"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Friday, October 8, 2004

தோழர் சி. நவரத்தினம் -அனைவரினதும் அன்புக்கும் மதிப்பிற்கும் தோழமைக்கும் பாத்திரமாகி வாழ்ந்தவர்

 

தோழர் சின்னத்துரை நவரத்தினம்
தோற்றம்
28 - 02 -- 1945
மறைவு
08 - 10 - 2004

ஓய்வறியாது இயங்கிய செயல்வீரர் -ந. இரவீந்திரன்

தோழர் நவரத்தினம் அவர்களின் மறைவுச் செய்தி கொஞ்சங்கூட எதிர்பாராத நேரத்தில் பேரிடியாக வந்து சேர்ந்தது. சாவே உனக்கொரு சாவு வராதோ என்ற இரங்கல் வாசகம் என்னால் இந்தச் செய்தியில் உணரப்பட்ட அளவுக்கு முன்னர் புரிந்து கொள்ளப்பட்டதில்லை. எந்தளவுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர் ஓய்வறியாது இயங்கிய ஒரு செயல்வீரர். அவரை மறந்த உறக்க நிலையிலுங் கூட அவரது கனவில் ஏதோவொரு மக்கள் மத்தியிலான வேலை ஓடிக்கொண்டிருக்கிருக்கும். அத்தகைய ஒரு இதயம் எப்படி அகாலத்தில் தனது பணியை நிறுத்தியிருக்க முடியும்? "கொள்கையுற்ற நடைமுறை குருட்டுத்தனம்; நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்" என்பதற்கு முழு உதாரணமாக விளங்கியவர் தோழர் நவரத்தினம் ஓய்வறியாமல் இயங்கிய இடை நேரங்களில் சலிப்பின்றிக் கற்பதில் ஈடுபட்டவர் ஆவர். யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி, கிளிநொச்சி ஆகிய நகரங்களின் கடை வீதிகளில் காலை முதல் பொழுது சாயும் வரை தொடர்ச்சியாக நடந்து நடந்து கட்சிப்பத்திரிகை, தாயகம், சஞ்சிகை ஆகியன விற்றிருக்கிறேன் அவருடன், அவரைவிட மெல்லிய உடல்வாகுடைய எனக்கே களைப்பு வாட்டும், நல்ல தடித்த அவரது உடலில் களைப்பே தெரியாமல் இருக்கும். அவரை ஒரு போதும் இது பற்றிக் கேட்டதில்லை, உண்மையில் உள்ளுர் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவருக்குக் களைப்பேயிருக்காதா? அது தான் ஒரேயடியாக ஓய்வுக்குப் போய்விட்டார் போலும்!. அவர் குறித்து எனக்கு இன்னுமொரு விடயத்திலும் பொறாமை இருந்தது. எனது சில தயக்கங்களில் வேலைகள் தாமதப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அவற்றை ஒப்படைத்திருந்த தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அதற்காகக் கண்டிப்பதுண்டு. அதன் போது எப்போதும் அவர் சொல்கிற விடயம், தோழர் நவரத்தினம் மட்டுமே எந்தவொரு வேலையையும், எங்கு மேற்கொள்ளப்பட வேண்டுமோ அங்கு சென்று உரிய நேரத்தில் முடித்து வைப்பார் என்பது. எல்லாம் சேர்ந்து எனக்கு அவரிடம் பயங்கலந்த ஒரு மரியாதை இருந்தது. அவருடன் நான் விவாதிக்க முனைந்ததில்லை. அவருடைய கருத்தை அறிவதற்கே முதலிடம் கொடுப்பேன். மாற்றுக் கருத்து இருந்தால் மிகுந்த பயத்துடன் தான் சொல்வேன். அவர் அதற்குக் கொடுக்கும் மரியாதை, ஐதயை பயம் அவசியமற்றது என்பதை X தோழர் நவம்.உணர்த்தும் என் கருத்துச் சரியென்றால் தயக்கமின்றி ஏற்பதும், இல்லையென்றாலுங் கூட கவனத்திலெடுக்கும் அக்கறையுடன் செவிமடுப்பதும் அவரது பண்பு.
அவருடைய தீவிர அக்கறை அரசியல் சார்ந்ததாக இருந்த போதிலும், தேசிய கலை இலக்கியப் பேரவையிலும் அதேயளவு ஆர்வத்துடன் அவர் இயங்கியிருக்கிறார். எந்தவொரு கூட்டத்துக்காவது அவர் சொல்லாமல் இருந்ததில்லை. அனைத்திலும் அவரைக் காணலாம். பேச்சாளர்களது உரை மீதான அவரது விமர்சம், அவற்றை எவ்வளவு கவனத்துடன் அவர் கேட்டிருக்கிறார் என்பதைக் காட்டுவதாக இருக்கும்.
யாழ்ப்பாண நகரில் மிக இளைஞர்களுக்கான வகுப்பொன்றைத் தொடர்ச்சியாக நான் எடுக்க வேண்டியிருந்தது. அது அவருக்கு அவசியமற்றது தத்துவத்திலும் நடைமுறையிலும் மார்க்சியத்தின் பல படிகளை அவர் கடந்துவிட்டவர். ஆரம்ப அறிமுக நிலை வகுப்பை நான் எடுத்த போதும், முழு நேரமும் இருந்து கேட்பார்.
என்னுடைய இயல்புக்கு நான் தமிழர் வரலாற்றை முன்னிறுத்திய வர்க்கத் தோற்றத்தையும், வரலாற்றுச் செய்நெறியையும் விளக்குவேன். அதனுடன் இணைத்துத்தான் ஐரோப்பிய அனுபவத்தைக் குறைந்த அளவில் சொல்வேன். இதனைத் தோழர் நவரத்தினம் எப்படி எடுப்பாரோ என்கிற பயம் எனக்கிருந்தது. முதலிரு வகுப்புகளில் எதுவும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை. மூன்றோ, நான்கோ சரியாக நினைவில்லை, பின்னர் தான் எனது வகுப்பு நன்றாக இருப்பதாய்ச் சொன்னார். மார்க்சியத்தை எமது அனுபவங்களினூடாகச் சொல்வதே சிறந்ததென உற்சாக மூட்டினார்.
ஒருவகையில் என் எழுத்துக்களில் அசட்டுத் துணிச்சல் உண்டு, அதற்கான உத்வேகத்தைத் தந்ததில் தோழர் நவரத்தினத்துக்கும் பங்குண்டு. அவர் எந்த வகுப்பு முறைமையை நிராகரித்திருந்தால் பலவற்றை நான் எழுத முடியாமல் இருந்திருக்கும். ஏதோ துணிச்சலில் எழுதிவிட்டதால், இனி விவாதிக்கலாம், தவறிருந்தால் திருத்திக் கொள்ளலாம். செயற்பட உத்வேக மூட்டிய அவரது பங்கு என்றென்றும் நினைவு கூரத்தக்கது. இப்போது எழுதியன பற்றி அவரிடம் கருத்துக் கேட்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன், இப்படிச் சந்திக்க முடியாமல் ஆகும் எனத் கனவிலும் கருதியிருந்ததில்லை.
அவரையும் எம்முடன் சேர்த்து இனி எமது வேலை இரட்டிப்பாக வேண்டும். அவர் அதற்கான பலத்தைத் தருவார்- துக்கத்தைப் பலமாக மாற்றுவோம்! -ந. இரவீந்திரன்
தோழர் நவம் எழுதிய கவிதை
சோ. தேவராஜா, சட்டத்தரணி (அரசியல்குழு உறுப்பினர், புதிய ஜனநாயகக் கட்சி)
கொக்குவில் மஞ்சவனப் பதியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகிறது. ‘தமிழ் மாணவர்கள் மீது தரப்படுத்தலைத் திணிக்காதே’ என்ற கோசத்துடன் 1972இல் தமிழ் மாணவர்கள் அணி திரண்டு யாழ் முற்றவெளி மைதானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். அவ்வூர்வலம் முஸ்லிம் மக்களின் வீதிகளையும் ஊடறுத்துச் செல்கிறது. அப்போதைய கல்வி அமைச்சராக ‘அல்ஹாஜ் பதியுதீன் மாஹற்மூத் பதவியிலிருந்தமையால் அவ்வூர்வலத்தில் கலந்து சென்ற மாணவர்களில் சிலர் முஸ்லீம் மக்களின் மதத்தை ஊறு செய்யும் விதமாக தம்பாட்டில் சுலோகங்களைக் கோசிக்கின்றனர். அதனால் கோபமுற்ற சில தமிழ் இளைஞர்கள் கொம்யூனிஸ்ட்டுகளாய் இருந்த காரணத்தால் அத்தகைய இனவாத சுலோகங்களை உச்சரித்தமையை விமர்சித்து விவாதிக்கின்றனர்.
ஊர்வலம் பெருந்திரளான மாணவர்களை அன்று அணிதிரட்டியிருந்தமை தமிழ்ப் பாராளுமன்ற அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஊட்டியிருந்தது. பல கேள்விகளை தமிழ் தேசிய அரசியலை நோக்கி எழுப்பியது.
தமிழ்த் தேசியம் எந்த வர்க்கத் தலைமையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் சலனத்தை உண்டுபண்ணிவிடுமென்ற தவிப்பால் மேட்டுக்குடியினர் மிகக் கவனமாகவே தமிழ் மாணவர்களை இனவாதத்தின் பக்கம் உசுப்பிவிடுவதற்கு தயாராகவே காத்திருந்தனர்.
இக்காலத்தில் தமிழ் மாணவர்களை இலக்காகக் கொண்டு வடக்கிலே கொம்யூனிஸ்ட் இளைஞர்களால் ‘தீ’ எனும் பெயரில் பத்திரிகையொன்று வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பத்திரிகையில், தமிழ் மாணவர்களுக்கெதிராக, அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த கொடுமைகள் தோலுரித்துக் காட்டப்பட்டன.
தமிழ் மாணவப் பேரவையின் கூட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஊர்வலம் இன்னும் வந்து முடியவில்லை. பேச்சுக்கள் ஆரம்பமாகின்றன. மாணவர்கள் மேடையில் ஏறி வீரமுழக்கம் செய்கின்றனர்.
தமிழ் மாணவர்கள் செல்லவேண்டிய திசைமார்க்கத்தை சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை வர்க்க வழிகாட்டியாக கைகளில் ஏந்தி ஓர் சுறுசுறுப்பான இளைஞனும் கூட்டாளிகளான அவனது சில தோழர்களும் இவ்வூர்வலத்தின் இறுதியில் கூட்டமைதானமான முற்றவெளியில் விநியோகிக்கின்றனர்.
கூட்டத் தரின் இடையிலே ஒரு சலசலப்பு. மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஓர் இளைஞனைப் பிடித்துச் சில மாணவர்கள் தாக்குகின்றனர். அந்த இளைஞன் துணிவாக நின்று பதில் சொல்கின்றான். அவனது பிரசுரங்கள் மாணவர்களின் கைகளுக்குச் செல்கிறது.
யாரவன்? எதற்காகத் தாக்கப்பட்டான்? "துரோகி என்றவாறு சில மாணவர்கள் சொல்லிச் செல்வது கேட்கிறது. ‘எங்கடை கூட்டத்திற்குள் வந்து கொம்யூனிஸ்ட்டுக்கள் நோட்டீஸ் குடுக்கிறாங்கள்’ என்று புறுபுறுத்துச் செல்வது கேட்கிறது. இதேபோல், 1971இல் யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடந்த கூட்டத்திலும் அன்றைய ஆஸ்தான கவிஞர் ஒருவர் "துரோகி என பேராசிரியர் கைலாசபதியை அடையாளப்படுத்தினார். பேராசிரியர் கைலாசபதி பற்றி இவ்வாறாகத்தான் முதன்முதலாக அறிகிறேன். அதுபோன்றே கூட்டத்தில் பிரசுரம் விநியோகித்ததால் "துரோகி எனப் பெயர் சூட்டப்பட்ட பெயர் தெரியாத அந்த கொம்யூனிஸ்ட் இளைஞன் "தோழர் நவம்' என்பதை நான் பின்னாளில் தெரிந்து கொண்டேன். அந்த முதன் முதல் அறிமுகம் இப்போது நினைக்கவும் அதிசயமாகத்தான் இருக்கிறது. 
1975இல் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் 'ஆத்திசூடி வீதி என்ற முகவரியை முதன்முதலில் 'தாயகம்' சஞ்சிகையில் பார்த்தேன். அதுவே 'தாயகம் வெளியீட்டு முகவரியாக இருந்தது. எனவே, அந்த முகவரிக்குரியவரைத் தேடி அறிய வேண்டுமென்று விரும்பினேன். அது அன்று கைகூடவில்லை. அவரது அறிமுகம் கட்சி மூலமே பின்னர் கிடைத்தது.
1978இல் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக் கருகில் காலையில்
சென்றுகொண்டிருக்கின்றேன். மக்கள் கூட்டம் திரண்டு பரபரப்புடன் காணப்படுகின்றது. எல்லோரும் முகங்களில் ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பியபடி இரகசியமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஜி.சி.ஈ. (ஓ.எல்) பரீட்சையைக் குழப்புவதற்காக இயக்கப் பொடியள் இரண்டு பேர், அதிபர் ஒருவர் வினாத்தாள்கள் கொண்டுவரும்போது அதைப்பறித்துக்கொண்டு ஓடியதாகவும் அப்போது பொலிஸ் அவர்களைப் பிடித்துக்கொண்டது என்றும் அனுதாபத்துடன் பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர். மற்றப் பொடியன்கள் தப்பிவிட்டான்கள் என்றும் குசுகுசுக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர்தான் தோழர் நவம் என்று அறிகிறேன்.
உண்மையில் நடந்தது வேறு சம்பவம். மக்கள் பேசியது இன்னொன்றைப் பற்றி என்பதை அன்று மாலை தெரிந்து கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான ஓர் ஆசிரியரை உயர்த்தப்பட்ட தமிழ் அதிபர் ஒருவர் சாதி ரீதியிலே பாரபட்சம், புறக்கணிப்பு செய்து அவமானமாக நடத்தினர். அது பற்றிக் கிடைத்த முறைப்பாட்டினாலேயே அவ்வதிபரை வழிமறித்து விவாதிக்க முயற்சித்தபோது, தற்செயலாக அவரது கையில் ஜி.சி.ஈ. சாதாரண பரீட்சை வினாத்தாள்கள்இருந்தமையால் கதையே மாறிவிட்டது.
யாழ்ப்பாணச் சமூகத்தில் தமிழ் மக்களை இன்றுவரை வெவ்வேறாக அடையாளப்படுத்தும் 'சாதியம்’ என்னும் வடுவானது பாரபட்சம், புறக்கணிப்பு என்பவற்றுக்குமப்பால் ஒடுக்குதலாக மாறும்போதெல்லாம் அந்தந்தக் களங்களில் நின்று போராளியாக குரல் கொடுக்க தோழர் நவம் என்றும் தவறியதில்லை. கோடாலிக்காடு முதல் முதலிகோவிலடி, திடற்புலம், புன்னாலைக்கட்டுவன் வரை பல கிராமங்களில் அவர் துடிப்போடு பணி புரிந்ததைப் பார்த்திருக்கிறேன்.
இலங்கை இராணுவமும் அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சருமான அத்துலத்முதலி அவர்கள் சிங்கள தேசத்தைப் பாதுகாக்கும் அவாவில் சுன்னாகம் சந்தையில் பொதுமக்கள் மீது ஹெலித்தாக்குதலுக்கு உத்தரவிட்டு இனவெறிப் போரை வட்க்கு-கிழக்குக்கு நகர்த்தும் தமது வெள்ளோட்டத்தை நடத்திவிடுகின்றனர்.
அன்று தொடக்கம் தோழர் நவம், யாழ்ப்பாணத்த்தில், கொழும்பில், மலையகத்தில், கிழக்கில் நடைபெறும் பேரினவாதச் செயல்களுக்கெதிராக உடனுக்குடன் செய்திகளை கேட்பதும் தகவல்களை அறிவதும், பத்திரிகைகளைப் படிப்பதும், பிரச்சினைகள் நடந்த இடங்களுக்கு விரைவதும், உண்மையைத் தெரிந்து கொள்வதிலும் அவைபற்றி கட்சித் தோழர்களுடனும் நண்பர்களுடனும் ஊரவர்களுடனும் குடும்பத்தினருடனும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதும், பேரினவாதக் கொடுமைகளுக்கெதிராக அனைவரையும் அதன்பால் அனுதாபத்தை தூண்டி ஆதரவோடு அணி திரட்டும் ஆர்வமும் மக்களை வெறும் பார்வையாளர் என்ற தளத்திலிருந்து செயற்பாட்டாளராக உருமாற்றும் கொம்யூனிஸ்ட் ஊழியனாகவே ஒவ்வொரு கணப் பொழுதிலும் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்.
அவரைக் காணும் போது ஒரு புதிய தகவல் இருக்கும். உற்சாகம் பிறக்கும். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்ற ஓர் செயற்திட்டம் உருவாகும்.
1984ல் மனித உரிமைகளுக்கான வெகுஜன இயக்கம் உருவாகியது. அதில் மிகத் தீவிரமான செயற்பாட்டாளராக நவம் மாறிவிடுகிறார். இவ்வியக்கம் 1987 ஒக்ரோபர் இந்திய இராணுவம் யாழ் மண்ணில் கால்பதிக்கும்வரை செயற்பட்டது. இவ்வியக்கம் சில இந்திய ஆதரவு இயக்கங்களினால் எச்சரிக்கப்பட்டது. அதிபர் இராஜசுந்தரம் கொல்லப்பட்டார். எனினும் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு விரோதமான குறுந்தேசியவாத இயக்கங்களின் முகமூடிகளைக் கிழிப்பதிலும் அவை பற்றிய எச்சரிக்கையுடனும் செயற்பட்டார்.
அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி வடபகுதிக்கெதிராக எரிபொருள் தடையை அறிமுகப்படுத்தி ஒரு பிரதேச மக்களை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டார். அந்நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் 
ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்ட மறியல் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் இறுதியாக யாழ் கச்சேரி முன்றலில் நடைபெற்ற சர்வமதப் பிராத்தனையிலும் முன்னின்று செயற்பட்ட போராளித் தோழர் நவமாவார்.
வட்டுக்கோட்டை, கோடாலிக்காடு, புன்னாலைக்கட்டுவன், இருபாலை, அரியாலை, நெல்லியடி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, அல்வாய், நல்லூர், கரவெட்டி, கன்பொல்லை, கிளிநொச்சி, வன்னி, வட்டக்கச்சி, அக்கராயன்குளம் என் யாழ் குடாநாடு முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஈறாக தோழர் நவம் பறந்து திரிந்து, பரந்த இயக்கத்தை முன்னெடுத்த அவரது துணிவும் நம்பிக்கையும் இன்னும் நெஞ்சில் பசுமையாக உள்ளது.
தாயகம் சஞ்சிகையை யாழ்ப்பாணத்தில் கடைத் தெருவில் விநியோகிப்பதும், புதியயூமி மற்றும் பிற எமது நிதி சேகரிப்புகளுக்கு வருவதும் முன்னின்று வழிநடத்துவதும் சகலருடனும் உற்சாகத்துடன் இணைந்து செயற்படுவதும் கண்ணில் இன்னும் தெரிகிறது. நம்பிக்கை இல்லாத நவம் என்பது நாம் காணமுடியாதது. நம்பிக்கை = நவம் என்றுதான் எண்ணத்தில் படுகிறது. எம்மால் எதுவும் இயலும் என்பதன் அடையாளம் தோழர் நவம்.
ஓடும் புகையிரதத்தில் பத்திரிகை விற்பது, யாழ்ப்பாணம் முதல் கிளிநொச்சிவரை சென்று கட்சி, கலை இலக்கியப் பேரவை நூல்களை விற்பதும் விவாதிப்பதும் அவருக்கு இன்பமான செயற்பாடாகும். எப்:ேதும் இயக்கம் இயங்க வேண்டுமென்பது அவரது இதயத் துடிப்பாகும். இயக்கமற்ற இதயத்துடிப்பென்பது அவருக்குத் தெரியாததாகும்.
இந்திய இராணுவத்தை தமிழ்த் தேசிய இயக்கங்கள் வரவேற்று, வழி முழுவதும் மாலைசூட்டி, ஆராத்தியெடுத்து வரவேற்றுத் தமிழீழம் காணும் புளுகத்தில் திளைத்தபோது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கொம்யூனிஸ்ட்டுகளும் தோழர் நவமும் வரப்போகும் இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து முதன்முதலில் குரலெழுப்பியதோடு 16-10-1987ல் ஓர் பிரசுரத்தை வெளியிட்டு பல்ல்ாயிரக்கணக்கான இந்திய இராணுவத்தின் கண்களில் புலப்படாமல் விநியோகித்ததில் தோழர் நவம் முன்னின்ற செயற்பாட்டாளராகிறார்.
யாழ் பிரதேசச் சுவர்களில், இந்திய இராணுவத்தை வெளியேறும்படி போஸ்ரர் இயக்கத்தை நடத்துவதில் தோழர் நவம் முன்னின்று செயற்பட்ட முன்னணித் தலைமைப் போராளியாவார்.
அந்நியப் படையினரால் அளந்து தரப்படும் ‘விடுதலை"யைத் தமிழ் மக்கள் ஏற்கத் தயாரில்லை என்பது பின்னாளில் தமிழ் மக்களால் புரிந்துகொள்ளப்பட்டபோதும் இன்றுவரை இந்தியப் பிரமையும் இந்துத்துவ மாயையும் அகன்றதாகத் தெரியவில்லை.
இலங்கை, இந்திய இராணுவங்களின் கெடுபிடிகளின்போது பொதுமக்கள் மத்தியில் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் பங்கர்கள் அமைப்பது பற்றியும், துவக்குச் சூட்டிலும் ஷெல் தாக்குதலிலிருந்தும் ஹெலி விமானத் தாக்குதலிலிருந்தும் எவ்வாறு தப்புவது என்பவற்றைப் பற்றியும் செயன்முறையில் கிராமம் கிராமமாக, வீடு வீடாகச் சென்று நண்பர்கள், தோழர்கள், ஊரவர்களுக்கு உதவுவதில் முன்னின்று செயற்பட்ட தோழர் நவம் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அறைக்குள் புரட்சி செய்யும் சாய்மனைக் கதிரைப்படிப்பு அவருக்குரியதல்ல. கட்சியின் முடிவு என்பதில் முதன்மையாக விவாதிப்பார். விவாதத்தில் பெரியவர், சிறியவர் என்பதற்கு முதன்மை கொடுக்காமல் தனது கருத்தை எவ்வித தயக்கமுமின்றி முன்வைத்து வாதிப்பார். அவர் பற்றி தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. எந்த விவாதத்திலும் "தோழர் நவம் என்ன சொல்கின்றார் என்பதை அவதானிக்க வேண்டும் என்பார். ஏனெனில் வர்க்க முத்திரை அவருக்குரியது. தொழிலாளி வர்க்க உணர்வு அவருடையது. கட்சியின் முடிவு அவரது விருப்புக்கும் கருத்துக்கும் மாறுபாடாயிருப்பினும் அம்முடிவுக்கமைய முன்னின்று செயற்படுவதில் முதல் நிலைப் போராளியாக அவர் விளங்குவார். தேர்தல்களில் கட்சி பங்கு பற்றிய போதெல்லாம் தனது உடலாலும் உள்ளத்தாலும் ஊரெல்லாம் உற்சாகத்தோடு செயற்பட்டார் தோழர் நவம்.
எந்த நிகழ்வுகளிலும் மேடையில் ஏறுவதையோ, முன்வரிசையில் அமர்வதையோ பிரமுகர்களைச் சந்தித்துத் தன்னை அறிமுகப்படுத்துவதிலோ தன்னை முன்னிலைப்படுத்தாமல் எங்கோ ஒருவருடனோ பலருடனோ சமூகச் செயற்பாட்டைத் தூண்டும் முயற்சியிலும் விடயங்களை கற்றுக்கொள்வதிலும் புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் தனது நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது அவரது நடைமுறையாகும்.
ஏதேனும் நிகழ்விலோ, கருத்தரங்கிலோ, கருத்து மோதலிலோ ஏதேனும் கருத்துக்கள், தகவல்கள் தவறாக தெரியப்படுத்தப்படுமெனில் அதனைத் தெரிவிப்பவர் எந்த கலாநிதியோ பேராசிரியராகவோ இருந்தாலும் அவரது சமூக அங்கீகாரத்துக்கப்பால் தனது கருத்தை துணிந்து முன்வைப்பார். தயக்கம், கூச்சம் தோழர் நவத்துக்குத் தெரியாதது.
தோழர் நவம் என்ற மூன்றெழுத்துப் பெயர் என்றும் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளங்களில் புத்துணர்வை ஊட்டும் மந்திரமாகும்.
கொம்யூனிஸ்ட் வாழ்வென்பது கடினமானது. ஆனால் இனிமையானது. அத்தகைய இன்பம் எவராலும் ஊறுவிளைவிக்கப்படமுடியாதது. எத்தகைய அவதூறும், அவமானமும், துயரும், வேதனையும் கொம்யூனிஸ்டைத் தீண்டமுடியாது தோற்றுப்போய்விடுவனவாகும்.
அரசியல் என்பது அசிங்கமானது என்ற தற்கால மக்கள் அனுபவம் என்பதுமுதலாளித்துவ தேசியவாத குறுந்தேசியவாதிகளுக்குரிய நியதி. அரசியல் என்பது உண்மை, நன்மை, அழகு, நம்பிக்கை மிக்கது, மாற்றத்தை வேண்டுவது, மக்களை மதிப்பது, மக்களின் இன்பமே தம் இன்பமாகக் காணும் பொதுமைமிக்கது. தன்னலம் அற்றது. தோழர் நவம், சீனப் புரட்சியில் பண்பாட்டுப் புரட்சியில் ஆகர்சிக்கப்பட்டவர். புதிய ஜனநாயகப் புரட்சியில் நம்பிக்கை மீதுரப் பெற்றவர். தொழிலாளி வர்க்கத் தலைமையில் தன்னை முன்னிலைப்படுத்தியவர்.
ஆங்கிலத்தில் ‘ஈகோ’ என்றும் சமயத்தில்"ஆணவம்' என்றும் பேசப்படும் தன்முனைப்பற்றவராக, தோழமை உணர்வையே ‘தானாக அடையாளப்படுத்தியவர்.
தனிப்பட்ட வாழ்வில் தந்திரங்கள் அற்றவர். சகலரையும் தானாகவே மதித்துப் போற்றும் சால்பு மிக்கவர். போராட்டம் என்பதே அவருக்கு இன்பம் ஊட்டும் செயற்பாடாகும்.
கட்சிக்குள்ளும் கட்சிக்கப்பாலும் கொம்யூனிஸ்டுகளுடன் பழகுவதும் வாழ்வதும் போராடுவதும் ஐக்கியப்படுவதும் அவரது நடத்தைக் கோலமாகும்.
சர்வதேச கொம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோல்வியும், மூன்றாமுலக நாடுகளில் கொம்யூனிஸ கட்சிகளின் நெருக்கடியும், தேசியவாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஏற்படுத்திய தாக்கங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு முன்னேறுவதும் விடுதலையை நிதர்சனமாக்குவதும் வர்க்க ஒளியில் அணிவகுப்பதுமே நாம் அவரது நினைவுகளை சுமப்பதாக அமையும்.
‘ஓடும் செம்பொன்னும் ஒப்ப நோக்கும் தமிழர் சால்பு சமூக பக்தியுடைய தோழர் நவத்துக்கு உரியதென்பேன். அதன் விரிவு மட்டு:ே தமிழர் விடுதலையை மட்டுமன்றி சமூக விடுதலையையும் சாதிக்கும் என நாம் துணிந்து கூறலாம். நவம் ஓர் அரசியல் ஞானியென்பது என் மிகைக்கூற்றல்ல.
கவிஞர்கள் மறையலாம். அவர்கள் எழுதிய கவிதைகள் மறையுமா? அவை எம் நினைவில் என்றும் நிலைக்கும். அதேபோல் எம் தோழர் நவம் தன் ஐம்புலன்களால் உடலால் உணர்வால் வாழ்வால் எம் தாயகத்தில் எழுதிய "கொம்யூனிஸ்ட் எனும் கவிதை எம் உள்ளத்தில் என்றும் இன்பம் பயக்கும்.
கவிஞர் சுபத்திரனின் கவி அடிகளினை எடுத்துத் தொடுத்து இறுதி வணக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.
“குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும்” கோவே தோழர் நவமே எச்சாமம் வந்தாலும் எதிரிகளை வெல்வோம் செங்கொடி பறக்கும் அப்போது சந்திப்போம் இப்போது விடைதருகிறோம் தலைசாய்க்கிறோம்.-சோ. தேவராஜா

சிங்கப்பூர் 25-10-2004 மறைந்த தோழர் மணியம் குடும்பத்தின் சார்பாக. அன்புக்கும் மதிப்பிற்குமுரிய செந்தில் அவர்கட்கு. தோழர் சி நவரத்தினம் அவர்களது திடீர்மறைவுபற்றிய கடிதமும், இதய அஞ்சலிப் பிரசுரங்களும் தபாலில் வந்ததாக கீர்த்தி என்னிடம் தந்தார். தோழர் சி. நவரத்தினம் அவர்கள் திடீரென மறைந்துவிட்டார் என்ற செய்தி மனம் நிரம்பிய துக்கமாக இருக்கிறது. அவர் தனது பொது வாழ்விலும், தன் குடும்ப வாழ்விலும் சமநிலையாகக் கடமையாற்றி எவர் மனமும் புண்படாத வகையில் வாழ்ந்த ஒரு சிறந்த செயல் வீரர் ஆவார். பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் முகம் கொடுக்கும் பலவித இன்னல்களுக்கும் துன்ப துயரங்களுக்கும் அவர் வாழ்வு சவாலாகத் திகழ்ந்தது. நான் 1998 மார்ச் மாதத்தில் உங்கள் வீட்டிற்கும் - (குழந்தை மணியதாஸின் இழப்பின் நிமித்தம்) வந்து விட்டு தோழர் - நவரத்தினம் வீட்டிற்கும் சென்றிருந்தேன். அவர் தனது வேலை காரணமாக வெளியே போயிருந்தார், சகோதரி சந்திராவும் குழந்தைகளும் தான் அந்தக் குறுகிய இடத்தில் இருந்தார்கள். தோழரைக் கண்டு பேச முடியவில்லை. பொதுச் சேவை செய்யும் குடும்பத் தலைவனுக்கு மனைவியாக வாய்க்கும் பெண்களில் சகோதரி சந்திரா பற்பல இன்னல்களுக்கு ஆளானவர். எமது நாட்டைப் பொறுத்தவரை பொதுச் சேவையில் ஈடுபட்டுப் பணியாற்ற வேண்டுமென்ற துடிப்புள்ள பெண்வர்க்கத்திற்கு வீட்டுக்கடமைகள், பிள்ளைவளர்ப்பு, கணவரின் பணிவிடைகள் என்ற பலபொறுப்புகள் குறுக்கிட்டு அவர்களின் வேகத்தை - மன உந்துதல்களை முடக்கி வைத்து அவர்களை நாலு சுவருக்குள்ளே சுற்றிச் சுற்றி சுழன்று சுழன்று நாளாந்தம் 18 மணித்தியாலங்கள் அடக்கி வைத்து விடுகின்றன. ஏதோ என் மன உழைச்சலை எழுதி உங்களையும் கவலைப்பட வைக்க வேண்டாமென. தோழர் சி.நவரத்தினம் அவர்களுக்கு மறைந்த தோழர் மணியம் குடும்பத்தின் சார்பாக அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறான். இங்ங்ணம் தங்கள் அன்புள்ள அக்கா வ. சுப்பிரமணியம்.

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்