தனது 75 வருடங்களை மிகச் சிறப்பாக
கடந்துள்ளார். இன்னும் பல் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.!
தமிழின் மேலும் ,இலக்கியத்தின் மேலும் தீராக் காதல் கொண்டு ' பண்டிதர் '
படிப்பை தொடர்ந்த காலத்தில் 1955 இல் கே .ஏ. சுப்பிரமணியத்துடன் அறிமுகம்
.
ஆச்சாரமான ,சடங்கு சம்பிரதாயங்களுடன் வளர்ந்து பின் - வடபுலத்தின் மார்க்கசிய இடதுசாரியுடன் - -சீர்திருத்தக் கல்யாணம் 1962.
தாலியாக 'அரிவாள் சம்மட்டி சுமந்து , உப்புச் சிரட்டையும் தாங்களே தேடி -அந்நிய ஊரில் தனிக்குடித்தனம் ..
காவல்
துறையினரின் எல்லை மீறிய பொல்லடிகள் , ரணமாகிய கணவர் -மூன்று குழந்தைகள்-
ஆசிரியத் தொழில் இவற்றையெல்லாம் சிரித்த முகத்துடன்
சகித்து ,வீட்டை வரும் தோழருக்கெல்லாம் உணவு பகிர்ந்து நீங்கள் வாழ்ந்த
வாழ்வு மகத்தானது.அடிக்கடி தலைமறைவு வாழ்வு ,அநீதிக்கெதிரான போராட்டம் என
கணவரின் வாழ்வு தொடர - கட்டாய மொழிச் சட்டத்தினால் வேலைக்கு இடைஞ்சல் வர
,முழு நேர ஊழியரான கணவர் -வருமானத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம்
-சிங்களம் படிக்க சென்று ,- அதன் தொடர்பால் ஈழப்போராட்ட முன்னோடிகளின்
உறவு வளர்ந்து ,மூத்த மகன் போராளியாக, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் தந்தை
,தனியுரிமை கேட்கும் மகன் , என தவித்துப் புலம்பி
- காவல்துறையின் அட்டகாசங்கள் குறைந்து - இராணுவத்தின் தொல்லை
ஆரம்பமாகியது. 72 மணிநேர ஊரடங்கு உத்தரவின்போது 1984 மகன் சிறைப்பட -
அடிபட்ட
உள் காயங்களினால் நோயாளியான கணவர். - இயக்கங்களிடமிருந்தும்
,இராணுவத்திடமிருந்தும் காப்பாற்ற வேண்டிய வயதில் மற்ற இரு குழந்தைகள் .,
வறுமை - நோய் இவற்றுடன் வாரம்தோறும் இராணுவ முகாம்களுக்கு சென்று மகனின்
நிலையறிய வேண்டிய நிர்பந்தம் பல பல போராட்டங்களே வாழ்வாகிப் போனது.4
வருடங்களின் பின்னர் மகன் 1988 சிறை மீண்டான் என சந்தோஷிக்க முடியாமல் ,
அச்சுறுத்தலினால் தலைமறைவு வாழ்வை மேற்கொண்ட கணவரின் மரணம் 1989.
அராயகதிற்கு கட்டுப்பட முடியாமல் 1991 இடப்பெயர்வு. பின் இளைய மகனுடன்
சிங்கப்பூர் பயணம் 1993. மீண்டும் எழுத்தத் தூண்டிய சிங்கப்பூர், கணணி
அறிவூட்டி
, 'கவிமாலை'யில் இணைத்தது .
அம்மா
நீ நடந்த காலடி தடங்களில்,
தேங்கிய வியர்வைஉடன்
சேர்ந்து - கண்ணீரும் சொல்லும்
உன் கடந்த காலம்.-
வேலையால் வீடு திரும்பி
உடுத்திய புடவையை
கதவில் போட்டால்,
மறுநாள் வேலை செல்லும் வரை
கால்களில் சக்கரம் தான்.
பச்சை தென்னம் மட்டையை
இரவு தணித்த நெருப்பில் காய வைத்து
பால் கறந்து , வீடு பெருக்கி
எங்களை குளிக்க வார்த்து
சாப்பாடு தந்து அப்பாக்கு மருந்தும் தந்து
வீடுக்கு வரும் தோழர்களை வரவேற்று
இன்முகம் காட்டும் அம்மா.
அனேகமாக முருங்ககை குழம்பும்
வாழைக்காய் பொரியலும் தான் சாப்பாடு
இரண்டுமே வீட்டில் இருக்கும்.
கிணறு கலக்கி இறைத்து சாம்பிராணி இடுவதில் இருந்து ,
மாவு இடித்து இட்டியப்பம் அவித்து
ஓலை பின்னி வேலி அடைப்பது வரை நீதானம்மா .
நீ தூங்கி நாம் பார்த்ததில்லை .
பலகாலம் நீ படித்தவ என்பதே எமக்கு தெரியவில்லை ,
எல்லாமே அப்பா தான் - என்று உணரவைத்தாய் .
அப்பாவை போலீஸ் தேடிய காலங்களில்
பல பல வீடுகள் மாறினோம் .
வாடகை வீடுக்கு நீ பட்ட கஷ்டம் அன்று
எமக்கு உணரும் வயசில்லை.
இளம் வயதில் தனி மாதாக -நீ
பட்ட கஷ்டம் புரியவில்லை.
துரத்தும் போலீஸ் உம் , நகையாடும் உறவுமாய்
நீ வாழ்ந்த வாழ்வு, காதலின் வெற்றி!
எமது நாட்டின் இரண்டு பெரும் சகாப்தங்களின்
வாழ்வு நாயகி நீ.
கொள்கைக்கு மாறுபட்ட குழந்தையும்
கோபமுறும் கணவனும் ,
பகல் பொழுதில் மார்க்சியம் பேசும் தோழர்கள்
இருட்டில் பிரிவினை கேட்கும் குழந்தைகள்
சமையலே உன் வாழ்வாகி போனது.
வறுமையின் உச்சத்திலும் நீ வாடி
நாம் பார்த்ததில்லை.
மக்கள் கழக சுந்தரம், சந்ததியார் தன்னுடனே
சிங்களமொழி வகுப்பில் சேர்ந்து படித்தாய்
பீட்டர் கெனமன், சண்முகதாசன் மாமா இலிருந்து
சிறிமாவோ பண்டாரநாயக்கா வரை பழகி இருந்தாய்
மக்களுக்காக அமரர் ராஜீவ் காந்தி இலிருந்து
மகிந்த ராசபக்ச வரை கடிதம் எழுதி இருந்தாய்
சாதி எதிர்ப்பு போராட்டத்தில் படுகாயம் பட்ட
அப்பாவை - மூன்று சிறு குழந்தைகளுடன்
குழந்தையாய் காப்பாற்றினாய் .
பின் மே தினம் ஒன்றின் (1969)பெரும் போரட்டத்தில்
சிதறிய அப்பாவின் அங்கங்களை ஒட்டவைத்தாய் .
அம்மா,
ஓய்வு பெறும் வயதில் சிறைச்சாலை தோறும் சென்று
அண்ணாவை பார்த்து வந்தாய்.
இடை மறிக்கும் போலிகள்,
உளவு சொல்லவா என்று கேலி பேசும் போது
அரசியல் தெரியாத அந்த கூட்டத்துக்கு
வரலாறு சொன்னது கேட்டு மலைத்து நின்றிருக்கிறேன்.
பிரிவினையை வெறுத்த அப்பா -இந்திய இராணுவம்
வெளிச்சத்திற்கு வந்த வேளை-இல்
கோபு மாமா உதவி கேட்டு வந்தார்
பத்திரிகை வெளி வரவும் உதவியதுடன்
குண்டுகளின் சிதறல்களின் நடுவே
உணவும் சமைத்து கொடுத்தாய் , பயந்தோடவில்லை.
புன்சிரிப்பும் பொறுமையும் உன் ஆயுதங்கள்
உன் அளவுக்கு எனக்கு ஆளுமை இல்லை ,
அறிவும் இல்லை ஆனால்
இன்றுவரை உனக்காக ஏதும் நான் செய்ததில்லை.
நேற்று கூட உன் ஓய்வூதிய பணம் எனக்கு வந்தது.
உனக்கான என் கண்ணீரை கூட -இதுவரை
நான் காட்டியதில்லை .
எழுபதுகள் கடந்தும் ஏற்றமாக இருக்கிறாய் அம்மா.
அன்பு அனைத்தையும் வென்றிடும் என்று சொல்லுவாய் .
முயற்சிக்கிறேன் முழுமையாய் வாழ.
உங்கள் வளர்சிக்கும , மகிழ்ச்சிக்கும் காரணமான
என் தம்பிக்கு நன்றிகள் .
இன்று அப்பாவும் அண்ணாவும் இல்லை- அனால்
மரணத்தின் பின்பும் அவர்களை வாழ வைக்கிறீர்கள்
நிறைய வாசியுங்கள், எழுதுங்கள்.
உங்கள் வாழ்வின் வெற்றி சத்தியமனையின் வெற்றி!
நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
அன்பு மகள்-திருமதி.சத்தியமலர் இரவீந்திரன் 4 October 2010