Boycotting of Parliamentary elections held in Sri Lanka on 21 July 1977.
1977 தேர்தல் காலம் ஆரம்பமானது. பனிப்புலம் காலையடி கிராமம் தமிழர் கூட்டமைப்பின் பிரதான வாக்கு வங்கிக் கிராமமாக அமைந்திருந்தது. சிறு சிறு முரண்பாடுகள் வந்தாலும், அமிர்தலிங்கம் அவர்களின் அயற்கிராமம் வேறு. சொல்லவேண்டுமா? ஐம்பதுகளில் அறுபதுகளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் கலந்து கொண்ட போதிலும், பின் 'பாராளுமன்றம் திருடர் குகை' என்ற கோசத்துடனே பாராளுமன்றத் தேர்தல்களில் ஈடுபாடின்றி இருந்தனர். இந்நிலையில் அந்தத் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற முடிவுடன் காலையடி கம்யூனிஸ்ட் வாலிபர் சங்க இளைஞர்கள் வேலைகளை ஆரம்பித்தனர். எனினும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரச்சனைகளை உருவாக்கி ஊர்மக்களின் நல்லுறவைச் சிதைக்க வேண்டாம் என மணியம் தோழர் வலியுறுத்தினார். இருந்தும் இள இரத்தம் பயமறியாது தானே ? ஊர் பெரியவர்களின் கூட்டங்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க முற்பட்டனர். அது சம்பந்தமாக அம் மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினர். பல முற்போக்கு நாடகங்கள், கண்காட்சிகள், கருத்தரங்கம் என நடாத்தி வந்தனர். இரவியும் புதிதாக ஆசிரிய தொழிலில் இணைந்திருந்த வேளையிலும் இதன் பொருட்டு ஊர் திரும்பியிருந்தார். முதலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையைத் தடுத்த தோழர் மணியம் அவர்கள், நிலைமை எல்லை மீறியதால் அவர் நேரடியாக களத்திற்கு விரைந்தார். தன் பாதுகாப்பின் பொருட்டு கைத்துப்பாக்கி ஒன்றை தன்னுடனே வைத்துக் கொள்வார். அதையிட்டு நான் பயப்படாத நாளில்லை. குழந்தைகளின் கண்களில் படாமல் அதை வைத்திருந்தார்.
அங்கு இரவியின் தாய் மாமன் சண்முகலிங்கம் மாஸ்டர் மற்றும் மிக நெருங்கிய உறவுகளுக்கு எதிராகவே இவ் ஒழுங்கு நடைபெற்றது. நடைபெற்ற தள்ளுமுல்லில் இடுப்பிலிருந்த துப்பாக்கி கீழே விழ ... அதை ஆமியில் வேலை செய்த ஊரவர் எடுத்துவிட்டார். பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற நோக்கில் மணியம் தோழர் இளைஞர்களை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். துப்பாக்கியை மீண்டும் எடுக்கும் வழி மணியம் தோழருக்கு தெரியாத ஒன்றல்ல.
துப்பாக்கியை எடுத்தவர்களுக்கு அது பற்றிய போதிய அறிவு இருக்கவில்லைப் போலும். விசையை அழுத்த உள்ளிருந்த குண்டு கல்லில் பட்டு தெறித்த கற்துண்டு அங்கிருந்த சிறு பையனின் கையில் காயத்தை உண்டு பண்ணியது. பொலிசில் போய் அவர்கள் முறைப்பாட்டை செய்திருந்தனர். இதை உணர்ந்த தோழர் இரவு வீட்டிற்கு வரவில்லை. இந்த இளைஞர்கள் தேவராஜா, தயாளன், இரவி, யோகேஸ்வரன் அனைவரும் எம் வீட்டிற்கு வந்துவிட்டனர். தேனீர் தயாரிக்க உள்ளே சென்ற வேளை வாகனம் உள் நுழையமுடியாத எம் ஒழுங்கையினுள் 'ஆள்காட்டி' ஒருவருடன் காவற்படை வீட்டை சுற்றிவளைத்தனர்.....
தொடர்வேன்....
நான் இக்குறிப்பை தோழர் மணியம் மூலமும், இளைஞர்களின் வாய்மூலமும் , நான் கண்கண்ட சிலதுமாக எழுதியுள்ளேன். இதன் விபரக்குறிப்பை இரவி விபரமாக எழுதியுள்ளார். அது கீழே :
“1977 தேர்தலும் எமது பகிஷ்கரிப்பு நடவடிக்கையும் - அதன் பிரதிபலிப்பும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்திய நிலையில் மக்கள் அங்கீகாரத்தை வழங்க வேண்டிய தேர்தல் களமாக 1977 பாராளுமன்றப் பொதுத் தேர்தலை அறிவித்திருந்தார்கள். அந்தவேளையில் எமது ஊர் கூட்டணி ஆதரவாளர்கள் அம்மன் கோயில் பிரச்சினை காரணமாக இரண்டுபட்டு இருந்தனர். முன்னர் அமிர்தலிங்கத்தின் கோட்டையாக கருதப்படுகிற எமது ஊரில் தேர்தல் காலத்தில் பிரமாண்டமான கூட்டத்தை நடாத்துகிற எமதூர் கூட்டணியினரால் இத்தகைய முக்கியத்துவமிக்க சூழலில் அவர்களிடையேயான பிளவு காரணமாக ஒரு சிறு கருத்தரங்கைக் கூட நடாத்த இயலவில்லை.
அவர்கள் பலவீனப்பட்டிருந்த அந்தவேளையில் எமது கட்சி வேலை மிக மும்மரமாக நடந்து வந்தது. ஊரின் மிகப்பெருபாலான இளைஞர்கள் எமது வாலிபர் சங்கத்தில் இணைந்திருந்தனர். ஏனையவர்களும் எமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர். அந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற எமது கட்சி முடிவைப் பிரசாரப்படுத்தும் கூட்டம் ஒன்றினைக் காலையடியில் நடாத்த வேண்டும் என்ற எமது வாலிபர் சங்க முடிவை ஊரின் இளந்தலைமுறையின் பலரும் அங்கீகரித்திருந்தார்கள்.
இந்த முடிவை வாலிபர் சங்கம் எடுத்தபொழுது நான் அங்கு இருக்கவில்லை. பூண்டுலோயாவில் ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்த ஆரம்பகாலமது. நான் ஊர் வந்து தோழர் மணியத்தை சந்தித்த பொழுது வாலிபர் சங்கம் முடிவு குறித்து கட்சியின் வட பிரதேசக் குழுவுக்கு உடன்பாடு இல்லை, மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள் எனக் கோரப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். அப்போது எமது ஊர் சார்ந்து நான் மட்டுமே கட்சி உறுப்பினர். நான் அங்கம் வகித்த சங்கானைக் கிளையில் இவ்விவகாரம் பேசப்பட்டது. அங்கும் எமது கட்சியின் முதல் கூட்டத்தை உங்களூரில் நடாத்துவதற்கு இது ஏற்புடைய தருணமாக இருக்காது என்ற முடிவே ஏகமனதாக முன் வைக்கப்பட்டது. இந்த அறிவுறுத்தல்களுடன் மீண்டும் எமதூர் வாலிபர் சங்கக் கிளையைக் கூட்டும்படிகோரி கட்சி நிலைப்பாட்டை முன்வைத்தேன். மிகப் பெரும்பாலானவர்கள் கூட்டத்தை நடாத்தியாக வேண்டும் என விடாப்பிடியாக இருந்தனர். பெரும்பான்மைமுடிவு காரணமாக கட்சி பின்னர் தலையிடவில்லை.
கூட்ட ஏற்பாடுகள் முனைப்பாகி மேடை நிர்மாண வேலைகள் மும்முரப்பட்டிருந்த பொழுதே கூட்டணிக்காரக் குழப்பகாரர் குறுக்கீடுகளைத் தொடங்கி ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற எச்சரிக்கைகளை விட்டபடி அங்குமிங்குமாக போக்குக்காட்டி ஊடறுத்துக்கொண்டு உலாவினர். அவர்கள் அனைவரும் என்னை மிக நேசிக்கும் உறவினர்.இருந்தும் கொள்கை முரண்பட்டிருந்தோம்.நிலைமை மோசமாகும் எனத் தெரிந்த போது கிருஷ்ணதாசனும் வேறொரு தோழரும் தோழர் மணியத்திடம் ஆலோசனைபெறச் சென்றனர். நான் சங்கானை நிச்சாமம் சென்று கட்சிக்கிளைத் தோழர்களைச் சந்தித்தேன். தருமண்ணையும் வேறோரிரு தோழர்களுமாக கலந்துரையாடினோம். அவ்வளவுடன் ஏற்பாடுகளை நிறுத்தி கூட்டத்தை வேறொரு நாளுக்கு பின்போடுவதாக அறிவித்து விடலாம் என சங்கானைத் தோழர்கள் முடிவு தெரிவித்தனர்.
கூட்ட களத்துக்கு நான் திரும்பி நிலைமையைச் சொன்னேன். கிருஷ்ணதாசன் மணியம் தோழருடன் உரையாடல் எப்படி இருந்ததென்பதைச் சொன்னார். “முன்னரே இப்படி ஆகும் என்பதைக் கூறிக் கூட்டத்தைக் கைவிடுங்கள் என்று ஆலோசனை சொன்னோம்; நடாத்தியே தீருவோமென்று முனைந்தீர்கள். இப்போது வெருட்டலுக்குப் பயந்து கைவிடுவதா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று மணியம் தோழர் சொன்ன பொழுது, எமது தோழர்கள் “இல்லைப் பின்வாங்குவது தவறாக அமையும்” என்று கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.
பல தோழர்கள் மிகுந்த உறுதியோடு வேலைகளில் ஈடுபட்டபடி. கூட்ட நேரம் நெருங்கிவிட்டது. தமது அச்சுறுத்தலுக்குச் சளைக்காமல் கூட்டத்தை நடாத்தப்போகிறார்கள் என்பதை அந்தச் சண்டித்தன உறவினர்கள் புரிந்து கொண்டு மதுவருந்தி முறுக்கேறியவர்களாக வந்து சண்டித்தனத்தில் இறங்கினர். கைகலப்பு வலுத்தது. முற்றிலும் எமது வாலிபர் சங்கத் தோழர்களே எதிர் தாக்குதலை நடாத்தி அவர்களை முறியடித்துக் கொண்டிருந்தோம். நான் கூட்டத் தளத்திலிருந்து சற்று தூரமாக ஒரு தரப்புடன்; அங்கே குழப்ப வந்ததில் தலைமை தாங்கிய எனது மாமாவும், இன்னொரு ஒன்றுவிட்ட மாமாவும். அவர்களால் என்னைத் தாக்கவும் முடியாமல் பின்வாங்கிப் போய்க்கொண்டிருப்பதில் அவர்களைக் கலைப்பதில் எனது கவனம்.
அந்தவேளை கூட்டக் களத்துக்கு தோழர் மணியமும் சங்கானைத் தோழர்களும் வந்திருந்தனர். எமது தோழர்களே எதிரிகளை முறியடிப்பர் என்ற நிலையில் சண்டையில் கலக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆயினும் வெறியேறிய சண்டித்தன உறவினர்கள் வலிந்து இவர்களை மல்லுக்கட்டிப் பிடித்திழுத்த பொழுது அரை மடியில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி கீழே விழுந்துவிட்டது. நிலைமையை விளங்கிய தோழர்கள் அங்கிருக்க வேண்டாம் என முடிவு செய்து திரும்பி விட்டனர்.
கீழே விழுந்த துப்பாக்கியை மீளப்பெறுவதோ, வெறியேறிய அக்காடையர்களைத் தாக்குவதோ வந்திருந்த சங்கானைத் தோழர்களுக்குப் பெரிய விடயம் கிடையாது. நீண்ட காலத்தில் கொம்யூனிஸ்ட்டுகளாக நாங்கள் ‘எமது சொந்தப் பலத்தில் முன்னேற வேண்டும்’ என்ற ஒரே நோக்கத்தால் களத்தை விட்டு வெளியேறினர். பின்னர், ஊருக்குள் அவர்கள் வராமலே மரியாதையுடன் கைத்துப்பாக்கியை எம்மிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற ஒரு சொல்லுக்குப் பயந்து இவர்கள் அதனைக் கொண்டுபோய்க் கொடுத்தவர்கள்தான்.
கைத்துப்பாக்கியை எடுத்து வந்தவர்கள் நடையர் கடையடியில் அதனை இயக்க முனைந்த பொழுது வெடிக்கவில்லை. “விளையாட்டுத் துவக்கை, வெருட்டக் கொண்டு வந்திருக்கிறாங்கள்” என்று சொல்லி ஓங்கி விசுக்கி விசையை அழுத்திக் குலுக்கிய போது வெடித்த சன்னம் நிலத்தில் மோதிப்பறந்தது. மண்ணிலிருந்து பறந்த கல்லொன்று பக்கத்தே இருந்த சிறுவனின் கையில் சிராய்த்துப் போனதில் இரத்தக் காயமானது. உடனே அவனை எடுத்துச் சென்று பொலீசில் நாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஏற்பட்ட காயமென்று முறைப்பாடு செய்து சங்கானை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்.
காவல்துறையில் முறைப்பாடு போயிருக்குமென எங்களுக்குத் தெரியும். ஆயினும் மணியம் தோழரை இணைத்திருப்பர் என்று நினைக்கவில்லை. அவருடன் ஆலோசிப்போம் என்று அவர் வீட்டுக்குச் சென்றோம். அவர், முறைப்பாட்டைத் தன்னை இணைத்தே கொடுப்பர் என முன்னனுபவங்களால் புரிந்தவராதலால் வீட்டுக்கு வரவில்லை. நாங்களோ அந்தளவு தெளிவற்றவர்களாக அவரது வருகைக்காக காத்திருந்தோம். ஒரு ஜீப் தான் வந்தது. பொலீசுக்கும் எங்களைவிட அவரைப் பிடிப்பதே அரசியல் முக்கியத்துவம் மிக்கது என்பது தெரிந்திருந்தது.
நாலைந்து காவலர்கள் படலையைத் திறந்து உள்ளே வந்து “மணியம் எங்கே?, நீங்கள் யார்?” எனக் கேட்டனர். அவர் இங்கு இல்லை, அவரைப் பார்ப்பதற்கு வந்தவர்கள் நாங்கள் என்றோம். ‘உன்னுடைய பெயரென்ன?’ என்று முதலில் தயாளனை ஒரு காவலர் கேட்டார்.
கதிரையில் வைத்திருந்த தனது சேர்ட்டைப் போட்டு தெறிகளைப் பூட்ட நேரமெடுப்பது போலப் பாவித்து நிதானமாக ‘ரா..ம..நா..தன்’ என்றான்; அப்படி அவன் செய்ததால் எனக்குத் தெரிந்தது சொந்தப் பெயரைச் சொல்லக் கூடாது என்பது. அடுத்து என்னைக் கேட்ட பொழுது ‘நடேசன்’ என்றேன். மூன்றாவதாக தேவரும் வேறு பெயரைத்தான் சொன்னார். நாலாவதாக யோகேஸ்வரன் சொந்தப் பெயரையே சொல்லிவிட்டார்; கூட்டத்துக்கு வரவிருக்கும் தோழர்களை பஸ் இலிருந்து அழைத்து வருவதற்காக அரசடிக்கு அவர் போயிருந்த பொழுதுதான் சண்டை நடந்தது. தனது பெயர் முறைப்பாடு செய்யப்பட்டிருக்காது என்று அவர் நினைத்துவிட்டார்.
உடனே ஒரு காவலர், இந்தப் பெயர் இருக்கு எனக்கூறி யோகேஸ்வரனை அழைத்தார். இன்னொருவரோ ‘மணியத்துடன் நாலு பேர் மேல் தானே முறைப்பாடு உள்ளது. நாலு பேரையும் கூட்டிப் போவோம்’ என்று எல்லோரையும் அழைத்துப் போனார்.
ஜீப்படியில் போய் ஏற முற்பட்ட பொழுது, வீடு காட்ட அழைத்து வரப்பட்ட முறைப்பாட்டுக்காரரில் ஒருவரான எமது ஊரவர் ஒருவர் எங்களைக்காட்டி, ‘இவர்கள்தான் ஆட்கள்’ என்றார். பொலீஸ் நிலையத்தில் இறக்கப்பட்டு வாங்கொன்றில் இருத்தப்பட்டு பதிவுக்காக விசாரணை!
முதலில் என்னிடம் ‘உன்னுடைய பெயர் என்ன’ என்றார். ‘ரவீந்திரன்’. அடிக்கப் போவதாக பாவனை காட்டிய போதிலும் அடிக்காமல் விளக்கம் கேட்டார். நான் ‘ஓம், என்னுடைய முழுப்பெயர் நடேசன் இரவீந்திரன்’ என்றேன். என்னுடைய முழுப்பெயர் சமயோசிதத்தால்தான் அடி விழவில்லை என்று அப்போது நினைத்தேன்; பின்னர் தான் தெரியும், நாங்கள் கைதாகிக் கொண்டு செல்லப்பட்டதும் மணியம் தோழரின் குடும்பத்தவர்கள் அருகிலிருந்த இராஜசுந்தரம் சேரிடம் சென்று விடயத்தைக் கூறி இருக்கிறார்கள். அவர் சிபார்சு காரணமாகவே நாங்கள் தாக்கப்படாமல் இருந்திருக்கிறோம்.
மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நால்வருக்கும் ஒரு வாரம் விளக்கமறியல். அந்த இடைக்காலத்தில் நடந்த தேர்தலின் பொழுது தேர்தலைப் பகிஷ்கரிக்க கூட்டம் நடாத்த எத்தனித்து சிறைப்பட்டிருந்த நால்வரின் வாக்குகளும் பிரிவினையை அங்கீகரிக்கும் மக்கள் ஆணைக்குரிய கணக்கெடுப்புக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது. ஓமோம், கூட்டணிக் களவாணிகள் எங்களது வாக்குகளையும் ஆள் மாறாட்டத்துடன் தாங்களே போட்டிருந்தனர்.
ஒரு வாரத்தில் நாங்கள் பிணையில் விடுவிக்கப்படும் வரை மணியம் தோழர் தலைமறைவாக இருந்து பின்னரே வெளிப்பட்டு அவரும் ஒரு நாளில் பிணை பெற்றார். காயம்பட்டவர் துப்பாக்கிச் சன்னத்தால் அன்றிக் கல்லுப்பட்டுத்தான் என்ற வைத்திய அறிக்கை வந்திருந்தது. தவிர, கைத்துப்பாக்கியை ‘மரியாதையாக’ சங்கானைத் தோழர்களிடம் கொண்டு போய்க் குடுத்துவிட்டதைப் போலவே எமக்கெதிராக சாட்சி சொல்லத் திராணியையும் அவர்கள் பெற்றில்லை என்பதனால் வழக்கு ஒரு வருடமளவில் இழுபட்ட பின்னர் தள்ளுபடியானது.
அந்த நிகழ்வில் தோழர் மணியம் மற்றும் சங்கானைத் தோழர்கள் நாங்களே எங்கள் பலத்தில் போராட விட்டுப் போனதாக அல்லாமல் அன்றைக்கு அவர்களே களமாடி இருப்பின் எமதூர் குடிகாரக் கூட்டம் அன்றைக்கே ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருப்பர்; அதை வழக்காக ஆக்க முயற்சித்திருக்கவும் மாட்டார்கள். பின்வாங்கிப் போனதைப் பலவீனமெனக் கருதித்தான் தமிழீழம் காண முற்பட்ட அவர்கள் ‘சிறீலங்கா பொலீசில்’ எங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தனர். வெறி முறிந்து நிதானத்துக்கு வந்து, அடுத்தடுத்த நாட்கள் ஊருலகத்தில் நடமாடத் தொடங்கியபோதே சங்கானைத் தோழர்களுடன் சேட்டைவிட முடியுமா என்ற யதார்த்தம் எமதூர் பிரிவினை வீரர்களுக்குத் தெரிந்து ‘மரியாதையாக’ கொண்டு போய்த் துப்பாக்கியைக் கொடுத்திருந்தனர்.
எம்மைச் சுயமாக களமாடி அனுபவம் பெற இடமளித்ததுடன் எமக்குப் பின்பலமாக இருந்து பல வகை உதவிகளையும் சங்கானைத் தோழர்கள் செய்தமையாலேயே நாங்கள் பலமான கொம்யூனிஸ்ட்டுகளாகத் தொடர்ந்து முன்னேற முடிந்தது. நான் பலரிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறேன் “நான் ஒரு கொம்யூனிஸ்ட்டாக நீடித்து இருக்க இயலுமானதற்கும் தொடர்ந்தும் உயிருடன் உலவ முடிவதற்கும் நிச்சாம- சங்கானைத் தோழர்களே காரண கர்த்தாக்கள்” என்பதாக!
நிச்சாமத்துக்கென் வணக்கம்!” - ந.இரவீந்திரன்
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்