காலஞ்சென்ற தோழர்-கே-ஏ-சுப்பிரமணியம் அவர்களது மறைவையொட்டி அன்னாரது மகன் காலஞ்சென்ற சு-சத்தியராசன் அவர்கள் மலேசியாவிலிருந்து 29-11-1989 ல் எழுதி, தந்தையின் நினைவு மலரில் வெளியான கடிதத்தை, இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். திரு-சு-சத்தியராசனின் 10ம் ஆண்டு நினைவுதினம் எதிர்வரும் 25-08-2011ல் நடைபெறவுள்ளது.
தந்தையின் நினைவாக...........
----------------
’ சத்தியமனைக்கு’
1989-11-29 இரவு மலேசிய நேரப்படி எட்டுமணியளவில், இதயத்தைப் பிளந்து,குருதியைக் கொப்பளிக்க வைக்கும் துயர்மிகு செய்தியைக் குலேந்தி அண்ணாவின் தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்து கொண்டேன்.என்ன செய்வதென்றே இதுவரை புரியவுமில்லை; தெரியவுமில்லை.
(1) அறிவின் சிகரமே......அப்பா.............அன்பின் இலக்கணமே........!அப்பா.............அப்பா..............இந்த வார்த்தைக்கு முழு இலக்கணமாக மொத்த வடிவமாகத் திகழ்ந்த அந்த மாமனிதனை,நடமாடிய இமயத்தை,வரலாற்று நாயகனை நினைந்து நினைந்து, ஒவ்வொரு கணமும் நெக்குருகி, நிலைகுலைந்து கொண்டிருக்கிறேன். செந்தில் மாமாவின் தந்தி,செய்தி கிடைத்தது.
(2) அப்பா! நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை மகத்தானது.! மிக மிக மகத்தானது.வரலாற்றில் வாழ்ந்து முடிந்த பல,பல வரலாற்று நாயகர்களை, மகத்தான தலைவர்களை, மாபெரும் தியாகிகளை, விலைபோகாத கொள்கை வீரர்களை வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்த போராளிகளைப் பற்றிப் படித்தும்,பார்த்தும், கேட்டும் அறிந்திருக்கின்றேன்.
அவர்களின் பெறுமதி மிக்க மானிட வாழ்க்கை பற்றி வியந்திருக்கின்றேன். ஆனால், அத்தனை பேரினதும் பல பல குணாம்சங்களை நேரிடையாக உங்களிடம் நான் கண்ட போது தான், நான் என்னைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். உங்களைப் பற்றிய பிரமிப்பே என்னை ஒரு மனிதனாக மாற்றியது.
(3) அப்பா! இளமைத் துடிப்பினால் உங்களின் உயர்ந்த கொள்கைக்கு மாறுபட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், ’வேற்றுமையிலும் ஒற்றுமை காணவேண்டும்’ என்ற துடிப்புடன் என்னால் செயற்பட முடிந்ததென்றால்...நீங்கள் கற்றுக் கொடுத்த அரசியல் அறிவினால் தானாகும். சிலவேளைகளில் ’கற்றுக் குட்டித்’ தனமான தவறுகளை நான் இழைத்தாலும்,தவறுகளை உணர்ந்து என்னால் திருந்தக் கூடியதாகவிருந்தது என்றால், அது நீங்கள் காட்டிக் கொடுத்த வழியாகும்.
(4) அப்பா ! நீங்கள் ஒரு மாமேதை!! நடமாடிய பல்கலைக்கழகம். ஆம்! உங்கள் மூலமாகத்தான் நான் உலகைப்புரிந்து கொண்டேன்.உங்களினால் தான் மக்களை நேசிக்கக் கற்றுக் கொண்டேன்.உங்களால் தான் உலகின்
அடிமை விலங்கு நிரந்தரமானதல்ல என்றும்,அது உடைத்தெறியப் படக்கூடியது என்றும் தெரிந்து கொண்டேன். ஆண்டான் அடிமைமுறை ‘தெய்வ நியதி’ அல்ல: அது அடக்கு முறையாளனின் சதி என்பதை அறிந்து கொண்டேன்.உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பால பாடம் தான் என்னை ஒரு போராளியாக மாற்றியது.
(5) அப்பா, உங்களோடு நான் வாழ்ந்த காலத்தையும்,அதற்குப் பிந்திய காலத்தையும் எண்ணிப் பார்க்கின்றேன். நாங்கள் தூக்கம் விட்டு எழுந்திருக்குமுன் நீங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டிருப்பீர்கள். நாங்கள் தூங்கிய பின்தான் வீடு வந்து சேருவீர்கள்.”அடக்கி ஒடுக்கப் பட்ட மக்களது முழுமையான விடுதலையே மக்களின் விடுதலையாகும். அந்த நாளே நாட்டின் சுதந்திர நாளாகும்.அந்த நாள் வரும் வரையில் போராடிக்கொண்டே இருப்பேன்.வயோதிபத்தினாலோ, சுகவீனங்களாலோ போராட்டத்தை விட்டு ஒதுங்க மாட்டேன்.’தவண்டு தவண்டு’ ஆவது போராட்டத்திற்கு என்னாலான கடமையைச் செய்து கொண்டிருப்பேன்” என்று அடிக்கடி கூறுவீர்கள். “அந்த மகத்தான போராட்டத்தில் எனக்குப் பக்கத்தில் சக போராளிகளாக உங்களை (எங்களை )ப் பார்த்தால் மகிழ்ச்சியடைவேன். இல்லையேல் வெட்கித் தலைகுனிவேன்; வேதனைப்படுவேன்” என்று சிறு வயதில் எங்களுக்குச் சொல்லிச்சொல்லி வளர்த்தீர்கள்.
(6) 1984 நவம்பர் கடைசியில் ஒருநாள் என்னிடம் நீங்கள் பேசியபோது “அரசியல் நடப்புகளை உன்னிப்பாகக் கவனிக்கும் போது இந்தியாவின் விஸ்தரிப்புக் கரங்கள் இலங்கையின் மேல் விழக்கூடிய சாத்தியக் கூறுகள் தெளிவாகத் தெரிகிறது. அப்படியொரு அந்நிய ஆக்கிரமிப்பு எனது தேசத்தில் நடந்தால்....அதற்கு எதிரான நியாய பூர்வமான போராட்டக் களத்தில் ‘ஒரு போராளியாக அணிவகுத்து நிற்பேன். ஆக்கிரமிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அதற்கு எதிராகப் போராடுவேன். என்மகன் என்ற அளவில் உன்னிடம் (என்னிடம் )ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், அப்படியானதொரு துரோகத்தை,அதாவது தாயகத்தைக் காட்டிக் கொடுக்கும் அல்லது அடகு வைக்கும் நடவடிக்கையைத் தெரிந்தோ, தெரியாமலோ நீ செய்யக்கூடாது; அதற்குத் துணைபோகக் கூடாது. அதைத்தான் நான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினீர்கள்.
(7) நான் இலங்கை அரசின் சித்திரவதை முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்த வேளையில், அந்நியனுக்கு எம் தேசம் அடிமைப்பட்டிருந்தது.அதைப் புரிந்து கொள்ள முடியாத பலர் “ஆஹா! ஓஹோ!” என்ற வண்ணம் இருக்கிறார்கள். நான் கூடத் தடுமாறி விட்டேன். தடுமாறித் திகைத்துப் போய் நின்ற என்னை சரியான வழிகாட்டி, நீதியான, நேர்மையான மார்க்கத்தில் திசைதிருப்பி விட்ட மகத்தான ஒளிவிளக்கு நீங்கள் தானப்பா!
(8) இன்னொரு சம்பவம், ஆக்கிரமிப்பு நடைபெறுவதற்கு முன்பாக 1987,யூன் 4ம் தேதி அந்நியர்களின் ஆக்கிரமிப்பு விமானங்கள்’அகதிகளுக்கான உதவி’ என்ற பெயரில் தனது மேலாதிக்க வலிமையை வெளிப்படுத்தியபோது அதைக் கண்டனம் செய்த முதலாவது நபராக நீங்கள் இருந்தீர்கள். அப்போது அதைப் புரிந்து கொள்ள முடியாத அரசியல் குருடர்கள் பலர் ‘சொல்லம்பு’ கொண்டு உங்களைத் தாக்கியபோது இமயத்தைவிட உறுதியாக உங்கள் கொள்கையில் நின்றீர்கள்.காலம் கடந்தது. நாலு மாதங்கள் முடிவடைந்து நாலு நாட்கள் தான் ‘அகதிகளுக்கான உதவி’ என்ற பெயருடன் நம் தேசத்துள் நுழைந்தவர்கள், அப்பாவிகளின் இரத்தத்தில் நீச்சல் அடித்து, மக்களைக் கொன்று குவித்தார்கள்.
(9)இதற்குப் பிறகுதான் பலர் தமது தவறை உணர்ந்து உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். காலம் கடந்த பின்னே வரும் ஞானத்தால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைப்பதில்லை.உங்களது அரசியல் முடிவுகளைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டாலும் தமது தவறுகளை ஒப்புக் கொள்ளவில்லை. இலங்கையின் அரச பயங்கரவாதிகள் உங்களது உயிருக்கும்,உடலுக்கும் தீங்கு ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் உலகம் அறிந்ததே! அதேபோல் அந்நியர்களும் உங்களுக்குத் தீங்கு ஏற்படுத்த மறைமுகமாக முயன்றதை மக்கள் அறிவார்கள். இதைப் புரிந்து கொள்ள முடியாத அரசியல் குருடர்களும் உளர்.
(10) 1950ம் ஆண்டுகளின் முற்பகுதியில் நடைபெற்ற தேசம் தழுவிய இடதுசாரிகளின் மகத்தான வரலாற்று ’ஹர்த்தால்’ வெற்றிக்காக நீங்கள் உறுதியாகப் பணியாற்றியதையும்,1950ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நடை
பெற்ற தேசம் தழுவிய தேசிய உடமை நடவடிக்கைகளின்போது வீராவேசம் மிக்க உங்கள் பங்களிப்பையும் மற்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
(11) 1966ம் ஆண்டில்,நாட்டின் - யாழ்-குடா நாட்டில் இறுக்கமாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது சார்பாக கம்யூனிஸ்ட் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க வெகுஜனப் போராட்டத்தின் வீரம் மிக்க தளபதியாக நீங்கள் திகழ்ந்ததை பலர் வாயாரப் புகழ்ந்து கூறியதைக் காதாரக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
(12) 1969ம் ஆண்டு மே- 1ல் சர்வதேசத் தொழிலாளர்களது உரிமைத் தினமான ‘மே தின’ த்தை அரச பயங்கரவாதிகள் தடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை முறியடித்து, அரச காவல்நாய்களின் சித்திவதைக்குள்ளாகி
உங்கள் உடல் படுமோசமாகப் பாதிக்கப் பட்டாலும், அன்றைய தினம் உங்களது முழுஅளவிலான பங்களிப்பைவரலாறு மறக்கவில்லை.
(13) 1971ல் மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிகளின்போது உங்களுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்துக் கொண்ட கொலைவெறித் தனமான பல நடவடிக்கைகளிலும் நீங்கள் காப்பாற்றப்பட்டதையும்,அக்கால கட்டத்தில் நாங்கள் சந்தித்த கொடுமை நிறைந்த வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்.
(14) நாட்டின் முதலாளி வர்க்கம்,தனது அதிகார வெற்றியையும், பலத்தையும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் நாட்டின் வடக்கிலும்,தெற்கிலும் இனவாத விதைகளை ஊன்றிய வேளையிலும் சரி,அந்த இனவாதிகளின், சிறுவிதை பெரிய விருட்சமாகி இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையாக மாறிய வேளையிலும் சரி,
இவைகளின் விளைவு நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல; என்று துணிவுடன் எடுத்து இயம்பியதை நினைவு கூருகிறேன்.
(15) தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட தரகு முதலாளித்துவத் தலைமை தமது பாராளுமன்ற அரசியலை அடிப்படையாகக் கொண்டு பிரிவினைக்கோஷத்தை முன்னெடுத்தபோது, அதன் விளைவுகளைக் கட்சி உறுதியாகச் சுட்டிக் காட்டியதையும்,அதற்குப் பிரிவினைக்கு ஆதரவான அலை பெரிய அளவில் வீசியபோதும், அதன் தவறைத் தெளிவாக நீங்கள் விளக்கியதையும் நினைத்துப் பார்க்கிறேன்.
(16) பாராளுமன்றப் போலி ஜனநாயக அமைப்பிற்கு எதிராக 1977ல் கட்சி உறுதி மிக்க பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தபோது அதற்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,அதன் விளைவாக நீங்கள்
அரசபயங்கர வாதிகளின் தேடுதலுக்குள்ளானதையும் கொலைமுயற்சி வாழ்க்கையில் எதிர்நோக்கியதையும் எண்ணிப் பார்க்கிறேன்.
(17) ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் உறுதி உரமடைந்ததே தவிர, உருக்குலையவில்லை.கொள்கைக்காக இமயத்தைவிட உறுதியாக உழைத்தீர்கள்.அதனால்தானோ என்னவோ ...மரணம் உங்களை நெருங்கப் பயந்து பல தடவை தோல்வி கண்டதோ?
(18)1980ம் ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி பலவிதத்திலும் உங்களைப் பாதித்தபோது கூட நீங்கள் கொள்கையை விலைபேசவில்லை.பலவிதங்களில் உங்களுக்கு உயிராபத்து ஏற்பட்ட போதும் கூட நீங்கள் கொள்கை பிரளவில்லை: தடம் புரளவில்லை.உங்களுக்கு மகனாகப் பிறந்ததை நினைத்து,தினம்,தினம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பணி இவைகுறித்து வியப்படையாதவர்களே இல்லை. கொண்ட கொள்கைக்காகவே அம்மாவை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டீர்கள். நான் அறிந்த வரையில் இன்பத்திலும்,துன்பத்திலும் மனமொத்த தம்பதிகளாக வாழ்வு நடத்திய ஒருசிலரில் நீங்களே
முதன்மையானவர்கள்.
(19) உங்களைப் போன்ற நெஞ்சுரம் மிக்க, கொள்கைப் பற்றுடைய - உறுதிமிக்க போராளிகளை உங்கள் தோழர்களாக நீங்கள் பெற்றுக்கொண்டதன் மூலம் சிறந்த அரசியற் பணியாற்றினீர்கள்.நீங்களும், உங்கள் தோழர்களும் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றங்கள் மூலமும், விட்டுக்கொடுப்புகள் மூலமும்,விமர்சனம், சுயவிமர்சனம் மூலமும் சரியான அரசியல் முடிவுகளை காலத்துக்கேற்ற வகையில் எடுத்து வந்தபோது, அந்தப்புதிய அணுகுமுறை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்.
(20)அப்பா- என்ற முறையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்த ‘சமூக ஒழுக்கம்’ தான். அவர்கள் தலை நிமிர்ந்து வாழ உதவியுள்ளது.அம்மாவின் முடிவுகளுக்கு நீங்கள் கொடுத்த முன்னுரிமை பலருக்கு முன்னுதாரணமாகியது.உங்கள் முடிவுகளை மற்றவர்கள்மீது திணிக்க முயலாத உங்கள் பண்பு, நாசூக்காக உங்கள் கருத்தை வெளிப்படுத்தும் பாங்கு, பலருக்கும் வியப்பளிப்பதாக இருந்தது. மதச் சடங்குகளிலோ, மற்ற மூடநம்பிக்கைகளிலோ நம்பிக்கையில்லாத நீங்கள், மற்றவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளித்தமை- உங்கள் மேலிருந்த மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியது.
(21) நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ‘அறிவுக்குப் படியுங்கள்.ஆஸ்திக்குப் படிக்க வேண்டாம்’ என்று அடிக்கடி கூறுவீர்கள்.1979ம் ஆண்டுகளின் இறுதியில் உங்கள் நெருங்கிய நண்பரான ஏ-சி-டி-சொய்சா ’எயர்லங்கா’ விமான நிறுவன இயக்குனராக இருந்த வேளையில், அந்நிறுவனத்தால் கோரப்பட்ட வேலை வெற்றிடங்களுக்கு எனக்குச் சகல தகைமைகளும் இருந்தது. நீங்கள் உங்கள் சொந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தியிருந்தால் எனக்கு அங்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யவில்லை.அதற்காகப் புரிந்து கொள்ளமுடியாத வயதினில் நான் மனம் நொந்தேன். ஆனால் அதைப் பார்த்து இன்று பெருமையடைகிறேன்; இறுமாப்புக் கொள்கிறேன்.
(22) 1989ல் உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கொரு கெளரவமிக்க வேலைவாய்ப்பை வழங்க முன்வந்தார். அதை நான் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். அதற்கு நீங்கள் எழுதிய பதிலில் ‘அந்த வேலை சத்தியராஜனுக்குக் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்; ஆனால், சுப்பிரமணியத்தின் மகனுக்குத்தான் இந்த வேலை கிடைத்திருப்பதாக
நினைக்கிறேன். அதனால் தான் இதை விரும்பவில்லை.எனக்கு இருக்கும் அந்தஸ்து எனது கட்சிக்கு உரியது. அதை எனது வீட்டுக்குப் பயன்படுத்த விரும்பவில்லை; என் பிள்ளைகளும் அதைப் பிழையாகப் பயன்படுத்த
மாட்டார்கள் என்று நம்புகிறேன்’ என எழுதியிருந்தீர்கள். அரசியல் ரீதியாக பொது வாழ்விலும்,பொருளாதார ரீதியாகச் சுயவாழ்விலும் மிக,மிக நீங்கள் பாதிப்புற்றிருந்த- அத்துடன் நிரந்தர நோயாளியாக துயருற்றிருந்த அந்த நிலையில் கூட, நீங்கள் எடுத்த உறுதிமிக்க அந்த முடிவைப் பார்த்து நான் மாத்திரமல்ல; பலரும் வியந்து நின்றார்கள்.
(23)பலரிடம், அவர்களுக்கே தெரியாமல் இருந்த பல திறமைகளைப் புரிந்து கொண்டு - அவர்கள் சமுதாயத்தில் ,தன்னம்பிக்கையுள்ள பிரஜைகளாக.... உருவாகுவதற்காக நீங்கள் அவர்களை ஊக்குவித்து வளர்த்தெடுத்ததை பலரும் நன்றியுடன் கூறக் கேட்டிருக்கிறேன்.
(24) ”தம்பிக்கு இலங்கையில் கல்வியைத் தொடர்வது மிகச்சிரமம்.எனவே, சோசலிச நாட்டிற்குப் புலமைப்பரிசில் பெற்றுச் செல்வதற்கு ஆவன செய்யுங்கள்” என்று கேட்டபோது, ’கல்விக்காகக் கூட அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தக் கூடாது.’ என்ற உங்கள் உறுதியான முடிவில் எந்த மாற்றத்தையும் நீங்கள் செய்யவில்லை.
(25)தங்கையின் திருமணத்தின் போது கூட உங்கள் இலட்சியப்படியே இலட்சியத்திருமணம் நடத்திவைத்தீர்கள்.எங்களது நியாயமான எந்தவொரு முடிவையும் நீங்கள் அங்கீகரிக்கத் தவறியதில்லை. அத்துடன் அது
உங்களுக்கும் நியாயமாகத் தோன்றிய பொழுது, சமுதாயத்தின் போலிக் கட்டுப்பாடுகளை மீறி அதற்கு ஆதரவளிக்கவும் தவறியதில்லை.
(26) அப்பா, நீங்கள் ஒரு தனிப்பிறவி. இதைப் பல விடயங்களிலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
நீங்கள், உங்கள் அரசியல் வாழ்வில் தீர்க்கதரிசனமாகக் கூறிய பல விடயங்கள் நடந்து முடிந்ததை வரலாறுபலதடவை சந்தித்து இருக்கிறது.
(27) எமது தாயகத்தில் மக்களின் விடுதலையை மனதில் கொண்டு...ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த முதல் போராளிகளில் நீங்களும் ஒருவராகத் திகழ்ந்தீர்கள். அப்படியான உங்களிடமே ஆயுதமுனையில் அரசியல் பேரம் பேச நினைத்த பலர், தமது சொந்த அரசியலில் புறமுதுகிட நேரிட்டதை வரலாறு காட்டியிருக்கிறது. அரசியலில் நீங்கள் ஒரு வணங்காமுடி வேந்தன்!
(28) 1970ம் ஆண்டு ’மே’தினத்திலன்று யாழ்நகரையே உலுக்கிய மேதின ஊர்வலம் வீரத்தின் விளைநிலமாம் சங்கானையில் ஆரம்பமாகி யாழ்-நகரமண்டபத்தை வந்தடைகிறது.அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
தலைமை உரையாற்றிய நீங்கள் 1969 மேதின அரச அடாவடித்தனங்களை எடுத்துரைத்து “என்னைச் சுட்டுச் சதை--சதையாக வீசியெறிந்தாலும் எனது உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொருதுளி இரத்தத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் விடுதலைப் போராளிகள் தோன்றுவார்கள்! அவர்கள் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்ப்பார்கள்” என்று வான் அதிரும் கரவொலிக்கு மத்தியில் கூறினீர்கள். அந்தச் சம்பவம் இன்னும் என் கண் முன்னால் தெரிந்து கொண்டே இருக்கிறது.
(29)அப்பா! அடிக்கடி நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறும்போது “சுப்பிரமணியத்தின் பிள்ளைகள்
என்ற முகவரியுடன் வாழ வேண்டுமென்று நினைக்காதீர்கள்.அதற்குப் பதிலாக.....இந்தப் பிள்ளையின் அப்பாதான் சுப்பிரமணியம்’ என்று கூறும் அளவிற்கு நீங்கள் வாழ்ந்தால் ....நான் என் குடும்ப வாழ்வில் வெற்றியடைந்ததாகக் கருதுவேன்” என்று கூறுவீர்கள். அதை வேதவாக்காக நினைத்தே இன்றுவரை நடந்து வந்திருக்கிறோம்.நடந்து வருவோம்.
(30)”ஒருநாடு, ஒரு கட்சி, ஒரு தனி மனிதன்......எதுவுமே தனது சொந்தக்காலில் நிற்கவேண்டும்.” என்று அடிக்கடி கூறி தன்னம்பிக்கையையும்,பொறுப்புணர்வையும் வளர்த்தீர்கள். கூட்டுமுடிவு,ஆலோசனை, பலர் அபிப்பிராயங்கள் என்பவற்றுக்கு....உங்கள் அளவிற்கு மதிப்பளித்த ஒருவரை, நான் இதுவரை சந்தித்தது இல்லை.
(31)அப்பா.......அப்பா.......உங்கள் நினைவுகள் எம்மை வழிநடத்திக் கொண்டேயிருக்கும். உங்களுக்கோ உங்கள் கொள்கைக்கோ என்றுமே துரோகம் இழைக்கமாட்டோம்.நீங்கள் நேசித்த தேசத்தை, மக்களை, அவர்களது விடுதலையை முன்னெடுக்கும் சக்திகளின் பக்கமே நாம் என்றும் இருப்போம்.உங்களது மகத்தான தோழர்கள் முன்னெடுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் எங்களால் எந்த அளவிற்குப் பங்காற்ற முடியுமோ,அந்தளவிற்குப் பங்காற்றுவோம். மகத்தான மானிட விடுதலைக்காக எமது பங்களிப்பைச் செய்வோம்.
மகத்தான மாக்ஸிஸ- லெனினிஸ- மாசேதுங் சிந்தனைகளின் வழி நடப்போம்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) நீடூழி வாழ்க!
மலேசியா எஸ்-எஸ்- வி- சத்தியராஜன். 29-11-1989
காலஞ்சென்ற தோழர்-கே-ஏ-சுப்பிரமணியம் அவர்களது மறைவையொட்டி அன்னாரது மகன் காலஞ்சென்ற சு-சத்தியராசன் அவர்கள் மலேசியாவிலிருந்து 29-11-1989 ல் எழுதி, தந்தையின் நினைவு மலரில் வெளியான கடிதத்தை, இங்கு மறுபிரசுரம் செய்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
1984இல் சத்தியராஜன் அவர்களுடன் சில நாட்கள் பழகியுள்ளேன். பழகுவதற்கு இனிமையான இளைஞர். அவருடனான நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
ReplyDelete- இராஜன் முருகவேல்