வலிகாமம் மேற்கு பிரதேச சபை (Valikamam West Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 47.30 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும்; தெற்கிலும் மேற்கிலும் நீரேரியும் எல்லைகளாக உள்ளன. வலி மேற்கு பிரதேசசெயலகம் வெளியிட்ட 'பனுவில்' இதழின் சிறப்பு நேர்காணல் வெளியீடு 30.12.2020
"வயது எதற்கும் எல்லை வகுக்காது"
நேர்காணல்: மல்லிகா செல்வரத்தினம்
"ஒரு பெண் வாழும் சமுதாயம் அவளை முன்னேற விடாது பல தடைகளை அவளுக்கு ஏற்படுத்த முற்பட்டாலும், அவள் அவற்றை முறியடித்து முன்வைத்த காலைப் பின்வைக்காது முன்னேற்றப் பாதையில் கண்ணுங் கருத்துமாகச் செயற்பட வேண்டும். இதற்கு உயிர்வாழும் சான்றாக நான் இருக்கிறேன்" என்று கூறுகிறார் ஈழத்து மூத்த எழுத்தாளரும் கவிஞருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் .
வலி மேற்கு பிரதேசசெயலகமும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து வருடாந்தம் வெளியிடும் “பணுவில்” பிரதேச இதழுக்கான நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் சுழிபுரம் எனும் இடத்தில், ஆசைப்பிள்ளை- செல்லமுத்து தம்பதிகளின் மகளாகப் பிறந்த திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள், சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கற்கும் காலத்திலேயே எழுத்தார்வம் மிக்கவராகத் திகழ்ந்த இவர், பண்டிதர் படிப்பினை மேற்கொண்டு பாலபண்டிதர் தேர்வில் சித்தி பெற்றார். நெசவுக் கற்கை நெறி பயின்று, அரச நெசவு ஆசிரியராகப் பல்வேறு இடங்களில் பணியாற்றியவர். “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை என்று ஒத்திடு” என்ற வாசகத்திற்கேற்ப நெசவு மட்டுமன்றி தையல் தொழிலிலும் பாண்டித்தியம் மிக்கவராகத் திகழ்கின்றார்.
'காத லொருவனைக் கைப்பிடித்தே- அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி"
எனும் அமரகவி பாரதியின் வாக்கிற்கிணங்க, யாழ். கொல்லங்கலட்டியைச் சேர்ந்த பொதுவுடைமைவாதியான கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களைக் காதலித்துக் கரம்பிடித்து, கணவருடன் வீறுநடை போட்டவர். இவரது திருமணம் கலப்புத் திருமணம் என்பதால் எண்ணற்ற விமர்சனங்களை எதிர்கொண்டாலும், எதற்கும் சளைக்காத புதுமை விரும்பியாகத் திகழ்ந்தார். சாதிய இறுக்கத்தால் கட்டுண்டு கிடந்த யாழ்ப்பாணத்துக்கு, 1962 இல் முற்போக்கு வித்தினைத் தூவி, சமூக சீர்மியத்தினை இடித்துரைத்தனர் இத்தம்;பதியர். அரிவாளும் சம்மட்டியுமே தாலிச் சின்னமாக அணிந்த அம்மையார், சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய துணைவருக்;கு உற்ற துணையாக இருந்து பல இன்னல்களை அனுபவித்தவர்: முத்தான மூன்று பிள்ளைச் செல்வங்களை உலகுக்கு அளித்தவர்.
பொதுவாக எழுத்தாளர்களுள் சமூக ஆர்வமும் மிகுந்திருக்கும். இதற்குத் திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அம்மையார் அவர்களும் விதிவிலக்கல்ல. பதின்ம வயது முதல் தற்போது எண்பதுகளைத் தாண்டியும் சமூக சேவையில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்ல, கல்விப் பணியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இவர் குடியிருக்கும் ‘சத்தியமனை’ வளாகத்தினுள் கணவருடைய ஞாபகார்த்தமாக, 'கே.ஏ.சுப்பிரமணியம் படிப்பகம்" என்ற டியிற்றல் மாடி நூலகம் ஒன்றினையும் கட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நூலகத்திற்கான அடிக்கல் கணவருடைய 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தினையொட்டிக் கடந்த வருடம் கார்த்திகை மாதம் நாட்டப்பட்டது. நூலக அத்திபாரத்தினுள் சம்பிரதாயப் பொருட்கள் இடுவதை விடுத்து, கணவருடைய அஸ்தியை இட்டுக் கட்டுகின்றமை இவரது புரட்சிகர மனப்பாங்கை எடுத்துக்காட்டுகிறது.
இவரது சிறுகதைகள் வீரகேசரி, கலைமதி, கலைச்செல்வி, ஜனசக்தி, ஜீவநதி, தாயகம் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவர் சிங்கப்பூரில் வசித்த காலத்தில், கடற்கரைச் சாலை கவிமாலை அமைப்புடன் இணைந்து பல கவிதைகளை வடித்து வாசித்துள்ளார், விவாத அரங்;குகளில் முழங்கியுள்ளார். தனது பாடசாலைக் கால அனுபவங்களைத்; தொகுத்து, 'பசுமையான நினைவுகளில் பண்ணாகம் மெய்கண்டான்" எனும் நூலினைக் கடந்த வருடம் வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுத்து, 'வெற்றிக்கு வலிகள் தேவை" எனும் தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு செய்துள்ளது. 'ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள்" நூலிலும் இவரது கவிதை பிரசுரமாகியுள்ளது. தற்போது துணைவருடனான வாழ்க்கைப் பயணத்தை, 'வாழ்வின் சந்திப்புகள்" எனும் தலைப்பில் தொடர்ச்சியாக முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்.
சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதனை நிரூபித்துக்கொண்டிருக்கும் அயர்ச்சியற்ற பெண் ஆளுமையான இவர், 'பெண்கள் எப்போதும் தமது சொந்தக் கால்களில் நிற்க வேண்டும்" என்று அழுத்திக் கூறுபவர். முதிர்ச்சியுற்ற வயதிலும் சிறந்த நினைவாற்றலுடன் மிளிரும் இவர், தன் பதிவுகளை சிறியரக மடிக்கணினியில் தட்டச்சுச் செய்து முகநூலில் பதிவேற்றுவது வியப்பளிக்கிறது. இனி அவரது நேர்காணலில் இருந்து....
கேள்வி- உங்களை எழுதத் தூண்டியது எது?
பதில்- 'மெய்கண்டான்" என்ற பெயரில் மாணவர் கையெழுத்துப் பத்திரிகை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாணவர் சங்கக் கூட்டத்தில் வாசிக்கப்படும். அதில் சிறுகதை, கவிதை, விடுகதை, நொடி, பழமொழி, துணுக்குகள் முதலியன வெளிவரும். உப பத்திராதிபர், பத்திராதிபர் என்ற பதவிகளில் நான் இருந்தபோது (1953), நிறைய எழுதியுள்ளேன். அதற்கு எங்கள் குருவான பண்டிதர் அமரர் அ. ஆறுமுகம் அவர்கள் தூண்டுகோலாக இருந்தார். அவர் தந்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் என்னை அதிகம் எழுதத் தூண்டியது. அவ்வப்போது கலைமதி, கலைச்செல்வி, சுதந்திரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளுக்கும் கவிதையோ சிறுகதையோ எழுதுவேன். 1962-01-21 ஞாயிறு வீரகேசரியில் வெளியான எனது சிறுகதை ஒன்றினது (அன்னதானம்) பிரதி இப்போதும் என்னிடம் இருக்கிறது. அண்மையில் 'தாயகம்" நூறாவது இதழில் எனது சிறுகதையும், கவிதையும் பிரசுரமாகியுள்ளன.
கேள்வி- உங்களது ஆளுமை குடும்பப் பின்னணி பற்றிக் கூறுங்கள்...
பதில்- தங்கை லட்சுமிப்பிள்ளை கணித ஆசிரியராக இருந்து , கனடா நாட்டில் காலமாகிவிட்டார். தம்பி பொன்னையா ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியாக வவுனியாவில் வசிக்கிறார். என் கணவர் இலங்கையின் தமிழ் இடதுசாரிய முன்னோடிகளில் ஒருவரான கே. ஏ. சுப்பிரமணியம் ஆவார். நாங்கள் காதலித்து கலப்புத் திருமணம் புரிந்தோம். மூன்று குழந்தைகள்.
மூத்த மகன் சத்தியராஜன். விடுதலை போராளியாக 3 வருடங்கள் சிறையிருந்து விடுதலையாகி விபத்து ஒன்றில் மரணமடைந்துவிட்டார். மகள் சத்தியமலர் கணனித் துறையில் பயின்று கிடைத்த ஆசிரியர் தொழிலை தந்தையின் இழப்பினால் தொடர முடியாது நிறுத்திக்கொண்டார். அவரது கணவர் கலாநிதி.இரவீந்திரன். ஓய்வுபெற்ற விரிவுரையாளர். அவர்களுக்கு இரு குழந்தைகள் மகள் அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கிறார். மகன் அமெரிக்காவில் விமானியியல் பட்டம் பெற்று தற்போது கனடாவில் வசிக்கிறார். கடைசி மகன் சத்தியகீர்த்தி. இலத்திரனியல் பொறியியலாளர். மனைவி மருத்துவர் சுசித்திரா. அவர்களின் குழந்தைகள் இருவருமே அவுஸ்ரேலியா நாட்டில் மருத்துவத் துறை பயின்று, மகள் சத்திரசிகிச்சை நிபுணராக மேலும் படித்துக்கொண்டுள்ளார். எனக்கு இரு பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர். சுழிபுரம் சத்தியமனையில் மகளுடன் வசித்து வருகிறேன். என் கணவர் கே ஏ சுப்பிரமணியம் அவர்கள் நினைவாக ஒரு நூலகத்தை, மக்களின் உபயோகத்திற்காக அமைக்கும் பணியில் குடும்பத்தவருடன் இணைந்து செய்து வருகிறேன்.
கேள்வி- எழுத்துத் துறையில் நீங்கள் சந்தித்த நம்நாட்டு, வெளிநாட்டு எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் பற்றிக் கூறுங்கள்...
பதில்- இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினராக நானும் இருந்தமையால் சில்லையூர் செல்வராஜன், புதுவை இரத்தினதுரை, கே.டானியல், மல்லிகை டொமினிக் ஜீவா, திருமதி பத்மா சோமகாந்தன், ஈழத்துச் சோமு, யாழ்ப்பாணக் கவிராயர், அகத்தியர், இந்துமதி மார்க்கண்டு, பசுபதி, நீர்வை பொன்னையன் , எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை இவர்களுடனும் என்னுடன் பாலபண்டித வகுப்பில் படித்த சக மாணவச் சகோதரிகளாக இருந்த உஷா பஞ்சநாதேஷ்வரன், மகேஸ்வரி கனகசபை, மகேஸ்வரி இராமநாதன், பூமாதேவி சின்னத்துரை இப்படி அநேகரைச் சந்தித்துள்ளேன்.
கொழும்பு தாய்ச் சங்கத்தில் எச்.எம்.பி. மொகைதீன், செ.யோகநாதன், பிரேம்ஜி, ஞானசுந்தரம், வித்துவான் வேந்தன், வித்துவான் வேலன், பண்டிதர்கள் இராசையா, துரைசிங்கம், சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதர் இளமுருகனார், சமஸ்கிருத ஆசான் சுப்பிரமணிய தேசிகர், காரைநகர் சரஸ்வதி, ஞானாம்பிகை சிற்றம்பலம் என ஏராளமானவர்களின் பரிச்சயம் உண்டு.
மேலும் டாக்டர் சீனிவாசகம், டாக்டர் நந்தி சிவஞானசுந்தரம், பேராசிரியர் கைலாசபதி, கவிஞர் இ. முருகையன், பேராசிரியர் சி. தில்லைநாதன், பேராசிரியர் சிவசேகரம், பேராசிரியர் மௌனகுரு, கவிஞர் சுகன், எழுத்தாளர் ஷோபாசக்தி, யோ. கர்ணன், லெனின் மதிவாணன், கவிஞர் சு. முரளிதரன், 'தாயகம்' பிரதம ஆசிரியர் தணிகாசலம், ந. இரவீந்திரன், கவிஞர் சேரன், கவிஞர் அவ்வை, ஜெயபாலன் அவர்களின் அறிமுகங்களும் உண்டு. இந்தியாவிலும் பாரதி அறிஞர் பெ.சு.மணி அவர்கள், ‘சுபமங்களா’ ஆசிரியர் கோமல் சுவாமிநாதன், ஆர்.டி.முத்து, ‘சவுத் விஷன்’
நிறுவன ஆசிரியர் பாலாஜி என பலரையும் அறியக்கிடைத்தது. நன்கு பழகவும் கிடைத்தது. சிங்கப்பூரிலும் புதுமைத்தேனீ மா. அன்பழகன் , உஷா சுப்புசாமி, இறை மதியழகன், அ. இன்பா, ந.வீ.சத்தியமூர்த்தி , பிஷான் கலா என பலரையும் நன்கு அறியக்கிடைத்தது.
கேள்வி- பொதுவாக திருமணத்தின் பின்னர் எழுத்துலகில் செயற்பட்ட பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். இதற்குப் பிரதான காரணமாக இருப்பது எது என்று நினைக்கிறீர்கள்?
பதில்- திருமணத்தின் பின்னர் குடும்பப் பொறுப்பு முழுவதும் பெண்ணின் தலையில் திணிக்கப்படுவதால், குடும்ப நிர்வாகத்தை விட்டு வெளியே வந்து அவளால் இயங்க முடிவதில்லை. குறிப்பாக குழந்தைப் பேற்றின் பின்னர் பிள்ளைகளைப் பொறுப்புடன் வளர்ப்பது, அவர்களைக் கல்வி கற்க வைப்பது, அவர்களுக்குத் திருமணம் முடித்து வைப்பது என்று அவர்களின் கடமைகள் நீள்கின்றன. சமூகக் கட்டொழுங்கு என்ற போர்வையில் திணிக்கப்படும் அடிமைத்தனங்களால் பெண்கள் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது. அத்துடன், ஆணாதிக்க மனப்பாங்குள்ள கணவன்மாரால் அநேக பெண்கள் நசுக்கப்படுகின்றனர். இவற்றிலிருந்து ஒருசில பெண்கள் வெளிவந்து சாதித்தும் உள்ளனர். ஒருசில பெண்களுக்கு அவர்களது துணைவரே உறுதுணையாக இருந்தமையால் சாதித்தும் உள்ளனர்;. நான் அறிந்தவரையில் எழுத்துலகில் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் மற்றும் அரசியலில் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், கந்தர்மடம் திருமதி சந்திரா நவரட்ணம் அவர்களை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும்.
கேள்வி- சமகாலக் குடும்ப விரிசல்களுக்கு 75 சதவீதம் பெண்கள் தான் காரணம் என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்- இல்லை. ஆணும் பெண்ணும் சமபங்கு வகிப்பது தான் குடும்பம். அவர்கள் தனித்தனி ஆளாக இருந்தபோது பரவாயில்லை. குழந்தை என்ற ஒரு புது உறவு வந்த பின்னர், அந்த இருவரும் சமமாகப் பெற்றார் என்ற பதவியை நிறைமனதோடு ஏற்றுக்கொண்டு அடுத்தவர்களுக்குத் தெரியாமல் இல்லறத் தேரை இழுத்துச் செல்கின்றனர். சிங்கப்பூர் நாட்டிலே ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்கிறபடியால், பணிப்பெண் ஒருவரை நியமித்து வாழ்நாள் முழுவதும் அந்தத் துணையோடு தமது இல்லறத்தையும் தொழிலையும் தற்காத்துக்கொள்கின்றனர். எமது நாட்டிலும் தற்போது கணவன் மனைவியர் இருவரும் தொழிலுக்குச் செல்வதால் இப்பணிப்பெண் மூலம் பிள்ளைகள் பராமரிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. பணிப்பெண்களது சுய கௌரவம் பாதிக்காத விதத்திலும் அவர்களுக்குரிய ஓய்வு நேரத்தை சட்டப்படி வழங்குவதையும் குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பொதுவாக குடும்ப விரிசல் ஏற்படாமல் காக்கும் கடமையில் பெண்ணே கண்ணும் கருத்துமாக இருக்கிறாள். வீட்டையும் நாட்டையும் திறம்பட நிர்வகிக்கும் திறன் கூட அவளிடம் இருக்கிறது. ஆயினும், உடலளவில் அவள் மென்மையானவள் என்பதனால் அதிக சோதனைகளுக்கு முகங்கொடுக்கிறாள்.
இன்று நீதிமன்றங்களில் நிரம்பி வழியும் வழக்குகளில் அதிகமானவை விவாகரத்து வழக்குகள் என்று அறியும் போது வேதனையாக இருக்கிறது. அந்தக் காலத்திலும் குடும்பப் பிணக்குகள் இருந்தனதான். ஆனால், அவை மணமுறிவு வரை குடும்பங்களை இட்டுச் செல்லவில்லை. அதிகளவான விரிசல்களைத் தம்பதியரிடையே ஏற்படுத்தவில்லை. விரிசல், பிரிவு என்பது ஒரு நிமிட வாய் வார்த்தையினால் வந்துவிடும். இதனைத்தான்,
'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்றார் வள்ளுவனார். சில குடும்பங்களுக்கு கணவன் வழி பெற்றார் அல்லது மனைவி வழிப் பெற்றார் உடனிருந்து பாதுகாத்து வருகின்றனர். இப்படியான குடும்பங்கள் ஓரளவு சமூக ஆரோக்கியத்துடன் இருப்பதனைக் காணமுடிகிறது.
கேள்வி- வாழ்க்கையில் நிறையச் சவால்களுக்கு முகங்கொடுத்து, எதிர்நீச்சலிட்டு வெற்றி பெற்றிருக்கும் தங்களுக்கு அந்த உத்வேகத்தை அளித்தது யார் அல்லது எது?
பதில்- என் அழகான அம்மாவைத்தான் முதலில் சொல்ல வேண்டும்.தேவாரம், திருவாசகம் அனைத்தும் அத்துப்படி. நிகண்டு, சோதிட சாஸ்திரம், வான் சாஸ்திரம், இட்டுக்கட்டி பாடுவது மட்டுமன்றி, நாட்டுக்கூத்துப்பாடல்களும், ஒப்பாரியும் மனம் கசியும, வண்ணம் பாடுவார். பின் என் தந்தை வேலை நிமித்தம் சிங்கப்பூர் சென்றபின் ஏற்பட்ட பொருளாதார சீரின்மையும், தந்தை நோயுடன் திரும்பியதும் அவரை நிரந்தர நோயாளியாக்கியது. பின் என் நேசிப்புக்குரியவராக இருந்து கணவராகிய கே ஏ சுப்பிரமணியம் அவர்களே. குனிந்த தலையுடன் நடப்பதே பெண் என்பதை மாற்றி , துணிவையும் , நேர்மையையும் சுமந்தபடி சுற்றிச் சுழண்டு நிமிர்ந்து நடக்க வைத்தார். வாசிப்பும், தேடலும், நேசிப்பும் இதனால் விசாலமானது.
கேள்வி- தங்களை அதிகம் பாதித்த படைப்பாகத் தாங்கள் எதனை நினைக்கிறீர்கள்? அதுபற்றிக் கூறுங்கள்?
பதில்-நான் சிறுமியாக இருந்த காலத்தில் எனது பெற்றார் ‘ கந்த சட்டி’ விரதம் அனுஷ்டிப்பர். ஆறுநாளும் பறாளாய் முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவர். ஆறாம் நாள் உபவாசம்.மூன்று மிளகு, மூன்று மிடறு தண்ணீர்...அடுத்த நாள் அதிகாலை பாறணை...அதாவது ஒரு முருக அடியாரையும் அழைத்து வந்து....சங்கொலி முழங்க அன்னப்பிராசனம்.நானும் தங்கையும் ...பெற்றார் கோவிலில் இருந்து வீட்டிற்கு வரமுன்னரே சைவபோசன சமையல் முடித்து விடுவோம்....அதன்படி கந்தசட்டி கவசம் மனதில் பதிந்து போனது.. பள்ளிக் காலத்தில். திருக்குறள், மகாகவி பாரதியாரின் அத்தனை பாடல்களும் அத்துப்படி....பாரதிதாசன்...தேசிய விநாயகம்பிள்ளை இவர்களின் பாடல்களும், எங்கள் நாட்டு நவாலியூர் சோமசுந்தரப்புலவர் வரை பல புலவர்களின் பாடல்கள் பிடிக்கும். பள்ளிக்கால தேவார, திருவாசகம் தொடக்கம் பல கவசங்க
ளும் மனனம்.அம்மா வாசிக்கும் கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம், கல்கண்டு, அம்புலிமாமா இவற்றுடன் ஐயா வாசிக்கும் இராமாயணம், மகாபாரதம் ( இவைகள் கையில் தூக்கி வாசிக்க முடியாத பாரமானவை) ஒரு நூல் தாங்கியில் வைத்து வாசிக்க வேணும்.பன்னிரண்டு ராத்திரிக்
கதை, மதனகாமராசன் கதை, தமிழறியும் பெருமாள் கதை.....இப்படி அநேகம். கிடைக்காத பிரதிகளை சுழிபுரம், கம்பனை அம்மன் கோவிலடி.....மங்கையற்கரசி சூரியர் ( தேவி ரீச்சர்) வீட்டிலும் பெற்று வாசிப்போம்.வெள்ளிக்கிழமை மாலை நேரம் குலதெய்வம் பத்திரகாளி சன்நி
தானத்தில் பஜணை பாடுவோம். ( வயசுக்கு வந்த பின் அதைச் செய்யவில்லை )
கல்கியின்’ பொன்னியின் செல்வன்’...அலை ஓசை.....இப்படியே தொடர்ந்து ‘ மணி வண்ணன்...என்ற ‘ பார்த்தசாரதி ‘ எழுதிய “ குறிஞ்சிமலர்கள்” என்ற தொடர் நாவல் நீண்ட மாதங்கள் தொடர்ந்தது. அதில் வரும் கதாநாயகன் அரவிந்தன் .....ஓவியர் மணியனின் கைவண்ணத்தில் 1959—60... எனது கணவனாக வரவிருக்கும் ...’ பொய்யாமொழி ‘ ( இது அவரை
கிராமத்தார் அழைக்கும் பெயர்) மணியத்தாரின் நடை, உடை, பாவனைகளை உள்ளடக்கி இருக்கும். பூரணியும் என்னைப் போலவே ஒரு பயந்த சுபாவமுள்ள பெண்ணாக படைக்கப் பட்டாள்.
மிக, மிக அருமையான நாவல் இதனை எப்போதும் நாங்களாகவே கருதினேன். பின் என் குழந்தைகளுக்கும், என் பேத்திக்கும் கூட இது பற்றிச் சொல்லியிருக்கிறேன்.......இதை விட அகிலனின் பாவை விளக்கு.....கலைமகளில் வந்த
ஒரு சிறு கதை.....கி.வா. ஜெகந்நாதன் ....எழுதியது என நினைக்கிறேன்....”சங்கமம்” ...பெயர்.எழுத்தாளர்கள் பெயரை....கதைகளின் பெயரை எழுதுகில் ஒரு நாள் போதாது.
எங்கள் திருமணம், முடிந்த பின் தமிழகத்தில் இருந்து வரும் தாமரை, சரஸ்வதி என்ற சஞ்சிகைகள் தான் வாசிப்பு. ஏனெனில்....ஏழைத் தொழிலாளத் தோழர்களின் பெரு முயற்சியினால் வெளிவருபவை. சுன்னாகத்தில் கலைமதியும், யாழ்ப்பாணத்தில் கலைச்செல்வியும் அக்காலத்தில் வெளி வந்தன. இது தொடர்ந்து .... என் மருமகன் ந.இரவீந்திரனுக்கு சாகித்திய போட்டி நடுவர் நிமித்தம் அனுப்பப்படும் புதிய எழுத்தாளர்களின் கதைகள் வரை வாசிப்பேன்.
கேள்வி- தமிழ் நாட்டு எழுத்தாளர்களை விரும்பிப் படிக்கும் நம்மவர்கள் நம்நாட்டு எழுதத்தாளர்களை அதிகம் விரும்பிப் படிக்காமைக்குரிய காரணமாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
பதில்- நம் நாட்டு ‘ மல்லிகை ‘ பத்திரிகையை விரும்பி வாசித்தவர்கள் அநேகர்....
அப்படிச் சொல்ல முடியாது. எழுத்தாளர் டானியல், சோபாசக்தி, கவிஞர் சேரன், தேவகாந்தன் ,பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி , ந.இரவீந்திரன் போன்றோரின் நூல்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல சிங்கப்பூரில் கூட மக்கள் விரும்பி வாசிப்பதைப் பார்க்கிறோம். இதே போல வீரகேசரிப் பிரசுரங்கள் ஒரு காலத்தில் மிகப் பிரபலயமாக இருந்தது. அதன் மூலம் பல எழுத்தாளர்கள் நாடு முழுவதும் அறியப்பட்டார்கள். இன்று கூட பலம்பெயர்ந்தவர்களிடமிருந்து மிகச் சிறந்த படைப்புகள் வெவ்வேறு பரிணாமத்துடன் வெளிப்படுகின்றன. அது ஆரோக்கியமான வளர்ச்சியே. இடையில் ஏற்பட்ட சரிவு யுத்த சூழலும், பொருளாதார ஸ்திரமின்மையாலும் ஏற்பட்டவையே. இந்தியப் பாடல்களைக்கூட இலங்கை வானொலியினூடு கேட்ட காலம் ஒன்றிருந்தது. அந்தளவிற்கு ஜனரஞ்சகத் தன்மையைப் புரிந்து நிகழ்ச்சிகளை அமைக்கும் திறமை நம்மவர்களிடம் இருந்தது. காலங்கள் மாறும்.
கேள்வி- வலி. மேற்கு பிரதேசத்தின் வரலாற்று அம்சங்கள், பெருமைகள் என்பன போதியளவில் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்குரிய தடைக்கற்கள் எவை என்று நினைக்கிறீர்;கள்?
பதில்-தடைக்கற்களை அரசுதான் அகற்ற வேண்டும்.வரலாற்று அம்சங்கள் சில உண்டு.
- (1) பிரிட்டிஷ் மகாராணியின் பெயரைத் தாங்கிய சுளிபுரம் ,விக்ரோறியாக் கல்லூரி ( இந்தப் பெயரில் இலங்கையில் வேறு எந்தப் பகுதியிலும் கல்லூரி இல்லை)
- (2) சுளிபுரம்...திருவடிநிலை தீர்த்தக்கரை (ஶ்ரீ ராம பிரான் திருப்பாதங்கள் பதிந்த புனித இடம்.
- (3) நல்லூர் சின்னத்தம்பி புலவரினால் பறாளாய் விநாயகர் பள்ளு பாடப்பெற்ற சுளிபுர ஈசுரவிநாயகர்.....அருகே முருகன் ஆலயம்.
- (4) ஒல்லாந்தர் காலத்திற்கு முன்பே ஏழு வீதிகளை உள்ளடக்கிய பொன்னாலை வரதராஜப் பெரு மாள் ஆலயம்....இந்த ஆலயத்தின் அத்தனை வீதிகளையும் இடித்து பொதுமக்களின் நீள் வரிசை கை மாற்றல்கள் மூலம் ...சங்கானை டச்சுக் கோட்டை கட்டப்பட்டதாம்.*இது வரலாற்று உண்மை.
- (5) பொன்னாலை....கடல் நடுவே காரைநகர் செல்லும் ஒன்பது பாலங்கள்.
- (6) திருவடிநிலை கடற்கரையில் இறங்கிய சங்கமித்திரை( அசோக சக்கரவர்த்தியின் மகள்) கையில் வெள்ளரச மரக்கிளையுடன் நடந்நு சென்ற சங்கமித்த வீதி....
இந்த அரிய பெரிய விபரங்கள் அடங்கிய வலி- மேற்கு பகுதிக்கு ....அநேக சிறப்புறு ஆலயங்கள், கல்லூரிகள், மூளாய் கூட்டுறவு வைத்திய சாலை..... இவை பற்றி எம் சந்ததி தொடர்ந்து இணையங்களில் பதிவு இடுகிறார்கள். அதனை ஊக்கப்படுத்த வேண்டும்.
கேள்வி- பெண்கள் வெளிவட்டத்திற்குள் வந்து இயங்குவது பிரச்சினையாக இருந்த காலத்தில் அரசியலிலும் உங்கள் பங்களிப்பு இருந்துள்ளது. இது குறித்துக் கூறுங்கள்...
பதில்- 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற முற்போக்கு வாலிபர் மாநாட்டின் பின்னர் 'முற்போக்கு மாதர் அணி" என்ற பெயரில் ஒரு பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கு கொழும்பு தாய்ச் சங்கத்தில் இருந்து திருமதி தேஜோ குணவர்த்தன, திருமதி லெனரோல், செல்வி நாணயக்கார, இன்னும் சிலரை உள்ளடக்கிய குழுவொன்று யாழ். வந்து, இங்கும் ஒரு கிளையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. அதற்கு திருமதி உருத்திரா கந்தசாமி தலைவராகவும், திருமதி தங்கம் கந்தஞானியார் செயலாளராகவும், என்னை உப செயலாளராகவும், செல்வி சந்திரகாந்தி சீனிவாசகம் அவர்களை தனாதிகாரியாகவும் தெரிவு செய்து இன்னும் ஐந்து பேரை செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமித்தனர்.
அந்தச் சங்கத்தினூடாக 1964 ஆம் ஆண்டின் சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள், உடு புடைவைகள் முதலியவற்றைச் சேகரித்துப் பகிர்ந்தளித்தோம். பின்னர் எனது கணவர் தேசம் முழுவதுக்குமாக முழுநேர வேலை செய்தார். என் மகனும் தன்னின மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். அவர்களுக்கும் அவர்களது தோழமைகளுக்கும் இன்று வரை துணையாக இருக்கிறேன். அயலில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் என்னிடம் ஆங்கிலம், சிங்களம் கற்க வருகிறார்கள். இன்றுவரை கல்விச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறேன். மனம்தான் செயலி.
கேள்வி- உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்களின் அரசியல் பிரவேசம் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்- அரசியல் வெளியில் செயற்படும் பெண்களை விமர்சிப்பதுதான் அவர்களின் அரசியல் பிரவேசம் குறைவதற்கான காரணம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அரசியலில் பங்குகொள்ளும் பெண்கள் குறைவாக இருந்தாலும், அவர்களின் செயற்திறமையினால் இன்றும் போற்றப்படுகிறார்கள். 1959 இல் தனது கணவனின் மரணத்தின் பின்னர் நாட்டின் பிரதமர் என்ற பெரிய பதவியை வகித்தவர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆவார். அவரைத் தொடர்ந்து அவரது இளைய மகளான திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க என்பவர் ஜனாதிபதி பதவியை வகித்தவர். உலகுக்கு முதல் பெண் பிரதமர் மற்றும் பெண் ஜனாதிபதியை அளித்த பெருமையை இலங்கை பெற்றது.
இன்று சிங்களப் பெண்கள் மாத்திரமல்ல, தமிழ் பேசும் பெண்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் வரை சென்று மக்களின் குறைகளை எடுத்துரைத்துத் தீர்வினையும் பெற்றுக்கொடுக்கிறார்கள். அதுபோல் நீதிமன்றங்கள், அரசாங்க கூட்டுத்தாபன நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றி எடுத்துக்கூறி அவர்களுக்கான விமோசனங்களையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் துணிகரமாகக் கால்பதித்து வாகை சூடும் பெண்கள் அரசியலிலும் இனிவரும் காலங்களில் அதிகளவில் பிரவேசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
கேள்வி- பெண் விடுதலை பற்றிய பேச்சுக்கள் முனைப்புப் பெற்றிருக்கும் இன்றைய காலகட்டத்தில், தமிழ்ப் பெண்கள் முழுமையாக விடுதலை பெற்றுவிட்டனர் என்று நினைக்கிறீர்களா?
பதில்- இல்லை. அவர்கள் கால் பதிக்கும் ஒவ்வொரு இடத்திலும் பல தடைக் கற்களைத் தாண்டித்தான் முன்னேற வேண்டியிருக்கிறது. ஒரு பெண் வாழும் சமுதாயம் அவளை முன்னேற விடாது பல தடைகளை அவளுக்கு ஏற்படுத்த முற்பட்டாலும், அவள் அவற்றை முறியடித்து முன்வைத்த காலைப் பின்வைக்காது முன்னேற்றப் பாதையில் கண்ணுங் கருத்துமாகச் செயற்பட வேண்டும். இதற்கு உயிர்வாழும் சான்றாக நான் இருக்கிறேன்.
அத்துடன் பெண்ணானவள் நன்கு படிக்க வேண்டும், நல்ல தொழில் பார்க்க வேண்டும், திருமணமும் செய்துகொள்ள வேண்டும், ஒன்றிரண்டு பிள்ளைச் செல்வங்களையும் பெற்றெடுக்க வேண்டும். பிள்ளைகளைப்; பெற்று விட்டால் மட்டும் போதாது. அவர்களைப் பேணி வளர்க்கவும் வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் தமது தொழிலைத் தடையின்றி மேற்கொள்ள முடியும். ஆனால்,அவர்களது பிற்காலத்தில் கையில் பணமிருந்தும் ஆள் துணையற்ற அநாதை போலத்தான் வாழ வேண்டும். சகல நிலைகளிலும் அவளது வாழ்வானது தொடர்புபட்டு இருந்தால்தான் அவள் மற்றப் பெண்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்பவளாக, மனிதநேயம் உள்ளவளாக, தனது கடமையைச் செவ்வனே செய்ய முடியும்.
கேள்வி- தாங்கள் இதுவரை எழுதிய நூல்கள் பற்றிக் கூறுங்கள்...
பதில்- நான் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் பல கவிஞர்களுடன் சேர்ந்து கவிமாலை, கவிச்சோலை அமைப்புக்களூடாக பல கவிதை நூல்களை வெளியீடு செய்துள்ளேன். இங்கு கடந்த வருடம் (2019 இல்) 'பசுமையான நினைவுகளில் பண்ணாகம் மெய்கண்டான்" என்ற நூலையும், இவ்வருடம் தை மாதத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆதரவுடன் 'வெற்றிக்கு வலிகள் தேவை" என்ற நூலையும் வெளியீடு செய்துள்ளேன். தொடர்ந்தும் எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
கேள்வி- இந்த நேர்காணல் ஊடாக இளம் தலைமுறையினருக்குத் தாங்கள் கூற நினைப்பது? பதில்- இளைய தலைமுறையினர் நன்கு கற்க வேண்டும். சிறப்பான தொழிலில் காலூன்றி நிற்க வேண்டும். பொருளாதாரத்திற்குக் கூட மற்றையோர் கையை எதிர்பார்க்கக் கூடாது. இயன்றவரை மற்றையோருக்கு குறிப்பாக, தாய்க்குலத்தவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், வலக்கரம் கொடுப்பது இடக்கரம் அறியாது உதவும் நற்செயல்களைச் செய்ய வேண்டும். விசேட தேவைக்குரியோர், வயோதிபர், அநாதைகள், ஆதரவற்றோர்- இப்படியானவர்களுக்குக் கைகொடுத்து உதவும் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல் வரவேற்கத்தக்கது. இன்றை பொழுதில் அமெரிக்காவில் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்.வெற்றி பெற்று ஆசியக் கண்டத்தவர் ஒருவர் இந்நிலையை அடைந்திருப்பது. ....அர்பணிப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், கல்வியறிவிற்கும் எடுத்துக் காட்டே!
மீண்டும் சொல்கிறேன், கல்வி முக்கியம். அதற்கு வயது ஒரு தடையல்ல. நான் முப்பது வயதைக் கடந்த பின்புதான் சிங்கள மொழியைக் கற்றேன். எனது அறுபது வயதைத் தாண்டிய பின்புதான் கணினி அறிவைப் பெற்றேன். அந்தக் காலப்பகுதியில் தான் சிங்கப்பூரில் ‘மலே’ மொழியையும் கற்றேன். சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல, அது எதற்கும் எல்லை வகுக்காது.