Discussion on the leadership of Comrade N. Sanmugathasan - Samal de Silva & K.A. Subramaniam
சண்முகதாசனின் எதிர்ப்புரட்சி மார்க்கத்தை நிராகரியுங்கள்!
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களுக்கு வேண்டுகோள்!!
அன்பான தோழர்களே!
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள நேர்மையான கம்யூனிஸ்ட்டுகளை, சண்முகதாசனின் எதிர்ப்புரட்சி மார்க்க - சீர்குலைவுத் தலைமையை நிராகரித்து இலங்கைப் புரட்சியின் ஸ்தூலமான நடைமுறைக்கு ஏற்ப மார்க்சிச – லெனினிச – மாசேதுங் சிந்தனையின் சர்வ வியாபக உண்மைகளை சரிவரப் பிரயோகித்து தேசிய ரீதியில் ஒரு பலம் மிக்க கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியெழுப்ப முன்வருமாறு அழைப்பு விடுகின்றோம். இந்த நோக்கத்திற்காக கட்சி மத்திய குழு, பிரதேசக் குழுக்கள், மற்றும் பொறுப்புதாரி ஊழியர்கள், ஏனைய அங்கத்தவர்கள் சார்பில் தோழர்கள் சமால் த சில்வா, கே.ஏ.சுப்பிரமணியம் ஆகியோரால் கூட்டப்படவிருக்கும் விசேட காங்கிரசில் அணிதிரளுமாறு அழைப்பு விடுகின்றோம்.
சண்முகதாசனின் சீர்குலைவுத் தலைமை, எதிர்ப்புரட்சி மார்க்கத்தை நிராகரிக்குமாறு நாம் கோருவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
(1) எமது கட்சியின் தத்துவ வழிகாட்டியான மார்க்சிச – லெனினிச – மாசேதுங் சிந்தனையைக் கைவிடும் முதற்படியாக தலைவர் மாஓவினால் முன்வைக்கப்பட்ட மூன்று உலகக் கோட்பாட்டை ஒரு பிற்போக்கான கோட்பாடு என சண்முகதாசன் கண்டித்தார். இந்தக் கோட்பாட்டை நிராகரிக்கத் தீர்மானித்த பின் அவர் பிற்போக்கு பத்திரிகை மூலமாகவும், பிற்போக்குவாதிகளின் உதவியுடனும் மாபெரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், சீன மக்களுக்கு எதிராகவும் ஒரு கீழ்த்தரமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதன் மூலம் அவர் சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளுக்கு உதவ முன்வந்துள்ளார்.
(2) எமது கட்சியின் பதினோராவது காங்கிரசின் முடிவுகளுக்கும், ஜனநாயக மத்தியத்துவ கொள்கைகளுக்கு விரோதமாகவும் சண்முகதாசன் தனது நெருங்கிய சகபாடிகளின் உதவியுடன் தனது எதிர்ப்புரட்சி சீர்குலைவு மார்க்கத்தை கட்சி மீது திணிக்கும் நோக்குடன் அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட கட்சியின் விசேட மகாநாட்டில் மிகப் பெரும்பான்மையான பிரதிநிதிகள் கலந்து கொள்வதைத் தடை செய்தார். அவரது எதிர்ப்புரட்சி மார்க்கத்தை எதிர்த்தவர்கள் சமர்ப்பித்த அறிக்கையை பல்வேறு கட்சி கிளைக்கும் அனுப்புவதை வேண்டுமென்றே தாமதித்தார். தனது நாசகார நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காக மாநாட்டில் புள்ளிவிபர அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினார்.
(3) சண்முகதாசனின் பதின்நான்கு வருடகால தலைமை வெகுஜனங்களுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒரு சக்தி மிக்க கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. அவரது ஒருமுனைவாத, சீர்குலைவுவாத, எதிர்ப்புரட்சி மார்க்கம் மக்களினதும் நாட்டினதும் பொது எதிரிகளுக்கு எதிராக ஒரு பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாகவிருந்தது. அவர் தான் மட்டுமே ஒரேயொரு புரட்சிகர சிந்தனையாளன், ஒரேயொரு இடதுசாரி, ஒரேயொரு புரட்சிவாதியெனப் பீத்தித் திரிந்தார். அவரது ஒருமுனைவாத கதவடைப்புவாதம் மிகப்பெரும்பான்மையான மக்களை பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படுத்தும் சகல முயற்சிகளுக்கும் தடையாய் இருந்தது. நடுநலை சக்திகளை வென்றெடுத்து ஒரு பரந்த ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதன் மூலம் பிரதான எதிரிகளைத் தனிமைப்படுத்த வேண்டுமென்பதை அவர் மூர்க்கத்தனமாக எதிர்த்தார். உண்மையில் அவரின் தாக்குதல்கள் யாவும் இடைநிலை சக்திகளையே குறிவைத்ததின் மூலம் பிரதான எதிரிகளுக்கு உதவி செய்தார்.
(4) தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை மார்க்சிச – லெனினிச – மாசேதுங் சிந்தனையின் அடிப்படையில் அணுகுவதற்குப் பதிலாக பிரச்சினையை அவர் புத்தகவாத, ஒருமுனைவாத நிலையில் அணுகியதால் ஆயிரம் ஆயிரம் சிங்கள – தமிழ் வாலிபர்களை தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் அவர்களது நியாயமான அபிலாசைகளுக்கான போராட்டத்தில் தேசிய ரீதியில் ஐக்கியப்படுவதற்கு தடையாய் இருந்ததின் மூலம் மக்களின் புரட்சிகர, ஏகாதிபத்திய விரோத இலட்சியத்திற்குத் துரோகம் இழைத்தார்.
(5) தனது சொந்த நலன்களைக் கட்சியின் நலன்களுக்கு மேலாக வைத்ததின் மூலமாகவும் பொதுச்செயலாளர் பதவியை துர்ப்பிரயோகம் செய்ததின் மூலமும் அவர் கட்சிக்கு ஊறு விளைவித்துச் சீர்குலைத்தார். விமர்சனங்களைச் சகித்துக் கொள்ள மாட்டாத அவர் நேர்மையான சுயவிமர்சனத்தை செய்ய மறுத்து வந்துள்ளார். சண்முகதாசனின் பூர்சுவா நிலைப்பாடு கட்சியின் முன்னேற்றத்தைத் தடை செய்ததுடன் கட்சி மிகச் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்ய முடியாது போய்விட்டது.
(6) சண்முகதாசன் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், வேறுவழிகள் மூலமும் கட்சியின் மத்திய கமிட்டிக்குத் தெரியாமலும் தனது சொந்த சீர்குலைவு, எதிர்ப்புரட்சிகர மார்க்கத்தை சர்வதேசரீதியாக சகோதரக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் பிரச்சாரம் செய்து அவற்றிற்கிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த முயற்சி செய்தார். இதன் மூலம் எமது கட்சியை சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதான ஓட்டத்திலிருந்து தனிமைப்படுத்தினார்.
(7) சண்முகதாசன் செங்கொடியை அசைப்பது செங்கொடியை எதிர்ப்பதற்கே. அவர் தலைவர் மாஓவை மேற்கோள் காட்டும் அதேவேளை – மாஓ சே துங் சிந்தனையை நிராகரிக்கின்றார். புரட்சிகரச் சுலோகங்களை உச்சாடனம் செய்து கொண்டு அவர் பிற்போக்குவாதிகளுடன் குலவி முற்போக்குவாதிகளை எதிர்க்கின்றார். சாராம்சத்தில் சண்முகதாசனின் மார்க்கம், கொள்கைகள், நிலைப்பாடு என்பன எதிர்ப்புரட்சிகரமானவை. கட்சியின் விசேட காங்கிரஸ் விரைவில் இடம் பெறும். காங்கிரசைக் கூட்டும் தயாரிப்புக்குழு காங்கிரஸ் நடக்கும் திகதி, இடம் என்பனவற்றை அறிவிக்கும்.
தயாரிப்புக்குழு கட்சிக் கிளைகளின் கலந்துரையாடலுக்கும் விசேட காங்கிரசிற்கும் சமர்ப்பிக்கும் தேசிய சர்வதேசிய நிலை பற்றிய நகல் அறிக்கையும், நகல் அமைப்பு அறிக்கையையும் அனுப்பி வைக்கும்.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!
வெல்லற்கரிய மார்க்சிசம் - லெனினிசம் - மாஓ சே துங் சிந்தனை நீடூழி வாழ்க!
தோழமையுள்ள
கொழும்பு (ஒப்பம்) சமால் த சில்வா
3 – 7 – 78 (ஒப்பம்) கே.ஏ.சுப்பிரமணியம்
மூன்று உலகக் கோட்பாடு என்றால் என்ன ?
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்