Saturday, December 16, 1989

Letter from Radio Peking Tamil Service சீனாவிலிருந்து தோழர் மாதகல் வ. கந்தசாமி அவர்கள் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம்



சீனாவிலிருந்து தோழர் மாதகல் வ. கந்தசாமி அவர்கள்  திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம்



பெய்ஜிங்

15-12-1989


பெரும் மதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய ஆசிரியை அவர்களுக்கு,


இன்று காலை கிடைத்த கரந்தன்கொல்லை தோட்டத்தை சேர்ந்த நண்பர் கணேஷ் அவர்களின் கடிதம் எனக்கு இந்த அதிர்ச்சி தரும் செய்தியை தெரிவித்தது.


மகன் கீர்த்தி அவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும் உடனே விரைந்து வந்ததால் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்ல முன் தரிசித்ததாகவும் எழுதியிருந்தார் ,


என்னை பொறுத்தவரையில், சுமார் 40 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு உழைத்து வந்த கதிர் ஒன்று மறைந்துவிட்டது. கடமை வீரர் ஒருவர் கண்ணயர்ந்து விட்டார். அவருக்கு இணையாக வேலை செய்த, வேலை செய்யக்கூடிய ஒரு கடமை ஊழியரை எதிர்காலத்தில் கண்டுகொள்வது சாத்தியமல்ல. சுருங்கச்சொன்னால் சகாப்தம் ஒன்று மறைந்து விட்டது.  அவரைப்போல யார் அந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளார் ? என்ற கேள்விக்குறியை விட்டுத்தான் தான் அவர் சென்றுள்ளார் .


அவருடனே 1954ஆம் ஆண்டு முதல் பழகி வந்தேன். 60ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தங்களை திருமணம் செய்த அந்த நாட்களும் எனது நினைவுக்கு வருகின்றன. ஆரம்பகாலத்தில் நாங்கள் இருவரும் சக தோழர்கள் ஆகவே பழகி வந்தோம். பின்னர் தனது உழைப்பு திறமை திறமையினாலும், உன்னத பழக்கவழக்கங்களிலும் அவர் உயர்ந்து தலைவனாகி விட்டார்.  அவருடைய தலைமையில் நிகழ்ந்த இயக்கங்கள் சோடை போனது கிடையாது. அவரது அஞ்சா நெஞ்சமும் அயராத உழைப்பும், என்றென்றைக்கும்  கூரத் தக்கவை. இங்கு புறப்பட்டு வருவதற்கு முன் அவரை சந்திக்க முயன்று தோற்று விட்டேன். இருந்தும், ஒரு மாதத்துக்கு முன் அவர் அனுப்பிய நூல், பத்திரிகை, கடிதங்கள் தான் கடைசி நினைவு சின்னங்களாக என் கைகளில் உள்ளன. அவை ஞாபகார்த்த களஞ்சியங்களாக கருதி என்று பேணி வருவேன். கடைசியாக கண்டு விட்டு வரவில்லையே என்ற ஏக்கம் ஒன்று  இருக்கத்தான் செய்கிறது!.  கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!. 


அவருடைய இலட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்து வந்த உங்கள் போன்றவர்கள் மிக சிலரை தான் நான் கண்டிருக்கிறேன். எங்களுக்கு அந்த பாக்கியம் இல்லாததால், இயக்கங்களுடன் சங்கமமாகி உழைக்க இயலவில்லை. உங்களுடைய உதவியும், ஒத்தாசையும் நூற்றுக்கு நூறு கிடைத்தமையால் தான், அவர் கீர்த்தி பிரகாசத்துடன் தனது லட்சியப் பாதையில் நடை பீடு நடை போட்டு முன்னேற முடிந்தது. அவருடைய இழப்பு தங்களுக்கு ஈடு செய்ய முடியாதது தான். ஆனால் சமூகத்துக்கும், இயக்கத்துக்கும் அது பேரிழப்பாகும். இதை எண்ணி சற்று மன ஆறுதல் அடைவீர்கள் என எண்ணுகிறேன்.


அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் இவ்வளவு  …….  நினைக்கவில்லை. இங்கிருந்தும் பல விஷயங்களில் அவரது ஆலோசனைகளை கேட்க எண்ணியிருந்தேன். சில காரியங்களை அவர் நாட்டிலிருந்து நடத்தி, அயல்மொழி பதிப்பகத்தின் தமிழ் பிரிவை மீண்டும் திறக்க உதவுவார் என எண்ணிய எண்ணத்திலும் மண் விழுந்து விட்டது என நினைக்க நினைக்க வேதனையாக உள்ளது. எனினும் தவிர்க்க முடியாதபடி நிகழும் ஒன்றை விரும்பியோ விரும்பாமலோ நாம் எல்லோரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும் அப்படி ஏற்பட்ட அகால மரணத்தை மறைவை மறைவால் ஏற்படும் துன்பத்தை மறப்பதற்கும் அவரை நினைவு கூர்வதற்கும் அவர் விட்டுச்சென்றவற்றை தொடர்வதற்கும் கடைசியாக தங்களுக்கும் தங்கள் 3 சத்தியங்களுக்கும் , மருமகன் ரவிக்கும் , தங்கள் பேரப்பிள்ளைக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கே ஏ அவர்கள் சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும் வணக்கம் 

மாதகல் கந்தசாமி






No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF