Tuesday, November 15, 2011

தோழர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

தோழர்  சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி 

தோழர் சங்கரப்பிள்ளை . சிவதாசன் அவர்கள் 1934ம் ஆண்டு கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தில் பிறந்து -கண்டி மாநகரத்தில் கல்விகற்று , தேசிய ஒருமைப்பாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் ஒத்துழைப்பு வழங்கியவர். 
 
 தோழர் சிவதாசன் அவர்கள், தோழர் கே.ஏ. சுப்ரமணியத்தின் அன்பு மைத்துனரும் மிக நெருங்கிய பால்யகாலத்து நண்பரும் ஆவார். இருவரும்  முற்போக்கு வாலிபர் இயக்கங்களில் இணைந்து பங்கு கொண்டவர்கள். அவர்களது உறவு , அவரது இறுதிகாலம் வரை குடும்ப உறவாக நீடித்தது. பல மொழிகளில் மிக பாண்டித்தியம் பெற்றிருந்தார். பாராளுமன்ற  உறுப்பினர் ஆக பதவி வகித்த காலத்தில் எம் மக்களுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை செய்தார். அவரது ஆத்மா சாந்தி பெற, அவர் விரும்பி நேசித்த "சத்தியமனை" தனது துக்கத்தை தெரிவித்துகொள்கிறது. 

தோழர் சிவதாசன் அவர்களுக்கு.........திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் கவி-அஞ்சலி
இளமைக் காலத்தில் இணைந்தாய் பொதுவுடமைப்
பழக்க மொழியூடே பங்கேற்பில் தேர்ந்திருந்தாய்
முழுக்கச் செயற்பட மூச்சாகக் கருமமாற்ற....
மாற்றுஅணி சேர்ந்து மனமுடைந்து போகாமல்....
ஆற்றுகின்ற சேவையது ஐக்கியத்தின் வெளிப்பாடு
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார்
தூற்றட்டும் என்ற திடத்துடனே நாடாளுமன்றத்திலும்
உந்தன் குரலையும் உரிமையுடன் ஒப்புவித்தாய்
தலைமையேற்றாய் 'கற்பகத்தின்' வளர்ச்சியிலும்
இயன்றவரை தமிழ்மக்கள் இன்னல்பல நீக்க......
முயன்று செயற்பட்டு மூச்சையும் வெளிப்படுத்தி
முகங்கொடுத்த இன்னல்கள்..... முரணான காலத்திலும்   
உன்தன் பங்களிப்பை உரியகாலம் செய்ததனால் 
நன்றியுடன் நினைவுகூரும் நல்லுளங்களில் வாழ்கின்றீர்.

திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்15 Nov 2011

Sunday, October 30, 2011

யாழ்ப்பாணத்தில் சமத்துவ நீதி ஓங்கப் போராடிய களப் போராளி சங்கானை நிற்சாமத் தோழர் பொ. றாதா

 




Birth   1952.08.18  Comrade P. Radha Death 2011.10.30


18-08-1952 தோழர் பொ. றாதா  30-10-2011










யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1970களின் கால கட்டத்தில் நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட முன்களப் போராளி
சங்கானை நிச்சாமத் தோழர் பொ. றாதா
...
சங்கானைக்கு என் வணக்கம் !


"எச்சாமம் வந்து எதிரிஅழைத்தாலும் நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து
நீறாக்கும் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன்
சங்கானை. மண்ணுள் மலர்ந்த மற்றவியட்நாமே உன் குச்சுக்குடிலுக்குள்
குடியிருந்தகோபத்தை மெச்சுகிறேன் மெச்சுகிறேன்" - கவிஞர் சுபத்திரன்







Thursday, October 6, 2011

யாருக்கு விருது?

  யாருக்கு விருது?
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
காலுடைந்து போனபின்னும் சக்கர நாற்காலியில் சாதிக்க வேண்டுமென
நாலு கி.மீ  ஓட்டத்தில் முதலிடத்தில் வந்து களைத்தவர்க்கு -
 
நாலிரண்டு வருடங்கள் தோல்விமேல் தோல்விகண்டு நம்பிக்கையில்
காலூன்றி நின்ற தாய்க்கு இரட்டைக் குழந்தைகள் கிடைக்கவைத்த மருத்துவர்க்கு -
 
வாலறுந்த பட்டம்போல் வாழ்வில் குறிக்கோளற்ற ஊதாரி இளைஞனுக்கு
மேலும் மனிதனாக வாழலாமென்று வழிவகுத்த மஞ்சள்நாடா குழுவினர்க்கு -
 
சின்னஞ் சிறுவயதில் சிந்திக்கும் திறனை வளர்த்த பெற்றோரின்
சொன்னசொற் தவறாது வளர்ந்து தன்நாட்டிற்குப் பெருமைசேர்த்த மகளுக்கு -
 
விஞ்ஞான ஆராய்ச்சியினால் விண்வெளியில் தடம்பதித்து மீண்டு
அஞ்ஞானம் அகல அனைவர்க்கும் வழிகாட்டும் அணுவிஞ்ஞானிக்கு -
 
சும்மா கிடைத்தால் அதன்பெயர் விருது அல்ல; அதைக்கருதி
தம்மால் இயன்றவரை அடுத்தடுத்து முயன்றபின்னும் தோல்விவர
“அம்மா” எனப் பெருமூச்சில் அவன்கண்ணால் மழைபொழியத் துவளாமல்
நம்மால் முடியுமென்ற நம்பிக்கை நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டவர்க்கே!
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Wednesday, September 21, 2011

வள்ளியம்மை சுப்பிரமணியம் 75வது பிறந்தநாள் 07/10/2013

வள்ளியம்மை சுப்பிரமணியம்,  தனது 75 வருடங்களை மிகச் சிறப்பாக கடந்துள்ளார். இன்னும் பல் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.!

தமிழின் மேலும் ,இலக்கியத்தின் மேலும் தீராக் காதல் கொண்டு   ' பண்டிதர் ' படிப்பை தொடர்ந்த காலத்தில் 1955 இல் கே .ஏ. சுப்பிரமணியத்துடன் அறிமுகம் .
சாதீய,பொருளாதார ,பிற்போக்கு  எல்லைகளைத் தாண்டிய - காதல் 
ஆச்சாரமான ,சடங்கு சம்பிரதாயங்களுடன் வளர்ந்து பின்  - வடபுலத்தின் மார்க்கசிய இடதுசாரியுடன் - -சீர்திருத்தக் கல்யாணம் 1962.
தாலியாக 'அரிவாள் சம்மட்டி சுமந்து  , உப்புச் சிரட்டையும் தாங்களே தேடி -அந்நிய ஊரில் தனிக்குடித்தனம் ..
சாதி எதிர்ப்புப் போராட்டம் 1966, மேதின மறுப்புப் போராட்டம் 1969
காவல் துறையினரின் எல்லை மீறிய பொல்லடிகள் , ரணமாகிய கணவர் -மூன்று  குழந்தைகள்- ஆசிரியத் தொழில் இவற்றையெல்லாம்  சிரித்த முகத்துடன் சகித்து ,வீட்டை வரும் தோழருக்கெல்லாம் உணவு பகிர்ந்து நீங்கள் வாழ்ந்த வாழ்வு மகத்தானது.அடிக்கடி தலைமறைவு வாழ்வு ,அநீதிக்கெதிரான போராட்டம் என கணவரின் வாழ்வு தொடர - கட்டாய மொழிச் சட்டத்தினால் வேலைக்கு இடைஞ்சல் வர ,முழு நேர ஊழியரான கணவர் -வருமானத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் -சிங்களம் படிக்க சென்று ,- அதன் தொடர்பால் ஈழப்போராட்ட முன்னோடிகளின் உறவு வளர்ந்து ,மூத்த மகன் போராளியாக, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் தந்தை ,தனியுரிமை கேட்கும் மகன் , என தவித்துப் புலம்பி - காவல்துறையின் அட்டகாசங்கள் குறைந்து - இராணுவத்தின் தொல்லை ஆரம்பமாகியது. 72 மணிநேர ஊரடங்கு உத்தரவின்போது 1984 மகன் சிறைப்பட - அடிபட்ட உள் காயங்களினால் நோயாளியான கணவர். - இயக்கங்களிடமிருந்தும் ,இராணுவத்திடமிருந்தும் காப்பாற்ற வேண்டிய வயதில் மற்ற இரு குழந்தைகள் ., வறுமை - நோய்  இவற்றுடன் வாரம்தோறும் இராணுவ முகாம்களுக்கு சென்று மகனின் நிலையறிய வேண்டிய நிர்பந்தம்  பல பல போராட்டங்களே  வாழ்வாகிப் போனது.4 வருடங்களின் பின்னர் மகன் 1988 சிறை மீண்டான் என சந்தோஷிக்க முடியாமல் , அச்சுறுத்தலினால் தலைமறைவு வாழ்வை மேற்கொண்ட கணவரின் மரணம் 1989. அராயகதிற்கு கட்டுப்பட முடியாமல் 1991 இடப்பெயர்வு. பின் இளைய மகனுடன் சிங்கப்பூர் பயணம் 1993.  மீண்டும் எழுத்தத் தூண்டிய சிங்கப்பூர், கணணி அறிவூட்டி , 'கவிமாலை'யில் இணைத்தது . அன்பு மகள்-திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன் 6 October 2013

72வது பிறந்தநாள் காணொளி 07/10/2010 சிங்கப்பூர்



அம்மா 
நீ நடந்த காலடி தடங்களில்,
தேங்கிய வியர்வைஉடன் 
சேர்ந்து - கண்ணீரும்  சொல்லும் 
உன் கடந்த காலம்.- 
வேலையால் வீடு திரும்பி 
உடுத்திய புடவையை 
கதவில் போட்டால்,
மறுநாள் வேலை செல்லும் வரை 
கால்களில் சக்கரம் தான்.
பச்சை தென்னம் மட்டையை 
இரவு தணித்த நெருப்பில் காய வைத்து 
பால் கறந்து , வீடு பெருக்கி 
எங்களை குளிக்க  வார்த்து 
சாப்பாடு தந்து அப்பாக்கு மருந்தும் தந்து
வீடுக்கு வரும் தோழர்களை வரவேற்று 
இன்முகம் காட்டும் அம்மா.
அனேகமாக முருங்ககை குழம்பும் 
வாழைக்காய் பொரியலும் தான் சாப்பாடு
இரண்டுமே வீட்டில் இருக்கும்.
கிணறு கலக்கி இறைத்து  சாம்பிராணி இடுவதில் இருந்து , 
மாவு இடித்து இட்டியப்பம் அவித்து 
ஓலை பின்னி வேலி அடைப்பது வரை நீதானம்மா .
 நீ தூங்கி நாம் பார்த்ததில்லை .
பலகாலம் நீ படித்தவ என்பதே எமக்கு தெரியவில்லை , 
எல்லாமே அப்பா தான் - என்று உணரவைத்தாய் .
அப்பாவை போலீஸ் தேடிய காலங்களில் 
பல பல வீடுகள் மாறினோம் .
வாடகை வீடுக்கு நீ பட்ட கஷ்டம் அன்று 
எமக்கு உணரும் வயசில்லை.
இளம் வயதில் தனி மாதாக -நீ 
பட்ட கஷ்டம் புரியவில்லை.
துரத்தும் போலீஸ் உம் , நகையாடும் உறவுமாய் 
நீ வாழ்ந்த வாழ்வு, காதலின் வெற்றி!
எமது நாட்டின் இரண்டு பெரும் சகாப்தங்களின்
 வாழ்வு நாயகி நீ.
கொள்கைக்கு மாறுபட்ட குழந்தையும் 
கோபமுறும் கணவனும் ,
பகல் பொழுதில் மார்க்சியம் பேசும் தோழர்கள் 
இருட்டில் பிரிவினை கேட்கும் குழந்தைகள்
சமையலே உன் வாழ்வாகி போனது. 
வறுமையின் உச்சத்திலும் நீ வாடி 
நாம் பார்த்ததில்லை. 
மக்கள்  கழக சுந்தரம், சந்ததியார் தன்னுடனே 

சிங்களமொழி வகுப்பில் சேர்ந்து படித்தாய்
பீட்டர் கெனமன், சண்முகதாசன்  மாமா  இலிருந்து  
சிறிமாவோ பண்டாரநாயக்கா வரை பழகி இருந்தாய்
மக்களுக்காக  அமரர் ராஜீவ் காந்தி  இலிருந்து
மகிந்த ராசபக்ச வரை கடிதம் எழுதி இருந்தாய் 
சாதி எதிர்ப்பு போராட்டத்தில் படுகாயம் பட்ட 
அப்பாவை - மூன்று சிறு குழந்தைகளுடன் 
குழந்தையாய் காப்பாற்றினாய் .
பின் மே தினம் ஒன்றின் (1969)பெரும் போரட்டத்தில் 
சிதறிய அப்பாவின் அங்கங்களை ஒட்டவைத்தாய் .
அம்மா,
ஓய்வு பெறும் வயதில் சிறைச்சாலை தோறும் சென்று
அண்ணாவை பார்த்து வந்தாய்.
இடை மறிக்கும் போலிகள், 
உளவு சொல்லவா என்று கேலி பேசும் போது 
அரசியல்  தெரியாத அந்த கூட்டத்துக்கு 
வரலாறு சொன்னது கேட்டு மலைத்து நின்றிருக்கிறேன்.
பிரிவினையை வெறுத்த அப்பா -இந்திய இராணுவம் 
வெளிச்சத்திற்கு வந்த வேளை-இல்
கோபு மாமா உதவி கேட்டு வந்தார்
பத்திரிகை வெளி வரவும் உதவியதுடன் 
குண்டுகளின் சிதறல்களின் நடுவே  
உணவும் சமைத்து கொடுத்தாய் , பயந்தோடவில்லை.
புன்சிரிப்பும் பொறுமையும் உன் ஆயுதங்கள் 
உன் அளவுக்கு எனக்கு ஆளுமை இல்லை ,
அறிவும் இல்லை ஆனால்
இன்றுவரை உனக்காக ஏதும் நான் செய்ததில்லை.
நேற்று கூட உன் ஓய்வூதிய பணம் எனக்கு வந்தது.
உனக்கான என்  கண்ணீரை கூட -இதுவரை 
நான் காட்டியதில்லை .
எழுபதுகள் கடந்தும் ஏற்றமாக இருக்கிறாய் அம்மா.
அன்பு அனைத்தையும் வென்றிடும் என்று சொல்லுவாய் .
முயற்சிக்கிறேன் முழுமையாய் வாழ.
உங்கள் வளர்சிக்கும , மகிழ்ச்சிக்கும் காரணமான 
என் தம்பிக்கு நன்றிகள் .
இன்று அப்பாவும் அண்ணாவும் இல்லை- அனால் 
மரணத்தின் பின்பும் அவர்களை வாழ வைக்கிறீர்கள்
நிறைய வாசியுங்கள், எழுதுங்கள். 
உங்கள் வாழ்வின் வெற்றி சத்தியமனையின் வெற்றி!
நூறாண்டு   வாழ வாழ்த்துகிறேன்.
அன்பு மகள்-திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன் 4 October 2010

Wednesday, September 7, 2011

சிங்கப்பூர் கவிஞர் பா.திருமுருகனின் "ஊதாங்கோலும் ஒரு துண்டு நெருப்பும்" கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா

சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா
செப்டம்பர் 05,2011,16:50  IST

 
சிங்கப்பூர் : சிங்கப்பூர் கடற்கரைச் சாலை கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் கவிஞர் பா.திருமுருகனின் "ஊதாங்கோலும் ஒரு துண்டு நெருப்பும்" கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா செப்டம்பர் 04ம் தேதியன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. முற்றிலும் புதுமையாக மகளிரே நடத்திய இவ்விழா, இலக்கியா மதியழகனின் தமிழ் வாழ்த்துடன் முனைவர் சத்திய பாமா முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் துவங்கியது. கவிஞர் கலையரசி செந்தில்குமார் வாழ்த்துப் பா வாசித்தளித்தார். தொடர்ந்து முனைவர் தேன்மொழி சண்முகவேல் நாட்டுப்புறப் பாடல் பாணியில் பாடி வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி தற்கால இளம் கவிஞர்கள் புதுமை படைப்பதிலும், புதிய உத்திகளைக் கையாளுவதிலும், மனிதநேயப் பண்பாட்டிலும் சிறந்து விளங்குவதை முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன் எடுத்தியம்பி நூலாய்வுரை நிகழ்த்தினார். நூல் வெளியீட்டிலும் புதுமை காணப்பட்டது. ஒரு நாட்டுப்புற விறகு அடுப்பில் பானையில் நூலைப் போட்டு, மகளிர் சிறு பானை நீர் வார்க்க, வெளியீட்டாளர் டாக்டர்.இ.மாலதி ஊதாங்கோல் ஊத நூல் முகிழ்ப்பது போலக் காட்சிப்படுத்தியது அருமையிலும் அருமையாக அமைந்தது. சிங்கை தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா கதிர்வேலு முதல் நூலைப் பெற, மலர்விழி ஜோதிமாணிக்கவாசகம், இந்திரா சுப.திண்ணப்பன், சந்திரா புருஷோத்தமன், சுதா இறைமதியழகன், வள்ளியம்மை சுப்பிரமணியம், அம்பை ஆ.பால சரஸ்வதி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டு நூலாசிரியரை வாழ்த்தினர். திலகவதி அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கவிஞர் சங்கரி சரவணன் சுவைபட நிகழ்வினை நெறிப்படுத்தினார். திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, கவிஞர் பா.திருமுருகனின் ஏற்புரையோடு நிறைவுபெற்றது.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்
Thanks to            http://www.dinamalar.com/
 

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF