தோழர் நா. சண்முகதாசன் அவர்களின் மனைவி, திருமதி. பரமேஸ்வரி அக்கா, வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு 1969 மேதின பேரணி பற்றி எழுதிய கடிதம்
தோழர் நா. சண்முகதாசன் அவர்களின் மனைவி, திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம்
2 மே 1969
23/7 ஸ்கோஃபீல்ட் ப்ளேஸ்
கொள்ளுப்பிட்டி, கொழும்பு-3.
என் அன்புமிக்க சகோதரி,
யாழ்ப்பாணத்தில் மே தினத்தன்று நடந்தவற்றை நேற்று இரவு அறிந்து மிகவும் மனம் வருந்தினோம். முக்கியமாக, எமது தோழர் மணியம் காயப்பட்டதை அறிந்து அளவிட முடியாத துயரம் அடைந்தோம். எங்களுக்கு இப்படியானால், உங்கள் மனம் எவ்வளவு பாடுபடும் என்பதை நான் அறிவேன். என்ன செய்வது ? நாம் இருக்கும் முதலாளித்துவ ஆட்சிக்கு கீழ் போராட்டம் ஒரு இலேசான பாதை அல்ல. நாம் என்ன கஷ்டத்துக்கும், தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் நல்ல மனோதிடத்துடன் இந்த நேரத்தில் இருந்து, மணியத்துக்கும், குழந்தைகளுக்கும் ஆறுதல் அளிக்க வேண்டும்.
முக்கியமாக மணியத்தின் காயங்களை சீக்கரம் குணப்படுத்துவது எமது முதல் வேலையாக இருக்க வேண்டும். அவர் போலீசாரின் கைதியாக இருந்தாலும் கவர்மெண்ட்து ஆஸ்பத்திரியில் இருந்தாலும் அங்கு அவருக்கு சரியான சிகிச்சை செய்யப்படாவிட்டால், அல்லது சீக்கிரத்தில் குணமடையாமல் இருந்தால், நீங்கள் ஆரும் வெளியிலிருந்து நல்ல டாக்டரையும் கொண்டுவந்து காட்டி நல்ல வைத்தியம் செய்ய வேண்டும். அப்படி செய்வதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு. போலீசாரின் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம். அவர்கள் சட்டத்துக்கு மீறி சர்வதிகாரம் செலுத்துகிறார்கள். நாம் போராடியே எமது சாதனைகளை அடைய வேண்டும். எப்படியாவது மணியத்துக்கு சிறந்த சிகிச்சை விரைவில் செய்து அவரின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு வேண்டிய பண உதவிகள் அனுப்புவோம். இன்று விடுதலை தினமாகிய படியால் தபால் கந்தோர் மூடி இருக்கிறது. நாளைக்கு தந்தியில் காசு அனுப்புவோம்.
எங்களுக்கு உடனே உங்கே வந்து மணியத்தைப் பார்க்க இருக்கும் அவா அளவு கடந்தது . ஆனால் நாளை காலை ஒன்பது மணிக்கு சண் உக்கு ஒரு வழக்கு. அதுவும் மே தினத்தையொட்டி போலீஸ் வைத்தது . நாளையின்று காலை நானும் இவரும் அல்பேனியாவுக்கு போகிறோம். மாத முடிவில் திரும்பிடுவோம். ஆனபடியால் உங்கே வர முடியாத நிலையில் இருக்கிறோம்.
எங்கள் அருமை தோழர் மணியத்திடம், நானும் ‘சண்’ உம் மிக அன்புடன் விசாரித்ததாக சொல்லுங்கள். மனதை தளரவிடாது மாவோவின் சிந்தனையால் சக்தியை ஊட்டி தைரியமாக இருக்கும்படி சொல்லுங்கள். அவர் சீக்கிரத்தில் பூரண சுகம் அடைய வேண்டும் என்பதே எமது பிரதான வேலை.. உங்கே அளிக்கப்படும் சிகிச்சை சரி இல்லாவிடில், வெளியிலிருந்து நல்ல டாக்டர்களை வருவித்து தாமதிக்காமல் வேண்டியவற்றை செய்யவும். அதற்கு அவர்கள் அனுமதி தர சட்டம் இருக்கிறது. சட்டத்தையும் மீறி மறுத்தால் போராட அஞ்சவேண்டாம் .
எதற்கும் எமது காரியாலயத்திற்கு தந்தி மூலமோ அல்லது டெலிபோன் மூலமோ தேவையானவற்றுக்கு அறிவியுங்கள். எஸ் டி பண்டாரநாயக்கா வுக்கும் அறிவிக்கலாம். அவர் சீக்கிரம் உங்கே வருவார். பிள்ளைகளை துக்கப்பட விடாமல் சந்தோஷமாக இருக்க பண்ணுங்கள். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் நன்மைக்கே. எமது பலம் அதிகரிப்பது கண்டு எமது எதிரிகள் அஞ்சுகிறார்கள். அதனால் அடக்குமுறைகளை அளவுக்கு மீறி கையாளுகிறார்கள்.
வேறு என்ன எழுத? எழுத எழுத எவ்வளவோ எழுதலாம். நேரில் கண்டு கொள்ள இயலாமைக்கு மிகவும் வருந்துகிறோம். தைரியத்தை கைவிட வேண்டாம். புரட்சி வணக்கங்கள்.
பரமேஸ்வரி அக்கா.
ஈழநாடு 1969.05.02 Page 1
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்