Saturday, September 10, 1977

கம்யூனிஸ்டு தோழர் கார்த்திகேசன் என அழைக்கப்பட்ட முருகபிள்ளை கார்த்திகேசன் (25 யூன் 1919 – 10 செப்டம்பர் 1977)

 


  • தோழர் கார்த்திகேசன் சாகவில்லையே…... – வள்ளியம்மை சுப்பிரமணியம்

நானும் என் கணவர் தோழர் மணியமும் காரைநகரில் வசித்த காலத்தில் சில இளைஞர்களுக்கு சில ஐயங்கள் மனதில் எழுந்ததன் காரணமாக "தமிழரைத் தமிழர் அடக்கியாள்வதின் காரணம் என்ன?" என்ற கேள்விக்கு விடை தேடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அவர்களின் உந்துசக்தி, விடாமுயற்சியினால் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்தரத்தில் இயங்கிய தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் காரைநகர் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பொதுவுடமைக் ட்சியானது மிகவும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஒரு தோழர் இன்னொரு கிராமத்துக்குப் போகிறார் என்றால் ....அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான தோழர் ஒருவர் அவ்விடத்தில் வசித்தால் தான் அவர் அந்த இடத்திற்குப் போகமுடியும். இரகசியமாகவே அரசியல் வேலைகள் நடந்தன.

 

புரட்சிகரமாகச் சிந்தித்துச் செயலாற்றுபவர்களை அழித்தொழிக்க, மேலாதிக்க சக்திகள் எந்நேரமும் தயாராக இருப்பார்கள்; உளவுப் பிரிவைக் கூட அனுப்புவார்கள். அதனால், இளைஞர்களின் சந்தேகங்களைப்போக்க வருபவர் தனது தோழர் ஒருவரின் இல்லத்தில் தான் தங்கவேண்டும். அந்த வீட்டில்தான் இரவு தங்கி அதிகாலையில் பயணம் செய்யமுடியும். "உயிர் காப்பான் தோழன்" என்பது எவ்வளவு உண்மை!

 

அந்தக் குறிப்பிட்ட மாலை 5-45 க்கு தோழர் மணியம் அவர்கள் பேருந்து நிறுத்த இடத்திற்குச் சென்று தோழர் கார்த்திகேசன் மாஸ்டரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் வீட்டிற்கு வரமுன்னரே இளைஞர்கள் ஒன்பது பேரும் வந்துவிட்டனர். மிகுந்த மரியாதை கலந்த மலர்ந்த முகத்துடன் எழுந்துநின்று தோழரை வரவேற்றனர். அண்மையில் தான் சோவியத் ரஷ்யாவிலிருந்து திரும்பியிருந்த தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள், தோழர் மணியத்திற்குக் கொடுப்பதற்காக சோவியத் சோசலிசக் குடியரசு அமைய அரும்பாடுபட்ட தோழர் லெனின் அவர்களது உருவச்சிலையைக் கொண்டு வந்திருந்தார்


தான் நேரில் பார்த்த சோசலிசக் குடியரசின் ஆட்சியமைப்பின் விழுமியத்தைக்கூறி "இந்த அடையாளச்சின்னம் தோழர் மணியத்திடமிருப்பது தான் பொருத்தமானது" என்று கூறி தோழரிடம் கையளிக்கும்போது சகலரும் அந்நிகழ்ச்சிக்கு கரகோசம் செய்து ஆரவாரித்தனர்.

 

அதன்பின்னர், இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாகச் சகலரின் சந்தேகங்களுக்கும் மாஸ்டர் விளக்கமளித்தார். பொதுவுடமைத் தத்துவம் என்பது மார்க்ஷிச சிந்தனையின் அத்திவாரத்தில் அமைந்துள்ளது. அதனை விளக்கி எழுத எனக்கு அறிவாற்றலோ, ஆளுமையோ போதாது.

 

 

அதன்பின்னர் 9-30 மணியளவில் உணவருந்திய பின்னர் தோழர் கார்த்திகேசன் மாஸ்டருக்கு நித்திரைக்குரிய நேரம். வாடகை வீடு பெரிதாக இருந்தாலும், எம்மிடம் கைவசம் இருந்த பாவனைக்குரிய பொருட்கள் சிறிய எண்ணிக்கையில் தான் இருந்தன. தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் பத்திரமாகவும் , நிம்மதியாகவும் உறங்க வேண்டும் என்பதற்காக நல்ல பாய், சுத்தமான வெள்ளைத் துணிப் படுக்கை விரிப்பு, சுத்தமான தலையணை இவற்றை அன்று சாயந்தரமே தயார்படுத்தி, கூடத்தில் அறைக்குள் பத்திரமாக தோழர் மணியம் வைத்திருந்தார்.

 

மறுநாள் அதிகாலை 4-00 மணிக்கே யாழ்ப்பாணம் போகிற பஸ் வண்டி , காரைநகர், மேற்கு றோட்டிலுள்ள புதுறோட் சந்திக்கு வந்துவிடும். தோழர்கள் இருவரும் எழுந்ததோ, சுடுநீர்ப்போத்தலில் விட்டுப் பத்திரமாக வைத்திருந்த தேநீரைக் குடித்த பின் பேருந்தைப் பிடிக்கப் போனது பற்றிய விபரம் ஒன்றும் எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப் புனிதமான , வெள்ளைநிறமும், சாம்பல் நிறமும் கலந்த , சலவைக் கல்லினால் ஆக்கப்பட்ட தோழர் லெனின் அவர்களது உருவச்சிலை மாத்திரம், நாங்கள் 4 கிராமங்கள், 6 வீடுகள் ( எனது தொழில் நிமித்தம்) மாறி, மாறி வசித்த காலத்திலும் பத்திரமாகவும், புனிதப் பொருளாகவும்  தோழர் மணியம் பாதுகாத்தார் என்பதை நினைக்கும் போது , ‘அவர் தான் நேசித்த கட்சியையும், தோழமையையும் பேணினார்' என்பதை .... அவரது மனைவியாகிய என்னால் இந்த முதிய வயதில் ஞாபகத்தில் நிறுத்தும் போது கண்களைக் கண்ணீர் நனைக்கின்றது! தொடர்வேன்.....

தோழர்கள் வி.பொன்னம்பலம், கார்த்திகேசன் மாஸ்ரர் , வி.ஏ. கந்தசாமி, நீர்வை பொன்னையன் என பலரும் வருவர்அதில் கார்த்திகேசன் மாஸ்ரர் ஏற்கெனவேவந்திருக்கும் இளைஞர்களுக்குவகுப்பு எடுத்த பின்.... இரவு தங்கி மறுநாள் அதிகாலை பஸ் வண்டி எடுத்துப் போய் விடுவார். அந்த நேரத்தில் அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கணித, ஆங்கில ஆசிரியர்.

இலங்கை நாட்டில் பொதுவுடமைக் கருத்துக்களை..... அதாவது தாம் அறிந்தவற்றை ஆர்வமுள்ள வாலிப உள்ளங்களுக்கு..... அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு.... நடைமுறை சாத்தியமான விளக்கங்கள் தேவைப்பட்டது. அறிவுரை கேட்க வந்த இளைஞர்கள்.... காலப்போக்கில்உலகளாவிய ரீதியில். ....கட்சி , இரண்டாக பிரிந்த பின்னர் நடந்தவை எனக்குத் தெரியாது.


அந்தக் காலப்பகுதில் மீண்டும் கட்சியினுள் கருத்து மோதல்கள் ஆரம்பித்தன. பல தமிழ், சிங்கள தோழர்கள் வந்து மணிக்கணக்கில் பேசினர். எனக்குத் தெரிந்து தோழர் சண் அளவிற்கு , இவரால் மிக நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்டவர் தோழர் வி.. கந்தசாமி. ஒரு தடவை தோழர் மணியமும் அவரும் எமது காலையடி வீட்டிற்கு வந்த போது, மணியம் தோழர்  பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடக்க முடியாது இருந்த அவரை தன் கைகளில் காவி வந்ததாகச் சொன்னார். திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியராக வாழ்வை அமைத்துக்கொண்டவர் என்ற மரியாதை எப்பவும் எனக்குமுண்டு. என் பிள்ளைகள் மீது அதீத அன்பு காட்டியவர். அவரது பேச்சுக் கேட்பதற்காக அந்தக் காலங்களில் இளைஞர்கள் கூட்டத்திற்கு  வருவர். மீண்டும் பிரிவோ என்கிற பயத்தை தோழர்களின் வருகைகளும், கதைகளும் உணர்த்தின. தோழரிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்ட போது , 'உட்கட்சிப் போராட்டம்' என்பது , “சிறந்த மக்களுக்கான அமைப்பை ஒற்றுமையுடன் கொண்டு செல்ல இவை போன்ற கருத்தை கருத்தால் புரிந்து கொள்ளுவதன் மூலமே முடியும். இவை இருப்பது தான் சரிஎன்றார். எனக்கு இருந்த ஒரே கவலை பிரிவு வந்துவிடுமோ என்பதே. ஒருநாள் காலை தோழர் வீட்டின் வளை மீதுகொள்கையற்ற நடைமுறை குருட்டுத்தனம்; நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்" என்று எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார். தோழர் வி. கந்தசாமி தனியே வந்தார்சுக விசாரிப்புகளின் பின்னே வீட்டு வளையைப் பார்த்தார். "! எனக்காகத் தான் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாரா?" என்று கேட்டார். அவரிடம் இருந்து தகவல் அறிய நான் முற்படவில்லை. அதை நான் எப்போதும் செய்ததும் இல்லை. “வந்தேன் என்று சொல்லுங்கள். குழந்தைகளை கவனமாகப் பாருங்கள்என்று தோழர் வி.. கந்தசாமி அவர்கள் சொல்லிச் சென்றார். ஏனோ எனக்கு கண்ணீர் தளம் தட்டியது.

 

ஜே.வி.பி. பிரச்சனையால் தோழர் சண் ஜெயிலில் இருந்தார். அத்தருணம் வாட்சன் பெனார்ண்டோ, றொசாரியோ, ராமையா, .ரி. மூர்த்தி (செங்கொடிச் சங்கத் தோழர்கள்)  , HLK கரவிட்ட , நிகால் டயஸ்  எனச் சில தோழர்களுடன் நீர்வை பொன்னையன், வி.. கந்தசாமி, கார்த்திகேசன் மாஸ்ரர், தோழர் கதிரேசு எனச் சிலரும் தோழர் சண்ணை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாகக் கூறிப் பிரிந்தனர். தோழர் மணியம் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் உரையாடல்களில் 1969இல் நடந்த சட்டமறுப்பு மேதின ஊர்வலத்தின் பாதிப்பு பற்றி தலைமையைக் குற்றம் சாட்டியது என் காதுகளில் அரசலாகக் கேட்டது. நான் அது பற்றித் தோழருடன் இறுதி வரை கேட்டதே இல்லை. பின்னர் , பிரிந்த அவர்கள் வேறு ஒரு பெயருடன் இயங்கினர்


தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள், சிங்கப்பூர்.... மலேசிய குடும்ப வழி வந்த கல்விமான். தனது உடன் பிறந்த சகோதரிகளின் ஆதரவுடன் தனது பிள்ளைகளையும் ஒரே வீட்டில் .....ஐக்கியமாக, அனுசரணையாக வாழ... வளர... வழி வகுத்த ஆசான். அதிகம் பேசமாட்டார். அவரது மொழிகளில் ஒரு வசனம் ஞாபகத்தில் இருக்கிறது. அதாவது.... “சாதம் இன்றேல்..... சாந்தம் ஏது?”...... இது எவ்வளவு உண்மை.– வள்ளியம்மை சுப்பிரமணியம்

ஈழநாடு 1977.09.12


1971 ம் ஆண்டு ஏப்பிரல் கிளர்ச்சி நடைபெற்ற கால நாடு பூராவும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (சீன சார்பு) தலைவர்களை பொலிசார் தேடித்திரிந்த நேரம், தோழர் சுப்பிரமணியம் அவர்களும் தேடப்பட்ட நேரம் அந்த நிலையிலும் தோழர் சுப்பிரமணியம் அவர்கள் என்னிடம் வந்து செல்வநாயகத்தார் தோழர் கார்த்திகேசன் நிலை பற்றித் தெரிந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நானும் தோழர் சுப்பிரமணியம் அவர்களும் கார்த்திகேசன் இல்லத்தை நோக்கி ஒரு காரில் சென்றோம்.

 

அவரின் இல்லத்திற்கு சிறிது தூரத்தில் காரை நிறுத்தி விட்டு நான் மட்டும் கார்த்திகேசன் இல்லத்திற்குச் சென்று அவரின் நிலைபற்றி அறிந்து வந்தேன். தோழர் கார்த்திகேசன் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார் என்ற செய்தி கேட்கும் மட்டும் அவர் துடித்த துடிப்பும் அதன் பின் அடைந்த மகிழ்ச்சியும் நினைவு கூறத்தக்க ஒரு நிகழ்வாகும்.

 

தான் தேடப்பட்ட அந்த நேரத்திலும் தனது பாதுகாப்பை விட சக தோழர் ஒருவரின் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதிய அவரின் உணர்வு உண்மையிலேயே மிக உயர்ந்த  கம்யூனிஸ்ட் போராளியின் உணர்வாகவே இருக்கமுடியும்.

 யாழ்ப்பாணம் இ. செல்வநாயகம் 1989


No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF