Monday, May 3, 1971

About the banned May Day procession held on 1st May 1969 from 'Thinapathy' (தினபதி) News Paper 03-05-1969

1969 ஆம் ஆண்டு  மே முதலாம் திகதி வெசாக் போயா தினம் - மே தினம் ,.......தினபதி 03-05-1969

1969 மே நாள் மனசைக் கனக்க வைக்கிறது.


“அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு, 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து, தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. (அத்தோடு உலகின் பல நாடுகளும் தொழிலாளர் உரிமைக்காய் போராடிக்கொண்டிருந்தனர். )
மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே, மேதினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் 8 மணித்தியால வேலையே வேண்டுமென வெண்கொடி ஏந்திய தொழிலாளர்கள் மேல் , அதிகாரவர்கத்தின் ஆணவம் இரத்தம் சிந்தவைத்து , செங்கொடியாக்கியது . ஆனால் இன்றைய அமெரிக்காவில், புரட்டாசி மாத முதல் திங்களே தொழிலாளர் தினம்! நிற்க,

பௌத்தவாத அரசியலமைப்புக் கொண்ட இலங்கையில் , 1969 ஆம் ஆண்டு ‘மே’ தினத்தன்றும் இதே போல ‘வெசாக் ‘தினத்தைக் காரணமாக்கி, அம்மேதினத்தைக் கொண்டாடுவதை டட்லி சேனநாயக்காவின் யூ.என்.பி அரசு தடைசெய்தது. அந்த தடையை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி யாழ்பாணத்தில் தடையைமீறி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியது. இக்கதையை நான் , பல தடவைகள் தோழர் மணியம் வாயிலிருந்தும் ,சக தோழர்கள் மூலமும் கேட்டிருக்கிறேன். மீண்டும் அதைப் பகிர நினைக்கிறேன்.

கூட்டத்திற்கும்,ஊர்வலத்திற்குமான வியூகத்தை - தலைமை ஏற்றிருந்த தோழர் கே ஏ சுப்பிரமணியம் வகுத்தார். யாழ் நகரில் , மூன்று திரையரங்குகளும் அருகருகே அமைந்திருந்த வெலிங்டன் தியேட்டர் சந்தியில் ( இன்றைய லிங்கம் கூல்பார்) இருந்து ஆரம்பிப்பதாகத் தீர்மானம். முதல் நாளிரவே கொடி பிடிப்பதற்கான கம்புகள் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டது. தேவையான கொடிகள் கைக்குட்டைகள் போல மடித்து சேர்ட், டவுசர்களினுள் மறைத்து வைத்துவிட்டு, தியேட்டரில் படம் முடிந்து வெளிவருவது போலவும் , படத்திற்காய் காத்திருப்போர் போலவும் ஊர்வலத்தை ஆரம்பிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. பத்திரிகை நண்பர்களுக்கும். புகைப்படம் எடுப்போருக்கும் நிச்சயம் ஊர்வலம் நடைபெறும் என்ற செய்தி சொல்லப்பட்டது. இதை பொலிசாரும் அறிந்து கொள்வர் என்பது அவர்கள் அறிந்ததே. ஆனால் மேலதிக தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டது. வழமைபோல அன்று, மூன்று சிறு குழந்தைகளுக்கும் முத்தமிட்டு , எனக்கு நம்பிக்கை சொல்லி அவர்கிளம்பிவிட்டார். அரசு -மேதினத்திற்கு அனுமதி அளிக்காத்தால் , சந்திப்பு மட்டுமே நிகழும் என நினைத்தேன். அது யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் தடையை மீறிய ஆர்ப்பாட்ட ஊர்வலமாக நடைபெற்றது. 

குறித்த நேரத்தில் எழுச்சியுடன் ஆரம்பித்த அவ்வூர்வலம், எங்கு ஆரம்பித்தது என்பதைப் பொலீசார் கண்டறிவதற்கு முன்னரே , ஊர்வலம் பிரதான பஸ் நிலையத்தை அடைந்து விட்டது. அதனால் கிலேசமும், கோபமும் அடைந்த போலீசார் மூர்கத்துடன் கண்ணீர்க்குண்டுகளை வீசித் தாக்கினர். பொலிசாரும் ஊர்வலத்தினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். சிலர் காயங்களுக்கு ஆளாகினர். தோழர் மணியம் மிகவும் தடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். ஆஸ்பத்திரியில் பொலிஸ் காவலுடன் வைத்தியம் செய்யப்பட்டு , பின்பு அவர்கள் நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர். 1966இல் நடந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தில் உடல் நொருங்கி மாறிவந்த வேளையில் , மீண்டும் அவர் நொருக்கப்பட்டது, என்னை நிறையவே பாதித்தது. தலைமைத் தோழர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். மற்றைய தோழர்களின் உணர்வும், அன்புமே அன்று ஆறுதலாக இருந்தது. ஒரு மாதங்கள் கடந்தும் காயங்கள் மாறாத நிலையில் , ஊர்திரும்பிய தோழர் சண் வீட்டில் , தோழர் கன்சூர் அவர்களால் பராமரிக்கப்பட்டார். நித்திரையின்றித் தவித்தார். எஸ்டிபண்டாரநாயக்க அவர்கள் இத்தாக்குதல் பற்றி பாரளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள். அந்நேரங்களின் நினைவுகள், இன்றும் எனக்கு வலிக்கிறது. அவர் வாழ்வு ஐம்பது வருடங்களாக சுருங்கியதற்கு இவையெல்லாம் காரணமோ? போராட்டங்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஒளித்து, எந்த உடல் வலிகளும் அற்று அரசியல் பேசியோர் மத்தியில் , நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், அஞ்சேல் என்ற சொல்லுடன் -தோழர் இறுதிவரை வாழ்ந்தார். -வள்ளியம்மை சுப்பிரமணியம்

About the banned May Day procession held on 1st May 1969 from 'Thinapathy' (தினபதி) News Paper  03-05-1969

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF