--------------------------------------
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
திட்டமிட்டுக் குடும்ப நிர்வாகம் நடாத்துவதும்
கட்டுப்பாடாய் இல்லறத்தை கவனமாக உயர்த்துவதும்
எட்டுத்திசை எங்கணுமே பெண்ணின் பெருமையதே!
கருவை உருவாக்கக் காத்திருந்தாள் பத்துமாதம்
அருவருப்புக் கொள்ளாது அனைத்துப் பணிவிடையும்
விருப்பத்துடன் நிறைவேற்றி விளக்கொளியாய் வலம்வரும்
அருமைப் பெண்மையின் பெருமையைப் போற்றுவோம்!.
விண்ணிலே ஒளிவிடும் நிலவினைப் போலவே
கண் ணவன் கணவனின் காரியம் யாவிலும்
பண்ணிலே இசையின் பரிமாணம் ஒலிப்பதுபோல்
வண்ணமாய்க் கலந்திடும் பெண்மையைப் போற்றுவோம்.!
சொல்லும் மியன்மாரில் “சூகி’ அம்மையாரும்
வல்லசிறீ லங்காவில் வனிதை ‘ஜின்சில’வும்
பெண்கள் விடுதலைக்குப் பெருமைக் குரல்கொடுக்கும்
கண்களாய் பெண்களின் பெருமைக் கூறுவோம்!



———————————————————————————
சிங்கப்பூர் கவிமாலை கவிஞரும்,கணக்காளருமாகிய நீதிப்பாண்டி அவர்களால் அமைக்கப்பட்ட புதிய இல்லத்தைப் பார்த்தவுடன் அம்மாவின் மனதில் ஏற்பட்ட உற்சாகத்தில் பிறந்த பாடலிது.
ஆக்கமான அன்புவழி அரணாகிய வீடு
ஊக்கத்துடன் ஒத்துழைத்து உருவாக்கிய வீடு
தேக்கமான பாசத்திலே திழைத்திருக்கும் வீடு
நோக்கமெல்லாம் முன்னேற்ற நுணுக்கமான வீடு.
பாண்டித்துரை சகோதரரின் பண்பான இல்லம்
காண்போரின் பார்வையிலே கணிசமான இல்லம்
தூண்களெலாம் விருந்தினரை வரவேற்கும் இல்லம்
மாண்புடைய மேன்மையான மனிதர்வாழும் இல்லம்.
வேப்பமரம் சிதைந்தாலும் விநோதமான மனையாம்
கூப்பிட்டு விருந்தளிக்கும் குதூகல மனையாம்
சாப்பிட்டுப் போங்களென்று ஆதரிக்கும் மனையாம்
மாப்பிள்ளைக் கோலங்கள் மருவுகின்ற மனையாம்.
ஆசிகளுடன்…………………அம்மா………….வள்ளியம்மை சுப்பிரமணியம்