2015ல் அமரர் டேவிட் ஐயா அவர்களின் நினைவு மலருக்காக நான் எழுதிய கட்டுரை.இம் மலர் கிடைக்கப்பெறாத நண்பர்கள்- தோழமைகளால் நீண்ட நாட்களாக இணைய தளங்களில் பதிவேற்ற கேட்டதற்கிணங்க ஐயாவின் ஒருவருட நினைவாக முகநூலில் வழியாக இதனை பதிவிடுகின்றேன்.
-ஜெ.ஜென்னி- Jenney Jeyachandran Facebook on
காந்தீயத்தில் எனது நினைவுப் பதிவு (1979-1983) ஜென்னி ஜெயச்சந்திரன்
1979 ஐப்பசி மாதம் எனது 19வது வயதில் உயர்தர பரீட்சையை முடித்து விட்டு வாழ்க்கையின் போக்கை பலவழிகளிலும் சிந்தித்திருந்த நிலையில்; எனது திருமலை நகரம் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் பங்கினால் பாலர் பாடசாலை தொண்டர் ஆசிரியர் பணிக்கு தொரிவாகினேன் இப் பங்கினால் பல இளம் பெண்கள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றினாலும் மூன்று பேரில்; ஒருவராக நானும் தெரிவாகினேன்.
எனது முதல் சமூகப்பணியாய் வீட்டிற்கு வெளியே ஒரு மாதப் பயிற்சி என்ற நிலையில் ஒரு பரந்த வெளிக்கு வந்ததை அன்று உணரவில்லை.
இவ்வாறு மேலும் திருமலை நகரை அண்டிய பகுதியான பாலையுற்று கத்தோலிக்க திருமறை பணியின் தெரிவால் 3 பெண் பிள்ளைகளும் திருமலை நகர இந்து இளைஞர் மன்றத்தால் 3 பிள்ளைகளும்; திருமலை புற நகர பகுதியான கப்பல்துறை என்ற கிராமத்தில் ஆச்சிரமமொன்றை நடாத்திய கத்தோலிக்க குருவானவர் மரியநாயகம் அடிகளாரின் பங்கிலிருந்து ஒருவருமாக மொத்தம் 10 பெண் பிள்ளைகள் தெரிவாகியிருந்தோம்.
குருகுலம்:
இவ்வாறு வெவ்வேறிடத்தில் அறிமுகமின்றி தெரிவாகியிருந்தாலும் கார்த்திகை மாத தொடக்கத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் 7ம் வாய்க்கால் என்ற பகுதியிலுள்ள «குருகுலம்» என்ற ஆச்சிரமத்தில் 'பாலர் பாடசாலை தொண்டர் ஆசிரியர்' என்ற பணிக்கான- பயிற்சிக்காக சந்தித்தோம்.
இங்கு எம்மைப் போல் மொத்தம் 65 பெண் பிள்ளைகள் மட்டக்களப்பு மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினரின் வழித் துணையுடன் வந்து சேர்ந்தனர். எல்லோரும் அதிகமாக எம்மையொத்த வயதுப் பெண்களென்பதால் இப்படி முற்றிலும் புதிதான இடத்தில் சந்தித்ததால்; எல்லோரும் ஒரு வித ஆச்சரியத்தில் இருந்தோம்.
இந்த குருகுலத்தின் உரிமையாளரும்-நிர்வாகியுமாக அப்பு என்றழைக்கப்படும் திரு கதிரவேலு அவர்கள் இருந்தார் இந்த குருகுலம் பல ஏக்கர் விஸ்தீரணத்தில் முன்பகுதியில் பெரும் கட்டிடத்துடன் அமைந்த நிரந்தாமான ஒரு 'சிறுவர் பெண்கள் காப்பகமாகவும்' அமைதியான பெரும் ஏகாந்தமான சூழலுடனும் காணப்பட்டது அது உண்மையிலேயே ஒரு ஆச்சிரமத்தின் சுற்றாடலாகத்தான் இருந்தது
அப்பு என்பவர் மிக எளிமையாக வெள்ளை நீண்ட தாடி-குடுமி வைத்த வெண் உடை தரித்த ஒரு காந்தீயவாதியாகவே தெரிந்தார். தனது மனைவி மற்றும் குடும்பத்தோடு இணைந்து இதனை நடாத்தி வந்தார். அங்கு பணிபுரியும் பல பெண்களும் மிக எளிமையுடனும் சிலர் வெள்ளையுடையுடனும் காணப்பட்டனர்.
பயிற்சியாளர்களான 65 பேருக்கும் ஒரு பெரிய மண்டபம் போன்ற விசாலமான அறைகள் தரப்பட்டு பின் சில வழிகாட்டல்கள் சொல்லப்பட்டு உபசரிக்கப்பட்டோம்.
அதாவது அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு குருகுலத்திலுள்ள நிர்வாகி உட்பட குழந்தைகள் வரையும் மற்றும் நாங்களும் மிக நீளமான பெரும் மண்டபத்தில் ஒன்றிணைக்கப்பட்டு ஆச்சிரம முறைப்படி ஆசன இருப்பு முறையில் நீளமாக பல வரிசைகளாக உட்கார வைக்கப்பட்டு ஓம் என்ற பிரம்ம உச்சரிப்புடன் காலைப் பிராத்தனை பஜனைகள் சொல்லப்பட்டு தொடர்ந்து அப்பு அவர்களால் சிறு நன்னெறிகள் உரைக்கப்பட்டு நாளாந்தம் எமக்குள்ள வேலைக்கடமைகளும் எடுத்து கூறப்பட்டு இறுதியாக சம பந்தியில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
குறிப்பு: இந்த குருகுலத்திற்கும் காந்தீயத்திற்குமான தொடர்பானது பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை இடமாக அமைந்தது மட்டுமே. இந்த பயிற்சி தொண்டர்களுக்கான உணவு இருப்பிட போன்ற அனைத்து செலவுகளுக்கான நிதித் தொகையை காந்தீயம் மாதாந்தம் செலுத்தி வந்தது.
1983 காந்தீய தலைமைகள் கைது செய்யப்பட்ட நேரம் அப்பு அவர்களும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் ஆயினும் தொடர்ந்து தனது ‘குழந்தைகள் -பெண்கள் காப்பகமாக’ இதனை நடாத்தி வந்தார். பின் இந்திய ராணுவத்தின் செல் தாக்குதலில் அவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் புலிகளின் காலத்தில் இந்த குருகுலம் அவர்கள் கட்டுப்பாட்டில் நடந்தது 2009 யுத்தம் முடிந்த காலத்தின் பின் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் கையேற்கப்பட்டு சிவானந்த ஆச்சிரமமாக ஒரு ஓய்வு பெற்ற அரச அதிகாரியின் பொறுப்பில்;இ நடாத்தப்படுகின்றது கடந்த இரு வருடங்களுக்கு முன் நான் அவரை தொடர்பு கொண்டதில் 300பிள்ளைக்கு மேல் இருப்பதாகவும் ஒவ்வொரு பிள்ளைக்கும் அரசு 425 ருபா படி தருவதாகவும் இவை பிள்ளைகளுக்கு போதாமையால் தான்25 ஏக்கர் வயல் காணி எடுத்து பண்ணை முறையில் நெல் செயவதாகவும் மற்றும் இன்னும் சில ஏக்கரில் தோட்டம் செய்தே ஆச்சிரமத்தை நடாத்துவதாவும் குறிப்பிட்டார்.
இந்த ஆச்சிரமத்திலேயே கடந்த வருடம் விபுசிகா என்ற பெண் பிள்ளையை நீதித்துறையால் பாதுகாப்பின் நிமித்தம் அந்த ஆச்சிரமத்தில் தங்க வைத்தது(காணாமல் போனோருக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடிய தாயாரை -இராணுவம் கைது செய்த போது அனாதரவான இந்த பிள்ளையை நீதிமன்றம் உடனே விடுதலை செய்து இந்த ஆச்சிரமத்தின் பொறுப்பில் விடப்பட்டது அறிந்த விடயமே)
காந்தீய அறிமுகம்:
அதன் பின் பயிற்சியாளர்களான நாங்கள் இன்னொரு மண்டபத்தில் கூடினோம். அங்கு பயிற்சிப் பணிக்காக பல பேர் பிரசன்னமாகியிருந்தனர். அவர்கள் தாங்கள் வவுனியாவை தலமையகமாகக் கொண்ட 'காந்தீயம்' என்ற அமைப்பினை சேர்ந்தவர்களென தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். இதில் டொக்டர் ராஜசுந்தரம் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவர்- தான் காந்தீயத்தின் செயலாளர் எனவும் மற்றும் டேவிட் ஐயா அவர்களை தலைவர் எனவும் டொக்டர் சாந்தி ராஜசுந்தரம் அவர்களை இங்கு பாடசாலை குழந்தைகளுக்கான பால்மா திரிபோசா தயாரிக்கும் முறை மற்றும் சுகாதார கடைப்பிடிப்புக்கள் பற்றிய விளக்கத்தை கொடுப்பவராகவும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் தாங்கள் தான் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் பல தொடர்புகள் மூலம் எம் 65 பேரையும் பாலர் பாடசாலை தொண்டர் ஆசிரியர் பணிக்கான நிகழ்வை தொடங்கியிருப்பதாகவும் ஏற்கனவே வவுனியா மாவட்டத்தில் காந்தீயத்தினூடாக பாலர் பாடசாலைகள் நடப்பதாகவும் ஆயினும் இது தான் முதல் முதலில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டு நடாத்தப்படவிருக்கும் பயிற்சி பட்டறை எனவும் டொக்டர் ராஜசுந்தரம் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்த எமது ஒரு மாத பயிற்சிக் காலங்களில் ஆசிரியராக பெண்களின் ஆளுமை- விழிப்புணர்வு- தலைமைத்துவ உளவியல் பண்புகளை வளர்த்தெடுத்தல்- தங்கள் தங்களைப்பற்றிய தேடலில் வெற்றிகொள்ளல்- குழந்தைகளுடனான கல்வி முறைகள் மற்றும் அணுகு முறைகள் போன்ற வழிநடத்தல்களை கற்றலும் கற்பித்தலுக்குமான பயிற்சிகளுக்காக ஒரு தத்துவார்த்த உளவியல் மனோதத்துவ நிபுணர் ஒருவரையும் மற்றும் பெண் ஆசிரிய பயிற்றுனர் ஒருவரையும் அறிமுகம் செய்து வைத்தனர்
மேலும் கிராமிய நகரபுற கைவேலைகள் -தையல் கலைகள்-சித்திரங்கள் போன்ற பயிற்சிகளுக்கு வெவ்வேறு 3 ஆசிரியர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இந்த ஒரு மாத பயிற்சியின் போது நடைபெறவுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் நேர அட்டவணையிட்டு ஒழுங்குபடுத்தி கரும்பலகையொன்றில் டொக்டர் ராஜசுந்தரம் அவர்களும் டேவிட்ஐயா அவர்களும் விவரணப்படுத்தினர் தாம் வாரா வாரம் இங்கு வந்து ஒரு நாள் முழுதும் ஒவ்வொரு வார நிகழ்வையும் ஒன்றுகூடி மீளாய்வு செய்வதெனவும் பலவிதமான ஆரோக்கியமான முறையில் முழுநாள் நிகழ்வொன்றை நடாத்தினார்கள்.
மேலும் இந்த காந்தீய நிர்வாகத்தினருடன் வந்த ஒருவர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் இவர் எப்படி காந்தீயத்திற்குள் உள்ளார் என பலவிதத்தில் யோசித்தேன். அவர் வேறு யாருமல்ல சந்ததி அண்ணா தான் அவரும் என்னை அடையாளம் கண்டிருந்தார். ஆயினும் பேசக்கிடைக்கவில்லை
எனது பெற்றோர் ஆரம்பத்திலிருந்தே தமிழரசுகட்சியினர் மட்டுமல்லாது எனது தாயார் திருமதி பிலோமினா லோறன்ஸ் அனைத்திலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்ததால் அந்த அரசியல் தொடர்புகளால் 1974க்கு பிற்பட்ட காலத்திலேயே சந்ததியார் அவர்களை எமது குடும்பத்துடன் இணைந்த அரசியல் நண்பராக அறிந்திருந்தேன் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது காந்தீயத்தில் எப்படி சந்ததி அண்ணா? என்ற பெரும் ஆச்சரியத்தோடு எல்லாவற்றையும் அவதானித்தேன்.
மேலும் இவ்வாறு ஒரு மாத பயிற்சி முடிந்து புது உற்சாகத்துடனும் சமூக அக்கறையின் விழிப்புணர்வுடனும் அவரவர் ஊர்களுக்கு திரும்பினோம்.
திருமலையில் காந்தீயம்:
1980 தை மாதத்தில் எமது கத்தோலிக்க திருச்சபையால் புனித மரியாள் கோவில் வளாகத்திற்குள் எமது பங்கு குருவானவரின் அனுசரணையோடு பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பயிற்சி பெற்ற ஆசிரியர்களான நானும் மரியசீலி மற்றும் ஜெனற் ஆகியோர் பணியை தொடங்கினோம.;
இரண்டரை வயது முதல் முதலாம் வகுப்பிற்கு போகும் வரையிலான குழந்தைகள் எந்தவித பேதமுமின்றி எந்தவித கட்டணமுமின்றி அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் எமது குழந்தைகளுக்கான பால்மா மற்றும் திரிபோசா போன்ற சத்துணவுகள் இம்மாத இறுதிக்குள் காந்தீயத்தால் விநியோகிக்கப்படும் என எமது குருவானவரால் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தை மாதத்தின் இறுதி சனிக்கிழமை வவுனியா தலமையகத்திலிருந்து காந்தீய உறுப்பினர்கள் வருகை தந்து திருமலை மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் எம்மைச் சார்ந்த சமூக பொறுப்பாளர்களையும் ஒன்று கூடி சந்திக்க உள்ளதாக தகவல் வந்தது நாமும் ஆவலுடன் காத்திருந்தோம்.
ஆனால் இதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை எதிர்பாராத நிலையில் எமது வீட்டிற்கு முன்பாக ஒரு பிரவுன் கலர் ஜீப் வண்டி வந்து நின்றது. அதில் டொக்டர் ராஜசுந்தரம் டேவிட் ஐயா- சேர்லி கந்தப்பா(இவர் நீர்கொழும்பை சேர்ந்த சிங்கள தமிழ் கலப்பினர் தற்போதும் கொழும்பில் வசிக்கின்றார்) மொனிக்கா( இவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த வெள்ளை நிற இளம் பெண்மணி-அரசு சாரா அமைப்பில் பணிபுரிபவர்)ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்ததி அண்ணா வந்திருந்தார் நானும் எனது தாயாரும் ஆச்சரியத்தோடு வரவேற்க எனது தாயாரைத் தேடித் தான் இங்கு வந்திருப்பது தெரிந்தது.
எனது தாயாரின் சேவை மனப்பான்மையையும் அர்ப்பணிப்புக்களையும் நன்கு அறிந்த சந்ததி அண்ணா அம்மாவை வந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி எல்லோரும் ஏற்கனவே முடிவெடுத்ததன்படி தாயாரை திருமலை காந்தீயத்திற்கு பாலர் பாடசாலை மேற்பார்வையாளராக இணைத்துக் கொண்டனர்.
எனது தாயாரும் அன்று 20 வருட தமிழரசு கட்சியில் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தாலும் இந்த மிதவாத ஜனநாயக தேர்தலை மையப்படுத்தி மட்டும் விடுதலை சாத்தியமாகாது (தனது அரசியல் வாழ்வில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் எந்த தேர்தல் பதவிகளையும் ஏற்க மறுத்தவர்) என்ற நிலையில் காலத்திற்கு காலம் மிதவாத தன்மையால் தமிழரசுக்கட்சிக்கும் இளைஞர்களுக்கும் ஏற்படும் முரண்பாடுகளின் போது இளைஞர்கள் சார்பாகவே நின்று கொள்வார். ஆயினும் அன்றும் இந்த மிதவாத தலைமையை விட்டால் மக்களை மையப்படுத்தி வேலை செய்ய ஒரு மாற்றீட்டு தலைமைகள் உருவாகாத நிலையில்1977ற்கு பின் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி ஒரு கேள்விக்குறியாகி நிற்கின்றதே என்று அங்கலாயத்து நின்ற வேளையில் எனது தாயார் காந்தீயத்தின் நோக்கங்கள் வேலைத்திட்டங்களை ஏற்றுக் கொண்டு காந்தீயத்துடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தார். எனினும் காந்தீய நிர்வாகத்தால் மேற்பார்வையாளருக்கு என ஒதுக்கப்பட்ட உதவிப்பணத்தை தான் ஏற்றுக்கொள்ள மறுத்து எனினும் இதன் நிர்வாகத்தை மதித்து ஒரு ருபா உதவிப்பணத்தை நிர்வாக ஒழுங்கின்படி முத்திரையில் கையொப்பமிட்டு தான் பெற்றுக்கொள்வதற்கும் போக்குவரத்து செலவை மட்டும் தான் கணக்கினடிப்படையில் பெற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
எனவே அடுத்த நாள் காலை திருமலையில் காந்தீயத்தின் அங்குராப்பண ஒன்றுகூடல் சன சமூக நிலைய மண்டபத்தில் வவுனியா காந்தீய தலைமை செயலகத்தினரால் நடாத்தப்பட்டது.
இதில் பயிற்றப்பட்ட 10 ஆசிரியர்களுடன் இந்த ஆசிரியர்களுக்கு பொறுப்பான அந்தந்த கிராமத்து நிர்வாகிகள் குருவானவர்கள் இந்து இளைஞர் மன்ற சங்கத் தலைவர் சிவபாதசுந்தரம்(2003ல் நாட்டில் இவரை நோய்வாய்ப்பட்ட நிலையில் சந்தித்திருந்தேன் அண்மைக்காலத்தில் இவர் காலமாகிவிட்டார்)
மற்றும் காந்திஐயா (இவர் இன்று வரை திருமலையில் மிக தள்ளாத வயதிலும் வசித்து வருகின்றார் ஆனந்தம் ஆனந்தம் என யாரைப் பார்த்தாலும் சொல்லும் பண்பாளர் என்பதை ஊரே அறியும் 2012 எனது தாயாரின் மரணவீட்டை நடாத்தி விட்டு இவரை சென்று சந்தித்து எனது தாயாரின் இழப்பை கூறினேன். நிறையவே பழைய விடயங்களை பேசினார். இன்றுவரை முடியாமல் உள்ள தமிழர் ஒற்றுமையை பற்றி மிக கவலைப்பட்டார். ஒரு ஒட்டுக் குடிசையில் டேவிட் ஐயாவைப் போல் வறுமையில் வாழ்கின்றார். டேவிட் ஐயாவைப் போல் இவரும் எனது தாயாரின் நினைவு மலருக்கு இரங்கலுரை தந்திருந்தார்)
திருமலை காந்தீய மேற்பார்வையாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் திருமதி பிலோமினா லோறன்ஸ் மற்றும் சமூகத்தின் பால் அக்கறையுள்ளவர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். அனைவருக்கும் காந்தீயத்தின் நோக்கம் குறிக்கோள் வேலைத்திட்டங்கள் என்பன டொக்டர் மற்றும் டேவிட் ஐயா அவர்களால் விபரிக்கப்பட்டது.
காந்தீயத்தின் நோக்கம்- குறிக்கோள்- வேலைத்திட்டம்:
ஒரு நாட்டின் இதயம் கிராமங்களில் தான் உள்ளதென்ற காந்தி அடிகளாரின் கோட்பாட்டின் படி கிராமங்களையும் பின்தங்கிய பிரதேசங்களையும் அதன் மக்களையும் மையப்படுத்தி விழிப்புணர்வையும்- கல்வியறிவையும் -சமூகப் பொறுப்பையும்-வாழ்வாதாரங்களையும் மேம்படுத்தினால்
அந்த கிராமமே முன்னேறும் இது போன்று பல கிராமங்கள் தன்னிறைவுடன் முன்னேறினால் நகரங்கள் முன்னேறும் நாடு தானாக முன்னேறும்.
அதுபோல் கிராமங்களின் அறியாமை அகன்றால் ஏமாற்றுபவன் ஏமாந்தவனாவான் இந்த விழிப்புணர்வு நல்ல சமுதாயத்தை தோற்றுவிக்கும் அதுவும் ஒரு கிராமத்தை மையப்படுத்திய ஆரோக்கியமான பாலர் பாடசாலையும் அதன் ஆளுமை மிக்க தொண்டர் ஆசிரியர்களும் ஒரு நல்ல இளம் தலைமுறையை மட்டும் உருவாக்குவதோடு நிற்காமல் எதிர்கால நல்ல தலைமைகளையும் தோற்றுவிக்கும் வறுமையில் வாடும் குழந்தைகள் ஊட்டச்சத்துணவுகளுடன் திணிப்பற்ற சுதந்திரமான ஆரம்ப கல்வியை பெறும்போது புத்துணர்வுகளுடன் இளம் சமூகம் தோற்றுவிக்கப்படும் ஒரு ஆசிரியரின் முன்மாதிரியான பணி அக்கிராமத்திலுள்ள சமூக ஆர்வலர்களையும் இந்த ஆசிரியரையும் அவர் சார்ந்த காந்தீய பணிகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் எனவே அடுத்த கட்டமாக காந்தீயத்தின் ஒரு ஏக்கர் கூட்டு பண்ணை வேலைத்திட்டமும் கால் ஏக்கர் வீட்டு தோட்ட குடியேற்றத்திட்டமும் எந்த சந்தடியும் இல்லாமல் தன்னிறைவான கிராம அபிவிருத்தியையும் எல்லைக் கிராமங்களில் எம்மவர் விஸ்திரணத்தையும் கொண்டிருக்கும் இதற்கு அடிப்படையாக காலை முதல் மதியம் வரை பாலர் பாடசாலை பணியாற்றி மாலைகளில் அக்கிராம மக்களின் அனுசரணையோடு பகுதி பகுதியாக ஒரு முழு அளவிலான கிராம கணக்கெடுப்பு மேற்கொள்வதும் அதனை மையப்படுத்தி படிப்படியாக வேலைத்திட்டங்களை காந்தீயத் தொண்டர்களோடு கிராமமும் இணைந்து செயலாற்றுவதுமாகும்.
எனவே ஒரு பாலர் பாடசாலை அந்தக் கிராமத்தின் இதயம் என்ற எமது காந்தீயக் கோட்பாட்டை உருவாக்க ஆசிரியர்களுடன் அந்தந்த கிராம முன்னோடிகளோ அன்றி சமய சமூக ஆர்வலர்களோ அன்றி கிராமிய சங்கத் தலைவர்களோ மற்றும் இவர்களைப் போன்ற தொண்டர்கள் பாலர் பாடசாலைக்குரிய அமைவிடங்களையும் அங்கீகாரங்களையும் பாதுகாப்பையும் கொடுத்து காந்தீயத்தின் நோக்கம் குறிக்கோளை கூட்டான வேலைத்திட்டங்களோடு எல்லோரும் முன்னெடுப்பதே காந்தீயத்தின் இலட்சியம் இதில் தற்போதைக்கு பாலர் பாடசாலை தொண்டர் ஆசிரியருக்கு 100 ருபாய் மாதாந்த உதவித் தொகையும் குழந்தைகளுக்கான நாளாந்த பால்மா திரிபோசா ஊட்டச்சத்தை வழங்குவதாகவும் இந்த உதவிகளை தமது அரசு சாரா அமைப்பான காந்தீயத்திற்கு ‘செடெக்’ மற்றும் ‘நொவிப்’ போன்ற நிறுவனங்கள் மூலம் நோர்வே ஜேர்மன் நாடுகள் வழங்குவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே வவுனியா மாவட்டத்தில் வெற்றிகரமாக காந்தீயத்தின் வேலைத்திட்டங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் ஆரம்ப காந்தீய வேலைத்திட்டங்கள் நடைபெறுவதாகவும் தற்போது மிக மகிழ்ச்சியோடு காந்தீய அங்குராப்பணத்தை திருமலையில் செய்வதாகவும் காந்தீய தலைவர் டேவிட் ஐயாவும் செயலாளர் டொக்டர் ராஜசுந்தரம் அவர்களும் தாம் முன்னெடுத்திருக்கும் காந்தீய கொள்கைகளையும் தெளிவு படுத்தினர்.
மேலும் இந்த திருமலை காந்தீயத்தின் வேலைதிட்டங்களை ஒழுங்குபடுத்தவும் தொடர்ந்து விரிவுபடுத்தவும் திருமலைக்கென்று ஒரு நிர்வாகக் குழு ஒன்று அமைக்கபட வேண்டிய அவசியத்தை டொக்டர் அவர்கள் வலியுறுத்தினார் அதன்படி முதலாவது தற்காலிக நிர்வாகக் குழு தெரிவானது
அதில்
போசகர்: திரு காந்தி ஐயா
தலைவர்: திரு சிவபாதசுந்தரம்
மேற்பார்வையாளர்: திருமதி பிலோமினா லோறன்ஸ்
மற்றும் குருவானவர்கள் தாங்கள் நிர்வாகத்திற்குள் வராமல் தத்தமது பாலர் பாடசாலைகளுக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் குறிப்பிட்டார்கள்.
மேலும் வேலைத்திட்டங்கள் விஸ்தரிக்கப்படும்போது நிர்வாக சபையையும் விஸ்தரிக்கமுடியுமெனவும் முடிவு எடுக்கப்பட்டது மேலும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள் பகல் பொழுது அனைத்து தொண்டர் ஆசிரியர்களும் நிர்வாக குழவினர் உட்பட்டோரும் ஒன்றுகூடுவதெனவும் இதன்போது காந்தீயத்தின் தலைமைச் செயலகத்தினரும் கலந்து கொள்வதெனவும் இந்நேரம் அந்தந்த மாதத்தின் வேலைத்திட்டங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெறுமெனவும் இறுதியில் தொண்டர் ஆசிரியர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது இதன் படி பரவலாக காந்தீய வேலைகள் சிறப்பாக நடைபெற்றது.
முன்னர் குறிப்பிட்டதன்படி எனது தாயார் ஒரு அரசியல் ஈடுபாடுள்ளவராக இருந்ததால் எங்கள் வீட்டில் எல்லா ஆரம்ப கால இயக்க இளைஞர்களும் வந்து போவார்கள். இந்நிலையில் ஈரோஸ் அமைப்பில் திருமலைக்கு பொறுப்பாகவிருந்த தம்பலகாமத்தை சேர்ந்த அன்னலிங்கம் ஐயாவும் ஒருவர்(இவரும் ஒரு காந்தீயவாதியாக இருந்தார்-தற்போது இந்தியாவில் வசிக்கின்றார் இன்னும் விடுதலை சிந்தனையுடன் செயற்பட்ட வண்ணம் உள்ளார்)) இவருடன் இவரது இயக்கத்தை சேர்ந்த இளைஞர்களும் வருவார்கள். இந்த ஈரோஸ் அமைப்பினர் மூதூர் பகுதிகளில் கூட்டுப்பண்ணைத் திட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த படித்த இளைஞர்களின் எளிமையையும் சிந்தனையையும் எனது தாயார் கவனத்தில் எடுத்து பாலர் பாடசாலைகளை திருமலை மூதூர் கிராமங்களிலெல்லாம் விஸ்தரிக்கும் முகமாக அன்னலிங்கம் ஐயாவையும் காந்தீயத்தில் இணைந்து தொண்டராக பணியாற்ற கேட்டிருந்தார். ஆயினும் அன்னலிங்கம் ஐயா தான் நேரடியாக இதில் வராமல் தமது இளைஞர்கள் சிலரை காந்தீய வேலைத்திட்டத்தில் இணைத்துவிட்டார். எனது தாயாரும் நிர்வாகக் குழுவிலும் பேசி காந்தீய தலைமையகத்துடனும் பேசி முடிவெடுத்தனர். இதன்படி ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் கிருபாகரன்(தற்போது மட்டக்களப்பில் வசிக்கின்றார் இன்றும் அரசியலிலும் சமூகப்பணிகளிலும் ஈடுபாடாக உள்ளார்) என்பவரை முதல்முதலாக திருமலை மாவட்டத்தின் காந்தீய அமைப்பாளராக நியமித்தனர் இவ்வாறே மூதூர் பகுதிக்கு ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த தோடம்பழம் என அழைக்கப்படும் தவராசா(1984ல் ராணுவத்தால் கொல்லப்பட்டார்) என்பவரையும் தம்பலகாமம் பகுதிக்கு குமாரவடிவேலு என்பவரையும் தொண்டர் அடிப்படையில் இணைத்தனர். ஈரோஸ் அமைப்பினர் ஏற்கனவே கிராம மட்டங்களில் தமது பண்ணை வேலைகள் மற்றும் அரசியல் வேலைகளை செய்து கொண்டிருந்ததால் பாலர் பாடசாலைகளை இவர்களின் தொடர்புகள் மூலம் விஸ்தரிப்பது இலகுவாக அமைந்தது
எனவே பாலர் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க பாலர் பாடசாலை ஆசிரியர்களிடையே பொது தகமைகளை கருத்திற்கொண்டு தெரிவின் அடிப்படையில் பாலர் பாடசாலை ஆசிரியர்களிற்கிடையே ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட வேண்டிய தேவையேற்பட்டது. அதில் வாக்கெடுப்பின் தெரிவின் நிமித்தம் ஆசிரியர்களின் பொறுப்பாளராக நான் தெரிவாகினேன் ஒரே குடும்பத்தில் நிர்வாகக் குழுவில் இருவர் வருவதை தாயார் நிராகரித்தாலும் தெரிவினதும் தகுதியினதும் அடிப்படையில் வந்த இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி டொக்டர் அவர்கள் வலியுறுத்தியதால் நான் அந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன்.
மேலும் அடுத்தடுத்த மாதக் கூட்டங்களில் நிர்வாகக் கூட்டத்தில் புதிய தெரிவுகள் எல்லாம் ஆராயப்பட்டு நிர்வாகக் குழுவும் விஸ்தரிக்கப்பட்டது. எனவே பால்மா திரிபோசா என்பவற்றை தூர தூர பாடசாலைகளுக்கு விநியோகிக்கவும் ஓடித்திரிந்து வேலை செய்யவும் திருமலை காந்தீயத்திறகென வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தலைமைச் செயலகத்தால் வழங்கப்பட்டது.
அதே நேரம் புதிதாக தெரிவாகும் தொண்டர் ஆசிரியர்க்கு உடனுக்குடன் 3மாத குருகுலப்பயிற்சி கொடுக்கப்பட்டது (1979ல் குருகுலத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பயிற்சி மட்டுமே ஒரு மாதம் கொடுக்கப்பட்டது. அடுத்து வந்த பயிற்சிகளனைத்தும் 3 மாதப் பயிற்சிகளே)
மேற்பார்வையாளர்களுக்கும் இரு வார பயிற்சி குருகுலத்திலும் மற்றும் காந்தீய நிர்வாகத்தை கற்றுக்கொள்ள காந்தீய தலைமைச் செயலகத்திலும் நடைபெற்றது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட மேற்பார்வையாளரும் ஒவ்வொரு மாதமும் அனைத்து பாடசாலைகளின் களநிலைமை- ஆசிரியர்களின் நிலைப்பாடு- அந்தக்கிராமத்தின் ஈடுபாடு மற்றும் சத்துணவு பொருட்களின் இருப்பு விபரம் என்பன அடங்கிய முழு அறிக்கை ஒன்று தலைமைச் செயலகத்திற்கு அனுப்ப வேண்டும். மாதமொரு முறை எல்லா மாவட்ட மேற்பார்வையாளர்களும் மற்றும் காந்தீய தலைமைகளும் வவுனியாவில் ஒரு நாள் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒரு வேலைத்திட்டமாகவே இருந்தது.
திருமலையில் எல்லா மாதாந்த காந்தீய ஒன்றுகூடலுக்கும் தலைமைச் செயலகத்துடன் சந்ததி அண்ணாவும் வந்திருந்தார். சந்ததி அண்ணா சிறிது சிறிதாக எம்மைப் போன்ற துடிப்பாக பணியாற்றக் கூடிய பெண்களிடம் சில ஆரம்ப அரசியல் புத்தகங்களை வாசிக்கத் தந்துவிட்டு அடுத்த முறை வரும்போது புத்தகம் பற்றி கேட்பார். அதுபற்றி சில கருத்துக்களையும் பரிமாறுவார். அவரின் தத்துவார்த்தமான சிந்தனைகள் எமக்குள் சில ஆராய்வுகளை வெளிப்படுத்தும் அதுவும் அவரின் சமூகம் பற்றிய இடதுசாரி கருத்துக்கள் எம் மக்களின் விடுதலையை நோக்கி நகர்த்துவதையும் இந்த காந்தீய கூட்டுப்பண்ணைகளின் வடிவமைப்பு கூட எப்படி ஒரு கூட்டு பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் என்பதையும் இந்த பொருளாதார மாற்றங்கள் தான் சமுதாய மாற்றத்திற்கு வித்திடும் என்பதையும் தனது எளிமையாக புரியவைக்கும் ஆற்றலால் எமது மனதில் பதிவேற்றுவார். இந்நிலையில் அவரின் சிந்தனைகளை நோக்கி ஒரு சில பெண் பிள்ளைகள் நாங்கள் சமூக மாற்றம் பற்றி தீவிரமாக சிந்திக்க தொடங்கினோம. இவ்வாறாக எமது இளவயது சிந்தனைகள் ஏதோ ஒரு சமூக தேடலை அப்போது எம் சிலருக்கு சந்ததி அண்ணாவால் உணர்த்தியிருக்கின்றதென்பதை பின்னால் தான் எம்மால் உணர முடிந்தது.
திருமலை காந்தீயத்திற்குள் புளொட் அமைப்பு (தமிழீழ விடுதலைக் கழகம்)
மேலும் சிறப்பாக எமது காந்தீய பணிகள் தொடரும் வேளை 1980 கடைசிப்பகுதியில் ஒரு திருமலை காந்தீய ஒன்றுகூடலில் வழக்கம் போல் டொக்டர் ராஜசுந்தரம் அவர்களினதும் டேவிட்ஐயாவினதும் கருத்துரைகள் முடிய சந்ததி அண்ணா தனது கருத்துரையில் திருமலை காந்தீய வேலைத்திட்டத்தில் காந்தீய பண்ணைகளை அமைத்து வேலைத்திட்டங்களை தொடங்க இருப்பதால் தான் ஒரு புதிய நபரை காந்தீயத்திற்கு அறிமுகப்படுத்துவதாக சொல்லி சற்று தொலைவில் ஒதுங்கியிருந்த ஒரு இளைஞரை அழைத்து இவர் திரு. ஜெயச்சந்திரன். இவர் தான் இனிமேல் காந்தீயத்திற்கும் பண்ணைகளுக்கும் பொறுப்பாக செயற்படுவார் என திடீரென அறிமுகப்படுத்தினார்.
ஏற்கனவே ஒரு நிர்வாகக் குழு திருமலையில் இருக்கும்போது யாருடனும் கலந்தாலோசிக்காது புதியதொரு நபரை சந்ததி அண்ணா அறிமுகப்படுத்தியதை அங்கிருந்த எனது தாயார் உட்பட நிர்வாகக் குழுவில் பலர் ஆட்சேபித்தனர். உடனேயே டொக்டர் நிலைமையை சமாளிக்க முற்படுகையில் காந்தீய அமைப்பாளரான கிருபாகரன் உட்பட்ட இளைஞர்களும் மேற்பார்வையாளரும் தொடர்ந்து நாங்கள் ஒருசில ஆசிரியரும் வெளிநடப்பு செய்து மண்டபத்தை விட்டு வெளியேறி எமது வீடுகளுக்கு சென்றுவிட்டோம்.
புதிதாக வந்தவர் யார் என்பது எமக்கு முக்கியமல்ல. ஆனால் சந்ததி அண்ணாவின் தன்னிச்சையான அவசர முடிவு டொக்டர் மற்றும் டேவிட் ஐயா உட்பட எல்லோரையும் சங்கடத்திற்குள்ளாக்கியது. தலைவர் சிவபாதசுந்தரம் அவர்கள் திகைத்து போய் நின்றார்.
எனவே கூட்டம் உடனே இடைநிறுத்தப்பட்டு சந்ததி அண்ணாவையும் அழைத்துக்கொண்டு எமது வீட்டிற்கு எல்லோரும் வந்தனர்.
எங்கள் வீட்டில் அமைப்பாளர் கிருபாகரனும் நின்றிருந்தார். சந்ததி அண்ணா தனது அவசர முடிவிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு ஜெயச்சந்திரனுடன் இணைந்து கிருபாகரனையும் செயற்படச் சொன்னார். ஆயினும் கிருபாகரன் இதனை மறுத்து தானே காந்தீயத்திலிருந்து ஒதுங்கி கொள்வதாக சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினார். எந்தவித முன்னறிவுப்பும் இல்லாத
நிலையில் இவ்வாறு சந்ததியார் நடந்து கொண்டதை எனது தாயார் மன்னிக்கமுடியாத நிலையில் கோபத்துடன் இருக்க டொக்டரும் டேவிட் ஐயாவும் சந்ததி அண்ணாவும் சிரமப்பட்டு எனது தாயாரை சமாதானப்படுத்தி ஜெயச்சந்திரனை அமைப்பாளராகவும் காந்தீய பண்ணைகளின் உருவாக்கத்திற்கு பொறுப்பாளராகவும் நியமித்தனர்.
(பின்னால் தனிப்பட்ட நிலையில் சந்ததி அண்ணாவிடம் இந்த தன்னிச்சையான செயலுக்கு என்ன காரணம் என்று கேட்தற்கு ஜெயச்சந்திரன் பண்ணை வேலைகளை மையப்படுத்தி சில அரசியல் வேலைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அதற்கு எம்மைப் போன்ற சில பேர் ஜெயச்சந்திரனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமெனவும் தாங்கள் வவுனியாவில் ஒரு அமைப்பை சார்ந்து காந்தீயத்தினுடாக வேலை செய்யும்போது திருமலையில் ஈரோஸ் என்ற அமைப்பு காந்தீயத்திற்குள் வேறூண்டுவது பல முரண்பாடுகளையும் சிக்கலையும் தோற்றுவிக்கும் என்பதால் தான் அதிரடியாக இப்படி செய்ய வேண்டி வந்ததாக கூறினார். அப்போ தான் சந்ததி அண்ணா ஏன் காந்தீயத்திற்குள் உள்ளார் என நான் 1979ல் குருகுலத்தில் என்னை தானே கேட்ட கேள்விக்கு விடை கிடைத்தது. அப்போ தான் ஆசிரியரான நாங்கள் சிலபேர் சந்ததி அண்ணாவின் அரசியலினூடாக ஒரு புதிய பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றோம் என அறிய முடிந்தது. அந்த பாதை இவ்வளவு தொலைவாகிப் போனது தான் காலத்தின் கோலம்.
ஈரோஸ் அமைப்பினரும் சந்ததியாரையும் ஜெயச்சந்திரனின் பின்ணணியையும் எங்களை விட நன்கு அறிந்து வைத்திருந்ததால் கிருபாகரன் மட்டுமல்லாமல் ஏனைய ஈரோஸை சார்ந்தவர்களும் தாங்களாகவே காந்தீயத்திற்குள் உருவாகிய புளொட் அமைப்பிற்கு நட்புடன் வழிவிட்டு ஒதுங்கியதாக பின்னாளில் குறிப்பிட்டிருந்தனர்.
காந்தீயத்திற்குள் சந்தததி அண்ணாவால் அழகாக திட்டமிடப்பட்டு கொண்டுவரப்பட்ட ஜெயச்சந்திரனின் வருகையும் அதனை தொட்டு காந்தீய பண்ணைகள் விஸ்தரிக்கப்ட்ட வேகமும் அதன் வேலைத் திட்டங்களுக்காக காந்தீய தொண்டர்களை இணைத்ததும் பண்ணைத் தொண்டர்கள் புளொட் தோழர்களாக உருவாக்கப்பட்டதும் காலத்தின் தேவையே.
ஜெயச்சந்திரனின் காந்தீய அமைப்பாளரான வரவு காந்தீயத்தில் பெரியதொரு வேகத்தையும் மிக விரைவான பண்ணை வேலைத்திட்ட உருவாக்கத்தையும் அதற்கான பல படித்த இளைஞர்களையும் உள்வாங்கியது.
இதில் முதலாவதாக செல்வன் என்ற சின்னத்துரை கிருபாகரன்(தியாகி)இவர் தான்ஜெயசந்திரனின் அத்தனை வேலைத்திட்டங்களுக்கும் உதவியாளராக செயற்பட்டார்- நல்லவேலு ஜெயகாந்தன் (லண்டன்) ராதாகிருஸ்ணன்(லண்டன்) கணபதிப்பிள்ளை என்ற திருநாவுக்கரசு (01-09-2015ல் 68வது வயதில் காலமானார்)அகிலன்(தியாகி) பாலன் என்ற சலீம்(இலங்கை) காந்தன் என்ற ஜான் மாஸ்ரர்(கனடா) தாமோதரம்பிள்ளை தர்மராஜா அல்லது பிரதீபன் என்ற ருபன் (லண்டன்) பவன்(இலங்கை) நந்தன்(இலங்கை) ரஞ்சன் அல்லது புவனா (பிரான்ஸ்) வசந்தன் அல்லது கிரிஸ்ரி(வீர மரணம்) கேதீஸ்வரன்(வீர மரணம்)அன்பழகன் (வெலிகடை படுகொலையில் வீரமரணம்)சேவல் கொடி என்ற ருபகாந்தன்(முள்ளிக்குள தாக்குதலில் வீர மரணம்)சிவராஜா(இந்தியா) மற்றும் பலபேர்(தவறவிட்ட பெயர்களை மீட்டுக்கொள்ளவும்)
திருமலையில் 5 பெரிய பண்ணைகள் உருவாக்கப்பட்டது இந்தப் பண்ணைகள் என்பது எல்லா இடத்திலும் ஒரே மாதிரி அமைப்பை கொண்டிருக்கும் அதாவது அரை மட்ட- கல் சுவரோடு ஓலையால் வேயப்பட்டு பனா வடிவில் அமைந்திருக்கும் இந்த கட்டிடத்தில் ஒரு நியாய விலைக்கடை- ஒரு பாலர் பாடசாலை- மற்றும் சந்திப்பு மண்டபம் என அமைந்திருக்கும் இவ்வாறான வடிவமைப்புக்கள் திட்டமிடல் எல்லாமே பிரசித்தி பெற்ற கட்டிட வரைபு கலைஞரான டேவிட் ஜயாவின் கை வண்ணமே ஆகும்.
இந்த பண்ணைகள் அனைத்திலும் பெரும்பாலும் தலவாக்கல மற்றும் மலையக பிரதேசத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான மலையக மக்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டார்கள்.இவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட்டுப்பண்ணை முறைகளில் எமது காந்தீய தொண்டர்கள் அவர்களுடன் இணைந்து நின்று செயற்படுத்தினார்கள்.
1)ஈச்சிலம்பத்தை பண்ணை இதனை பிரசித்தி பெற்ற முன்னாள் தொழிற்சங்கவாதியும் இடதுசாரியுமான ஜீவராஜா அவர்கள் நிர்வகித்து வந்தார்.
2)திரியாய் பண்ணை: அன்பழகன் மற்றும் சேவல்கொடியின் நிர்வாகத்தில் இருந்தது.
3)கன்னியா பண்ணை: பாலன் என்பவரின் நிர்வாகத்தில் இருந்தது பின்னாளில் இதில் அரசாங்கத்தால் தேடப்பட்ட நிலையில் பாபுஜி(கனடா)செழியன்(லண்டன்)துளசி(இலங்கை) ஆகியோர் தலைமறைவாகியிருந்து ராணுவத்தால் பின் வெவ்வேறிடங்களில் பிடிபடும் நிலைவரை செயற்பட்டனர்.
4)பாரதிபுரம் பண்ணை இது பிரதீபன் என்ற ருபனின் நிர்வாகத்தில் இருந்தது இதில் சண்முகவல்லி என்ற பாலர் பாடசாலை ஆசிரியர்- மலையகத்தை சேர்ந்த பெண்- சந்ததி அண்ணாவால் அழைத்துவரப்பட்டவர் என் நினைவில் என்றும் மறக்கமுடியாதவர்.
5)பறையன்குளம் பண்ணை:இது பன்குளத்திலிருந்து 25 மைல் உள்ளே தூரத்தில் காட்டுப்பிரதேசத்தில் இருந்தது எல்லைக் காளிகோவில் என குறிப்பிடப்படுவது இதுவும் பிரதீபனின் பொறுப்பிலிருந்தது(பிரதீபன் மிக சிறுவயதிலேயே டொக்டர் மூலம் ஜெயச்சந்தரனிடம் 14 வயதில் கையளிக்கப்பட்ட நிலையில் ஜெயாவால் எல்லா வேலைத்திட்டங்களிலும் இணைக்கப்பட்டார் அதாவது சிறு பையனாகையால் பின்னாளில் கூட ரகசிய செய்திகள் பரிமாற -பணங்கள் கைமாற மற்றும் அடுத்து வந்த காலகட்டத்தில் காந்தீயம் புளொட் வேலைத்திட்டத்தில் இணைந்த போதும் இந்த வேலைத்திட்டத்தில் சில பண்ணைகளில் ராணுவப்பயிற்சி நடைபெறும் போதும் தொடர்பாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1983 சிறையுடைப்பின் பின் இவரின் ஊரான பன்குளத்தில் இவரையும் இங்குள்ள பண்ணை விபரங்களையும் தேடிக்கிடைக்காத ராணுவம் 25-05-85ல் இவர் காணப்படாத நிலையில் இவரின் வீட்டின் அனைவரையும் சுட்டுச் சென்றதில் அதே இடத்தில் 6 குடும்ப உறுப்பினரும் இறந்தனர். மிகுதி 4 பேர் காயப்பட்டும் ஓடியும் தப்பினர். இதில் பிரான்ஸில் வரதன் என்ற சகோதரனும் ஒரு சகோதாpயும் இன்னொரு சகோதரனும் வவுனியாவில் ஒரு சகோதாpயுமாக சாட்சியாக உள்ளனர்)
இந்த பண்ணையே மிக பெரியதும் மிக பாதுகாப்பானதாகும் இதுவே பின்னாளில் புளொட்டின் பிரதான பயிற்சி முகாமாகவும் தேடப்பட்ட பல முக்கியஸ்தர்களை பாதுகாத்த இடமுமாகும். இங்கு புலிகளாலும் ராணுவத்தாலும் தேடப்பட்ட நிலையில் உமாமகேஸ்வரன் -சிவசண்முகமூர்த்தி அல்லது சுந்தரம்(புலிகளின் சார்ள்ஸ் மற்றும் அருணாவால் சித்ரா அச்சக படுகொலை)-சங்கிலி அல்லது கந்தசாமி(முள்ளிக்குள புலிகளின் படுகொலை) பாலமோட்டை சிவம்(லண்டன்) அற்புதம்(லண்டன்) பெரிய செந்தில்(வீரமரணம்) கிருஸ்ணகுமார் என்ற காத்தான்(வீரமரணம்)தலைமறைவாக இருந்தனர்.
இவ்வாறு அனைத்து பண்ணை வேலைத்திட்டங்களும் குடியேற்றங்களும் அதற்குள் புளொட்டின் ரகசிய வேலைத்திட்டங்களும் பயிற்சிகளும் முழுக்க முழுக்க திருமலை காந்தீய அமைப்பாளரும். அதே நேரம் திருமலை புளொட்டின் பொறுப்பாளருமாக இருந்த ஜெயச்சந்திரனின் (பின்னாளில் பார்த்தன் என்றழைக்கப்பட்டார்) நேரடி வேலைத்திட்டத்தில் நடந்தது. சந்ததியாரின் உடன்பாட்டிலேயே நிகழ்ந்தது டொக்டர் ராஜசுந்தரம் அவர்களுக்கும் எல்லாமே தெரியும். இப் பண்ணைகளுக்குள் பிற்காலத்தில் என்னென்ன நடப்பது என தெரியாமல் போனது டேவிட் ஐயா அவர்களுக்கே!
ஏனெனில் டேவிட் ஐயா நினைத்த காந்தீயமானது காலத்தின் கட்டாயத்தால் காலப்போக்கில் காந்தீய முகமூடி அணிந்த புளொட் இயக்கமாக பரிணமித்தது.
இதே நேரம் இன்னொரு காந்தியவாதியான திரியாய் குகதாசன்(கனடா)அவர்களும் காந்தீயத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஒரு நிர்வாகக்குழு மாற்றத்தின்போது திரு குகதாசன் அவர்கள் திருமலை காந்தீயத்தின் தலைவராக இருந்தார் மேலும் திரு நாராயணசாமி என்ற இளைப்பாறிய தபால் கந்தோர் அதிகாரி ஒருவர் ஜெயாவின் அறிமுகத்தால் காந்தீய பொருளாளராக செயற்பட்டார்.
மேலும் பாலர் பாடசாலை மேற்பார்வையாளர்திருமதி.பிலோமினா லோறன்ஸ் அவர்களின்அயராத உழைப்பால் 1980லிருந்து 1983 மே மாதம் வரை திருமலை- மூதூர் மாவட்டத்தில் மொத்தம் 175 பாலர் பாடசாலைகளும் 3மாத பயிற்சி பெற்ற 375 தொண்டர் ஆசிரியர்களும் சேவையாற்றினார்கள். கிட்டத்தட்ட இந்த 175 கிராமங்களும் தரவுகளின்படி அந்தந்த கிராம மக்களுடன் காந்தீயம் நல்லதொரு சங்கிலித் தொடரான பிணைப்பை வைத்திருந்தது. இவ்வாறு காந்தீயத்தின் குறிக்கோள் டேவிட் ஐயா -டொக்டர் ராஜசுந்தரம் அவர்களின் கனவு தீவிரமாக திருமலையில் மட்டுமல்லாது எல்லா மாவட்டத்திலும் முன்னேற்றத்தை எட்டியது.
ஆயினும் காந்தீய அகிம்சை தத்துவத்திலிருந்து எமது காந்தீயம் சில எல்லைக் கோடுகளை தாண்டி தீவிரத் தன்மை அடைவதையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பையும் இளைஞர்களாக அன்றிருந்த நாம் உணரத்தவறினோம் என்பதை இப்போ உணர முடிகின்றது.
அன்று காந்தீய பாடசாலைகளிலும் குடியேற்றங்களிலும் அக்கறையாக செயற்பட்ட காந்தி ஐயா -குகதாசன் மற்றும் எனது தாயார் போன்றோர் தமது அனுபவத்தை கொண்டு கவனித்து ஓடித்திரியும் இந்த சந்ததியாரின் கட்டுப்பாட்டில் உள்ள இளைஞர்களும் அவர்களின் வேலைத்திட்டங்களால் நுhற்றுக்கணக்கான பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பண்ணையிலிருக்கும் பெண் தொண்டர்களுக்கும் எந்தவிதத்திலும் அரசு கண்காணிப்பால் தொல்லைகள் வராமல் பாத்துக் கொள்ளும் பாரிய பொறுப்பை கவனிக்க வேண்டிய நிலையிருந்தனர். இதனால் எம்மைப்போன்ற இளைஞர் மத்தியிலும் இந்த நிர்வாகத்திலுள்ள அகிம்சாவாதிகளுக்குமிடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டன.
இவ்வாறான முரண்பாடுகள் உடனுக்குடன் டொக்டர் அவர்களிடம் கொண்டு செல்லப்படும் போது அவர் இரு பக்கமும் நின்று விலக்குப்பிடித்து விடுவார். இப்படியான சங்கடங்கள் எங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல மற்றைய மாவட்டங்களிலும் அடிக்கடி ஏற்படும் இவையெல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்தோடல்லாமல் டேவிட் ஐயாவை சமாளித்து கொண்டு டொக்டர் பிரச்சனைகளை சிரித்த முகத்தோடு பணிவன்புடன் கையாண்ட விதம் மிக மிக ஆச்சாpயமானதும் சாணக்கியமானதுமாகும். இப்படியொரு சம்பவம் 1982ல் நிர்வாக ரீதியாக எனது தாயாருக்கும் ஆசிரியர் பொறுப்பாளராக இருந்த எனக்கும் நடந்தபோது சந்ததி அண்ணா எடுத்த முடிவும் அந்த அவசர முடிவை(அன்று அது புரியவில்லை பின்னாளில் அதை உணர்ந்து கொண்டேன்) டொக்டர் அவர்கள் எனது தாயாரையும் சமாளித்து என்னையும் சமாதானப்படுத்தி பிரச்சனையை தீர்த்தது போன்ற விடயங்கள் மறக்கமுடியாது.
அதுபோல் இன்னொரு நிர்வாக விடயத்தில் எனது தாயாருக்கும் அமைப்பாளரான ஜெயச்சந்திரனுக்கும் ஏற்பட்ட விடயத்தினை டொக்டர் சமாளிக்கும் போதும் இது போன்ற பல விடயங்களை அவர் கையாண்ட விதமும் தான் அவர் கைதாகும் வரை காந்தீயத்தை கட்டிக்காத்தது.
காந்தீயத்தினூடாக தமிழீழ விடுதலைக் கழகம் வேருன்றியமை
மேலும்1981 பிற்பகுதியென நினைக்கின்றேன். ஜெயாவும் சந்ததி அண்ணா வாசுதேவா அவர்கள் எமது வீட்டிற்கு வந்து அம்மாவை சந்தித்து தங்களுக்கு 3 நாட்கள் ஒரு இடத்தில் முக்கிய சந்திப்புக்கள் நடப்பதாகவும் 3 வேளையும் 35 பேர் மட்டில் உணவு சமைத்து தர வேண்டுமெனவும் ஜெயாவின் நண்பர்கள் வந்து உணவை எடுத்துச் செல்வார்களெனவும் கேட்கப்பட்டது. இதன்படி எனது தாயாரும் சம்மதம் தெரிவிக்க அவர்கள் சொன்ன திகதியில் உணவுகள் கொடுத்து விடப்பட்டது. இந்த சந்திப்பு பற்றி சந்ததி அண்ணாவும் ஜெயாவும் கூறிய தகவலை பின்னாளில் அறிந்தேன். ஜான் மாஸ்ரரின் சகோதரர் ஓருவரின் வெறுமையான புட்டிய வீட்டில் (எமது வீட்டிற்கருகாமையிலிருந்தது)இந்த கூட்டம் நடந்தது இதுவே புளொட்டின் அதிகமான முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதும் பல புதியவர்கள் இணைக்கப்ட்டவர்களுமான மத்திய செயற்குழு கூட்டம்.
இதில் உமாமகேஸ்வரன்- சுந்தரம்- வாசுதேவா கண்ணன் ராஜன் சலீம் ஜெயச்சந்திரன் ஜான்மாஸ்ரர் காத்தான் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். எனவே ஒரு பக்கத்தில் காந்தீய பணிகள் துரிதமாக நடக்க இன்னொரு பக்கத்தில் அப்போது தமிழீழ விடுதலைக்கழகம் என்ற பெயரில் இயங்கிய புளொட் அமைப்பு திருமலையிலும் காலூன்றி வளர்ந்தது. இதையொட்டியே 1981ல் நத்தார் வாழ்த்து மடல் புளொட்டால் வெளியிட்டது. சுந்தரம் அவர்களின் மேற்பார்வையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இயேசுகிறிஸ்துவும் ஒரு புரட்சிகர போராளியே' என்ற வாசகத்துடன் வாழ்த்து மடல் வெளியிடப்பட்டு காந்தீய மற்றும்-புளொட் இளைஞர்கள் மூலம் விற்பனைக்கு விடபட்டு நண்பர்கள் தோழர்கள் மத்தியில் தபால் அஞ்சல் செய்யப்பட்டது.
இந்த நகர்வை முன்மாதிரியாக வைத்தே பொங்கல் வாழ்த்து மடல் சுந்தரம் அண்ணாவினால் சித்ரா அச்சகத்தில் வைத்து அச்சடிக்க சென்ற நிலையில் புலிகளால் கொல்லப்பட்டார். இந்த சுந்தரம் கொலையுடன் சுந்தரம் அவர்கள் ஆசிரியராக இருந்த புளொட்டின் புதியபாதை பத்திரிகையும் அரசாங்கத்தால் கண்காணிப்புக்குட்பட்டது.
(இதன் பின் ஜெயச்சந்திரனை பத்திரிகை ஆசிரியராக கொண்ட 'விடுதலை » என்ற புளொட்டின் பத்திரிகை வெளியானது 1984 ஏப்ரல் 24 ஜெயச்சந்திரனின் மரணம் வரை இப் பத்திரிகை இடையிடையே வெளிவந்தாலும் ஜெயாவின் மரணச்செய்தி தாங்கி வந்த கடைசிப்பத்திரிகையாக 1984 மே மாதத்துடன் இந்தப் பத்திரிகையின் வரலாறும் முடிந்தது குறிப்பிடத்தக்கது)
அது போல் சுந்தரம் அண்ணாவின் கொலைக்கும் அடுத்துவந்த பல அரச நெருக்கடிகளுக்குப் பின் தமிழீழ விடுதலைக்கழகம் ரகசிய அமைப்பிற்கான பெயராகவும் மக்களை மையப்படுத்தி அரசியல் வேலைத்திட்டத்தை பரவலாக்க 'தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்' எனவும் பெயர் மாற்றப்பட்டது. இதன் கொடியும் ஒரு நட்சத்திரம் கொண்டதாக மாறியது.
இவ்வாறான ரகசிய வேலைத்திட்டங்களுக்காக 1982 பகுதி நடுப்பகுதியில் காந்தீய பண்ணையை தவிர்த்து புளொட்டிற்கு என்ற பெரியதொரு பண்ணை உருவாக்கப்பட்டது.
இது கிளிவெட்டி குமாரதுரை (தங்கத்துரை எம் பியின் சகோதரர்)அவர்களால் தரப்பட்ட காணியில் அமைந்தது இந்த புளொட்டின் ராணுவ முகாமாக செயற்பட்ட இந்த பண்ணைக்கு- வவுனியா ஆதவன்(தியாகி) பொறுப்பாகவும் அற்புதம் ஆயுதத்திற்கு பொறுப்பாகவும் கந்தசாமி பயிற்சிகளுக்கு பொறுப்பாகவும் இருந்தனர். நாளடைவில் காந்தீயப் பண்ணைகளை தொடர்ந்து பாவிப்பது நிர்வாகத்திறகுள்ளும் வெளியேயும் சில சிக்கல்களை தோற்றுவிப்பதால் தனியாக இந்த ராணுவ பண்ணை தோற்றுவிக்கப்பட்டது. இதில் பின்னாளில் வடக்கு முக்கியமாக வவுனியாவில் தேடப்படுபவர்கள் இங்கே வருவதாக அமைந்தது இதில் ஆர் ராகவன் -மொக்கு மூர்த்தி-செழியன்- பாலமோட்டை சிவம்-குமார்(வவுனியாவில்1984ல் விமானப்படையினரால் சுடப்பட்டு வீர மரணம்) போன்ற பலர் செயற்பட்டனர்.
மட்டக்களப்பு மேதினத்தில்! காந்தீயம் - தமிழீழ விடுதலை கழகமாக ------
திருமலையில் எப்படி காந்தீயத்திற்கு அமைப்பாளரும் புளொட்டிற்கு பொறுப்பாளரும் ஜெயச்சந்திரனே இருந்ததுபோல் மட்டக்களப்பிற்கு வாசுதேவா காந்தீய அமைப்பாளரும் புனொட்டின் பொறுப்பாளருமாக செயற்பட்டனர்.
இந்நிலையில் 1982ல் மே தின நிகழ்வும் ஊர்வலமும் மட்டக்களப்பில் பயனியர் வீதியில் வாசுதேவா தலைமையில் நடாத்துவதென முடிவாகியது. காந்தீயம் உள்ள எல்லா மாவட்டத்திலுமிருந்து அந்தந்த மாவட்டங்களிலுள்ள காந்தீய வாகனங்களிலும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களிலுமாக பல காந்தீய தொண்டர்களும் புளொட் இளைஞர்களும் சில பாலர் பாடசாலை ஆசிரியர்களும் பண்ணை பொறுப்பாளர்கள் திருமலை மேற்பார்வையாளர் (எனது தாயார் இந்த காந்தீயத்திற்கு அப்பாலான வேலைகளில் ஈடுபட தயங்கினாலும் சந்ததி அண்ணாவின் வேண்டுகோளிற்கிணங்க) எல்லோரும் காந்தீய வாகனங்களில் புறப்பட்டு சென்று மே தின நிகழ்வை சிறப்பாக செய்தோம. இந்த மேதின நிகழ்வுக்கு வவுனியாவிலிருந்து காந்தீய அலுவலகத்தை சேர்ந்த டொக்டர் ராஜசுந்தரம் அவர்கள்- சரோஜினி அக்கா துளசி என்ற காந்தீய அலுவலக பெண் மற்றும் ராதா என்ற ஜீலி கருணா போன்ற புளொட்டினதும் காந்தீயத்தினதும் முன்ணணி பெண்கள் கலந்து கொண்டனர். நிறையவே மட்டக்களப்பு இளைஞர்களும் முக்கியமாக அசோக் என்ற யோகன் கண்ணமுத்து அவர்களும் இம் மேதினத்தில் பெரும் பங்காற்றினார். இந்த மே தின கூட்டத்தில் திரு ஈழவேந்தன் மற்றும் திரு கோவைமகேசன் ஆகியோர் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழீழ விடுதலைக் கழகத்தின் கொடியுடன் (அப்போது மூவின மக்களை குறிக்கும் 3 மஞ்சள் நிற நட்சத்திரத்துடன் சிகப்பு கறுப்பு கொடியாக இருந்தது இது இருண்ட வாழ்விலிருந்து இரத்தப் போராட்டத்தின் பின் மங்களகரமான வரழ்க்கை என்ற கருத்தியலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது)பெரும் ஊர்வலமாக மே தினத்தை வெற்றிகரமாக செய்தோம்.
காந்தீயத்தின் வேலைத்திட்டத்தில் 1983 வரை வடகிழக்கு பிரதேசத்தில் மொத்தம் 70 000 குடும்பங்கள் மலையகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு குடியேற்றப்படடதாக சொல்லப்படுகின்றது. சரியான கணக்கு தெரியவில்லை. 1983 மே மாத இறுதியில் வவுனியாவில் மட்டும் 7000 மலையக தமிழர்கள் குடியேற்றப்பட்டிருந்தார்களென காந்தீய நிர்வாகியின் மனைவியொருவரால் சென்றவாரம் இத் தகவல் சொல்லப்பட்டது.
இப்படியான காந்தீய வேலைத்திட்டங்களின் மக்கள் மத்தியிலான குடியேற்றத்திட்டங்களின் எழுச்சியும் இளைஞர்கள் மத்தியிலான தீவிர தன்மையும் மெல்ல மெல்ல பரவலாக எல்லா மாவட்டத்திலும் இலங்கை அரசுக்கும் தமிழ் தேசிய தலைமைகளான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தெரிய தொடங்க வவுனியாவில் எம் பி ரி சிவசிதம்பரத்தால் பல நெருடல்களை காந்தீயத்திற்கு கொடுத்த விடயமும் அதனால் வவுனியா காந்தீய தலைமைகளுக்கும் அமைப்பிற்கும் ஏற்பட்ட அழுத்தமும் மறக்க முடியாத சம்பவங்கள்--------
இந்நிலையில் 1983 சித்திரை 6ம் திகதி வவுனியாவிலிருந்து டொக்டர் ராஜந்தரம் அவர்கள் விசாரணைக்கென காந்தீயத்தால் கொண்டு செல்லப்பட்ட அதே நேரம் டேவிட் ஐயாவும் விசாரணை என்ற நிலையில் கைதாகி விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து வவுனியா காந்தீய அலுவலகத்தில் அனைவரும் விசாரிக்கப்பட்டு தொடர்ந்து பலரும் தலைமறைவாக காந்தீயமும் சீல்வைக்கப்பட- ஏனைய மாவட்டங்களனைத்தும் ராணுவத்தின் விசாரணைக்கும் கண்காணிபிற்கும் உட்பட்டது திருமலையில் காந்தீய அலுவலகத்திலுள்ள அனைத்து ஆவணங்களையும் நானும் தாயாரும் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தோம். ஏனெனில் நாங்கள் பிடிபட்டாலும் அனைத்து பெண் பிள்ளைகளினதும் விபரங்களை மறைப்பதில் கவனம் எடுத்தோம்.
பதட்ட சூழலிலும் திருமலையில் மேதினம்
இதே நேரம் 1983 மே தினத்தை திருமலையில் சென்ற வருடம் போல் சிறப்பாக செய்ய ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலைமை சரியில்லாததால் பலர் இதனை நடாத்த யோசித்தாலும் ஜெயச்சந்திரன் இதனை நடாத்துவதில் தீவிரமாக இருந்தார். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயாவிற்கு மூதார் மேன்காமம் அரசினர் பாடசாலையில் ஆசிரியர் வேலையும் கிடைத்திருந்தது. இது கூட தனக்கு பாதுகாப்பு என்ற நிலையில் அந்த வேலையை ஏற்றுக் கொண்டு (அங்குள்ள அதிபர் ஏற்கனவே தெரிந்தவராததால் தனது நிலையை விளக்கி பாடசாலையில் வரவை மட்டும் பதிந்து விட்டு தனது அரசியல் வேலைகளையும் காந்தீய வேலைகளையும் தொடர்ந்தார். எனவே என்ன நடந்தாலும் மே தினத்தை நடாத்துவதென முடிவெடுத்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வாகனங்களில் காந்தீய புளொட் தொண்டர்களை வரவழைத்தார்.
இதன்படி யாழ்நகரிலிருந்து பொன்னுத்துரை என்ற குமரன் ஒரு வாகனத்தில் தொண்டர்களுடனும் கிளிநோச்சியிலிருந்து அமைப்பு கண்ணன் என்ற ஜேசுதாசன்(பிரான்ஸ்) இரு வாகனங்களில் காந்தீய புளொட் தொண்டர்களுடனும் மட்டக்களப்பிலிருந்து யோகன் கண்ணமுத்து -வாசுதேவா மற்றும் தொண்டர்கள் வவுனியா பண்ணைகளிலிருந்தும் தொண்டர்கள் ஏனைய எமது மாவட்ட அனைத்து புளொட் மற்றும் காந்தீய தொண்டர்கள் கூடினர்.
திருமலை சின்னமுற்றவெளி மைதானத்தில் ஜெயச்சந்திரனின் தலைமையில் மிக பதட்டமான சூழலில் நடந்தது காந்தீய தலைமைகள் கைது செய்யப்பட்ட நிலையிலும் கடந்த இரண்டு வருடமாக ஜெயச்சந்திரனும் நானும் விரும்பியிருந்த நிலையிலும் இந்த மேதினம் மிக மிக பதட்ட நிலையை தந்தது. ஆயினும் விடுதலைப்பாதையில்- மரணத்தை எதிர்கொண்ட பாதையை எப்போதோ நாம் தேர்ந்தெடுத்துவிட்டதாலும் தனிப்பட்ட ஆசாபாசங்களை விழுங்கிக் கொண்டு எதனையும் வெளிக்காட்டாமல் கூட்டத்தில் பங்குபற்றினோம்.
மேதினமாகியதால் அன்று எந்த அசம்பாவதமும் நடைபெறவில்லை. ஆயினும் ராணுவத்தினதும் பொலிசாரின் கெடுபிடியும் எம்மைச் சுற்றி அதிகமாக இருந்ததை உணரமுடிந்தது.
அடுத்து மேதினத்திற்கு பின்பு மெல்ல மெல்ல காந்தீயத்தின் எல்லா மாவட்டத்தினரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு உடன் விடுவிக்கப்பட்டனர் எனது தாயார் இரு தடவை ஒருநாள் விசாரணையுடன் விடுவிக்கப்ட்டார்.
1983 வெலிகடை சிறைப்படுகொலையில் காந்தீயத்தின் முற்றுப்புள்ளி
வெலிகடை சிறைப்படுகொலை என்பது எம் தமிழினத்தினத்திற்கு இழைத்த திட்டமிட்ட கொடூரமும் கொன்றொழிப்புமாகும். அதிலும் காந்தீயத்திற்கு இதுவேமுற்றுப்புள்ளியாகிவிட்டது. இந்த இழப்பையும் எமது டொக்டரின் சிரித்த முகத்தையும் அவரின் ஆளுமையையும் இன்றும் எங்களால் மறக்கமுடியாது. இன்றுவரை அவரின் னெற்றிடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை இனியும் முடியாது ----------
இதில் தப்பிய டேவிட் ஐயா உட்பட்ட முக்கியஸ்தர்கள் தலைவர்கள் மட்டக்களப்பு சிறையிலடைக்கப்பட்டதும் சிறையுடைப்பு நடந்ததும் தெரிந்த வரலாறு. பல புதைந்த வரலாறுகளும் உண்டு. இதில் பல பேரின் பங்கிருந்தாலும் வெலிகடையில் கொல்லப்பட்ட 53 பேரில் காந்தீயத்தில் வளர்ந்த புளொட்டினரும் கனிசமானவர்கள் இதில்சந்ததியாரால் வளர்க்கப்பட்ட அரபாத் தேவகுமார்-ஜெயாவால் வளர்க்கப்பட்ட திரியாய் காந்தீய அன்பழகன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிறையுடைப்பில் தப்பியோரில் அதிகப்படியானோரும் எம்மவரில் காந்தீயத்தால் வந்தோரே இதில் டேவிட் ஐயா சிறையுடைப்பின் போது சிறைக்கு வெளியே வீதியில் தவறுதலாக விடப்பட்டார். பின்அவரை வேறு சாதாரண கைதிகள் இருவர் குருவானவரிடம் அழைத்துச் சென்று விட்டதும் தெரிந்ததே ஜெயச்சந்திரன் சிறையுடைப்பில் வெளியே ஆற்றிய பங்களிப்பும் அவருடன் காந்தீயம் புளொட் என்று இணைந்த இளைஞர்கள் அத்தனை பேரையும் இந்த சிறையுடைப்பிற்கு பின்னான பாதுகாத்து மட்டக்களப்பு வாகரை திருமலை மூதூர் தம்பலகாமம் பாலம்போட்டாறு காட்டுப்பாதைகள் ஆற்றுப்பாதைகள் கடல்பாதைகள் என முல்லைத்தீவு பின் கடல்வழியாக இந்தியா என வழியனுப்பும் வரையான வேலைத்திட்டம் ஒரு திகிலான நீண்ட தனி வரவாறே.
எனவே ஜெயச்சந்திரன் அந்த நேரத்தில் தவறவிடப்பட்ட டேவிட்ஐயாவை தேடிச்சென்று குருவானவரிடமிருந்து கையேற்று மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து கிளிவெட்டி புளொட் முகாமில் 3 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்து பின் முல்லைத்தீவு வரை தனது பாதுகாப்பில் எடுத்துச் சென்று இந்தியா வரை கரைசேர்த்ததும் டேவிட் ஐயாவின் வரலாற்று பக்கங்கள்.
அதன் பின் 1984ல் இந்தியாவில் அடிக்கடி சந்தித்தேன் நாங்களும் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட நிலையில் ----
காந்தீய முக்கியஸ்தர்கள் புளொட் மற்றும் காந்தீய இளைஞர்கள் கைதும் தப்பியோடலும்
வெலிகடைப்படுகொலையும் மட்டக்களப்பு சிறையுடைப்பும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே பெரும் அரசியல் அதிர்வலையை தந்தாலும் உண்மையில் காந்தீயத்திற்கும் புளொட்டிற்கும் தான் ஈடு செய்யமுடியாத இழப்புக்களையும் அதே நேரம் இளைஞர்களிடையேயும் மக்களிடையேயும் எழுச்சியையும் தந்தது.
அதுபோல் கைதுகளும் தப்பியோடலும் அதையொட்டி இந்திய பயிற்சிக்கு செல்லலும் தொகை பல ஆயிரக்கணக்கானது.
மட்டக்களப்பு சிறையுடைப்பிற்கு வெளியேயும் உள்ளேயும்உதவி செய்த பலர் மட்டக்களப்பு திருமலை மூதூர் யாழ்ப்பாணம் என கைதானார்கள்- தேடப்பட்டர்கள் இதில் ஜெயில் பாதுகாவலராக இருந்த பிரசாத் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் தப்பிய கைதிகளுடனேயே அதே பாதையில் இந்தியா வந்து புளொட் மூலம் பாலஸ்தீன பயிற்சிக்கு சென்று வந்து பின் இலங்கைக்கு திரும்பி புளொட் ராணுவப் பொறுப்பாளராக செயற்பட்டு மட்டக்களப்பிற்கு வந்த இடத்தில் ராணுவ சுற்றிவளைப்பில் வீரமரணம் அடைந்தார். இது போல் பல கதைகள் உண்டு.
மட்டக்களப்பு சிறையுடைப்புடன் ராணுவம் மிக தீவிரமாக கிழக்கிலும் விசேடமாக திருமலையில் தேடுதலை அதிகரித்தது இதன்பின் தான் அரசாங்கம் காந்தீயத்தையும் புளொட் அமைப்பையும் இணைத்துப்பார்க்க தொடங்கியது.
திருமலை நகரத்தில் ஜெயாவும் கிருபாகரனும் ஜான்மாஸ்ரர்(கொழும்பில் மருத்துவ பீட முதலாம் ஆண்டு மாணவர்) சலீம் (ஏற்கனவே மூதூர் வங்கியொன்றில் வங்கி முகாமையாளராக இருந்தார்)பிரதீபன் மற்றும் பல இளைஞர்கள் தீவிரமாக தேடப்பட்டனர்(இந்த நேரம் கிருபாவிற்கும் ஜெயாவிற்கும் பல்கலைகழக மருத்துவ பீட அனுமதி கிடைத்திருந்தது) இந்நிலையில் சிறையுடைப்பால் தப்பி வந்த அனைவரையும் இந்தியா அனுப்பி விட்டு 1983ல் ஜெயாவும் இந்தியா சென்றார். யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் புளொட்டின் அரசியல் பாசறைகள் தீவிரமாக நடந்த நேரம் எனவே கிருபா அந்த ஒழுங்குகளை பார்த்துக்கொண்டு யாழில் நின்றார். ஜெயாவும்1984ல் பயிற்சி முடிந்த முதலாவது பிரிவு இளைஞர் அணியை வழிநடத்தி சில தாக்குத் வேலைத்திட்டங்களுக்காக மீண்டும் இலங்கை வந்து யாழில் ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். ஜான் மாஸ்ரர் பி எல் ஓ பயிற்சிக்கு சென்றிருந்தார். யாழில் யோகன் தண்ணமுத்து முரளி பொன்னுத்துரை உட்பட்ட பல அரசியல் வேலைத்திட்டத்தில் ஈடுபடுவோர் தலைமறைவாக நின்றிருந்தனர்
இந்நிலையில் யாரோ தகவல் கொடுத்ததன் அடிப்படையில் ஒவ்வொரு சுற்றிவழைப்பின் போதும் முதலாவது மாறன்- லவன்- யோகராஜா-சலீம் சத்தியமூர்த்தி - என யாழிலும் பிடிபட்டனர்.
திருமலையில் முக்கிய தேடப்படுபவர் பட்டியலில் எனது பேர் அடங்கலாக மற்றைய இளைஞர்கள் எல்லோரும் அரசாங்கத்தால் தேடப்பட்டோம் இந்நிலையில் என்னையும் ராதாகிருஸ்ணனையும் ஜெயகாந்தனும் எனது பெரியம்மாவின் மகன்(கனடா)(அப்போது தான் யாழில் அரசியல் பாசறை முடித்து திரும்பி வநது திருமலையில் அரசியல் பாசறைகள் நடாத்தி இளைஞர்களை ராணுவ பயிற்க்கு ஆயத்ததபடுத்திக்; கொண்டிருந்தார்)பீலிக்ஸ் உம் சேர்ந்து எங்களை தப்ப வைக்க மூதூரிற்கு வழியனுப்பி விட்டு சில மணி நேரத்தில் கைதானார்கள். நாம் மயிரிழையில் தப்பியிருந்தோம். இது 1984 மாசி மாதம் நடந்தது இதை தொடர்ந்து திருமலையில் அன்றே 81 பேர் கைதானார்கள் இதில் சத்தியமூர்த்தி டொக்டரும் அடங்குவார் மேலும் புவனா என்ற ரஞ்சன் நந்தன்- பவன் போன்ற பல காந்தீய புளொட் இளைஞர்களும் கைதானார்கள். என்னைத் தேடியும் தாயாரைத்தேடியும் வீட்டிற்கு வந்த ராணுவம் எனது தாயாரை கைது செய்து சென்றது ஒரு வருடம் எனது தாயார் சிறைவாழ்க்கையை அனுபவித்து விட்டு வரும் போது திருமலை மண் வெறிச்சோடியிருந்ததாக அடிக்கடி சொல்வார். அதுபோல் விடுதலைப்பாதையும் வெறிச்சோடிப் போகும் என யாரும் அன்று நினைக்கவில்லை. மற்றைய பிடிபட்ட இளைஞர்கள் அனைவரும் 1987ற்கு பின் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திலேயே விடுதலையானார்கள்------
காந்தீயத்திற்கும் புளொட்டிற்கும் சிறையுடைப்பிற்கும் பெரும்பங்காற்றிய கினிவெட்டி குமாரதுரையும் கைதானர்.
சிறையிலிருந்து வந்தவர்களை காப்பாற்றி நிறையவே உதவி செய்த நபர்கள் தேடப்பட்ட நிலையில் சிவன்கோவிலடியைச் சேர்ந்த பிரவுன்(பிரான்ஸ்) மார்க்கோ(கனடா) போன்ற பல இளைஞர்கள் புளொட் படகில் இந்தியா சென்று புளொட் போராளியானார்கள் ராஜீ அண்ணா உதவி செய்ததன் நிமித்தம் குடும்பத்தோடு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தனர்.
டேவிட் ஐயாவுடன் கடைசி காலங்கள்:
பல வருட இடைவேளையின்பின் கடந்த 2011ல் மீண்டும் டேவிட் ஐயாவை இந்தியாவில் சந்தித்தேன் ஒரு ஏழைக்கிழவராக ----
நிறையவே அங்கலாய்ப்புக்களோடு எம் தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை பற்றி உள்ளம் குமுறினார்.
தமது முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லையே என்று மனம் வெதும்பினார். எனது தாயாருடன் பேச வேண்டுமென விரும்பிய நிலையில் திருமலையில் இருந்த அவருடன் நீண்ட நேரம் தொலைபேசியில் தொலைந்த தமிழர் வாழ்வு பற்றி பேசினார். எல்லாமே இழந்துவிட்டோம் என்று இருக்கும் நாம் யார் யாருக்கு ஆறுதல் சொல்ல முடியும்.
விடுதலைக்கு இழந்தவை ஆயிரம்ஆயிரம்
விடுதலையில் இழந்த எம் உறவுகள் அதுவும் பல ஆயிரம்
விடுதலையினை தொலைத்தோம் விரயமாய் அழிந்தோம்
விடுதலை வித்திடுமா அன்றி விடுதலை எம் உயிர் மூச்சடங்கவா!!!!!!!!

No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்