Thursday, July 15, 2010

மெல்பேர்ண் மணியின் சந்தக் கவிதைகட்குச் சிந்தையால் வாழ்த்துக்கள்...........

சந்தக் கவிதைகட்குச் சிந்தையால் வாழ்த்துக்கள்...........
-----------------------------------------------------------------------------------------



 மாண்போடு மாதர்களின் மனவழகைப் புரிந்துகொண்டு
 ஆண்களும் உதவவேண்டும் அரிவையர்கள் குடும்பத்தைத்
 தூண்போலத் தாங்கித் தூக்கி நிறுத்துதற்கு
 சாணேற முழம்சறுக்கும் சச்சரவுச் சூழ்நிலையில்
 பூணுகின்ற ஒழுக்கநெறி புனிதமான வில்லினிலே
 நாணேற்றிக் கூரான நல்லம்பு தொடுத்துவிட்டுத்
 பேணுகின்ற வரிசையிலே பெண்களுக்கே பங்கதிகம்
 தோணிபோற் கரைசேர்க்கும் துணிவும் வரவேண்டும்!


மண்ணில் உழலுகிற மாதருக்கு வழிகாட்ட
 திண்ணமான பற்பல திட்டங்கள் வகுக்கவேண்டும்
 எண்ணத்தில் தெளிவுகொண்ட எழுத்துருவம் பிறந்ததனால்
 உண்மையே நிலைக்குமென்ற உறுதியும் அறுதியாக
 வண்ணம்போல் இளஞ்சிறாரின் வதனத்தை மலர்விக்கும்
 பண்பாடு புகுத்திநின்றார் பரந்த இவ்வுலகினிலே
 கண்போன்ற கருத்துள்ள கவிதைகளைப் படைத்ததனால்
 “மெல்லெனப் பாயும்தண்ணீர் கல்லையும் உருகப்பாயும்!”


 மெல்பேர்ண் மணிக் கவிதை மேன்மையான கருவூலம்
 சொல்வதில் நிதானம், சொற்சுவை, பொருட்சுவையும்
 வல்லவர் தமக்குமல்ல; வரிவரியாய்ப் படிப்பவர்க்கும்
 வெல்லும்வகை, வாழ்க்கைநெறி, வேண்டாத இருளகற்றி
 துல்லியமாய்க் காட்டுகின்ற தூயபளிங் கினைப்போல்.....
 தொல்லைப்படும் மனதில் துயரமே இல்லாத
 வல்லமை நிறைந்த வைரமான நெறிகொண்ட
 நல்லவற்றைக் கூறிநிற்கும் நற்சந்தக் கவிதையிது!


   இன்னும் எழுதவேண்டும் ஈரமனம் தெரியவேண்டும்
   நன்நெறிகள் காட்டும் நயவுரைகள் சொல்லவேண்டும்
   தன்னாலியன்ற மட்டும் தரணிக்கு வழிகாட்டும்
   அன்னமிட்ட கைகளுக்கு அம்பல வாணர்துணை
  அகணிமுதல் பேராசான் தாசனையும் பெற்றெடுத்த
  சொன்னசொற் தவறாத சொற்கொடிநம் கவிதைமணி...........
  பண்பாடு காக்கப் பாரம்பரியம் பேணிப்பல
  வெண்பாக்கள் யாத்து வெளியீடு கண்டாரிவர்!

  நல்லைநகர் தந்த நாவலனார் தொண்டினைப்போல்
  சொல்லவல்ல அறிஞர்களின் சுவட்டினை ஒட்டியிவர்
  எல்லையற்ற கவித்திறத்தால் எடுத்தியம்பும் உண்மைகள்
  அல்லல்கள் யாவும் அகற்றிவிடும் பாங்கினாலே...........
  இல்லையிதற் கீடாக எந்தப் பெண்மணியும்
  சொல்லிவைக்க வில்லையென்று சுடரொளியாத் தெரிகிறதே!
  வல்லவராய்க் கவிதைகளை வடித்து அச்சேற்றி.....
  சல்லடைக் கண்கள்போல் சலித்தெடுத்த சந்தமிது!



  சூழ்ந்துவரும் சுற்றாடல் சுத்தமாய் இருப்பதுபோல்
  வாழ்க்கையில் செழுமையும் வற்றாத நிம்மதியும்
  ஆழ்ந்து நோக்கிடில் அவரவர் இல்லறத்தில்
  பாழ்போகாப் பயிரான பண்பாட்டு நெறிகளும்
  தாழ்வில்லா உயர்வொன்றைத் தந்திடும் என்பதனால்
  காழ்ப்புணர்ச்சி இல்லாத கருமமே கண்ணான
  வாழ்வினில் சமுதாய முன்னேற்ற முயற்சிகளை
  ஏழ்பிறப்பும் ஏற்கும் எதிர்கால வெளிச்சமிது!

  தங்கத் தாத்தா நவாலியூர்ச் சோமசுந் தரனாரின்
  மங்காத கவிதைகள் ஆடிப்பிறப்பு, ஆடுகதறியது...........
  எங்கள் பண்டிதமணி மட்டுவில் கணபதிப்பிள்ளை....
  அங்கம் வகித்து அருந்தமிழை வளர்த்தோர்பலர்.........
  இளமுருகன்,துரைசிங்கம்,இராசையா,வேலனுடன் வேந்தனாரும்
  களமிறங்கிக் கவிபடைத்த புதுவைக் கவிஞன்வரை-----வாழ்வை
  வளப்படுத்தும் தாய்க்குலத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை
  உளம்திறந்து வாழ்த்துவமே சந்தக்கவி விதைத்தவரை!

வள்ளியம்மை சுப்பிரமணியம் 
சத்தியமனை    சிங்கப்பூர் 15 -07 -2010

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF