Sunday, April 14, 1974

The Editorial for Art and Literary., April 1974, 'Thayagam' தாயகம் உதயமாகிறது.

 The Editorial for Art and Literary., April 1974, 'Thayagam' 

தாயகத்தின் ஆசிரிய தலையங்கம் 1974 சித்திரை

புதிய ஜனநாயகம்!
புதிய வாழ்வு!
புதிய நாகரிகம்! 



தாயகம் உதயமாகிறது. அது உங்களுடையது. முதலில் பத்திரிகையை ஆரம்பிப்போம்: பிறகு கொள்கை வகுப்போம்! என்று போடிபோக்கில் தாயகம் தோன்றவில்லை தனக்கென ஒரு கொள்கையுடன் தலநிமிர்ந்து உதயமாகிறது தாயகம்.
கலை இலக்கியத்துறையில் தேசிய - சர்வதேசிய தேவைகளை உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படைப்புக்களையும், பலமான அணியையும் உருவாக்க வேண்டிய அவசிய தேவையை உணர்ந்தே தாயகம் தோன்றியிருக்கிறது.

முற்போக்கு விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன், சரித்திர மாறுதல்களைப் பிரதிபலித்தும், அதற்காக வேண்டியும் நிற்கிற தேசிய சக்திகளின் ஆயுதமாக தாயகம் விளங்கும். கலை இலக்கியத் துறையில் எந்தவொரு படைப்பும் சமுதாய நோக்கு பொதிந்துள்ளதென்ற வாதம் மறுக்கமுடியாதது. படைப்புக்கள் இரண்டு மார்க்கங்களாகப் பிரிகின்றன.
ஒன்று, புதிய ஜனநாயகம், மனிதகுலத்தின் நல்வாழ்வு, புதிய நாகரிகத்தை வேண்டி புத்துலகத்தை உருவாக்கும் சக்திகளின் மார்க்கம் இந்த மார்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஜனநாயக சக்திகளால் முன்னெடுக்கப்படுவது.
இரண்டாவது, முன்னைய சரியான மார்க்கத்திற்கு நேரெதிரானதும், அழிந்து கொண்டிருப்பதுமான பழைய சுரண்டல் சமுதாய அமைப்பைக் கட்டிக் காக்கும் மார்க்கமாகும். இது ஏகாதிபத்திய சக்திகளாலும் முதலாளி வர்க்கத்தாலும் தலைமை தாங்கப்படுவது.
முதலாவது மார்க்கமும் புத்துலகமுமே தாயகத்தின் நோக்கமும், அதன் அபிலாஷையுமாகும்.
சர்வ தேசிய ரீதியிலும், தேசிய ரீதியிலும் தீர்க்கமான மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இத்தாக்கம் கலை இலக்கியத்துறையிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையிலே இதனை மூன்று கட்டங்களாக வகுக்கலாம். 
  • ஒன்று: பாஸிச எதிர்ப்பு, இரண்டாவது உலகயுத்தமும், தேசியவிடுதலைப் போராட்டங்களும் இலங்கையின் தேசிய எழுச்சிகளும் இங்கு கலை இலக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின.

  • இரண்டு: 1952 - 56 ம் ஆண்டு காலஇடைவெளியில் உள்நாட்டு வெளிநாட்டுப் பிற்போக்குக் கெதிரானதும், அந்நிய மொழி, கலாச்சார, பொருளாதாரப் பிடிப்புகளுக்கெதிரானதுமான மக்களின் எழுச்சியும், மாபெரும் ஹர்த்தால் போராட்டமும் இன்னொரு கட்டத்தை ஏற்படுத்தின. இக்காலகட்ட படைப்பாளர்கள் பலர் இச்சமுதாய அமைப்பைக் கண்டிப்பதிலும், அம்பலப்படுத்துவதிலும் வெற்றி கண்டனரே தவிர, இச் சமுதாய அமைப்பை மாற்றுவதற்கும், அதற்கு வேண்டிய சரியான மார்க்கத்தைக் கோடிட்டுக் காட்டுவதிலும் வெற்றி காணவில்லை.
  • மூன்றாவது: 1966 ம் ஆண்டைத் தொடர்ந்த காலங்களில் வெளிநாட்டு - உள்நாட்டு பிற்போக்குச் சக்திகளுக்கெதிரான மக்கள் இயக்கம், மலைநாட்டில் தோட்டத் தொழிலாளரின் போராட்டங்கள்,வடபகுதியில் தீண்டாமைக்கும் சாதி ஒடுக்கு முறைக்கும் எதிரான வெகுஜன இயக்கங்களும் போராட்டங்களும் இன்னெரு கால கட்டத்தை ஏற்படுத்தின.
இப் போராட்டங்களும் இயக்கங்களும், நாட்டின் தொழிலாளர், விவசாய, இதர உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் தனது நடவடிக்கைகளுடன் ஐக்கியப்படுத்தியதுடன் அவர்களுடைய போராட்டங்களுக்கும். இயக்கங்களுக்கும் நம்பிக்கையும் உறுதுணையும் தருவதாக இருந்தன.
இக் காலகட்ட கலை இலக்கியப் படைப்புக்கள் சில மக்களின் இயக்கங்களிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் பிறந்தவையே. இவை சரியான மார்க்கத்தையும் பாதையையும் முன் வைக்க ஓரளவு உதவின. 
படைப்புக்களிலிருந்துதான் விமர்சனங்கள் பிறக்கின்றன. விமர்சனங்களால் படைப்புக்கள் மேலும் செழுமை அடைகின்றன. இந்த நோக்கில் , இப்படைப்புகள் மேலும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டும். இத்தகைய விமர்சனங்கள் பல புதிய படைப்புகளுக்கு உதவும்.இப் பணியைத் தாயகம் முன்னெடுக்கும்.

கலை இலக்கியப் படைப்புக்களில் மக்கள் விரோத, ஜனநாயக விரோத, தேச விரோத கருத்தோட்டங்களைத் தாயகம் எதிர்க்கும். - புதிய படைப்புக்களும்,படைப்பாளிகளும் நாட்டிற்குத் தேவை ஒரு காலத்தில் முற்போக்காளர்களாக இருந்த சிலர் கனவான்களாகி ஒதுங்கிவிட்டனர். மக்கள் மத்தியில் பெருமளவு ஆற்றல் மிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை தாயகம் அணுகும். புதிய படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புக்களையும் முன் கொண்டு வரும்.
தாயகத்தின் உதயம், பிற்போக்கு வர்க்கத்தினதும், மார்க்கத்தினதும் எடுபிடிகளாகி கலையையும் தம்மையும் சிறுமைப்படுத்திக் கொள்ளும் பேர்வழிகளுக்கும் அவர்களின் எஜமான வர்க்கத்திற்கும் பீதியை ஏற்படுத்தக் கூடும்.
புதிய ஜனநாயகத்தையும், புதிய வாழ்வையும், புதிய நாகரிகத்தையும் தோற்றுவிக்கும் சக்திகள், தாங்கள் எதிர்பார்த்த அல்லது எடுத்த முயற்சி காலம் அறிந்து தங்களிடம் வந்திருப்பதைக்காண மகிழ்ச்சியடைவர்.
தாயகம் உங்களுடையதே .
- ஆசிரியர் குழு சார்பில் கே.ஏ. சுப்பிரமணியம் 01 சித்திரை 1974

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF