1982 ஜனவரி 2ந் திகதியன்று, விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட
மக்களை நேசித்த மகத்தான சமூக போராளியும்
முதலாவது பத்திரிகையாளருமான தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) அவர்களின் 28வது நினைவு தினத்தினை முன்னிட்டு, கனடா ரொறன்ரோ நகரில், தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, “
ஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டு 2010 ஜனவரி 16ந் திகதியன்று நடந்த கருத்தரங்கத்தில் கழகத் தோழர் அமரர் மீரான் மாஸ்டர் (சுப்பிரமணியம் சத்தியராஜன்) இன் தாயாரும் இடதுசாரியவாதி, பொதுவுடமைவாதி அமரர் கே ஏ. சுப்பிரமணியம் அவர்களின் துணைவியாருமான திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டதை கீழே தருகின்றோம்....
அன்றொரு கவிஞன் பாடிய பாடல்கள்.......
இன்றும் நினைவில் இருக்கின்ற வரிகள்.....
“சுந்தரமே! எங்கேநீ?....சுதந்திர உலகிற்குத்
தந்திரமாய் அனுப்பினரோ?.....தாளமுடியு தில்லை.
எந்திரம் போலநீ எத்தனை செயல் புரிந்தாய்
உன்தரத்தை அறியாதார் உலகில் இருந்தென்ன?
அந்தரத்தில் எம்மைநீ அநாதையாய் விட்டாயோ?
பசுந்தரம் (அம்மா) பெற்றெடுத்த பாசம்மிகு புதல்வா!.................
புதியபாதை சுந்தரம்
-----------------------------------
’புதியபாதை’ பத்திரிகை தானாக முளைக்கவில்லை
பதியம்வைத்து நீரூற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்
வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியினில்
சுட்டும் செழிப்பான சுழிபுரக் கிராமத்தில்...
சதாசிவம் ஆசிரியரின் சாந்தமான மகனாய்...
உதாரணம் காட்டும் முன்மாதிரி மாணவனாய்....
’விக்ரோறியா’ கல்லூரிப் படிப்பின் பின்னர்
தக்கதான வழிசொன்ன சிவசண்முக மூர்த்தியிவன்.
ஆயிரத்துத் தொழாயிரத்து அறுபத்து ஒன்பதிலேஆயிரக் கணக்கில் அரசாங்க ஊழியர்கள்
பாதிக்கப் பட்டார்கள் சிங்கள மொழியறிவு
சோதனையில் தேறினால் தான்வேலை நிரந்தரமென்று....
அரசாங்கக் கட்டளைக்குக் கட்டுப் பட்டபலர்
அரசாங்கக் கடமையில் ஓய்வுபெற்ற டாக்டர்
திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்த ஆசான்
திருவாளர் தம்பையா இல்லத்திலே நடாத்தும்
சிங்களமொழி வகுப்பில் நானும்போய்ச் சேர்ந்திட்டேன்.
அங்குவந்த மாணவருள் சண்முகமும் தம்பியானார்.
சகலரையும் மதிக்கும் சந்ததியார் தன்னுடனே
குகபூசணி, பவானி, குருக்கள்பிறை சூடிக்குரு
அப்படிப் பலபேர் அவ்விடத்தில் படித்தார்கள்.
“அக்கா”வென அழைத்து எனக்குற்ற துணையானார்கள்.
“புத்தரின் போதனைகள் ஏற்கெனவே திருக்குறளில்
பத்திரமாக இருப்பதைப் பயன்படுத்தி வாழுங்கள்”
என்றெமக்குக் குருவானவர் எடுத்தியம்பிக் கூறியவை
நிற்கிறதே மானிட நெஞ்சத்தில் பசுமையாக.
அந்தாண்டு ‘மே’தின ஊர்வலத்தைத் தடைசெய்து
குண்டாந் தடியடிகள் கோரமாகத் தாக்கியதால்
என்துணைவர் உட்பட எண்ணரிய தோழர்கள்
துன்புறுத்தப் பட்டுக்கண் துடைப்பாக வைத்திய
சாலையில் சேர்த்துப் பாதுகாப்புக் கொடுத்தனரே!
வேலையை வைத்தியர்கள் விசுவாசமாய்ச் செய்தார்கள்.
உறவுகளின் துணையற்று உருக்குலைந்த எந்தனுக்கு
மறவாத தோழர்கள்போல் என்வகுப்புச் சோதரரும்
தாமாகமுன் வந்தென் மதலைகட்கு உதவினரே!
ஆமாம்! சண்முகனின் அன்பினை என்னென்பேன்!
வருடங்கள் பத்துக் கழிந்து ஓடியபின்......
பெருமைபெறு ‘சுந்தரம்’ என்துணைவர் மணியத்தார்
மதிக்கின்ற பொதுவுடமைத் தத்துவத்தின் பூரணத்தால்
’புதியபாதை’ பத்திரிகை-- புத்தாக்கச் சிந்தனையில்
அடிமைப் பட்டதமிழ் மக்கள் விழிக்கவேண்டி
முடிவான உறுதியுடன் அச்சகத் தொடர்புகொண்டார்.
சித்திரம் வரைவதிலே சிறந்த சுந்தரத்தார்
அத்தனை திறமைகளும் ”தாய்மாமன் இராச
ரத்தினதின் வாரிசு” என்று மகிழ்ந்திட்டார்.
தன்னடக்கத் தலைவனாய் இருந்ததெல்லாம்
பறைசாற்ற விரும்பவில்லை விளம்பரமும் தேடவில்லை.
குறைகூறல் விரும்பாது செயல்வீரனாய் வாழ்ந்திருந்தான்.
எண்பத்து ஈராமாண்டு ஜனவரி இரண்டாம்நாள்
”கண்மறைவாய் உன்கருத்தை வெல்ல முடியாதோர் சுட்டானராம்”
என்றசெய்தி வந்தபின்தான் அறிந்தோமே உன் திறமையெல்லம்....
கன்றிழந்த பசுப்போலப் பசுந்தரம் அம்மா புலம்பியதும்
தோழொடிந்த தோழர்கள் அவசரத்தில் பழிவாங்கத் துடித்ததுவும்
வாலொடிந்த பல்லிக்கு மீண்டும் முளைப்பதுபோல் உன்
எண்ணத்தை நிறைவேற்ற மக்கள்யுத்தம்வேண்டி கழகத்தின் பின்னாலே
வண்ணத்துப் பூச்சிகள்போல் வாலிபர்கள் பறந்ததுவும் கண்கூடு.
ஆண்டுகள் 28 கடந்த பின்னும் அந்த விடுதலை விரும்பியை நினைவுகூரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இத் தாயாரின் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகட்டும்........ வள்ளியம்மை சுப்பிரமணியம்
தோழர் சுந்தரத்தின் நினைவு
தோழர் சுந்தரத்தின் நினைவு புளொட் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச. சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாய் கொண்ட அவர்; வீரமகனாய் மரணித்தது 02.01.1982 ஆண்டு.
புதிய பாதை அமைத்த தோழனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்டத் தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982 ல் யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளின் தவைர் பிரபாகரனால் ஒளிந்திருந்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்;.
தோழரின் வரலாற்றை மேலும் அறிய
வாசலைப்பார்த்து கதிரை போடப்பட்ட சித்திரா அச்சகத்தில் ஒருவர் அச்சகத்தின் உள்ளே வர உள்ளே கதிரையில் இருந்த சுந்தரம் வந்தவரைப்பார்த்துச் சிரித்திருக்கிறார் .சுட்டவனை சுந்தரத்திற்கு நன்கு தெரிந்திருக்கவேண்டும் என்று அபிப்பிராயப்படுகிறார் அச்சக உரிமையாளரான மரியதாஸ் மாஸ்ரர் . அந்த அதிர்ச்சியிலிருந்தும் மன உளைச்சலில் இருந்தும் மரியதாஸ் மாஸ்ரர் வாழ்க்கைமுழுதும் மீளவில்லை .அவர் வறுமையின் பின்னணியில் வாழ்பவர் ,போலீஸ் அவர் அச்சகத்தை மூன்று மாதங்களுக்கு மேலாக மூடியது .பின்னர் திறக்க அனுமதி கொடுத்தது .ஒரு உள்ளூர் ஆலோசனையின்பேரில் சுந்தரத்தை வைக்கல் பொம்மையில் உருவம் செய்து அருகில் உள்ள ஞானம் ஸ்ரூடியோ சந்தியில் அவலச் சாவடைந்த உயிருக்கு செய்யும் சில “களிப்பு” வகைகள் செய்து சுந்தரத்தின் பாவனை உயிர் அவ்விடத்தில் கொளுத்தப்பட்டது .
மரியதாஸ் மாஸ்ரருக்கு பின்னர் எவ்வித அச்சக வேலைகளும் வராமல் நின்றுபோனது .தனது மகளை அவர் வீட்டு வேலைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பமுயன்றார் .
அவர் நண்பர்கள் ஓரிருவர் அவருக்கு அச்சக ஓடர்களை எடுத்துத்தர பெரிதும் முயன்றனர் ,
எதுவும் வாய்க்கவில்லை ,அவர் நண்பர் ஒருவர் “இங்கே சுடவேண்டாம் !” என ஒரு அறிவித்தல் வைக்கச் சொல்லி அவரை மன உழைச்சலில் இருந்து மீட்க முயன்றார் .பின்னர் அச்சகம் மூடப்பட்டது .
ரஸமோனிய காலம்
***
சுந்தரத்தின் கொலையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு .அமிர்தலிங்கத்திற்கு “நோக்கம் இருக்குமா ?” என ஒரு பலமான அல்லது லேசான அபிப்பிராயம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது .
அவரது புதியபாதை அரசியல் நிலைப்பாடுகள், அமிர்தலிங்கம் மீதான கடும் வெளிப்படையான விமர்சனம் என்பவை இவற்றிற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது ,இதனுடன் துரையப்பா கொலை பின்னணியும் சேர்த்து நோக்கப்படுகிறது அமிர்தலிங்கம் சுந்தரத்தின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருக்கிறார் ,ஆனால் சுந்தரத்தை தனக்குத் தெரியாது நேரில் பார்த்ததில்லை என அவைக்கு தெரிவித்திருக்கிறார் .பின்னொரு தகவலின்படி திருமதி மங்கையற்கரசி அவர்கள் பிரபாகரன் காலில் விழுந்து அழுததாகவும் இன்னொரு கதை உண்டு ,ஆனால் ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தின்மீதான வெற்றிகரமான முதலாவது தாக்குதல் பிரபாகரனை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் அப்படி ஒரு தாக்குதலை பிரபாகரனும் செய்வதற்கு முயன்று பார்த்திருக்கலாம் எனவும் அதில் மிகவும் தேர்ச்சி பெற்ற இராணுவ வல்லமை சுந்தரத்திற்கே உண்டு எனவும் ,புலிகளில் இத்தகைய தகுதிநிலை சுந்தரத்திற்கு மட்டுமே உண்டு எனவும் பிரபாகரன் சுந்தரத்தைச் சுடுவதற்கு இதுவே காரணமாக இருந்தது எனவும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது .
சுந்தரத்தின் தந்தை இராமலிங்கம்சதாசிவம் ஆசிரியர்,
தாயார் கணபதிப்பிள்ளை பசுந்தரம்.
அம்மாவின் பெயரைத்தான் இயக்கப் பெயராக வைத்தார் .
அவருக்கு மணி ,பாபு என்றழைக்கப்படும் இரு சகோதரர்கள் ,சகோதரிகள் இருவர் பெயர் தெரியவில்லை .
மாமன் இராசரத்தினம் பிரபல ஓவியர், மணி அவர் வழியில் ஓவியர்
மறதியின் கணத்தில்
**
போலீஸ் அச்சகத்தை மூடி அங்கிருந்த அனைத்து தஸ்தாவேஜுகளையும் நூல்களையும் அச்சுவேலை விபரங்களையும் தனது ஆய்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது அங்கு நுஹ்மானின் பலஸ்தீனக் கவிதைகள் ,மற்றும் செங்கை ஆழியானின் புவியியல் சூழலியல் நூல்கள் இருந்தன ,
போலீஸ் ஒரு முன்நிபந்தனை மரியதாஸ் மாஸ்ரருக்கு விதித்தது .அங்கிருந்த பெயர்களிற்குரியவர்களை அவரே போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து நிறுத்தவேண்டும் ,செங்கை ஆழியான் பல தயக்கங்களினூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது நிலையை போலீஸ் அதிகாரிகளுக்குப் புரியவைத்தார் .
பேரா .எம் ஏ .நுஹ்மான் பலஸ்தீனக் கவிதைகள் மொழிபெயர்ப்பை ஒரு இளம் போலீஸ் அதிகாரி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் .
போலீஸ் அதிகாரி நுஹ்மானைக்கேட்டார்
” இதிலிருந்து சமூகத்திற்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்லவருகிறீர்கள் ?”
கைலாசபதி கூட இப்படியொரு கேள்வியை இலக்கியத்தளத்தில் அப்போது கேட்டிருக்கமுடியாது என ஈழக் கவிதைசெல்நெறிகள் பற்றி ஒரு ஆய்வு மாணவர் அப்போது கருத்து வெளியிட்டார் .
புதியபாதை எப்போதும் இடதுசாரிகள் தமது அச்சு வேலைகளை செய்யும் வேறொரு அச்சகத்திலேயே அடிக்கப்பட்டுவந்தது .
அந்த அச்சகத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாய் இந்த ஒரு இதழ் மட்டும் சித்திரா அச்சகத்தில் அடிப்பதற்கு மரியதாஸ் மாஸ்ரரால் ஒப்புக்கொள்ளப்பட்டது .அதுவும் அந்த அச்சகத்தின் பேரிலேயே .
மரியதாஸ் மாஸ்ரர் ஏழாலையைச் சேர்ந்தவர் .இப்போது அவர் நிலை என்ன எனத்தெரியவில்லை .மறதியின் தளத்திலேயே எப்போதும் இயங்கும் வரலாற்றின் இருண்ட ஒரு மடிப்பில்
மரியதாஸ் மாஸ்ரருக்கும் ஒரு இடம் இருக்கும்தான் இல்லையா ?
சுந்தரமும், சந்ததியாரும் சிங்கள நூல்களை வாசிக்கவும், மொழி அறிவு பெறவும் சிங்கள மொழியை சுளிபுரத்தில் டாக்டர் தம்பையா என்பவரிடம் 70’இல் கற்றனர்.மார்க்சிய நால்களையும், அதன் யதார்த்த நடைமுறைகளை தோழர் கே ஏ சுப்பிரமணியத்திடமும் – விவாதங்களின் மூலம் கற்றுக் கொண்டனர்.
சிறிதுகாலம் சுந்தரம் புத்தளத்தில் பாதுகாவலராக வேலைசெய்திருக்கிறார் .பின்னர்
1974 மட்டில் இந்தியாவிற்குப் படிக்கப்போன நாளில் வீட்டில் வறுமை நிலவியது ,வயதிற்கு வந்த அவரது மூத்த சகோதரிக்கு திருமண ஏற்பாடுகளில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த நேரத்தில்
சுந்தரத்திற்கும் படிப்புச் செலவுகளிற்கு பணம் தேவையாக இருந்தது , சுந்தரத்தின் தாயார் பசுந்தரம் தனது தாலிக்கொடியை கச்சதீவிற்கு போன அவரது உறவினரிடம் கொடுத்தனுப்பியபோது சுந்தரம் அத் தாலிக்கொடியை கச்சதீவில் பெற்றுக்கொண்டார் ,
அதை விற்று தனது படிப்பு தேவைகளை நிறைவேற்றி படிப்பை முடித்து 1977 இல் கொழும்பு வந்து கொழும்பில் இயக்கத்தொடர்புகள் ஏற்படுகிறது ,
பின்னர் காந்தீயம் அமைப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் .மலையக மக்களுக்கான மறுவாழ்வுப்பணியில் அவர் தீவிரமாக ஈடுபடுகிறார் .
சுமார் ஆறுமாத இடைவெளிகளில் இடையிடையே வீட்டிற்கும் அவர் வந்துசெல்கிறார் . யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே நடைபெறும் தமிழ்வகைப்பட்ட தனிநபர் தீவிரவாத நடவடிக்கைகளில் சுந்தரமும் பங்குகொண்டதாக போலீஸ் கருதுகிறது ,
1979 இல் அவரது தந்தையரையும் மைத்துனரையும் போலீஸ் கைதுசெய்து யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் விசாரணையில் வைத்திருந்தது .
அவர் இறுதியாக வீட்டிற்கு வந்த 1981 ஜூன் மாத இறுதி இரவொன்றில், . அயல் வீட்டில் வாங்கிவந்த உணவை அவர் தனது வீட்டில் இறுதியாக உண்டார் . வறுமையின் காரணமாய் வீட்டில் சாப்பாடு இருக்கவில்லை ,மரங்கள் அசைந்தாடும் அந்த இரவை ஒரு பதட்டத்துடன் கண்காணித்தபடி அவர் தாயிடமிருந்து அந்த உணவைப் பெற்றுக்கொண்டார் .அவர் கடைசித் தங்கச்சி தனக்கு ஒரு வானொலிப் பெட்டியை வாங்கித்தரச்சொல்லி சுந்தரத்திடம் அப்போது கேட்டிருக்கிறார் .
” கொஞ்ச நாள் பொறு !
நான் பிரச்சனையில் இப்போ இருக்கிறேன் ,உனக்கு வாங்கித்தாறேன் !” என சுந்தரம் தனது தங்கச்சிக்கு சொல்லியபோதிலும் அவரால் எப்போதும் தனது தங்கச்சிக்கு ஒரு வானொலிப் பெட்டியை வாங்கிக்கொடுக்க முடிந்ததில்லை .
அவர் மூத்த சகோதரி வீட்டின் நிலையை அப்போது அவருக்கு சொல்லியிருக்கிறார் ,
“அங்கை இருக்க வீடில்லாமை சனங்கள் இருக்கு ! உங்களுக்கு இருக்க ஒரு வீடாவது இருக்கு !”
என சுந்தரம் பதில் சொன்னார் .
சுந்தரம் சுடப்பட்டநிலையில் அவரது பால்ய உயிர் நண்பர் ஜெர்மனியில் இருந்து சுந்தரத்தின் இறுதிச்சடங்குகளுக்கான பணத்தை அனுப்பி அவரது செலவிலேயே சுந்தரத்தின் இறுதிக்கிரியைகள் மற்றும் தொடர்ந்த காரியங்கள் நடந்தன . சுந்தரத்தின் குடும்ப வறுமையை தன்னால் இயன்றவரை போக்கி நின்றார் அந்த ஜெர்மன் நண்பர் .இடையிடையே தன்னால் இயன்றவரை அவர்கள் குடும்பத்தினருக்கு காசு அனுப்பிக்கொண்டிருந்தார் ,
சுந்தரத்தின் இன்னொரு உயிர் நண்பர் அவரது கடைசித் தங்கச்சியை சீதனம் எதுவும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார் .
சுந்தரத்தின் நினைவாக அவரது விசுவாசமான தோழரான பாலமோட்டை சிவம் ,தன்னை “சண்முகம் ” என பின்னர் பேரிட்டு அழைத்துக்கொண்டதோடு தனது நெஞ்சிலும் சுந்தரத்தைப் பச்சை குத்திக்கொண்டார் புதியபாதை வகுத்தவன் தான் சுந்தரம்மக்கள் புரட்சி வெல்ல உழைத்தவன் தான் சுந்தரம் புதியபாதை வகுத்தவன் தான் சுந்தரம்மக்கள் புரட்சி வெல்ல உழைத்தவன் தான் சுந்தரம் தலைவர்களின் பொய்யுரையை எதிர்த்தவன்தன் மானத்தோடு விடுதலைக்கு உழைத்தவன்தலைவர்களின் பொய்யுரையை எதிர்த்தவன்தன் மானத்தோடு விடுதலைக்கு உழைத்தவன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தில்ஒரு தளபதியாய் இறுதிவரை உழைத்தவன்தமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தில்ஒரு தளபதியாய் இறுதிவரை உழைத்தவன்…..புதியபாதை மலையத்து ஏதிலிக்கும் உதவினான் – காணிமனைகள் தந்து குடியமர்த்தி பேணினான்மனக்கவரும் பாட்டாளிக் கொள்கையில் – தமிழ்மக்களினம் நடைபோடத் தூண்டினான்……. புதியபாதை சுழிபுரத்து மண்தனிலே தோன்றினான் பகைவர்சூட்சி வெல்லும் வீரனாக விளங்கினான்ஆனைக்கோட்டை காவல் நிலையம் தாக்கியே பகைவர்ஆயுதத்தை கைப்பற்றிக் காட்டினான்……… புதியபாதை தவறுகின்ற தலைமையினை சாடினான் – அவன்தவறாது விடுதலையை நாடினான்துரோகிகளால் சூடுபட்டு மறையினும் – எம்தோழர்களின் உள்ளங்களில் வாழ்கிறான்………. புதியபாதை
http://plotenews.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-33%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/
ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையே அரங்கேறிய கொலைக் கலாச்சாரம்
புளொட்டின் முதலாவது மத்தியகுழுவிலிருந்து ஜயர், சாந்தன் ஆகியோர் விலகிக் கொண்டபின் சுந்தரம்(சதாசிவம் சிவசண்முகமூர்த்தி-சுழிபுரம்), உமாமகேஸ்வரன்(கதிர்காமப்பிள்ளை நல்லைநாதன்-தெல்லிப்பளை), வசந்தன்(தம்பிப்பிள்ளை சந்ததியார்-சுழிபுரம்), ராஜன்(ஞானப்பிரகாசம் ஞானசேகரன்-பரந்தன்), காத்தான்(கிருஷ்ணகுமார்-மானிப்பாய்), பார்த்தன்(இராஜதுரை ஜெயச்சந்திரன்-திருகோணமலை, கண்ணன்(ஜோதீஸ்வரன்-வடலியடைப்பு), இராமலிங்கம் வாசுதேவா (மட்டக்களப்பு), பாபுஜி(மாதகல்), நிரஞ்சன்(சிவனேஸ்வரன்-உடுவில்), மாணிக்கம்தாசன்(நாகலிங்கம் மாணிக்கம்தாசன்-யாழ்ப்பாணம்), பெரியமெண்டிஸ்(பாலமோட்டை சிவம்) உட்பட பலர் இணைந்து புளொட்டை வளர்ப்பதை நோக்கி செயற்படத் தொடங்கியிருந்தனர்.
சுந்தரம், உமாமகேஸ்வரன், ரவி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தபால் நிலையக் கொள்ளையுடன் ஆரம்பிக்கப்பட்ட புளொட்டின் செயற்பாடுகள், சுந்தரத்தின் தலைமையில் ஆனைக்கோட்டை பொலிஸ்நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றியும், கிளிநொச்சி வங்கியைக் கொள்ளையிட்டும் ஆயுதபலத்திலும் நிதிவளத்திலும் மேலோங்கி வந்த அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்தபோதிருந்த நடைமுறையான "துரோகிகள்" ஒழிப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
1970 வட்டுக்கோட்டை பாராளுமன்ற தேர்தலில் அமிர்தலிங்கத்தை தோற்கடித்த ஆ.தியாகராசாவையும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான பாலசுப்பிரமணியம் என்பவரையும் கொலை செய்ததும் இதன்பாற்பட்டதே. தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது சுத்த இராணுவக் கண்ணோட்டத்தையும் கடுமையாக விமர்சனம் செய்த சுந்தரம் "புதிய பாதை" பத்திரிகை மூலமாக முற்போக்குக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார். இடதுசாரி அரசியலில் ஓரளவு தெளிவுபெற்றிருந்த சுந்தரத்தால் வெளியிடப்பட்ட "புதிய பாதை" பத்திரிகை தாங்கி வந்த கருத்துக்கள் புளொட்டின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. புளொட்டின் இராணுவ மற்றும் அரசியல் விடயங்களில் சுந்தரத்தினுடைய செயல்திறனும், ஆற்றலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
காந்தீயம் செயற்பாடுளில் சந்ததியாருடன் ஈடுபட்டுக் கொண்டிருந்த பரந்தன்ராஜன் இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சந்ததியார் தொடர்ச்சியாக காந்தீயம் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்ததோடு, காந்தீயத்திற்கூடாக பலரை புளொட்டுக்குள் உள்வாங்கத் தொடங்கியிருந்தார். மாறுபட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட, மாறுபட்ட சமூகப் பார்வை கொண்டவர்கள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மூலம் புளொட் வளர்ச்சியடையத் தொடங்கியது. சுந்தரத்தின் கடின உழைப்பின் மூலம் வெளிவந்த "புதிய பாதை" பத்திரிகையும் இராணுவத் தாக்குதல்களும், சந்ததியாரால் காந்தீயம் அமைப்புக்கூடாக மக்கள் மத்தியில் மேற்கொண்ட பணிகளும் புளொட்டின் வளர்ச்சியை மிகவும் வேகமாக முன்நோக்கி கொண்டு சென்றது.
புளொட் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வந்ததோடு இராணுவத்தாக்குதல்களிலும் வெற்றிபெற்று வருவதை உன்னிப்பாகவும் காழ்ப்புணர்ச்சியுடனும் அவதானித்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழவிடுதலைப் போராட்டம் தனது கைகளிலிருந்து விலகிச் செல்வதை உணர்ந்து கொண்டார். இப்பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் பார்வை இலங்கை இனவாத அரசின் மீதல்ல, புளொட்டின் மீது விழுந்திருந்தது. ஜனவரி 2, 1982 "புதிய பாதை" பத்திரிகை ஆசிரியரும், புளொட் என்ற இயக்கத்தை உருவாக்க மூலகாரணமாய் விளங்கியதுடன் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவருமான சுந்தரம், "புதிய பாதை" பத்திரிகையை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை சித்திரா அச்சகத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சி பதவிக்கு வந்த காலத்திலிருந்தே தொடர்ச்சியாக தமிழர்களையும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களையும், அவர்களின் நியாயபூர்வமான போராட்டங்களையும் அரசபடைகளை ஏவிவிட்டு அடக்கிவந்தது. குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டிருந்தது. மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி விடுதலையான நவாலியைச் சேர்ந்த இன்பம்(இரத்தினம் விஸ்வஜோதி), செல்வம் ஆகியோர் அவர்களது வீடுகளிலிருந்து இரவுவேளை அரசபடைகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின் அவர்களது சடலங்கள் அல்லைப்பிட்டி வீதியில் இலந்தையடி என்னுமிடத்தில் வீசப்பட்டிருந்தன.
தமிழீழ விடுதலை இயக்கத்தைச்(TELO)சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் எதிர்பாராத வகையில் பருத்தித்துறைக்கருகே மணற்காடு என்ற இடத்தில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாண நூல்நிலையமும், யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களும் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசநாயக்கா போன்றோரின் நேரடி மேற்பார்வையில் தீக்கிரையாக்கப்பட்டன. 1977 பாராளுமன்றத் தேர்தலில் - "துரோகிகள்" துப்பாக்கி முனையில் ஒழித்துக்கட்டப்பட்ட தேர்தலில் - "தமிழீழமே ஒரே தீர்வு" என மக்களின் "ஆணை" பெற்று பாராளுமன்றம் சென்ற அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் மாவட்ட சபைகள் குறித்த கனவில் மூழ்கியவர்களாக தமது பாராளுமன்றப் பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசின் பேரினவாதப் போக்கையும், அரசபடைகளால் இளைஞர்கள் கைது செய்யப்படுவதையும், இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதையும், அமைச்சர்களின் மேற்பார்வையில் திட்டமிடப்பட்டு ஏவிவிடப்படும் வன்முறைகளையும் சுந்தரம் தனது "புதிய பாதை" பத்திரிகைக்கூடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றதுடன் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாது, ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் கூடி உறவாடி தேனிலவில் திளைப்பதையும், தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு தமிழ் மக்களின் நலன் அல்ல, பாராளுமன்ற ஆசனங்களே அவர்களது ஒரே குறிக்கோள் என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். தமிழ் மக்கள் பேரினவாத அரசுக்கெதிராக மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் பேரால் பிழைப்பு நடாத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கும் அவர்களது தவறான போக்குகளுக்கெதிராகவும் போராடவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார்.
ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளோ, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இன அழிப்பு நடவடிக்கைகளையோ, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழ்மக்களின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்ததையோ புரிந்து கொள்ள முடியாதவர்களாக காணப்பட்டதோடு, "அண்ணன்" அமிர்தலிங்கத்தின் அரவணைப்பில் வளர்ந்த "தம்பி" பிரபாகரன் சுந்தரத்தை அழித்தொழித்ததன் மூலம் அண்ணன் மீதான தம்பியின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் தன்னுடன் ஒன்றாகப் படுத்துறங்கிய மைக்கல், பற்குணம் போன்றவர்களை படுக்கையிலேயே சுட்டுக்கொலை செய்த, தமது இயக்கத்திலிருந்தவர்களை கொலை செய்வதற்கென குளிர்பானத்துக்குள் நஞ்சைக் கலந்து கொடுத்த கலாச்சாரத்தில் வளர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரினால் தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் சுந்தரத்தைப் படுகொலை செய்ததன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது கொலைக் கலாச்சாரத்தை மக்கள் முன் அரங்கேற்றியிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து, அதிலிருந்து வெளியேறி வெளிப்படையாக தனது முற்போக்கு அரசியல் கருத்துக்களை முன்வைத்த சுந்தரத்தை படுகொலை செய்ததன் மூலம் யாருடைய நலன்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் செயற்படுகின்றனர் என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். ஈழவிடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கெதிராக இலங்கை அரசும் அதன் படைகளும் மாத்திரம் அன்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூட தமது துப்பாக்கியை பகிரங்கமாக உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர்.
சுந்தரத்தின் படுகொலையை அடுத்து உமாமகேஸ்வரன், கண்ணன் (சோதீஸ்வரன்), உடுவில் சிவனேஸ்வரன், அரபாத் போன்றோர் இந்தியா சென்று விட்டிருந்தனர். சந்ததியாருடன் செயற்பட்டுவந்த பரந்தன் ராஜன், பாபுஜி, மாணிக்கம்தாசன் உட்பட பலர் ஏற்கனவே இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்ட நிலையிலும், சந்ததியார் தொடர்ச்சியாக காந்தீய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததோடு, காந்தீய அமைப்புக்கூடாக புளொட்டை வளர்க்கும் செயற்பாடுகளை செய்தவண்ணமிருந்தார். உமாமகேஸ்வரன் இந்தியாவில் தங்கிவிட்டிருந்த நிலையில் தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு மத்தியிலும் புளொட்டுக்குள் பலரை உள்வாங்கிக் கொண்டு சந்ததியார் செயற்பட்டார். ஆனால் இக்கால கட்டத்தில் புளொட் ஒரு அமைப்பு வடிவத்தையோ, ஒரு அரசியல் கொள்கைத் திட்டத்தையோ, ஒரு வேலைத்திட்டத்தையோ கொண்டிருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தினரால் சுந்தரம் படுகொலை செய்யப்பட நிகழ்வானது புளொட் உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான உணர்வலைகளையும் ஏற்படுத்திவிட்டிருந்தது. ஈழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட புளொட் உறப்பினர்கள் அரச படைகளின் தேடுதல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் மட்டுமல்லாது ஈழ விடுதலைக்காகப் போராடுவதாக கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைக் கரங்களில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் புளொட்டின் முன்னணி உறுப்பினர்களை குறிவைத்து தமது கொலைத் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
நியாயுதபாணியான சுந்தரத்தைக் கொலை செய்தும் அத்துடன் திருப்தியடையாத வேலுப்பிள்ளை பிரபாகரன் உமாமகேஸ்வரன் மீதான கொலை முயற்சியில் இறங்கினார், மே 19, 1982 சென்னை பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் துப்பாக்கி பிரயோகத்தில் இருந்து உயிர் தப்பிய உமாமகேஸ்வரனும் கண்ணனும் இந்தியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் உமாமகேஸ்வரன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனும் ராகவனும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் புளொட் உறுப்பினர்கள் மீது தொடர்ந்து வந்த கொலை முயற்சிகளால் ஏற்கனவே சுந்தரம் படுகொலையின் பின் கடுமையான உணர்வலைகளுக்கு உட்பட்டிருந்த புளொட் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய உறவில் இருந்த அளவெட்டியைச் சேர்ந்த பரநிருபசிங்கம் இறைகுமாரன், சிவபாலசிங்கம் உமைகுமாரன் ஆகிய இருவரையும் கடத்திச் சென்று சுட்டுக் கொலை செய்திருந்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் பின் கருத்து முரண்பாடுகளையும், அரசியல் முரண்பாடுகளையும் ஜனநாயக முறையில் தீர்த்துக் கொள்வதற்கு மாறாக துப்பாக்கி முனையில் தீர்க்கப்படும் கொலைக் கலாச்சாரமாக ஈழ விடுதலைப் போராட்டம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
சுந்தரம் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டது எப்படி நியாயப்படுத்த முடியாத ஒன்றோ அதேபோல் புளொட்டினால் இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை செய்யப்பட்டதும் எத்தகைய காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாததாகும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலை உணர்வுடன் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் இலங்கை அரசபடைகளால் மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு தமது தலைமையைக் காப்பதற்கான போட்டியிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். -நேசன்
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்