Sunday, November 27, 2011

மாவீரன் விடைபெற்ற நாள்! 27 கார்த்திகை 1989







    வசதிகள் மிகக் குறைந்த ஒரு சின்ன வீடு தான் "சத்தியமனை". அது எங்கள் எல்லாராலும் அமைக்கபட்டது . பல வரலாறுகளை அதனுள் கொண்டுள்ளது.சிறு வயதில் அந்த வீட்டை சுற்றி மேதின ஊர்வலம் நடத்தியதும், "சிறுபொறி" பத்திரிகை நடத்தியதும், உண்டியலில் காசு சேர்த்து கட்சிக்கு கொடுப்பதும் , பல தலைவர்கள் கூடி பேசியதும் , வெற்றிகள், கவலைகள், கண்ணீர் , இரத்தம் எல்லாம் பார்த்த வீடு. மிக வறுமையிலும் சத்தியம் மட்டும் என்றும் குறைந்ததில்லை. அங்கு அப்பா தன்னுடைய நீண்ட காலத்தை தொடர்ந்து கழித்தார். ஏனெனில் பல வாடகை வீடுகளில் இருந்த போது எல்லாம், பொலிசாரின் கெடுபிடிகளால் தொடர்ந்து ஒரே வீட்டில் வசிக்க முடியவில்லை. இது எங்கள் மாமா ,தனது சகோதரியான எங்கள் அம்மாவுக்கு வாங்கி கொடுத்தது. வீட்டு உரிமையாளர் பிரச்னை இன்றி வசிக்க முடிந்தது.
    அப்பாவின் நேர்மைக்கும் , வீரத்துக்கும், தீர்மானத்துக்குமான பல நிகழ்வுகள் பற்றி தோழர்களும், எங்கள் அம்மாவும் சொல்ல கேட்டதுண்டு,பார்த்ததுமுண்டு. , ஆனால் இது என்கண் முன்னால் "சத்தியமனை " இல் நடந்த நிகழ்வு.
     1988 இன் இறுதி பகுதிகள் ,எனது மகள் பிறந்து மிக சில மாதங்களே ஆகியிருந்தது. அப்பா கடும் சுகவீனமுற்று யாழ் திரும்பி இருந்தார். இந்தியன் ஆர்மி இன் கெடுபிடிகள் அதிகமாக இருந்த நேரம். தெற்கில் சிறிமாவோ எதிர் கட்சியாக இருந்துகொண்டு , தனது தேர்தல் வாக்குறுதியில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக இந்தியன் ஆர்மியைவெளியேற்றுவோம்  என்று தெரிவித்திருந்தார்கள். முற்போக்கு அணிகள்  அனைத்தும் இணைந்து இந்தியன்ஆர்மிக்கு  எதிரான வெளியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்தன. வினோதன், மோதிலால் நேரு, குமார் ,பொன்னம்பலம் என பலரும் அப்பாவுடன் இதுபற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். விடுதலை புலிகள்  அமைப்பும் இதற்கு அதரவாக இருப்பதாக இடையில் இருப்போர் தெரிவித்தனர் . அங்கு இருந்த மாத்தையா ,பிரபாகரன் பிளவு பற்றி தெரிந்திருக்கவில்லை. சிறிமாவோவை   யாழ்பாணத்துக்கு அழைப்பதற்கான முடிவை கட்சி எடுத்தது. மொழிபெயர்பாளராக கட்சியின் ஆதரவாளரான  மாமா ஒருவரை அழைப்பதாகவும்  தீர்மானித்தனர் .

கூட்டத்துகு முதல் நாள் கட்சியின் அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களும்  வந்திருந்தனர். மாலை கருகிய நேரம் திடீரென விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த தும்பனும், முன்னர் புளட் அமைப்பில் இருந்த வெற்றி என்கிற பையனும் ஆயுதத்துடன் வந்திருந்தனர், தும்பனை எனக்கு பாடசாலை  காலத்தில்  இருந்து  தெரியும் அதே போல வெற்றியையும் தெரியும். வந்ததும் என்னிடம் தான் தும்பன் கேட்டார் , "உங்கள் அப்பாவுடன் பேசவேண்டும்" என்று ,அப்பா அறையில் இருந்தார் ,தும்பன் கொண்டு வந்த துப்பாக்கியை வாசல் கதவில் வைத்துவிட்டு ,வெற்றியையும் வாசலில் விட்டுவிட்டு உள்ளே வந்து ,சுற்றிவளைப்பு  இன்றி "நீங்கள் நாளைக்கு கூட்டம்  நடத்துவதை இயக்கம் விரும்பவில்லை "என்றார் .அதற்கு அப்பா " இது பற்றி நாங்கள் நீண்ட நாட்களாக பேசி வருகிறோம் , இப்போது  இந்தியன் ஆர்மியின் வெளியேற்றம் என்பது அவசியம் " என்றார். அதற்கு தும்பன் " ஐயா இது எமது இயக்கத்தின் முடிவு, நீங்கள் நல்லவர் என்பது எங்களுக்கு தெரியும்,பொட்டரும்(நடராஜ ) நல்லவர் தான் ஆனால்  அவரை போட்டது நாங்கள் தான் . அதாலை இதை நிறுத்துங்கோ " என்றார். அதற்க்கு அப்பா,மிக நிதானமாக , மிக தீர்மானமாக உயிரை பற்றிய கவலையற்று  " இது இரவு நேரம், ஊரடங்கு வேளை வேறு, அவர் ஒரு நாட்டின் தலைவி ,காலையில் போய் இங்கு வராதை என்று சொல்ல முடியாது., இது அவசியம் என்று கருதுவதால் தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். ஒன்று நீர் செய்யலாம், என்னை சுட்டுவிட்டு போம், சிலவேளை கூட்டம்  நடக்காமல் போகலாம்" என்றார், "நான் சொல்றதை சொல்லிவிட்டேன் .."என்றபடி தும்பன் சென்றுவிட்டார். மீண்டும் கட்சி தோழர்களுடன் அப்பா கலந்தாலோசித்தார். (அந்த இடத்தில் நான் இருக்கவில்லை. ஆனால்  என் கணவர் இருந்தார்.அது பற்றி நான் விபரிக்கவில்லை. )இரவு யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால் கலையில் கூட்டம் இருப்பது உறுதியாகியது .

    அதிகாலை அப்பா வழமைபோல தூய வெண்மை வேட்டி, சட்டையுடன் தயார் ஆனார், இரவு நடந்த பிரச்னை பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. பல தோழர்கள் மேடை அமைப்பதற்காக பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்தில் இருந்தனர். சுமூகமான சூழல் உள்ளதா என்று அறிவதற்காக அவர் தனியாக புறப்பட்டார். மொழிபெயர்க்க வந்த தோழருக்கும், கட்சியின் முக்கிய ஒரு உறுப்பினருக்கும்  சடுதியாக நடுக்கத்துடன் காச்சல் வர, அவர்கள் வரவில்லை, மற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கூட்டத்துக்கான ஆயந்தங்களில் ஈடுபட்டனர்.  எனது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. நானும் வருகிறேன் என்று அப்பாவிடம் சொன்னேன் முதலில் மறுத்த அவர் வற்புறுத்தலின் பின் சம்மதித்தார். நானும், அப்பாவும் மீண்டும் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கை என்மனசில்  இல்லாமல் "சத்தியமனை"  இலிருந்து வெளியேறினோம் .......
    "சத்தியமனை இலுருந்து இரண்டு சைக்கிளில் புறப்பட்டோம். சுழிபுரம் பிரதான சாலை, துரையப்பா கடை, இடும்பன் கோவில் சந்தி வரை ஆர்மியை காணவில்லை. அதில் இருந்த ஆர்மி எங்களை மறித்து சோதனை செய்தது . எங்கும் கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கான சுவரொட்டிகள் இல்லை. பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்தில் சில தோழர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் கதைத்துவிட்டு ,பண்டதெருப்பு பெண்கள் பாடசாலைக்கு போனோம். அங்கு தேவர் அண்ணையின் மனைவியும், மகனும் ஒரு உறவுப் பெண்ணும் இருந்தார்கள் .அவர்களுடன் ரத்வத்தை , கல்கட் சேர்ந்து சிறிமாவோவை அழைத்துகொண்டு மீண்டும் பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்துக்குள் வந்தோம். உண்மையில் நான் அவ்வளவு ஜனக்கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கடுமையான உடல் உபாதையின் மத்தியிலும் மிக உற்சாகமாக அந்த கூட்டத்துக்கு அப்பா தலைமை தாங்கினார். சிறிமாவோ "இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம்" என்றபோது ஜனக்கூட்டம் கைதட்டல்களுடன் ஆர்ப்பரித்து அடங்கியது .இதனை சுற்றி நின்ற இந்திய இராணுவம் பார்த்து நின்றது. கூட்டம் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்த காணொளி.................
    விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் இருந்ததை ஸ்ரீமவோவும் இந்திய இராணுவமும் அறிந்திருந்தார்கள். அதனால் சிறிமாவோ அப்பாவை கொழும்பு வரும்படி வற்புறுத்தினார். அதனை மறுத்து வெளியில் வந்த அப்பாவிடம் இந்திய இராணுவம் தாங்கள் பாதுகாப்பு தருவதாக கூறினார்கள். " உங்களை வெளியேற்றுவதற்காக தான் இந்த கூட்டத்தையே ஏற்பாடு செய்தோம் . " என்று மிக தெளிவாக ,தீர்மானமாக சொன்ன அப்பாவை மிக பெருமையுடனும்  கர்வத்துடனும்  பார்த்தேன். அந்த   உயர்ந்த மனிதனை நான் பொக்கிசமாக காக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நானும் அவருடன் செல்ல ஆயத்தம் ஆனேன். "நீங்களும் வரவேண்டாம் உங்களை தொடர்வதன் மூலம் தான் சிக்கல்கள் ஏற்படும் , நான் கவனமாக இருப்பேன். நீங்கள் போங்கோ "என்று முற்றாக மறுத்துவிட்டார்.
    சில மணி நேரங்களின்  பின்னர் , அப்பா ஒரு விடுதலை புலியின் வீட்டில் தான் தொடர்ந்து சில நாட்கள்  இருந்தார். நான்  அங்கு சென்றும் பார்த்து வந்தேன். பின்னர் வந்த மேதின கூட்டத்தில் பங்கு பற்றியதும் , கடைசியாக சத்தியமனை " இல் இருந்து வெளியேற  வேண்டிய சூழல் பற்றியும் தொடர்வேன்.

27  கார்த்திகை:  விடுதலை புலிகளாலும், அநேக தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் "மாவீரர்" தினம்.  எங்கள் அப்பாவின்  அந்த பெருமை மிகுந்த இல்லத்தை ஒரு நூலகம் ஆகவும், குழந்தைகளின் விளையாட்டு  இடமாகவும்  மாற்றவேணும், . காலம்  முழுவதும் , அந்த உயர்ந்த மனிதனின்  சத்யம்  வாழ்ந்த  இடமாக  அது  இருக்க  வேண்டும்!

திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன்  27 November  2011

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF