Friday, May 3, 2013

"மணியம் தோழர்" என்கிற தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் நிறைவுகளும் , நினைவுகளும் . . . . - கே.சுப்பையா

"மணியம் தோழர்" என்கிற தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் நிறைவுகளும் , நினைவுகளும் . . . . - கே.சுப்பையா

இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 23வது நினைவு தினம் இன்றாகும்(27.11.2012). இளம் வயதிலேயே காங்கேசந்துறை சீமேந்து தொழிற்சாலையில் பொறியியல் பிரிவில் கடமையாற்றி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட சமயம், கொம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களோடு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, முழு நேர ஊழியராக இறுதிவரை அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றியவர். தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களை 1961ம் நடுப்பகுதியில் யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரது நட்பின் காரணமாக வாலிபர்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டதுடன், கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகி அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் கிட்டியது. தோழர் மணியம் ஒரு சிறந்த கட்சி அமைப்பாளர். தமக்கு அறிமுகமானவர்களை ஏதோ ஒருவிதத்தில் அவர்களது இயலுமையை அறிந்து கட்சி, வாலிபர்சங்கம், மற்றும் வெகுஜன அமைப்புகளில் இணைத்துவிடும் வல்லமை அவருக்கு இயல்பாகவே இருந்தது. கொம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த 10.03.1963ல் பழைய யாழ்.நகர மண்டபத்தில் நடைபெற்ற பிரசித்திபெற்ற வாலிபர் மாநாட்டின் வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைத்தார். வட பகுதியின் குக்கிராமங்கள் தோறும் வாலிபர் சங்கக்கிளைகளை அமைத்து, அக்கிராமங்களின் சார்பில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வழிவகுத்தவர் என்பதோடு, அந்த மாநாட்டில் பங்கேற்ற வாலிபர்கள் பலர் பின்னாளில் பொறுப்புமிக்க கொம்யூனிஸ்ட்டுகளாக பரிணமிக்க ஏற்ற வழிகாட்டல்களை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




























10.03.1963ல் நடைபெற்ற அந்த வாலிபர் சங்க மாநாட்டில் கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களாக விளங்கிய தோழர்கள் பீட்டர்கெனமன், என்.சண்முகதாசன், சரத் முத்தெட்டுவேகம, வி.பொன்னம்பலம், மு.கார்த்திகேசன், டபிள்யூ.ஏ.தர்மதாச உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டார்கள். அந்த மாநாட்டில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் வாலிபர் அமைப்பின் வடபிரதேச செயலாளராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். யாழ்.வாலிபர் மாநாட்டின் பின்னர் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. என்.சண்முகதாசன் தலைமையிலான புரட்சிகர அணியைப் பலப்படுத்துவதில் மணியம் தீவிரமாக ஈடுபட்டார். கொம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவின் பின்னர், இளைஞர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் தீவிரமாக உள்வாங்கப்பட்டதன் காரணமாக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றதோடு, வடபிரதேசத்திலும் சமத்துவ சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதற்கான போராட்டங்கள் சிறிது சிறிதாக முளைவிடத் தொடங்கியது. இக்காலப் பகுதியில் தீண்டாமைக்கு எதிராகவும், ஆலயங்கள், தேனீர்க்கடைகள் ஆகியவற்றில் சமத்துவம் கோரியும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்தெழுந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அறைகூவல் விடுத்த கொம்யூனிஸ்ட் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களையும் முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணத்து தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்பியது. இந்த இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது, முற்போக்காளர்களான பல்வேறு சாதிப்பிரிவினர், எழுத்தாளர்கள் எனப் பலதரப்பட்டோர் இணைந்துள்ளனர். இதன்மூலம் மக்கள் மத்தியில் சாதியமைப்புக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டங்கள் கிராமம் கிராமமாக நடைபெற்றது. அக்கூட்டங்களில் கட்சியின் வடபிரதேச செயலாளராக விளங்கிய தோழர் வி.ஏ.கந்தசாமி உட்பட, மணியம், டானியல், நீர்வைப் பொன்னையன் போன்றவர்கள் உரையாற்றியதோடு, கிராம மக்களை வெகுஜன அமைப்போடு ஒருங்கிணைப்பதிலும் அயராது பாடுபட்டனர்.

இத்தகைய ஒரு எழுச்சி மிக்க சூழ் நிலையில் 1966ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம் திகதி " சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்" என்ற கோஷத்துடன் சுன்னாகத்திலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கிய பிரமாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தைத் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்ற தோழர்கள் வீ-ஏ- கந்தசாமி, கே-ஏ-சுப்பிரமணியம் ஆகியோர் போலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட போதிலும் ஊர்வலம் யாழ்- முற்றவெளியைச் சென்றடந்தது. இந்தப் பிரமாண்டமான ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும்,மக்களை அணிதிரட்டுவதிலும்,தோழர் கே-ஏ- சுப்பிரமணியம் முக்கிய பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1966 அக்டோபர் எழுச்சியைத் தொடர்ந்து சாவகச்சேரி, சங்கானை, அச்சுவேலி,நெல்லியடி போன்ற இடங்களில் தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரிப்போராட்டங்களில் ஈடுபட்ட வெகுஜன அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொய்க்குற்றச் சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். பலர் வெளியே வரமுடியாதவாறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் இக்கட்டான நிலைமையை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தும் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சியோடும்,ஏனைய முற்போக்கு இயக்கங்களோடும் சம்பந்தப்பட்ட பல முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர்.

அவர்களில் முக்கியமானவர் கம்பஹா தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்-டி-பண்டார நாயக்கா அவர்களாகும்.இவரை,வடபகுதிப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்வார்கள் என்ற அச்சத்தால் பூட்டப்பட்டிருந்த ஆலயங்கள், கோவிற்கேணிகள், கிணறுகளில் அந்த மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் விதத்தில் அவற்றைச் சுற்றி முட்கம்பி வேலிகள் அமைக்கப் பட்டிருந்ததையும் தோழர்-கே-ஏ-சுப்பிரமணியம் நேரடியாகக் காண்பித்தார்.அத்தோடு,யாழ்-சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களையும் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளையும் தோழர்- சுப்பிரமணியம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

1969ம் ஆண்டு மே தினமும்,போயா தினமும் ஒரே நாளில் வந்தமையால்,மே தினத்தை மே முதலாம் திகதி கொண்டாடுவதை அப்போதைய அரசாங்கம் தடைசெய்தது.இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி 'மே தினத்தை மேதினத்தன்று கொண்டாட உறுதி பூண்டதுடன் அரசு எத்தகைய அடக்கு முறையை ஏவி விட்டாலும், அதற்கெதிராகப் போராடித் தொழிலாள வர்க்கத்தின் உரிமையை நிலை நாட்டத் தீர்மானித்தது. அதற்கான அறைகூவலையும் விடுத்தது. கட்சியின் அறைகூவலுக்கு இணங்க தொழிலாளி வர்க்கமும் மே தினத்தை மேதினத்தன்றே யாழ்-நகரில் நடாத்தியது. மே தின ஊர்வலத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்-கே-ஏ-சுப்பிரமணியம் தலைமை தாங்கிச்சென்றார். ஊர்வலம் யாழ்-கே-கே-எஸ்-வீதியில் சென்று கொண்டிருந்தபோது,பெருமளவு போலீசார் குவிந்து நின்று தோழர்-மணியத்தை இலக்கு வைத்துத் தாக்குதலை மேற்கொண்டனர். இத் தாக்குதலில் அவரது கை விரல்கள் அடித்து நொருக்கப்பட்டன.

தோள்பட்டை எலும்பு,கால்களின் எலும்புகள் ஆகியவற்றில் உடைவுகள் ஏற்பட்டன.இச் சமயத்தில் மணியத்தின் மீது தாக்குதல் நடாத்துவதைத் தடுக்க முயன்ற சக தோழர்களான வீரு.மரைக்காயர், மட்டுவில் எஸ்.நடராசா போன்றோரும் படுகாயமடைந்தனர். இம்மூவரும் நீண்டகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் தென் இலங்கையிலும் சிலகாலம் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். இந்தருனத்தில் அவ்ருக்கு உதவிய தோழர் கன்சூர் நினைவுகூர வெண்டியவர். இந்த மேதின ஊர்வலத்தில் ஏற்பட்ட உடல் பாதிப்புடன் மிகுந்த சிரமத்துடன் மணியம் தோழர் நடமாடி வந்தமை இன்றும் நினைவில் நிழலாடுகின்றது. சங்கானை, அச்சுவேலி, மந்துவில், மட்டுவில் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களின் வாயிலாக சிறைச்சாலைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு யாழ். சட்டத்தரணிகள் மறுப்புத்தெரிவித்து, சாதியமைப்பின்மீது தமது விசுவாசத்தை வெளிப்படுத்திய வேளை, கட்சியின் தீர்மானத்துக்கு இணங்க, தென்னிலங்கையிலிருந்து பல சிறந்த வழக்கறிஞர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து அந்த வழக்குகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதில் மணியம் முக்கிய பங்குவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால் யாழ்ப்பாண சட்டத்தரணிகளின் போலித்தனமான முகமூடிகள் கிழித்து எறியப்பட்டதும், அவர்கள் நிலப்பிரபுத்துவ சமூக சாதிய உணர்வுகளைக் காப்பாற்ற எத்தகைய பங்கு வகித்தார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

சமகாலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்தர்களாக விளங்கிய மணியமும் சிவதாசனும் நெருங்கிய உறவினர்கள். இருவரும் மாவிட்டபுரத்தை அண்டிய கொல்லங்கலட்டி கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் இருவரது குடும்பத்தவர்களும் அக்கோவிலின் உபயகாரர்களாக இருந்து கோவில் உற்சவத்தின்போது உரிய மரியாதை பெற்று வந்தவர்கள். ஆலயப்பிரவேசப் போராட்ட காலத்தில் சி.சுந்தரலிங்கம் தலைமையில் இவர்களது உறவினர்கள் அணிவகுத்திருந்த வேளையில், எதிர்ப்புறத்தில் ஒடுக்கப்பட்ட மக்களோடு ஆலயப்பிரவேசப் போராட்டத்தில் மணியமும் சிவதாசனும் அணிவகுத்து நின்றனர். அவர்களது கொள்கைப்பற்றையும், சாதியமைப்பைத் தகர்ப்பதில் அவர்கள் காட்டிய உறுதியான நிலைப்பாட்டையும், கொள்கைக்கும் நடைமுறைக்கும் பேதமின்றி பங்காற்றியமையையும் கண்முன்னே காண முடிந்தது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போரட்டம் நடாத்திய காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது நிலப்பிரபுத்துவ சக்திகள் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரினால் துப்பாக்கிச் சூடு, கைக்குண்டு வீச்சு, சம்பத்தப்பட்டவர்களது வீடுகளைத் தீயிட்டு எரித்தல், ஒடுக்கப்பட்டோர் தமது வாழிடத்தில் இருந்து அடிப்படைத் தேவைகளின் பொருட்டும் வேறிடம் செல்லவிடாது தடுத்தல், அவர்களது விவசாயப் பயிர்களை நாசம் செய்தல், பிரேத ஊர்வலங்களின் மீது துப்பாக்கித் தாக்குதல்- பிரேதங்களை மயானங்களில் எரிக்கவிடாது இடையூறு விளைத்தல் போன்ற அநாகரிக நடவடிக்கைகளில் சாதிவெறியர்கள் ஈடுபட்ட காலகட்டம் அது; அத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களும் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 1966 ஒக்டோபர் எழுச்சியோடு ஆரம்பமான ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1969 இன் இறுதிப்பகுதிவரை நீடித்தது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் உட்படப் பல ஆலயங்களும், வட பகுதியிலுள்ள சகல தேனீர்க்கடைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டு, சமத்துவம் பேணப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிபெற்று போராடிய காலத்தில் அந்த மக்களுக்கு சரியான திசை வழியைக் காட்டி, போராட்டத்தை நெறிப்படுத்திய கொம்யூனிஸ்ட் கட்சியும், தோழர் கே,ஏ.சுப்பிரமணியமும் என்றென்றும் ஒடுக்கப்பட்ட மக்களால் நினைவுகூரப்படுவார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தோழர் சண்முகதாசன் தலைமையிலான கொம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த ஆயுதப்போராட்டமே இலங்கையில் நடைபெற்ற முதலாவது ஆயுதம் தாங்கிய போராட்டமாகும். நிலப்பிரபுத்துவ சாதியக் கருத்தியலைத் தொடர்ந்து முதலாளித்துவ அமைப்பிலும் நீடிக்க ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட அடக்குமுறையையும், அச்சுறுத்தலையும் நேரடியாக எதிர்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றிபெற்ற வரலாற்றில் மணியத்திற்கு மிகுந்த முக்கிய பங்குண்டு. மிகக் குரூரமாக சகல வழிகளிலும் தாக்கப்பட்ட சங்கானை- நிச்சாமம் மக்களுடன் மக்களாக நின்ற மணியம் அம்மக்களின் வீரத்தையும், போராட்டத்தில் அவர்கள் காட்டிய உறுதிப்பாட்டையும் உலகறிய ஓங்கியொலிக்கச் செய்தார். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த (சங்கானையை உட்படுத்தியிருந்த) வட்டுக்கோட்டைத் தொகுதிப் பா.உ. அ.அமிர்தலிங்கம் ஒரு தடவை பாராளுமன்றத்தில் "சங்கானை தற்போது ஷங்காயாக மாறிவிட்டது" என்று கூறுமளவுக்கு சங்கானை- நிச்சாமம் மக்களின் போரட்டம் வலுப்பெற்றிருந்தது. 1989ம் ஆண்டின் முற்பகுதியில் தமிழ்ப் பாசிசப் புலிகளால் சுப்பிரமணியத்திற்கும் அச்சுறுத்தல் விடப்பட்டதுடன் அவரைப் படுகொலை செய்வதற்கான நாளும் நேரமும் குறிக்கப்பட்டிருந்தபோதிலும், அச்செய்தியை எப்படியோ அறிந்துகொண்ட அவரது நீண்டகால நட்புடன் கூடிய தோழர்களால் காப்பாற்றப்பட்டார். ஆயினும் தொடர்ந்தும் வீட்டில் தங்கியிருக்க முடியாத நிலையில் தனது இளைய மகனுடன் கண்டியில் வசித்த சமயம், நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் மரணமடைந்தார். மணியம் தோழர் தனது கலப்புத் திருமணத்தில் தாலியாக அரிவாளையும் சம்மட்டியையுமே "தாலியாக" மனைவிக்குக் கட்டினார். அது தொட்டு, பாசிச சக்திகளின் அச்சுறுத்தல்வரை எக்காலத்திலும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாது, கொள்கைப்பிடிப்புடன் வறுமையையும் வெற்றிகொண்டு, வாழ்ந்த ஒரு இலட்சிய புருஷர் என்றால் மிகையாகாது.

வாழ்க மக்கள் புரட்சி!!

கே.சுப்பையா  26/11/2012

Our sincere thanks to.......


No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF