Sunday, December 8, 2019

ஈழத்தமிழர்கள் – தேசமும் சுயநிர்ணயை உரிமையும் - மீராபாரதி

 ஈழத்தமிழர்கள் – தேசமும் சுயநிர்ணயை உரிமையும் - மீராபாரதி

79102863_712780109245221_2865689561000837120_oஈழத்தின் குறிப்பாக வடக்கின் இ டதுசாரி செயற்பாட்டாளரும் மார்க்சிய சிந்தனையாளருமான கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் வள்ளியம்மை எழுதிய வெற்றிக்கு வலிகள் தேவை என்ற நூலின் அறிமுக நிகழ்வும் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 30வது நினைவஞ்சலியும் யாழில் நடைபெற்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களின் துணைவியார்கள் தமது அனுபவங்களை எழுதுவது அரிதிலும் அரிது. அந்தவகையில் இந் நூல் முக்கியமானதொரு வரவு. எனது அம்மாவினது வாழ்வு தொடர்பாக அவரிடம் கேட்டு எழுதுவதற்கே நிறைய கஸ்டப்பட வேண்டி இருந்தது. அம்மாவுக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதும் எதை எழுதுவது? எப்படி எழுதுவது? என்பதில் அவருக்குப் பல தயக்கங்கள் இருந்தன. ஆகவே மேலோட்டமாகவே தனது அனுபவங்களைப் பதிவு செய்தார். இவ்வாறான ஒரு நிலையில் வள்ளியம்மை போன்றவர்கள் எழுதியமை பாராட்டுக்கும் வரவேற்பிற்கும் உரியன. இதற்கு அவர் தனது சொந்தக் காலில் நின்று வாழ்வை எதிர்கொண்டமை முக்கியமான ஒரு காரணமாக இருக்கலாம். இவர்களைப் போன்ற அம்மாமாரின் கதைகளை எழுதும்படி சில 78171095_10157795729929031_7980079296444104704_nஆண்டுகளுக்கு முன்பு பலரிடம் கேட்டு முயற்சித்தேன். ஆனால் பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை. நாம் பெரும்பாலும் ஆண் செயற்பாட்டாளர்களின் அனுபவங்களை அவர்களின் பார்வையில் தான் வாசித்திருக்கின்றோம். இந்த ஆண்கள் இடதுசாரிகளாகவோ முற்போக்குச் சிந்தனையாளர்களாகவோ இருந்தால் கூட தம் துணைவியர் பற்றி சிறு குறிப்புடன் கடந்து செல்வார்கள். நா.சண்முகதாசன் கூட தனது நாட்குறிப்பில் அவ்வாறுதான் கடந்து சென்றார். ஆகவேதான் செயற்பாட்டாளர்களின் துணைவியர் தம் அனுபவங்களை பதிவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான பணியாகும். இது வேறுபட்ட பார்வைகளைப் பதிவு செய்கின்ற வரலாற்று ஆவணமாக இருக்கும். அந்தவகையில் இந்த நிகழ்வு முக்கியமானது.

77422165_712779065911992_2537301562754072576_oஇக் கட்டுரை இந்த நிகழ்வில் ம. திருவரங்கன் அவர்கள் வடக்கு கிழக்கில் சுயநிர்ணையமும் சகவாழ்வும் என்ற தலைப்பில் ஒரு உரையை ஆற்றியிருந்தார். இந்த உரையில் தேசம், சுயநிர்ணைய உரிமை தொடர்பான சில கருத்துகளை கூட்டத்தில் முன்வைத்தார். அவரைப் பொறுத்தவரை தேசம் என்ற வரையறை அவசியமற்றது. ஈழத் தமிழர்கள் தம்மை தேசமாக வறையறுப்பது சிக்கலானது. பன்முகத் தன்மையற்றது. பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது எனப் பல காரணங்களை முன்வைத்தார். மக்கள் ஒற்றுமையாக ஒன்றினைந்து வாழ்வதற்கு தேசம் சுயநிர்ணைய உரிமைக் கோட்பாடுகள் தடைகற்கள் என்ற தொனிபடக் கூறினார். இவரின் இந்த உரை முழுமையான கட்டுரையாக வெளிவரும் பொழுது இவரது நிலைப்பாட்டைத் தெளிவாக வாசிக்கலாம். இருப்பினும் அவரின் பல கருத்துகளுடன் முரண்பாடு உள்ளமையால் எனது கருத்தை முன்வைக்கலாம் என முயற்சிக்கின்றேன். இது ஒரு ஆய்வுக் கட்டுரையல்ல என்பதை மனங்கொள்ளவும். இது தொடர்பான விவாதம் முகநூலில் ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மையாக இருந்தாலும் அவர்கள் ஒரு தேசிய இனம். சிங்கள இனத்திற்கு சரிசமனான உரிமைகளையும் அதிகாரங்களை கொண்டிருக்க கூடியவர்கள் என்ற எனது நிலைத் தகவலுடன் தொடரும் உரையாடலாகும். சிலர் நாம் சிறுபான்மையினர் என்ற அடையாளத்துடன் இருப்பதே பலம் எனவும் தேசம் தேசியம் என்பவவை வழக்கொலிந்துவிட்டன என வாதிடுகின்றனர். இவர்களுக்கான பதிலாக இக் கட்டுரை அமையும்.

384px-Sri_Lankan_Presidential_Election_2019_Electoral_Disticts.svg.pngஒரு மக்கள் கூட்டம் தேசமாக உணர்வதும் சுயநிர்ணைய உரிமைக்காகப் போராடுவதும் முரண்பாடுகளை அதிகரிக்கும் எனவும் பன்முகத்தன்மையை இல்லாமல் செய்யும் எனவும் நிலம் சார்ந்து வாழுகின்ற சக சிறுபான்மையினரை (இது வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்கள்) அச்சத்துக்குள்ளாக்கும் எனவும் அமைதியற்ற நிலையை தொடர்ந்தும் பேணும் எனவும் ம. திருவரங்கன் கூறுகின்றார். ஆகவே தேசமாக உணர்வதும் சுயநிர்ணைய உரிமைக்காகப் போராடுவதும் தவறு என்கின்றார். அதேநேரம் இன்றுள்ள பிரதான இன முரண்பாடுகளுக்கான தீர்வு என்ன என்பதை இவர் தெளிவாக கூறவில்லை. சமாதான சக வாழ்வு என்பது சமத்துவமான உரிமைகளும் அதிகாரங்களும் இருக்கும் பொழுது மட்டுமே சாத்தியமானது என்பதை இவர் ஏனோ புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. முக்கியமாக சிங்கள மக்களும் சிறிலங்கா ஆட்சியாளர்களும் இவ்வளவு அழிவின் பின்னரும் இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை என்பதையும் இவர் உணர்ந்து கொள்ளவில்லை.

சுயநிர்ணைய உரிமை யாருக்கு அவசியம். ஒவ்வொரு மனிதருக்கும் தனது வாழ்வை தீர்மானிப்பதற்கான உரிமை உள்ளது. அதேநேரம் தனது வாழ்வின் முக்கியத்துவம் சக மனிதரின் முக்கியத்துவத்தையோ வாழ்வதற்கான உரிமையையோ குறைப்பதாகவோ மறுப்பதாகவோ இருக்கக்கூடாது. இந்த அடிப்படையில்தான் ஒரு பெண்ணுக்கான விவாகரத்து உரிமையையும் புரிந்து கொள்ளவேண்டும். ஆண் மிக மோசமானவனாக இருந்தால் மட்டுமல்ல மிக நல்லவனாக கருதப்பட்டாலும் பெண் அவனுடன் வாழ விரும்பவில்லையெனின் அவள் பிரிந்து தனித்து வாழ்வதற்கான உரிமை உள்ளது. இணைந்து வாழ விரும்பும் பெண் தனக்கான அதிகாரத்தையும் உரிமைகளையும் உத்தரவாதம் செய்யும் உரிமையும் உள்ளது. அல்லது இருக்க வேண்டும். இதேபோலத்தான் ஒரு தேசத்தின் சுயநிர்ணைய உரிமையுமாகும்.

images (13)ஒரு மக்கள் கூட்டம் எந்த அடிப்படையிலும் தம்மை ஒரு தேசமாக உணரலாம். இது ஒரு உணர்வுநிலை. இதற்கு மொழி, மதம், நிலம். கலாசாரம், பண்பாடு, என எதுவும் அடிப்படைக் காரணமாக இருக்கலாம். மாறாக ஸ்டாலின் அவர்களால் வரையறுக்கப்பட்ட இவை அனைத்தும் இருக்க வேண்டும் என்ற முன்நிபந்தனை காலாவதியான கோட்பாடாகும். ஏனெனில் இவை அனைத்தினாலும் மட்டுமல்ல ஏதாவது ஒன்றினாலும் கூட ஒரு மக்கள் கூட்டம் அடக்கி ஒடுக்கப்பட்டால் அவர்கள் தம்மை தேசமாக உணர்வதும் சுயநிர்ணைய உரிமைக்காகப் போராடுவதும் தவிர்க்கப்பட முடியாததாகும். இந்தடிப்படைகளில் ஈழத் தமிழர்கள் தேசமாக உணர்வதும் தம் சுயநிர்ணைய உரிமைக்காகப் போராடுவதும் தவறல்ல. நியாயமான அவசியமான போராட்டமே. மேலும் ஈழத் தமிழர்கள் உடனடியாக சுயநிர்ணைய உரிமை கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதற்கு ஒரு வரலாறு உள்ளது. சிறிலங்கா அரசின் அக்கறையீனமும் ஈழத் தமிழர்களை தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கியமையும் திட்டமிட்ட சிங்கள பெளத்த குடியேற்றங்களும் தமிழ் இனவழிப்பு செயற்பாடுகளும்  சுயநிர்ணைய உரிமைக்கான கோரிக்கைக்கு அடிப்படைகளாக இருந்தன. காஸ்மீர், பாலஸ்தீன, கியூபெக், கிழக்கு தீமோர் எனப் பல மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டங்கள் நியாயமானது எனின் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டமும் நியாயமானதாகும்.

download (2)ஈழத் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைக்கான விடுதலைப் போராட்டமானது சரியான திசைவழியில் செல்ல வேண்டுமாயின் இத் தேச உணர்வினை கூட்டுப்பிரக்ஞையுடாக ஆரோக்கியமான போராட்டமாக மாற்றியமைத்திருக்க வேண்டும். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிக்கு 70களின் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் சமூக நடைமுறையை கவனிக்காது கோட்பாட்டிலும் தத்துவத்திலும் மட்டும் அக்கறை கொண்ட அவர்கள் இதை இனவாதப் போராட்டம் என அன்று புறந்தள்ளிவிட்டார்கள். 90களின் ஆரம்பத்தில் சண்முகதாசன் அவர்கள் தனது நிலைப்பாட்டை மாற்றி போராட்டத்தை ஏற்றுக் கொண்டாலும் இது காலம் கடந்த முடிவாகும். முற்போக்கு சக்திகளின் இத்  தவறினால் ஈழ விடுதலைப் போராட்டமானது சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எவ்வாறான கோட்பாட்டு அடித்தளமுமின்றி (கூட்டுப்)பிரக்ஞையின்மையாக எதிர்வினையாக மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக தன்னளவில் குறுந்தேசியவாதமாகவும் குறுகிவிட்டது. இதன் காரணமாக பல தவறுகளை விட்டது. குறிப்பாக முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையே கேள்விக்குட்படுத்தியது. இவ்வாறான பல தவறுகளின் விளைவாகப் போராட்டமே நசுக்கப்பட்டு இழப்புகளும் வடுக்களும் வலிகளும் மட்டுமே இன்று  எஞ்சியுள்ளது. போராட்டத்தின் எதிர்மறையான விளைவுகளின் காரணமாக போராட்டத்தையோ தேசமாக உணர்வதையோ சுயநிர்ணைய உரிமையை கோருவதையோ தவறு எனக் கூற முடியாது. நேர்மையான முற்போக்கு சக்திகள் சமூக விஞ்ஞான மாணவர்களாக மார்க்சியவாதிகளாக இவ்வாறு நடந்தமைக்கான காரண காரியங்களை கண்டடைந்து அடக்கி ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக தொடர்ந்தும் போராட வேண்டும். மாறாக போராட்டமே தவறு தேசமாக உணரத்தேவையில்லை என்ற வாதங்கள் ஒடுக்குமுறையாளர்களான சிறிலங்கா அரசுக்கு தம்மையறியாமலே மறைமுகமாக ஆதரவளிப்பதாகவே அமையும். இதை இன்றைய முற்போக்காளர்கள் மார்க்சியவாதிகள் இடதுசாரிகள் புரட்சியாளர்கள் எனக் கூறுவோர் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய மக்கள் காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடியபோது அவர்கள் இந்தியா என்ற தேச உணர்வை முதன்மைப்படுத்தினார்கள். அப்பொழுது தாம் தம்மை ஆள்வதற்கான உரிமை உள்ளவர்கள் என்றடிப்படையில் சுயாட்சி கோரிப் போரிட்டார்கள். இங்கு சுயநிர்ணைய உரிமை என்பது அவசியப்படவில்லை. ஏனெனில் ஆட்சி செய்தவர்கள் வேறு நாட்டிலிருந்த வந்தவர்கள். அவர்கள் வெளியேறி நாமே நம்மை ஆட்சி செய்வதற்கான வழியை விடவேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருந்தது. காலனித்துவ ஆட்சியாளர்கள் வெளியேறியபோது இந்திய மக்கள்  காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்றதுமட்டுமல்ல தாமே தம்மை ஆள்வதற்கான உரிமையையும் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இந்த விடுதலையானது அனைத்து மக்களுக்குமான விடுதலையாக இருக்கவில்லை. தொழிலாளர்கள். பெண்கள். பல் வேறு சாதியினர், சிறுவர்கள், சக பாலினத்தவர்கள் எனப் பல்வேறு பகுதியினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டனர் சுரண்டப்பட்டனர். இன்றுவரை இது தொடர்கின்றது. இதைவிட இந்திய விடுதலைக்காகப் போராடிய தலைவர்களிடம் ஹிந்தி மொழியும் இந்து மத மேலாதிக்கமும் இருந்தமை விடுதலை பெற்றபின்பும் நாட்டிற்குள் பல்வேறு முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. அதன் ஒரு விளைவுதான் பாக்கிஸ்தானும் பங்களாதேசும். இந்த இரு நாடுகளும் மத கலாசார பண்பாட்டு அடிப்படையிலான தமது தேச உணர்வை வெளிப்படுத்தி தமக்கான சுயர்நிர்ணைய உரிமையைப் பெற்றுக்கொண்டன. ஆகவே பிரிந்து செல்வதுதான் தமக்கான முழுமையான விடுதலையைத் தரும் என்று நம்பி பிரிந்து சென்றனர். இவர்களைவிட மேலும் பல தேசங்கள் ஹிந்தி இந்து தலைமைகளின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றன. இவர்கள் மொழியடிப்படையிலான தேச உணர்வை வெளிப்படுத்துவதுடன் தமக்கான சுயநிர்ணைய உரிமையை கோருகின்றார்கள்.  இவர்கள் இவ்வாறு கோரியபோதும் பிரிந்து போக வேண்டும்  என உணரவில்லை. அந்தளவிற்கு இந்திய தேசிய உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஹிந்தி மொழி பேசுபவர்களோ இந்து மதத்தைப் பின்பற்றுகின்றவர்களோ பெறும்பான்மையினர் அல்ல. ஆனால் இப் பின்னணியைக் கொண்டவர்கள் தலைமைப் பதவியை தொடர்ந்தும் வகித்தமையால் ஹிந்தி மொழியையும் இந்து மதத்தையும் இந்தியாவின் பொதுவான மொழியாகவும் மதமாகவும் மாற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு எதிரான போராட்டத்தையே பல்வேறு மொழிகளைப் பேசுகின்றவர்கள் முன்னெடுக்கின்றார்கள்.  இவர்கள் மொழிகளால் மட்டும் வேறுபட்டபவர்கள் அல்லர். மாறாகப் பண்பாடு, கலாசாரம், மத நம்பிக்கைகள், வரலாறு என்பவற்றாலும் வேறுபட்டவர்கள். இவற்றைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இவர்கள் தமக்கான சுயநிர்ணைய உரிமையைப் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள். இருப்பினும் இந்தியா பல்வேறு தேசங்களாகப் பிரிந்து தனித் தனி நாடுகளாக உருவாவது நீண்ட கால நோக்கில் நல்லதல்ல. இது எதிர்காலத்தில் இப் பிராந்தியந்தின் அமைதியைக் கெடுக்கலாம். பல சண்டைகளை போர்களை முரண்பாடுகளை தொடர்ச்சியாக உருவாக்கலாம். இப்பொழுது இலங்கையில் நடைபெறுவதுபோல பல்வேறு நாடுகள் இந்த நாடுகளுக்கு தேசங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்தி பயன்படுத்தி தாம் பயன்பெறலாம். இதைத் தவிர்க்க வேண்டுமாயின் இன்றே இவ்வாறான இன மத மொழி முரண்பாடுகளுக்கு அரசியல் அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். சுயநிர்ணைய உரிமை கொண்ட இந்திய தேசங்களின் ஒன்றியம் ஒன்றே இம் முரண்பாடுகளை சமத்துவமாகத் தீர்ப்பதற்கான வழியாகும். ஏனெனில் இந்திய மக்கள் இன்னும் ‘நாம் இந்தியர்’ என்ற உணர்வை ஆழமாகக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவிலுள்ள மொழிவாரி மாநிலங்கள் பலவும் தமக்கான ஒரு மொழியைக் கொண்டிருக்கின்றன. இங்கு ஹிந்தி மொழி பெரும்பான்மையில்லை.  ஆகவே ஒவ்வொரு மொழி பேசுகின்றவர்களும் தாம் ஒரு தேசமாக உணர்வதில் முரண்பாடு தெரிவதில்லை. கனடாவில் பிரஞ்சு மொழி பேசும் மாகாணம் உள்ளது. இவர்கள் சிறுபான்மையினராக இருப்பினும் தாம் ஒரு தேசமாக உணர்கின்றனர். இவர்கள் தமக்கான சுயநிர்ணைய உரிமையைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் மட்டுமல்ல சக ஆங்கில மொழி பேசுகின்ற கனேடிய மாகாணங்களும் தமக்கான சுயநிர்ணைய உரிமையையும் அதிகாரங்களையும் கொண்டுள்ளார்கள். இதே நிலைமை ஐக்கிய அமெரிக்கவிலும் காணப்படுகின்றது. ஆனால் இலங்கை போன்ற ஒரு நாட்டில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் தமிழ் மொழி பேசுகின்றவர்களை சிறுபான்மையினர் என்றே விளிக்கின்றனர். இப் பார்வையானது தம்மை அதாவது சிங்களவர்களைவிட தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக மக்கள் உரிமை குறைவானவர்கள். சிங்களவர்களுக்கு சமமான உரிமையை அவர்கள் பெறத் தேவையில்லை. அதற்கான தகுதியற்றவர்கள் என்ற எண்ணக் கருவை கொண்டுள்ளனர். இதைவிட இலங்கை மண் இவர்களின் மண் அல்ல என்ற தவறான பார்வையையும் இந்தியா குறிப்பாக தமிழகம் தம்மை ஆதிக்கம் செய்து அழிக்கலாம் என்ற பயத்தையும் சிங்கள மக்கள் கொண்டுள்ளார்கள். இவ்வாறான பல எண்ணக் கருக்களினடிப்படையில் தான் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆக்கிரமிக்கின்றனர். ஆகவே தான் இதனை பிரக்ஞைபூர்வமாக எதிர்கொள்ள சிறுபான்மையினர் என்ற சொல்லுக்குப் பதிலாக தமிழ் தேசம் முஸ்லிம் தேசம் மலையக தேசம் என்ற சொல் பொருத்தமானதாக இருக்கின்றது.

கடந்த கால பல தேர்தல்களில் மட்டுமல்ல கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் தாம் தனித்துவமானவர்கள். வேறு தேசத்தினர் என்பதை தெளிவாக தமிழ் மக்கள் வாக்களித்து வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வாக்களிப்பின்போது சிங்கள தலைமைகளுக்கு வாக்களித்தாலும் அதில் ஒரு செய்தியைக் கூறுகின்றனர். நாம் தனித்துவமானவர்கள் அதேநேரம் இலங்கை என்ற நாட்டில் உரிமையுடன் சமத்துவமாக வாழ விரும்புகின்றோம் என்பதாகும். ஆகவேதான் இலங்கையைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் என தமிழ் முஸ்லிம் மலையக மக்களை விளிப்பதானது சரியான பார்வையை வெளிப்படுத்தாதது மட்டுமல்ல சரியான தீர்வை நோக்கி நகர்த்தாது. ஆகவே சிங்கள. தமிழ், முஸ்லிம். மலையக தேசங்கள் என்றடிப்படையில் இவர்கள் சமத்துவமான உரிமைகளையும் அதிகாரங்களையும் உடையவர்கள் என்ற பார்வையே நடைமுறையிலுள்ள முரண்பாடுகளை ஆரோக்கியமாக தீர்ப்பதற்கு வழிவகுக்கும். இந்த எண்ணக் கருக்களையும் உணர்வுகளையும் நாம் மீள மீள வலியுறுத்தவதுடன் தேசங்களின் கூட்டுப்பிரக்ஞையாக உருவாக்க வேண்டும். இதுவே போராட்டமானது சரியான திசைவழியில் செல்வதை உறுதி செய்யும்.

மீராபாரதி

நன்றி  பிரக்ஞை தினக்குரல் டிசம்பர் 08 2019

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF