தவர்.
பாரதியின் அந்த உலக நோக்கை வெளிப்படுத்தும் “பாரதியின் மெய்ஞ்ஞானம்” நூலில் பேராசிரியர் க. கைலாசபதி , கே.ஏ.எஸ். ஆகிய இருவரது இணைப்பும் இருந்தது என்ற வகையில் நாற்பதாவது நினைவுப் பேருரை ‘ந. இரவீந்திரனின் பாரதியின் மெய்ஞ்ஞானம்’ என்ற தலைப்பில் இடம்பெற்று இருந்தது.