செய்திகள்
சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா செப்டம்பர் 05,2011,16:50 IST |
சிங்கப்பூர் : சிங்கப்பூர் கடற்கரைச் சாலை கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் கவிஞர் பா.திருமுருகனின் "ஊதாங்கோலும் ஒரு துண்டு நெருப்பும்" கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா செப்டம்பர் 04ம் தேதியன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. முற்றிலும் புதுமையாக மகளிரே நடத்திய இவ்விழா, இலக்கியா மதியழகனின் தமிழ் வாழ்த்துடன் முனைவர் சத்திய பாமா முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் துவங்கியது. கவிஞர் கலையரசி செந்தில்குமார் வாழ்த்துப் பா வாசித்தளித்தார். தொடர்ந்து முனைவர் தேன்மொழி சண்முகவேல் நாட்டுப்புறப் பாடல் பாணியில் பாடி வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி தற்கால இளம் கவிஞர்கள் புதுமை படைப்பதிலும், புதிய உத்திகளைக் கையாளுவதிலும், மனிதநேயப் பண்பாட்டிலும் சிறந்து விளங்குவதை முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன் எடுத்தியம்பி நூலாய்வுரை நிகழ்த்தினார். நூல் வெளியீட்டிலும் புதுமை காணப்பட்டது. ஒரு நாட்டுப்புற விறகு அடுப்பில் பானையில் நூலைப் போட்டு, மகளிர் சிறு பானை நீர் வார்க்க, வெளியீட்டாளர் டாக்டர்.இ.மாலதி ஊதாங்கோல் ஊத நூல் முகிழ்ப்பது போலக் காட்சிப்படுத்தியது அருமையிலும் அருமையாக அமைந்தது. சிங்கை தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா கதிர்வேலு முதல் நூலைப் பெற, மலர்விழி ஜோதிமாணிக்கவாசகம், இந்திரா சுப.திண்ணப்பன், சந்திரா புருஷோத்தமன், சுதா இறைமதியழகன், வள்ளியம்மை சுப்பிரமணியம், அம்பை ஆ.பால சரஸ்வதி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டு நூலாசிரியரை வாழ்த்தினர். திலகவதி அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கவிஞர் சங்கரி சரவணன் சுவைபட நிகழ்வினை நெறிப்படுத்தினார். திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, கவிஞர் பா.திருமுருகனின் ஏற்புரையோடு நிறைவுபெற்றது.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்
Thanks to http://www.dinamalar.com/
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்