Abducted on 7 August 1985 (அமரர் 1986)


சங்கானைப் பலநோக்குக் கூட்டுறவுச் சமாசத்தின்
பொங்கும் தலைவராகப் புகழுடன் சேவைசெய்தார்.
மூளாய்க் கூட்டுறவு வைத்திய சாலைதனில்
மூளையாகச் செயற்பட்டு முன்னுக்குக் கொண்டுவந்தார்.
சுளிபுரம் விக்ரோறியாக் கல்லூரி வரலாற்றில்
அழியாத பற்பல அணிவகுப்பைத் தோற்றுவித்தார்.
சாதிபேதம் பாராது அனைவரும் சமமென்று....
மோதல் தவிர்த்து முரண்பாடு நீக்கிவைத்தார்.
வரிவரியாய்ச் செய்தித்தாள் விமர்சனம் செய்கின்ற
கிரிக்கெட் வாரியத்தின் கிளைகளைத் தோற்றுவித்தார்.
அனைவரையும் உடன்பிறப்பாய் அரவணைத்து வாழ்ந்தவரை.....
நினைக்க முடியாத நிட்டூரம் செய்தழித்தார்.
பசித்தமுகம் பார்த்து பாசத்துடன் அழைத்துவந்து........
புசிக்க உணவுமல்ல: பூணுகிற துணிகொடுப்பாய்.
உறவினர் செயல்களினால் ஊதாரிப்பெயர் பெற்றவரை.....
மறவாது கூட்டிவந்து மனம் மகிழப் பராமரித்தாய்.
வேலைபறி போனவரும் வீண்பழி சுமப்பவரும்.....
வேலைகேட்டு வந்துவிட்டால் வெறுங்கையாத் திரும்பமாட்டார்.
ஆலையின் கரும்பாக அல்லல்பட்ட தமிழருக்கு.....
ஓலையனுப்பும் யமனாய்நீ வாழவில்லை.!
தென்னிலங்கைத் தோழர்கள் சிறுவயதே உன்நண்பர்.
அந்நியமாய்ப் பழகவில்லை அடுத்துக் கெடுக்கவில்லை.
திண்ணிய நெஞ்சுரத்தில் தீங்கெனக்கு வாராதென்று....
எண்ணி -யாழ்- வாழ்ந்தவுன்னை எப்படித்தான் அழித்தாரோ?
வாழையடி வாழையான சுளிபுரம் இராசசுந்தரனார்
காளைகள் போலவே களைப்பில்லாத பந்தாட்டக்காரன்
ஏழை எளியவரின் ஒளிவிளக்கான ஏந்தலிவன்....
கோழைமனம் படைத்தோர் உனைக் கொன்றுபழகினரோ?
உந்தன் இல்லத்தில் உண்டவர்கள் கணக்கிலுண்டோ?
சொந்தங்கள் போலவே அனைவரையும் அணைத்திட்டாய்
நிந்தனை செய்தவரும் வீடுநோக்கி வந்து விட்டால்....
சிந்தை கலங்காது சீராட்டி ஆதரித்து மகிழ்ந்தவனே!
தஞ்சமென வந்தவரை தாபரித்துத் தயவுடனே....
கொஞ்சமும் மனக் கிலேசம் கொள்ளாது நேசித்து....
வஞ்சகரை அறியாமல் வழிவிட்டு வாழ்ந்தவனே.....
நஞ்சுகொண்ட மனிதர்களை நயமாக நம்பிவிட்டாய்!
வள்ளியம்மை சுப்பிரமணியம்
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்