தோழர் மணியத்தாரின் 25வது ஆண்டு நினைவும்
அவரிடம் கற்ற 25 பாடங்களும் -சோ.தேவராஜா-
சமகாலம் என்பது வர்க்கப் பிளவின் ஆளுகைக்குரியது. தொழிலாளர்கள் எனும் உடல், மூளை உழைப்பாளர்கள் ஏறத்தாழ 95 சதவீதப் பெரும்பான்மையினராகவும் மூலதனத்தை முதன்மைப் படுத்தும் பெருமுதலாளிகள் ஐந்து சதவீதத்திற்குட்பட்ட மிகச் சிறுபான்மையினராகவும் சர்வதேசச் சமூகத்தில் உள்ளனர்.
பூவுலகில் மிகச் சிறுபான்மையினரான பெருமுதலாளிகளே இப் பெரும் பூமியை ஆளும் வல்லமை பெற்றோராகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டனர். அவர்களின் மூலதனம் சகல தேசங்களின் எல்லைகளைக் கடந்தும் ஆட்சி புரிகின்றது.
ஆதிக்க நிதியங்கள், இப் பெரு முதலாளிகளின் ஆட்சி நீடிப்புக்கும் தொடர்ச்சிக்குமாகப் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் உலகின் உழைப்பாளர்களின் ஒற்றுமைக்குக் குந்தகமாகச் சாதி, இனம், மொழி, மதம், பிரதேசம், பால், நிறம் ஆகிய வேறுபாடுகளைப் பகை முரண்பாடுகளாக ஊட்டி வளர்த்து, ஊடகங்கள் மூலம் ‘மக்கள் சமூகம்” என்பதையே மறுதலித்து நிற்குமாறு, இப் பூமியை உருமாற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச ஏகாதிபத்தியச் சதியை நாம் அனைவரும் சமகாலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
மறுபுறத்தில் ஏகப் பெரும்பான்மையினராகிய உழைப்பாளர் சமூகம் தனது தொழிலாளி என்ற அடையாளத்துக்கு அப்பால் மூலதனத்தை உலகமயமாக்கிய ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிக்குப்பலியாகி குறுகிய அடையாளங்களுக்குள் தம்மை முடக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இக் குறுகிய அடையாளங்களினுள்ளும் குறித்த ‘பெரு முதலாளி” வர்க்கமே தன்னை முதன்மைப்படுத்தித் தலைமைத் தானங்களைத் தன் வசப்படுத்தியுள்ளது. இக் கொள்ளையினால் ஏகப் பெரும்பான்மையையுடைய தொழிலாளி வர்க்க சமூகம் தனது சர்வவியாபகமான அடையாளத்தை தற்காலிகமாக இழந்துள்ளதுடன் ஒடுக்கலுக்குள்ளான சாதி, இனம், மதம், பிரதேசம், பால், நிறப் பாதிப்புக்களுக்குள்ளாகிப் பாரிய ஒடுக்கலுக்குள் மேலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளி என்ற சொற் பாவனையையே துடைத்தெறியுமளவுக்கு நுகர்வுப் பண்பாட்டுச் சுழியில் சிக்கியுள்ள மக்கள் சமூகத்தில் ‘உற்பத்தி” ‘உழைப்பு” என்பவற்றின் அர்த்தம் மழுங்கடிக்கப் பட்டுள்ளது.
ஏற்றத்தாழ்வுகட்கு ஆட்பட்டுள்ள இப் பூவுலகில் உலகத் தொழிலாளர் ஒன்றுபடும் சாத்தியம் அருகிக் காணப்பட்டாலும், யதார்த்தத்தில், நீறுபூத்த நெருப்பாகக் குறுகிய அடையாளங்களைக் கடந்து சர்வதேச மட்டத்தில் ஆங்காங்கு பல முயற்சிகள் நடக்கின்ற தகவல்கள் நமக்கு நம்பிக்கை தருவன.
எனவேதான் தோழர் மணியத்தாரின் 25வது ஆண்டு நினைவு நாளிலே நாம் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மீட்கும் தேவையும் கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளது.
முதவாவதாக, நாம் யார் எனில், தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என எவ்விதக் கூச்சமுமின்றி உரத்துப் பிரகடனப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, ஒடுக்கலுக்குள்ளான மக்கள் என்ன வடிவத்தில் (சாதி, இனம் போன்ற பிறவும்) ஒடுக்கலுக்குள்ளாகிறார்களோ அந்த வடிவத்திலேயே தொழிலாளி வர்க்கம் தன்னை அடையாளப்படுத்திக் கால, தேச, வர்த்தமானங்களுக்கமைய வர்க்கக் கண்ணோட்டத்தில் சர்வவியாபக உண்மையான மாக்சியத்தைப் பிரயோகித்துப் போராடும் வல்லமையை வளப்படுத்தும் செய்நிரலை வகுக்கவேண்டும்.
மூன்றாவதாக, ஏகாதிபத்திய-பெருமுதலாளித்துவ-நிலமானியக் கூட்டுச் சேர்கையின் கபடச் செயற்பாட்டுச் செய்நிரலுக்குள் தொழிலாளி வர்க்கமோ கட்சிகளோ அகப்பட்டுப் பலியாகிப்பிளவுபடாமல் தம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்.
நான்காவதாக, வெகுசனங்கள் மத்தியில் தொழிலாளி வர்க்கக் கட்சியாக ‘இருத்தல்’ அன்றி ‘இயக்கம்’ ஆகச் செயற்படும் ஆளுமை பெறவேண்டும்.
ஐந்தாவதாக, ஒருமுனைவாதம், கதவடைப்புவாதம், சந்தர்ப்பவாதம், தாராளவாதம, திரிபுவாதம் என்பவற்றைத் தாண்டி வெகுசனங்கள் மத்தியிலான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் எந்தப் பெருங் கப்பலும் வந்து செல்லக்கூடிய மகா சமுத்திரம் போல ஒவ்வொரு மாக்சிஸ்ற்றும் கொம்யூனிஸ்ற்றும் விரிந்து பரந்த நெஞ்சுடன் பணிபுரியும் வல்லமை பெறவேண்டும்.
ஆறாவதாக, விரக்தி, தோல்வி, நம்பிக்கையீனம் என்பவற்றில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் வெற்றிகளையும் காணுமாறு வெகுசனங்களின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கட்சி எனும் ஸ்தாபனம், செல்வாக்குச் செலுத்தி அன்றாட வாழ்வில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
ஏழாவதாக, கொம்யூனிற் கட்சிக்குள் இருப்போர் மட்டுமே கொம்யூனிஸ்ற்றுக்கள் என்று குறுக்கிப் பார்க்காமல் கட்சிக்கப்பாலும் வேறு கட்சிகளிலும் பல்வேறு தளங்களிலும் தெரிந்தும் தெரியாமலும் வாழுகின்ற கொம்யூனிஸ்ற்றுக்களை அடையாளங்கண்டு உறவு பூண்டு மாக்சிச லெனினிச ஸ்தாபனத்தைப் பலப்படுத்தி வேலைகளை விரிவுபடுத்தி முன்செல்லும் தைரியம் பெறவேண்டும்.
எட்டாவதாகக், கட்சி ஸ்தாபனத்துக்குள் விமர்சனம்-சுயவிமர்சனம், ஐக்கியமும் போராட்டமும் என்பவற்றைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் உயிர்த்துடிப்புடன் கட்சியை இயங்கச் செய்யவேண்டும். நாளாந்தம் இயக்கம் உருப்பெறவேண்டும்.
சகலதும் கட்சியின் ஐக்கியத்துக்கான அவாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படவேண்டுமே தவிர பிளவுகளுக்கு வழிகோலக் கூடாது.
ஒன்பதாவதாக, கட்சிக்குள் குறுங்குழு மனப்பாங்கற்று, ஒளிவு மறைவின்றி, முற்கற்பிதமின்றி, முடிந்த முடிவுகளின்றி, முற்சாய்வின்றி, சனநாயக மத்தியத்துவத்துடன் திறந்த மனதோடு நிலமானியத் தலைமை விசுவாசத்துக்கப்பால், ஸ்தூல நிலமைகளைச் சரியாகக் கையாளவும் உண்மைகளைக் கண்டறியும் வகையிலும் விவாதங்கள் நடாத்தவும் கோபதாபங்களின்றியும் விருப்பு வெறுப்பற்றும் வெற்றி தோல்வி மனப்பாங்கின்றியும் பூரண சுதந்திரத்துடன் அமைதியான முறையில் நிதானமாகக் கலந்து பேசும் தோழமை உறவு பேணும் வல்லமை அனைவரும் பெறவேண்டும்.
பத்தாவதாக, மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், துன்ப துயரங்கள், பாகுபாடு, புறக்கணிப்பு எவையாகவிருப்பினும் அவற்றைக் கண்டறிந்து உடனுக்குடன் மக்கள் மத்தியில் நின்று, மக்களுக்கு நம்பிக்கையூட்டி, ஒன்றுபடுத்தி முறையான செயற்பாட்டைத் தூண்டி, வலுவூட்டி அவர்கள் அவற்றிலிருந்து விடுபடவும் பாதுகாக்கப்படவும் வெற்றி பெறவும் வல்ல பல்முனைகளிலும் போராட்ட சூழல்களைக் கண்டறிந்து உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும்.
பதினொன்றாவதாகக், கட்சி இயங்கும் சூழலிலுள்ள முதலாளித்துவ ஜனநாயகச் சட்டங்களையும் ஏற்பாடுகளையும் பயன்படுத்திக் கட்சியின் வளங்களையும் உட்கட்டமைப்பையும் பொறிமுறைகளையும் உருவாக்கிக் கட்சியைப் பலப்படுத்த வேண்டுமே தவிர ‘வறியவர்களின் கூடாரமாகக்” கட்சியைப் பலவீனப்படுத்தக் கூடாது.
பன்னிரண்டாவதாகக், கட்சி அரசியல் என்பது கட்சியின் சுலோகங்கங்களுடனும் கட்சியின் வருடாந்த நிகழ்வுகளுடன் மட்டும் திருப்திகொள்ளாது பல தளங்களிலும், பல முனைகளிலும் மக்கள் பரந்து வாழும் சகல இடங்களிலும் கடலுள் வாழும் மீன்களைப் போல் கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருந்து அன்றாடம் புரட்சிர நடவடிக்கைகளை உருவாக்கவும் கொண்டு நடத்தவும் ஆற்றல் பெற வேண்டும்.
பதின்மூன்றாவதாகப், ‘பூரண பொருள்முதல்வாதி அச்சமற்றவன்” என்ற துணிவுடனும் கூச்சமின்றிக் கட்சியின் பத்திரிகைகளையும் வெகுசன ஸ்தாபனங்களின் சஞ்சிகைகளையும் பொது மக்களிடம் விற்கவும் காசு கேட்டுப் பெறவும் அவை பற்றிய குறை நிறைகளைக் கேட்டறியவும் அவை பற்றி குறித்த எழுத்தாளர்களுடனும் கட்சியுடனும் கலந்து பேசவும் செயலாற்றும் வல்லமையுடையோராக ஒவ்வொரு கொம்யூனிஸ்ற்றும் தன்னைத் தகவமைக்கத் தயாராக இருக்கவேண்டும்.
பதிநான்காவதாகச், சொல்லும் செயலும் ஒன்றாயிருத்தல் கொம்யூனிஸ்ற்றின் மையப் புள்ளியாகும்.
பதினைந்தாவதாக, நிலமானிய-முதலாளித்துவ சிந்தனைகள், செயல்கள் அன்றாடம் எம்மை ஆக்கிரமிக்காதபடி எம்மை நாமே, விடாது, சுயவிமர்சனத்துக்குள்ளாக்கிப் புடம்போடுவதுடன் புதிய வார்ப்புகளாக கொம்யூனிஸ்ற்றுகள் மிளிர வேண்டும்.
பதினாறாவதாகக், கொம்யூனிஸ்ற் எவரும் வர்க்க சமரசத்துக்குப் பலியாகாதவாறும் சலுகைகள், விருதுகள், பட்டங்கள், பதவிகள் மூலம் சரணடைவுக்கு இடம் கொடாது புரட்சிகர மனப்பாங்குடன் சிந்திக்கவும் செயற்படவும் துணிவு பெறவேண்டும்.
பதினேழாவதாகக், கொம்யூனிஸ்ற் என்பவர் மக்களுக்குப் பின்னால் வாலாக இழுபடாமல் மக்களோடு மக்களாக மக்களுக்கு முன்னே சென்று வழிநடத்தும் தகைமை பெற்றிருக்க வேண்டும்.
பதினெட்டாவதாகக், கொம்யூனிஸ்ற் என்பவர், தான், தனது குடும்பம், தனது பிள்ளை, தனது உறவினர், தனது பரம்பரையினர் என்ற நிலமானிய-முதலாளித்துவ சிந்தனை வரம்புக்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளாத நிதானம் பெறவேண்டும்.
பத்தொன்பதாவதாக, நான், எனது என்ற தன்முனைப்பைக் கடந்து ‘ஒருவர் எல்லோருக்காகவும், எல்லோரும் ஒரு வருக்காவும்” என்ற பொதுமையறப் பண்பைப் பூண்டிருத்தல் வேண்டும்.
இருபதாவதாகப், பிறர் எவரையும் நக்கல் நையாண்டி செய்து புண்படுத்தல் போன்ற காரியங்களைத் தவிர்ப்பதும் எல்லோரையும் மதித்து மரியாதை கொடுப்பதும் அவரவர்களது குணநலன்களைப் புரிந்து அதற்கேற்ப அவர்களுடன் உறவைப் பேணுவதும் கொம்யூனிஸ்றுகளின் நடத்தையாகும்.
இருபத்தொராவதாக, எவரெவரிடம் என்னென்ன ஆற்றல்கள் உள்ளனவோ அவ்வவ் ஆற்றல்களை அறிந்து கட்சியினதும் பொதுமக்களினதும் நன்மைக்குப் பயன்படுத்தக் கூடியவராகக் கட்சியின் ஊழியர்கள் விளங்க வேண்டும்.
இருபத்திரண்டாவதாகக், கட்சியில் பணிபுரியும் ஒவ்வொரு புத்திஜீவியையும் ஏழு தொழிலாளர்கள் சூழ்ந்திருக்கும்படியும் அவரது கருத்துக்கள் அன்றாட நடைமுறை இயக்கத்திலிருந்து வெளிவருவனவாகவும் வெறும் புத்தகவாதமாக இல்லாதும் அவதானமாக இருப்பது ஒரு கொம்யூனிஸ்ற்றின் பொறுப்பாகும். அதாவது நடைமுறையே ஒரு கொம்யூனிஸ்ற்றின் உரை கல்லாகும்.
இருபத்திமூன்றாவதாகப், பல்வேறு துறைகளிலுமுள்ள நிபுணத்துவ ஆற்றல் மிக்கோரை அரவணைத்து அவர்களின் ஆற்றல்களை ஒருமுகப்படுத்தவும் அவர்களுக்கடையிலான பேதங்களை நீக்கி ஸ்தாபன நலன் கருதி ஒருமுகமாகச் செயற்படும் திறன்களை வளர்க்கும் முயற்சிகளிலும் இடையறாது ஈடுபடல் வேண்டும்.
இருபத்திநான்காவதாகப், பயனுள்ளதாயினும், எந்தச் செயற்பாடும் ஸ்தாபனத்தின் ஒற்றுமையைச் சிதைக்குமெனில் அதை அவசரமாகத் திணிக்கும் முயற்சிகளிலிறங்காது மாற்றுக் கருத்துடைய தோழர்களும் சுயமாகவே அதை ஏற்கும் மனநிலையைப் பெறும்வரை விட்டுக்கொடுத்துப் பொறுமையாகவும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படுவதில் ஓயக்கூடாது.
இருபத்தைந்தாவதாக, எந்தவொரு கடின உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் அவரவரது மகிழ்வுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர எவரதும் நிர்ப்பந்தத்திலும் கூலி மனப்பாங்கிலும் செய்யப்படுவதாக இருக்கக் கூடாது. ஸ்தாபனத்தின் எந்தவொரு முடிவும் பெரும்பான்மையால் தீர்மானிக்கப்பட்டால் அம்முடிவுடன் உடன்படாவிடினும் அதனைச் செயற்படுத்துவதில் தனது பொறுப்பிலிருந்து விலகாதிருக்கவேண்டும்.
-சோ.தேவராஜா- 2014
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்