சரஸ்வதி செல்வரத்தினம். ( 07-02-2022 )
*****************************************
பூலோகத்தில் பிறந்தவர்கள் நிரந்தரமாய் இருப்பதில்லை
சாலச்சிறந்த மகளாக, சகோதரியாய், மனைவியாய்.....
நிலமகள் போலப் பொறுமை காத்த தாயாகி, பாட்டியாய்.....
கலைமகள் நாமங் கொண்ட நாயகியே......உன்
மூத்தமகன் தனைஇழந்து மூர்ச்சித்து உடல்தளர்தாய்.....
காத்த மகள்மாருக்கு காவலாய் நீயிருந்தாய்.....
பூத்தமகளாக வீட்டைப் பராமரித்தாய்...என்றும்....
உணவுவகை எல்லாம் நீயே ஆக்கி வைத்தாய்....
கணப்பொழுதும் ‘வேலை..வேலை ‘என்று காற்றாடிபோல்
சுழன்று திரிந்தாயே....சுடர்விளக்காய் நீயிருக்க....
அழகான வெளிச்சத்தில் மகள்மார் வாழ்ந்திருந்தார்....
இனியாரை “ அம்மா “ என அழைத்து அடுக்களையை....
நனிசிறந்த தாயாரை...பசி போக்கும் பாசத்தை....
அரவணைக்கும் அன்பை ஆதார நேசத்தை....
குரலின் இனிமையை....கூலிகொடுத்தாலும் கிட்டிடுமோ?
மனிதப் பிறப்புக்கு ஒருமுறைதான் பூமி என்பார்....
தனிமை உணர்வை தாயாரின் பிரிவினாலே.....
இனி யாரம்மா உன்இடத்தை நிரப்ப வல்லார்?
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்....
மாண்டார் வரமாட்டார் மாநிலத்தே.....என்ற
மகத்தான த த்துவத்தை மனதிலே தாங்கும்....
அகத்திற்கு ஆறுதலை தந்தருள்வீர் தாயாரே....
அன்புடன்......அம்மா... வள்ளியம்மை சுப்பிரமணியம்