தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 33வது நினைவு தினமான 27.11.2022 அன்று கே.ஏ.எஸ்சத்தியமனை நூலகத்தில் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் 40வது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற போது, தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களுடனான ஊரின் ஊடாடத்தின் நினைவுகளை சங்கானை- நிச்சாமத்தைச் சேர்ந்த தோழி அரங்கா விஜயராஜ் கவிதை வாயிலாக வெளிப்படுத்தினார்.
https://fb.watch/ipHljs9tXA/
ஒரு ஆத்மார்த்தமான அரங்க வெளியில்
அனைவரும் இளையோடிப் போயிருக்கும்
இவ் நினைவேந்தல் நிகழ்வில்…வருகைதந்திட்ட விருந்தினரே, தோழர்களே..
குடும்பத்தினரே ,ஊர் மக்களே, உற்றார் நண்பர்களே..
அனைவருக்கும் காலை வணக்கங்கள்…
பேராசிரியர் கைலாசபதி அவர்களின்
நினைவேந்தல் நிகழ்வினை..
தோழர் சுப்பிரமணியம் அவர்களின்
நினைவு தினத்தில் நடாத்துவதன்
தாற்பரியத்தினை எண்ணி – நான்
மனம் நெகிழ்கின்றேன்..
காரணம், இருவரும் இடதுசாரித் தேரின்..
இரு சக்கரங்கள்..
கொள்கைவழி ஒன்றாய் பயணித்து – பல
வேள்வித் தீ கண்டவர்கள்..
தீண்டாமைக்கு எதிராக..
விடிவெள்ளியாய் நின்றவர்கள்..
பேராசிரியர் கைலாசபதி மற்றும்
அவர் அருமை பெருமைகளை..
அவையோர் நன்கறிந்த போதிலும்
என் நினைவோடு நின்றிட்ட நிஜத் தலைவன்..
சமூகப் போராளி சுப்பிரமணியம் ஜயா
அவர்களைப் பற்றியே – நான்
இங்கு விளம்ப வந்துள்ளேன்..
மணி ஜயா எனும் இமயமே..
இடதுசாரி கொள்கையுடன் தம் கொள்கைவழி..
என் தந்தை நின் கைகோர்த்து நடந்தார்
என்பதில் நான் பெருமை அடைகின்றேன்..
வீரச் செருக்கு மிக்க விழுதுகள் வாழ்ந்த பதியின் - சாதியெனும்
கோரச் சிரத்தையினை கொன்றளிக்க வந்தமகன்..
பாரச் சிலுவைகளை தம் தோழில் தூக்கி நின்று – எம்
பாவங்களை தான் சுமந்த பிறிதொரு இயேசு பிரான்..
வீரத்தின் விளைநிலமாம்
நிற்சாம மண்ணின்..
குச்சுக்குடிசைகளின் தாழ்வாரத்தில்
படுத்துறங்கி…
ஒற்றைப் பாத்திரத்தில் ஒருபிடி உணவுண்டு – அவர்தம்
கொலைக்கள இராத்திரிகளில்…
கொள்கையை கனவாய் கொண்டு.. சாதிவெறி தகர்த்தெறிந்து
எம் மக்கள் முதுகெலும்பு நிமிர்த்தியவர்..
அவர்களின் தன்மானச் செருக்கினை – மகிழ்ந்து
அனுபவித்தவர்..
தேனீர் கோப்பைக்குள் எம் தன்மானத்தை – அவர்கள்
குடித்த போதும்…
தேரேறி வந்த தெய்வம் காண – எம்
தேகங்களை கிழித்த போதும்..
வாளோடு வந்த மகன் - மணி ஜயா
வாழ்வினை வென்ற மகன்..
திக்குத் தெரியாமல் - நாம்
திகைப்புற்று நின்றவேளை..
தானாக வந்த திசை காட்டி..
மணி ஜயா..
எழிற்சியின் வேர் - அவர்
விடியலின் வேர்..
பொதுவுடமை கொண்ட பேறு..
தீண்டாமை வென்ற நீறு…
தொழிலாளர்களின் தோழ்..
குற்றங்கள் களைந்த கூர் வாழ்..
தனக்காய் வாழ்பவன் மனிதன் - தன்
இனத்தின் விடுதலைக்காய் வாழ்பவன் மாமனிதன்..
ஆமாம்.. மணி ஜயா எனும் மாமனிதன்
மானுடம் போற்றும் புனிதன்..
தன் தசையின் இளைகளை அறுத்திட்ட போதிலும்..
எலும்பின் முடிச்சை உடைத்தெறிந்த போதிலும்..
மாக்ஸ்ஸிசத்தினை மருந்தாய் உண்டு மீண்டெழுந்த..
எம் மண்ணின் பிறிதொரு மா ஓ சேதுங்..
மணி ஜயா துணிச்சலின் முழு உருவம்..
ஒடுக்கப்பட்ட பெண்களின்..
தாவணிகளை அவர்கள் - தம்
செருக்கினில் முடிந்த போது..
துயரத் தாய்மார்களின் ஓலம் கேட்டு..
நின்மனம் கொதிக்கக் கண்டு..
துவண்டு புதுமைப் பெண் படைக்க வந்தீர்..
ஆதலால் எமக்கு நீங்கள் பாரதீ..
கொடுஞ் சாவு கண்டு அஞ்சிடா நெஞ்சன்..
நெடுஞ் சோர்வு கொண்டு துஞ்சிடா மைந்தன்..
தடம்மாறா திடம் கொண்டு..
தரம் பாரா வகை கண்டு – எதிரிகளின்
விடம் அறுக்க வந்த வள்ளல் - மணி ஜயா
நெடுந்தூர பயணச் செம்மல்…
அன்பு மனைவி….
ஆசைக்குழந்தைகள் - தன்
உள்ளக்கிடக்கையில் உறைந்து கிடந்திட…
கொள்கைப்பிடிப்பால் தாழ்ந்தோரையெல்லாம்
உற்ற சோதரராய் கொண்டாடி மகிழ்ந்து…
தன்னுயிர் நீத்து-எம்
மக்கள் மனங்களில் உத்தமராய் வாழ்பவர்..
மணி ஜயா..
மாற்றம் காணாத வராலாறு இங்கில்லை…
எம் விடிவானில் எழுந்த செங்கதிரே..
தூற்றுவார் உமை தூற்ற-அதை
துச்சமென நினைத்து…
எமக்கு தோள்கொடுத்த தோழன்…
நல்ல தொழிலாளத் தலைவன்..
வெஞ்சினம் கண்டு நின் சிவந்த கைகள் கொண்டு..
அஞ்சிய மக்களின் உள்ளக்கிடக்கை வென்ற..
பொதுவுடமைப் பொருளோன்-நின்
இறுதி மூச்சிலும் நெறிபிறழா திறலோன்..
மேடைகளில் நின் பேச்சும்…
ஆவேச குரல் தொனியும்..
எதிரிகளை அச்சமுறச் செய்தது
அடக்குமுறை தகர்த்தது..
மணியம் ஜயா…
எம் விளை நிலம் கண்ட விடிவெள்ளி…
தாழ்த்தப்பட்டோர்க்காய்…
தன்னையே செதுக்கிய சிற்பி…
மணி ஜயா நினைவுரையில் - நின்
துணைவியரை பாட மறுக்கின்…
ஏனை மனச்சாட்சி கொன்று விடும்..
அவர் கருணையின் உறைவிடம்…
வள்ளியம்மை பெண்ணியப் போராளி..
தன் கணவனின் கொள்கைகளை-தன்
கனவெனக் கொண்டு…
அவரின் போராட்ட ஊர்வலங்களில்..
ஓர் செருப்பெனத் தேய்ந்து..
ஓங்கி ஒலிக்கும் அவர் குரலின் பால் நின்று..
தாழ்த்தப்பட்டோரை தன் உறவென கொண்டாடிய..
ஒரு அற்புத தாய்…
காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தினால்
அவர் நோயுற்று கிடந்த வேளை…
ஒரு தாயினும் மேலாக-அவர்
கொள்கை காத்த புதுமைப் பெண்..
அச்சுப் பிறளாமல் தன் பிள்ளைகளையும்
கம்யூனிசிய அச்சாணி கொண்டு…
தேரிழுத்த தெய்வம்..
ஆமாம்…
சத்தியமனை எனும் கொலுவில்..
மணி ஜயா வள்ளியம்மை – யாவர்க்கும்
ஈடில்லா நல் இணைகள்…
பல தசாப்த்தங்கள் இளையோடிப் போயின..
நிற்சையூர் குடிசைகள் இத்துப் போய்..
செங்கற்கள் ஆயின-ஓர்
அக்கினிக் குஞ்சென நீங்கள் இட்ட தீ…
வெறும் பிண்டங்களாய் இருந்த…
எம் மக்களின் தலைவிதிகள் மாற்றியது...
கல்விவிற்பன்னர்களாய் கலங்கரை தொட்டு..
பொறியியல் பீடங்களில் பெயர் பொறித்து நின்று..
வைத்தியத் துறைகளில் வரலாறு புதுப்பித்து..
தீண்டாமை எனும் தீட்டினை…
கூண்டோடு அழிக்க வந்த தோழன்..
மாண்டோர்கள் இனிப் போதும்…
ஆண்டாண்டு காலமாய் இனி அடிவருட முடியாதென
மீண்டெழ வைத்த வீரச் செம்மல்..
மணி ஜயா…
வேடிக்கை மனிதனுமில்லை-அவர்
வீழ்ந்து கிடக்கவுமில்லை..
மணி ஜயா…
உறங்கிப் போயிருக்கலாம்..
அவர் கனவுகளும், கொள்கைகளும்
உறங்குவதில்லை..
ஆயிரம் ஆயிரம் அக்கினிச் சிறகுகளாய்…
ஆவேசம் கொண்டு மீள மீள எழும் - நின்
பெயரை ஒப்புவித்தே இவ் வையம் வாழும்…
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்