Saturday, November 27, 2021

‘விடைபெறுகிறேன்!’ - தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் நினைவு மலர் மின் புத்தகம் (கிண்டில்) வெளியீட்டு விழா


 

‘விடைபெறுகிறேன்!’ - தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் நினைவு மலர்  மின் புத்தகம் (கிண்டில்) வெளியீட்டு விழா
 
https://www.amazon.in/dp/B09M8KRQSN
 
27.11.2021 சனிக்கிழமை இரவு 7 மணி முதல்
ஜூம் இணைய வழி  நிகழ்வின் அடையாள எண் - 454 629 9448
நிகழ்வுக்கு உள்ளே வருவதற்கான அனுமதிக் குறியீடு - svbooks
நேரடியாக கூட்டத்துக்குள் வருவதற்கான லிங்க்- 
 https://us02web.zoom.us/j/4546299448?pwd=ZUQyZVJDU1g0QkZrL2U0ejJ6cDU4Zz09

புத்தகம் பற்றி …..
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையின் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் மிக முக்கியமானவர். இலங்கைக்கு உள்ளேயும் இலங்கைக்கு வெளியேயும் உள்ள சமூகப் பிரச்சனைகளுக்கான சரியான தீர்வுகளைப் பற்றிய விவாதங்களை உருவாக்கியவர். சமூக மாற்றச் செயல்பாடுகளுக்கான சரியான திசைவழியை உருவாக்கியவர். அடுத்த தலைமுறைத் தலைவர்களை வார்த்தெடுத்த தனிப்பெரும் தலைவர். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் மதிப்புமிக்கவராக திகழ்ந்தவர். அவரது தலைமையில் நடைபெற்ற முக்கியமான சில பணிகளின் விவரங்கள் இதில் உள்ளன. அவரது மறைவுக்குப் பிறகு இலங்கையின் பல்வேறு களங்களில் செயல்பட்ட மிக முக்கியமான தலைவர்கள் அவரை பற்றி எழுதிய நினைவுக்குறிப்புகள் இதில் உள்ளன. சமூக மாற்றத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வெளிப்படுத்திய பரிமாணங்களை இந்தப் புத்தகம்  அறிமுகம் செய்கிறது.
சமூக மாற்றத்துக்காக செயல்படுவோருக்கு  வழிகாட்டும் கையேடு இது!
  
தலைமை :  தோழர் வ. திவ்வியராஜா, கலை இலக்கியச் செயல்பாட்டாளர், கனடா.  
வரவேற்புரை:  தோழர் கா.வேணி, உரிமையாளர் , சவுத் விஷன் புக்ஸ், இந்தியா
சிறப்புரை:  தோழர் சி.கா. செந்திவேல், பொதுச்செயலாளர், புதிய ஜனநாயக மார்க்சிஸ – லெனினிஸக் கட்சி, இலங்கை.
நினைவுரை:  தோழர்கள்
 திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள், முன்னாள் ஆசிரியை மற்றும் இணையர்,தோழர் கே.ஏ.சுப்பிரமணியம்  
பேராசிரியர் சி. சிவசேகரம், முன்னாள் தலைவர், தேசிய கலை இலக்கியப் பேரவை, இலங்கை  
சோ. தேவராஜா, முன்னாள் பொதுச்செயலாளர், தேசிய கலை இலக்கியப் பேரவை, இலங்கை  
குழந்தை ம. சண்முகலிங்கம், அரங்கியல் செயல்பாட்டாளர், இலங்கை
பேராசிரியர் சி.மௌனகுரு , முன்னாள் கலைப் பீடாதிபதி, நுண் கலைத் துறைத் தலைவர், கிழக்குப் பல்கலைகழகம், இலங்கை.
சிவ. இராஜேந்திரன் முன்னாள் பீடாதிபதி, தேசிய கல்வியியல் கல்லூரி,
ந.இரவீந்திரன், எழுத்தாளர், மார்க்சியச் செயல்பாட்டாளர், இலங்கை  
எம்.பாலாஜி, நிறுவன ஆசிரியர், சவுத் விஷன் புக்ஸ், தமிழ்நாடு
 இ. சத்தியமலர், கவிஞர், தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் மகள்  
நிறைவுரை  : தோழர் . த. நீதிராஜன் , முதன்மை ஆசிரியர், சவுத் விஷன் புக்ஸ்

கிண்டில் புத்தகம் வாங்குவோருக்கான லிங்க்: getbook.at/comkasmalar
தொடர்புக்கு ; +919445318520






பேராசிரியர் சி.மௌனகுரு , முன்னாள் கலைப் பீடாதிபதி, நுண் கலைத் துறைத் தலைவர், கிழக்குப் பல்கலைகழகம், இலங்கை









தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் நினைவு மலருக்கான சவுத் விஷன் புக்ஸ் நினைவுரை 
அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறியவர் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் (1903  - 1987). அவர் மானிடவியலாளர். பண்டைய கிரேக்கவியல் மற்றும் கிரேக்க மொழி  ஆகியவற்றில் வல்லுநர்.இங்கிலாந்தின் முக்கியமான மார்க்சிய புலமையாளர்களில் ஒருவராக அவர் உருவானார். பர்மிங்ஹாம் பல்கலைகழகத்தில் ஆங்கில செவ்வியல் ஆய்வாளராக உருவெடுத்த அவர், கிரேக்க மொழி பேராசிரியராக பணியாற்றினார். 
கிரேக்க மரபு இலக்கியங்களை மார்க்சிய அணுகுமுறையில்  வாசிக்கும் வழிமுறையின் முன்னோடியாக அவர் திகழ்ந்தார். 1941ல் எழுதப்பட்ட அவருடைய “அசீலியசும் ஏதென்சும்” என்ற புத்தகமும், 1945இல் எழுதப்பட்ட “மார்க்சியமும் கவிதையும்” என்ற புத்தகமும் சர்வதேச கவனத்தைப் பெற்றவை. 
இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர், 1949இல் வெற்றிபெற்ற சீனப் புரட்சிக்குப் பிறகு கருத்துவேறுபாடுகளால் கட்சியிலிருந்து விலகினார். மார்க்சியத்தின் மீதான பற்றுதலை அவர் கைவிடவில்லை. அதனை செழுமைப்படுத்தும் பல்வேறு புத்தகங்களை எழுதினார். உழைக்கும் மக்களை சமூக அறிவியலில் முன்னேறிய பகுதியினராக மாற்றுவதற்காக உழைத்தார். பர்மிங்காம் நகரின் ஆஸ்டின் கார் தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்காக உரைகள் ஆற்றினார்.  
ஜார்ஜ் தாம்சனின் நெறியாள்கையின் கீழ் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்ட மாணவர்தான்  க. கைலாசபதி.   
கலாநிதி பட்டத்திற்கான ஆய்வுக்களமாக தமிழ் சங்க  இலக்கியத்தையும் கிரேக்க இலக்கியத்தையும் ஒப்பியல் நோக்கில் தாம்ஸன் தலைமையின் கீழ் அவர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வு Tamil Heoic Poetry ( தமிழ் வீர யுக பாடல்கள்) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. 
இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.  அப்போது தமிழகத்தில் ஏ.தெ.சுப்பையன்  மாணவராக இருந்த பொழுது எழுதிய கவிதைகளை, தமிழ் இலக்கியத்தில்  முதுகலைப்  படித்துக்கொண்டிருந்த இரா. பாண்டியன் என்னும் மாணவரும் சுப்பையனும் இணைந்து புத்தகமாக வெளியிட விரும்பி தமிழகத்தில் முற்போக்கு பதிப்பகங்களாக அறியப்பட்ட சில பதிப்பகங்களை அணுகினார்கள்.
ஆனால் ‘முறையீடு’ என்று தலைப்பிட்டிருந்த அந்த நூலில் ஆசிரியர் உரையிலும் சில கவிதைகளிலும் அவசர நிலையை எதிர்த்து சில செய்திகள் இடம் பெற்றிருந்தன. அதன் காரணமாக அந்த பதிப்பகங்கள் மறுத்து விட்டன. அவை மறுத்துவிடவே, பின்  தாங்களே அதனை வெளியிட்டனர். அந்த புத்தகம் ‘முறையீடு’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 
அந்த காலத்தில் மார்க்சிய ஆய்வாளராக அறியப்பட்டிருந்த
பேராசிரியர் க. கைலாசபதி அவர்களுக்கு இலங்கைக்கு பதிவு தபாலில் ‘முறையீடு’ கவிதை நூலை அனுப்பிவைத்தனர். அந்நூல் கிடைத்தவுடன்  அந்த நூல் பற்றிய தனது கருத்தை அன்று இலங்கையில் புகழ் பெற்றிருந்த ‘மல்லிகை’ இலக்கிய இதழில் ஒரு சிறப்பாக வெளியிட்டு மல்லிகை இதழையும் ஒரு கடிதத்தையும் க.கைலாசபதி அவர்கள்  பாண்டியனுக்கு அனுப்பி இருந்தார். 
இலங்கைப் பல்கலைகழகத்தின் யாழ்ப்பாணம் கிளையின் தலைவராக  அவர் மாறியபோது இந்திய பல்கலைகழகங்களை பார்வையிட அரசுமுறை பயணமாக இந்தியா வந்த போது சென்னை பல்கலைகழகத்திற்கும் வந்தார். அப்போது இரா. பாண்டியனுக்கு கைலாசபதி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அதன் காரணமாக நெருங்கிய தொடர்பும் உண்டானது. 
அந்த காலத்தில் ‘இலக்கியமும் திறனாய்வும்’  என்ற நூல் இலங்கையில் வெளியாகி இருந்தது. இலக்கிய மாணவரான பாண்டியன் அப்புத்தகத்தை தமிழில் வெளியிடும் உரிமையை பேராசிரியரிடம் கேட்ட போது, மகழ்ச்சியுடன் அனுமதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக ‘இலக்கியமும் திறனாய்வும்’, ‘கவிதை நயம்’, ‘ஒப்பியல் இலக்கியம்’ ஆகிய நூல்களை இரா. பாண்டியன் வெளியிட்டார். அதன் பின் பாண்டியனுக்கு இலங்கை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. யாழ்ப்பாணம் சென்ற போது பல்வேறு இலக்கிய ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்புகள் கைலாசபதி  அவர்கள் மூலமாக பாண்டியனுக்கு கிடைத்தன.  கைலாசபதியின் குடும்பத்தினரிடம் அவருக்குத் தொடர்புகள் ஏற்பட்டன.
பேராசிரியர் க.கைலாசபதியும் தோழர் கே.ஏ,சுப்பிரமணியமும் நெருங்கிப் பழகிய தோழர்கள். “பாரதியின் ஆன்மிகப் பார்வைக்கும் அரசியல் பார்வைக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதுபோலத் தெரிகிறது அதைப் பற்றி ஆய்வு செய்யலாமே” என்று தோழர் ந.இரவீந்திரனிடம் கைலாசபதி உரையாடியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ந.இரவீந்திரன் எழுதிய ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’ என்ற புத்தகத்தை தமிழகத்தில் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்துக்கு வந்தபோது அவர் கைலாசபதியின் புத்தகங்களைப் போட்ட பதிப்பகத்தை தேடியிருக்கிறார். அந்த சமயத்தில் கைலாசபதி இறந்துவிடவே, அவரது மனைவி சர்வ மங்களாவிடம் விசாரித்துள்ளனர். அவர் பரிந்துரை கடிதம் ஒன்றை இரா. பாண்டியனுக்காக எழுதி தந்துள்ளார். அந்த கடிதத்தோடு தமிழகத்துக்கு தோழர்கள் சோ.தேவராஜாவும் அ.சந்திரஹாசனும் வந்தனர்.  
இதற்கிடையில் இரா.பாண்டியன் தனது பதிப்பகத்தை எம். பாலாஜிக்கு ஒப்படைத்துவிட்டார். 1985இல் ‘சென்னை புக்ஸ்’ என்ற பெயரில் அந்தப் பதிப்பகத்தை எம்.பாலாஜி நடத்திக்கொண்டிருந்தபோது, அந்த அலுவலகத்துக்கு இலங்கையிலிருந்து தோழர்கள் சோ. தேவராஜாவும்  அ.சந்திரஹாசனும்   வந்து “இரா.பாண்டியனைச் சந்திக்கவேண்டும்” என்றனர். 
அருகில் இருந்த பாண்டியனின் வீட்டுக்கு பாலாஜி அவர்களை அழைத்துச் சென்றார். பாண்டியனிடம் கடிதத்தை அவர்கள் அளித்தனர். கடிதத்தைப் படித்த பாண்டியன் “ நான் இப்போது புத்தகங்களை வெளியிடுவதில்லை. பாலாஜி தான் வெளியிடுகிறார். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று கூறி விட்டார். 
அந்தப் புத்தகத்தை, ‘தேசிய கலை இலக்கிய பேரவை‘ யுடன் இணைந்து  எம். பாலாஜியின் ‘சென்னை புக்ஸ் ‘ வெளியிட்டது. ‘ஒரு அமைப்போடு இணைந்து ஒரு புத்தகத்தை வெளியிடுவது’ என்ற ஏற்பாடு என்பது பாலாஜியின் பதிப்பக முயற்சியில் அதுதான் முதல்முறை. புதிய முயற்சியாக அது வெளிப்பட்டது. 
தற்போது சவுத் விஷன் புக்ஸ் நிறுவனத்துக்கும் இலங்கையின் புதிய பூமி வெளியீட்டகம் மற்றும் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் அதன் எழுத்தாளர்களுக்கும் இடையில் உள்ள உறவு என்பது  பேராசிரியர் கைலாசபதி அவர்களின் புத்தகங்களை வெளியிடுவதில் தொடங்கியது. தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால் ந.இரவீந்திரனின் புத்தகங்கள் வெளியிடுவதன் மூலம் அது மேலும் வளர்க்கப்பட்டது. தற்போது அந்தப் புத்தகங்களை கிண்டில் புத்தகங்கள் எனும் வடிவம் ஆக்கி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவற்றை தங்களின் திறன்பேசிகளில் வாசிக்கக்கூடியவகையில் ஆலமரமாக வளர்ந்து ஓங்கி நிற்கிறது.
இந்த வளர்ச்சிப் பாதையில் தற்போது தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் நினைவு மலரை நாங்கள் வெளியிடுவது என்பது உணர்ச்சிபூர்வமான ஒரு தருணமாக உணர்கிறோம். 
தோழர் மணியம் அவர்களை இலங்கையின் ஜார்ஜ் தாம்சனைப் போன்றவர் என்றும் சொல்லலாம். அவர்கள் இருவரும் சமகாலத்தில் சீனத்தின் முக்கியத்துவத்தையும் அதன் வெற்றியையும் முன்னதாக உணர்ந்தவர்களாக உள்ளனர். கட்சிக்குள் அதற்கான விவாதத்தை முன்னெடுத்து போராடியவர்களாக உள்ளனர். இன்று அவர்களது போராட்டம்தான் சரியானது என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிரில் நின்றவர்கள் எல்லாம் காணாமல் போயிருக்கிறார்கள். 
மரபு இலக்கியங்களை மார்க்சிய கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்கிற முறையை உற்சாகமூட்டி வளர்ப்பவராக மணியம் அவர்கள் இருந்துள்ளார். க.கைலாசபதியின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தேடி வந்தது என்பது அதனையே வெளிப்படுத்துகிறது, பாரதியின் மெய்ஞ்ஞானத்தை புத்தகமாக மாற்றுங்கள் என்று தேவராஜாவையும் அ.சந்திரஹாசனையும் நேரில் அனுப்பிவைத்தது என்பது அவரது உறுதிப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது.      
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் நிலைத்து நிற்கும் பல செயல்பாடுகளைச் செய்த தோழர் மணியம் அவர்கள் 1989 ஆம் வருடமே இறந்துவிட்டார். இலங்கையின் ஜனநாயக சக்திகள் அவரைப் போற்றின. அவரை நினைத்து உருகின. எத்தகைய ஆளுமைகள் எல்லாம் அவரை நினைத்து உருகின என்பதை இந்த நினைவு மலரை படிக்கும் எவராலும் அறிய முடியும். 
அவரைச் சந்திக்கவேண்டும் என்ற பாலாஜியின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. வாழ்நாள் குறையாக அவருக்கு மாறிவிட்டது. 
தற்போது எமது பதிப்பகம் தோழர் கா.கிருஷ்ணவேணியை உரிமையாளராகவும் அவரது இணையர் தோழர் த.நீதிராஜனை முதன்மை ஆசிரியராகவும் கொண்டு, சவுத் விஷன் புக்ஸ் எனும் பெயரோடு இயங்குகிறது. நவீன தொழிற்நுட்பங்களை உள்வாங்கி, கிண்டில் இணையதளத்தில் அனைத்து புத்தகங்களையும் மின் புத்தகங்களாக ஆக்கம் செய்து வெளியிடுகிறது.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக 1989இல் வெளியிடப்பட்ட மலர் எங்களது கவனத்துக்கு வந்தபோது அதன் மீது ஆலோசனைகள் வந்தன. அதை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தனித்தனிப் புத்தகங்களாக கொண்டுவருவது அவசியம் என்பதை உணர்ந்தோம். அதன் முன்னோட்டமாக தற்போது அது  கிண்டில் புத்தகமாக வெளியாகிறது. அச்சுப் புத்தகங்களும் விரைவில் நவீன வடிவில் வெளியாகும் என்று  தெரிவித்து கொள்கிறோம். 
(மேற்குறிப்பிட்ட வரலாற்றுச் சம்பவங்களோடு தொடர்புள்ள தோழர்கள் இரா.பாண்டியன், சோ.தேவராஜா, ந.இரவீந்திரன் ஆகியோரோடு கலந்துபேசி இந்த நினைவுரை எழுதப்பட்டுள்ளது.) 
சித்திரச் சோலைகளே உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே 
- பாரதிதாசன் 
எம்.பாலாஜி
நிறுவன ஆசிரியர்
த.நீதிராஜன் 
முதன்மை ஆசிரியர் 
சவுத் விஷன் புக்ஸ்
17.09.2021



No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF