Wednesday, June 19, 2019

இயங்கவைத்த இனிய பூட்டக் குழந்தை சாரவ்...........

இயங்கவைத்த இனிய பூட்டக் குழந்தை சாரவ்..... ————————————————————

சின்னஞ் சிறு கண்மலர் , செம்பவள வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ..... வண்ணத் தமிழ்ச் சோலையே மாணிக்க. மாலையே ஆரிரோ ஆராரோ.....ஆரிரோ....ஆராரோ...
என்னை உன்னிடம் இழுத்த வல்லமையே ..... உன்னை என்மடியில் இருத்திய உறவுருவே...... அந்த நெருக்கத்தை என்னவென்று சொல்ல ? இந்த வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் ?
தமிழ் நாட்டில் நான் இருந்த வேளையிலே..... அமிழ்தான அமெரிக்க நாட்டின் “ ரெக்சாஸ் “ மாநிலத்தில் நீ உதித்த செய்தி ஒன்று...... ஆகாய வழியாக ஐபாட் டில் வந்ததையா.......
பூட்டி’ ஆகி விட்டீர்கள்.....என்றவுடன் ....உற்சாகம் ஆட்கொள்ள ....சின்னப் பேத்தியின் திருமணத்துக்கு அவசரமாகப் புறப்பட்டு ஆறுபடை வீட்டிற்கு அனைவரும் சென்று கலந்து கொண்டோம்.
உன் பாட்டி சொன்ன அந்த சுபசெய்தியை...... என்வாயால் கேட்ட அனைவரும் வாழ்த்தினர் ... இந்தச் செல்வத்தை கட்டித் தழுவும் வாய்ப்பு எந்தனுக்குக் கிடைக்குமா’ என்றொரு ஏக்கம்......! ஏனென்றால் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலே...... நான் எங்கே......நீ எங்கே......நினைத்தால் நடக்குமா? நடந்தேறியது......ஆச்சரியமான ....செயலான சந்திப்பு. டிசம்பர் கிறிஸ்மஸ் தினத்தன்று நீ என்மடியில் வீற்றிருந்தாய்.....! உன்னைப்போல் உருவம் படைத்து என்வயிற்றில் பிறந்த என் சின்ன மகன் , உன் செல்லத்தாத்தா அத்தனை ஒழுங்கையும் அவரே செய்தாரே......யாருக்கு கிடைக்கும் இந்தப் பாக்கியம்? “ சுவர் இருக்கும் போதே சித்திரம் வரைய வேண்டும் “ என்றார்.


இயங்க வைத்த என் உறவே........ ——————————————— அமெரிக்காவுக்கு அழைத்தது மாத்திரமல்ல; என்கையால் அமுதூட்டும் வாய்ப்பு.....அதாவது அன்னப்பால் ஊட்டவைத்தாய். ஈசான மூலையில் அமைந்த உன்அறையில் வளர்பிறையில் பாசமுடன் தணிகையில் கிடைத்த வேலுடன் பலமானேன்.
மீனாட்சிஅம்பாளின் ஆதிமூலம் வரைசென்று வணங்கும் தானாக க் கிடைத்த தரிசனம் நினைக்க வியப்பய்யா..... ஆலய அறங்காவலர் வெளியே வந்து எம்மை இலகுவாக மூலவர் முதலாய் அத்தனை வாயில்கள் அவரே முன்நின்றார்.
கைக்குழந்தை , பெற்றார்,வீல்செயர்” பாட்டி என்று முன்னுரிமை அக்கறையாய் அவர்கள் செய்தது ....பூட்டன் , பூட்டியுடன் வணங்க வந்தனர் ‘ என்ற வாத்சல்யம் மேலிட்ட பாதுகாப்பு சுணக்கமின்றி அர்ச்சனை, பிரசாதம் அன்பளிப்பு தட்டுஒன்றும்.
உன்னால் எனக்குக் கிடைத்த அரும் பெரும் காட்சிகள் ஏராளம்..... என்னால் கனவிலும் நினைக்க முடியாத “ நாசாவின் “ விந்தைகள் கண்ணால் பார்க்கக் கிடைத்ததும், சந்திரக் கல்லைத் தொடவும்..... விண்வெளி விந்தைகளை வியக்க வைத்த விழுமியம் நீ....!
மகான்கள் பலர் மறைந்தும் மறையாமல் மாளிகையில் வீற்றிருக்கும் மகத்தான காட்சிகளை சுற்றிவந்து பார்க்க “ வீல் செயரை “ உந்தை பொறுப்புணர்வுடன் காட்டி வைத்தார். பழம் பெரும் “ சேர்ச்” அலும்எனி திறமான ‘ மெக்சிக்கன் ‘ உணவகம் , ‘ப ப்படா ‘ நியூஓலியன் உணவகம்.
சிறுவர் விளையாட்டு திடலில் நீ ....ஊஞ்சலில் அம்மா மடியில்..... பெறுமதியான கடற்கரை மணலில் உன் பாதங்கள் பதியவும்..... அலைஒன்று ஓடி வந்து ,கால் நனைத்து போனதுவும்...... நிலையாக என்மனதில் நீங்காத நினைவய்யா.....! உனக்குத் தாலாட்டுப் பாடல்கள் பாடவும், விரல் தொடவும் எனக்கு நீதந்த சந்தர்ப்பம் ஏராளம். ஆனாலும், உன்னைத் தூக்கவும் , தூங்க வைக்கவும் முடியாத துயரம் எனக்குண்டு.... “வாக்கிங் பிறாம் “ கண்டால் பின்னால் தவழ்ந்து வந்திடுவாய்.


என்னை இயங்க வைத்த இனிய பூட்டன். ————————————————— எத்தனை பாடல்களை நான் எழுதி வைத்தாலும் அத்தனை வரிகளும் உன்அன்னை வயிற்றில் - நீ எட்டி உதைத்த முட்டி மோதிய அசைவுகளின் முன் எட்டிப் பார்க்கவோ, ஏணி வைக்கவோ முடியாதையா....! தான் ஒரு தந்தை ஆகிவிட்டேன் என்ற பதவியைத் தந்து நான் இப்போ ‘அப்பா’ என தலை நிமிரும் ஆண்வர்க்கம் தாய்மைக்கு முன்னுரிமை கொடுப்பது குழந்தையாலே ...... சேயைக் காணும்போது செருக்கும் பெருகிடுமாம்....!
உன்னை பக்கத்து ஆசனத்தில் படுக்க வைத்தபின்னர் என்னைநீ பார்த்து உன் வலக்கை நீட்டிடுவாய் அதைப்பற்றிப் பிடித்து பக்குவமாய் வருடிவிட அசையாமல் நீ உறங்கும் அற்புதத்தை என்ன சொல்வேன்? வாகனத்துள் இருக்கும் சிங்காசனம் உனக்குரிய பொக்கிஷமாம் வேகமாய் போகையிலே விரைந்து வரும் தெரு மரங்கள் உன் பரிவாரங்கள் என்ற பெருமையிலே நீ மிடுக்காய் கண்ணயர்வாய்..... சரியாக கண்விழித்து அம்மாவைத் தேடிடுவாய்...... அம்மாவின் குரல் கேட்டவுடன் அருகில் வருமாறு கைஅசைப்பாய் சும்மாவா சொன்னார்கள் ? “ தாய் பிள்ளை உறவும் நெல்லுக்குள் பதரும் “ என்று அத்தனை ஐக்கியம், புரிந்துணர்வு, செயற்பாடு எல்லாமே..... மொத்தமாக ஐந்து மாதங்கள் உன்னை தொடக் கிடைத்த தய்யா....!
நடக்கவே சிரம ப்படும் என்னிடம் உன்னை இடைக்கிடையே உடனிருக்கத் தருவார்கள் அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். நீ இருக்கும் இடம்தேடி என்னால் வருவதற்கு முடியாதென என் கையில் தருவார்கள், அந்த நிமிடங்கள் அற்புதந்தான். நீ தும்மும் போது வாழ்த்தாக “ நூறாண்டு “ சொல்லுகிற பேறு ஈ ‘ ஒன்று வெளியில் இருந்து உள்ளே வரும் போது , அது உன்னைத் அணுகவிடாமல் துரத்துவதில் விழிப்பாக இருக்கப் என்னை நுணுக்கமாய் பார்க்கப் பழக்கியவன் நீதானே. !


என்னை இயங்க வைத்த பூட்டனே. ——————————————- உன்னைப்போல் குழந்தைகள் ஏராளம் உலகினிலே.... என்னைப்போல் இயங்க முடியாத முதுமையிலும் நீ ஒருவன் தானய்யா நான் தொட்டு வருடவும் தொடைமேல் சாய்ந்து உட்காரவும் உரிமையும் உறவும் கொண்டவனே..... பாட்டெழுத பாட்டெழுத பக்கம் பல போகுதய்யா..... மீட்டிவிட நானென்ன வீணை வாசிக்கும் வித்தகியா...? முதலாம் பிறந்த நாள் சீக்கிரமாய் வருவதனால்.... பதவியில் பூட்டனாகி பாட்டெழுத வைத்து விட்டாய்...... பிறந்தநாள் விழாவுக்கு தந்தைவழி உறவுகளும்.... மறவாது தாய்வழி உறவுகளும் வாழ்த்துரைகள் வழங்கையிலே.... சிங்கையில் இருந்து கொண்டு சீராட்ட ஆவல் கொண்டு பொங்கும் ஆவலுடன் பூட்டி இவள் பாட்டில் வடிக்கிறாளே....! உன்னுடன் தங்கிநானிருந்த ஒவ்வொரு நாளும் சரித்திரம் தான். அன்னையின் இடுப்பு நொந்ததனால் செல்லத் தாத்தா அனுப்பிவைத்தார் சீரான “ சிசு தாங்கி “ பூட்டியின் நடக்கும் பிறாம் உனக்குப் பிடிக்குமென்று.... பேரனுக்கு வெகுமதியாய் விண்ணுக்கு விமானப் பரிசுகளும்.....
அப்பாவின் நண்பர்கள், சந்தோஷ், ய்யூன் குடும்பங்களும், ( santhoosh, June , family) தாத்தா வழி குலேந்திமாமா, பாட்டி வழி கிருபாமாமா, ஹரி என்ற எத்தனையோ அன்புள்ளோர் ஓடோடிவந்தனரே..... அத்தனையும் நீ பிறந்த பின்னரே உற்சாகச் சந்திப்புக்கள்.....
கைக்குழந்தை ஒன்று இங்கே அன்புக்காக ஏங்கும் நேரத்திலே ஓடிவந்த 
மெய்யன்பு கொண்ட நல்லமாமா 
விமானம் ஏறி வந்தாரென்றால் அதற்கு விலையுண்டோ.....?
கையிலே உன்னை ஏந்தவும், செய்யும் செயல்யாவும் தாத்தா, பாட்டி, அப்பா,அம்மா வுக்கு
சைகையால் கூறி, சத்தம் வராமல் மெத்தனமாய் செய்தாரே உனக்காகத் தானே.....!

மாமா,மாமி, உறவுடன், தாத்தா,பாட்டி பறந்து உங்கள்...அருகே ஆகா...! எங்கள்
‘சாரவ் பெயருடன் சந்ததி சிறக்க வந்த செல்வமே’ என்று வாரி எடுத்து அணைத்து
பாராயோ...’எங்கள் பாசமான குழந்தை ‘ என்று ஜனாஅன்ரி, கதிர் அண்ணா, தாரா அக்கா
யாருக்காக வந்தார்கள் ? பச்சைக் குழந்தையை பரிவுடன் தொடுகின்ற படங்கள் பாசமலர்!


உற்றார், உறவினர் , நட்பு வட்டம் வாழ்த்துகையில்.... பற்றோடு வந்திருக்கும் தாய்மாமன் ,மாமி யுடன் பெற்றாருடன், தாத்தா பாட்டி பேணி உன்னை வாழ்த்துகையில்.... சுற்றத்துப் பூட்டியின் சுயமான வாழ்த்து இதுவாம்.....! நீடூழி வாழ்க......சுப ம் ! சுபம் ! சுபம் !
எழுதியவர்:.............வள்ளியம்மை சுப்பிரமணியம். .சிங்கப்பூர் சிங்கப்பூர்

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF