Monday, October 7, 2019

பசுமையான நினைவுகளில் .......பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்











பசுமையான நினைவுகளில் 

பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்

“சத்தியமனை” சுழிபுரம் தெற்கு. சுழிபுரம். 

சுப்பிரமணியம் வள்ளியம்மை 


சமர்ப்பணம் 

என் பெற்றோர்கள் : 

பொன்னர் ஆசைப்பிள்ளை--செல்லமுத்து 



மெய்கண்டான் கீதம் 

ஆக்கம்:- பண்டிதர் அ. ஆறுமுகம். 


வாழ்கமெய் கண்டான் மாவித்தியாலய 

மாதாவாழுகவே. 

வயங்குபண் ணாகம் தொல்புரம் சுழிபுரம் 

வட்டுக் கோட்டையிவ் வூர்களின் நடுவாய்த் 

தயங்கும் வழக்கம் பரைத்தலமமர்ந்து 

தமிழும் சைவமும் தாங்கிடும் அன்னைவாழ்க 


செந்தமிழ் கணிதம் சித்திரம் சூழல் 

சிவநெறிஆங்கிலம் திகழும்விஞ் ஞானம் 

தந்திவைகற்றுணர்ந் தொழுகுகஎன்னும் 

தாரகமந்திரச் சீருறும் அன்னைவாழ்க 


முன்னாள் முதல்வர் கந்தையபிள்ளை 

முதலாம் பெரியோர் முயன்றுருவாக்கிப் 

பன்னாளாகப் பாலித்ததெய்வப் 

பாவையிப் பதியின் பல்சுடர் விளக்குவாழ்க 


வாடாநறுமலர் வளரும் மதியம் 

வற்றாத் தீர்த்தம் வண்சிந் தாமணி 

தேடாத் திரவியம் தெவிட்டாஅமிர்தம் 

திகழும் கண்கண்டசீரியதெய்வம் - வாழ்க 


என்னுரை 


பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை கற்பித்த கற்பிக்கின்ற கற்பிக்க போகும் ஆசிரிய மணிகளுக்கு என் உரை:- 


ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பற்பல ஏற்ற இறக்கங்கள் வந்து போய்க் கொண்டேயிருக்கும். எத்தகைய துன்ப துயரங்கள், இழப்புகள் வந்தபோதிலும் அவற்றை எல்லாம் கடந்து மீண்டும் உயிர் உடம்பில் இருக்கும் வரை தளர்ந்த மனதை திரும்பவும் நிறுத்தி வாழப் பழக வேண்டுமென்பதை மெய்கண்டான் பாடசாலை தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. முதலில் “சிங்கள மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவில்லை” என்பதனைக் காரணம் காட்டி வேலை நிற்பாட்டுதல் (1 மாதம் தான்) என்ற செயல். பத்து வருடகாலமாக வேலை பார்த்து சம்பளம் எடுத்து “வீட்டுவாடகை, கடைச்செலவு, குழந்தைகள் பராமரிப்பு” என்று வாழ்ந்த எனக்கு, 1969ம் ஆண்டு அரசாங்கச் சுற்று நிருபத்தின்படி வேலையிலிருந்து நீக்குதல் என்ற மனதை வருத்தும் செயலுக்கு முகங் கொடுத்தேன். அந்த மாதத்திலேயே “சிங்கள மொழிப்பரீட்சையில் சித்திபெற்றேன்” என்ற பெறுபேற்றினால் திரும்பவும் வேலை கிடைத்தது. அந்த ஒரு மாதகாலமும் தினமும் இரவில் நித்திரையின்றி அழுதிருக்கின்றேன். 


என்னைப் போல பரீட்சைக்குத் தோற்ற 14 ஆசிரியர்களை வேலை நிறுத்தம் செய்து பத்தாண்டுகள் அரசாங்கம் அவர்களை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியதை இந்த இடத்தில் குறிப்பிடாமல் விட்டுவிட்டால் அவர்கள் அனுபவித்தது துயரத்தை யார் எழுதுவார்கள்? 


அதே 1969ம் ஆண்டில் “மேதினம்” என்ற உலகத் தொழிலாளர்களின் தினமாகிய மே மாதம் 1ம் திகதி அரசாங்க வங்கி விடுமுறைநாளாகும். எனது கணவனும் அவரது தோழர்களும் அந்நாளில் தொழிலாளர் தினத்தைப் பெரிய கூட்டமாக நடத்துவதற்காக பொதுவுடமைக் கட்சியின் செங்கொடிகளைக் கையிலேந்தி ஊர்வலம் புறப்பட்டு சென்றார்கள். அவர்களை அரசாங்க காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  எனது கணவனையும் மற்ற தோழர்கள் சிலரையும் , தங்கள் கைத்தடிகளினால் அடித்து நொருக்கி, யாழ். பெரியாஸ்பத்திரியில் சேர்த்தனர். 


அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினரால் உடம்பு முழுவதும் எலும்புகள் நொறுக்கப்பட்ட நிலையில், எனது கணவருக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் மாதக்கணக்காக எலும்பு முறிவுக்கு சத்திரசிகிச்சையும் வைத்தியமும் செய்தார்கள். அந்த நாளிலிருந்து இறக்கும் வரை (1969 -1989) எனது கணவன் வலது கையை மேலே தூக்க முடியாத ஒரு நோயளியாகவே காலத்தைக் கடந்த மன உறுதி நிறைந்தவராக வாழ்ந்து தனது 58 வயதில் மரணத்தை தழுவினார். இந்த இருபது வருடங்களும் எனக்குத் தாங்க முடியாத மனக்கவலைகள் சூழ்ந்தும் மெய்கண்டான் கற்றுத்தந்த “இடுக்கண் வருங்ககால் நகுக” என்ற பொய்யா மொழிக்கு அமைவாக சிரித்தமுகத்துடன் தான் எனது சீவியகாலத்தை ஓட்டினேன். 


அதுபோல 1983ம் ஆண்டு, நம்நாட்டில் யுத்த மேகங்கள் சூழ்ந்தவேளையில் “இளைஞர்கள் கைது” என்ற தேடுதலில் 1984ல் எனது மூத்தமகனும் கைதுசெய்யப்பட்டு 34 மாதங்களின் பின்னர் இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் கீழ் 1060 இளைஞர்களுடன் விடுதலை செய்யப்பட்டார். 


அந்த 34 மாதங்களும் எமது குடும்பம் தாங்க முடியாத பிரிவுத்துயரிலும் சிறைச்சாலைச் சம்பவ மனநெருடல்களுடனும் நாட்களை ஓட்டினோம். அந்தகாலத்தில் கூட மெய்கண்டான் தாயின் மடியில் கிடந்து கற்றுக் கொண்ட“மனதைத் தளரவிடாதே” என்ற உணர்வினால் மக்கள் மத்தியில் நடமாட முடிந்தது. 


அமரராகிவிட்ட பண்டிதர் ஜயா எனக்கு 6ம் வகுப்பிலும் (1949) 8ம் வகுப்பிலும் (1951) வகுப்பாசிரியராகக் கிடைக்கின்ற பேற்றினை அடைந்தேன். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள், சிறைப்பட்ட சம்பவங்களை எங்களுக்கு கதையாகக் கூறுவார். சில இளைஞார்கள் சிறைப்பட அவர்களது தாய்மார் பிரிவுத் துயரத்தினால் பட்டினி கிடந்து தண்ணீரே அருந்தாமல் உயிர் துறந்த சம்பவங்களை எமக்குக் கூறியிருக்கிறார். இப்படியான துன்பங்களுக்கு முகங்கொடுத்த பின்பும் உறுதிகுலையாது வாழ்ந்து காட்டிய தந்தை, தாய்மாரின் சீவிய சரித்திரத்தை எமக்கு எடுத்துக் கூறி “அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை” என்று பாரதியாரின் பாடலைச் சொல்லி எங்களை மனனஞ்செய்ய வைத்து மாணவ சங்கக் கூட்டங்ககளிலே பாட வைத்தும் இருக்கிறார். 


பயந்தாங் கொள்ளியாக வளர்ந்த நான் பற்பல துயரங்களை சந்தித்த காலத்தில் என்னை, நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாழப் பழக்கியது மெய்கண்டான் தான். 


இலங்கை நாட்டினிலே யாழ்ப்பாணம் வடமகாண தலைநகராகத் திகழ்கிறது. மற்றைய இனத்தவர், சமயத்தவர் வாழ்கின்ற அந்த வடபுலத்திலே சைவசமயமும், தமிழ் மொழியும் தான் அதிக அளவில் வியாபித்து இருந்தது. 


சமயாசாரியார்களை விட சந்தானா ஆசிரியர்கள்  நால்வருள் மெய்கண்டதேவரும் ஓருவர் ஆவார். அவரின் பெயரைத் தாங்கி, யாழ்ப்பாணத்தில் ‘காரைநகர்’ என்ற இடத்திலும், ‘பண்ணாகம்’  என்ற இடத்திலும் ‘இளவாலை’ என்ற இடத்திலும் “மெய்கண்டான்” பள்ளிகள் தொடக்கப்பட்டன. எல்லாப் பள்ளிகளுக்கும் முதன்மையானதும் பிரதான வீதிக்கு அண்மையானதாகவும் பெரிய ஆலயத்திற்கு சமீபமாகவும் அமைந்தது பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை ஆகும். அது வலிகாமம் மேற்குப் பகுதியில், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில், யாழ் - காரைநகர்  பிரதான போக்குவரத்திற்கு வசதியான பேருந்து (782) வீதியின் ஒரமாக அமைந்திருக்கிறது.  


நாங்கள் படித்தகாலத்தில் பண்ணாகம் மெய்கண்டான் உயர்தர பாடசாலை என்ற பெரிய பெயர் பலகையை தாங்கியபடி மிளிர்ந்தது. 


இந்த பாடசாலையில் படித்து வெளியேறியவர்கள் அநேகர் உயர்தர வகுப்புகளுடன் இயங்கும் கல்லூரிகளில் சேர்ந்து உதாரணமாக- விக்ரோறியா கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி, யாழ் இந்து கல்லூரி, தெல்லிப்பளை  மாகஜானக் கல்லூரியில் படித்தேறி பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாக வெளிவந்து நாட்டிற்கு சேவை செய்து வருகிறார்கள். 


எங்கே சென்று உயர்தர கல்வியைக் கற்றுக் கொண்டாலும் பலமான ஸ்திரமான அத்திவாரம் இடப்பட்டது பண்ணாகம் மெய்கண்டானில் தான் என்ற நன்றி உணர்வும் விசுவாசமும் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். இது கற்பனையுமல்ல, மிகைப்படுத்தி கூறியதுமல்ல…..  உண்மை. 


1943ல் 5 வயது சிறுமியாக இந்தப்பள்ளியில் சேர்த்தார்கள. 1953ல் SSC பரீட்சை எழுதிய கையோடு, தொழில் கல்வி கற்பதற்காக நல்லூர் அரசினர் நெசவாசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு சென்றது வரை 11 முழு ஆண்டுகள் இந்த பண்ணாகம் மெய்கண்டான் உயர்தர பாடசாலை தான் எனது தாய் வீடாக இருந்தது. 


சமயக் கல்வி தொடக்கம் சமையற் கல்வி , நெசவு வேலை, பன்ன வேலை, தையல் வேலை என சகல கலைகளும் இங்கு தான் கற்றுக் கொடுக்கப்பட்டது. 


எனது தந்தை தான் பள்ளிக்கூட கதிரை, மேசை, வாங்கு முதலிய தளபாடங்களைச் செய்து கொடுக்கும் கைங்கரியத்தைச் செய்து வந்தார். ஆரம்ப காலத்தில் யார் செய்தார் என்ற விபரம் எனக்குத் தெரியாது. எனக்கு அறிவு தெரிந்த காலத்திலிருந்து உயர்தர வகுப்பு மேசை கதிரைகளுடன் பாலர் பிரிவு குட்டி மேசை கதிரைகளும் அவரால் செய்யப்பட்டது. 


பாடசாலையின் உள்ளுர் மனேச்சர்மார்கள் ( Local Managers)  பலர் செய்யப்படும் தளபாடங்கள் தரமானவைகளா? என்று பார்வையிட எனது வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் பண்ணாகம் மண்ணிலே பிறந்த மதிப்புக்குரிய பல பெரியார்கள், அதில் அநேகர் கையில் ஊன்றுகோலுடன் (அதுசெங்கோல் போன்று மலேசியவில் செய்யப்பட்டது) எனது வீட்டிற்கு வருவார்கள். 


அவர்களுள் முதன்மையானவர்கள் ஆசிரியர் ஞானசந்திரமூரத்தியின் தந்தை, திரு.வெற்றி சின்னையா அவர்கள், திரு.நடராஜ அவர்கள் (PT தியாகராஜா ஆசிரியரின் தந்தை) திரு.மாசிலாமணி அவர்கள், திரு.குமரையா அவர்கள், திரு.பரமகுரு அவர்கள் (பண்டிதர் இராசஜகுருவின் தந்தையார்).



இப்படி பல பெரியார்கள் வீட்டிற்கு வரும்  போது நான் ஓடி ஒளித்து விடுவேன் (வீட்டு உடுப்பு அழுக்குச் சட்டையாக தானே இருக்கும்) மலேசிய நாட்டில் வாழ்ந்து ஒய்வு பெற்று நாடு திரும்பியவர்களின் மனதிலே சிந்தனையிலேயே “தீண்டாமை” என்ற சொல்லுக்கோ செயலுக்கோ இடமில்லை. 


அந்தகாலத்தில் 1947 வசாவிளான் ஒரு பள்ளிக்கூடத்திலும் காரைநகர் ஒரு பள்ளிக்கூடத்திலும் ஓதுக்கப்பட்ட இனத்தில் பிறந்த பையன்களை வெறுந்தரையில் உட்கார வைத்து பாடம் நடத்தியதாக பத்திரிகையில் செய்தி வந்தது. எமது 4ம் வகுப்பு வாத்தியார் இலகு ஆறுமுகம் அவர்கள் எமக்கு வாசித்துக் காட்டினார். தாங்கள் “தீண்டாமை” அற்றவர்களாக, மகாத்மா காந்தியின் வழிகாட்டலின் கீழ் “தக்கிளியில்” நூல் நூற்று கதர் ஆடை அணியும் விரதத்தை மேற்கொண்டவர்களாக வாழ்ந்து காட்டினார்கள். 


எங்கள் பண்டிதர் வாத்தியார் எந்த நேரமும் கதர் ஆடை தான் அணிவர். மெய்கண்டான் பள்ளியில் எனக்கு தெரிந்த வகையில் வடலியடைப்பிலிருந்து இரண்டு சகோதரர்கள், கேணிக்கடவை என்ற குறிச்சியிலிருந்து இரண்டு சகோதரர்கள், பெரியபுலோ என்ற இடத்திலிருந்து நான்கு  மாணவர்கள், காரைநகரிலிருந்து ஒரு பெண் மாணவி வந்து படித்தார்கள். எல்லோரையும் சமமாக மதித்து நடத்தியது மெய்கண்டான். 


பண்டிதர் அவர்கள் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று.... அந்த மாணவர்கள் சரிசமமான ஆசனங்களில் இருக்கிறார்களா?..... மற்ற மாணவர்களினால் ..... மனச்சோர்வை  எதிர் கொள்ளுகிறார்களா? என்று அவதானிப்பார். அருச்சுனனும், தமையனும்........ சிவலோகநாதனும், அக்காவும், ...... செல்லையாவும், கந்தசாமியும், கிருஷ்ணனும், சிவமணியும், .... நவமணி அக்கா... எனப்பலர் படித்தனர். எமது மெய்கண்டான் நிர்வாகத் திறமை பற்றி எழுதி முடியாது. 


எங்கள் மெய்கண்டானில் படித்தவர்கள் சகலரும் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்களாகவே பயிற்றப்பட்டார்கள்.. சமய அறிவு, சீவியத்திற்கு ஒரு தொழில், சிக்கனம், சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழுதல்,...... எந்தெந்த ஊர்களுக்கு மாற்றம் கிடைத்தாலும் அந்த ஊர் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று அவர்களிடமுள்ள திறமைகளை நாமும் அறிந்து கொண்டு நன்றியறிதல் உள்ளவர்களாக வாழ்ந்து . விரோதத் தன்மையோ குரோதச் செயலோ இன்றி எந்நாளும் சந்திக்கும் போது கண்ணீர் பெருக அரவணைக்கின்ற நேசக்குணத்தைக் கூட மெய்கண்டான் தான் கற்று தந்தது. 


அத்துடன் எம்மிடமுள்ள மொழித்திறமையையோ தொழில் திறமையையோ மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போதும் செயல்முறையையாக காட்டிக் கொடுக்கும் போதும் காய்தல், உவத்தல் இன்றி பாரபட்சம் காட்டாது எமது ஆசிரியர்கள் எம்மை வழி நடத்திய காலங்களில் அவர்கள் கையாண்ட “செய்யும் தொழிலே தெய்வம், அந்த திறமை தான் எனது செல்வம். கையுங் காலும் தான் உதவி, கொண்ட கடமைதான் எமக்கு பதவி என்ற உண்மை வழியிலே இன்று வரை (80 வயது கடந்த நிலையில்) வாழ வேண்டும் என்ற உந்துசக்தி ஒன்று என்னை வழிநடத்துகிறது என்றால் மெய்கண்டான் கற்றுத்தந்த பாடமே. 


பள்ளிமேல் கொண்ட நன்றியுணர்வினால் எனது சிற்றறிவுக்கு அமைவாக இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னைவிட அறிவிலும் ஆளுமையிலும் செயற்திறனிலும் மிக்கவர்கள் எமது பள்ளியில் படித்து முதியவராக நம் நாட்டிலும் தமது பிள்ளைகளுடன் புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழ்கிறார்கள். அவர்கள் கூட இதனையொரு முன்னோடி எழுத்துக்களாக எடுத்து நிறைய எழுதக்கூடும். நன்றி! 


சுப்பிரமணியம் வள்ளியம்மை 

“சத்தியமனை” சுழிபுரம் தெற்கு. சுழிபுரம். இலங்கை. 

+94 750555333  

sathiamanai@gmail.com  valli1938@gmail.com

Facebook: Valliammai வள்ளியம்மை சுப்பிரமணியம் Subramaniam

Published on 7 October 2019.




பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் வரலாறு


பண்ணாகம் கிராமசேவையாளர் பிரிவு (J/175) வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே, வடலியடைப்பு, பணிப்புலம், பல்லசுட்டி, கிழக்கே, சித்தங்கேணி, தெற்கே, யாழ்ப்பாணம் - காரைநகர் பெருந்தெரு, தொல்புரம், மேற்கே சுழிபுரம் கிழக்கு ஆகியன உள்ளன. 


பண்ணாகம் என்னும் அழகிய கிராமத்தில் தான் மெய்கண்டான் மகாவித்தியாலயம் பாடசாலை அமைந்துள்ளது. திரு. முருகேசு கந்தையா என்பவரால் 1925 ஆம் ஆண்டு புரட்டாதி 4 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் பாடசாலையின் முன்னே வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. 


அமரர் முருகேசு கந்தையா என்பவரால் அவரது சொந்த நிலத்தில் கிடுகினால் வேயப்பட்ட மண் கட்டிடம் ஒன்றில் மெய்கண்டான் பாடசாலை என்ற பெயருடன் 04.09.1925 அன்று, அதிபர், 3 ஆசிரியர்கள், 65 மாணவர்களை உள்ளடக்கி மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் 4ம், 5ம், 6ம் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன. மு.கந்தையா அவர்கள் மெய்கண்டான் நிர்வாகத்தை இ.மாதவரிடம் ஒப்படைத்து விட்டு மலேசியா சென்று அங்கு வாழும் ஊர்மக்களின் உதவியுடன் மலாயா சங்கம் அமைத்து முதல் 8 மாதங்களிற்குரிய ஆசிரியர் சம்பளத்தை வழங்கினார். 


1926இல் அரச உதவியை பெறுவற்காக சைவ வித்தியாவிருத்திச் சங்கத்திடம் இப்பாடசாலை ஒப்படைக்கப்பட்டது. 1930 இல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதே காலத்தில் 8ஆம் வகுப்புவரை (J.S.C) வகுப்புக்கள் நடாத்த அரசு அனுமதியளித்தது. அடுத்த ஆண்டுகளில் க.பொ.த. சாதாரண  வகுப்பிற்கான (SSC ஆண்டு 10) அனுமதி கிடைக்கப்பெற்று 1937இல் பலர் சித்தி அடைந்தனர். 


1945ஆம் ஆண்டு தொடக்கம் 25 ஆண்டுகளாக அதிபராக சேவையாற்றிய செ.ஸ்ரீநிவாசன் அவர்களின் காலத்தில் பாடசாலை பல புதிய கட்டிடங்களின் வளர்ச்சி, பரீட்சைப் பெறுபேறுகளில் வளர்ச்சி எனப் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்தது. 1950ஆம் ஆண்டு வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1957இல் 680 மாணவர்கள், 23 ஆசிரியர்களைக் கொண்டதாக இப்பாடசாலை வளர்ச்சிபெற்றது. 


1962 இல் மெய்கண்டான் மகாவித்தியாலயம் என்ற பெயருடன் புதிய அந்தஸ்தினைப் பெற்றது. அதிபர் ஆ.இராசநாயகம் காலத்தில் பாடசாலையின் மணிவிழா கொண்டாடப்பட்டது. 


2001இல் அதிபராக கடமையாற்றிய கா.நடராசா அவர்களின் பெரு முயற்சியால் க.பொ.த உயர்தர ( A/L ஆண்டு 12) வகுப்புக்களில் கலை, வர்த்தக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் இப் பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்ந்தது. 

பாடசாலைகளிடையே நடாத்தப்படும் போட்டிகளில் பல வெற்றிகளை தனக்கே உரியதாக்கிக் கொண்டது. 


அரச உதவிகள், பழையமாணவர் உதவிகள் என்பவற்றால் பாடசாலையின் வளங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. தற்போது மாடிக்கட்டிடங்கள், நூலகம், நீர்த்தாங்கி, விளையாட்டு மைதானம் என்பவற்றுடன் சிறப்புடன் இயங்குகின்றது. தற்சமயம் மாணவர்களின் எண்ணிக்கை 505 ஆசிரியர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் இருக்கிறது. 


இலங்கையை உலுக்கிய வட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம் இது. முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அ. அமிர்தலிங்கம் தமது ஆரம்பக்கல்வியை கற்ற பாடசாலை (1931-1936). ”கற்றுணர்ந் தொழுகு” என்னும் மகுட வாக்கியத்தினை தன்னகத்தே உடையதாக இப் பாடசாலை விளங்குகின்றது. 

பாடசாலையினை நிர்வகித்த நிரந்தர அதிபர்கள் 


1.வே. முருகேசு கரணவாய் 1925-1933 

2.க. சிற்றம்பலம் கரவெட்டி 1933-1941 

3.வீ.கணபதிப்பிள்ளை வளலாய் 1941-1943 

4.பொ. பொன்னம்பலம் புன்னாலைக்கட்டுவன் 1943-1944 

5.செ. ஸ்ரீநிவாசன் பண்ணாகம் 1945-1970 

6.(திருமதி) பரிமளம் சிவானந்தராசன் காரைநகர் 1970-1971 

7.வை. இராஜசுந்தரம் தொல்புரம் 1971-1974 

8.வ. ஆறுமுகராசா சுதுமலை 1974-1976 

9.மூ. நவரத்தினம் சுழிபுரம் 1977-1978 

10.ஆ. செல்லத்துரை சித்தன்கேணி 1979-1981 

11.வே. கனகநாயகம் அளவெட்டி 1981 7 மாதங்கள்

12.ப.சிவஞானசுப்பிரமணியம் யாழ்ப்பாணம் 1982-1983

13.1983-1985 காலப்பகுதிகளில் சிரேஷ்ட ஆசிரியராக இருந்த திரு. விசுவலிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றினார். 

14.க. முத்துக்குமாரசாமி சர்மா பருத்தித்துறை 1985 

15.மு. அருளானந்தம் தெல்லிப்பழை 1985-1986 

16.ஆ. இராசநாயகம் காரைநகர் 1986-1989 

17.கா. நடராசா சுழிபுரம் 1990-2003 

18.வி. நடராசா மாதகல் 2004-2006 

19.க. சந்திரசேகரன் அராலி 2006- 2019 

20.சுலபாமதி கணேசமூர்த்தி 2019 இன்று வரை..


எமக்குக் கற்பித்து நல்வழி காட்டிய ஆசிரிய மணிகள் 


முதலில் மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் உயர்திரு செ.ஸ்ரீனிவாசன் அவர்கள்.


கடமையுணர்வும், கண்ணியமும், கம்பீரமுமான தோற்றப் பொலிவும் கொண்ட இவர் சிங்கப்பூரில் பிறந்து ஆங்கில மொழி மூலம் கற்றுத் தேறியவர். நிர்வாகத் திறமையில் முன்னணி வகுத்தவர். அவரது சேவைக்காலத்தில் தான் வரலாற்று சிறப்புமிக்க “வெள்ளிவிழா” நிகழ்ச்சி மிகமிகச் சிறப்பாக நடை பெற்றது. நான் கூட தொழில் சம்பந்தமான அரசினர் நெசவு ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நல்லூரில் படிக்க வழிகாட்டிய ஆசான். முற்பகலில் கடமை நிமித்தம் கடுமையாக இருப்பவர். பிற்பகலில் சிரித்த முகத்துடன் வழக்கம்பரை வடக்கு வீதியில் பந்தாட்டத்தில் கலந்து கொள்வார். நல்ல சிந்தையுள்ள பண்பாளர்.


இரண்டவதாக உதவித் தலைமை ஆசிரியர்  - உயர்திரு இ.அப்பாத்துரை அவர்கள் 


மெய்கண்டான் பாடசாலையை திறம்பட நிர்வாகிப்பதற்கு சக ஆசிரியர்களுடன் ஒத்துழைத்தவர். கணித மேதை, சமயாசாரியர், சந்தானாசிரியார் அவர்களது குருபூசைக்கு திரு.பண்டிதர் ஜயா அவர்களின் நூல் வாசிப்புக்கு உரையாசிரியராக கருத்துச்செறிவுடன் எடுத்துரைப்பவர். முதல் நியமன காலம் தொட்டு ஓய்வு பெறும்வரை ஒரே பாடசாலையில் கடமையாற்றிய நல்லாசான் இவர்.


உயர்திரு பண்டிதர் அ.ஆறுமுகம் அவர்கள்

தமிழ் வளர்த்த  மதுரைத் தமிழ் சங்கப்பண்டிதர். தன்னிடம் படித்த அத்தனை பேரையும் எழுத்துப் பிழையோ, இலக்கணப் பிழையோ இன்றி எழுதக் கற்றுக்கொடுத்த மேதை. பாடல்கள் இயற்றவும், நாடகங்கள் நெறிப்படுத்தவும், கட்டுக்கோப்பான இல்லற தர்மமும் உணர்ந்த இனிய சுபாவம் உள்ளவர். எனக்கு பள்ளிக்கூட ஆசிரியராக மாத்திரமன்றி பிரவேசபண்டித, பாலபண்டித வகுப்புகளுக்கும் குருவாக வாய்த்தவர். வாழ்நாள் முழுவதும் கதராடையே அணிந்த காந்தி இவர்.


உயர்திரு. க.எதிர்மன்னசிங்கம் அவர்கள்

எனக்கு 1950ம் ஆண்டில் 7ம் வகுப்பில் “நாட்டுச்சீவன சாத்திரம்” என்ற பாடத்தை கற்பித்த மேதை. உயிரினங்களின் உருவத்தைப் படமாக வரையப்பழக்கிய வித்தகர். பள்ளியிலிருந்து நான் விலகிய பின்னரும் எந்த இடத்தில் கண்டாலும் புன்னகையுடன் அறிமுக ஆவலை வெளிப்படுத்தும் உத்தமர்.



உயர்திருமதி. சிவபாக்கியம் நாகலிங்கம் அவர்கள்

முதலாம் வகுப்பு தொடக்கம் வகுப்பாசிரியை கைத்தையல் என்ற பாடத்தை சிரித்தமுகத்துடன் பழக்கித்தந்த தாய். அழகான உருவம். 1950ம் ஆண்டு எடுத்துக் கொண்ட வெள்ளிவிழா மலருக்காக பிடித்த புகைப்படத்தில் இந்த குருவுக்குப்பின்னால் நான் நிற்கிறேன்.



உயர்திரு.இ.தம்பிராசா அவர்கள்

1950ம் ஆண்டு தொடக்கம் வகுப்புகளுக்கு ஆங்கிலமொழி ஆசிரியராக வாய்க்கப் பெற்றேன். சிரித்த முகம் கொண்ட சீராளன். எல்லா ஆசிரியர்களுடனும் ஒத்துழைத்த ஒருங்கமைப்பாளர். மனித நேயம் கொண்ட மனிதர் இவர்.



உயர்திரு.க.தங்கராசா அவர்கள்

முல்லைத்தீவில் பிறந்து படித்து, ஆசிரிய பயிற்சி நெறிகளை முடித்த பின்னர் எங்கள் மெய்கண்டான் பாடசாலைக்கு 1950ம் ஆண்டு கடமையாற்ற வந்த குரு இவர்.  இவரது பங்களிப்பு வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு மிகமிக இன்றியமையாததாக இருந்தது. மிக உயரமான உருவமுள்ள இவர், எல்லா மாணவர்களின் முயற்சியிலும் (1950 - 1951) இரண்டு வருடங்கள்  அக்கறை எடுத்தார்.



உயர்திரு பொன்னையா அவர்கள்

வகுப்பாசிரியர். கரவெட்டி சுத்த சைவ போசனகாரர். தூக்குச் சட்டியுடன் எங்கள் வீட்டு ஓழுங்கையால் போய் பறாளாய் வள்ளியம்மன் கோவிலடி ஜயா வீட்டில் (பிராமணர்கள்) தான் சப்பிடுவார். 



உயர்திருமதி. நல்லம்மா தங்கராசா அவர்கள்

முல்லைதீவிலே பிறந்து ஆசிரிய பயிற்சி நெறியை முடித்தவுடன் எமது பாடசாலைக்கு வந்து சேவை செய்த திருமதி. நல்லம்மா தங்கராசா ஆசிரியை அவர்கள் வீட்டுப்பணி என்ற பாடத்தை செயல்முறை ரீதியாக மாதமொரு (சிற்றுண்டி, இனிப்பு, ஜாம்) வகைகளாக தனது நேரடி கண்காணிப்பின் கீழ், எமக்குப் பழக்கியதால் தான் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் விரும்பி கேட்கும் பதார்த்தங்களை தயங்காமல் செய்து கொடுக்கின்ற மனப்பக்குவம் மனத்துணிவு கிடைத்தது. 1950ம் ஆண்டு எடுத்துக் கொண்ட வெள்ளிவிழா மலருக்காக பிடித்த புகைப்படத்தில் இந்த குருவுக்குப்பின்னால் நான் நிற்கிறேன்.


தொழிற் கல்வி:

எனக்கு “ஓய்வூதியம்” எனப்படும் கொடையானது அரசாங்க பென்ஷன் (pension) என்ற பெயரில் மாதாந்தம் கிடைத்தது என்றால் அதுகூட மெய்கண்டான் தந்த “அருட்கொடை” என்று தான் கூறுவேன். 


1952ம் ஆண்டு நெசவு தொழிலை எமக்குக் கற்பிக்க இரண்டு இளம் அழகான ஆசிரியைகள் எமது பாடசாலைக்கு வந்தார்கள். முதலாமவர் யாழ்ப்பாணம் - செல்வி.த. பொன்னம்மா இரண்டாமவர் உரும்பிராய் - செல்வி. வை.ஞானேஸ்வரி ஆகியோர் ஆவர். அந்நேரம் நெசவுப் பாடத்திற்கு தனியொரு கட்டிடம் இருக்கவில்லை பள்ளிக்கூடத்தின் சுவாமி அறைக்குள் தான் எமது ஆரம்ப பாடம் தொடங்கியது. 


பஞ்சையெடுத்து அதிலுள்ள விதையை நீக்கிப் பின்னர் பஞ்சினை நூல்களாகப் பிரித்து குவித்துவைத்து ஒரு பென்சிலை நடுவே வைத்து உருட்டிய பின் மெல்லென அந்த பென்சிலை கழற்றும் போது இடது கை அதன் மேல் இருக்க வலது கை பென்சிலை வெளியே எடுக்க வேண்டும். அதனை “சிலைவர்” என்ற பெயரால் அழைப்போம்.  


அந்த சிலைவரை “தக்கிளி” என்று கூறப்படும். கையால் நூல் நூற்கும் கருவியின் உதவியுடன் மெல்லிய நூலாக நூற்று அதற்கு முறுக்கேற்றிப் பின்னர் தக்கிளியின் அடியில் “கூம்பு” வடிவத்தில் நிரப்புவோம். அது போல மகாத்மாகாந்தியடிகள் நூல் நூற்ற “ராட்டையில்” கூட இந்தச் சிலைவரை பாவித்து நூல் நூற்க முடியும். 


(1953 ஜனவரி) சில மாதங்களின் பின்னர் 60' நீளமும் 22’ அகலமும் கொண்ட ஒரு கட்டிடம் பெரிய கேற்றுக்கு அண்மையில் தூண்கள் நிறுத்திக் கட்டப்பட்டது. மேற்கூரை கிடுகினால் வேயப்பட்டது. நாற்புறமும் சுற்றிவர பனை மரச்சலாகைகள் பாதுகாப்பாக அடிக்கப்பட்டது அதே பனை மரச் சலாகைகளால் கதவும் - சங்கிலி பிணைத்த பூட்டுத் திறப்பும் இடப்பட்டது. அக்காலம் இந்து பரிபாலனசபையின் நிர்வாகத்தின் கீழ் மெய்கண்டான் பாடசாலை இயங்கியதால், இந்து பரிபாலனசபைத் தலைவர் அமரர் இராசரத்தினம் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டார். 


உயரத்தில் குறைவான என்னைப் பார்த்து “ 2-3 தறிகள் அடுத்த கிழமை திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியசாலையிலிருந்து இங்கு அனுப்பப்போகின்றேன். உனக்கு தறியில் ஏறி துணி நெய்ய கால் எட்டுமோ?” என்று கேட்டு கலகலவென சிரித்தார்.


அந்தநேரம் செல்வி.ச.மனோன்மணி என்ற போதனா ஆசிரியையும் அச்சுவேலியிருந்து எமக்குப் பாடம் எடுக்க வந்து சேர்ந்தார். அதே ஒரு வருடத்துள் பாடங்கள் 3 - பொது அறிவு, கணக்கு, டிசைன் ஆகியவற்றுடன் பாவோடி நூல் கோத்து தறியில் ஏறி துணி செய்யவும் கற்றுக் கொண்டோம்.

 

தீண்டாமை அற்ற கல்வி:  மற்றப் பகுதிகளில் ஒரு சில மாணவர்களை நிலத்தில் உட்கார வைத்து வாங்கு, மேசை, கதிரையே கொடுக்காது பாரபட்சமாக நடத்தியது பற்றி பத்திரிகையில் வெளியான செய்தியை எங்கள் வகுப்பாசிரியர் வாசித்துக் காட்டினார். எங்கள் பாடசாலையையிட்டு எமக்கு பெருமிதமாக இருக்கும். அப்படியாக ஒரு ஏற்றத் தாழ்வான செயலை பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை நிர்வாகம் செய்யவில்லை என்பதையிட்டு அங்கு கல்வி கற்ற அநேக மாணவர்களும் பெருமை கொள்கிறோம்.


பாடசாலை ஸ்தாபகர் அமரர். கந்தையா அவர்களும், அவரது சகோதரர்கள், உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வாழ்ந்து சுபாஷ் சந்திரபோஷ் அவர்களினது சுதந்திர போராட்ட கோஷங்களை உள்வாங்கி வாழ்ந்தவர்கள். 

இந்தியாவை இலங்கையை விட மலேசியா, சிங்கப்பூர் தான் மகாத்மகாந்தியின் போராட்ட அகிம்சை கொள்கைக்கு அதரவு வழங்கியதோடு மட்டுமின்றி, பொருளாதார உதவிகளையும் வழங்கியது பற்றி ஆசிரியர்களின் வாய்மொழி மூலம் அறிந்து  கொண்டோம். 


பரந்த சிந்தையும் சேவை மனப்பான்மையும் மற்றவர்களையும் மனிதர்களாக மதிப்புக் கொடுத்து நடக்கிற சீரிய குணங்களும் பண்ணாகம் மெய்கண்டானில் படித்த மாணவ உலகத்துக்கு இரத்தத்தில் ஊறிய பெரும் குணமாக அமைந்து விட்டது. 


ஏன்னென்றால் பாடசாலை நிர்வாகத்தை (1959க்கு அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்பு) திறம்பட செயற்படுத்த ஆலோசனைகளை வழங்கி வந்த உள்ளுர் பெரிய மனிதர்களையும், அதனை வழி நடத்திச் சென்ற ஆசிரிய மணிகளுமே ஆவர் .


அக்காலத்தில் இந்து பரிபாலனசபையின் கீழ் இயங்கியது. தலைமையாசிரியராக 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகித்த அமரர் செ.சிறினிவாசன் அவர்கள் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று தான் பிறந்த மண்ணுக்குச் சேவை செய்யக் கடமை உணர்வோடு வந்தவரென அவரது மாமியார் (மனைவியின் தாய்) அமரர்.நாகம்மா அம்மா கூறுவார். 





பண்டிதர் படிப்பு: 


மேற்படி பாடசாலையில் 1943-1953 வரையிலான 11 ஆண்டுகள் தொடர்ந்து படித்து அவர்களின் வழிகாட்டலின் கீழ் நல்லூர் அரசினர் நெசவாசிரிய கல்லூரியில் விடுதியில் தங்கி இரண்டு ஆண்டுகள் படித்துத் தேறி வெளியேறிய பின்னரும் - பாடசாலை மேலிருந்த பற்றினால், 1957ம் ஆண்டு பிரவேச பண்டித பரீட்சைக்குப் படித்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கம் நடாத்திய பரீட்சை 1ம் பிரிவில் சித்தி பெற வைத்தவர்கள். பண்டிதர் அ.ஆறுமுகம் அவர்கள் நன்நூல் காண்டிகை உரை இலக்கண வினா விடை என்ற நூலைக் கற்பிப்பார். 


தொல்புரம் - வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் அணியிலக்கண வினா விடை என்ற நூலை கற்பிப்பார். பொருளாரதார ரீதியாக வசதி குறைந்த மாணவியாக நான் இருந்ததனால் என்னிடம் ஒரு விதமான பணத்தையும் அவர்கள் பெறவில்லை. நான் தனியாகத்தான் யாழ் - சிங்கள மகாவித்தியாலயத்திற் பரீட்சை எழுதச் சென்றேன். 3 மாதங்கள் கழித்து ஈழநாடு பத்திரிகையில் மிகவும் திறமையில் சித்தி பெற்றோர் பட்டியலில் செல்வி. ஆசைப்பிள்ளை வள்ளியம்மை, செல்வி. செல்லம்மா முருகேசு (கரவெட்டி- விக்கினேஸ்வர வித்தியாசாலை) பத்திரிகையை நீண்டகாலம் வைத்திருந்தேன்.

 

எனக்கு முன்னர் பண்டிதை பாக்கியம் அவர்களும் எனக்கடுத்த வருடங்களில் செல்வி.வி.கனகமணி, செல்வன். நா. விநாயகமூர்த்தியும் மேற்படி ஆசிரியமணிகளிடம் பாடங்கேட்டுப் பேறு பெற்றவர்களாவர். பரீட்சைப் பெறுபேற்றினைத் தொடர்ந்து பாலபண்டிதர் வகுப்பு ஆரம்பமாகியது. அதில் என்னுடன் சுழிபுரம் க.மகேஸ்வரியும் அவரது தம்பியான அமரர். சிவசண்முகமூர்த்தியும் இணைந்தனர். அந்தப் படிப்பு 2 முழு வருடங்களை படிப்பதுடன் சமஸ்கிருத மொழியும் சிறப்பு பாடமாக எழுதிச் சித்தி பெற வேண்டும். இந்த பரீட்சையையும் யாழ் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமே நடாத்தியது.

 

1958 - 1959 ஆகிய இரு ஆண்டுகளிலும் மெய்கண்டானின் வழி காட்டலோடு யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயத்திலும் கற்றோம். சிவஸ்ரீ. சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் சமஸ்கிருத பாட ஆசிரியர். நன்னூல் விருத்தியுரை, தண்டியலங்காரம், நம்பியகப்பொருள், புறப்பொருள், வெண்பாமாலை, பதினெண்கீழ்கணக்கு, பத்துபாட்டு, எட்டுத்தொகை, நாலடியார், எண்சரிதம் இப்படியே எத்தனையோ நூல்கள். 


அமர்களான பண்டிதர் (நாவலி) இளமுகனார், பண்டிதர் (நீர்வேலி) துரைசிங்கம், பண்டிதர் (அரியாலை) இராசையா, வித்துவான் வேந்தனார், வித்துவான் வேலனார் இப்படியான அறிவுசால் மேதைகளிடம் பாடங்கேட்கிற பாக்கியமும் கிடைத்தது. 


பள்ளிக்கூட ஆசிரியர் பணி கிடைக்குமா? முயற்சி:


நெசவு ஆசிரிய நியமனங்களுக்கு அரசாங்கச் சட்டம் 21 வயது வந்திருக்க வேண்டும். ஆகவே, வயது வராத காரணத்தால் 3 முழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் நானும் சகோதரி வை.அன்னபூபதியும் யாழ் நகரசபை மண்டபத்திற்கு கிழக்குப் புறத்தே பெரிய கட்டிடத்தில் அமைந்திருந்த “இந்துப் பரிபாலனசபை” என்ற காரியாலத்திற்குச் சென்று எமது SSC தாரதரப் பத்திரத்தையும் காட்டி எமக்கு ஆசிரியை நியமனம் வழங்குமாறு பணிவுடன் கேட்டோம். 


அப்போது மதிப்பிற்குரிய இராஜரத்தினம் என்பவரே மேற்படி சபையின் அறங்காவலராக இருந்தார். அவர் கூறினார் “இந்துப் பரிபாலனசபைதான் பள்ளிகளின் கட்டிடத்தைக் கட்டக் காசு கொடுக்கிறது. உங்களால் ரூபா 2500 தரமுடியுமென்றால் நியமனம் வழங்கலாம்” என்று , தங்கம் ரூபா 72க்கு விற்கப்பட்ட அந்த காலத்தில் (1957) கிட்டத்தட்ட 35 தங்கத்திற்கு நாங்கள் எங்கே போவோம்? அதனால் பகலில் 5 மணித்தியாலங்கள் தொல்புரம் பிரதான வீதியில் அமைந்த காந்திஜீ நெசவு இல்லம் என்று அழைக்கப்படும் நிலையத்தில் இணைந்து கைத்தறியில் நெசவு செய்தோம். 


அந்த கிளை பெறுப்பதிகாரியாக அமரர்.க.பொன்னையா (பொன்னாலை) அவர்களே இருந்தார். தன்னைப் போல நல்லூர் ஆசிரியபயிற்சிக் கல்லூரியில் இரண்டுவருடங்கள் படித்து 1ம் தரம் என்ற சிறப்புடன் இறுதிப் பரீட்சையில் தேறியவர்கள் என்று எங்கள் இருவரையும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி மிகமிக மதிப்பாகவும் கௌரவமாகவும் எம்மை வழி நடத்தினார். இதுவும் எமது பண்டிதர் அவர்களின் ஆலோசனைப் படிதான் வேலை செய்தோம். எம்முடன் பொன்னாலை வீரகத்தி, பண்டிதர் நமசிவாயம், பண்ணாகம் கந்தகாமி, சுழிபுரம் வடிவேல் இன்னும் பலர் வேலை செய்தனர். 


வழக்கம்பரை முத்துமாரி அம்பாளின் சப்பரத்தில் எனது தந்தையாரின் கை வண்ணத்தில் கடைந்தெடுக்கப்பட்ட கடைச்சல் குத்துக் கால்கள்: இந்தியாவிலிருந்து வந்து புளியங்கூடல் தேர் வேலை செய்து கொடுத்த ஆச்சாரியார் பிரம்மஸ்ரீ இராமகிருஷ்ணன் என்பவருடன் எனது தந்தையும் 1949 1957 வரை புளியங்கூடல் அம்மன் கோவிலுக்கு தேர் வேலைக்காக சென்று அங்கு தங்கி வேலை செய்தார். அவ் ஆச்சாரியருக்கு வழக்கம்பரை அம்பாளின் மஞ்சம் செய்கிற திரு.சபாபதி, திரு. எல்லியர் கார்த்திகேசு (திரு. ஜெகன் மஸ்டரின் தந்தை) அவர்களின்  அறிமுகத்தில், புனிதப் பணியும் கிடைத்ததால், எனது தந்தையாருக்கு கடைச்சல் வேலை கிடைத்தது. அதி நுட்பமான கை நிதானம் கடைச்சல் யந்திரத்தில் 'கிற்றுளி' என்று கூறப்படும் 2 நீளமான உளியைப் பலமாக இறுக்கிப் பிடித்தால் தான் குத்துக்கால்களின் எழுதக்வளைவுகள் அழகுறக் கடைந்தெடுக்க முடியும். கோட்டம் அடித்து விட்டால் ( சில்லினை சுற்றுபவர் ஒரே சீராகச் சுற்றாமல்) அதிவேகமாக சுற்றினால் உளியானது மரத்தை உடைத்தெறிந்து விடும். அதற்காக பலா, மஞ்சமுன்னா போன்ற மரங்களையே தேர்ந்தெடுப்பார்கள்.


எனது தந்தையார் இடைக்கிடை “கேணியா” என்ற குடல் இறக்க நோயினால் அவதிப்படுவார். தொடர்ந்து வேலை செய்ய முடியாது. வேலையும் கஷ்டமான வேலைதானே. வாளால் அரிவது. சீவிழியால் சீவுவது, உளியால் பொளி அடிப்பது, ஆவுகார் கருவியினால் துளைகள் துளைப்பது, கடைச்சல் யந்திரத்தில் கடைவது என………..


இதை எதற்காக எழுத வந்தேன் என்றால் எங்கள் பாடசாலையில் தலைமை ஆசிரியர் ஒருநாள் சாயந்தரம் எனது தந்தையாரை சந்திப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். வளர்ந்த ஆண்மகன் இல்லாதபடியால் கடைச்சல் பட்டடை சில்லினை நான் சுற்ற, என் தந்தையார் இட்டடையில் உட்கார்ந்து கொண்டு கடைச்சல் கடைந்து கொண்டிருந்தார் . தலைமை வாத்தியாருக்கு ஒரே ஆச்சரியம்! “பொம்பிளைப் பிள்ளை தகப்பனுக்கு உதவியாக இருக்கிறா” என்று வியந்து கூறினார். அந்த நாளிலிருந்து பாடசாலையில் என்னைக் காணும் போதெல்லாம் “தகப்பனுக்கு மகன் போல் இருக்கிற பிள்ளை” என்று அன்பு ததும்பக் கூறுவார். 


இத்தனைக்கும் பாடசாலை வகுப்பறைகளில் எல்லாம் ஒரே நேரத்தில் சத்தம் அதிகரித்தால் தன் கையிலுள்ள பிரம்பினால் பக்கத்து ஸ்கிறீன் பலகையில் 3 அடி அடித்தாரென்றால் சத்தங்களை ஒரு நொடியில் அடங்கி அமைதி பிறந்துவிடும். 


1959ம் ஆண்டு இறுதியில் நெசவு போதனா ஆசிரியர் என்ற நியமனம் கிடைத்தது. கைத்தொழில் இலாகா சனிக்கிழமையும் பகல் 1 மணிவரை வேலை செய்ய வேண்டும். பால பண்டித வகுப்பின் பிரதான பாடங்கள் சனிக்கிழமைகளில் தான் நடக்கும். வேலை முடிந்து பேருந்தினைப் பிடித்து யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் போய்ச்சேர 3 மணிக்கு மேலாகிவிடும். இவ்வளவு சிரமங்களின் மத்தியிலும் வகுப்புக்குச் சமூகமளித்து சிங்கள மகாவித்தியாலத்தில் நடை பெற்ற பரீட்சைக்குத் தோற்றினேன். பெறுபேறு கிடைத்தது. 1 பாடத்தில் தவறிவிட்டேன். சமஸ்கிருதம் தான் கஷ்டமான பாடமாக இருந்தது. தம்பி சிவசண்முகமூர்த்தி சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் தனது A/L   வகுப்பில் சமஸ்கிருதம் படித்ததால் அவர் எனக்குச் சொல்லிக் கொடுப்பார். ஆங்கில மொழி மூலம் படித்த நெல்லியடி தேவகி ஆசிரியை சமஸ்கிருதத்துக்குப் பதிலாக ஆங்கிலமே எடுத்தார். 


கைத் தொழில் இலாகா வேலை, பாடசாலை வேலை போன்றது அல்ல, பள்ளிக்கூட ஆசிரியர்கள் தான் அநேகர் எம்முடன் படித்தார்கள். அவர்களுக்கு 2 மணியுடன் பள்ளிக் கடமை முடிந்ததும் மேற் கொண்டு படிப்பது இலகுவாக இருந்ததாம். எனது வேலையோ காலை 8.00 இருந்து சயாந்தரம் 5.00 வரை. பஸ்யைப் பிடித்து வீடு வந்து சேர ஆறுமணிக்கு மேலாகி இருட்டிவிடும். எமது பாடசாலையிலிருந்து படிக்கச் சென்றவர்களில் சுழிபுரம் பண்டிதை நா. பாக்கியம் அவர்களும் பண்ணாகம் பரமகுரு. இராசகுரு அவர்களுமே, 3ம் பிரிவாகிய பண்டித பரீட்சையில் தேறி பள்ளிக் கூடத்தின் பெருமையை நிலைநாட்டிய சிறப்புக்குரியவர்களாக விளங்கினர். 


ஆசிரிய மணிகளின் ஆசீர்வாதமும், பெற்றார் புண்ணியமும் சேர்ந்து “ஓய்வூதியம்” என்ற ஒரு வற்றாத செல்வம் 1990ல் எனக்கு கிடைத்தது. நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பஸ் வண்டிகள் ஓடாமல் நின்றுவிட்டன. எனக்கு பைசிக்கிள் ஓடிப்பழக்கம் கிடையாது. தூர இடங்களுக்கு பஸ்ஸில் சென்று வேலை பார்க்கமுடியாத காரணத்தால் அப்போதிருந்த ஜனாதிபதி கனம் பிரமேதாச அவர்களின் சுற்று நிருபத்தின் படி 52 வயதிலேயே ஓய்வு பெற்றுவிட்டேன். இது மெய்கண்டான் தாய் தந்த செல்வமே. இல்வாழ்க்கைத் தெரிவு செய்ய உந்துசக்தியாக இருந்தவை யாரவது ஒருவர் இதய சுத்தியுடன் எம்மை மதித்துப் பழகுகிறர்கள் என்றால் அவர்களுடைய அறிமுகத்தை, நட்பைத் துண்டித்து விடாமல் எமாற்றாமல் பின் வாங்காமல் அதனை ஒரு லட்சியமாக எடுத்துக் கொண்டு “வாழ்க்கை துணை நலம்” என்ற பந்தத்தை பரிசுத்தமாக ஏற்றுக் கொள்ளுதல் என்ற மன உறுதி…..


எமது ஆசிரியை ஒருவரை (செல்வி. தம்பிமுத்து பொன்னம்மா), பண்ணாகத்தில் வளர்ந்தாலும் சிங்கப்பூரில் பிறந்து, படித்த, பணக்காரர் சின்னத்தம்பியின் மகனான லட்சியவாதி ப.சி.செல்வநாயகம் திருமணம் செய்தார்.  மணமகன் ப.சி.செல்வநாயகம் யாரென்றால், எம்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக உலகம் முழுவதும் அறியப்பட்ட அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் பெரியம்மாவின் மகனாவார். அவர்களது திருமணம் நல்லூர் சிவன் கோயில் மண்டபத்தில் 1956ல் நடந்தேறியது. ஆசிரியையின் மாணவிகளான நாமெல்லோரும் சமூகமளித்திருந்தோம். மாங்கல்யதாரணம் முடிவடைந்து, மணமகளின் பிறந்த வீடு கச்சேரியடியில் இருந்ததால், மணமக்களுடன் அங்கு சென்று தம்பதிகளை வாழ்த்திய நிகழ்வு எனக்குள்ளும் ஓரு திட சிந்தையை வளர்த்தது என்றே கூறலாம். 


அந்த கச்சேரியடி வீட்டில் தான், தனது பெரியம்மா குடும்பத்துடன் எங்கள் ஆசிரியை செல்வி. தம்பிமுத்து பொன்னம்மா அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த பெரியம்மாவின் மகன் தான் இலண்டனில் வாழ்ந்த பொறியியளாளர் ஆறுமுகம் அவர்களாகும். அவர்களுக்கு “பொன்னி” என்ற பெயருள்ள ஒரேயொரு செல்லமகள் உண்டு. ஆசிரியை .பொன்னம்மா அவர்களுக்கு பொன்விழி, மலர்விழி என்ற இரண்டு பெண் மக்களும், அப்பன் என்ற ஒரு ஆண் மகனும் பிறந்தனர்.


இந்த வரலாறுகளை அந்தப் பெரியார்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் எழுதுவதற்கு இந்தச் சீவனுக்கு நேரம் கிடைக்க வில்லையே! பெரிய துக்கமாக இருக்கிறது. இப்போ கால்நடக்க முடியாமல் வயது 80 முடிந்து விட்ட நிலையில் ஒர் இடத்தில் உட்கார்ந்து எழுத, ஆரம்பித்திலிருந்து ஒவ்வொரு நினைவுகளும் ஓடோடி வருகிறதே! இவற்றை இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தால் எத்தனை ஆசிரியமணிகளுக்கு வாசிக்க கிடைத்திருக்கும்?.... 


இவ் வாழ்க்கை அமைந்த விதம், வேறு எந்தப் பள்ளிக் கூடத்திலும் சேராமல், அரிவரி (பாலர் வகுப்பு) தொடக்கம் SSC வரை அதைக் கடந்து, நல்லூரில் ஆசிரிய பயிற்சி நெறி பின்னர் பள்ளியில் தொடங்கி நடாத்தப்பட்ட பிரவேச பண்டித, பால பண்டித வகுப்புகள் யாவற்றிலும் என்னையொரு மரியாதைக்குரிய மாணவியாகவே கருதுவர். உயரம் குறைவாக இருந்ததனால் முன்வரிசையில் தான் வகுப்பில் உட்கார இடம் கிடைக்கும். கையெழுத்து அழகாக இருப்பதனால் வலிமேற்கு ஆசிரியர் சங்க செயலாளராக எங்கள் பண்டிதர் பணிபுரிந்ததால் மாதந்தக் கூட்ட அழைப்பிதழ் “போஸ்ற்காட்” 20 மாதா மாதம் நானே எழுதிக் கொடுக்கின்ற ஒரு வரப்பிரசாதமும் எனக்கு கிடைத்தது. 


பள்ளியில் படித்த காலத்தில் இந்திய தலைவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை முகம் கொடுத்து வென்று சாதித்த சாதனைகளை பண்டிதர் ஜயா அவர்களின் வாயிலிருந்து கேட்டறிந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது. உதாரணமாக ராஜாஜி அவர்களின் மகள் லஷ்மியை காந்திஜீ அவர்களின் மகன் தேவதாஸ் விரும்பி விட்டாரம். வஷ்மியோ நன்கு படித்து பட்டம் பெற்றவர். தேவதாஸ், “வெள்ளைகாரர்களின் பள்ளியில் படிப்பதா?” என்ற வைராக்கியத்தில் பள்ளிப் படிப்புப் படிக்காதவர். ஆனால் உலக அரசியல் அறிவாளி காந்தியும், மேடைப் பேச்சாளி ராஜாஜியும் இந்திய அரசியலில் பங்கேற்றவர்கள். முன்னயவர் அகிம்சவாதி பின்னயவர் அரசாங்க சேவைவாதி. இருவருமே சாதி பேதமற்ற முற்போக்குக் கொள்கை உள்ளவர்கள். 


தங்கள் காதல் பெற்றாரின் காதுக்கு போனால் கஷ்டமே என்று நினைத்து தேவதாஸ் நேருஜி அவர்களிடம் கூறினாராம். அவருக்கும் என்ன செய்வதென்றே தெரியாத தர்மசங்கடமான நிலையிருந்தும், அவர் ஒரு நல்ல தீர்ப்பினை வழங்கினாராம். அதாவது 5 முழு வருடத்திற்கு ஓருவரை ஒருவர் சந்திக்கவோ கடிதப்போக்குவரத்தோ வைத்துக் கொள்ளகூடாது. அதற்குள் தேவதாஸ் தனது படிப்பை தொடர்ந்து வாழ்க்கை வாழ்கின்ற வழிவகைகளை தேடிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாய விதியாக தீர்ப்பு வழங்கினாரம். அது எனக்குள் ஆழப் பதிந்தது. 


நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மகான்கள்


வலிகாமம் மேற்கு வட்டாரப் பாடசாலைகளின் சுகாதார வார விழா வெற்றி பெற்றவர்களுக்கும் பாடசாலைக்கும் பரிசளிக்கின்ற பெரிய விழா மெய்கண்டான் பாடசாலை முன்றலில் நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக மண்புமிகு W. A. சில்வா (16 January 1890 – 3 May  1957 ) சில்வா அவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார். அவர் குடியியல் ( Civics ) என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட பேராசிரியர் ஆவார். அவர் மேடை மீது மாலை அணிவிக்கப்பட்டு கோலகலமான காட்சிகளின் மத்தியில் வீற்றிருக்கிறார். அவரது கண்கள் தனது மகரகம- ஆங்கில- பயிற்சிக் கலாசாலையில் படித்த தனது மாணவன் மீது விழுகிறது. தனக்குப் பக்கத்திலிருந்த ஒருவரிடம் கூறுகிறார் போலும். பார்வையாளர்கள் வரிசையில் நின்றுகெண்டு இருப்பவரை தன் அருகில் மேடைக்கு வரும்படி... இயற்கையானவே கூச்ச சுபாவங் கொண்ட அந்த ஆசிரிய மாணவர் சிரித்துக் கையசைத்து விட்டு தொடர்ந்தும் தான் நின்ற இடத்திலேயே நிற்கிறார். கலை நிகழ்ச்சிகள் தொடங்குவதற்காக மேடையின் மீது இருந்த மேசை நாற்காலிகள் கீழிறக்கப்பட்டன. மேசைக்கு முன் புறமாக பிரதம விருந்தினருக்கு நாற்காலிகள் ஏற்கனவே போடப்பட்டிருக்குமல்லவா? 


அந்த கல்விமான் விரிவுரையாளர் பள்ளியில் படிக்கின்ற சிறுவனைப் போல மக்கள் கூட்டத்தின் ஓரமாக நடந்து வந்து திரு.ஞானச்சந்திரமூர்த்தி மாஸ்டரை கட்டித் தழுவிக் கொள்கிறார். இது அற்புதமான காட்சி எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது! “கற்றாரை கற்றாரே காமுறுவர் கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில் காக்கை உவக்கும் பிணம்" என்ற அடிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது.


நான் பார்த்து ஆச்சரியப்பட்ட பெரியாரின் ஆளுமை. அந்தக் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து அறிஞர் பெரியார்களை இலங்கைக்கு வரவழைத்து கோவில்களில் கதாப்பிரசங்கம் நடாத்துவது வழக்கம். அது போல திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களை அழைத்து வந்து தங்கள் இல்லத்தில் தங்கியிருப்பதாகவும் அன்றிரவு வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில் அன்னாரது  “முருகனின் திருவிளையாடல்” என்ற தலைப்பில் கதாப்பிரசங்கம் நடத்த இருப்பதாகவும் சைவப் பெரியார் சுழிபுரம் சந்தி சு. சிவப்பிரகாசம் ஜயா அவர்கள் எங்கள் பாடசாலைக்கு வந்து தலைமையாசிரியார் அவர்களிடம் அறிவித்தல் நோட்டீஸ் ஒன்றினை கையாளித்துச் சென்றார். அச்செய்தி மாணவ சங்கத்தலைவர் மூலமாக ஒவ்வொரு வகுப்புக்கும் வாசித்து காட்டப்பட்டது. வாரியாரின் பிரசங்கம் கேட்பதென்றால் பக்தர்களுக்கு அப்படியொரு ஆனந்தம். 


கையிலே “கஞ்சிரா” என்ற சிறு கருவி பாடிக் கொண்டே (பெருவிரல் கீழே மற்றைய நான்கு விரல்களும் மேலே கொழுவப்பட்டிருக்கும்) உற்சாகமாக ஒலியை உண்டாக்குகின்ற தெய்வீகதன்மை கொண்டது. இரவு ஆகிவிட்டது வழக்கம்பரை முத்துமாரி அம்பாளின் ஆலய முன்றலில் பெரியபந்தல் அமைக்கப்பட்டு “மைக்” பொருத்தப்பட்ட மேசை முன்னால் கழுத்திலே தங்கத்தால் இழைக்கப்பட்ட உருத்திராட்ச மாலையும் குருக்கள்மார் அணிவது போன்ற பஞ்சகச்சரமும் அணிந்த ஒரு மகான் மைக் முன்னால் வந்தார். பல பொரியார்கள் அன்னாருக்கு மாலை அணிவித்தனர் 


“முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக் கொருசத்திச் சரவண..” என்ற திருப்புகழுடன் திருமுருக கிருவானந்தவரியார் அவர்கள் பாடத் தொடங்க இனிய பக்கவாத்திய இசைகளும் ஒலிக்க ஆலய சுற்றுப்புறம் முழுவதும் அயற்கிராமத்து சனங்கள் உட்பட அவ்வளவு சனக்கூட்டம். 


அந்தகாலத்தில் 1946 -1953ல் சில விசேட திரு விழாக்களுக்கு குறிப்பாக 5ம், 6ம், 7ம்;, 8ம் ஆகிய திருவிழாக்களுக்கு “சின்னமேளம்” என்று கூறப்படும் நடன மாதர்களை அழைத்து வந்து நள்ளிரவுக்குப் பின் நடனமாட வைப்பார்கள். அன்று மாலை 6மணிக்கு தேர் மேடை முன்றலிலும் அடுத்த நாள் அதிகாலை 5மணிக்கு சுவாமி வெளி வீதிவரும் போதும் அந்த அழகிய மாதர்களால் பாட்டுப்பாடி அம்பாளுக்கு “சாமரை” வீசவைக்கிற ஒரு வழக்கம் இருந்தது. 


அந்த காட்சியை அருகிலிருந்து பார்க்க இளைஞர் கூட்டம் முண்டியடித்து முன்னுக்கு வரப்பார்ப்பார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தவும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கையில் தனது தோளிலுள்ள சால்வையை எடுத்து ஒரு வீசு வீசினாரென்றால் இளந்தாரிகள் எல்லோரும் “கப்சிப்' என்று அடங்கி விடுவார்கள். அவர் யார் தெரியுமா? வாரியார் அவர்களின் பிரசங்கத்தை கேட்க வந்திருந்த பல்லாயிரக்கணக்கான சனங்களால் நிற்கவும் இடமின்றி அத்தனை இளைஞர் கூட்டம் எல்லோருடைய வாயிலும் “கார் கனகசபையார் வந்தார் என்றால் இவங்களை தன்ரை சால்வையால் வீசி உட்காரவைத்து விடுவார். இருக்கின்ற சனங்களுக்கு இடைஞ்சலாக இவர்கள் எழும்பி நின்று கொண்டு பிரசங்கம் கேட்கிறான்கள்” என்று துக்கமாகப் பேசிக் கொண்டார்கள். சின்ன மேளம் என்கிற நடன மாதர்களின் அருகில் வரும் இளைஞர்களை தனது சால்வை கொண்டு கட்டுப்படுத்துவார். அந்தநாள் அதேநேரம் அந்தப் பெரியார் தனது நெஞ்சு நிறைய சந்தனம் பூசியபடி அமர்ந்திருந்த வாரியார் அவர்களின் திருப்புகழ் பாடல்களையும் பாடிமுடிய அவர்கள் கூறும் கதைகளையும் கேட்டுக் கொண்டிருந்தார். பண்ணாக மண்ணிலே இளைஞர்கள் தங்கள் மனவெழுச்சிகளின்படி கட்டுப்பாடின்றி வாழாமல் நல்ல கீழ்படிவான பக்தியுள்ள நன்றியறிதலுள்ள சந்ததியாக வாழ்ந்தார்களென்றால் அது கார்- கனகசபை என்ற பெயருள்ள அந்தக் கம்பீரமான குரலுக்குரிய பெரியார் தான் காரணம். அவரது மூத்த மகன் தான் எங்களால் அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்திலும் வழக்ககம்பரை மூத்துமாரியம்பாள் ஆலயத்திலும் தேவார திருவாசக பஜனை நிகழ்ச்சியினை தொடர்ந்து நடாத்திய பெருமைக்கு உரியவராகின்றார். 


நான் தூக்கி அன்பு காட்டிய பாசமலர்கள் எனது கையால் தூக்கி இடுப்பிலே வைத்த குழந்தைகள் பற்றி இங்கே குறிப்பிடுதல் அவசியமாகிறது. அயற்கிரமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவாளாக இருந்தபோதிலும் உறவு முறைக்கும் மேலாக ஒரு பற்று, பாசம், அரவணைப்பு பண்ணாக மண்ணின் சொத்தாக இருந்தது. இன்னும் இருக்கிறது, என்றும் இருக்கும். ஒருகாலமும் ஒருவரும் என்னை வேற்றவளாகப் பார்த்ததே கிடையாது. 


என்னுடன் படித்தவர்களின் தம்பிமாரை அல்லது சித்தி பெரியம்மா அவர்களின் குழந்தைளை, அவர்களின் அக்காமாரின் குழந்தைச் செல்வங்களை நானும் தூக்கி மகிழ்ந்து இருக்கிறேன். உதாரணமாக க.பரமலட்சுமியின் தம்பி க.தேவரசா அழகான தம்பி கேட்கும் வினாக்களுக்கு சிரித்தபடியே பதில் கூறுவார். மா.தனபாக்கியத்தின் சித்தியின் மகன் பிரபு, அடர்தியான புருவமும் சிரித்த முகமும் உள்ள குழந்தை,  இ.பரமேஸ்வரியின் தம்பி “அப்பு” என்று அழைக்கும் செல்வராசா 'குடு குடு" என்று ஓடிப்பிடித்து விளையாடும் செல்வமான தம்பி தான், P.T.தியாகராசா மஸ்டரின் அக்காவின் மகன் “அப்புச்சி” இடாப்புப் பொயர் மறந்துபோச்சு. அவர் திரு நடராசா அபிராமி தம்பதிகளின் மகளின் மகனும் திருமதி சோதிமுத்து அம்மாவின் மகனின் மகனும் ஆவார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். அத்துடன் மெல்லிய ஓடிசலான உடல்வாகு கொண்டவர். 


1949ம் ஆண்டு ஜேம்ஸ் குமாரவேலு என்ற பெயர் கொண்ட ஆங்கில ஆசிரியர் எமக்கு 6ம் வகுப்பில் ஆங்கிலம் கற்பித்தார். அவர் தனது மகனை பைசிக்கிளில் சிறிய தலையணை வைத்துக் கொண்டு வருவார். “கருணா” என்பது அக் குழந்தையின் பெயர். அந்த குழந்தையின் தாய் வழி தாத்தா தொல்புரம் J.P ஆக வாழ்ந்து மறைந்த நரசிங்கம் ஆகும். இவர்களுடன் நான்றாகப் படித்து இளம் வயதில் மறைந்த சின்னு அப்பாபிள்ளையின் மகன் சிவராஜ படிப்பில் படுசுட்டி. கைச்சங்கிலி, கழுத்துசங்கிலி, மோதிரம் சகிதம் தந்தையாரின் தோளில் வந்து இறங்கிப் படிப்பார். அவரையும் தூக்கி கதைகேட்போம். Dr.கைலாயபிள்ளை அவர்களின் குழந்தைகள் சில ஆண்டுகள் மெய்கண்டானில் படித்து விட்டு வட்டு யாழ்ப்பாணக் கல்லூரிக்கு சென்றவர்கள். ரஞ்சன்,  உமா, மோகன், பரா, கௌரி, ஹரி, கீதா, நளினி ஆகியோரின் அழகிலும் அவர்களது அம்மா தனது கையால் தைத்து அணிவித்து அழகு பார்க்கும் உடைகளின் வனப்பிலும் …. அக் குழந்தைகளிடம் கதை கேட்க எல்லோருக்கும் ஆவல். 


பழைய மாணவர்களால் நடித்துக் காட்டப்பட்ட (வடமோடி நாடகங்கள்) நாட்டுக்கூத்து எம்முடன் படித்தவர்களின் சகோதரர்கள் பங்கேற்று நடாத்திய கூத்துக்கள்: 1951ம் ஆண்டுகளில், எமது படசாலையின் பழைய மாணவர்களாகிய பண்ணாகத்து அண்ணாமார்களின் இரு  நாடகங்கள், வழக்கம்பரை அம்பாளின் தேர்முட்டிக்கு வடக்குப் பக்கமாக பெரிய மேடை போட்டு மின்சார வெளிச்சம் ஒலிபெருக்கி சகிதம் நடாத்தப்பட்டன. 


இரு  நாடகங்கள் ஆகியனவை ( 1.பவளக்கொடி, 2.சத்தியவான் சாவித்திரி ) கண்ணுக்குரிய காட்சிகளும் காதுக்கினிய பாடல்களும் அடங்கியவை.  நடத்தியவர்கள் சகலரும் பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் மொய்கண்டான் பள்ளியில் படித்து வெளியேறிய பழைய மாணவர்களுமே ஆவார். 


65 வருடங்கள் கழித்து இன்னும் நினைவில் நிற்பவை: தம்பிநயினார் அண்ணை, சத்தியவான் சாவித்திரியில் “யமதர்மனாக” வந்து நடித்த நடிப்பு. அதுபோல் பவளக்கொடியில் உடையார் அண்ணை ( Dr. கையிலாயபிள்ளை அவர்களின் தாய்மாமன்) பவளக் கொடியாக வந்து சேலை உடுத்தி ஆபரணங்கள் போட்டு... அது எப்படியான காட்சி! இதே நாடகத்தில் அல்லியாகப் பங்கேற்றவர் எமது கனகம்மா ரீச்சரின் மைத்துனர் முறையானவர். (பெயர் மறந்துபோச்சு) அளவெட்டி ஊரிலிருந்து “பப்பூண்' என கூறப்படும் கோமாளிப் பாத்திரத்தை ஏற்றவர் வடிவேலு எனப் பெயர் கொண்டவர். அவர் கூறும் ஒவ்வொரு பகிடிக்கும் எல்லோரும் வாய்விட்டு சிரிப்பர். வீட்டிலிருந்து வரும் போதே புல்தரைக்கு விரிக்கப் பாயுடன்தான் எல்லோரும் வருவார்கள். இந்த வடமோடி நாடகங்களை நெறிப்படுத்தி பழக்கியெடுத்தவர் யார் என்பதனை அந்த சிறிய வயதில் கேட்டு அறிந்து கொள்ளும் அறிவுத்திறன் இருக்கவில்லையே! இப்போ கவலைப்படுகின்றேன். அது பெரிய ஆவணமல்லவா? சிறிய வயதில் வைத்திருந்த அன்பின் இறுக்கத்தால் இற்றைக்கு 80 வயது பூர்த்தியான நடக்கமுடியாத வயோதிப நிலையில் இருந்தாலும் உரிமையுடன் “எடியே வள்ளி” என்று வாஞ்சையுடன் கூறப்படும் பாசத்தை எண்ணியெண்ணி ஆனந்தம் கொள்கிறேன். அது மெய்கண்டான் பாடசாலை எமக்களித்த பாசத்துடன் கூடிய அழைப்பு உரிமை குரல். நான் பார்த்து ஆச்சரியப்பட்ட அன்னையர்கள் எங்கள் மதிப்புக்குரிய பெரியவாத்தியார்  அவர்கள் வருத்தம் வந்தபின் மோர் தான் குடிப்பார். வழமையாக போய் எடுத்து வருகின்ற பாலு அன்று பாடசாலைக்கு வரவில்லை. தலைமை வாத்தியாரின் சகோதரி வீட்டிலும் மோர் தயராகும் (பூமாதேவி வீடு). அங்கு இல்லாவிடில் அன்னாரது வீட்டில் தான் பெற்று வந்து கொடுப்பார். சகோதரி அமுதவல்லி புறப்பட்டார். அவளுக்கு துணையாக போகிற ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. பெரியவாத்தியாரின் மாமியார் (மனைவியின் தாயார்) பெயர் நாகம்மா அவர்கள். சுழன்று, சுழன்று காத்தாடிபோல் வேலை செய்யக்கூடிய மெலிந்த உடம்பு, வெள்ளைநிறம், புடவையும் வெள்ளை தான் சிரித்த முகம். ஒரு அரை மணித்தியால நேரத்துள் குளித்து, உடுப்புகள் கழிவிக் காயவிட்டு, வந்து மோர் போத்தலைக் கையில் கொடுக்கும் போது “காலமையெழும்பி வீடு, வாசல், மாட்டடி கூட்டி, பால் கறந்துகாய்ச்சி, காலைச் சாப்பாடு செய்து, தயிர் கடைந்து, கடைக்கும் போய் விட்டுவர இவ்வளவு நேரமாச்சுது. இன்னும் தலைக்கு மேலே நிறைய வேலை கிடக்குது. சாப்பிட்டால் வேலை செய்ய முடியாது. இனி மத்தியானச் சமையலும் முடித்து, வாத்தியார் பேத்தி பராசக்தி வீட்டுக்கு வந்த பிறகு அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டுத்தான் ஒரு கொஞ்சம் அரை வயிறுக்கு சாப்பிடுவேன். வயிறு முட்ட சாப்பிட்டால் விசுவத்தனை வயலுக்கு போய்வர முடியாது” என்று குறிப்பிட்டார். 


எனக்கு ஒரே அதிசயமாக இருந்தது. நாகம்மா அம்மாவின் மகள் அப்போ கர்ப்பிணியாக இருந்தார். இப்படி ஒவ்வொரு தாயின் பங்களிப்பில் தான் ஒரு குடும்பம் பிரகாசிக்கிறது. மக்கள் மத்தியில் சென்று தொண்டு செய்யவோ, அரசாங்க சேவையை நடத்தவோ முடிகிறது. வயது போகிறது என்று கூறி கொண்டு ஒரு மூலையில் முடங்கி கிடந்தால் அந்த வீட்டு வேலைகளை யார் செய்வார்கள்? கூலிக்கு வருகிறவர்களும் வெளியே வேலைகளை செய்வார்களே தவிர, சமையல் கட்டிலோ ஆதாவது குசினிக்குள்ளே வந்து சாப்பாடு தயாரிக்கும் வேலைகளை மற்றவர்களிடம் கையளிக்க மாட்டார்கள். சுத்தம், சுகாதாரம், நம்பிக்கை, இவை யாவும் இல்லாத்தரசிகளிடம் தான் உள்ளடக்கம்!. 


இன்னும் சில தாய் குலத்தவரின் சேவையை அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக சந்தனக்கட்டையாகவும் தேய்ந்து வாசனையையும், மெழுகுதிரியாக உருகி ஒளியையும் கொடுப்பதை எமது பள்ளிக்கூடக் காலத்தில் பார்த்து வியந்து அதனை என் வாழ்விலும் பின்பற்றினேன். 


1948ம் ஆண்டு நான் 5ம் வகுப்பில் படிக்கிறேன். பள்ளிக்கு வராதவர்களை “கூட்டப் போகின்ற பெறுப்பு” என்றொரு நற்செயலும் எமது பள்ளியில் இருந்தது. பொ.பரமேஸ்வரி இன்று பாடசாலைக்கு வருகை தரவில்லை. அவரை கூட்டிவருகின்ற பெறுப்பு அமுதவல்லிக்கு வழங்கப்பட்டது. வாங்கில் எனக்குப் பக்கத்தில் அமுதவல்லி, இருவருமாக புறப்படுகிறோம். “அரை மணித்தியலாத்திற்குள் திரும்பி வந்து விட வேண்டும்” என்று வகுப்பாசிரியர் உயர்திரு பொன்னையா கூறி அனுப்புகிறார்.  


ஒரே ஓட்டமும் நடையுமாகச் சென்று பத்மாவதி அக்கா வீட்டை அடைந்து விட்டோம். அது திரு பொன்னுச்சாமி ஜயா அவர்களது  அழகான வீடு. அவர்கள் வீட்டில் தர்மலிங்கம், பத்மாவதி, பரமேஸ்வரி, கண்ணகை, நாகலிங்கம்  இன்னும் சிறிய தங்கைகளும் உண்டு. திரு.பொன்னுச்சாமி அவர்கள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றுகிறார். நல்ல வெள்ளைநிறமும் உயரமும் சிரித்த முகம் கொண்ட பெரியார். 


பரமேஸ்வரியின் அம்மா தான் வெளியில் வந்தார். “நான் சத்தியகாட்டுச் சந்தைக்கு போகப்போகிறேன். அதுதான் ஆச்சியை இண்டைக்கு பள்ளிக்கூடத்துக்கு விடவில்லை. நான் ஒரு நாளும் ஒரு பிள்ளையையும் பள்ளிக்கூடம் போகவிடாமல் மறிக்கிறதில்லை அது எனக்கு பிடிக்கவும் மாட்டுது. படிக்கிற வயதிலை ஓடியோடிப் படிச்சால் தானே தங்கடை காலத்தில ஆருக்கும் அடிமைப்படாமல் தன்ரை, தன்ரைறாங்கியோட சீவிக்கலாம். நாங்கள் சின்னப்பிள்ளைகளாய் இருக்கேக்கை எங்கடை அப்பு, ஆச்சியவை ஒரு நிமிச நேரமும் சும்மா இருக்க விடமாட்டினாம். அப்படி வேலை வெட்டி செய்து பழகினபடியால் தான் தகப்பனையும் பிள்ளைகளையும் அனுப்பிவிட்டிட்டு இத்தனை வேலைகளையும் தட்டந்தனிய செய்கிறேன். நான் இப்படி செய்ததால் தான் அதுகளும் ஒரு குடும்பத்தில வாழ்க்கைப்பட்டுப் போன பிறகும் வீட்டு வேலைகளையும் செய்து உத்தியோகத்திற்கும் போவினம். இல்லாவிட்டால் கஷ்டப்படுவினம்” என்று கூறினா. அந்த கூற்றும் எனது வாழ்விற்கு உதவின. 


சமயகுரவர் குருபூசை வழிபாடு


எமது பாடசாலையில் வருடத்தில் சமய குரவர்கள் நால்வரின் குருபூசையும் திதி தவறாமல் நடைபெறும். சகல வகுப்பு மாணவர்களும் கலந்து கொள்ளுவார்கள் வழமைபோல 2.30 மணிக்கு பெரிய மண்டபம் முழுவதும் கழுவி வீடு சென்று குளித்துச் சுத்தமாக நாமெல்லோரும் வருகை தருவோம். 3 மணிக்கே சகல ஆசிரியர்களும் வருகை தந்திருப்பார்கள். பிரதானமாக பாடல்கள் வாசிக்கும் உயர்திரு. அப்பாத்துரை ஆசிரியருடன் உரை சொல்லும் பண்டிதர் அவர்களும் வந்திருப்பார்கள். 


“சித்திரைச் சதயம் அப்பர், சிறந்த வைககாசி மூலம் அத்தரைப் பணிசம்மந்தர் ஆனி மாதத்திலந்த முத்தழிழ் வாதவூரர் விரும்புநல் ஆடி தன்னில் உத்தமமாம் சுவாதிநாளில் சுந்தரர் கையிலை சேர்ந்தார்.” என்ற பாடலுக்கு அமையத் திதி தவறாமல் குருபூசை மிக உன்னதமான முறையில் அனுஷட்டிக்கப்படும். வருகை தரும் சகல மாணவர்களுக்கும் வழங்கும் உணவுகள் தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் என்ற பெயர் பொருத்தமுள்ள பெரியார்கள் வீடுகளிலிருந்து சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கடலை, வடை, மோதகம், வாழைப்பழம் முதலியன மேல் வகுப்பு ஆண் மாணவர்களால் எடுத்து வரப்படும். யாவும் படத்தின் முன்னால் படைக்கப்பட்டு தீப தூபம் காட்டப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். 


முதலில் வீபூதி, சந்தனம், தீர்த்தம் வழங்கப்படும். பின்னர் உணவு வழங்கப்படும். நாயன்மாரின் பெயருடைய பெரியார்கள் வீட்டிலிருந்தே படையல் உணவுகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். உதாரணமாக திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் வைகாசி மூலத்திலன்று அமரர் சம்பந்தமூர்த்தி ஆசிரியர் வீட்டிலிருந்து வரும். பாதி எண்ணிக்கை மாணவர்களும் (நான் உட்பட சக்கரை பொங்கல் தொடக்கம் மோதகம் வரையிலான உணவிற்காகவே ஒடோடி வந்து சப்பாணி கூட்டித் தரையில் உட்காருவோம்) உயரம் குறைந்தவர்கள் முன்வரிசையில் இருத்தப்படுவார். 


“அப்பருக்கு கெண்பத்தொன்று அருள் வாதவூரருக்குச் செப்பியநாலெட்டினில் தெய்வீகம் இப்புவியில் சுந்தரருக்கு மூவாறு தொல் ஞானசம்பந்தர்க்கு அந்தம் பதினாறு என்று அறி” இந்த பாடல்கள் யாவும் நாம் 4ம் ஆண்டு படிக்கும் காலத்திலேயே வகுப்பாசிரியரால் கற்பலகையில் எழுதப்பட்டு அதனைப் பார்த்து நாம் எமது “சிலேட்” எனப்படும் எழுத்து எழுதும் ஏட்டில் பென்சிலால் அதுவும் கீழே விழுந்தால் உடைந்து விடும். ஆகவே சிலேட்டையும் பென்சிலையும் பத்திரமாகப் பாதுகாப்பாக பாவிப்போம். 


“திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகததிற்கும் உருகார்” என்ற வாக்கியத்திற்கு அமைய மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூசைக்கு மட்டும், பள்ளியில் வரலாறு வாசித்து உரை சொல்லி முடிந்தவுடன், சுவாமியின் படத்தை எடுத்துக் கொண்டு திருவாசகம் மூத்த அண்ணாமார் சொல்லச் சொல்ல சிறுவர்களாகிய நாம் பாடிக்கொண்டு பள்ளியிலிருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி  ஊர்வலம் போவோம்.


அமரர் திரு. ப.சி.செல்வநாயகம் அவர்களின் வீட்டுவாசலில் (கேற்றடியில்) பூரண கும்பத்துடன் தூப, தீப, மலர்கள் வைக்கப்பட்டிருக்கும். சகல மங்களப் பொருட்களும் சுவாமி படத்திற்கு காண்பித்து மாணவர்களுக்கு கற்கண்டு உட்பட சகல உணவுகளும் வழங்கப்படும். தாமதியாமல் விரைந்து சென்றால் கிழக்கு நோக்கி திரும்பினால் சோதிமுத்து என்ற பெயரிலுள்ள ஒரு தாயார் அவரது வீடு சற்று உள்ளே இருந்தாலும் (அன்னையின் மகனான லிங்கம் என்பவரின்) அனுசரணையுடன் முதலில்; நடந்தேறி சகல முறைகளும் செய்யப்பட்டு சகல மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும். இந்த காலத்தில் இருப்பது போல  பொலித்தீன்  அந்த காலத்தில் கிடையாது. அது கடந்து இலகு ஆறுமுகம் ஆசிரியரின் வீட்டு வாசலில், அது கடந்தால் பண்டிதர் ஜயா அவர்களின் கேற்றடியில் கொஞ்சநேரம் கூடுதலாக நின்று கற்கன்று உட்பட பொங்கல் கடலை உணவுகள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு போக நாற்சந்தி வந்துவிடும்.


அந்த காலத்தில் பள்ளியின் மாணவியாக இருந்த பரமு ஆச்சிப்பிள்ளை அவர்களின் வீடும் கடையும் இருந்தது. அதில் ஒரு எல்லை மானப்பந்தல். அடுத்து தெற்கு நோக்கி ஊர்வலம். 


கார் கனகசபை என்று அழைக்கப்படும் பெரியார் வீட்டுவாசலில், அதிலும் மாணிக்கவாசக சுவாமிக்கு தீபம் காட்டப்பட்டு மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும். அப்படியே தெற்கு நோக்கி திரும்பி வரும் வழியில் அமரர் திரு. இராசைய்யா தம்பிராசா ஆசிரியர் வீட்டுக் கேற்றடியில் இல்லங்களில் நடைபெற்றது போன்று தீப பூசை உணவு வழங்கல் யாவும் நடக்கும். இன்னும் அமரர் திரு. சம்பந்தமூர்த்தி வாத்தியார் வீட்டு வாசலிலும் முடித்து, மேற்கு நோக்கி பிரதான வீதியால் வருகையில், திரு. சின்னையா ஞானசந்திரமூர்த்தி ஆசிரியர் அவர்களின் கேற்றடியில் ஆடிப்பிறப்பு கவிதை பாடி மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும். 


ஆடிப்பிறப்பு கவிதை தந்த நாவலியூர் க.சோமசுந்தரபுலவர் என்ற பெரியார் எமக்கு பாலபண்டித வகுப்பிற்கு நன்னூல் விருத்தியுரை என்ற இலக்கண நூலைக் கற்பித்த பண்டிதர் இள முருகனாரின் தந்தையாவர். 


1.ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே! கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் - கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! 


2.பாசிப்பயறு வறுத்துக் குற்றி செந்நெல் - பச்சையரிசி இடித்துத் தௌளி வாசப்பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாக வறுத்தெடுத்து 


3.வேண்டிய தேங்காய் உடைத்து துருவியே வேலூரிற் சக்கரையும் கலந்து தோண்டியில் நீர் விட்டு மாவை அதிற் கொட்டிச் - சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு 


4.வில்லை வில்லையாக மாவைக் கிள்ளி தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்துடுமே! 


5.பூவைத் திருவிப்பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டைப் பயறும் இட்டு மாவைக் கரைத்து அம்மா வாத்துத் துழாவு வாள் - மணக்க மணக்க வாயூறிடுமே 


6.குங்கும பொட்டிட்டுப் பூ மலை சூடியே குத்து விளக்கு கொழுத்திவைத்து அங்கு இளநீர், பழம், பாக்குடன் வெற்றிலை ஆடிப்படைப்பும் படைப்போமே. 


7.வண்ணப் பலா விலைஓடிப் பெறுக்கியே வந்துமடித்துக் கோலிக் கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவாக்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே 


8.வாழைப்பழத்தை உரித்து தின்போம் நல்லமாவின் பழத்தை அறுத்துதின்போம்.கூழைச் சுடச் சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னை கடிப்போமே. 


9. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் - கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! 



1957ம் ஆண்டில் 9ம், 10ம், வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனி மேசையும் கதிரையும் (எனது தந்தையார் அமரர் பொ.ஆசைப்பிள்ளை அவர்களினால் செய்யப்பட்டது.) பாடசாலை நிர்வாகம் அதற்குரிய பணத்தை வழங்கிய பின் ரசீது பெற்றுக் கொள்வார்கள். 1952ல் பாலர் வகுப்பிற்குரிய சிறிய உருவத்திலான குட்டி, குட்டி மேசையும் கதிரையும் எனது தந்தையாரின் கை வண்ணத்தில் செய்யப்பட்டது. 1953ல் நெசவு நிலையக் கட்டிடம் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க தொட்டி மேலே பாதுகாப்பாக மூடி போட்டு மூடப்பட்டிருக்கும். செல்வி அ. அன்னலச்சுமி என்ற பெயருள்ள ஆசிரியை கோப்பாயிலிருந்து வந்து அழகிய பன்னை வேலை கைப்பணியை பழக்கி தந்தார். 


மகாத்மாகந்தி அவர்களின் அஸ்தி வருகையும் பஜனையும் சமயகுரவர்களின் குருபூசை கிரமமாகச் செய்வது போன்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கூடம் தொடங்க தேவாரம், புராணம் படித்து முடிந்தவுடன் சிலரை தவிர சகல மாணவர்களும் வரிசையாக பிரதான வீதியைக் கடந்து கேணிக்குள் இறங்கி கால்கழுவிக் கொண்டு நேரே கோவிலுக்குள் செல்வோம். தேவாரம் பாடக்கூடிய குரல் வளம் உள்ளவர்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் எல்லோரும் சொல்லுவோம். 


இறுதியில் புராணமும் சொல்லி “நமப்பார்பதிபதியே”  என்று கூற நாம் எல்லோரும் “அரஹரமாகதேவா” என்று மும்முறை சொல்லிய பின் வீழ்ந்து வணங்கி விட்டு வெளி மண்டபத்திற்கு வருவோம். அங்கே ஒரு மாணவர் கையில் மணிவாசக சுவாமிகளின் திருவாசகக் புத்தகத்தை வைத்திருப்பார். அதில் முதலாவதாக உள்ள “நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க” என்று ஒவ்வொரு வரியாகச் சொல்ல நாமெல்லோரும் அதைச் சொல்லுவோம். இப்படியே திருவாசகங்கள் யாவும் செவிப்புலனுக்கு ஊடாக உட்சென்று இரத்தத்துடன் கலந்து விட்டது. பின்னர் வரிசை தவறாமல் பாடசாலைக்குள்ளே வந்து எமது பாடங்களை தொடருவோம். வெள்ளிக்கிழமையில் மாத்திரம் முதலாவது பாடமாக நடக்கும் சமய பாட நேரத்தை வழக்கம்பரை முத்துமாரி அம்பாளின் ஆலயத்தில் பயன்படுத்திக் கொள்ளுவோம். 



1. 1948ம் ஆண்டு மகாத்தமா காந்தியடிகளின் அஸ்தி கொண்டு வரப்பட்ட வாகனத்தை எதிர்பார்த்து பிற்பகல் 3 மணி மாலை 5.30 வரை ஊர் மக்கள், ஆசிரியமணிகள், மாணவர்கள் வீதியோரமாக “ரகுபதிராகவா ராஜாராம், பதீதபாவன சீத்தாராம்” என்ற பாடலைப் பாடி அந்தச் சுதந்திர தந்தைக்கு கொடுத்த கௌரவத்தைப் பார்த்து 10 வயதிலேயே பெரியோர்களுக்கு கீழ்படிவாகவும் நன்றியறிதலோடும் வாழ வேண்டும் என்ற லட்சியம் உருவானது. 


2.சமயகுரவர்கள் நால்வரினதும் குருபூசையை கிரமமாக அந்தப் பத்து வருடங்களிலும் நிலத்தில் உட்கார்ந்து தேவார, திருவாசகங்களை படித்ததால் இன்று வரை அவையும் ஞாபகத்தில் பசுமரத்தாணியைப் போல பதிந்து இருப்பதுடன் “தென்புலத்தாரை நினைவு கூறல்' என்ற மகத்தான பணியை மறவாது சிரமமெடுத்து, கிரமமாகச் செய்து முடிக்கின்ற ஆத்மதிருப்தி உண்டானது. 


3.மதிய உணவான “பாண்ணுக்கு” சம்பல் அரைத்து தாளித்து செவ்வனே செய்த பழக்கத்தினால் தான் விவாகமாகி மூன்று குழந்தைகளுடன் வேலைக்கும் போய் வீட்டிலே சமையல் வேலை மற்றைய கடமைகளை வேறு யாருடைய சரீர உதவியும் இன்றி தட்டந்தனியாக செய்து முடிக்கின்ற வைராக்கியத்தை எனக்குள்ளே வளர்த்துக் கொண்டமையாகும்  


மாகாத்மா காந்திஜீ அஸ்தி 


1948ம் ஆண்டு நான் 5ம் வகுப்பில் படிக்கிறேன்.  பாடசாலைக்கு வந்த அறிவித்தலின் படி இந்திய சுகந்திர தினத்தின் தந்தை மாகாத்மா காந்திஜி அவர்களின் அஸ்தி பிரதான வீதி வழியாக வருவதாகவும் அதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர்ப் பெருமக்கள் பிரதான வீதி ஓரமாக வரிசையில் நிற்கிறோம். மேற்கிலிருந்து ஊர்வலமானது கிழக்கு நோக்கி வருகிறது என்ற செய்தியை தொடர்ந்து பி.பகல் 3 மணியிலிருந்து சாய்ந்தரம் ஆறு மணிவரை காந்திஜின் கீர்த்தனைகளை பாடிக் கொண்டே நிற்கிறோம். “ரகு பதிராக வராஜாராம் பதீத பாவன சீத்தராம் ....“ இப்படியான பாடல்கள் எல்லோர் வாயிலிருந்தும் ஒலிக்கின்றது. எத்தனையோ வாகனங்கள் அணி வகுக்க முதல் வாகனத்தின் முகப்பு பக்கத்தில் காந்தி தாத்தா கதர் உடை அணிந்து கையில் ஊன்று கோலுடனும் மூக்கில் கண்ணாடியுடனும் காட்சியளிக்கின்ற பெரிய படம் மாட்டப் பட்டிருக்கின்றது. அப்பாட கண்கொள்ளக் காட்சி! வயது 10 என்றாலும் அந்த சுகந்திர தந்தையின் உருவத்தைப் பார்த்து வணங்குகின்ற அந்த பாக்கியம் மேற்படி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தமையால் தானே கிடைத்தது. 


மாணவர் சங்கக் கூட்டம் எங்கள் மெய்கண்டான் பள்ளிக்கூடத்தில் மாதத்தில் இரு  தடவைகள், அதாவது 14 நாட்களுக்கு ஒரு தடவை புதன்கிழமைகளில் மதிய உணவு முடிந்தகையோடு மாணவர் சங்கக் கூட்டம் ஆரம்பமாகும். முதலில் கூட்டத்தின் தலைவர் எழுந்து “தேவாரத்துடன் மாணவர் சங்கக் கூட்டம் ஆரம்பமாகும்” என்று கூறியவுடன் ஒரு மாணவர் தேவாரமும், புராணமும் பாடி “நாமப்பார்பதிபதியே” என்று கூற நாங்கள் “அரஹரமகாதேவா” என்று கூறிய பின் இருக்கைகளில் அமர்வோம். ஒவ்வொரு நிகழ்ச்சியாக கூட்டத் தலைவர் எழுந்து …………..


1. ”சென்ற கூட்ட அறிக்கை” என்று கூறியதும் செயலாளரினால் அறிக்கைக் கொப்பி வாசிக்கப்பட்டு தலைவரின் பார்வைக்கு கையளிக்கப்படும். 


2. ”தனாதிகாரி அறிக்கை” என்று கூறியவுடன் வரவும், செலவும் வாசிக்கப்பட்டு தலைவரின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்படும். 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை படிக்கும் ஒவ்வொரு மாணவரும் கொடுக்கும் 5 சதமும் தவறாது கணக்கில் வரவு வைக்கப் பட்டிருக்கும். 


3. அடுத்தாக “மெய்கண்டான்” என்ற பெயரில் பத்திரிகை கையெழுத்துப்பிரதி வாசிக்கப்படும். அதில் ஒவ்வொரு வகுப்பும் குட்டிக்கதை, விடுகதை, பழமொழி, நாட்டு நடப்பு என்ற தலைப்பில் எழுதிப் பத்திராதிபரிடம் ஒரு வாரத்துக்கு முன்னரே கையாளிப்பர். 


4. இறுதியில் தேவாரம் புராணத்துடன் கூட்டம் இனிதே நிறைவேறும். வழமையான நேரத்திற்கே பாடசாலை விடப்படும். 


பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் வளர்ச்சியிலும் உயர்விலும் தலைமையாசிரியர் அவர்களுடன் உதவி ஆசிரியர்களும் உள்ளுர் பெரியார்களும் ஒத்துழைத்தமையால் தான் வியத்தகு துரித முன்னேற்றத்தை மேற்படி பாடசாலையால் அடையமுடிந்தது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்ந்ததால் , பெரும்பான்மையான பண்ணாகம் மக்களிடம் சாதித்துவேச எண்ணமே கிடையாது. திறமை யாரிடம் இருக்கிறதோ அந்த பிள்ளையை பாராட்டவும், இன்னும் ஊக்கப்படுத்தவும் நிர்வாகம் தவறியதே கிடையாது. 


வழக்கம்பரை முத்துமாரி அம்பாளின் தேர் திருவிழா வாணி விழாவைப் போன்று தான் ஆணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முதல் நாள் வழக்கம்பரை முத்துமாரி அம்பாளின் தேர்திருவிழா உற்சவம் நடைபெறும். பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவம். ஆணி அமவாசை வந்து 5ம் நாள் கொடியேறி 10ம் நாள் (வளர்பிறை சதுர்த்தசி திதி) தேர்த்திருவிழா. அந்தநாளில் தான் நயினாதீவு நாகபூசணி அம்பாளின் தேர் உற்சவமும் வரும். அருள்மிகு ஸ்ரீ வழக்கம்பரை முத்துமாரி அம்பாளின் 10ம் நாள் தேரில் அன்று எல்லை மானப்பந்தல் என்று அழகிய சொற்களால் எங்கள் பாடசாலையில் இரண்டு பெரிய “கேற்றும் “ (gates) திறந்து விடப்பட்டு வாழைமரம் வழைக்குலையுடன் அதைவிட நுங்குக் குலைகள், தென்னம் பூக்கள், கமுகம் பூக்கள், ஈச்சம் பழக்குலைகள் இப்படி யாழ்ப்பாண மண்ணுக்குரிய பாரம்பரிய கொடைகளான பனை, தென்னை, வாழை, கமுகு, ஈச்சம் ஆகிய இயற்கை காய்களும் பூக்களும் வளர்ந்த மாணவர்கள் ஓடியோடிச் சென்று கொண்டு வந்து சோடனைகள் செய்து அழகு படுத்தி, அந்த எல்லை மானப் பந்தலை காண்போரின் கவனத்தை ஈர்க்கும் படியாக வைத்திருப்பார்கள். 


சரஸ்வதி பூஜையை விட தேர் உற்சவத்திற்கு “பஞ்சாமிர்தம்” என்ற ஒரு விசேட பதார்த்தமும் முக்கனிகளுடன் பேரீச்சம்பழமும், மாதுளம் முத்துக்களும் சேர்த்து  தயாரித்து, தேர் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் நேரத்திற்கு முன் பந்தலுக்கு வந்து விடும். இந்த வேலையை மாத்திரம் ஆண்பிள்ளைகள் செய்வார்கள். ஏனெனில் அதிகாலை தொடக்கம் 1 மணி வரை சமையல் அறையில் சக்கரைப்பொங்கல், சுண்டல் கடலை, வடை, மோதகம், அவல் என தயாரித்து களைத்தவர்கள், காலையில் குளித்து விட்டு வந்து வேலை செய்திருந்தாலும் முகங் கழுவி நல்ல உடுப்புகள் மாற்றி ஆறுதல் எடுப்பார்கள். 


முதலில் செய்வது: 1. சுண்டல் கடலை, 2. வடை, 3. சக்கரை பொங்கல், (ஆறிய பின் கிண்ணத்திலிட்டு “தளிசை வடிவத்தில்” செய்து வைப்போம். வருவோருக்கு பாதியாகவோ கால்வாசியாகவோ பகிர்ந்து அளிக்க இலகுவாகும்) 4. மோதகம், 5. அவல் (நேரத்தோடு பிசைந்து வைத்தால் புளித்துவிடும்) அவலை நனைய விட்டு கல்லாரித்து பூர்க்க விடப்பட்டு பின்னர் தான் தேங்காய்ப்பூ, சீனி, ஏலரிசித்தூள் ஒன்று சேர்ப்போம். அப்படி ஆசிரியர்களின் வழிகாட்டல் மிகமிக ஊசிதமானது. 


சுண்டல் கடலை செய்வதற்கு கொண்டல் கடலை வாங்கி வந்து சுத்தம் செய்து முதல்நாளே நனைய விட்டு விடுவோம். சுண்டல் கடலை தேங்காய் அதிகமாக கடலைக்கு சொட்டு வெட்டிப் போட வேண்டும். பொங்கலுக்கு, தேங்காய் திருவிப் பால் பிழிந்து சக்கரையுடன் கலந்து பொங்கலுக்குள் விட வேண்டும். 


தேங்காய் அதிகப்படியாக வாங்குவோம். அவல் பிரதானமானது அதுவும் புடைத்து, சுத்தம் செய்து முதல்நாளே வைத்து விடுவோம். ஆகவே பொங்கல், சுண்டல், அவல், மோதகம் இவற்றைவிட கும்பம் வைக்க, உடைக்க, நாள் பாடம் தொடங்குமிடத்துக் கும்பம் வைக்க, உடைக்க தேங்காய் பெரிய தொகை வாங்கப்படும். 


வடைக்குரிய உழுந்து அதிகாலையில் தான் நனைய விட்டு, (நெடுநேரம் உழுந்து நனைந்தால் எண்ணெய்யை உறிஞ்சிவிடும்) 8.00 மணிக்கே ஆட்டுக்கல்லில் ஆட்டத் தொடங்கி விடுவோம். 10.00 மணிக்கு பூசை ஆரம்பிக்கும் போது சகல உணவுகளும் தயாராகி படைப்புக்கு பெரிய கட்டிடத்திற்கு கொண்டு வந்து வைத்து விடுவோம்.  எண்ணெய் தாளிப்புச் சாமான்கள் உப்பு, வெங்காயம், கடுகு, செத்தல்மிளகாய் இப்படி மளிகை கடை பட்டியலே பெரிதாக இருக்கும். சின்ன வயதில் மெய்கண்டான் பள்ளிக்கூடத்தில் இந்தப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்ட ஆண், பெண் அத்தனை பேரும் “தங்கள் வாழ்க்கை சீவியத்தில் எந்த வேலையும் பெறுப்புணர்ச்சியுடனும், தலைமை தாங்கும் முன் ஊக்கத்துடனும், மன உறுதியுடனும் செயற்படுவார்கள்” என்பது திண்ணம். சரஸ்வதி பூசை விழாவிற்கு ஆசிரியர்கள் சகலரும் ஒத்துழைப்புத் தருவார்கள். சில பிள்ளைகளின் தாய்மாரும் தாமாக முன் வந்து சரீர உதவி செய்வார்கள். வேலை செய்து களைத்துப் போகும் மாணர்களுக்கு பண்டிதர் அவர்களின் ஆலோசனைப்படி சீனி, தேயிலை, டின்பால் வாங்கித் தரப்படும். 


1925 -1950 நிகழ்ச்சிகள் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையின் 25ம் ஆண்டு நினைவாக 1950ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. முதல்நாள் நிகழச்சிகள் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், வட்டார வித்தியாதரிசி போன்ற அரசாங்க மேலாதிகாரிகளுடன் மிகமிகச் சிறப்பாகக் கட்டொழுங்குடன் நடைபெற்று முடிந்தது. 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரைபடித்துக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு அவர்கள் எந்த எந்தப் பாடங்களில் திறமை சாலிகளாக விளங்குகின்றார்களோ அவர்களுக்கு வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் முன்னிட்டு பரிசில் வழங்கும் நிகழ்ச்சி அடுத்த நாள் நடத்தப்போவதாக முதலே பாடசாலை நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஏனெனில் தமது பிள்ளைகள் மேடையிலேறி பரிசுபெறும் காட்சியை காண்பதற்கு அவர்களது பெற்றாரும் நெருங்கிய உறவினர்களும் வருகை தருவார். நிகழ்ச்சி நிரலின் படி இயல், இசை, நாடகம் என்ற முத்தழிழ் நிகழ்ச்சிகளையும் கௌரவ விருந்தினர்களளின் பார்வைக்கு நிகழ்த்திக் காட்டுவதோடு பரிசில் வழங்குவதையும் வைத்திருந்தால் பொழுது புலர்ந்து விடும். மாணவக் குழந்தைகளும் தூங்கி விடுவார்கள். அத்துடன் அந்தப் பெரிய கட்டத்தினுளள் ஒரு குறிப்பிட்ட அளவு சனங்களைத்தான் அடக்கமுடியும். ஆகவே இரண்டாம் நிகழ்ச்சியாக சிறுவர்களின் நடித்தல், உடற்பயிற்சி, விந்தை இவற்றுடன் “காவடி” என்ற சு.சுப்பிரமணியம் 4ம் ஆண்டு மாணவன் அரை மணித்தியால நேரமாக நிகழ்த்திக் காட்டப்பட்டு சகல மாணவர்களின் கைதட்டல் கரவொலியை பெற்றது. சிறு வகுப்பிலிருந்து ஒவ்வொரு பாடத்திலும் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 


ஒருவருக்கு கிடைத்தது மற்றொருவருக்கு கிடைக்காமல் அவர் வெறுங்கையுடன் வீடு போகாமலும் அவர்களின் பெற்றதாய், தந்தையர் மன விரக்தியடையாமலும் மிகமிக சாதுரியமாக எல்லோருக்கும் பரிசு என்ற சமநீதி நாட்டப்பட்டது. உதாரணமாக திறமை கூடிய மாணவன் 5 பாடங்களில் பரிசைப் பெற்றுவிட்டால் மற்றவர்களின் மனம் தோல்வி என்ற வேதனையை அனுபவிக்க கூடாது என்பதற்காக 7ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த எனக்குத் தமிழ்மொழிக்கும், 4ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் தங்கைக்கு கணித பாடத்திற்கும் பரிசு கிடைத்தது. எனது தம்பியும் மேற்படி பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தார். 2ம் வகுப்பு சிறுவர்களுக்கு, 2 பாடம் தான். தம்பிக்கு எந்தப் பரிசும் இல்லை. விழா முடிந்து வீடு போக இரவு 10 மணியாகிவிட்டது. மின்சாரமில்லாத அந்தகாலத்தில் வான வீதியில் தவழ்ந்து வரும் நிலவொளியில் நாங்கள் அந்த 2 நாட்கள் இரவுகளிலும் வீடு போய்ச் சேர்ந்தோம். கையில் ரேச்சுலைற் (torchlight) இருக்கும். எனக்கு கிடைத்த பரிசுகள் முகத்துக்குப் பூசும் பவுடர் டப்பாவுடன் கொப்பிகள் 3, பென்சில்கள் 3 தனக்கு ஒன்றும் வழங்கப்படவில்லையே என்று சிறுவனான தம்பி கவலைப்படுவார், என்று அவருக்கும் பகிர்ந்து வழங்கி அவனை சந்தோஷப்படுத்தினோம். 


எங்கள் ஆசிரியப் பெருந்தகைகள் அந்த 2 நாள் நிகழ்ச்சிக்காக எத்தனையோ நாள் ஒத்திகை பார்க்கின்ற முன்னோடிக் காட்சிகள் மாணவர்கள் பார்த்து மகிழும்படி நிகழ்த்தி இருந்தன. படிப்பும் பாதிக்கப்படக் கூடாது அதேநேரத்தில் வெள்ளிவிழா நிகழ்வு பார்வையாளர் மனதைக் கொள்ளை கொள்ளவேண்டும் என அயற்கிராமத்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் வந்து பார்த்து பாரட்டி மெச்சி மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்ட செய்தியை எங்கள் சிநேகிதிகள் கூறும் போது கேட்பதற்கே எவ்வளவு பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது தெரியுமா? இந்த வயது போன நேரத்தில் அந்த மறக்க முடியாத நினைவுகள் மீண்டும் மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி எண்ணத்தை மீட்டிப் பார்ப்பதில் ஏதோ நேற்று தான் மேடை ஏறி பரிசு வாங்கி வந்த கர்வமும் இறுமாப்பும் ஏற்படுகிறது. இது மனநிறைவு. மெய்கண்டானில் படித்த அனைவருக்கும் பகிரப்படுத்துவதாக தங்கள் மாணவர்களின் மனதை மகிழ்விற்பதற்காக ஆசிரிய மணிகள் மேற்கொண்ட பெரு முயற்சிகளை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். 


“சீன்” எனப்படும் திரையும் ஒலிபெருக்கி எனப்படும் உயர்சப்தக் கருவியையும் மைக் என்ற ஒலி வாங்கியும் தவிர அந்த காலத்தில் வேறு எந்த வசதிகளும் இருக்கவில்லை. இப்போ கமரா, வீடியோக்கமரா, கைபேசியில் படம் பிடிக்கும் இலகுமுறைகள் என எத்தனையோ நவீன சாதனங்கள் வந்துவிட்டன. விழா நடப்பதற்கு 1 மாதத்திற்கு முன்னரே புகைப்படங்கள் பிடிக்கப்பட்டு விட்டன. 1. ஆசிரியர்கள் 2. பள்ளிக்கூட ஆசிரியர்களும் மாணவர்களும் 3. பழைய மாணவர்சங்கம் 4. உள்ளுர் பரிபாலன சபை .


இந்த படங்கள் யாவும் “வெள்ளிவிழா மலர்” என்ற சஞ்சீகையில் இடம் பெற்றிருந்தன. 10ஆண் ஆசிரியர்களும் பெண் ஆசிரியைகளும் (திருமதி. சிவபாக்கியம் நாகலிங்கம், திருமதி.நல்லம்மா தங்கராசா) அந்த புகைப்படத்தில் ஆசிரியர்களும் என்ற அபூர்வமான காட்சியில் இடம் பெறுகின்றன. நான் அப்போ வயது 12, 7ம் வகுப்பு. 2 பெண் ஆசிரியைகளுக்கு பின்புறமாக மத்தியில் நிற்கின்றேன். அதை நான் பெருமையாகவும் சிறப்பாகவும் கருதுகின்றேன. 1956-2016 இந்த 60 வருடங்களில் நான் பிறந்த இல்லத்தில் பாதுகாப்பாகப் பேணி வைக்கப்பட்டிருந்த பல புத்தகங்களுள் இந்தப்புத்தகமும் இருந்தது. இப்போ அதைதான் தேடிக் கொண்டிருக்கிறேன். சேதமாகி விட்டதோ! கிடைத்தால் மகிழ்வேன். அது பெரிய சாட்சியல்லவா? 


நான் 6ம் வகுப்பு படித்தகாலத்தில் செல்வி. அங்கையற்கண்னி கணபதிப்பிள்ளை என்ற ஒரு ஆசிரியை எமது பாடசாலைக்கு வந்து கோலாட்டம், கும்மி, நடனம் போன்றகவின் கலைகளை பழக்கிற ஆசானாக கடமையாற்றினார். அவர் பாடசாலையிலிருந்து புறப்பட்டு வழக்கம்பரை அம்பாளின் வாயிலைகடந்து போகையில் தென்படும் பெரிய கேணிக்கு அயலிலுள்ள கமலா தேவியக்கா வீட்டில் வாடகைக்கு இருந்தார். முற்பகல் சிறுவர்களின் பாலர் வகுப்பு ஆசிரியராக கடமை பிற்பகல் எங்களுக்கு கலை நிகழ்ச்சிகளைப் பயிற்றுவிப்பார். 


1. ஒரு பாடல் 12 சிறுமிகள் பங்குபற்றும் நிகழ்ச்சிகள் ஆறிருவர் சிறுவர் ஒன்றாய் அன்புடன் கூடித் துள்ளி அணியாய் நடந்திடுவோம் அழகுடன் நாடி பாங்குடனே நான் பழனம் பார்த்திடுவோம் - அங்கு தேங்கிடாமலே கழனி சேர்த்திடுவோமே (ஆறிருவர்) 


2.பழம் பொறுக்க பறந்து வருமம் பறவைகள் நமே பழம் பொறுக்க பறந்து வருமம் பறவைகள் நமே அங்கே கனிவுடனே கூச்சலிடும் குருவிகள் நமே அங்கே கனிவுடனே கூச்சலிடும் குருவிகள் நமே 


3.கூர் அரிவாள் கொண்டருவி அரிந்திடுவோமே நல்ல குவிய வைத்த பலகையிலே பிடிபிடியாக ……….


குறிப்பு - இந்த ஆசிரியை திருமணமாகி 3 வருடங்கள் கழிந்து திருமதி. குமரசாமி அங்கையற்கண்ணியாக வந்து 1 தவணை காலம் கடமையாற்றி விட்டு தனது செந்த ஊரான நயீனதீவுக்கு மாற்றலாகி விட்டார். இதனைவிடஅவர் பல பாடல்களுக்கு அபிநய நிகழ்ச்சிகளை எமக்குப்பழக்கி இருக்கிறார். அதாவது தேரில் வாறாண்டி வேலன் தெருவில் வாறாண்டி ஆனைமுகன் வேலனுக்கு அண்ணனாமடி அவனைக்காட்டி வள்ளிப் பெண்ணை மணந்து கொண்டனாமடி மலைகள் தோறும் குடியிருக்கும் வழக்காமம்மடி அவன் மாதர்களை மயக்கிவிடும் செகுசு காரண்டி 


இதைவிட 12 பேர் பாலகோபலனைப் பாடிடுவோம் வாரீர் பாலர்கள் நாமெல்லாம் பாங்குடனே நீலவண்ணனைத் தேவகிபாலனைக் கோலகலமாகப் பாடிடுவோம். (பாலகோபல) எட்டிஎட்டி உறி ஏறிடுவானவன் சட்டித் தயிரைக் குடித்திடுவான் முட்டி வெண்ணை திருடித் தின்பானவன் கொட்டி உடைத்துமே சென்றிடுவான் (பாலகோபல) காலிற் சலங்கைகள் 'கலீர் கலீ" ரெனக் காதில் குண்டலங்கள் 'பளீர் பளீ"ரென மார்பில் பதக்கம் 'மினுமினு" வெனப் பார்க்கவே ஆனந்தம் ஆகுதடி (பாலகோபல) பாற்கடலில் பள்ளி கொண்டவனாமவன் பாவையர் உள்ளம் கவர்வானடி கோர்த்த குழலை ஊதிடுவானவன் கோபியர் உள்ளம் கவர்வானடி (பாலகோபல) இதைத விட கும்மிபாடல் 12 பேர் திண்ணையைத் திண்ணையைப் பாருங்கடி நல்ல தெருவில் திண்ணையைப் பாருங்கடி தண்ணிக்குடத்தை இடுப்பிலே வைத்தவள் தாம்புக் கையிறிடும் வேடிக்கையைபார்.. கும்மியடி பெண்கள் கும்மியடிநாடு குலுங்கிலக் கைகொட்டிக் கும்பியடி அள்ளிமிளகும், மல்லியும் மஞ்சளும் அம்மியில் வைத்தாள் அருகிலிருந்து தள்ளிக் குளவியைத் தன்னால் அரைக்கிற சாயலைக் காட்டுவம் தோழிப் பெண்கள்!................. 


இன்று பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் என்ற பெயரில் விளங்கும் மெய்கண்டான் பாடசாலை நாங்கள் படித்த காலத்தில் பண்ணாகம் மெய்கண்டான் உயர்தர பாடசாலை என்ற பெரிய பெயர்பலகை தாங்கிய காட்சி பிரதான வீதியில் போவோரையும், வருவோரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற பெரிய எழுத்தில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு மிளிர்ந்தது. இந்த மகாவித்தியாலயம் நாற்புறமும் காவல் தெய்வங்களாகிய அரண்களால் சூழப்பட்து. பண்ணாகம் கிராமத்தில் 1925ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 


இந்தப் பாடசாலை அமைந்த கிராமம் தெற்குப் புறத்திலே யாழ் -காரைநகர் பிரதான வீதியையும், வழக்கம்பரை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்பாள் ஆலயத்தைக் கொண்டுள்ளது. கிழக்கே சித்தங்கேணி பண்டத்தரிப்பு பிரதான வீதியையும் விசுவத்தனை அருள்மிகு முருகமூர்த்தி கோவிலைக் கொண்டது. அதுபோல மேற்குபுறத்தில் காலையிலே கூடுகிற சத்தியக்காடு என்ற பெயர் கொண்ட சந்தையையும், அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி கோவிலையும் எல்லையாகக் கொண்டது. வடக்குப் பக்கத்தில் 'பங்கிரான்' வைரவர் கோவிலையும் இன்னும் சற்றுவடக்கே இடும்பன் கோவிலையும் எல்லையாக கொண்டது. (பண்ணாகம் கிராமத்தில் பிறந்த பிள்ளைகள் இந்த இடும்பன் கோவில் வீதிக்கு அண்மையில் வீடும் கட்டி கடையும் நடாத்துகிறார்கள்)


1950 ஆண்டு பாடசாலை தொடங்கி வெற்றிகரமாக 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்தமையை முன்னிட்டு வெள்ளிவிழா கொண்டாடுவதாக தீர்மானிக்கப்பட்டு அதற்குரிய ஆயத்த வேலைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டன. பாடசாலைகளை அரசாங்கம் பெறுப்பேற்காத காலம் அது. இந்து பரிபாலனசபை, உள்ளுர் முகாமையாளர்கள், கிராமத்துப் பெரியோர்கள், ஓய்வுபெற்றச் சென்ற ஆசிரியப் பெருந்தகைகள், பழைய மாணவர்கள் என ஒரு பெரிய ஒற்றுமை பெருந்திய கூட்டணணியின் ஒத்துழைப்போடு விழாவிற்குரிய தயாரிப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்றன. 1950ம் ஆண்டு ஆரம்பத்தில் தாய்க்கட்டிடத்திற்கு இடப்புறமாக இன்னொரு கட்டிடம் கட்டப்பட்டது. அதில் 5ம், 6ம், 7ம் வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. விழாவினைச் சிறப்புற நடாத்துவதற்காக பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரிய மணிகள் ஓய்வின்றி ஒத்துழைத்தனர். அக்காலத்தில் தலைமை யாசிரியராகக் கடமையாற்றிய செ.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஆலோசனைப் படியும், ஏற்கனவே படித்துவிலகிய ஆசிரியர்களாக கடைமையாற்றுவோரின் வழிகாட்டலின் படியும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நிகழ்ச்சிகளுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் திறமையை வெளிக்கொணர பயிற்சிகள் தொடங்கின. அதேநேரத்தில் படிப்பும் தடைப்படாது இருக்க ஆசிரியர்கள் கூடுதலாகச் சேவைசெய்தனர். 


8ம் வகுப்பில் படிக்கின்ற அக்காமார் 6 பேர் பங்குபற்றுகின்ற “வட்ட மேசை மாநாடு” என்ற ஒரு அறிவுசார் நிகழ்ச்சியை எங்கள் பண்டிதர் ஜயா அவர்கள் பயிற்று வித்தார். அதில் பங்கேற்ற அக்காமார் நா.பக்கியம், சி.நேசமலர், து.மனோன்மணி, இ.முத்தம்மா, கு.பொன்னம்மா (செல்லம்), ச.கமலாதேவி ஆகியோரவார். ஒவ்வொரு பெண்களும் தங்கள் தங்கள் கலாச்சாரத்தின் படிசேலை அணிந்து மேடை மீது இருந்தனர். தங்கள் சங்கத்திற்கான அடையாளம் காட்ட ஒரு கொடி அமைக்க வேண்டும் என முடிவெடுத்தனர். எந்த நிகழ்ச்சியும் சிரிப்பொலியுடன் முடிவடைய வேண்டும் என்பதில் பண்டிதர் ஜயா மிகவும் ஆர்வமாக இருப்பார். உருத்திராட்சி என்ற ஒரு சகோதரி பாட்டி வேடம் இட்டு மேடை மீது ஊன்று கோலுடன் ஏறி “என்னுமடிமக்காள்! கொடி கொடி என்று கொக்கரிக்கிறியாள் அது என்ன சேவற்கொடியோ? மயில் கொடியோ?” என்று கேட்டு தனது கையிலிருந்த பொல்லினால் மேடைக்கு ஒரு இடியிடிக்க சீன் விழுகிறது. பார்வையாளரின் சிரிப்பு அலை அடங்க அதிக நேரம்பிடித்தது. 


அதுபோல “மனோன்மணியம்” என்ற நடகத்தையும் பண்டிதரய்யா அவர்கள் நெறிப்படுத்தினர். அவருக்கு உதவியாக உயர்தர  வகுப்பில் படித்த தொல்புரம்; புலோகதிரிலோகம் என்ற அண்ணா பாட்டு பழக்கினார். மீனாட்சி சுந்தரனால் எழுதப்பட்ட நாடகம் அது. காட்சிகளே எல்லாமாக 8 தடவைகள் திரை திறந்து மூடப்படும். மன்னன் ஜீவகன், மந்திரி குடிலன், இளவரசி மனோன்மணி, இளவரசன் புருஷோத்தமன் இவர்களைவிட மந்திரிமார், சேவகர்கள், தாதிப் பெண்கள் என ஒரு பெரிய எண்ணிக்கை இதில் வேல்முருகன் அண்ணா, தமோதிரம்பிள்ளை அண்ணா, குமாரசாமி அண்ணா, நல்லையா அண்ணா பிரதான பங்கேற்று திறம்பட நடத்தி மக்களின் பலத்த கரகோசத்தைப் பெற்றனர். அந்த காலத்தில் நடைமுறையில் “கிராமபோனில்” பாடும் பாடல்கள் இந்தநாடக இளவரிசி இளவரசனால் செந்தகுரலில் பாடப்பட்டது. முடிகள் கிரீடங்கள, உடைகள், உடைவாள், சாமரை பார்வைக்கு அப்படியொரு அற்புதம். 


மெய்கணண்டான் பள்ளிக்கூட சமயற்கூடத்தில் கற்றுக் கொண்ட வேலைகளும், சமையல் நுட்பத்திறன்களும் மெய்கண்டான் பாடசாலை வளவுக்குள் பெரிய கிணறு இருக்கின்றது. அந்தக் கிணறுக்கு இடது புறமாக சமையற் கூடம் ஆதாவது குசினி என்று கூறப்படும் (kitchen) ஒர் அமைப்பான இடம் அமைக்கப்பட்டது. சுற்றி வர உயரத்திற்கு மண் (குந்து) சுவர் வைத்து மேலேபனைமரச் சலாகைகளியினால் நாற்புறமு பாதுகாப்புப் போடப்பட்டது. மேற்கூரை தென்னோலை கிடுகினால் வேயப்பட்டது. பனைமரச் சலாகையினால் கதவுபோடப்பட்டது. கதவின் இருபுறமும் மரத்தினாலான கப்புகள் ஒரு பக்கம் மூன்று பிணைச்சல் போட்டுப்  பூட்டப்பட்டிருக்கும். மறுபுறம் சங்கிலியால் 2,3 சுற்றுச் சுற்றி (கப்பும் படலையும்) ஆமைப்பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்டிருக்கும். பண்ணாகம் வடக்கே உள்ள செட்டி குறிச்சி என்ற கிராமத்திலிருந்து சற்றுவயாதான செட்டியார் ஒருவரைதான் எங்கள் பண்டிதர் ஜயா அவர்கள் சிறுவர்களுக்கு பால் கரைத்துக் கொடுத்கும் பணிக்கு அமர்த்தியிருந்தார். அவர் பின் குடும்பியும் கழுத்தில்  உருத்திராட்சமும் அணிந்திருப்பார். எல்லோரும் அந்த பெரியவரை “செட்டியார்” என்று அழைப்பதனால் பெயரை கேட்டறியும் தேவையும் ஏற்படவில்லை. அரசாங்க மாணவர் போஷக்குத் திட்டத்தின் படி மாதம் ஒருமுறை (சிறுவர்களுக்கு தயார் படுத்தி வழங்குகின்ற) பால் பவுடரும் அதற்குரிய சீனியும் வாகனத்தில் கொண்டு வரப்பட்டுபள்ளிக் கூடத்திற்கு வழங்கப்படும். இந்தப் பொறுப்பினை எங்கள் பண்டிதர் ஜயா அவர்களே ஏற்று நடத்தி வந்தார். மேற்படி சமையற் கூடத்தினுள் சுடுநீர் கொதிக்க வைக்க ஒரு கிடாரம். அதை மூடுகிற வட்ட வடிவிலான பலகை (கைப்பிடி வைத்த சூடாங்கு) பெரிய இரண்டு வாளிகள், சிறிய இரண்டு வாளிகள் பெரிய அகப்பைகள் இரண்டு (மாவு கட்டி பாடாமல் கடைய) பெரியமத்து ஒன்று, வடிகட்ட ஒரு அரிக்கன் இவை யாவும் பால் தயாரிப்பதற்கு. விறகு பாடசாலை வளவினுள் அப்போ நிறையப் பனைகள் இருந்ததனால் பனைமரமட்டை, கொக்கறை, பன்னாடை இவற்றைச் செட்டியாரே சேகரித்து வைத்திருப்பார். மழைகாலத்தில் நனைந்து விடாமல் கயிறுகளினால் அசைவு கட்டி அதன்மேல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அழகுற கட்டுக்கட்டி அடுக்கி வைத்திருப்பார். பள்ளி விடுமுறைக் காலங்களில் கப்பின் வழியே மேலேறி வரும் கறையான் மேற்கூரையை மாத்திரமல்ல, விறகுகட்டி வைத்திருக்கும் அசைவினையும் அரித்துநாசம் செய்துவிடும். ஒருமுறை தாக்கப்பட்டதனால் செட்டியார் தினமும் வந்து சுத்தப்படுத்தி பார்வையிட்டுச் செல்வதில் கவனமாக இருந்தார். மேற்படி பால் தயாரிப்பதற்கான சமையற் கூடத்தினுள் மதிய உணவுக்கு வழங்கப்படும் பாணுக்கு (Bread) சம்பல் (பச்சடி) தயாரிக்கின்ற வேலையும் ஆரம்பமானது. அதற்குரிய மளிகைச் சமான்களைக் கொள்வனவு செய்வதற்கும் தரப்படும் பாண் எண்ணிக்கையை மாணவர் வரவுத் தொகைப்படி பாலர் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணக்கெடுத்து குறித்து வைக்கும் கொப்பி சகிதம் இந்தக் கடமையையும் பண்டிதர் ஜயாவே மேற்கொண்டிருந்தார். எப்படித் தனது கற்பித்தலுக்கு மேலாக இந்த மேலதிக வேலையையும் பொறுமையுடன் மேற்கொள்ளுகிறாரென மாணவர்களாகிய எமக்கு அதிசயமாக இருக்கும். வழக்கம்பரை முத்துமாரி அம்பாளின் தேர் திருவிழா 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை திங்கள் தொடக்கம் வெள்ளி வரை கிரமமாக ஜந்து மாணவிகள் வீதம் சென்று அந்தப் பணியை செவ்வனே செய்துமுடிப்போம். மேல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அக்காமார் இதனை மேற்பார்வைசெய்வார். செல்வி தெய்வயானைப்பிள்ளை என்ற பெயருள்ள ஒரு அக்கா அன்றாடம் கடையில் வாங்கும் பொருட்களையும் விலைப்பட்டியல்களையும் ஒப்பு நோக்குமாறு தந்து 7ம் வகுப்பில் 1950ம் ஆண்டில் படித்த போது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. வாங்குகின்ற சாமன்களின் தொகையும் கொள்வனவு செய்யப்பட்ட பாண்களின் எண்ணிக்கையும் ஒப்புநோக்கப்பட்டு தெய்வானைப்பிள்ளை அக்காவின் கையொப்பமும் பெறப்படும். உதாரணமாக அன்று பாடசாலை மாணவர் வரவு அரிவரி தொடக்கம் 10ம் வகுப்பு வரை சுமார் 275 என்றால் (ஒரு பாண் 3 துண்டகளாக வெட்டுவோம்) 92 றாத்தல் சங்கானையிலிருந்து வரும் பேக்கரி விநியோகஸ்தரிடம் கொள்வனவு செய்யப்பட்டும். சம்பல் தயாரிப்பதற்குதேவையான மூலப் பொருட்கள் அன்றாடம் வாங்கிச் செய்யப்படும். அதற்குரிய தளபாட உபகரணங்கள் யாவும் ஏற்கனவே பாடசாலை சமையற்கட்டினுள் இருந்தன. அவற்றை யார் வாங்கிவைத்தார்கள் என்ற விபரம் சிறுமியாக இருந்த எனக்குப் புரியவில்லை. 


1.தேங்காய் உடைப்பதற்கு 2 கத்திகள், ஆட்டுகல் பெரியது 2.தேங்காய் திருவுவதற்கு 4 திருவுபலகைகள். 

3.தேங்காய் திருவுவதற்கு ஒரு பெரிய 3'x3' சதுர பலகை ஒன்று. 4.ஒரு பெரிய தாச்சிசட்டி. 

5.ஒரு பெரிய கண் அகப்பை (இரும்பு) 

6.ஒரு சிறிய கண் அகப்பை (இரும்பு) 

7.உப்பு போட்டுவைக்க மண்குடுவை அதை மூடி வைக்க மண்சட்டி 

8.எண்ணை போத்தல் 

9.புளி கரைக்க சிறிய கிண்ணம் (மண்சட்டி) 

10.சிறிய கத்திகள் இரண்டு (வெங்காயம் உரித்து நறுக்கவும் சம்பல் தாளிக்க செத்தல் மிளாகாய் நறுக்கவும்) 


அத்தனை தளபாடங்களும் வேலை முடிய கணக்கு எடுத்து ஒரு ஆசிரியை சண்டிலிப்பாய் சோதிப்பிள்ளை என்பவரிடம் காண்பிக்கப்படும். சம்பலுக்கு கொள்வனவு செய்த பொருட்களின் அளவுகளும் செய்முறையும் :

1.செத்தல் மிளகாய் 1 இறாத்தல் 

2.தேங்காய் 20 

3.பழப்புளி 1/4 இறாத்தல் 

4.உப்பு 1இறாத்தல் 

5.தேங்காய் எண்ணெய் 1போத்தல் 

6.தாளிதல் சாமான்கள்: 1.பெருஞ்சீரகம்-4அவுண்ஸ் 2.கடுகு 4 அவுண்ஸ் 3.வெங்காயம் 1⁄4 இறாத்தல் 4.கருவேப்பிலை சிறியபிடி உப்பு, புளிமிஞ்சினால் சேகரிக்கும் மட்பாண்டத்தினுள் (குடுவை) போட்டு வைக்கப்படும். அநேகமாக ஒன்றும் சேதமாகாமல் பார்த்துக் கொள்ளப்படும். 


முதலில் செத்தல் மிளகாயின் காம்புகள் ஒடித்து தண்ணீருக்குள் ஒரு அமுக்கு அமுக்கிப் பிழிந்து கொதிக்கும் எண்ணெயினுள் -சின்ன நெருப்பில் போட்டு போட்டு கண் அகப்பையால் வடித்தெடுத்த பின் தாச்சியையும் அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு விடும். இந்த வேலையை ஒருவர் செய்ய மற்றவர்கள் ஆளுக்கொரு திருவுபலகையில் உட்கார்ந்து உடைத்து தண்ணீருக்குள் போட்டு வைத்த தேங்காய் பாதிகளை ஒருவர் தும்பு பொச்சு அகற்றி சுத்தம் செய்து கொடுக்க அரைமணித்தியாலத்திற்குள் அவ்வளவு தேங்காய்களும் துருவி முடிக்கப்பட்டுவிடும். செட்டியார் அவர்களும் தானும் ஒரு ஆளாக இருந்து பங்குபற்றிச் சரீர உதவி செய்து கொடுப்பார். முதலில் பொரித்த மிளகாய் உப்புச் சேர்த்து ஆட்டுக்கல்லில் அரைத்து வழிக்கப்படும். கை எரியாமல் இருப்பதற்காக திருவுகின்ற தேங்ககாய்ப்பூவும் சேர்த்துச் சேர்த்து ஆட்டி ஆட்டி சிறிய கரண்டி கொண்டு வழித்து வாளிக்குள் போடப்படும். இப்படி அதுவும் அரை மணித்தியாலங்களுக்குள் “கடகட” என்று வேலை முடிந்துவிடும். இன்னொருவர் வெங்காயத்தை உரித்து நறுக்கி கொஞ்சம் (முதலே எடுத்து வைத்த) செத்தல் மிளாகாயையும் நறுக்கி மிளகாய் பொரித்த எண்ணெய்யை (புகை மணம் அடிக்குமென்பதால்) புதிய எண்ணெய் சிறிதளவு தாச்சியுள்விட்டு முதலில் கடுகு பெரிஞ்சீரகம் செத்தல் மிளகாய் துண்டகள் வெங்காயம் கறிவேப்பிலை விரல்களால் பித்துப் போட்டு தாளிதம் இறக்கும் முன்னர் நனைய விட்டுக் கரைத்தெடுத்த புளியையும் விட்டுக் கொதிக்கவிட்டு அப்படியே சம்பல் வாளிக்குள் கலக்கப்படும். இந்த இடத்தில் ஒன்றினை குறிப்பிடல் அவசியம். அரிவரி, முதலாம் வகுப்பு குழந்தைகளுக்கு முதலே காரம் குறைவான சம்பல் சின்ன வாளிக்குள் பிறம்பாக எடுத்துவைத்து தாளிதத்து இருக்கும். செத்தல் மிளகாய் துண்டுகளை அகற்றியே சேர்க்கப்படும். 


குழந்தைகளுக்கு அதிக காரம் கூடாது என ஆசிரியர் சிவபாக்கியம் அவர்கள் வந்து பார்த்து அன்பான ஆலோசனை வழங்குவார்கள். பள்ளிக்கூட மாணவர்கள், பழைய மாணவர்கள், ஊர் பெரியார்கள், அயலிலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் என மண்டபம் கொள்ளாத சனக்கூட்டம். விசேட விருந்தினர்கள் மேடை மீது அமர்ந்திருக்க மற்றையோர் தரையில் உட்காருகின்றோம். 


ஒரு மாணவனால் “ஒரு கண்” என்ற தலையங்கத்தில் பள்ளியின் ஸ்தாபகராகிய அமரராகிவிட்ட திரு. கந்தையா அவர்கள் பற்றிய பேச்சு பேசப்பட்டது. அது கருத்துப் பொதியலை உள்ளடக்கிய பேச்சு. பள்ளிக்கூடம் வரும் போது பனை மரத்தடியிலே “எனக்கொருகண் உனக்கொருகண் என்று சிறுவர்கள் நுங்கு குடிக்க குரல் எழுப்பி இருக்கிறார்களாம். பள்ளியின் உள்ளே நுளைய முன் கிணற்றடிக்குச் சென்று கால் கழுவிவிட்டு வந்து பார்க்கையில், எத்தனையோ பெரியார்களின் உருவப்படங்களின் மத்தியில் நடுநாயகமாக அமரர். கந்தையா அவர்களின் உருவப்படம், மாலை போடப்பட்டு காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்வதாக இருப்பதை, அவரே மலேசிய நாட்டிலிருந்து உழைத்து சகோதரர்கள் நண்பர்கள் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் முதலானவர்களின் ஒத்தழைப்புடன் இந்தப் பள்ளிக்கூடத்தை ஸ்தாபித்தவர் ஆவார்” என்று எல்லோர் மனதிலும் படியும்படி பேசி முடித்தார். குரவொலி வானைப் பிளந்தது. 


அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சிகரம் போன்ற உருவ அமைப்புடன் கீழே  9 பேர் அடுத்தபடி 7 பேர், அதற்கு மேல் 5 பேர், அதற்கு மேல் 3 பேர், நட்ட நடுவே தனியொருவர், என்ற நடு முகட்டைத் தொடுக்கின்ற ஒரு அதிசய அமைப்பு, 25 மாணவர்களைக் கொண்டது. இதனைப் பயிற்சி நெறிப்படுத்தியவர் உடல் பயிற்சி ஆசிரியராக விளங்கிய PT தியாகர் என எல்லோராலும் மதிப்புடன் அழைக்கப்படுகின்ற நடராஜா தியாகராசா அவர்கள் தான்.  6 அடி மேலான உயரமும் அழகிய உடற்கட்டும் கொண்டவர் மலேசிய நாட்டில் பிறந்து பெற்றோருடன் தாய்நாடு வந்தவர். அவரது சேவை சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் தான் இருந்தது. இருந்தாலும் தனது கிராமத்து பாடசாலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிவிழா நிகழ்வில் பார்வையாளரைக் கவரும் வகையில் ஒரு ஆச்சரியக் காட்சி 3 நிமிடங்களுக்குள் நிகழ்த்திக் காட்ட வழிவகுத்த ஆசான் ஆவார். பெருமைக்குரிய மகான்.


12 பெண்கள் பங்கு பற்றிய கோலாட்ட நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்தது. 6 பேர் ஒரே மாதிரியான பாவாடை சட்டை மற்ற 6 பேர் வேறு நிறத்தில் பாவாடை சட்டை ஒன்றுவிட்ட ஒருவராக நின்று இறுதியில் மேலே கட்டப்பட்டுள்ள கையிற்று பின்னல் வடிவில் பின்னப்பட்டு பிறகு விடுவிக்கும் வரையில் மிக ரசனைக்குரிய கோலாட்டமாக அமைந்தது. அதன் பின்னர் அழகிய இரு பெண்கள் சமமான ஒரே உயரத்திலும் உடல்வாகிலும் இரட்டைப் பிள்ளைகள் போல நடனம் சினிமாப் படங்களில் வரும் யுவதிகள் போன்ற மினுமினுக்கும் மேலாடைகள் “நந்தகோபலனோடு நான் ஆடுவேன்” என்ற பாடலுக்குதான் மேடைக்குப் பக்கத்தில் “கிராமபோன்” பாடிக் கொண்டேயிருக்க பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில் அபிநயம் பிடித்து ஆடியவர்கள் செல்வி.பு.நாகரத்தினம், செல்வி.வி.கனகமணி ஆவார். அவர்கள் இப்போ யாவரும் பாட்டிப் பருவத்தை தாண்டி அடுத்த பருவத்தையும் எய்தியிருப்பார்கள். இன்றுள்ள வீடியோகமர போன்று நவீன வசதிகள் அன்று நாட்டில் இருந்ததில்லை. இந்த நிகழ்ச்சிகள் உட்பட பல கலை நிகழ்ச்சிகளை ஒரு மாதகாலமாக பள்ளிக்கூடத்திலேயே தங்கியிருந்து நெறிப்படுத்தியவர் யாழ்ப்பாணம் கச்சேரியடியை சேர்ந்த திரு.மரியாம்பிள்ளை ஆசிரியர் ஆவார். அதைவிட ஆங்கிலப் பேச்சு, திரு.இ.தம்பிராசா மாஸ்டர் பழக்கி சிங்களப் பாடல் 5 மாணவர்களினால் பாடப்பெற்றது. வெள்ளிவிழா காலத்தில் ஒரு பௌத்த பிக்கு மெய்கண்டான் பள்ளியில் வந்து தான் தமிழ் மொழியைக் கற்றதோடு தனது மொழியில் தேசிய கீதத்தையும் பயிற்றுவித்து மனனம் செய்ய வைத்து பயிற்சி கொடுத்தார். 


“நமோநமோமாத அப்பே ஸ்ரீலங்கா..” என்ற பாடல் பங்குபற்றியோர் 4ம் ஆண்டில் படித்த பரமானந்தம், கிருஷ்ணமூர்த்தி ,செல்லத்துரை.( மற்ற இருவர் பெயர்கள் மறந்து விட்டது) 8ம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் வெவ்வேறு உடைகளில் “வட்டமேசை மாநாடு” என்ற நிகழ்ச்சியை கூடியிருந்து ஆலோசிப்பது போன்ற பாணியில் ஒவ்வொருவராக எழுந்து “பெண்னுரிமை” பற்றி பேசினார்கள். இதனை நெறிப்படுத்தி வசன அமைப்புகளை தொடத்தவர் பண்டிதர் அவர்களே ஆவார். பங்குபற்றியோர் மனோன்மணி அக்கா, நேசமலர்அக்கா, பாக்கியம் அக்கா, முத்தம்மா அக்கா, “செவல்லம்” என்று அழைக்கப்படும் பொன்னம்மா அக்கா, கமலாதேவி அக்கா. இந்த வட்டமேசை மாநாட்டின் இறுதியிலே “கொடி” என்ற ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, திர்மானிக்கும் வேளையிலே எங்கள் 7ம் வகுப்பு மாணவியாகிய உருத்திராட்சி என்பவர் ஒரு பாட்டி வேடத்தில் கையில் ஊன்றுகோலுடன் வட்டமேசை மாநாட்டிற்கு நடுவே “என்னடி மக்கள் கொடி! கொடி! என்று கொக்கரிக்கிறியாள்! அது என்ன சேவல் கொடியோ? மயில் கொடியோ?” என்று கலகலப்பூட்ட பலத்த கைதட்டலுடன் திரை விழுகிறது. 


இறுதியாக “மனோன்மணியம்” என்ற வரலாறு நாடகம் மீனாட்சிசுந்தரனார் எழுதிய புத்தகத்திலிருந்து வசனம் பயிற்றுவித்து பழக்கியெடுத்தவர் பண்டிதர் அவர்களே ஆவார். நாடகத்தை மெருக்கேற்றுவதற்காக 2,3 சினிமா பாடல்களும் அந்த கதாநாயகன் கதாநாயகி பாடுவதாக இணைக்கப்பட்டது. நடிகர்கள் மன்னன் ஜீவகன் , மந்திரி குடிலன், இளவரசி மனோன்மணி, இளவரசன் புருஷோத்தமன் பாத்திரங்கள் இன்னும் பல இதர பாத்திரங்கள்; வேல்முருகன், தமோதிரம்பிள்ளை, குமரசாமி, நல்லையா இதை விட மந்திரி சபை, அரச சபை, சேவகர்கள், தாதிப் பெண்கள்,  காவலாளிகள் பாத்திரங்கள் ஏற்று நடித்து முடிந்தது. 


நவராத்திரி பூசை


வாணி விழா ஒவ்வொரு வருடமும் புராட்டாதி மாதத்தில் அமாவாசை வந்தபின் (வளர்பிறையில்) பிரதமைத் திதியிலன்று நவராத்திரி ஆரம்பமாகும். முதல் நாளே புதிய மண் சட்டியில் நவதானியங்களை மண்ணுடன் கலந்து தண்ணீர் தெளிக்கப்படும். அந்த அறையினுள் கும்பம் வைக்கப்படும். இந்த நவதானியம் விதைத்த சட்டியும் அறையினுள் வைக்கப்படும். இலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய தெய்வப் படங்களுடன் விநாயகர் படமும் வைத்து முதல் வணக்கம் செலுத்தப்படும். முதல் 3 நாள் துர்கைக்கும், அடுத்த 3 நாட்கள் இலக்குமிக்கும், அடுத்த 3 நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய நாட்களாகும். 9ம் நாள் ஆயுத பூஜை நாளாகும். 


பாடசாலையில் படிக்கின்ற அத்தனை மாணவர்களிடமும் ஒவ்வொரு புத்தகமாக வாங்கி கட்டி வைத்து மறுநாள் விஜயதசமி அன்று நாட்பாடமாக எடுத்து எங்கள் ஒவ்வொருவர் கையிலும் வழங்கப்படும். புதிய சிறுவர்களுக்கு 5 வயதில் ஏடு தொடக்கம் விழா நடைபெறும். விஜயதசமி விழாவிற்கு பாடசாலையில் படிக்கும் சகல மாணவர்களும் ஒத்துழைத்து பொங்கல், கடலை, வடை, மோதகம் ஆகிய உணவுகளை தயாரித்து சுவாமி அறையில் படையல் படைத்து பூசை வழிபாடுகள் பூர்த்தியானவுடன் உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதைவிட புதிதாக வரும் சிறுவர்களுக்கு ஏடு தொடக்குதல் என்ற நிகழ்ச்சியும் பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகும். பனையோலைச் சட்டத்தில் எழுத்தாணியால் எழுதப்பட்ட “அ” என்ற உயிர் எழுத்து தொடக்கம் “ஃ” என்ற ஆயுத எழுத்து வரை எழுதப்பட்டு பெரிய தாம்பளத்தில் நெல் அல்லது அரிசி பரவி வைத்து குழந்தையின் சுட்டுவிரல் பிடித்து நடாத்தப்படும். 


நாள் பாடம் நிகழ்ச்சி மிக மிக அற்புதமாக இருக்கும். அதன் பின்னர் உணவு தயாரித்த பாத்திரங்கள் மினுக்க சுத்தப்படுத்தும் வேலைகள் பெண் மாணவிகளுக்கும், பெரிய பெரிய பாத்திரங்களை கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலை ஆண் மாணவர்களுக்கும் பகிரப்படும். படசாலையின் பெரிய மண்டபமும் உணவுகள் சிதறி இருப்பதனால் சுத்தப்படுத்தப்படும். ஒவ்வொரு வருடமும் புராட்டாதி மாதத்தில்  அமாவாசை வந்த பின் அடுத்த நாள் கும்பம் வைத்து புதுச்சட்டியில் நவதானியம் வைத்து நீர் தெளித்து பூசை அறையில் வைக்கப்படும். 


ஒவ்வொரு நாளும் காலையில் பாடப்படும் தேவராத்துடன் சரஸ்வதி தோத்திரம் ஒன்று பாடிய ('வெண்டாமரைக் கன்றி நின்பதம் தாங்க") பின்பு புராணம் பாடி பூர்த்தி செய்யப்படும். அதுபோல பள்ளி முடியும் நேரமும் தேவாரம் பாடியே நிறைவு பெறும். வாணி பூசைக்காலத்தில் 8ம் நாளே மாணவர் தலைவர் வந்து ஒவ்வொரு வகுப்பு முதல்வரிடமும் நாள் பாடத்திற்கு கட்டிவைக்க ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமிருந்தும் ஒரு புத்தகத்தை பெயர் விபரமாக எழுதிக்கொண்டு தரும்படி கூறி சென்று விடுவார். அதன்படி அத்தனை வகுப்பிலிருந்து புத்தகங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஆயுதபூசை 9ம் நாள் முழுவதும் வாணியின் படத்திற்கு முன் வைக்கப்பட்டு 10ம் நாள் விஜய தசமி என்று பூசைமுடிந்த பின் அந்த அந்த புத்தகங்கள் அவர் அவர் கையில் வழங்கப்படும். 


ஆயுதபூசை நாள் பாடம்


சரஸ்வதி பூசையில் உணவுவகைக்கு மாணவர்கள் வரவு தொகை கணக்கில் இடப்பட்டு ஆசிரியர்கள் ஏடு தொடக்கவரும் புதிய பாலகர்கள் அவர்களது பெற்றோர்கள் என்ற பெரிய தொகையாக கணக்கில் இடப்பட்டு:


1. பொங்கலுக்கு சிவப்புப் பச்சரிசி, பொங்கலுக்கு பயிறு, பொங்கலுக்கு சக்கரை, தேன், நெய் , ஏலஅரிசி


2. மோதகத்திற்கு மாவிடித்து அரித்து வறுத்து முதல் நாளே செய்ய முதலில் நனைய விட்டு, பக்கத்திலுள்ள சிவபாக்கியம் ரீச்சர் பிறந்த வீட்டு உரல், உலக்கை, சுளகு, அரிக்கன், தாச்சிச்சட்டி முதலியவை 


அது போல பொங்கலுக்கும் மோதகத்திற்கும் பயறு; பொங்கலுக்கு வெண்பதத்திலும், மோதகத்திற்கு சற்று கூடுதலான நேரமும் சிவக்க வறுக்க வேண்டும். காலை 8மணிக்கு மணியடித்து பாடசாலை ஆரம்பமாகி விடும். அறைக்கதவு திறந்த உள்ளே இருக்கும் துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு தீபம் காட்டப்பட்டு ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு என்ற வரிசை கிராமத்தில் வெள்ளி 10ம் வகுப்பு, வியாழன் 9ம் வகுப்பு, புதன் 8ம் வகுப்பு, செவ்வாய் 7ம் வகுப்பு, திங்கள் 6ம் வகுப்பு. இந்த ஒழுங்கினை முதல் நாளே வகுப்பாசிரியர் ஞாபகப்படுத்தி விடுவார். திங்கள் கிழமை 6ம் வகுப்பிலிருந்து ஒரு மாணவர் தேவாரம் புராணம் பாடி “நமப் பார்பதிபதயே” என்று கூற சகல மாணவர்களும் “அரஹரமகதேவ” என்று 3 முறை கூறிய பின் அவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்வார்கள். 


அந்த அந்த வகுப்பின் மாணவ முதல்வர் அடுத்த நாள் காலை தேவாரம் பாடுபவர் நேரத்துடன் சமூகமளிக்க வேண்டுமென ஞாபகப்படுத்தி விடுவார். வலிகாமம் மேற்கில் … அந்தக் காலத்தில் இயங்கிய தமிழ்ப் பாடசாலைகளுள் முன்னணி நிலையில், பண்ணாகம் மெய்கண்டான் உயர்தர பாடசாலை விளங்கியது. அதனை ஆரம்பித்து வைத்த பெரியார் உயர்திரு மு. கந்தையா அவர்கள் தொடக்கம் , அதனை சிறந்த முறையில் நிர்வகிக்கவும், பாதுகாக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் அரும் பாடுபட்டு செயலாற்றிய ( நான் படித்த காலத்து அதிபர், உள்ளூர் மேலாளர்கள் ( Local Managers) ஆசிரியமணிகள் இவர்களைப்  பற்றி சில வரிகள் எழுதுவது எனது கடமையாகிறது. ”அந்தக் காலம்” என்று நான் குறிப்பிட்டது.... 1943-1953 வரையிலான காலங்கள்...... ஆரம்ப ஸ்தாபகர் உயர்திரு. கந்தையா அவர்கள் மலேசிய நாட்டில் தனது ஊரவர்களுடனும், சகோதர்ரர்களுடனும் வாழ்ந்து... .அங்கு.. வருகை தந்த ஈ.வே.ரா. பெரியார் போன்ற சமூகமாற்ற மேதைகளின் மேடைப்பேச்சை உள்வாங்கி வளர்ந்தவர். அதுபோல், மேலாளர்கள் பலரும் மலேசியாவில் உத்தியோகம் பார்த்து விட்டு ஊர்ப்பற்றுக் காரணமாக வந்து பண்ணாகத்தில் வாழ்ந்து சேவை செய்தவர்கள். (அவர்கள் அத்தனை பேர்களின் புகைப்படங்கள் வெள்ளிவிழா மலரில் இடம் பெற்று இருக்கிறது). 


அது போல் அதிபர் ஸ்ரீநிவாசன் அவர்களும் மலேசியாவில் படித்து விட்டு ....நாட்டிற்கு வந்து அதிபராக பணியாற்றியவர். உள்ளூரில் வேர் விட்டு விருட்சமாக பரவி இருந்த தீண்டாமை என்ற அந்த வித்தினை பாடசாலை எல்லைக்குள் வரவிடாமல் மிகப் பெரிய எச்சரிக்கையுடனும், கண்காணிப்புடனும் பாடசாலையை வழி நடாத்த வந்தார்கள். எமது பாடசாலையின் பெயரில் இளவாலை, காரைநகர் என்ற இரு ஊர்களில் பாடசாலைகள் இயங்கின. ஆனால், எமது மெய்கண்டான் பள்ளியின் பெயர் .....அப்படியான இழிச் சொல் பத்திரிகையில் வர இடங்கொடுக்கவில்லை. அப்படியான ஒரு கட்டுப்பாடான நிர்வாகம் ..... 


இந்த இடத்தில் எங்கள் பண்டிதர் அமரர் அ.ஆறுமுகம் அவர்கள் எழுதி வெள்ளிவிழா மலரில் (1950 ) இடம்பெற்ற “பாடுவோமே கூடி ஆடுவோமே.....  பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலைப் புகழை பாடுவோமே......”  என்று  தொடங்கி.....“ஊரும் உறவும் பலவாயினும் என்றால்..... நாம் ஓர் தாயின் மக்கள் என ஓதுவம் நன்றாய்.... பள்ளியின் பேருக்கு இழுக்கு வராவாறு நடப்போம்... என்றும் பெரியவர் பேணும் பணி செய்துகிடப்போம் ”இது ஒரு அருமையான அற்புதமான புதுமைக் கருவூலம் உள்ளடக்கிய பாடல். எனக்கு இத்தனை வருடங்கள் கழிந்தும் உள்ளத்தில் பதிந்து கிடக்கும் பாடல்…


பக்கத்து கிராமமாகிய வடலியடைப்பில். அண்ணன் தம்பி இருவர், கேணியடியில் அக்கா தம்பி இருவர், பொன்னாலையில் ஒருவர், பெரியபுலோ என்ற இடத்தில் இருந்து இருவர், காரைநகரில் இருந்து ஒரு அக்கா வந்து படித்தனர். சமமாக நடாத்தப்பட்டனர். அவர்களுக்கு எந்த வித்த்திலும் ஏற்றத் தாழ்வான ஆசனங்கள் வழங்கப் படவில்லை. அவர்கள் மனம் நொந்து அழவில்லை. படித்து முன்னேறி ஆசிரியர்களாக சேவை செய்தார்கள். அவர்களும் இன்று வயோதிபர்களாக இருப்பாரகள். எமது பள்ளிக்கு காந்தியடிகளின் வழி காட்டலின் படி கதர் உடுத்தி கற்பித்த ஆசான், பண்டிதர் அவர்களிடம் பாடங் கேட்ட (ஆறாம்வகுப்பு, எட்டாம் வகுப்பு, வகுப்பு ஆசிரியர், மற்றைய வகுப்புகளுக்கு தமிழ், இலக்கிய ஆசான்,. 3 வருடங்கள் கழிந்து..... பிரவேச பண்டித, பால பண்டித குரு...) யாருக்கு கிடைக்கும் இந்தப் பாக்கியம். .? 

நன்றி.... 


66 வருடங்கள் கடந்த ....ஞாபக..... நரம்பு மண்டலத்திற்கும் என் குடும்பத்திற்கும் நன்றிகள். குறுகிய நேர இடைவெளியில் , இதனை நூல் வடிவில் அமைத்துக் கொடுத்த சாய்ராம் அச்சக உரிமையாளர்: என் கணவரின் தோழரான தர்மலிங்கம் அவர்களின் மகன் ததீஸ்வரன் அவர்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் நன்றிகள். பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள். என் உணர்வுகளையும், நன்றிகளையும் மனம் முழுவதும், தேக்கி வைத்து மீட்டிப் பார்த்த நிறைவை உங்களுடன் பகிர முடிந்தது என் பேறே! 






பின் இணைப்பு


“வெள்ளிவிழா மலர்” என்ற 1950 சஞ்சீகையில் இடம் பெற்ற புகைப்படத்தில்,  10 ஆண் ஆசிரியர்களும் 2 பெண் ஆசிரியைகளும் என்ற அபூர்வமான காட்சிகள் இடம் பெறுகின்றன. அப்போ எனக்கு, 12 வயது, 7ம் வகுப்பு. 2 பெண் ஆசிரியைகளுக்கு (திருமதி. சிவபாக்கியம் நாகலிங்கம், திருமதி. நல்லம்மா தங்கராசா) பின்புறமாக மத்தியில் நிற்கின்றேன். 


1950ம் ஆண்டு வெள்ளிவிழா மலருக்காக எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் திருமதி. நாகலிங்கம் சிவபாக்கியம் குருவுக்குப்பின்னால் நான் நிற்கிறேன்.



D:\24.02.2020\JPG.jpg

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF